Tag: தொழுகை

  • தொழுகை விரிப்பு

    ஆகா ஷாஹித் அலி – ஆங்கிலத்தில் எழுதிய கஷ்மீரக் கவி. அரசியல் கவியாக இருந்தாலும், சமயம் மற்றும் கலாசாரக் கருப்பொருட்களில் இணக்கமாயிருந்தவர். அவரின் “தொழுகை விரிப்பு” என்னும் கவிதை மிகப்புகழ் பெற்றது. இஸ்லாமிய வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் தொழுகையைப் பற்றிய இக்கவிதையை வாசிக்கும்போது விசுவாசமும் ஆனந்தமும் நிரம்பிய மனவுணர்வுடன் தொழுகை விரிப்பில் முழங்கால்படியிட்டு இந்தக் கவிதையில் ஏறக்குறைய நாம் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. ​​​​​​மதக் குறிப்புகள் மற்றும் படிமங்களைப் பயன்படுத்தி தொழுகைச் சடங்கின் வீரியம் மற்றும் முக்கியத்துவத்தின் உணர்வை கவிதையினுள் உருவாக்குகிறார் ஷாஹித். தனது பாட்டிக்கு கவிதையை அர்ப்பணிக்கும் ஷாஹித், ஹஜ்ஜின் வருடாந்திர விழாவை, மக்காவுக்கான முஸ்லீம் புனிதப் பயணத்தை, சோகம் மற்றும் சோர்வு ஆகியவற்றின் தொனிகளுடன் இணைக்கிறார்.

    சென்ற வருடம் இக்கவிதையை மொழிபெயர்க்க நான் எடுத்துக் கொண்ட முயற்சியை கைவிட வேண்டியதாயிற்று. இன்று மாலை கவிதையை மீண்டும் மொழியாக்கம் செய்ய முயன்றேன். முயற்சி எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

    தொழுகை விரிப்பு

    தினத் தொழுகைகளுக்கு நடுவே
    அந்த ஐந்து இடைவெளிகள்

    வீட்டின் பெண்கள்
    காய்கறிகளினூடே
    இழுக்கும் தடித்த இழைகள்

    குளிர்காலத்துக்கென இலையுதிர் காலத்தில் உலரும்
    இஞ்சியின் ஜெபமாலை
    சலசலக்கும் மிளகாய்கள்

    அந்த இடைவெளிகளில்
    மடிக்கப்படும் விரிப்பு –
    பாட்டி கொண்டுவந்த
    வரதட்சணையின் ஒரு பகுதி –
    ஆக, சாத்தானின் நிழல்
    புனிதம் குலைக்காமலிருக்க –
    கருஞ்சிவப்பில் நெய்த
    தங்க மினாராக்களுடன் மக்கா

    பின்னர் சூரியாஸ்தமன
    பிரார்த்தனைக்கு அழைப்பு

    வேலைக்காரர்களின் தொழுகை –
    அவிழ்க்கப்பட்ட வைக்கோல் விரிப்புகளில்
    அல்லது தோட்டத்தில்

    கோடையில் புற்களின் மீது
    பிரார்த்தனைகள் முடிய விரும்பும்
    குழந்தைகள்

    ஆபிரகாமுடைய
    தியாகத்தின் பட்டுக்கல்லை
    ஸ்பரிசித்த
    பெண்களின் நெற்றிகள்

    சுவர்க்கத்திலிருந்து இறங்கிய
    கருப்புக் கல்லைச் சுற்றி வரும்
    வெள்ளையணிந்த பக்தர்கள்

    இந்த ஆண்டு என் பாட்டி
    ஒரு யாத்ரீகர்
    மக்காவில் அவள் அழுகிறாள்

    கல்லின் திரை விலக்கப்படுகையில்
    தூண்களைப் பிடித்துக்கொண்டு
    அவள் அழுகிறாள்

    மூலத்தை வாசிக்க : https://www.poetryfoundation.org/poems/43277/prayer-rug

    Agha Shahid Ali, “Prayer Rug” from The Half-Inch Himalayas. Copyright © 1987 by Agha Shahid Ali.

