Tag: முதியவர்

  • கண் திற

    ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும் – எம் டி முத்துக்குமாரஸ்வாமி
    தமிழ்வெளி வெளியீடு

    குளிரூட்டப்பட்ட காருக்குள் மேற்கத்திய இசையில் லயித்து மதுவருந்தியபடி, பெண்ணொருத்தியின் அங்கங்களை, சிணுங்கல்களை கற்பனையில் ஏற்றிக் கொண்டு கண் மூடிப் பயணம் செய்கிறான். உமது திருச்சட்டத்தில் உள்ள அற்புதங்களை நான் காண என் கண்களைத் திற. – என்கிறது ஒரு விவிலிய வசனம். உடலின் ஒளியாகிய கண் மூடிக்கிடக்கும்போது எதைக் காணவியலும்? 

    ஓட்டைக்கண்ணைத் திறந்து ஜன்னல் வழிப் பார்க்கிறபோது அவன் காணும் காட்சி அவனுள் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. ஜன்னல் வழி அவன் பார்க்கும் முதியவனின் முகம் அவனுடைய முகத்தை ஒத்திருக்கிறது. அவன் பார்ப்பது அவனுடைய பிரதிபலிப்பவையேவா? சில வினாடிகளுக்கு முன்னர் போதையுணர்வில் ஆழ்ந்திருந்த அவனை புரட்டிப்போடும் அந்த ஜன்னல் வழி தெரியும் உருவம் நிஜமா, அல்லது அவன் கற்பனை செய்து கொள்ளும் அவனுடைய பிரதிபலிப்பா? 

    ஒரு கணத்தில் அவன் தன்னைப் பற்றிய தற்சோதனையில் ஈடுபட்டிருக்கக் கூடுமா? அதற்கான ஒரு சங்கேதமும் அந்தத் தருணத்துக்கு முன் கவிதையில் சித்திரிக்கப்படவில்லை. தீடீர் பெருமாற்றம் நிகழ ஒரு நொடி போதும் என்ற கருத்தை கவிதை சொல்ல வருகிறது என்றுதான் மேல் நோக்காகத் தோன்றுகிறது.

    ஆனால், கவிதை சொல்ல வருவது அதனை மட்டுமில்லை என்பதற்கான பல வாசிப்புச் சாத்தியங்களை இக்கவிதை தன்னகத்தே கொண்டுள்ளது. 

    கவிதையின் வரும் சில முக்கியக் குறிச்சொற்களைப் பார்ப்போம்.

    நகரத்தின் பொறி

    முகத்தின் முதிய சாயல்

    அழியும் தற்போதம்

    தன்னழிவு

    இறுதி ஊர்வலம்

    சாவு நடனம்

    ஓட்டைக் கண்பார்வை

    எலிப்பொறியில் சிக்கிக் கொள்ளும் எலிக்கு அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை நினைத்து ஏற்படும் கிலியுணர்வைத் தான் நகரத்தின் பொறி நமக்குள் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது. ஓர் இருத்தலியல் சிக்கலின் குறியீடாகப் போக்குவரத்து நெரிசல் கவிதையின் ஆரம்பத்தில் நிகழ்கிறது. கார் நகராமல் அந்த நெரிசலில் காத்திருக்கும். காருக்குள்ளிருக்கும் பயணி நிலைமையின் உதவியற்ற தன்மையை மறுப்பவன் போல “ஜோஷுவா பெல்லின் வாசிப்பில் சாய்க்கோவ்ஸ்கியின் வயலின் இசையை கன்சர்ட்டோ சிங்கிள் மால்ட் விஸ்கியுடன்” உள்ளிறக்கிக் கொண்டிருக்கிறான்.

    கார் ஜன்னலுக்கப்புறம் தீடீரென்று வெகுஅருகே வந்து உள்ளே நோக்கும் உருவங்கள் பொதுவாகவே திடுக்கிட வைக்கும். இங்கோ இசையும், மதுவும் பெண் சிந்தனையும் அளைய ஓட்டைக் கண் திறந்து பார்த்தவுடன் தோன்றும் திடுக்கிடல் தடாலென அவனுள் மாற்றத்தை நிகழ்த்திவிடுகிறது. அவன் பார்க்கும் கிழ உருவம் அவனுடய முகத்தின் முதிய சாயல் என்பதாக இருந்தது என்ற குறிப்பு கவிதையில் உள்ளது. யாசகம் செய்யும் பிச்சைக்காரக் கிழவனுடனான உருவ ஒற்றுமையாக அதைப் பார்த்தாலும், மதுவின் போதையில் ஆழ்ந்திருந்தவன் ஓட்டைக் கண்ணைத் திறந்து புறம் நோக்கினானா, அல்லது தன்னுள் நோக்கினானா?

    ஒருவனுடைய தற்போதம், அதாவது தன்னினைவு அல்லது ஆணவம் எப்போது அழியும்? போதையுணர்வில் அவனுடைய தற்போதம் நீங்க வாய்ப்பு உண்டெனினும், அப்போதையுணர்விலிருந்து அவன் நீங்க அவனுக்கு மனம் வந்திருக்குமா என்பது சந்தேகம். அழியும் தற்போதம் அகத்தினுள் தன்னுடைய முகத்தின் முதிய சாயலைத் தரிசித்ததனால் விளைந்தது என்பதாகப் பொருள் கொள்ள கவிதை வாய்ப்பளிக்கிறது.

