Tag: தர்மம்

  • ஏ ஐ 171 விமானமும் மஞ்சுநாதரும்

    ஏ ஐ 171 விமான விபத்தில் ஒருவரைத் தவிர அனைத்து பிரயாணிகளும் விமானிகளும் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களும் செத்துப் போயினர். ஆனால் பகவத் கீதையின் பிரதியொன்று சற்றும் கருகாமல் தப்பித்தது. இது  சமூகஊடகங்களிலும் வாட்ஸப் உரையாடல்களிலும் பகிரப்பட்டது. துளி கூட பச்சாதாபமோ, சக-உணர்வோ இல்லாத மனிதர்கள்! இவர்களின் பக்திவுணர்வு போலியானது! “எனக்கு மட்டும் அருள்! வேறு யாருக்கும் அருளாதே!” என்று இறைவனிடம் வேண்டுவது ஆன்மீகமன்று. “உனக்கு தேங்காய் உடைக்கிறேன், எனக்கு செல்வத்தைக் கொடு, அதைக்கொடு, இதைக்கொடு” என்னும் வியாபாரம்.  பிரார்த்தனை ஆன்மீகத்தின் முக்கியமான அங்கம். ஆனால் அது வியாபார உணர்வில் எழுவதல்ல. அதை புரிந்து கொள்ளும் நுண்ணுணர்வு இவர்களுக்கிருந்தால் ஆன்மீகத்தில் நல்ல தேர்ச்சி கண்டிருப்பார்கள்! 

    பிரயாணிகளை இறந்த பிறரைக் காப்பாற்றாமல் தன்னை மட்டும் காப்பாற்றிக்கொண்ட பகவத் கீதை பிரதி – என்று சொன்னதால் என் மீது பாய்ந்தார் அந்த வாட்ஸப் குழுவின் உறுப்பினர். “புனித நூலை ஏளனம் செய்கிறாய்” என்று என் மீது குற்றஞ்சாட்டினார். “புனித நூலை நீ புரிந்துகொண்ட  லட்சணத்தை ஏளனம் செய்கிறேன்” என்று அவரிடம் எப்படி சொல்லி புரியவைப்பது?

    தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிப் பல பத்தாண்டுகளாக நடந்த கொலை, வன்புணர்வு போன்ற குற்றச்செயல்களை மறைப்பதில் பங்கு வகித்ததாகக் கூறப்படும் தர்மகர்த்தாக்களின் கோயில் ஊழியர்களின் செய்கைகளால் அந்தக் கோயில் அசுத்தப்பட்டிருக்காதா என்ற எண்ணம் கடந்த சில தினங்களாக அலை மோத குறிப்பொன்றை பேஸ்புக்கில் எழுதினேன்.

    “சென்ற வார இறுதியில் என் மகளை அவள் கல்லூரியில் விட்டு வர மணிபால் சென்றிருந்தேன். திங்கள் காலை பெங்களூருக்குத் திரும்ப வரும் போது தவறுதலாக வாகன ஓட்டுனர் வேறு வழியில் சென்று விட அந்தப் பாதை எங்களை தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வாசலுக்கு அழைத்துச் சென்றது. தெரியாமல் இங்கு வந்து விட்டோம். மஞ்சுநாதரை தரிசனம் செய்து விடுவோம் என்ற ஆசை துளிர்விட்டது. இறைவனே அழைத்துள்ளார் எனும் வழக்கமான சென்டிமென்ட் சிந்தனை லேசாக எட்டிப்பார்த்தது. இத்தகைய சந்தர்ப்பங்களை என்றும் தவற விடாத நான் வழக்கத்துக்கு மாறாக “நிற்க வேண்டாம்…வீட்டை நோக்கிச் செல்வோம்” என்று சொன்னேன். என்னுடைய மனைவியும் கோயிலுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. தர்மஸ்தலாவின் கோயிலைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்பது காரணமாயிருக்கலாம். இது” அனுமார்” கோயிலா என்று கூட அவர் கேள்வி கேட்டார். செய்தியில் வந்து கொண்டிருக்கும் தகவல்களைப் பார்க்கும் போது தரிசனத்துக்கு நிற்காமல் சரியான முடிவை எடுத்திருக்கிறோம் என்று நினைக்கத் தோன்றுகிறது.”  

    என்னுடைய எந்த போஸ்டுக்கும் லைக்கோ கமெண்ட்டோ போடாத நெடுநாளைய நண்பர் உடனே வந்து ஆஜரானார்.