    Agha Shahid Ali (1949-2001)
  • கண்ணாடிக்குள் ஒரு புத்தகம்

    Hazrat Bal, Sri Nagar, Kashmir (from Dal Lake Side)

    பேக்கேஜ் டூரில் திட்டமிட்டிருந்த அனைத்து இடங்களையும் பார்த்தாயிற்று. சஷ்மேஷாய் தோட்டமும் பரிமஹலும் பார்க்க முடியவில்லை. கவர்னர் வந்ததனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இவ்விரு ஸ்தலங்களிலும் அன்று அனுமதி இல்லை. எங்களுடன் ஒட்டுனராக வந்திருந்த குல்ஸார் அன்று களைத்திருந்தார். ஷாலிமார் பாக்-குக்கு வெளியே நினைவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு டாக்ஸி நின்றிருந்த இடத்துக்குத் திரும்பியபோது குல்சாருடன் நின்று கொண்டிருந்த பிட்டு aka ஹஷீமைச் சந்தித்தேன். தன்னை தில்லிக்காரன் என்று சொல்லிக் கொண்டார். கிழக்கு தில்லியிலுள்ள ஷாட்ரா பகுதியில் அவர் வீடு இருக்கிறதாம். பொதுவாக ஶ்ரீநகரில் வெளி மாநிலத்துக் காரர்கள் எவரையும் டாக்ஸி ஓட்ட விட மாட்டார்கள். அவர் எப்படி ஶ்ரீநகரில் டாக்ஸி ஓட்டுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. குல்ஸார் எங்களை ஓட்டல் வாசலில் விட்டுச் சென்றவுடன் அருகிருந்த டீக்கடையில் காஷ்மீரப் பானம் காவா அருந்திக் கொண்டிருந்தோம். ஹஷீமுக்கு நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் எப்படித் தெரிந்தது எனத் தெரியவில்லை. டீக்கடையை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது எங்களைப் பார்த்து கையாட்டினார். பேக்கேஜ் டூரில் இடம்பெற்றிராத ஹஸ்ரத் பால் தர்கா ஷரீஃபுக்கு ஹஷீமுடன் போகலாமென உடனடியாக முடிவெடுத்தேன்.

    ஹஸ்ரத் பால் சென்றடைந்தபோது இரவுப் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. என்னை உள்ளே அனுமதிப்பார்களா என்று சந்தேகமாக இருந்தது. தலைமுடியை மறைக்கும் படி குல்லா அணிய வேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல் உள்ளே நுழைந்துவிட்டேன். ஹஷீம் தன் குல்லாவை எடுத்து வந்திருந்தார். பிராரத்தனைக் கூடத்துக்கு முன்னதாக காவலர்கள் நின்றிருந்தனர். தயக்கத்துடன் நடந்து வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு காவலர் என் பெயர் என்ன என்று கேட்டார். என்ன பெயர் சொல்வது என்று சில கணம் தயங்கினேன். பின்னர் அசல் பெயரைச் சொன்னேன். அவர் ஏற்கனவே நான் இந்து என்று ஊகித்திருக்க வேண்டும். “இரவுப் பிரார்த்தனை முடிந்த பின் நீங்கள் உள்ளே செல்லலாம்” என்றார் போலீஸ்காரர். தர்காவின் பின் புறம் இருந்த டால் ஏரிக்கருகே நின்று காத்துக் கொண்டிருந்தோம். தொழுகை அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. மைக்கில் ஒலித்த தொழுகையில் கவனத்தை குவித்து ஏரியின் மேல் பார்வையை பதித்திருந்தேன்.

