The Night Face Up என்றோரு சிறுகதையை 1967இல் எழுதினார் ஹூலியோ கொர்த்தசார். ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு கதாநாயகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யதார்த்தம் – கனவு இரண்டும் மாறிமாறி அடுத்தடுத்து தொகுக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் அவன், ஒரு சடங்குப் போரில் அஸ்டெக்குகளால் துரத்தப்படுகிறான். மோடேகா பழங்குடிகள் மட்டுமே அறிந்த ஒரு பாதையில் அவன் ஓடிக்கொண்டிருப்பதாக அவன் கனவு காண்கிறான். தாகம், மற்றும் தீவிர காய்ச்சலில் விழிக்கும் அவன் தன் கைகளில் பிளாஸ்டர் கட்டியிருப்பதை நோக்குகிறான். நர்ஸ் அவனுக்கு அளித்த உணவை உண்டுவிட்டு மறுபடியும் தூங்குகிறான். கனவில் அவன் இப்போது மோடேகாக்களின் பாதையிலிருந்து விலகி வேறெங்கோ ஒடிக்கொண்டிருப்பதை உணர்கிறான். கழுத்தில் இருக்கும் தாயத்தைப் பிடித்துக் கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது அஸ்டெக்குகளிடம் சிக்கி விடுகிறான். மருத்துவமனையிம் மீண்டும் விழித்தெழுகிறான். தனது விபத்திற்குப் பிறகு சுயநினைவற்று இருந்ததைப் பற்றி யோசிக்கிறான். பிறகு உறக்கத்தில் வீழ்ந்தபோது அவன் உடலெங்கும் கயிறுகள் கட்டப்பட்டு தரையில் கிடத்தப்பட்டிருக்கிறான். அவன் கழுத்தில் இருந்த தாயத்து இப்போது காணவில்லை. பூசாரிகள் அவனை தூக்கிச் செல்கிறார்கள். கடைசியாக ஒரு முறை விழித்தெழுந்தான். ஆனால் இப்போது யதார்த்தம் கனவுடன் இணைந்துவிடுகிறது. பூசாரி கையில் கற்கத்தியை நீட்டியவாறே அவனை நோக்கி நெருங்குகிறார். அவன் இனிமேல் விழித்தெழப்போவதில்லை, ஏனெனில் அவன் விழித்துக் கொண்டுதான் இருக்கிறான்.
போர்ஹேஸின் The Circular Ruins என்ற கதை The Night Face up போன்ற ஒரு கதை. இக்கதையில் கனவுக்குள் கனவு எனும் கருப்பொருளை போர்ஹேஸ் கையில் எடுத்துக் கொண்டுள்ளார். கனவு வாயிலாக ஒரு மனிதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ஒரு மந்திரவாதி. நெடுமுயற்சிக்குப் பின்னர் அவன் தங்கியிருக்கும் இடிந்த கோயிலின் தெய்வங்களின் உதவியால் ஒரு மனிதனை கனவில் உருவாக்கிவிடுகிறான். ஆனால், தெய்வங்கள் அவனுக்கு ஒரு நிபந்தனை இடுகின்றன. அவனுக்கு உரிய பயிற்சிகளைத் தந்து அவனை வடக்கே அனுப்பிவிட வேண்டும். மகனுக்கு அனைத்து தந்திரங்களையும் சொல்லிக் கொடுக்கிறான் மந்திரவாதி. அவனை வடக்கே அனுப்பி வைக்குமுன் மகனின் ஞாபகத்தை அழித்துவிடுகிறான். மகனுக்கு தன்னுடைய மூலம் பற்றி அனைத்தும் மறந்துவிட்டது. சில காலம் கழித்து வடக்கில் வரும் ஒருவர் வடக்கில் ஓர் ஆள் நெருப்பின் மீது நடப்பதைப் பற்றி வியந்து சொல்ல மகனுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் என மந்திரவாதிக்குப் புரிந்துவிடுகிறது. கனவின் அம்சத்தைக் கொண்ட வேதாளம் மட்டுமே தாம் என மகன் அறிந்திருப்பான் என்பதை உணரும் மந்திரவாதிக்கு ஒரே வேதனை. உடனடியாகத் தன்னை அழித்துக் கொண்டு விட எண்ணி எரியும் நெருப்பு தன்னைத் தீண்ட விடுகிறான். ஆனால் நெருப்பு அவனை எரிக்கவில்லை. அப்போது அவனுக்கு தெளிவாகிறது – “,,,he understood that he too was a mere appearance, dreamt by another.”
கொர்த்தசாரின் கதை – கனவு – யதார்த்தம் இரண்டின் பிரிவைப் பேசுகிறது. போர்ஹேஸின் கதை கனவுக்குள் கனவு. முந்தைய கதையில் ஒரே ஒரு மனிதன் – கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இருப்பவன் ஒரே மனிதன்.
போர்ஹேஸின் கதையில் இருவர் – இரண்டுமே கனவு மனிதர்கள். இறுதியில் – கனவு முடிந்த பின்னர் – கனவுக்கு வெளியே கனவு காண்பவன் ஒருவன் இருக்கிறான். அவன் மூன்றாம் மனிதன். இரண்டு கனவுகளையும் தாங்கி நிற்கும் அவன் ஒருவன் அந்தக் கனவுகளுக்கு வெளியே இருக்கிறான்.
கதையின் கனவு காண்பவர் தான் இன்னொரு மனிதனை மிகுந்த தன்னம்பிக்கையுடன் உருவாக்குவதாக நம்பினாலும், அந்த அனுபவத்துக்கு முரண்பாடாக அவன் தன்னையே ஒரு கனவு என்பதை உணர்வது அவனது அடையாளத்தைச் சிதைக்கிறது.
கதையின் ஆரம்பத்தில் பிளாட்டோனிக் இலட்சியவாதத்தை மறைமுகமாக ஆதரிப்பதாகத் தோன்றினாலும் — உடனடியாக உணரக்கூடிய உலகத்தைத் தாண்டிய இலட்சிய வடிவங்களின் உலகம் — அந்த உலகமும் ஒரு நிலையற்ற கனவு என்பதைக் கதையின் முடிவில் காட்டுகிறது.
