ருபையாத் அல்லது ருபாயியாத் உமர் கய்யாம் எழுதினார். மஸ்னவி ரூமி எழுதினார். ருபாயியாத், மஸ்னவி – இரண்டும் நூலின் அல்லது தொகுப்பின் தலைப்பு என்றே பொதுவாகக் கொள்ளப்படுகிறது. ருபாயியாத் என்றாலே உமர் கய்யாம் எழுதியது என்று நானும் பல வருடங்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். ருபாயியாத் என்பது யாப்பு வடிவம் என்று எனக்குத் தெரிந்தது சில வருடங்களுக்கு முன்னரே. ரூமியும் ருபாயியாத் எழுதியிருக்கிறார் என்னும் தகவலும் பின்னர்தான் தெரியவந்தது.
சீர்மை பதிப்பகம் பக். 324 ரூ. 520
சீர்மை பதிப்பகம் “ரூமியின் ருபாயியாத்” தமிழாக்க நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஸூபித்துவம் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் தொடர்ந்து இயங்கிவரும் ரமீஸ் பிலாலி “ரூமியின் ருபாயியாத்”களை பார்சி மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துள்ளார்.
நூலில் நானூறுக்கும் மேற்பட்ட கவிதைகள். தொடர்ச்சியற்ற கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வோர் அறை. ஒவ்வோர் அறையும் மிகப் பிரம்மாண்டமானது. அறையின் சிறு பகுதியின் தரிசனத்தை மட்டுமே பகிர்வதாகவே அதன் விவரிப்பு இருக்க முடியும். பிரபஞ்சத்தின் மொத்த அனுபவத்தை எப்படி நம்மால் வடித்திட முடியும்? நூலின் பின்னட்டையில் ரூமி பிரபஞ்ச மகாகவி என்று வர்ணிக்கப்படுகிறார். ஒவ்வொரு துளியிலும் கடல் உள்ளது என்பார்கள். ஒவ்வொரு கவிதையிலும் பிரபஞ்சம்.
மஸ்னவித் தொகுப்புக்கும் ருபாயியாத் தொகுப்புக்கும் யாப்பு வடிவம் என்பதற்கு மேலாக ஏதேனும் வித்தியாசங்கள் உள்ளதா என்பதை அறிய ஆர்வமாய் இருந்தது. ரூமியை ஆங்கில மொழிபெயர்ப்புகள் வாயிலாகவே அறிந்தவன் நான். ஒரு சாதாரண கவிதை வாசிப்பாளனின் அணுகுமுறையில் ரூமியை அணுகுபவனாகவே இருக்கிறேன்.
ரமீஸ் பிலாலியின் மொழியாக்கத்தில் ரூமியின் ருபாயியாத்-துக்கு அறிமுகப்படும் வாசகன், என்னைப் போலவே, The Essential Rumi – என்னும் ஆங்கில மொழியாக்கம் வாயிலாக ருமியின் உலகத்துக்கு அறிமுகமானவனாக இருப்பான் என்பது என் யூகம். கஜினி மாமூதால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்து இளைஞன், அல்லது யாரை மணப்பது என்ற சிக்கலுக்கு குழந்தைகளுடன் விளையாடும் ஷைக்’கிடம் ஆலோசனை கேட்கும் இளைஞன் போன்ற எண்ணற்ற கதைக்கருப்பொருட்களுக்கு கவிதை நிறம் பூசி உலகின் கூட்டு நினைவில் நிரந்தரமாக நிலைத்து நிற்பவர் ரூமி.
மஸ்னவி – நிறைய கதைகளைப் பேசுகிறது. உலகக்கவிஞர் என்னும் அவருடைய புகழ் மஸ்னவியின் கதை கூறும் தன்மையிலிருந்தே எழுகிறது என்பது என் எண்ணம். கறுப்பு யானைகளின், கருங்கூந்தலின், கவிதைகளை நாம் வாசிக்கும் போது எழும் விறுவிறுப்பு, கதை வடிவத்தில் உள்நுழைந்து படிமங்களாக உலவி குறியீட்டுத் தன்மைக்கு இட்டுச் செல்லும் மாயம் ரூமியின் தனித்துவம். இதனைப் பிற கவிஞர்கள் செய்யவில்லை என்று கூற வரவில்லை. ஆனால் ரூமியின் வல்லமை தனித்துவமிக்கது. இன்று நவீன உலகத்தின் வாசகனின் மனதிலும் எதிரொலிக்கத் தக்கதாய் உள்ளது.
