இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்).
—
மேலிருந்து இங்கு வந்து இறங்கியது, அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா
இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில் தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது
அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றன கூண்டோ வலிமையானது!
அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை, உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்து அது முடக்கப்பட்டுள்ளது.
–
அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம் இது,
திரை விலக்கப்பட்டு, மகிழ்ச்சியுடன் முணுமுணுத்தவாறு விழித்திருக்கும் கண்களால் காண முடியாதவற்றை நோட்டம் விடுகிறது
புகழ்க்கீதம் பாடி உயரங்களுக்குத் திரும்புகிறது உலகில் இருந்தவரை மறைக்கப்பட்டவைகளை உணர்ந்தவாறே திரும்பினாலும் அதன் உடையில் கறைகள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.
இத்தனை உயரத்தில் இருந்து அது ஏன் அவ்வாறு வீசப்பட்டது இருண்ட, மந்தமான, ஆழ்ந்த அடித்தளப் பள்ளத்திற்கு?
ஆகா ஷாஹித் அலி – ஆங்கிலத்தில் எழுதிய கஷ்மீரக் கவி. அரசியல் கவியாக இருந்தாலும், சமயம் மற்றும் கலாசாரக் கருப்பொருட்களில் இணக்கமாயிருந்தவர். அவரின் “தொழுகை விரிப்பு” என்னும் கவிதை மிகப்புகழ் பெற்றது. இஸ்லாமிய வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் தொழுகையைப் பற்றிய இக்கவிதையை வாசிக்கும்போது விசுவாசமும் ஆனந்தமும் நிரம்பிய மனவுணர்வுடன் தொழுகை விரிப்பில் முழங்கால்படியிட்டு இந்தக் கவிதையில் ஏறக்குறைய நாம் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. மதக் குறிப்புகள் மற்றும் படிமங்களைப் பயன்படுத்தி தொழுகைச் சடங்கின் வீரியம் மற்றும் முக்கியத்துவத்தின் உணர்வை கவிதையினுள் உருவாக்குகிறார் ஷாஹித். தனது பாட்டிக்கு கவிதையை அர்ப்பணிக்கும் ஷாஹித், ஹஜ்ஜின் வருடாந்திர விழாவை, மக்காவுக்கான முஸ்லீம் புனிதப் பயணத்தை, சோகம் மற்றும் சோர்வு ஆகியவற்றின் தொனிகளுடன் இணைக்கிறார்.
சென்ற வருடம் இக்கவிதையை மொழிபெயர்க்க நான் எடுத்துக் கொண்ட முயற்சியை கைவிட வேண்டியதாயிற்று. இன்று மாலை கவிதையை மீண்டும் மொழியாக்கம் செய்ய முயன்றேன். முயற்சி எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
தொழுகை விரிப்பு
தினத் தொழுகைகளுக்கு நடுவே அந்த ஐந்து இடைவெளிகள்
வீட்டின் பெண்கள் காய்கறிகளினூடே இழுக்கும் தடித்த இழைகள்
குளிர்காலத்துக்கென இலையுதிர் காலத்தில் உலரும் இஞ்சியின் ஜெபமாலை சலசலக்கும் மிளகாய்கள்
அந்த இடைவெளிகளில் மடிக்கப்படும் விரிப்பு – பாட்டி கொண்டுவந்த வரதட்சணையின் ஒரு பகுதி – ஆக, சாத்தானின் நிழல் புனிதம் குலைக்காமலிருக்க – கருஞ்சிவப்பில் நெய்த தங்க மினாராக்களுடன் மக்கா
பின்னர் சூரியாஸ்தமன பிரார்த்தனைக்கு அழைப்பு
வேலைக்காரர்களின் தொழுகை – அவிழ்க்கப்பட்ட வைக்கோல் விரிப்புகளில் அல்லது தோட்டத்தில்
கோடையில் புற்களின் மீது பிரார்த்தனைகள் முடிய விரும்பும் குழந்தைகள்
ஆபிரகாமுடைய தியாகத்தின் பட்டுக்கல்லை ஸ்பரிசித்த பெண்களின் நெற்றிகள்
சுவர்க்கத்திலிருந்து இறங்கிய கருப்புக் கல்லைச் சுற்றி வரும் வெள்ளையணிந்த பக்தர்கள்
இந்த ஆண்டு என் பாட்டி ஒரு யாத்ரீகர் மக்காவில் அவள் அழுகிறாள்
கல்லின் திரை விலக்கப்படுகையில் தூண்களைப் பிடித்துக்கொண்டு அவள் அழுகிறாள்