லூதியானா ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருக்கையில் எனக்கு பக்கத்திருக்கையில் இருந்த சர்தார்ஜி மாலை ஆறே கால் மணிக்கு ஜலந்தருக்குக் கிளம்பும் ரயிலுக்காக முட்டியை கைகளால் அழுத்தியவாறே காத்திருந்தார். அவர் சுவாசம் விடும் சத்தம் என் காதை எட்டியது. அவரிடம் பேச ஆரம்பித்தபோது நாற்பது வருடங்களாக ஒரே குழுமத்தில் வேலை பார்க்கிறவர் என்று தெரிய வந்தது. தினமும் ஐலந்தரிலிருந்து வேலைக்காக லூதியானா வந்து போவது சிரமமாக இல்லையா என்று கேட்டேன். “பல முறை வேலையை விடுகிறேன் என்று சொன்னேன். சும்மா வந்து போங்கன்னு சொல்றாங்க” என்றார். லேசான பொறாமை துளிர் விட்டது நெஞ்சில். டார்கெட், பிசினஸ் என்று அல்லாடும் என்னுடைய நிலையை மனதில் கொண்டு வராமலிருக்கப் பிரயத்தனம் செய்தேன். “பனிரெண்டு மணிக்கு லூதியானா வந்திறங்குவேன். ஆபீஸ் நான்கு கிலோ மீட்டர். பனிரெண்டரைக்கு ஆபீஸ் போனதும் டீ குடித்ததும் கம்ப்யூட்டரை ஆன் செய்வேன்” என்றார். எட்டரைக்கு பஞ்ச் செய்ய வேண்டிய என் நிலைமையை எண்ணி நொந்துபோக ஆரம்பிக்காமல், “இந்த நிறுவனத்தில் எப்போது வேலைக்கு சேர்ந்தீர்கள்?” என்று கேட்டேன். 1990 என்றார். பிப்ரவரி மாதம் என்று வேறு சேர்த்துக் கொண்டார். நான் முதல் வேலைக்குச் சென்ற அதே மாதம், அதே வருடம். 90இல் தொடங்கினால் நாற்பது வருடம் எப்படி ஆகும்? என்னைப் போன்று முப்பத்து மூன்று வருடங்கள்தானே ஆகியிருக்கும் என்று யோசிக்கவில்லை. இரண்டாம் ப்ளாட்ஃபார்மில் அவர் ஏற வேண்டிய ரயில் வருவதாக அறிவிக்கப்பட்டதும், பையிலிருந்து துணியால் சுற்றப்பட்ட ஒன்றை வெளியே எடுத்தார். அது என்ன என்பது போல் அவரை பார்த்தேன். “ரயில் நண்பர்களோடு விளையாட சீட்டுக்கட்டு” என்றார். நான் என் மடிக்கணினியில் ஃப்ளாஷ் ஆன மின்னஞ்சலுக்கு பதிலளிக்கத் தொடங்கினேன்.