Tag: தீ

  • தீயை நோக்குதல்

    திருநெடுங்கோதை – தொகுப்பிலிருந்து – பரமேசுவரி – யாவரும் பதிப்பகம்

    உணர்வு, மாற்றம், அழிவு, புதுப்பித்தல் முதலான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்த, இலக்கிய நடைமுறைகளில் நெருப்பு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பொருளாக உவமையாக நெருப்பு பன்னெடுங்காலமாக கவிதைகளில் உலவி வந்திருக்கிறது. சமய இலக்கியங்களிலும் நெருப்பு முக்கியமான அந்தஸ்தைக் கொண்டிருந்தது.

    ரிக் வேதத்தில் வரும் ஒரு துதிப்பாடலில் இப்படி வருகிறது : 

    “யாகங்களின் பிரதான ஆசாரியனும், தெய்வீகமானவனும், பூசாரியாக காணிக்கைகளை  (தெய்வங்களுக்கு) சமர்ப்பிப்பவனும், பெரும் செல்வத்தை உடையவனுமான அக்னியை ஏத்துகிறேன்.”

    வேத உபடநிடதங்களை மொழியாக்கம் செய்ய முயன்ற பாரதியார் அதற்கென வகுத்துக்கொண்ட வடிவத்தை வசனகவிதை என்று அழைத்தார். தீயைப் பற்றிய ஒரு வசன கவிதையில் விரிவான அக்னி சடங்கில் இடப்படுவனவற்றை குறிப்பிட்டு நன்கு எரியுமாறு தீக்குப் பணிக்கிறார்.  

    தீயின் இயல்பே ஒளி. 

    தீ எரிக. 

    அதனிடத்தே நெய் பொழிகின்றோம். 

    தீ எரிக. 

    அதனிடத்தே தசை பொழிகின்றோம். 

    தீ எரிக

    அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம் 

    தீ எரிக. 

    அதற்கு வேள்வி செய்கின்றோம். 

    தீ எரிக. 

    வைதீக சமயத்தின் தீ வேள்விகளை தினமும் புரியும் ஆயிரம் பிராமணர்களை பௌத்த நெறியைத் தழுவ வைத்த பிறகு அவர்களுக்கு என்ன போதிப்பது என்று யோசித்த ததாகதர் அவர்களின் வேள்வித்தீயையே கருப்பொருளாக வைத்து புத்ததம்மத்தை விளக்குகிறார். அவரின் ஞானக்கண்ணில் சம்சார உலகே தீப்பிடித்து எரிகிறது. எரிவதை ஞானப்பார்வையில் நோக்கி சம்சார உலகின் இயல்பை விவரிக்கும் “ஆதித்த பரியாய சுத்தத்தை”க் கூறுகிறார். இது பாலி நெறிமுறையின் மிக முக்கியமான சுத்தம். இந்த சுத்தத்தின் வரிகளைத் தம் புகழ்பெற்ற கவிதையில் குறிப்பாகப் பயன்படுத்தும் கவிஞர் டி எஸ் எலியட் – கிறித்துவத்தின் மலைப் பிரசங்கத்துக்கு ஒப்பானது – என்கிறார்.

    “துறவிகளே, அனைத்தும் எரிகின்றன. என்னவெல்லாம் எரிகின்றன? கண் எரிகிறது. வடிவங்கள் எரிகின்றன. கண்ணின் உணர்வு எரிகிறது. கண்களின் தொடர்பு எரிகிறது. மேலும் கண்ணில் உள்ள தொடர்பைச் சார்ந்து எழுவது எதுவாக இருந்தாலும் – இன்பமாகவோ, துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ – அதுவும் எரிகிறது, எதில் எரிகிறது கண்? மோக நெருப்பால், வெறுப்பின் நெருப்பால், மாயையின் நெருப்பால்,  நான் உங்களுக்குச் சொல்வது,  பிறப்பின், முதுமையின்,  மரணத்தின், துக்கங்களின், புலம்பல்களின், வலிகளின், துயரங்களின் மற்றும் விரக்திகளின் நெருப்பால்.