போர்ஹேஸ் எழுதிய சிறுகதையொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பி வைக்குமாறு நண்பர் Vasu Devan அவர்களிடம் கேட்டிருந்தேன். அதன் தலைப்பு – Tlon, Uqbar, Orbius Tertius. பொதுவாக போர்ஹேஸின் சிறுகதைகளில் வரிக்கு வரி நிறைய குறிப்புகள் அடங்கியிருக்கும். இந்தக் கதையிலும் இது போலத்தான். நொடிக்கு நொடி இணையத்தில் தேடி அந்தக் குறிப்புகளின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. சில குறிப்புகளைப் புரிந்து கொள்ள சில கட்டுரைகளை வாசிக்க வேண்டியிருந்தது. வாசிப்பாளரின் உழைப்பைக் கோரும் கதைகளையே போர்ஹேஸ் எழுதியுள்ளார். இணையம் எல்லாம் இல்லாத நாட்களில் எழுதப்பட்ட சிறுகதை. இத்தகைய கதைகளை எழுதுவதற்கு எத்தனை வாசித்திருக்க வேண்டும்! அவரின் ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் போது தோன்றும் வியப்புணர்வும் மலைப்புந்தான் இன்றும் தோன்றியது. இந்தக் கதைக்கு நான் வந்தடைந்ததும் ஒரு கட்டுரையில் படித்த குறிப்பு வாயிலாகத்தான். யாருக்கும் தெரியாமல் ஒரு பேரரசன் கொல்லப்பட அவனைப் போல பாவனை காட்டும் ஒரு போலி அரசனாக இன்னொருவன் வாழ்ந்திருக்க அவன் போலி என்று சரியாக ஊகித்து அவனைக் கொன்று அக்கமெனிட் வம்சத்தின் அரசனானார் முதலாம் டேரியஸ். இந்த சம்பவத்தை டேரியஸ் பெஹிஸ்துன் மலைகளில் செதுக்கிய கல்வெட்டுகளில் பதிவு செய்திருக்கிறார். கிரேக்கர் ஹெரடோடஸும் இதைப்பற்றி எழுதிவைத்துள்ளார். இது பற்றி ஏராளமான தொன்மக் கதைகளும் இருக்கின்றன. போலியாக வேடமிட்டு மன்னனான ஜொராஸ்ட்ரிய சமய பூசாரி பற்றிய குறிப்பை மேல் சொன்ன கதையில் போர்ஹேஸ் பயன்படுத்தியுள்ளார் எனுந்தகவலே இந்தக் கதையிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்தது. குறிப்புகளிலிருந்து கதைகளுக்குச் சென்று குறிப்புகளைத் தரிசித்து இதன் வாயிலாக மேலும் பல குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டு….குறிப்புகளில் தொலைந்து….போர்ஹேஸின் இந்தச் சிறுகதை சேர்க்கப்பட்டுள்ள தொகுப்பின் தலைப்பு Labyrinths….தேடல்களின் பாதையை இதைவிடப் பொருத்தமாக வர்ணித்துவிட முடியுமா?
“Of the historical names, only one: the impostor magician Smerdis, invoked more as a metaphor.”
ஐபோனை தொலைத்தல் ஓர் அனுபவம். மனித வாழ்க்கையில் அனுபவிக்கும் பல்வேறு சோக ரசத்தை நாம் தொலைத்த ஐபோனும் நமக்குத் தரும். ஊபர் டாக்ஸியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த போனில் எனக்குத் தெரிந்த ஒருவரைத் தொடர்பு கொண்டேன். அது தான் அந்த போன் என் கைகளில் இருந்த கடைசி நினைவு. சாலையில் நல்ல போக்குவரத்து நெறிசல். டாக்ஸி ஊர்ந்து கொண்டிருந்தது. எப்போது கண்களை மூடினேன் என்று தெரியவில்லை. போன் என் மடியிலிருந்து கார் சீட்டில் விழுந்திருக்கலாம். இதெல்லாம் இப்போது அந்த போன எப்படி தொலைந்து போயிருக்கும் என்று யோசித்து யோசித்து கற்பனையில் அரைகுறை ஞாபகத்தில் உருவாக்கி வைத்துள்ள காட்சிகள். டாக்ஸியில் வீடு வந்திறங்கிய போது இருட்டியிருந்தது. தெரு விளக்கு அன்று எரியாமல் இருந்தது என்ற ஞாபகம் தெளிவாக இருந்தது. காரிலிருந்து இறங்குவதற்கு முன்னம் ஒரு முறை உள்ளே நோட்டம் இட்டிருக்க வேண்டும். இது இப்போது புரிகிறது. காரிலிருந்து இறங்கும் போது ஐபோனை இழக்கப்போகிறேன் என்று முன்னமே தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். பத்து நிமிடங்கள் கழித்து போனை தொலைத்துவிட்டோம் என்ற பிரக்ஞை வந்த பிறகு மறுபடியும் என் வீட்டுவாசலுக்கு வரும் வரை அந்த டாக்ஸி அங்கேயே காத்திருந்திருக்கலாம்.
அதை இழந்த குற்றவுணர்ச்சி பல மாதங்கள் தொடர்ந்தது. ஐபோனை எவனும் தொலைப்பானா? எத்தனை விலை கொடுத்து வாங்கினோம்?…..என் மேல் நான் கொண்ட கோபம் சில நாட்களுக்கு குறையவேயில்லை. இனிமேல் ஒரு போனும் வாங்குவதில்லை என்ற விரதம் வேறு எடுத்துக் கொண்டேன்.
அந்த ஐபோன் என் ஞாபகத்தில் நிரந்தரமாக நிலைத்துவிட்டது. அதை நிஜமாகவே தொலைத்தேனா? தொலைத்திருந்தால் அது அடிக்கடி என் ஞாபகத்தில் ஏன் வரப் போகிறது?