    “மீண்டும் ஒரு முறை அவரை தரிசிக்கும் வாய்ப்பினை அந்த மஞ்சுநாதர் ஏற்படுத்த வேண்டும். அவனருளாலே அவன் தாள் வணங்கி.. நம்மில் பெரும்பாலானோர் நாம் இறைவனை பார்க்க போகிறோம் என்று நினைக்கிறோம். உண்மையில் அந்த இறைவன் நம்மை பார்க்க விரும்பினால் அன்றி அது நடக்காது “

    அவர் இட்ட கமென்டின் தர்க்கப்பிழை குறித்து அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கோயிலுக்குச் செல்வதும் இறைவனைத் தரிசிப்பதும் அனைத்தும் இறைவனின் விருப்பப்படி என்ற கோட்பாட்டை சரியாகப் பொருத்தினால் கோயிலைச் சுற்றி நடந்ததாக கூறப்படும் கொடுமைகள் கூட இறைவனின் விருப்பம் என்பதாகத்தானே இருக்கும்? உரையாடல் உடனே நின்றுவிட்டது. தானாகவே வந்து கமெண்ட் போட்ட நண்பர் உரையாடலைத் தொடர விருப்பம் இல்லை என்று சொல்லி நிறுத்திக் கொண்டார். அவர் என்னுடன் மேற்கூடி பேசாமல் நிறுத்திக் கொண்டது அவர் விருப்பமா அல்லது 

    இறைவனின் விருப்பமா?

    தற்செயலாக தர்மஸ்தலா கோயிலைக் கடந்து பயணிக்கும் வாய்ப்பு அமைந்தது இறைவன் சித்தம் என்று நினைப்பது இயல்பான பழக்கம். அச்சமயத்தில் அங்கு நிற்காமல் பயணத்தைத் தொடர்ந்தது என்னைப் பொறுத்தவரை இயற்கைக்கு மாறான ஒரு விஷயம். ஏன் கோயிலுக்குள் நுழையவில்லை? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது உண்மைதான். அடுத்த இரண்டு நாட்கள் “தர்மஸ்தலா கொலைகள்” பற்றிய செய்திகள் பூதாகாரமாக ஆன்லைன் மீடியாக்களில் ஒலித்தபோது, பின்னோக்குப்  பார்வையில்  கோயிலுக்குச் செல்லாமல் இருந்தது சரிதான் என்ற அகவுணர்வு எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

    பகவத் கீதையைப்பற்றி மரியாதை இல்லாமல் பேசி விட்டேன் என்று சண்டைக்கு வந்தவரும் “அவன் அருளால் தான் அவனை வணங்க முடியும்” என்று சொன்ன அன்பரும் எதை மறந்து பேசுகிறார்கள்?  நியாயவுணர்வும் சக-மனிதர் சார்ந்த பரிவுணர்வும் ஆன்மீகச் செயல்முறையின் அஸ்திவாரம் என்பதை. நியாயவுணர்வற்ற, சகமனிதர் குறித்த பரிவுணர்வற்ற பக்தியுணர்வு அதிகாரத்திற்குத் துணை போகும் தன்மையை எப்போதும் தன்னகத்தே கொண்டுள்ளது. 

    ஸ்வதர்மம் என்று கீதையில் வரும் தத்துவக் கலைச்சொல் எதனை குறிக்கிறது?  தனக்கேயுரித்தான கடமையைப் புரிவது ஸ்வதர்மம் – இது உடல்-புத்தி சார்த்த “அபர தர்மத்தையும்” ஆன்மிகம் சார்ந்த “பர தர்மத்தையும்” ஒன்றிணைந்தது. பக்தி கலந்த அன்பும் சேவையும் பர தர்மம் எனப்படும். உலகியல் சார்ந்த பணிகள் அபர தர்மம் எனப்படும். 

    ஏ ஐ 171 விமானத்தில் உயிரிழந்த மனிதர்கள் – தப்பிப்பிழைத்த பகவத் கீதை பிரதி – இவ்விரண்டில் கீதையை வாசித்துப் புரிந்து கொண்டவனுக்கு எதன் மீது பரிவுணர்வு இயல்பாக எழ வேண்டும்? 

    “அவனருளால் அவன் தாள் வணங்கி…” என்பவரை எடுத்துக் கொள்வோம். கோயில் என்பது இறைவன் இருக்கும் இடம் என்று எண்ணுபவன் அதன் பரிசுத்தத்தை பேணுவான் – பரிசுத்தம் எதில் உள்ளது – நம் செயல்களில் பொதிந்துள்ள அறத்தினில் உள்ளது – நீதியை நிலை நாட்டுதல் அர்ஜுனன் போன்ற வீரனின் கடமை என்று கண்ணன் போதிக்கிறானே! தர்மஸ்தலா கோயிலைச் சுற்றி நடந்த கொலைகள் கொடுமைகள் குறித்த நியாயவுணர்வு பீறிட்டெழ வேண்டியது அக்கோயிலினுடைய இறைவனைப் போற்றும் பக்தர்களின் இன்றியமையா கடமை என்று சொல்லித்தான் புரிய வேண்டுமா என்ன?