சோகம் நம்மை ஆட்கொள்ளுகையில் நினைவுகளின், கவனத்தின் சின்ன சாகசங்களால் நாம் சில கணங்கட்கு காக்கப்படுகிறோம்: கனியின் சுவை, நீரின் சுவை கனவு நமக்குத் திரும்பித்தரும் முகம், நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள், திசைகாட்டியின் முடிவிலாத் தாபம், தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம், லத்தின மொழிப் பாவகையின் சீர், வீட்டைத் திறக்கும் சிறு சாவி, சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை, ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர், வரைபடத்தின் நிறங்கள், சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு, மெருகேற்றிய நகம், நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு, பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை, நாம் எதிர்பார்க்காத உடல்வலி. எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள் நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றன பணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றன தொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.
- போர்ஹேஸ்
(Translated from the English translation by Paul Weinfield)
நினைவிலிருந்து தொலைந்து போன ஒரு பாடல். அப்படி ஒரு பாடலை சில நாட்களாக ஞாபக மீட்பு செய்ய முயன்று வந்தேன். அதன் ட்யூன் சுத்தமாக மறந்து விட்டது. முதல் வரி ஞாபகமில்லை. பாடகர்கள் யாரெனவும் மறந்துவிட்டது. சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் அடிக்கடி முணுமுணுத்த பாடல். இப்படி நினைவிலிருந்து அகன்றுவிட்ட பாடலோடு அப்படி என்ன உறவு? நான் தங்கி பயின்று வந்த கல்லூரியில் மாணவர்களை ஐந்து மணி வாக்கில் எழுப்பிவிட தெய்வப் பாடல்களை ஒலிக்க விடுவார்கள். ஐந்தரைக்கு பாடல்கள் ஒலிப்பது நிற்கும். அதன் பின் ஐந்தரையிலிருந்து ஆறரை வரை ஸ்டடி-ஹவர். அதற்குப் பின் சூர்ய நமஸ்காரம். பின்னர் குளியல். அதன் பின்னர் இறை வழிபாடு (தினத்தில் மூன்று முறை வழிபாடு). இப்படி ஒரு கல்லூரி இருந்ததா என்று கேட்டீர்களானால், சத்தியமாக சொல்கிறேன். இத்தகைய ஒரு கல்லூரியில் தான் நான் மூன்று வருடம் படித்தேன். ஐந்து மணிக்கு ஸ்பீக்கரில் அலற விடப்படும் இறை பக்திப் பாடல்களின் மேல் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும் என்பது புரிந்து கொள்ள முடியும். ஆனால் இருபத்தியெட்டு வருடங்களாக மறந்துவிட்ட அந்த பாடலின் மீது கல்லூரி காலங்களில் அதிக ஈர்ப்பு இருந்தது. அது ஒலிக்கும் அந்த விடியற்காலத்தில் குருவாயூரப்பன் சுவாமிக்கு நடத்தப்படும் தைலாபிஷேகம், கும்பாபிஷேகம், விஸ்வரூப தரிசனம் முதலானவற்றை விவரித்து நாராயணனை வழிபடும் பாடல் ஏனோ என்னை மிகவும் ஈர்த்தது. ஐந்து மணிக்கு மாணவர்களை எழுப்புவதற்காகவே ஸ்பீக்கரில் அதிக கனபரிமாணத்தில் அலற விடப்படும் எந்த பாடல் எந்த மாணவனுக்கு பிடித்தமாக இருக்கும்? ஆனால் அந்த குருவாயூரப்பன் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்குள்ளேயே (அதாவது எனக்கு மட்டும் கேட்கும்படியாக…மற்றவர்களுக்கு ஏன் துன்பம் தர வேண்டும்?) அந்த பாடலை நான் பாடிக் கொள்ளும் போது நெகிழ்ந்து போவேன்.
சரி மறந்து போன பாடலை திரும்ப ஏன் ஞாபகத்தில் கொண்டு வர வேண்டும்? மறந்துவிட்டதாகவே இருக்கட்டுமே? “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” பாடல் மறந்து போகுமா என்ன? அந்த பக்திப் பாடல் தானே காலத்தை வென்ற பாடல்! இந்த குருவாயூரப்பன் பாடலுக்கு அல்பாயுசு என விட்டுவிட வேண்டியது தானே! ஓரிரு வாரங்களாக அந்த பழைய பாடலை மீண்டும் தேடிக் கண்டுபிடிக்கும் உந்துதல் அதிகமாகிவிட்டது. இறந்த காலத்திய நினைவுகளுடன் மீண்டும் தொடர்பேற்படுத்திக் கொள்ளும் ஆசையிது என்று நான் கருதவில்லை. இறந்த காலத்திலிருந்து ஒரு புதையல் வேட்டை என்று ஒரு விளையாட்டாகவே இதைக் கருதினேன்.