அந்த ஐபோன் அந்த டாக்ஸியின் அடுத்த பயணியின் கையில் கிடைத்ததெனில் அந்த ஐபோன் என் ஐபோனா? இல்லை அந்தப் பயணிக்கு கிடைத்த ஐபோன். நான் தொலைத்த நேரத்திலிருந்து இன்னொரு பயணியின் கையில் அது கிடைக்கும் நேரம் வரை அந்த ஐபோன் இருந்ததா? இருக்கவில்லை என்று கொள்வோமானால் பயணிக்கு கிடைத்த போன் எந்த போன்? அது நான் தொலைத்த போனின் நகல். இருந்தது என்பது பதிலானால் – தொடர்ச்சியை அந்தப் பொருளுக்கு நாம் வழங்குவதனால் – மறைந்த நிலையில் அந்த ஐபோன் மனிதர்களின் உணர்வாற்றலின் எல்லைக்குள் சிக்காமல் எங்கேனும் இருந்திருக்கும்….Tlos, Uqbar, Orbis Tertius – சிறுகதை ஏற்படுத்திய எண்ண வெடிப்புகளிலிருந்து ஓர் இழையைத் திரிக்கப்போக சிறுகதையில் வரும் ஒன்பது தாமிர நாணயங்கள் ஒன்றிணைந்து ஐபோனாக நகலெடுத்தது. தொலைத்தல் என்ற வினையே இல்லாத ஒரு பிரதேசத்தை, ஒரு நாட்டை அல்லது ஒரு கோளை நாம் சிருஷ்டிக்க முடியுமானால்…..நிற்க, பொருட்களை எப்படி தொலைக்காமல் இருக்க முடியும்? தொலைத்தால் அது நம் அகத்திலிருந்து நாம் தொலைத்ததாகவே இருக்கும்…அது தொடர்ந்து ஞாபகத்தில் இருக்குமானால் அது எங்கு தொலைந்தது? “இழத்தல்” “கண்டுபிடித்தல்” எனும் வினைச்சொற்கள் ஐபோனுக்கென ஓர் அடையாளத்தை அனுமானிப்பதாலேயே எழுபவை. ஐபோன் அனெக்டோட் நான் அறியாமலேயே போர்ஹேஸின் கதைக்குள் புகுந்துவிட்டது.
__
மிக சுருக்கமாக, Tlönic கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களைப் பின்வருமாறு கூறலாம்: a. நேரம் எனும் கருத்தியல் இல்லை. ஒரு ட்லோனிக் சிந்தனைப் பள்ளி நாம் காலவரையறையற்ற, கடந்த மற்றும் எதிர்காலமாக பிரிக்கப்படாத நித்திய நிகழ்காலத்தில் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது, மற்றொரு பள்ளி எல்லா நேரமும் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுவிட்டதாகவும், நாம் வாழ்வது நினைவுகளில் மட்டுமே என்றும் வலியுறுத்துகிறது. b. இந்தக் கருத்தின்படி அடையாளம் என்பது கற்பனைக்கு எட்டாதது, ஏனென்றால் எந்தப் பொருளும் காலப்போக்கில் அதன் தொடர்ச்சியை நீட்டிப்பதில்லை (“தொலைந்த ஐபோன்” – முந்தைய ஸ்டேடஸை பார்க்கவும்) c. நேரம் அல்லது பொருளின் தொடர்ச்சி மறுக்கப்படும் உலகில் வேறு எந்த பொது வகையினங்களும் இருக்க முடியாது.
ட்லோனின் சிந்தனையாளர்களும் ஞானிகளும் ஒரு இலட்சியவாத உலகக் கண்ணோட்டத்தை ஆதரிக்கின்றனர். ட்லோனின் கலாச்சாரத்தில் உள்ள அனைத்தும் தத்துவ இலட்சியவாதத்தை முன்னிறுத்துகின்றன. Tlönic மொழியியல் மற்றும் தத்துவக் கோட்பாடுகளின் விளக்கத்தில் போர்ஹெஸ் மிக உன்னிப்பாகக் கவனம் செலுத்துகிறார். வெளி என்பது தொடர்ச்சியானதில்லை என்றும், இடைவெளி என்பது வரையறையின்படி தொடர்ச்சியற்றது என்றும், காலத்தின் கண்ணோட்டத்தில் விண்வெளியில் உள்ள இடம் அல்லது பொருள் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்றும் ஞானிகள் கற்பனை செய்திருக்கிறார்கள். இது அடையாளத்தின் தர்க்கரீதியான கொள்கையையும், உலகத்தை உணர்ந்து அதன் பொருள்களை மதிப்பிடுவதற்கு நாம் பழகிய விதத்தையும் பாதிக்கிறது. (நாம் பயன்படுத்தும் ஐபோன் நேற்று நாம் பயன்படுத்திய அதே ஐபோன்தான் என்று நாம் நினைக்கிறோம், ஏனென்றால் அந்த அடையாளத்தை முன்னிறுத்துவது நமக்கு மிகவும் வசதியாக உள்ளது.)
Tlön இல், காரணம் மற்றும் விளைவு போன்ற கருத்துகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அடையாளக் கொள்கை பாதிக்கப்பட்டால், இடஞ்சார்ந்த அல்லது தற்காலிக தொடர்ச்சி இல்லை என்றால், அறிகுறிகள் மற்றும் நிகழ்வுகளுக்கு இடையே எந்த தொடர்பையும் ஏற்படுத்த முடியாது: எரியும் சிகரெட், புகை மற்றும் நெருப்பு ஆகியவை தொடரியல் அல்லது படிநிலையில் பிணைக்கப்படாத ஒரு வரிசையில் தனித்துவமான தருணங்கள் . Tlön கிரகத்தில் அடையாளம் மற்றும் காரணத்தைப் பற்றிய சுருக்கக் கருத்துக்களைக் கருத்திற்கொள்ளும் சாத்தியம் இல்லை. இந்த வரையறையின்படி, அறிவியல் சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக, als ob (“as if”) கொள்கையில் அடித்தளமிட்ட நூற்றுக்கணக்கான தத்துவங்கள் வெளிப்புறக் குறிப்புடன் எந்தத் தொடர்பையும் கோராத அழகான அமைப்புகளாக வளர்கின்றன – கற்பனாவாத இலக்கியத்தின் அடிப்படை அமைப்பைக் கொண்டவைகளாக. als if கொள்கை என்பது கற்பனாவாத மற்றும் டிஸ்டோபியன் புனைகதை உத்திகளின் அடிப்படையான ஒன்றாகும், அங்கு “எப்படி” எனும் கருதுகோள் அந்தக் கதையின் கண்டுபிடிப்பைத் தொடங்குகிறது. நேரத்தையும் இடத்தையும் தொடர்ச்சியாகக் கருதுவதற்குப் பதிலாக இடைவிடாதவையாகக் கருதுவது Tlonஇன் அடிப்படை உலகக் கண்ணோட்டமாகும், அதே சமயம், ‘als ob’ அடிப்படையிலான கற்பனையான இடத்தைக் கண்டுபிடிப்பதை இது அனுமதிக்கிறது.
