Tag: பிரக்ஞை

  • மத்திய கிழக்கு

    வானொலி அலைகளினூடே
    பதின்பருவத்தில்
    என் பிரக்ஞையில் நுழைந்தது
    மத்திய கிழக்கு

    ஏற்றுமதி வாடிக்கையாளனின்
    அலுவலகத்தில் சிறையுண்ட அனுபவம்
    ஏமனில் நிகழ்ந்தது

    வேலையிலிருந்து துரத்தி
    என் வலிமையை சோதித்தது
    ஷார்ஜா ஒரு முறை

    பையில் நிறைந்திருந்த
    திர்ஹம்களை
    மேஜையில் கொட்டி
    சரக்கு எப்போது வரும்
    என்று வினவிய ஜோர்டான் காரன்
    பலமுறை எனை அழைத்து
    என் வேலை குறித்து கேட்ட கரிசனம்

    கதார்க்காரனின்
    தாராள மனதை உணரக் கிடைத்தது
    தம்மாம் செல்லும்
    பஹரைனின் கடற்பாலத்தில்

    கூடப்பயணஞ் செய்த
    கோழிக்கோட்டு பெண்ணொருத்தி
    அபுதாபிக்காரனை கைபிடித்த
    கதையைக் கேட்டது
    ஒமானிய விமானத்தில்

    என் முறை வந்தபோதும்
    என்னை கவனிக்காமல்
    ரஸ் அல் கெய்மாக்காரனை
    கவனித்துவிட்டுப் பின்னர்
    எந்த ஐஸ்க்ரீம் வேணும்
    என்று எதியோப்பிய விற்பனைப் பெண் கேட்டது
    துபாய் மாலில்

    பல நிற அனுபவப் பரிசினை
    எனக்கு நல்கிய மத்தியக் கிழக்கு
    நாவல்களில்
    கவிதைகளில்
    சமய இலக்கியங்களில்
    இன்னமும் தொடர்பில் இருக்கிறது

    முகப்புச் செய்தி
    வாயிலாக அதை அறிய
    எனக்கு விருப்பமில்லையென
    எத்தனை முறை சொன்னாலும்
    அதற்குப் புரிவதில்லை

  • Pierre Menard, Author of the Quixote

    ஜே ஜே சில குறிப்புகள் – நாவலை வாசித்துப் பிரமித்துப் போனதுண்டு. இப்படியும் புனைவுகள் எழுத முடியுமா என்றெண்ணி வியந்து போனேன். இலக்கிய அங்கதம் எனும் வகைமை என்பதாக நாவல் படித்த நாட்களில் என் புரிதல்! ஜே ஜே சில குறிப்புகளில் ஒரு கற்பனையான இலக்கிய ஆளுமை உயிர் பெறுகிறார். ஜே ஜே சில குறிப்புகள் நாவல் வெளிவருவதற்கு கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு முன்னர் Sur பத்திரிக்கையில் வெளியானது – Pierre Menard, Author of the Quixote. இதிலும் ஒரு கற்பனை இலக்கிய ஆளுமை வருகிறார். இந்தக் கதையிலும் கற்பனை இலக்கியவாதி ஏற்கனவே இறந்துவிட்டார். அவருடைய அபிமானி ஒருவர் பட்டியலிட்ட நூல் வரிசை குறித்தான எதிர்வினையாகத் தொடங்குகிறது “சிறுகதை”. எதிர்வினை செய்பவர் இறந்து எழுத்தாளர் மெனார்டின் நெருங்கிய நண்பர் மற்றும் இரசிகர். நூல் பட்டியலில் பிரபலமான நூல்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்ததாகவும் பரவலாக அறியப்படாத பல அரிய நூல்களின் பெயர்கள் விடப்பட்டிருந்தன என்றும் “கட்டுரை”யாசிரியர் குறை பட்டுக் கொள்கிறார். பரவலாக அறியப்படாத, இன்னொருவர் பட்டியலிட்ட வரிசையில் இல்லாத நூல்களின் பட்டியல் கதையில் வருகிறது. இத்தகைய பட்டியல் ஒன்றைப் புனைவில் சேர்ப்பதற்கே நிறைய மேதமை வேண்டும். நம்பத்தகுந்த விதத்தில் வரிசை ஒலிக்க வேண்டும். அப்படியில்லாவிடில், கதை வடிவம் கேலிக்குள்ளாக்கப்பட்டுவிடும். கதையின் நம்பத்தகுந்த தொனி கடைசி வரை தொடர்கிறது. முதல் முறை வாசிப்பவர்களுக்கு இது “இறந்த இலக்கியவாதியின் பங்களிப்பு” குறித்த “கட்டுரையாகவே” தொனிக்கும். மரபார்ந்த சிறுகதையின் தரவடிவமான சிக்கல் – தீர்வு என்ற படிவத்தில் பயணிக்காத இதை எவ்விதத்தில் புனைவு என்று கொள்ள முடியும்?