பாடலின் மெட்டு மனதில் இருந்தால் முதல் வரி ஞாபகமிருக்கும். மெட்டு ஞாபகமில்லை. இரண்டாவது வரியில் “குருவாயூரப்பா” எனும் சொல் வரும். அந்த சொல்லை வைத்து தேடினால் ஆயிரக்கணக்கில் பாடல்கள்- தமிழில் மலையாளத்தில். ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்பிபி, கே வீரமணி என்று பல பாடகரகள் குருவாயூரப்பன் மீது ஆல்பம் போட்டிருக்கிறார்கள். அந்த பாடலில் வரும் இன்னொரு சொல் ஞாபகத்தில் இருந்தது. “மயிற்பீலி கிரீடம்” எனும் சொல் முதலாம் சரணத்திலோ இரண்டாம் சரணத்திலோ வரும். அந்த சொல்லை வைத்து தேடினால் பல மலையாள பாடல்கள் வரிசையாக வந்தன. அநேகமாக எல்லா குருவாயூரப்பன் பாடல்களிலும் “மயிற்பீலி கிரீடத்தை” பயன்படுத்தியுள்ளார்கள். இணையத்தில் தேடும் முயற்சியை சில மணி நேரம் நிறுத்தி வைத்தேன். ஆனால் உந்துதல் மேலும் அதிகமானது. இறந்த காலத்தின் ஒரு நினைவுத் துண்டு எப்படி நம்முடன் இல்லாமற்போகலாம்? ஓர் அவஸ்தையாக உருமாறத் தொடங்கிற்று அந்தத் தேடல். நேற்றிரவு தூக்கம் வராமல் புரண்டு படுத்தேன். குருவாயூரப்பனும் மயிற்பீலி கிரீடமும் என் மனத்துடனான உரையாடலில் வந்தவாறிருந்தன. “இது என்ன பைத்தியக்காரத்தனம்” என்று என் மனத்தை கடிந்து கொண்டேன். சற்று அமைதி. ஓரிரு நிமிடங்களாகியிருக்கும். இறந்த காலத்திலிருந்தா அல்லது ஞாபக அடுக்கிலிருந்தா….மெட்டை முணுமுணுக்க ஆரம்பித்தேன்…இரண்டாம் வரியில் “குருவாயூரப்பா” சரியாகப் பொருந்தியது. இரண்டாம் முறையாக மெட்டை முணுமுணுக்கும் போது முதல் வரி கிடைத்துவிட்டது.
“வைகறை பாடும் இன்னிசையோடு வாசல் திறக்கிறது குருவாயூரப்பா எனும் கோஷம் அழைக்கிறது”
பி சுசீலாவும் கே வீரமணியும் பாடியிருக்கிறார்கள். இப்போது கேட்கும்போது டிபிகல் டெவோஷனல் ட்யூனாக ஒலிக்கிறது. இருந்தாலுமென்ன இறந்த காலத்திலிருந்து மீட்டெடுத்த இந்த நினைவு விளையாட்டு உற்சாகம் கொடுத்தது. நினைவுக்கு முன்னால் இணையம் ஒன்றுமில்லை. கடவுச் சொல்லை நினைவுதான் தர வேண்டும்.
பழக்கம் எனும் மகாசக்தி பாதிப் படித்து தலை திருப்பி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. என் படுக்கைக்குப் பக்கத்தில் இவ்வாறு சிதறிக் கிடந்த புத்தகங்களையெல்லாம் “ஷெல்ஃபில்” மனைவி எடுத்துவைத்துவிட்ட தினத்தன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். படுக்கையின் விளிம்பில் கரையாக இருந்த புத்தகங்களின் இழப்புணர்வு தாளாமல் சில புத்தகங்களை மீண்டும் வெளியில் எடுத்து படுக்கைக்கருகே வைத்து கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன். +++++
நட்பு நண்பர்களின் தொடர்பில் இருப்பதில்லை என்ற குற்றவுணர்வு வாட்டுவதாக நினைத்து அதை சீர் செய்யும் நடவடிக்கையை எடுக்க நெடுநேரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நண்பனும் என் நினைவில் வரவில்லை. அவர்கள் நினைவிலும் நான் வராமல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் அளித்த ஆறுதலில் குற்றவுணர்வு கரைந்து போனது. +++++
பூனைக்கு வந்த காலம் சில உயர்அதிகாரிகளின் நிலை பாவமாய் இருக்கும். நன்கு அதிகாரம் பண்ணி நம்மை கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவருக்கும் மேலான ஓர் அதிகாரி நம்மை அழைத்து நம் வேலையைப் பற்றிப் பாராட்டிப் பேசும் போது அருகில் இருக்கும் நம் அதிகாரியின் முகம் ரசிக்கத் தக்க ஹாஸ்யக்காரனின் பாவத்தில் காணப்படும். போன வாரம் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. பாவ்லா காட்டியவாறே இத்தனை மாதங்களாக அவர் செய்து வந்த ஒரு பணி எதிர்பாராதவிதமாக கைமாறி எனக்களிக்கப்பட்டது. “இனிமேல் நீயும் சீனியர் மேனேஜ்மென்டின் ஒர் அங்கம்” என்று சொல்லி அவர் கைகுலுக்குகையில் “தயவுசெய்து என்னை மேலே போட்டுக் கொடுத்துவிடாதே” என்று சொன்னது அவர் உடல்மொழி. +++++
திருப்தி என் நண்பர் ஒருவரிடம் ஏதாவது ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு அதைப் பற்றிச் சொன்னால் உடனே தானும் அதைப் பார்த்துவிட்டதாகச் சொல்லுவார். அதில் நடித்த நடிகர் பெயரைச்சொல்லி அவரின் நடிப்பை குறை சொன்னால் உடனே மறுப்பு சொல்வார் நண்பர். தேர்ந்த விமர்சகர் போல “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது ; கொடுக்கப்பட்ட ‘ரோலை’ திருப்தியா செஞ்சுருக்காரு” என்பார். நடிகர் பண்ணிய ‘ரோல்’ என்ன என்று நானும் அவரைக் கேட்பதில்லை ; அவரும் சொல்வதில்லை.