    தன்னழிவு என்றால் என்ன? பொதுவாக எதிர்மறைச் சொல்லாக கருதப்படும் பதம் – தன்னழிவு. தற்கொலை, தீக்குளிப்பு முதலான செயல்கள், சுயவதை என்பன போன்றவற்றைத் தன்னழிவு என்ற சொல்லால் குறிப்பர். இக்கவிதையில் சுயத்தின் அழிவு என்பதான அர்த்தத்தில் வாசிக்க இடமிருக்கிறது. மேட்டிமை அடையாளங்களை உடனடியாக இழந்து (யாரோ ஒருவரின்) இறுதி ஊர்வலத்தில் அவன் தன்னை மறந்து நாக்கைத் துருத்திக் கொண்டு சாவு நடனம் ஆடியதில் அவன் இழந்தது எதை? அந்தத் தன்னழிவு தன்னை அழித்துக் கொண்டதைக் குறிக்கிறதா? அல்லது சுயத்தின் அழிப்பைக் குறிக்கிறதா?

    “உள், அகநிலை சுயம் மற்றும் வெளி உலகிற்கு இடையே”யான பாலமாக நீண்ட காலமாகவே கண்களைக் கருப்பொருளாகக் கொண்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  கவனம், உண்மை, தெளிவு, ஒளி, பார்வை, தீர்க்கதரிசனம், விழிப்புணர்வு மற்றும் அவதானிப்பு ஆகிய    கருத்துக்களை நனவில் பரப்பும் கற்பனையைத் தூண்டுவதற்கு முயற்சிக்கும் கலைஞர்களுக்கு கண் ஒரு சரியான அடையாளமாகத் திகழ்கிறது. “பொய்க் கண்ணாடி” என்ற மிகப் புகழ் பெற்ற கண்ணோவியம் ஒன்று உண்டு.  ஓர் உயிர்ப்பில்லா கண். அதற்கு புருவமில்லை. அதன் கண்மணி கடுங்கருப்பு நிறத்தில் இருக்கிறது. அதற்கு மாறாக கருவிழி மேகம் பரவிய நீல வானம். உயிர்ப்பற்ற ஒரு கண்ணில் சுதந்திர வானம் தெரிந்தாலும் அதை ரசிக்கவோ உத்வேகம் கொள்ளவோ முடியுமா?  முதல் உலகப் போரை அசை போடும் ஓவியர் போரில் சிக்கிய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த பார்வையாளனின் உயிரற்ற சித்தரிப்பைப் பயன் படுத்திக் கொள்ளுகிறார். பயத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாளை அந்தக் கண் நோக்கும்போதும் அது உயிரற்றுக் கிடக்கிறது. 

    ஜன்னலில் தெரிந்த அவனுடைய முகத்தின் முதிய சாயல் கொண்ட உருவம் வெறித்து நோக்கிய இவனுடைய கண் பொய்க்கண்ணாடியா? ஓட்டைக் கண் திறந்ததும் பொறியிலிருந்து தப்பி சுதந்திரமாக ஓடும் எலி போல சாவின் நடனத்தில் பங்கு பெறுகிறான் காரில் இருந்தவன். இம்மாறுதல் அவன் கார் ஜன்னல் வழி ஒட்டைக் கண் திறந்ததனால் சாத்தியமாயிற்று. இருத்தலியல் பயம் படிந்து உயிர்ப்பில்லாத மூடிய ஓட்டைக் கண் பார்வை சற்று திறந்ததும் அங்குமிங்கும் மேகம் பரவிய நீல வானத்தின் உண்மையான தரிசனம் கிட்டி வாழ்வின் உயிர்ப்பைத் தழுவிக் கொள்ளும் முயற்சியில் இறங்கினான் காருக்குள்ளிருந்தவன். அடுத்தவரின் இறப்பில் கலந்துகொண்டு சாவு நடனம் ஆடுகிறான். மேற்கத்திய இசை, வசதி, பெண் சுகம் – இவ்வனைத்தும் தப்பித்தல்கள். வாழ்வின் நிகழ்வில் முழுமையாக இருத்தலே இருத்தலியல் தவிப்பின் உண்மையான ஆற்றுப்படுத்தல்கள் என்று Moral of the story பாணியில் எழுதி விடுதல் போல இக்குறிப்பை முடித்துவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், கவிதையின் அர்த்த அடுக்கை மேலும் விரிவாக்குகிறது இன்னுமொரு வினா. நெரிசல் மிக்க சாலையில் இறப்பு ஊர்வலம் செல்கிறது. யாசகம் கேட்கும் முதியவர் கார் ஜன்னலைத் தட்டிப் பிச்சை கேட்பது போல் இருக்கிறது. ஆனால் அம்முதியவர் காருக்குள்ளிருக்கும் இவனை வெளியே அழைப்பது போலவும் உடன் அவர் அழைப்பை ஏற்று அவன் வெளிச் சென்றது போலவும் உள்ளது. இறுதி ஊர்வலத்தில் செல்லும் பிணம், இவன் முகத்தின் சாயல் கொண்ட அந்த முதியவர், காருக்குள் இருந்து இறங்கி சாவு நடனமாடும் இவன் – மூவரும் ஒருவரோ?