    சிறுகதையில் புனைவின் அடையாளங்கள் புதைந்துள்ளன. நுணுக்கமான வாசிப்பில் அவை வெளிப்படுகின்றன. ஓரிரு புனைவம்சங்களை மட்டும் இங்கு சொல்கிறேன்.

    (1) கதையின் உள்ளிருக்கும் அங்கதம் – கதையை அற்புதமான இலக்கியப் பகடியாக வாசிக்கலாம். போர்ஹேஸ் இரு இயல்முரண்களைக் கதையில் விவரிக்கிறார். இறந்த எழுத்தாளரின் மீது அளவற்ற மரியாதை வைத்திருக்கும் அவரின் பரம ரசிகன். அந்தப் பரமரசிகனின் மதிப்புரையினுடே நாம் அறியவரும் மறைந்த இலக்கியவாதியின் எழுத்துத்திருட்டுத்தனம். கேள்விக்குரிய சாதனைகளுக்காக மெனார்டை வானளாவப் புகழ்வதைத் தவிர, கதையின் பெரும்பகுதியில், கதைசொல்லி Mme.Henri Bachelier-ஐ (அதாவது மெனார்டின் பிரபலமான நூல்களின் பெயரை மட்டும் நூல் பட்டியலில் சேர்த்தவர்) கடுமையாக விமர்சிக்கிறார். இதில் உள்ள முரண் Mme Bachelier-ம் கதைசொல்லியைப் போலவே மெனார்டின் இரசிகர். தன் பக்கத்தில் இருப்பவரைப் பின்தொடர்வதும், தெளிவில்லாத காரணங்களுக்காக அவரைக் கடுமையாக விமர்சிப்பதும் முரண்நகை.

    (2) மெனார்டின் கலாசாரப் பின்னணியும் பொருந்தா விருப்பமும் – மெனார்ட் பிரெஞ்சு இலக்கியத்தின், கலாசாரத்தின் பின்னணி கொண்டவர் – முழுக்க முழுக்க பிரெஞ்சு கலாசாரத்தில் ஊறியவர். கதையில் “a Symbolist from Nimes, a devotee essentially of Poe, who begat Baudelaire, who begat Mallarme, who begat Valery” என்று அடையாளப்படுத்தப்படுகிறார். மேலும், கதைசொல்லி வரிசைப்படுத்தும் நூல் வரிசையில் “a study of the essential metrical rules of French prose, illustrated with examples taken from Saint-Simon” என்பதுவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பிரெஞ்சுப் பின்னணியில் வேரூன்றிய ஒருவருக்கு ஸ்பானிய இலக்கியத்தைப் புரிந்து அதை மீளுருவாக்கம் செய்ய விரும்புவது விந்தையிலும் விந்தை. கதையில் மெனார்ட் ஒரிடத்தில் விளக்குவது மாதிரி அவரால் “குயிக்ஸாட்” இல்லாத உலகை அவரால் எளிதில் கற்பனை செய்துகொள்ள முடிகிறது. அவர் மேலும் சொல்கிறார் – “குயிக்ஸாட் ஒரு தற்செயல். அது தேவையில்லை. கூறியது கூறல் இல்லாமல், அந்த நாவலை என்னால் எழுத முடியுமென என்னால் முன்கூட்டியே திட்டமிட முடியும்”

    (3) பகடியையும் எள்ளலையும் தாண்டி எதை விளையாட்டுத்தனமாக இந்தக் கதை ஆராய முனைகிறது? – ஓர் இலக்கியப் படைப்பை அணுகும் போது நாம் அதன் சூழல் சார்ந்த தகவல்களையும் நம்முடைய பிரக்ஞைக்குள் இழுத்து வருகிறோம் – ஆசிரியரின் அடையாளம், அவர்கள் வாழ்ந்த காலம், அந்தப் பிரதியை அவர் எப்போது எழுதினார், முதலியவற்றை.