    “காது எரிகிறது, ஒலிகள் எரிகின்றன …

    “மூக்கு எரிகிறது, நறுமணம் எரிகிறது …

    “நாக்கு எரிகிறது, சுவைகள் எரிகின்றன …

    “உடல் எரிகிறது, தொட்டுணரக்கூடிய உணர்வுகள் எரிகின்றன …

    “புத்தி எரியும். யோசனைகள் எரியும். புத்தியில் உணர்வு எரியும். புத்தியில் தொடர்பு எரியும். மேலும் புத்தியின் தொடர்பைச் சார்ந்து எழும் அனைத்தும் – இன்பமாகவோ, துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ இல்லை. வலி – அதுவும் எரியும், எதில் எரிகிறது? பேரார்வத்தின் நெருப்பால், வெறுப்பின் நெருப்பால், மாயையின் நெருப்பால், நான் உங்களுக்குச் சொல்வது,  பிறப்பின், முதுமையின்,  மரணத்தின், துக்கங்களின், புலம்பல்களின், வலிகளின், துயரங்களின் மற்றும் விரக்திகளின் நெருப்பால்.”

    நோக்குமிடமெல்லாம் தீ! எனவே தான், பட்டினத்தார் பாடுகிறார் :-

    முன்னை இட்ட தீ முப்புரத்திலே 

    பின்னை இட்ட தீ தென் இலங்கையில் 

    அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே 

    யானும் இட்ட தீ மூள்க மூள்கவே 

    எப்போதெல்லாம் எரியும் நெருப்பு நோக்கப்படுகிறது?  – சமைக்கையில், கொண்டாட்டகாலங்களில் ஏற்றப்படும் விளக்குகளில், முகாம்களில் பற்றவைக்கப்படும் கேம்ப் பயர்-களில், குளிரின்போது வாழ்விடங்களை  வெம்மைப்படுத்த தீ மூட்டப்படுகையில், உலோகத்தை உருக்குதல் போன்ற தொழில் துறை செய்முறைகளில், மதநிகழ்வுகளில் செய்யப்படும் சடங்குகளில், பண்டிகைக்கால ஒளிக்காட்சிகளில், காட்டுத்தீ முதலான விபத்துகளில், தீப்பந்தங்களில் – இது போன்று பல்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு சூழல்களில் நெருப்பு கவனிக்கப்படுகிறது. 

    பக்தியுடன் அல்லது பயத்துடன் அல்லது பற்றற்று பார்க்கப்படும் தீ போலில்லை – கவிஞர் பரமேசுவரி “தீயின் அழிபசி” கவிதையில் வரும் தீ. கவிதைசொல்லி தீயை ஓர் அழகான பொருளைப் பார்ப்பது போல ரசிக்கிறார். அழகின் நிமித்தம் தீயை நோக்குவது ஒரு புதுக்கூறு. 

    கவிதை சொல்லி வீட்டின் கூரையில் அவராகவே தீ வைத்துவிட்டு அது எரிவதை ரசனையுடன் நோக்கிக் கொண்டிருக்கிறார். “நான் அங்கேதான் அமர்ந்திருக்கிறேன்” என்று சொல்கிறார். முதலில் அதை வாசித்தபோது தற்கொலை நிகழ்வை மரணத்தை விருப்பத்துடன் தழுவிக் கொள்ளும் முயற்சி போலத் தொனிக்கிறது, ஆனால், நல்ல வேளை “ஓரமாய் அமர்ந்து” எனப் பின்வரும் வரிகளில் குறிப்பிட்டுவிட்டதால், தற்கொலை இல்லை என்று நிம்மதியடைகிறோம். 

    ‘ஒன்றைப்பற்றி ஒன்று 

    மெல்ல மெல்ல மேலேறிக் 

    கவ்வும் அழகை வியந்திருந்தேன்”

    ஒரு கை இன்னொரு கையைப் பற்றி மேலேறும் நூறு கைகளின் நடனம்!

    கொழுந்துகளின் நாட்டியம், அழலின் ஆட்டம், தழலின் வெப்பம் – அனைத்தையும் கண்ணெடுக்காது ரசிக்கிறார் கவிதைசொல்லி – தழலின் வெப்பத்தை எப்படி கண்ணால் காண முடியும் என்ற கேள்வி எழுகிறது. உணரத்தானே முடியும்!

