Tag: பெருமை

  • That’s the question

    சக-அலுவலர் தந்த அறிமுகத்தில் என்னுடைய கார் ஓட்டுனராக ஒரு மாதம் முன் வேலையில் சேர்ந்தார் வீரையா (உண்மையான பெயர் இல்லை). தும்கூரைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்து கிட்டத்தட்ட அனாதையைப் போல வளர்ந்தவர். பதினாறு வயதிலேயே வேலைக்கு வந்துவிட்டதாகச் சொன்னார். நன்றாக பாதுகாப்பாக வாகனத்தைச் செலுத்துகிறார். வேலைக்கு வருவதில் தாமதிப்பதில்லை. பெங்களுரின் சந்து-பொந்து அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார். கசப்பான அனுபவம் எதுவும் அவருடன் நிகழவில்லை. இன்று ஒரு சம்பவம் நடந்தது. இது ஏற்கனவே நடந்த ஓர் உரையாடலின் தொடர்ச்சி எனலாம். பத்து நாட்களுக்கு முன் இந்திரா நகர் போகும் வழியில் எம் எஸ் பால்யா என்னும் இடத்தைக் கடந்து போக வேண்டியிருந்தது. பெங்களூரில் இருப்பவர்கள் அனைவரும் அந்தப் பகுதி ஒரு குறிப்பிட்ட மதச்சாரார் வசிக்கும் இடம் என்று அறிவார்கள். அந்தப் பகுதியைக் கடக்கும்போது வீரையா அண்டைய நாட்டின் பெயரைக் குறிப்பிட்டு அந்த நாட்டைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்றார். எனக்கு சுர்-ரென்று கோபம் தலைக்கேறியது. “அவன் வசிக்க உன் வீட்டை வாடகைக்குத் தர நீ தயாராக இல்லாதபோது அவன் எங்கு போய் வசிப்பான்? உன்னை நேபாளத்துக்காரன் என்று சொன்னால் நீ ஒத்துக் கொள்வாயா?” என்று ஒரு பிடி பிடித்தேன். “சாரி சார், தெரியாம பேசிட்டேன். நானுண்டு என் வேலையுண்டு என்று இருப்பவன் நான்” என்று தாழ்ந்த குரலில் பேசினார். நானும் அவ்விஷயத்தை அதோடு விட்டுவிட்டேன். இன்று காலை அலுவலகம் செல்லும் போது ரஹ்மானின் இசையில் “ஜிக்ர்” எனும் பாடலைக் காரில் ஒலிக்க விட்டேன். “அல்லாஹு” என்ற கோஷத்துடன் பாடல் தொடங்கிற்று. மனதை இளக வைத்து பக்தியுணர்வை கிளர்த்தும் அபாரமாக கீதம் அது. இப்பாடலை பல வருடங்களாக அடிக்கடி கேட்டு வருகிறேன். “ஹப்பிரப்பி ஜல்லல்லா” என்று குழுவினரின் குரல் ஒலிக்கத் தொடங்கியதும், காரைச் செலுத்திக் கொண்டிருந்த வீரையா சின்ன “இயர் போனை” எடுத்து இரண்டு காதுகளிலும் அணிந்து கொண்டார். அவர் தனியாக ப்ளூ டூத்தில் மொபைல் வாயிலாக வேறு ஏதேனும் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று முதலில் நினைத்தேன். நான் கேட்கும் பாடலின் “வால்யூமை” அதிகமாக வைத்திருந்தேன். இந்த சத்தத்தில் ப்ளூ டூத்தில் ஒலிக்கும் பாடல் அவர் காதில் விழுமா என்ற கேள்வி எழுந்தது. “ஜிக்ர்” பாடல் முடிவடைந்ததும் “ஓம் சிவோஹம்” என்ற “நான் கடவுள்” படப்பாடல் ஒலித்தது. “ஹரஹர ருத்ராயா” என்று சுலோகப் பகுதி தொடங்கியதும் தனது காதில் இருந்த இயர் போன்களைக் கழட்டினார் வீரையா. அதனை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்ததும் ஓர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தார். “நான் போட்ட பாடல் புடிக்கலைன்னு காதுல இயர் போனைச் செருகிக்கிட்டியா?” என்று கேட்டேன். “நீங்க முன்னாடி வச்ச பாட்டு எனக்குப் புரியலை..அதனாலத்தான்…” என்றார். “ஓ அப்ப சமஸ்கிருதமும் தமிழும் நல்லா புரியுமா உங்களுக்கு?” என்று கேலியாகக் கேட்டேன். என்னுள் எழுந்த உணர்வை அருவெறுப்பு என்றுதான் வர்ணிக்க முடியும். இசைக்கும் மத வெறுப்பின் ஆடையா? எங்கு வந்து சேர்ந்திருக்கிறேன்? லதாவின் “பாயோஜி மைனே ராம் ரதன் தன் பாயோ” என்ற பஜனையை வைக்கும் போதெல்லாம் மெய் சிலிர்த்துப் போகும் எனது பழைய ஓட்டுனர் அலி ஞாபகத்துக்கு வந்தான். கான்பூர் நகரத்தில் பிறந்தவன். அவன் பெரிய தாத்தா ஐம்பதுகளில் பாகிஸ்தானுக்குச் சென்று செட்டில் ஆனதால் அவனுடைய அப்பா கடைசி வரை பெரியப்பாவுடன் பேசாமலேயே இருந்தார் என்று பெருமையுடன் அடிக்கடி சொல்லிக் கொள்பவன். அவன் எங்கே? வீரையா எங்கே? மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு வரை ஓட்டிக் கொண்டு வந்த வீரையாவிடம் எதுவும் பேசவில்லை. நாளை வேலைக்கு வரவில்லை என்றும் ஒரு நாள் லீவு வேண்டும் என்று சாவியைத் தரும் போது சொன்னார். நான் தலையை மட்டும் ஆட்டினேன். எந்தப் பிரச்னையும் தராத ஓட்டுனர் என்று பேசாமல் இருப்பதா? அல்லது என் காரில் நான் ஒலிக்கவிடும் பாடல்கள் அவருக்குப் பிடிக்கவில்லை என்பதால் வேறு வேலை தேடிக் கொள் என்று கரிசனத்துடன் நடந்து கொள்வதா? Thats the question!