    (4) தலைப்பே ஒரு நகைச்சுவை – டான் குயிக்ஸாட் நாவல் ஸ்பானியர்களின் கலாசார அடையாளம்! கதையின் தலைப்பை வாசிக்கும்போதே – Pierre Menard, Author of the Quixote – ஒவ்வொரு ஸ்பானியனும் புன்முறுவல் பூத்து ஏதோ பகடி என்பதை புரிந்து கொள்வான் அல்லது “இது என்ன கிறுக்குத்தனம்” என்பான். உதாரணமாக “கம்ப ராமாயணம் – ஜெயகாந்தன் எழுதியது” என்பது போலத்தான்! (படைப்புக்கு கம்பர் இட்ட பெயர் – இராமாவதாரம் – என்பது தெரியும்!)

  • சியால்கோட்டுக்கு கனவி்ல் பயணமாதல்

    ஒரு நகரத்திற்குப் பயணமானபோது அங்கு பார்த்த ஒரு வீதி பலமுறை என் கனவில் வந்த ஒரு வீதிக் காட்சியைப் போலவே இருந்தது. ஒரு பக்கம்
    வரிசையாக வீடுகள். இன்னொரு பக்கம் அடர்த்தியாக வளர்ந்த மரங்களுக்கிடையே ஓடும் சிறு நதி. நகருக்கு நடுவே இருக்கும் புகழ்பெற்ற பிரம்மாண்டமான ஏரிக்கு நடுவே அழகான வண்ணவண்ணப் படகு வீடுகள் தெரிந்தன. ஏரியைச் சுற்றி இன்னும் கொஞ்ச தூரம் சென்று புற நகரை அடைந்த போது நான் பார்த்த தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய பேருந்து நிலையமும் என் கனவில் ஒரு கட்டில் போட்டு அதில் நான் படுத்திருந்த இடத்தைப் போலவே இருந்தது. கனவில் அந்த இடம் ரொம்ப கூட்டமாய் இருந்தது. நிஜத்தில் அந்த பேருந்து நிலையம் காலியாய் இருந்தது. என் கனவில் வந்தது போன்றே ஷட்டருடனான கடைகள் இருந்தன. ஆனால் மூடியிருந்தன.

    கனவில் நான் இருக்கும் இடம் பாகிஸ்தானின் நகரம் ஒன்று என்பதாக நினைத்துக் கொண்டிருப்பேன். சியால் கோட்டாக இருக்கலாம் என்று கனவுக்குள் எண்ணம் ஓடும். நிஜத்தில் பார்த்த நகரத்துக்கும் ஊக நகருக்கும் இடையே உள்ள தொலைவு இருநூறு கிலோமீட்டர் தான். இருநூறு கிலோமீட்டர் என்று சொல்லிக் கொள்வது எத்தனை presumptuous! நடுவே எல்லை இருக்கிறது. எல்லையில் பிரச்னை. எல்லையின் தொலைவு பற்றியச் சிக்கல். கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியை இருநூறு கிலோமீட்டராக எப்படி சுருக்கிவிட முடியும்? கனவில் நான் எல்லை தாண்டியதாக எண்ணியது பிழை. எல்லைக்குள்ளாகத்தான் இருந்திருக்கிறேன். கனவின் எல்லைக்குள்.