ஒரு கதைப் பின்ணனி. அது சமய மரபிலிருந்து பெற்ற தொன்மக் கதையாக இருக்கலாம், அல்லது ஏதேனும் வரலாற்று நிகழ்வாக இருக்கலாம். அதை அப்படியே எடுத்துக் கையாளாமல் அதனை மறு ஆக்கம் செய்து மறு கூரலாகக் கவிதையைத் துவக்குவார். அதன் சூழலை செயல்திறனோடு பயன்படுத்திக் கொண்டு கவிதையைச் செறிவாக்குவார். இறுக்கமில்லாமல் அனைத்து திசையிலும் சிதறும் கவித்துவத்தை அழகியலை கருப்பொருளோடு நேர்த்தியாகச் சேர்க்கும் தருணம் அவருடைய மஸ்னவி கவிதைகளின் உச்சம்.
மஸ்னவி தரும் அனுபவத்தை ருபாயியாத் தரும் அனுபவத்தோடு ஒப்பிட முயல்கிறேன். உதாரணத்துக்கு ரூமியின் ஒரு ருபாயீ-யை (ருபாயியாத் பன்மை, ருபாயீ ஒருமை) ஆராய்வோம்.
ஈரானிய அமெரிக்க எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர் ஸரா ஹோஷ்மண்டு பார்சியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ருபாயீ ஒன்று கீழ் வருவது –
I asked you for one kiss, you gave me six.
What teacher taught you, that you’re such an expert?
You’re so deep a source of goodness, so kind
That you’ve set the world free a thousand times. (Zara Hoshmand, #1993)
மஸ்னவியின் அடிப்படைத் தன்மையான கதைப் பின்னணி இருக்கிறதா? இருக்கிறது. கதை சொல்லி ஓர் அனுபவத்தைப் பெறுகிறார். அதற்குப் பின்னர், பெற்ற அனுபவம் குறித்து அனுபவத்தை ஏற்படுத்தித் தந்தவரிடம் அல்லது அனுபவத்தில் பங்கு பெற்றவரிடம் தன் மகிழ்ச்சியை வார்த்தையால் பகிர விழைகிறார். அதன் மறுவிளக்கத்தை வாசகர்களிடமே விட்டுவிடலாம்!
மேற்சொன்ன கவிதையை ரமீஸ் பிலாலி பின் வருமாறு தமிழாக்கம் செய்கிறார் –
ஒன்றுதான் கேட்டேன்
ஆறு முத்தங்கள் தந்தாய்
இத்துணைத் திறமை காட்ட
யாரின் மாணவன் நீ?
எத்துணைக் கச்சிதமாய் அமைந்துள்ளது
நன்மையும் கருணையும் உன்னில்!
உலகம் உன்னால்
ஆயிரம் விடுதலைகள்
அடைந்துவிட்டது
(பக்கம் 266, 410.(#1993))
முன்றாம், நான்காம் அடிகளை “காதலரின் விளையாட்டுத்தனம்” தொனிக்க தமிழ்ப்படுத்தியிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. ஆனால், ரமீஸ் பார்சி மொழி தெரிந்தவர். சரிபார்க்கும் நோக்கத்துக்காக ஒரு துணையாக மட்டுமே ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை பயன்படுத்திக் கொண்டதாகச் சொல்கிறார். முன்னுரையில் அவர் கூறுவது – “பார்சி மூலத்துடன் ஒப்பு நோக்கும் போது ஏ.ஜெ.ஆர்பெர்ரி, ஸரா ஹோஷ்மண்டு ஆகியோரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு பல இடங்களில் சரியாக இல்லை என்பதை உணர்ந்தேன். அத்தகு இடங்களில் எல்லாம் மூலத்தின் சொற்கள் தரும் வெளிச்சத்திலேயே என் தமிழாக்கம் அமையுமாறு பார்த்துக் கொண்டேன்.” (பக்கம் 11).
இன்னுமொரு ருபாயீயை ஆராய்வோம்!