    பிரார்த்தனை முடிந்தது. நாங்கள் பிரதான வாயில் வழியாக முதல் பிரார்த்தனை பகுதிக்குச் சென்றோம். அந்தப் பகுதியில் சிலர் இன்னமும் அமர்ந்து தொழுகை செய்து கொண்டிருந்தனர். கையை எப்படி வைத்துக்கொள்வது? அவ்வப்போது கோயிலில் கையைக் கூப்புவது போல் வைத்துக் கொண்டேன். இது தர்காவல்லவா? கை கூப்புதல் சரியாக இருக்காது. கையைக் கட்டிக் கொண்டேன். நான் இயல்பாக இல்லை என்று எனக்கே தெரிந்தது. தொழுகையில் இருந்த சிலரைத் தாண்டி கண்ணாடிக்குள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான டயரி போன்ற ஒன்றை எனக்கு ஹஷீம் காண்பித்தார். கறுப்பு மையில் மணிமணியாக அரபி மொழியில் குர்ஆன் மூலமும் ஒவ்வொரு அடிக்கு கீழே சிவப்பு மையில் பர்சியனில் அந்த அடியின் அர்த்தமும் எழுதப்பட்டிருந்தன. பர்சியனை உர்து என்று சொன்னார் ஹஷீம். தொழுகையாளர்களுக்கு எங்களின் பேச்சு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக ஹஷீமுடன் அதிகம் பேசவில்லை. “இந்த குர்ஆனை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் ஹஷீம். அதைக் கண்டு கொள்ளாமல் நான் மூலப்பிரார்த்தனை அறைக்குள் சென்றேன். தொழுகை முடிந்து மக்கள் எழுந்தனர். குர்ஆன் ஓதிய அந்த இளவயது மௌல்வியிடம் சென்று ஒவ்வொருவராய் கைகுலுக்கி விடை பெற்றனர். மௌல்வி அங்கிருந்து கிளம்பும் முன்னர் என்னைப் பார்த்தார். பின் என்னருகே வந்து கை கொடுத்தார். “சப் கைரியத்?” என்று வினவினார். நான் தெற்கிலிருந்து வருவதாகச் சொன்னேன். அது ஒரு சம்பிரதாயமான பேச்சு. நான் தெற்கா, மேற்கா, வடக்கா என்று என் belongingness குறித்த குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு! மௌல்வி “குதா ஹாஃபீஸ்” எனச் சொல்லி இன்னுமொரு முறை கைகுலுக்கி விடை பெற்றார்.

    பின்னர் ஒரு முதியவர் என்னை அணுகி என் பெயரைக் கேட்டார். ஹஸ்ரத் பால் ஷரீஃப் பற்றிய தகவல்களை எனக்குச் சொல்லலானார். நபிகள் நாயகத்தின் ரெலிக் எந்தெந்த நாட்களில் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும் என்று விவரமளித்தார். நான் சற்றும் எதிர்பாராத வகையில் ரெலிக் இருக்கும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். மூடியிருந்த அறையின் பூட்டுகளில் என் தலையை லேசாக இடித்த மாதிரி வைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு பணித்தார். அவர் சொன்னது மாதிரி செய்து இரு நிமிடங்கள் கண்ணை மூடி பிரார்த்தனை செய்தேன். அந்த இரு நிமிடங்களில் சில கணங்களுக்கு தவறுதலாக என் கரங்களை கூப்பினேன். என் தலையில் கையை வைத்து வாழ்த்தினார் அம்முதியவர்.

    ஓட்டலுக்குத் திரும்பும் வழியில் ஹஷீம் கேட்டார் – “கண்ணாடிக்குள் வைத்திருந்த அந்த கையெழுத்து குர்ஆன் பிரதியை ஏன் போட்டோ எடுக்கவில்லை? உங்களுக்கு வரலாற்று விஷயங்களில் மிகுந்த ஆர்வம் இருக்கும் என நினைத்தேன்.”

    “அஃப்கோர்ஸ்…அந்தப் புத்தகத்தில் என்ன விசேஷம்?”

    “முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தன் கையால் எழுதிய குர்ஆன் அது என்று சொன்னேனே”

    “எப்போதய்யா சொன்னீர்?”

    “நான் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் கை கூப்பி நின்றிருந்தீர்களே”

    “!?()/-@&₹@“