Tlön இல் உள்ள இரண்டு மொழிகளுக்கும் பெயர்ச்சொற்கள் இல்லை. இரு மொழிகளில் ஒன்று கூட்டு உரிச்சொற்களை அடிப்படையாகக் கொண்டது; மற்றொன்று, கூட்டு வினைச்சொற்களில். பெயர்ச்சொற்கள், கொள்கையளவில், சாத்தியமற்றது, ஏனெனில் ஒரு பெயர்ச்சொல்லுக்கான அனுபவ/தருக்க அடிப்படையை வழங்கக்கூடிய தொடர்ச்சியான பொருள் எதுவும் இல்லை. பெயர்ச்சொற்கள் தற்காலிக நிலைகளைக் குறிக்கும் உரிச்சொற்களின் திரட்சியிலிருந்து ட்லோனில் எழுகின்றன. நிச்சயமாக, இந்த வகை பெயரடை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட முடியும், ஏனெனில், வரையறையின்படி, எந்த நிலையும் காலக்கண்ணொட்டத்தில் மீண்டும் நிகழாது.
‘கண்டுபிடிப்பது’ மற்றும் ‘இழப்பது’ போன்ற சில வினைச்சொற்களிலும் இதுவே நடக்கும். இரண்டு செயல்களும் Tlön இல் நினைத்துப் பார்க்க முடியாதவை, ஏனெனில், பொருள்களுக்கு இடையே அடையாளம் இல்லை மற்றும் இடம் மற்றும் நேரம் தொடர்ச்சி இல்லை என்றால், எந்த பொருளையும் இழக்க முடியாது; மீண்டும் கண்டுபிடிக்க முடியாது. ‘இழந்தது’ என்று நாம் கருதும் ஒன்று ஒரு பொருளுக்கு நிகழும்போது, ஒரு வகையான இரண்டாம் நிலைப் பொருள் (இழந்த ஒன்றிலிருந்து தெளிவற்ற வேறுபட்டது) பெருகத் தொடங்குகிறது. இந்த உருத்தோற்றங்கள் Hrönir என்று அழைக்கப்படுகின்றன. அவை கடந்த காலத்தை கண்டுபிடிப்பதற்கும் மாற்றியமைப்பதற்கும் பயன்படுத்தப்படலாம், இது Tlön இல் தொல்பொருளியலை ஆக்கிரமிக்கிறது.
ஒரு வருடம் கழித்து இன்னொரு ஐபோன் வாங்கினேன். பழைய கறுப்பு நிற ஐபோனின் நகலாக நினைத்து அதன் மேல் வாஞ்சையை செலுத்தாமல், புதுப்பொருள் மீது புதுக்காதல் கொண்டவனாக மகிழ்ச்சியானேன். சிறுகதையின் இறுதியில் வருவது மாதிரி பூமி இன்னும் முழுமையாக Tlon-இன் தாக்குதலுக்கு ஆளாகவில்லை.
–
போர்ஹேஸின் மிக நீளமான கதைகளில் ஒன்றான, ‘Tlön, Uqbar, Orbis Tertius’ பெரும்பாலும் ஊகப் புனைகதை அல்லது சில சமயங்களில் ‘அறிவியல் புனைகதை’ என்று முத்திரை குத்தப்படுகிறது.
தொலைந்த ஐபோன் பற்றி விலாவாரியாகப் புலம்பிவிட்டு அடுத்த சில பத்திகளிலேயே “உண்மையில் நான் வைத்திருந்தது ஐபோன் இல்லை. வேற்று கிரகத்திலிருந்து வந்த யாரோ விட்டுவிட்டுப் போன திசை காட்டும் கருவி” என்று சொல்லி பின்னர் ஐபோனை மறந்துவிட்டு அந்த வேற்றுக் கிரகம் பற்றி பல தகவல்களை அடுக்கி…..கிரகம் ஒரு கற்பனை என்று அறிவித்துவிட்டால்…அடுக்கிய தகவல்கள் அனைத்தும் கற்பனையென்று தானே ஆகும்……ஐபோன் கதைக்குள் விரியும் ஒரு கோள் பற்றிய கதை….இதைச் “சட்டகக் கதை” என்று வகைப்படுத்துவார்கள்…..ஒரு கதையை வகைப்படுத்துவது போர்ஹேஸுக்கு ஒவ்வாத விஷயம்…..இக்கதையை வகைப்படுத்த வேண்டுமென்றால் போர்கேஸியக் கதை என்று தான் வகைப்படுத்த வேண்டும். போர்ஹேஸின் எழுத்து முரண்பாடுகள், கண்ணாடிகளினுடே விரியும் எல்லையற்ற பிரதிபலிப்புகள், சிக்கலான புதிர்ப்பாதைகள் ஆகியவற்றால் நிரம்பியிருக்கும்.