உன்னை நினைவுகூர்ந்தால்
அந்த நினைவின் நடுவில்
நீயே இருக்கிறாய்
பேச வாய் திறந்தால்
அந்தத் திறப்பினில்
நீயே இருக்கிறாய்
களிப்படைகிறேன் எனில்
என் களிப்பின் ரகசியமாய்
நீயே இருக்கிறாய்
சாக்குப்போக்கு
தேடுகிறேன்
அதைக் கற்பிக்கும்
ஆசானாய்
நீயே இருக்கிறாய்
(பக்கம் 265, 409.(#1992))
இதுவும் முன்பு மேற்கோள் காட்டிய கவிதை போலவே ஒலிக்கிறது. சிலேடைக் கவி போல ஒலிக்கும் இக்கவிதையின் உள்ளுறை பொருள் – சூபிஸத்தின் இறைவனை நினைவுகூர்தல் (Dhikr) – என்னும் தியானச்சடங்கை விவரிக்கிறது. கடவுளை நினை, அவன் நாமத்தை உச்சரி, கடவுளின் உள்ளார்ந்த ஞானத்தில் லயித்திரு, சாக்குபோக்கு சொல்லாதே
கதைப் பின்னணி இதில் காணப்படுகிறதா? சற்று யோசித்தால் இதன் கதைப் பின்னணி நமக்குப் புரிந்து விடுகிறது. நேரடியான பொருள் தமிழ்ச்சங்க இலக்கிய வகைமையாகிய “அகம்” எனும் வகைமையில் வரும் என்பதால் கதைப் பின்னணியைக் குறிப்பால் பின்னிவிட முடிகிறது!
உன் வேதனையின்
எரிச்சலிடமிருந்து
ஒரு தகனம் தேடுகிறேன்
உன் வாசலின்
புழுதியிலிருந்து
ஒரு கம்பளம் தேடுகிறேன்
துயரங்கள் அடைந்துவிட்டேன்
போதும்போதும் என்ற அளவு
உன் சகவாசத்தில் இப்போது
மகிழ்ச்சியைத் தேடுகிறேன்.
(பக்கம் 182, 245 (#1133))
“அனைத்து கட்டுப்பாட்டையும் தாண்டிய ஆற்றலான காதல் ஒரு தீ, காலிபே!
அதனை இஷ்டப்படி அணைக்கவோ மூட்டவோ முடியாது” – என்கிறார் மிர்ஸா காலிப்
வேதனையின் எரிச்சலிலிருந்து விடுபெற தகனம் ஏன் வேண்டுகிறான் கவிதை சொல்லி? காதலின் ஏழு நிலைகளில் கடைசி நிலையான “மௌத்” (அழிவு – சுயத்தின் குறியீட்டு அழிவு) அடைவதற்கு முன்னம் – போற்றுதல், வழிபாடு, பித்து – இவற்றை அனுபவிக்க வேண்டாமா? புழுதியிலிருந்து அவன் ஏன் கம்பளம் வேண்டுகிறான்? வழிபாட்டின் குறியீடா கம்பளம்? சகவாசம் (companionship) -தான் கவிதை சொல்லியின் இறுதி இலக்கா? அவன் கம்பளத்தினூடே வேண்டுவது சகவாசம் – இறைவனுடனான சகவாசம். ரூமியின் ருபாயியாத்தும் மஸ்னவி போல கதையனுபவத்தினூடே எழும் கவித்துவத்தை வாசகனுக்கு நல்குகிறது.
ருபாயியாத் எனும்போது உமர் கய்யாமோடு ஒப்பிடும் ஆர்வமும் மேலெழுகிறது. பொதுவாக நோக்குகையில் போகத்தைக் கருப்பொருளாக அதிகம் கையாளும் உமர் கய்யாம் தனது கவிதைகளில் அதிகம் சிந்தித்தது – அழிவு, இறப்பு, அர்த்தமிகு வாழ்க்கை வாழும் வழிமுறைகள், நிலையாத்தன்மை, தற்காலிகத்தன்மை.
இதற்கு மாறாக, ரூமியின் கவிதைகள் தெய்வீக, மறைஞானக் கருப்பொருட்களைக் கையாள்கின்றன. காதலரை வர்ணிக்கின்றன. கவிஞரே ஒரு காதலராக இக்கவிதைகளில் பேசுகிறார். காதல் வயப்பட்ட காதலர் தான் காதலிப்பவரை வர்ணிப்பது போல ரூமியின் ருபாயியாத்துகள் ஒலிக்கின்றன. ரூமியின் கவிதைகளில் காதலிக்கப்படுபவர் இறையாகவே அர்த்தங்கொள்ளப்படுகிறார்.
