Tag: தடை

  • சர்ச்சைகளுக்கும் மேலான ஒரு சுமாரான சவாரி


    நாவல் மீதான சட்டத் தடையை நீதி மன்றம் விலக்கிய பிறகு, The Satanic Verses என்ற சல்மான் ருஷ்டியின் மிகப் பெரும் சர்ச்சைக்குரிய நாவலை வாசிக்க நான் முடிவு செய்தேன். வாசிப்பு என்பது இங்கு இலக்கியரசனைக்காக மட்டுமல்ல. மாறாக, எழுத்துரிமைக்காக தனது வாழ்க்கையை பணயம் வைத்த ஒரு பெரிய எழுத்தாளருக்கு செலுத்தும் மரியாதையாகவும் இந்த வாசிப்பைச் செய்ய விரும்பினேன்.

    ஆனால் வாசித்தபின் ஏற்பட்ட உணர்வு — மிகமிகச் சுமாரான ஒரு நாவல். பல இடங்களில், “இதை ஏன் எழுதிச் செல்கிறார்?” என்ற கேள்வி எழாமல் இல்லை. வழக்கம்போல், ருஷ்டியின் உரைநடை சில இடங்களில் பிரகாசிக்கிறது. ஆனால் அந்த ஆற்றல் நாவல் முழுமையும் நிலைத்திருக்கவில்லை. மையமற்ற கதை சொல்லல், குழப்பமூட்டும் பாத்திரங்கள், உணர்வளவாக மனதில் ஒட்டாத பாகங்கள் போன்றவை நல்ல வாசிப்பனுபவத்துக்குத் தடையாக இருந்தன.

    நாவலின் முக்கியமான பாத்திரமான ‘இமாம்’ ஒரு முன்னாள் இரானிய மத-அரசியல் தலைவரின் பிரதிபலிப்பாக படைக்கப்பட்டிருக்கலாம். தன்மீதான நேரடி பதிவாக உருவாக்கப்பட்டிருப்பதால் எழுந்திருக்கக் கூடிய சொந்தக் கோபந்தான் ஃபத்வாவுக்கான காரணமோ என்றெண்ணத் தோன்றுகிறது. உண்மையில் அந்தத் தலைவர் அறுநூறுக்கும் மேலான பக்கங்களைக் கொண்ட நாவலை வாசித்துவிட்டாரா என்பது கேள்விக்குறியே!

    நாவல் கடுமையான எதிர்ப்பைச் சந்திப்பதற்கு காரணமான பகுதிகளை மிக உன்னிப்பாக வாசித்தேன். இஸ்லாமின் வரலாறு, சமயவியல் பற்றித் தொடர்ந்து வாசித்தும் சிந்தித்தும் வருவதால் ஆசிரியரின் அணுகுமுறையை கூர்மையாக அவதானிக்க முடிந்தது. முதல் பாதியில் வரும் பகுதி அப்படி ஒன்றும் பிரச்னைக்குரிய பகுதியாக தோன்றவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பகுதி பிரச்னைக்குரியது. பாத்திரங்களுக்கு வைத்துள்ள உர்துப் பெயர்கள் முதல் Alternative History -உத்தியில் சில வரலாற்றுப் பாத்திரங்களை கற்பனையாக எழுதிச் சென்றிருக்கும் விதம் வரை – எக்காலத்திலும் சர்ச்சையை எளிதில் கவர்ந்திழுக்கக் கூடியவை. அவற்றை எழுதும் போதே சர்ச்சையைக் கிளப்பும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றால் அதனை naivety என்று அழைப்பதா? இல்லையேல் அதிக சர்ச்சை அதிக விற்பனை என்னும் மேற்கத்திய எழுத்துலகின் பாணியைக் கைக்கொண்டார் என்று சொல்வதா? மூன்றாவதாக, வரலாற்றையும் புனைவையும் பின்னுதலில் குறியீடுகள், மாய எதார்த்தம் ஆகிய இலக்கிய உத்திகளைப் பயன்படுத்தி பின்னர் வந்த நாவல்களில் வெளிப்பட்ட (Shalimar the Clown, The Enchantress of Florence) எழுத்துவன்மை இந்த நாவலில் கைகூடாததால் விளைந்த விபத்தா? இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் எழுத்தாளரின் இளமைக்கால அசட்டு தைரியம் என்றுதான் கூறத் தோன்றுகிறது. சர்ச்சைகள் மட்டுமே ஓர் இலக்கியத்தை உயர்த்த முடியாது. ஒரு வாசகராக எனக்கு இந்த நாவல் ஒரு இலக்கிய அனுபவத்தை நல்கவில்லை.