‘Tlön, Uqbar, Orbis Tertius’ இல், போர்ஹெஸ், ‘பிஷப் பெர்க்லி’ என்று அழைக்கப்படும் ஜார்ஜ் பெர்க்லியைக் குறிப்பிடுகிறார். இந்த ஐரிஷ் தத்துவஞானி அவரது அகநிலை கருத்தியல் கோட்பாட்டிற்கு (‘Subjective Idealism’) மிகவும் பிரபலமானவர். அவரது பெயர் ஒரு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு – பெர்க்லி – இடப்பட்டுள்ளது. பெர்க்லி விவரித்த கோட்பாட்டை சுருக்கமாக ஒரு கேள்வி வடிவத்தில் விளக்குவார்கள் – “காட்டில் மரம் விழுந்தால், அதைக் கேட்க யாரும் இல்லை என்றால், அது ஒலி எழுப்புமா?” – என்பது தான் அந்தக் கேள்வி. இதற்கு பெர்க்லியின் பதில் ‘இல்லை’ என்பதாக இருக்கும், ஏனெனில் அவை மனிதர்களால் அந்த ஒலி உணரப்படும்போது மட்டுமே அது ஒலிக்கும்.
பெர்க்லிக்கும், ட்லோனில் வசிப்பவர்களுக்கும், பொருள் அல்லது பொருட்கூறு – அதாவது, பௌதீகப் ‘பொருள்’ – இல்லை. அது மனத்தால் உணரப்பட்ட ஒரு யோசனை மட்டுமே. நான் வைத்திருந்த ஐபோன் இல்லை, ஆனால் அது இருப்பதை நான் உணர்கிறேன். அவ்வளவே. அது ‘தொலைந்து போனதற்கு அழுத நேரத்திலும்” அது என்னுடனேயே ‘இருந்தது’. நிச்சயமாக, Tlön மக்கள் ஒரு கற்பனை. எனவே முரண்பாடாக, அவர்கள் சொல்வது சரிதான் (அவர்கள் இல்லாமல் இருந்தாலும்): அவர்களின் உலகம் போர்ஹேஸ் வாயிலாக, அவரது கதையின் பக்கங்கள் மூலம் நாம் உணரும் உணர்வுகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது.
‘Tlön, Uqbar, Orbis Tertius’ இல் போர்ஹெஸ் குறிப்பிடும் பலர் உண்மையான அர்ஜென்டினா நாட்டு ஆளுமைகள். 1940 இல் Sur இதழில் இந்தக் கதையை முதன்முறையாக வாசித்த வாசகர்கள் உண்மை மற்றும் புனைகதை, யதார்த்தம் மற்றும் குழப்பம் – இவற்றின் திசைதிருப்பும் கலவையாக இருப்பதைக் கண்டு அதிர்ந்திருப்பார்கள்.
–
தியரியெல்லாம் எழுதியாயிற்று. இந்தக் கதை ஏன் பிடிக்கிறது?
– குறிப்புச் சிதறல்கள்
– தகவல்களைக் கதையில் செதுக்கியுள்ள லாவகம்
– வகைமைப்படுத்த முடியாத இதன் வடிவம்
– தத்துவங்களைப் பின்னி ஒரு கதையில் கோர்த்திருக்கும் செயல் திறன்
– கருவின் விரிந்த தன்மை
– படித்த வெகுநேரம் கழித்தும் வாசகனை அசை போட வைக்கும் தன்மை
– மர்மக்கதை போலத் தொடங்கி, அறிவியல் புனைவாக மடை மாறி, தத்துவம், மனோதத்துவம், தொல்லியல் என்று பல துறைகளையும் தொட்டு பின்னர் ஒரு புரளியாக வடிவங்கொண்டு டிஸ்டோபியன் முடிவை எட்டும் அபூர்வம்
முன்னர் அனிமேக்கள் என்றாலே ஓர் ஒவ்வாமை எனக்கிருந்தது. என் புதல்விகள் இருவரும் இருபத்தி நான்கு மணி நேரமும் ரத்தமாய்ச் சொட்டும் அனிமேக்களை அலுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை கொடூரமான அனிமேக்களைப் பார்ப்பதனால்தான் ஜப்பானில் அதிகம் பேர் தற்கோலை செய்து கொள்கிறார்கள் என்ற என் உலர் நகைச்சுவை அனுமானத்தை அவர்கள் முன் வைத்த போது சின்னவள் சொன்னாள் – அருமையான ஐடியா அப்பா! கிப்லி ஸ்டூடியோக்காரர்கள் இதே கருப்பொருளில் கூட ஓர் அனிமே தயாரித்துவிடுவார்கள்-என்றாள். இதெல்லாம் நான் “பர்ஃபெக்ட் ப்ளூ” அனிமே திரைப்படத்தைப் பார்க்கும் வரைதான்.
புதல்விகளுடன் அதிக நேரம் செலவழிப்பதில்லை என்று என்னிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் மனைவி. அவரின் வாதங்களுக்கு எதிர் வாதங்களை அடுக்க முடியாமல் நான் திணறிக் கொண்டிருந்த போது உதவிக்கு வந்தாள் மூத்தவள். தன் மடிக்கணினியைத் தொலைக்காட்சியோடு இணைத்து ஒன்றன்பின் ஒன்றாக டிஜிடல் விளம்பர பேனர்கள் குதித்துக் கொண்டிருக்கும் ஓர் இணைய தளத்திற்கு ஏகி “பர்ஃபெக்ட் ப்ளூ” படத்தை ஓட்டினாள். நான் மட்டுமல்ல மனைவியும் சண்டையிடும் ஆர்வத்தை இழந்து அமைதியானார். சின்னவளும் எங்களுடன் சேர்ந்து கொண்டாள். இப்படத்தை அவள் பல முறை பாரத்திருக்கிறாள். ஆனாலும் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு குறிப்பும் தராமல் முதல் தடவையாக படத்தைப் பார்க்கும் அதே ஆர்வத்துடன் பார்த்தாள்.