சீர்மை வெளியிட்டுள்ள ரூமியின் ருபாயியாத் நேரடியாக பார்சி மூலத்திலிருந்து தமிழ்ப்படுத்தப்பட்டுள்ள அரியத்தொகுப்பு. அடிக்குறிப்புகள் அளிக்கும் விளக்கம் கவிதையைப் பொருள் கோடலில் மிகவும் உதவுகிறது. பார்சி மூலத்தின் தமிழ் transliteration-ஐயும் நூலில் இணைத்துள்ளது தமிழ் வாசிப்புப் பரப்புக்கு மொழிபெயர்ப்பாளரின் முக்கியப்பங்களிப்பு. “என் ஒவ்வொரு அங்கத்திலும் காதலியின் அடையாளம் உள்ளது” (பக்கம் 101) என்று ரூமியார் சொல்லுவது போல மொழிபெயர்ப்பாளரின் ஒவ்வொரு வரியிலும் (முன்னுரை முதற்கொண்டு) பிரபஞ்சக்கவி மீதான வியப்பை மேலதிகம் உயர்த்தும் மெனக்கெடல் நமக்கு உணரக் கிடைக்கின்றது.
காசி நஸ்ருல் இஸ்லாம் – இந்த மகாகவிஞன் எந்தச் சிமிழிலும் அடங்காதவன். இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தீவிரவாதி. ஐநூறுக்கும் மேலான இந்து பஜன்களை இயற்றியவன். மகன்களுக்கும் மகளுக்கும் இந்து-முஸ்லீம் பெயர்களை இணைத்துச் சூட்டியவன். மூத்த மகனுக்கிட்ட பெயர் – கிருஷ்ண முகம்மது. வங்கதேசத்தின் தேசிய கவி. துர்காபூர் விமான நிலையத்துக்கு இவன் பேர் சூட்டப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கமும் வங்க தேசமும் போட்டியிட்டு இவனைச் சொந்தம் கொண்டாடுகின்றன. மகனும் மகளும் டாக்கா சென்று சேர்வதற்குள் கவிஞன் அடக்கம் செய்யப்பட்டு விட, அவனுடைய புதைக்கப்பட்ட தகனப்பெட்டியை மீண்டும் தோண்டியெடுத்து இந்தியாவுக்கு கொண்டு வந்து புதைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கரடுமுரடான நஸ்ருல் இஸ்லாமின் கவிதைகளின் அழகியல் குருதேவ் தாகூரின் அதிநவீன பாணியுடன் ஒப்பிடுகையில் தனித்துவமானது. நவீன வங்க மொழியில் சமஸ்கிருதமயமான சொற்களை பயன்படுத்தி வந்த காலத்தில் பர்சிய-அரபு மூலச்சொற்களை பயன்படுத்துகிறான் என்பதால் இவன் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சனம் செய்தார் குருதேவ் ரவீந்திரர். “கூன்” (ரத்தம்) எனும் பர்சிய மூலச் சொல்லை இஸ்லாம் பயன்படுத்தியதால் விளைந்த மிகப்பெரிய இலக்கியச் சண்டை இது. “ரக்தோ”(ரத்தம்) என்ற சொல்லை ஏன் பயன்படுத்தவில்லை என்று வங்க இலக்கிய உலகமே இரண்டு பட்டது. 1941இல் ரவீந்திரர் மறைந்த போது கண்ணீர் விட்டு அழுதான். செயலாற்றிய இருபதாண்டுகளில் எண்ணற்ற கவிதைகளை பாடல்களை கட்டுரைகளை எழுதிக் குவித்தான். தன்னுடைய பாடல்களுக்கு தானே இசையமைத்து கிராமபோன் ரிகார்டுகளை HMV நிறுவனம் மூலமாக கொண்டு வந்தான். வங்காள மொழியின் திரைப்படம் இயக்கிய முதல் முஸ்லீம் இயக்குனராகவும் திகழ்ந்தான். தாகூர் இறந்த ஓராண்டில் இஸ்லாமை ஒரு வித நோய் பீடித்தது. ஐம்பதுகளை மனநோய் மருத்துவமனையில் கழித்தான். பின்னாளில் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்ற போது இந்தியாவில் அவனுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று ஐரோப்பிய மருத்துவர்கள் தெரிவித்தனர். நோயிலிருந்து மீளாமல் 1976 வரை வாழ்ந்தான். 1972இல் வங்கதேசம் தனி நாடான போது புது அரசு டாக்காவுக்கு அழைத்துச் சென்று அவனைப் பார்த்துக் கொண்டது.வங்க தேசத்தின் தேசிய கவி என்றும் அறிவித்தது.