    கண்ட கனவில் வந்த மனிதர்களை கவனிக்கவில்லை. அறிவிப்பு பலகைகள், பேருந்து எழுத்துகள் எதுவும் கனவில் தோன்றவில்லை. அவை தந்திருக்கக்கூடிய தகவல் கொண்டு இடத்தை சரியாக அனுமானித்திருக்கலாம். கனவு என்பதே நமக்கு நாம் சொல்லிக் கொள்வதும் உணர்ந்து கொள்வதும் தான். பலகைகளில் பேருந்துகளில் எழுத்துகள் தெரிந்திருந்தாலும் அவை நமக்குத் தெரிந்த மொழியில் எழுதப்படாவிட்டாலும் நாம் நினைத்துக் கொண்ட ஊரின் மொழியாகவே அது நமக்குத் தெரியும். போர்டில் ஃபார்ஸி எழுதப்பட்டிருக்கலாம். தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்தவனுக்கு கனவில் வரும் ஃபார்ஸியை வாசித்துவிட முடியும் பிரக்ஞையில் அவனறிந்த மொழியாகிய தமிழ் கொண்டு. கனவுகளின் மொழி பிரக்ஞையின் மொழி.

    நிஜப்பேருந்து நிலையம் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு பல வருடங்களாகிவிட்டனவாம். சியால்கோட்டுக்கு ஐம்பதுகளின் முடிவு வரை பேருந்துகள் சென்று கொண்டிருந்தனவாம்! இந்தத் தகவலின் துணை கொண்டு அடுத்த முறை கனவில் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்தால் சியால்கோட்டுக்கு பேருந்து பிடித்துச் சென்றுவிடலாம். சியால்கோட்டில் அதே வீதிக்காட்சியையும் பார்த்துவிடுவோம். ஏனெனில் வீதிக்காட்சியை பிரக்ஞைக்குள் ஏற்றிக்கொண்டால் கனவில் அதனை இருநூறு கிலோமீட்டர் நகர்த்துவது அத்தனை சிரமமில்லை. ”நிஜமாகவே” சியால்கோட்டிற்குள்ளும் அதே பேருந்து நிலையத்தை வந்தடைந்து விடுவோம்.

  • சார்பியல் : ஒரு வரைபட கையேடு

    (RELATIVITY : A GRAPHIC GUIDE என்ற புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது வந்த தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை மார்பில் மடித்து வைத்தவாறே உறங்கிய போது கண்ட கனவில் பின் வரும் வரிகளை யாரோ படித்தார்கள்)

    இடம் காலம் என்ற

    இரட்டை தொடர்ச்சிகள்

    பிரக்ஞை என்றொரு

    மறைபொருளின்

    நூல் பொம்மைகள்

    நரைத்த மீசை

    இரைந்த முடி கொண்ட

    இயற்பியல் மேதை

    உணர்ந்து சொன்னான்.

    +++++

    சுவரில் சாய்ந்து

    அமர்ந்த படி உறங்கியபோது

    அண்ட வெளியில்

    பறந்தேன்.

    சட்டைப்பையிலிருந்து

    விடுபட்ட

    என் எழுதுகோலும்

    நிலையான சித்திரம் போல்

    என்னுடன் சேர்ந்து பறந்தது.

    வெகு நேரமாகியது தரையைத்தொட.

    குப்புறவிழுந்த நான்

    எழச்சிரமப்பட்டேன்.

    அறை உருள ஆரம்பித்தபோது

    ஒரு மூலையிலிருந்து

    எதிர் மூலையில் போய் விழுந்தேனாம்

    சில வினாடிகளில் நடந்தேறியதாம்.

    உருண்ட அறையிலிருந்து

    என்னை மீட்டவர்கள் சொன்னார்கள்.

    வெகு நேரமாக பறந்து கொண்டிருந்தேனே!

    சில வினாடிகள் மட்டும் கழிந்தன

    என்பது எங்ஙனம் சாத்தியம்?

    இடங்களின் தூரமும்

    கால அளவைகளும்

    வெவ்வேறு யதார்த்த தளங்களில்

    வேறுபடும் எனில்

    யதார்த்தம் என்பதே பிரக்ஞை தானோ?

    +++++

    அறை உருளுதல்

    எப்படி சாத்தியம் என்று

    விழித்தவுடன் வினவப்போகும்

    உனக்கு ஒரு சமிக்ஞை !

    RELATIVITY : A GRAPHIC GUIDE

    கட்டிலுக்கு பக்கத்தில்

    தரையில் விழுந்து கிடக்கும்.