    தழல் அடங்கிவிடுகிறது. கவிதைசொல்லி அங்கிருந்து நகர்வதாயில்லை. ஒன்றும் இலாமல் அனைத்தையும் தின்று தீர்த்த தீயின் பசி அத்தனை அழகாயிருந்ததாம்!

    பரமேசுவரியின் இந்தக் கவிதையை வாசித்த பிறகு ராபர்ட் ப்ராஸ்ட் எழுதிய புகழ் பெற்ற ஆங்கிலக் கவிதை – தீயும் பனியும் ஞாபகத்துக்கு வந்தது. உலகம் அழியப்போகும் நாளை அக்கவிதையில் கற்பனை செய்கிறார் கவிஞர். உலகம் தீயால் அழியும் என்று சிலர் எண்ணுகின்றனர். வேறு சிலரோ பனியால் அழியும் இவ்வுலகு என்கின்றனர். ஆசைகளைச் சுவைத்தவன் என்பதால் தீயால் அழியும் என்பவர் கட்சியில் தானிருப்பதாகச் சொல்கிறார் கவிதைசொல்லி. ஆனால் இவ்வுலகம் இருமுறை அழியும் என்றிருக்குமானால் போதுமான அளவுக்கு வெறுப்பு பற்றி அறிந்தவன் என்பதால் பனியினால் இவ்வுலகம் அழிவதும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் கவிதைசொல்லி. ஆசையை நெருப்பாக உவமிக்கும் ராபர்ட் ப்ராஸ்ட் போலவே எண்ணற்ற கவிஞர்கள் தீயை ஆசைக்கு உருவகமாக்கியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்திலும் இதற்கு உதாரணம் உண்டு.

    அற்புதத் திருவந்தாதியில் சிவ பெருமான் இருக்கும் இடமாக காரைக்காலம்மையார் சொல்லும் சுடுகாட்டில் ஒரு பேய் இருந்தது. அதனால் சிவனேயென்று இருக்க முடியவில்லை.  ஒரு கள்ளிப் புதரின் நடுவில் படுத்துக் கொண்டிருந்த பேய் சும்மா இராமல், எரிகின்ற சிதைக்கட்டையை எடுத்து அதில் படிந்திருந்த மையை எடுத்து கண்ணில் மையாகப் பூசி அழகாக உணர்ந்தது. சில வினாடிகள் தாம்! சிதைக்கட்டையின் தீப்பொறி அதன் கண்ணில் பட்டுவிடுகிறது. சூடு பொறுக்க முடியாமல் சினக்கிறது. சத்தம் போட்டு அலறுகிறது. அங்கும் இங்கும் துள்ளிக் குதிக்கிறது. தீயை அணைக்க முயல்கிறது. இத்தகைய காட்டில் இருக்கிறானாம் எம்பெருமான் என்கிறார் காரைக்காலம்மையார். ​​ 

    யார் அந்த பேய் ? ஆசையுள்ளோர் அந்தப் பேய். இந்த உலகம் தான் சுடுகாடு. ஒவ்வோர் ஆசையும் ஒவ்வொரு கொள்ளிக் கட்டை. அனுபவிக்கும் போது முதலில் கொஞ்ச நேரம் இனிமையாக இருக்கும். அப்புறம், சூடு தாங்காமல் எரியும். எதை வேண்டும் என்று எடுத்தோமோ அதையே வேண்டாம் என்று தூக்கி ஏறிய நினைக்கிறோம்.

    கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்

    கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை

    விள்ளவெழுதி வெடுவெடென்ன

    நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்

    துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்சுட்டிட 

    முற்றுஞ் சுளிந்து பூழ்தி

    அள்ளி அவிக்க நின்றாடும்

    எங்கள்அப்பனிடந் திரு ஆலங்காடே

    “தீயின் அழிபசி” கவிதையில் வரும் கவிதைசொல்லி பதற்றமோ சினமோ கொள்ளவில்லை. மாறாக, அமைதியாய் தீ எரிவதை நோக்குகிறார். அவரே சொல்வது போல அது “அத்தனை அழகாக இருந்தது”. எரிந்து போனது அவர் வாழ்ந்த வீடாகக்கூட இருந்திருக்கலாம்! அவருடைய உடமைகள் எல்லாம் அழிந்து போயிருக்கலாம். ஆதித்த பரியாய சுத்தத்தில் புத்தர் விளக்கிய சம்சார உலகின் வெறுமையை உணர்ந்து அமைதிக்குள் புகுந்த தேரியின் மனநிலையை கவிதைசொல்லி “தீயின் அழிபசி” கவிதையில் பிரதிபலிப்பதாக நாம் வாசிக்கலாம். தேரிகதாவில் தேரி ஸுஜாதா கூறுவது போல் –

