Tag: புள்ளி

  • மனக்கற்பனையின் வலை

    அலுவல் ரீதியான குழப்பங்கள் தூங்க விடாமல் செய்தன. மூன்று மணிக்கே எழுந்து விட்டேன். குழப்பங்களுக்கு திடத் தன்மை இல்லை என்ற எண்ணத்தை விதைத்து சற்று அமைதியாய் அமர்ந்திருந்தேன். குழப்பம் எங்கிருந்து தொடங்குகிறது? என்ற கேள்வியை எழுப்பி முடிச்சை அவிழ்க்க முயன்றேன். நிறைய முடிச்சுகள். ஒரு வலைக்குள் அமர்ந்திருக்கிறோம்! இந்த வலையில் பல்லாயிரம் முடிச்சுகள். என்னுள் இருந்த மிலரேபா கண் விழித்தார்.

    —-

    லட்சியம் என்பது வெறுமை
    அது பல காரணகாரியங்களைச் சார்ந்த, அறிய முடியாத எதிர்காலத்தில் என்றோ நிகழத்தக்க ஒரு நிழல்.
    அதை அடைய வேண்டுமெனும் பேராசை, இப்போதே உன் சுமையை அதிகப்படுத்த வேண்டாம்.
    உன் நரம்புகளுக்குள் எதிர்பார்ப்பின் ரத்தத்தை பாய்ச்சிவிடாதே.
    நரம்புத் திசுக்களைச் சுற்றி ரத்தம் ஓடுவது இயற்கை;
    ஆனால் நரம்பிழைக்குள் ரத்தம் ஓடுவது இயற்கையல்ல.

    லட்சியம் என்பது கற்பனை
    கற்பனை நிகழ்ந்துவிடும் என்ற உறுதி
    அதன் ஈர்ப்பில் லயித்திருப்பது! –
    அடுத்த வார விருந்துக்கு
    இப்போது பட்டினி கிடப்பது

    போட்டி ஒரு கற்பனை
    யார் மீது,
    எதன் மீது,
    போட்டி?

    தான் நடக்கும் பாதையில்
    யாரோ வந்துவிடுவார்கள் எனும் அதீத பீதி,
    இன்னொரு பாதையில் நடப்பவரைத்
    தள்ளிவிடும் எண்ணம் —
    நம் கற்பனையில் மட்டுமே உள்ளது போட்டியுணர்வு!

    நம் இலக்கை நாம் அடைவதும்,
    அவன் இலக்கை அவன் அடைவதும்
    போட்டியுணர்வின் அடிப்படையில் தான் என எண்ணுதல் —
    மணற்பரப்பில் தெரியும் நீர்க்காட்சி மேலான தாகம்!

    எதிர்காலத்தின்
    ஏதோ ஒரு புள்ளியைப்
    பிடித்துத் தொங்கிக் கொண்டிருத்தல் —
    கனவு ஆப்பிளின்
    கற்பனைச் சுவைபார்த்தல்.

    போர்வைக்குள் தூக்கம்
    கனவு வலைக்குள் இயக்கம்
    கொத்த வரும் பாம்பிலிருந்து தப்புதல் சுலபம்
    போர்வையை விலக்கி கண்விழித்தல்
    பாம்பை இல்லாமல் ஆக்கி விடும்.

  • முற்றுப்புள்ளி

    Acknowledgement : http://openfileblog.blogspot.in/2011/05/john-latham-full-stop.html
    Acknowledgement : http://openfileblog.blogspot.in/2011/05/john-latham-full-stop.html

    “சொற்ஜாலங்கள் கவிதை இல்லை

    கடைசி வரி திருப்பங்கள் கவிதை இல்லை

    புதிர்கள் கவிதை இல்லை

    பிரகடனங்கள் கவிதை இல்லை

    முழக்கங்கள் கவிதை இல்லை

    பிரச்சாரங்கள் கவிதை இல்லை

    வசனங்கள் கவிதை இல்லை”

    எழுதிய எல்லாவற்றையும்

    கிழித்துப் போட்டு விட்டு

    வெண் தாளொன்றை

    எடுத்து தயாராக வைத்துக்கொண்டு

    ”எது கவிதை இல்லை என்பது புரிந்தது;

    ஆனால் எது கவிதை என்பதைச் சொல்வீரா?”

    என்று கேட்ட போது

    மௌனமே பதிலாய்க் கிடைத்தது.

    வெண் தாளில்

    ஒரு கறுப்பு புள்ளி மட்டும் வைத்து

    எழுதுகோலை மூடி வைத்தேன்.