——-
பாத்திரத்தில் நிலைத்திருத்தல்
பெரிய பொய்களை அழகிய வார்த்தைகளுக்குள் அடக்கி கண்களை உருட்டியபடி பேசிக் கொண்டிருந்த அதிகாரியை விரலை லேசாக உயர்த்தி தடுத்து நிறுத்திய வாடிக்கையாளரின் பிரதிநிதி – நல்லா பேசுறிங்க ஆனா என்னால் நம்ப முடியல – என்றார். பொய்களுக்கு எந்த வடிவம் கொடுப்பது என்று புரியாமல் விழித்த அதிகாரி என்னை நோக்கினார். உண்மையை மறைமுகமாக பாதி மறைத்துச் சொல்லும் முயற்சியில் நான் பேசத் தொடங்குவதற்குள் பிரதிநிதி இடைமறித்து – மேல சொல்லுங்க உங்க பொய்ய வச்சு உங்க நிறுவனத்தை எடை போடமாட்டேன் – என்றார். அதிகாரி தப்பித்தோம் பிழைத்தோம் என விடுவிடென்று மின்னல் வேகத்தில் பிரசன்டேஷனை ஓட்டிமுடித்து மடிக்கணினியை மூடினார். வாடிக்கையாளரின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன் – இது மாதிரி மூஞ்சி முன்னால பேசுறவங்களே பெட்டர் – என்று அதிகாரி என்னிடம் சொன்னபோது – மீட்டிங் முடிஞ்சிருச்சி, இன்னும் எதுக்கு ஸேல்ஸ் பிட்ச் மோட்லயே இருக்கீங்க – என்று கேட்கத் தோன்றிற்று. ஆனால் அப்படிச் சொல்லாமல் – சரியாச் சொன்னீங்க – என்று சொல்லி நானும் பாத்திரத்திலேயே தொடர்ந்து இருந்தேன்.
—–
சிலேடை
போராடும் ஒரு நடிகர் எந்த வேடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார் ; பழுத்த அனுபவஸ்தர்களான மூத்த கார்ப்பரேட் அதிகாரிகளும் எந்த பணியையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இயக்குனர்களின் வழிநடத்தலின்படி பூணும் கோமாளி வேடமும் இதில் அடக்கம். —–
எழுதிப்பார்த்த போது…
அனுபவப் பகிர்வு எளிது. படித்துப் புரிந்து கொண்டதையும் அறிந்துகொண்டதையும் பகிர்தலும் எளிது. புரியாததையும் அறியாததையும் பகிர்தல் அவசியமில்லாதது. தொடர்புறுத்தல் வாயிலாக பெறப்படும் இணைவுகள், வாசிப்பின் நினைவு கூறல்கள், உரிய வடிவம் குறித்த பிரக்ஞை, நிகழ்வுகள் குறித்த தனிப்பட்ட பார்வைகள், கூரிய கவனிப்பு ஆகிய கூறுகள் மனப்பயிற்சியினால் அடையக்கூடியவை. சரியான புரிந்துணர்வை எய்துங்காலை சொற்கள் தம்மைத்தாமே உருப்பெருக்கிக் கொள்ளும். தமக்கான உண்மைகளை எழுதுதலோ பிறருக்கான உண்மைகளை எழுதுதலோ இரண்டுமே அடிப்படையில் ஒன்று என்ற தெளிதல் கைவந்துவிட்டால் எல்லைகளற்ற எங்கும் பரந்த மைதானத்தில் எழுத்தோட்டம் நிரந்தரமாய் நிகழ்ந்தவாறிருக்கும். (ஒரு ஃப்லோல வந்தது ; சீரியஸா எடுத்துக்கப்படாது)