கற்பனாவாதம் – யதார்த்தம் இரண்டையும் சேர்த்துக் கட்டிய திரைக்கதையமைப்பு. இரண்டும் சரிவிகிதத்தில் கலந்து எது கற்பனாவாதம் எது யதார்த்தம் என்ற குழப்பத்தை எழுப்பியவாறே காட்சிகள் பயணப்படும். அனிமேக்களின் பலம் அவற்றில் பயன்படுத்தப்படும் நிறங்கள். அமெரிக்க சூப்பர் ஹீரோ கார்ட்டூன்களிடமிருந்து மிகவும் மாறுபட்ட அனுபவத்தை அனிமேக்கள் நமக்குத் தருவதில் வெற்றி பெறுவதன் காரணம் இருண்மைக் கருக்கள் மட்டுமல்ல ; அனிமேக்களின் வியக்கத்தக்க நிறக்கூட்டும் தான். பெரும்பாலான அனிமேக்களில் செயற்திறனுடன் பயன்படுத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட உயிரூட்டல் (limited animation) எனும் உத்தி அனிமேவை கார்ட்டூன்களிலிருந்து வித்தியாசப்படுத்தும் இன்னோர் அம்சம். இயக்கமும் நகர்வும் கார்ட்டூனுக்கு இன்றியமையாதவை. மட்டுப்படுத்தப்பட்ட உயிரூட்டல் உத்தி வாயிலாக கலைத் தரத்தை நிலை நிறுத்துபவை அனிமே.
அனிமேக்களையும் கார்ட்டூனையும் ஒப்பிடுவதே பிழையானது என்றாள் பெரியவள். “கார்ட்டூன்கள் பொதுவாக ஓவியங்களின் முன்மாதிரிகளாகவோ ஆய்வுகளுக்கெனவோ பயன்படுத்தப்பட்டன. இப்போதெல்லாம் நகைச்சுவை மற்றும் நையாண்டிக்கான கேலிச்சித்திரங்களாகவே கார்ட்டூன்கள் வரையப்படுகின்றன. அனிமேக்கள் பெரும்பாலும் வாழ்க்கைச் சிக்கல்கள் அல்லது மனித உணர்வுகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள விஷயங்களில் கவனம் செலுத்துக்கின்றன. வன்முறை சார்ந்த பாலியல் சார்ந்த கருப்பொருள்களை அனிமேக்கள் தைரியமாகச் சித்திரிக்கின்றன. கார்ட்டூன்களின் முக்கியக் குறிக்கோள் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதே” – பரவாயில்லையே, நிறைய யோசித்து வைத்திருக்கிறார்களே புதல்விகள் என்று அப்புறம் பெருமிதப்பட்டுக் கொள்ளலாமென்று படத்தில் கவனம் செலுத்தலானேன்.
பாப் பாடகியாய் பிரபலமடைந்த மீமா நடிகையாக முடிவு செய்கிறாள். நடிப்பு அவ்வளவு எளிதாக இல்லை. திரும்பத் திரும்ப டேக் வாங்கும் போது அவள் சலிப்படைகிறாள். பாப் பாடகியாக இருந்த நாட்களை அசை போடுவது நிற்கவேயில்லை. முன்னாள் பாடகி தன் முடிவில் அவ்வப்போது சந்தேகம் கொண்டாலும் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை. நடிக்கும் டீ வி தொடரில் குழு வன்புணர்வுக் காட்சியில் நடிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறாள். வனபுணர்வுக் காட்சியில் நடிப்பது அவளின் இமேஜுக்கு குழி பறிக்கும் என்ற அவளுடைய மேனேஜர் ரூமியின் அறிவுறுத்தலை உதாசீனப்படுத்திவிட்டு துணிச்சலாக நடிக்கத் தயாராகிறாள். யதார்த்தத்தில் மீமா எடுக்கும் முடிவுகள் அவளின் அகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தன்னுடைய பாப் பாடகி பிம்பம் அவளைத் தொடர்ந்து அலைக்கழிப்பதாக உணர்கிறாள். அவளுடைய வெறி பிடித்த ரசிகன் ஒருவன் பின் தொடர்ந்தவாறிருக்கிறான். மொட்டைக் கடிதம், மிரட்டல்கள், தபால் வெடிகுண்டு என்று அவனின் stalking மிகத் தீவிரமடைகின்றது. மேனேஜர் ரூமிக்கு மீமாவின் முடிவுகள் ஏமாற்றத்தை அளிக்கின்றன. உடையில்லாமல் கவர்ச்சி போட்டோக்கள் எடுத்துக் கொள்கிறாள் மீமா. முக்கியப் பத்திரிக்கைகளின் நடுப்பக்கங்களில் மீமாவின் புகைப்படங்கள் வெளியாகி மிக்க வரவேற்பு பெறுகின்றன. வெறிபிடித்த ரசிகனுக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. ரூமி வேலையை விட்டு நின்று கொள்கிறாள். கற்பனை – யதார்த்தம் இரண்டுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது மீமாவுக்கு. அவளுடைய ஏஜன்ட், கவர்ச்சிப் படங்கள் எடுத்த போட்டோகிராஃபர் என ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். தூங்கி விழித்தவுடன் என்ன கனவு கண்டோம் என்ற தெளிவிலாமல் யதார்த்தத்தினுள் விழித்திருக்கிறோமா அல்லது கனவிலேயே விழித்திருக்கிறோமா எனும் மயக்கத்தில் புழங்குகிறாள் மீமா. முகம் பார்க்கும் கண்ணாடி வழியே, அறையில் விளக்கொளிரும் இரவு நேரத்தில் ஜன்னல் கண்ணாடியினூடே அவளின் பாப் பாடகி ஆளுமை சதா பரிகசித்தவாறு இருக்கிறது. அவள் நடிக்கும் தொலைக்காட்சித் தொடரின் சம்பவங்களும் யதார்த்தத்தின் சம்பவங்களோடு இணைந்து கொள்கின்றன.
கிரகித்துக் கொள்ளவும் உற்றுக் கவனிக்கவும் இப்படத்தில் நிறைய உள்ளன. பித்துப் பிடிக்க வைக்கும் எடிட்டிங் மற்றும் சற்றும் எதிர்பாராத திருப்பங்கள் வாயிலாக மிக அனுபவம் வாய்ந்த திரில்லர் பட பார்வையாளர்களையும் பர்ஃபெக்ட் ப்ளூ திக்குமுக்காட வைக்கும்.