  • காதலும் பிற பூதங்களும்

    Of Love and other demons –1510இல் ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட The Four Books of Amadius of Gaul எனும் புதினம் பற்றிய ஒரு குறிப்பு நாவலில் வருகிறது. பிஷப்பின் தேவாலயத்தில் பாதிரி-நூலகராக இருக்கும் டீலோரா அந்நாவலை பல ஆண்டுகளுக்கு முன் பாதி வாசித்திருக்கிறார். அந்த நாவலுக்கு கத்தோலிக்க சர்ச்சுக்கள் உலகெங்கும் தடை விதித்திருக்கின்றன. தமது சர்ச் நூலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நூல்களின் வரிசையிலிருந்து அந்நாவலின் பிரதி தொலைந்து போய் விடுவதால் நாவலின் முடிவு என்ன என்பதை அவர் அறியமுடியவில்லை. பின்னர் ஒருமுறை அந்நாவல் பிரதி அவர் கண்ணில் கிடைக்கிறது. அதனை கையில் ஏந்தி தடவிப்பார்க்கிறார். Chivalric Romance எனும் இலக்கிய வகைமைப் புதினப் பிரதியைப் பார்த்த பிறகு ஒரு ரீஜண்ட் போல சாகசவுணர்வுடன் அவர் எடுக்கும் முடிவுகள் துன்பியல் முடிவைத் தருகிறது. பாதி வாசித்த புதினத்தின் இளவரச-நாயகனாய்த் தன்னை டிலோரா கற்பனை செய்து கொண்டிருக்கக் கூடும்.

    அடிமை வியாபாரம் உச்சத்தில் இருக்கும் தென் அமெரிக்கத் துறைமுக நகரத்தில் செல்வந்த ஜோடியொன்றின் மகள் சீர்வா மரியா வீட்டில் இருக்கும் அடிமைகளால் வளர்க்கப்படுகிறாள். ஆப்பிரிக்க அடிமைகள் பேசும் யோருபா போன்ற மொழிகளைச் சரளமாகப் பேசும் மரியாவை வித்தியாசமாகப் பார்க்கிறது காலனீய சமூகம். அவளை ஒரு வெறிநாய் கடித்த பின்னர் கண்டிப்பாக அவளுக்கு Rabies பீடிக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அது பீடிக்காத போது மரியாவைப் பேய் பிடித்துக் கொண்டதாக கத்தோலிக்க சர்ச் பேயோட்டுவதற்காக இழுத்துச் சென்று விடுகிறது.

    1740களின் தென் அமெரிக்கத் துறைமுக நகரமொன்றில் கொடூரமான கத்தோலிக்க தேவாலயத்தால் ஓர் அப்பாவியான, ஆதரவற்ற 13 வயது சிறுமி மீது சமய நிறுவனம் இழைக்கும் வன்முறையின் உருவப்படம் இந்த நாவல். மதம் மற்றும் தார்மீகப் பிரச்னைகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான கதைக்கருவை – மத ஆதிக்கத்தின் மூலம் அடையப்பட்ட தென் அமெரிக்காவின் மீதான ஸ்பானிய காலனித்துவத்தின் சூழலில் – உருவாக்கியிருக்கிறார் மார்க்கேஸ்.

    நாவல் பேசும் அடிப்படை பிரச்னையை நாத்திகம் பேசும் மருத்துவர் அப்ரெனுன்ஸியோ ஓர் உரையாடலில் அழகுற சுருக்கிக் கூறிவிடுகிறார் – “மரணத்தின் மதம் உங்களிடம் உள்ளது, அதை எதிர்கொள்ளும் மகிழ்ச்சியையும் தைரியத்தையும் அது உங்களுள் நிரப்புகிறது. நான் அவ்வாறு இல்லை; உயிருடன் இருப்பது மட்டுமே அத்தியாவசியமான விஷயம் என்று நம்புபவன் நான்.”

    அவள் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் பல இரவுகள் மரியாவுடன் கழிக்கும் டிலோரா ஏதாவது ஓர் இரவில் ரகசியமாகத் தான் வரும் வழியாக அவளை அழைத்துச் சென்றிருக்கலாமே என்று யோசித்துக் கொண்டே வாசிக்கையில் அந்த வழியைப் பயன்படுத்தி வேறொருவர் தப்பித்துச் சென்றுவிட பாதிரியார் பயன்படுத்தும் சுரங்க வழி அடைபட்டுவிடுகிறது. நாவலின் முடிவில் பேயோட்ட வரும் பிஷப்பின் வயிற்றை மரியா எட்டி உதைக்கும் கட்டம் கண நேர மகிழ்வைத் தருகிறது. கலக உணர்வுகளை அடக்கும் அதிகாரத்தின் மூர்க்கத்தனத்தை நாவலில் பதிவு செய்கிறார் மார்க்கேஸ்.