    தூசியற்ற, மரணமில்லாத,

    உண்மையான தர்மத்தை அறிந்து,

    நான் வெளியே சென்றேன்,

    வீட்டிலிருந்து விலகி வீடற்றவள் ஆனேன்.

  • அர்ஜுனன் காதல்கள் – உலூபி

    @ Dolls of India
    @ Dolls of India

    வளைந்தோடும் நதியின் கரையில்
    நீராடும் பார்த்தனின்
    இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம்.
    வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய்
    அது பாதத்தை தீண்டிடவும்
    நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான்.
    ஒளி ஊடுருவும் மாளிகையின்
    அறையில் விழித்தான்
    வெளியே நாற்புறமும்
    மீன்களும்
    நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன
    பார்த்தனின் முன் எரிகுண்டம் ;
    நெய்யிட்டு
    தீ வளர்த்தான்.
    அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது
    அருகிருந்த பாம்பின் கண்களில்
    படர்ந்திருந்த இச்சைத்தீ.
    கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம்
    பாம்பு
    பெண்
    பாம்புப்பெண்
    தீச்சடங்கு முடியவும்
    “இது சாட்சி” என்ற சங்கல்பத்துடன்
    பார்த்தனை நோக்கினாள்
    திரௌபதியும் யுதிஷ்டிரனும்
    இணைந்திருந்த அறையினுள்
    விபத்தெனவே நுழைந்ததனால்
    விதித்துக் கொண்ட வனவாசம் ;
    கவர்ந்திழுக்கும்
    சர்ப்பப்பெண்ணுடன்
    கூடுதல் முறையாகுமா?
    பாம்புப்பெண்
    அவனின் மனதோடு மௌனமாய்ப் பேசினாள்
    “சாபமில்லை ; மூத்தோர் சொல்லில்லை
    உமக்கு நீரே வழங்கிக்கொண்ட
    வனவாசத்தில்
    உம் மேல் ஆசையுற்று அணுகுபவளைக்
    கூடுதலில் பாவமில்லை”
    மாலையென காலடியில் சுருண்டது சர்ப்பம்
    மானிடப் பெண்ணாக எழுந்து
    இதழ் குவித்து நெருங்கினாள்
    அர்ஜுனன்
    காமநோய் தீர்க்கும் வைத்தியனானான்.
    நதியின் உயிரினங்கள்
    அறையின் திரையாகின

    oOo

    பின்னொருநாளில்
    நதிக்கரை மேடொன்றில்
    வலியுடன் கண் விழித்தான்
    விஷ பாணம் தாக்கி
    புண்ணான அவனுடலை
    பாம்புப்பெண்
    நாவால் வருடினாள்
    சற்றருகே ஒரு வாலிபன்
    வில்லும் அம்புமாய்
    பின்னே ஒரு வெள்ளைக் குதிரை
    யாரிவன் என்னைப் போல்?
    எங்கிருக்கிறோம்?
    கனவிலா? நனவிலா?
    உடலெங்கும் பாம்பு
    ஊர்ந்து வைத்தியம் பார்த்தது
    சலசலக்கும் நதியில்
    முதலைகள் மூன்று நீந்திச் சென்றன.
    இவைகளை முன்னர் சந்தித்திருக்கிறோமோ?
    இறந்தகால நிகழ்வுகளும்
    நிகழ்கால பிரக்ஞையும்
    ஒன்றிணைந்து குழம்பாகி
    வேறுபாடு காணவியலா கலவையாயின

    oOo

    “விஷமற்ற பாம்பினங்களில்
    நான் அனந்தன் ;
    ஆயிரம் பிரபஞ்சங்கள்
    கடுகளவில் என் தலையில் சுழலுகின்றன”
    கண்ணன் சிரிக்கிறான்

     

    நன்றி : பதாகை