அன்றைய நாளில் நடந்த வருத்தமான நிகழ்வுகளை மனக்கவலையுடன் எண்ணியவாறே கதையின் மூலப்பாத்திரம் படுக்கையில் குப்புறப்படுத்திருக்கிறது. அங்குமிங்குமாக பொருட்கள் (அழகாக) சீர் குலைந்து கிடக்கின்றன. அறையின் ஓரத்தில் உள்ள மீன் தொட்டிக்குள் நீந்தும் மீன்களும் நகராமல் அடிவாரத்தில் இருந்த படி கண்ணாடியூடாக மூல பாத்திரத்தை நோக்கிக் கொண்டிருக்கின்றன. அறையின் கூரையின் வழியாக காமிரா படுக்கையை நோக்கினால் எப்படித் தெரியுமோ அதே போல ஒரு பறவைப் பார்வையாக அறை முழுதும் நமக்குக் காட்சிப்படுத்தப் படுகிறது. தன்னை யாரோ stalk செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கவலையில் இருக்கும் மூல பாத்திரத்தை கிராபிக் சித்திரிப்பு வாயிலாக பார்வையாளர்களையே stalk செய்ய வைக்கிறது திரைப்படம். இந்த ஓவியத்தை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது – இது தான் என் வாட்ஸப் டிபி – என்றாள் சின்னவள்.
படத்தின் நடுவே சின்னவள் சொன்ன ஒரு குறிப்பு என்னைத் தொந்தரவு செய்தது. சற்று ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. கடந்த பத்தாண்டுகளில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமொன்று இந்த பர்பெக்ட் ப்ளூவின் தழுவல் என்றாள். அவள் குறிப்பிட்டது டேரன் அரனோஃப்ஸ்கியின் பிளாக் ஸ்வான் படத்தை. பிளாக் ஸ்வான் பற்றி அந்தக் காலத்தில் கட்டுரை கூட எழுதியுள்ளேன். (ப்ளாக் ஸ்வான்))
ஒரு பெண் கலைஞர் அவரின் தொழில் வாழ்க்கையின் அதிகரிக்கும் அழுத்தங்களின் விளைவால் யதார்த்தத்தின் பிடியை இழந்து பித்து நிலைக்குள் வீழ்கிறாள். இது 2010இல் வெளியான பிளாக் ஸ்வானின் கதைச் சுருக்கம் மட்டுமில்லை. பிளாக் ஸ்வான் வெளியாவதற்கு பதிமூன்று வருடங்கள் முன்னதாக ஜப்பானில் வெளிவந்த பர்ஃபெக்ட் ப்ளுவின் கதைச் சுருக்கமும் இதுவே தான்.
அனிமே படங்களின் விசிறியாக இல்லாதவர்கள் பர்ஃபெக்ட் ப்ளூ படம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பது கூட அரிது. ஆனால் சடோஷி கோன் எனும் இயக்குனரின் மாஸ்டர் பீஸ் இது என்று புகழப்படுகிறது, சைகலாஜிகல் த்ரில்லர் வகைமைப் படங்களின் ரசிகர்களுக்கு பர்ஃபெக்ட் ப்ளூ முக்கியமான படமாகக் கொண்டாடப்படுகிறது. ப்ளாக் ஸ்வானும் ஒரு மைல்கல் படமாகக் கருதப்படுகிறது. நடிகை நடலி போர்ட்மேனுக்கு அகாடமி விருதைப் பெற்றுத் தந்ததோடு விமர்சகர்களின் பாராட்டு, வணிக ரீதியான வெற்றி – இரண்டையும் ஒருங்கே பெற்ற படம்.
கரு, முக்கியப் பாத்திரப் படைப்பு மற்றும் விஷுவல்கள் – இவ்விஷயங்களில் இரண்டு கதைகளுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை. பிளாக் ஸ்வான் இயக்குனர் டேரன் இரு படங்களுக்கிடையிலான ஒற்றுமைகளை ஏற்கிறார். ஆனால் பர்பெக்ட் ப்ளூவின் தாக்கம் பிளாக் ஸ்வான் என்பதை மறுக்கிறார்.
பிளாக் ஸ்வான் நினா என்னும் பால்லரீனாவின் கதையைச் சொல்கிறது. ஸ்வான் லேக் என்னும் நாட்டிய நாடகத்தின் மூல பாத்திரத்தைப் பெறும் போட்டியில் பங்கேற்கும்போது தன் இயல்பு நிலையைத் தக்க வைக்கப் போராடுகிறாள் நினா. பர்பெக்ட் ப்ளூவின் மீமா பாப் பிரபலம் என்னும் தன் நிலையைத் துறந்து தீவிர நடிகையாகும் முயற்சியில் யதார்த்தத்தின் பிடியை இழக்கிறாள். மேலோட்டமாக இரு வெவ்வேறு பாத்திரங்களின் வேறுபட்ட கதையைச் சொன்னாலும் இரண்டு படங்களின் கருவும் சொல்ல வரும் கருத்தும் மிகவும் ஒத்திருக்கின்றன.
இரண்டு கதைகளும் ஒரே மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளன. இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் அழுத்தமான சூழல்களைச் சந்திக்கின்றன. இது அவர்களின் அடையாளம் குறித்த கேள்விகளை அவர்களுள் எழுப்புவதோடு இறுதியில் அவர்களின் ஆன்மாவை குழப்பும் ஓர் doppelganger-ஐ உருவாக்குகிறது. நினா ஒரு நடன கலைஞராக இருப்பதன் அழுத்தத்தால் பாதிக்கப்படுவது போல, மீமாவும் ஜப்பானிய பிரபலம் எனும் தகுதியின் கடுமையான எதிர்பார்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இரு பாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்னைகள் தொழில் வாழ்க்கையிலும் கசிவது இரண்டு படங்களில் காணப்படும் இன்னொரு ஒற்றுமை. நினாவைப் பொறுத்தவரை இது அவளின் தாயின் ரூபத்தில் வருகிறது. மீமாவின் சூழ்நிலையில் ஒரு ஸ்டாக்கர் ரசிகர் வாயிலாக வருகிறது. தமக்கு நெருக்கமானவர்களால் கட்டமைக்கப்பட்ட innocent என்னும் பிம்பத்தை உடைத்தெறிந்து இரு பாத்திரங்களுமே படங்களின் குறிப்பிட்ட கட்டத்தில் பாலியல் விழிப்புணர்வை எய்துகின்றன. இரண்டு நாயகிகளும் தமக்குத் தாமே ஓர் உளவியல் போரில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக கற்பனைக்கும் யதார்த்தத்துக்குமிடையிலான கோடுகளை மங்கவைக்கும் மாயத்தோற்றம் ஏற்படுகிறது.
படத்தைப் பார்த்து முடித்தவுடன் சற்று நேரத்துக்கு அலசல் தொடர்ந்தது. பெரியவள் முன் வைத்த முன்னோக்கு படத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. – “நான் இதை coming of age வகைமை படமாகப் பார்க்கிறேன். இளம் பாப் பாடகியின் தொழில் வாழ்க்கை எத்தனை நாள் நீடிக்கும்? நடிப்புத் தொழில் மீமாவின் நடைமுறைத் தேர்வு. மேலதிக புகழும் அங்கிகாரமும் பெறுவதற்கான வழி. ஆனால் இந்த மாற்றம் எளிதானதல்ல. பழைய அனுபவங்களின் சாதனையுணர்வை புதுத் தொழில் உடனடியாக கொடுத்துவிடாது. பழைய தொழில் வாழ்க்கை பற்றிய இழப்புணர்வில் ஆழ்ந்திருப்பது புது யதார்த்தத்தை ஏற்பதாகாது. அந்த இழப்புணர்விலிருந்து மீளாமல் புதுத் தொழிலின் சாத்தியங்களை அறுவடை செய்ய இயலாது. பிளாக் ஸ்வானிலிருந்து இவ்விதத்தில் இப்படம் மாறுபடுகிறது என்பது என் எண்ணம்.”
பத்தாண்டுகளுக்கு மேலாக பணி புரிந்த நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் உயர் பதவியேற்றுள்ள நான் இந்த மாற்றத்தை எப்படி எதிர்கொள்கிறேன்? பரிச்சயமான சூழலில் நன்கு பழக்கமான சக-அலுவலர்களுடன் வேலை செய்வது ஏறத்தாழ இரண்டாம் இயல்பாக மாறி விடுகிறது. செய்து முடித்த வெற்றிகரமான பணிகள், அடைந்த இலக்குகள், கிடைத்த அங்கிகாரம் – இவையெல்லாம் நினைவில் அடிக்கடி வருகின்றன. பழகிய நண்பர்கள் தொடர்பு கொள்ளும் போது நினைவேக்கத்துடன் பழைய அனுபவங்களைப் பேசுதல் ஒரு விதத்தில் அபத்தமாகவும் உள்ளது. நானே விரும்பி எடுத்துக்கொண்ட வாய்ப்புதானே இது? புதிது புதிதாகத் தானே தெரியும்? ஆனாலும் புது அலுவலகத்தின் எந்த விஷயத்தையும் பழைய அனுபவங்களோடு ஒப்பிடுதல் சதா மனதில் நிகழ்ந்தவாறுள்ளது. புது சகாக்களை பழைய சகாக்களுடன் புது வேலையமைப்புகளை பழையவற்றுடன்….ஒப்பீடுகள் ஓய்வதில்லை. நாம் புது நிறுவனத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவோமா…நம் வேலைக்கு அங்கிகாரம் கிட்டுமா…நம் அதிகாரிகள் நம்மை அமைதியாய் வேலை செய்ய விடுவார்களா….புதிய அதிகாரி புது சகாக்களும் நம்மைப் பற்றி மட்டமாக எடை போடுகிறார்களோ….நான் எப்போது தப்பு செய்வேன் என்று ஆர்வமாய் காத்திருக்கிறார்களோ…தோல்விப்பயம் நம்மை பிடித்தாட்டுகிறதே….பாதுகாப்பின்மை நம் குரல் வளையைக் கவ்வுகிறதே…கோபமும் உதவியற்ற உணர்வும் ஒருசேர கோர தாண்டவம் ஆடுகின்றனவே….முகத்தில் கடிதத்தை வீசியெறிந்துவிட்டு நகர்ந்துவிடலாமா….தோன்றும் எல்லா எண்ணங்களையும் செயற்படுத்தாமல் இருப்பது எத்தனை பெரிய வரப்பிரசாதம்! நினா யதார்த்தத்திலிருந்து தூர தூர விலகி்…தமக்குள்ளேயே போரில் ஈடுபட்டு…பிடியிழந்து…திரும்பவியலா பாதையில் செல்வது போல நாம் எண்ணுகின்றவற்றுக்கும் நமக்கமையும் யதார்த்தத்துக்கும் இடையிலான வெளி அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுவது மாற்றத்தை நாம் ஏற்றுக் கொள்வதற்கான முதல் புள்ளி. வேலை மாற்றம் மட்டுமில்லை…வாழ்வின் எந்த மாற்றமும் எளிதானதல்ல…மீமாவைத் தள்ளாடச் செய்த புது மாற்றம், புதுத் தெரிவு – நடிப்புத் தொழில் என்றில்லை, எந்த வித மாற்றமாயிருந்தாலும் – நம்மையும் தள்ளாட வைக்கும்….
“அப்பா…அப்பா….” – சத்தம் போட்டு அழைத்து மனைவி கொடுத்தனுப்பிய தேநீரை என் கையில் கொடுத்தாள் சின்னவள்.
“டேரன் அரனோஃப்ஸ்கி சுட்டதுக்கே இப்படி அதிர்ச்சி ஆனா எப்படி? நோலனும் சடோஷி கோன் கிட்டர்ந்து சுட்டுருக்கார்…உனக்கு புடிச்ச இன்செப்ஷன் படத்துக்கு ‘இன்ஸ்பிரேஷன்’ எதுன்னு நெனைக்கிற? சடோஷி கோன் இயக்கிய அனிமே படம் Paprika தான்….அடுத்த அதிர்ச்சிக்கு தயாரா?” – என்று கேட்டாள்.
(RELATIVITY : A GRAPHIC GUIDE என்ற புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது வந்த தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை மார்பில் மடித்து வைத்தவாறே உறங்கிய போது கண்ட கனவில் பின் வரும் வரிகளை யாரோ படித்தார்கள்)