—
ஈஸ்வரன்
இறைவனுக்காக வானையும் மண்ணையும் தேய்த்துப் பார்ப்பவன் யார்? மலையுச்சிகளில் ஏறியும் காடுகளில் உலவியும் திரிந்து கொண்டிருக்கும் நீ யார், துறவியே! புதையலை உன் மார்பில் கட்டிக்கொண்டு அதனை அனைத்திடங்களிலும் தேடித் திரிகிறாய் படைப்பு உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது நீயோ உன் கண்ணைப் பொத்திக் கொண்டுள்ளாய் படைத்தோனைத் தேடும் உன் முயற்சியில் நீ உன்னையேதான் தேடிக் கொண்டிருக்கிறாய் விருப்பக் குருடனே ! கண்ணைத் திற உன் வடிவை கண்ணாடியில் பார் அவனது நிழல் உன் முழு வடிவிலும் வார்க்கப்பட்டிருக்கும் வேதத்தின் அதிகாரிகள் மீது மலைப்போ அச்சமோ கொள்ள வேண்டியதில்லை நாயகனே! இறைவனின் செயலர்கள் இல்லை அவர்கள் அனைத்திலும் வெளிப்படும் அவன் அனைத்தின் மத்தியிலும் இருக்கிறான் நான் என்னைப் பார்க்கிறேன் காணாத என் படைப்பாளியை அடையாளம் கண்டுகொள்கிறேன் கடல்-வழி வணிகர்கள் நகை வர்த்தகம் புரிகின்றனர் அவர்கள் நகை வணிகர்கள் நகை செய்தவனை அறிந்தோம் என்று பாசாங்கு செய்கிறார்கள் முத்து விளையும் கடல்களின் ஆழத்தில் என்றும் அவர்கள் மூழ்கியதில்லை நூல்களை ஆராய்வதற்குப் பதிலாக, உண்மைக் கடலில் ஆழ்ந்துவிடு நண்பனே
முக்குளிப்பவர் ஒருவருடன் நட்புகொள்ளும் ஓர் ஆக்டோபஸ் பற்றிய ஆவணப்படம் My Octopus Teacher. இரைகளை வேட்டையாடும் முறை, வேட்டையாட வரும் உயிரினங்களிடமிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் என தன் வாழும் முறையை படம் பிடிக்க மனித நண்பனை அனுமதித்தது போல் ஒத்துழைத்திருக்கிறது அந்த ஆக்டோபஸ். மை வீசி இரைக்காகத் துரத்தும் உயிரினங்களின் பார்வையிலிருந்து மறைந்து போதல், தோலின் நிறம், அமைப்பு, உடலின் வடிவம் அனைத்தையும் கண நேரத்தில் மாற்றிக்கொண்டு வேட்டையாட வரும் மிருகங்களின் கண்ணில் படாதிருத்தல், சுறா போன்ற மூர்க்கமான மிருகங்களிடமிருந்து புத்தி சாதுர்யத்தால் தப்பித்தல் – மனித இனம் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்ட ஆக்டோபஸ் அதன் ஒவ்வொரு இயக்கத்திலும் நம்மை பெருவியப்புக் கொள்ளச் செய்கிறது. அது தன் இரையை வேட்டையாடும் விதமோ நம் வியப்பை பல மடங்கு உயர்த்திவிடுகிறது. அதன் எண்கைகளின் அதிவேகம் ஆக்டோபஸ்ஸின் இரை தேடுதலின் முக்கிய அம்சம். இரையினத்துக்கேற்ற மாதிரி வேட்டைத் திட்டத்தை மாற்றிக்கொள்ளுதல் இன்னொரு சிறப்பம்சம். நண்டை வேட்டையாடுகையில் கைக்கொள்ளும் உத்தியை அது சிப்பி மீனை வேட்டையாடும் போது கைக்கொள்வதில்லை. வேட்டையின்போது அதன் கைகள் துண்டித்துவிடுகையில் காயங்களுக்குத் தானே சுயசிகிச்சை செய்து கைகளை மீள்-வளர்ச்சி செய்துகொள்ளும் விதம் – வியப்பின் சிகரம்! இனப்பெருக்கம் இந்த உயிரினத்தின் மரணத்துக்கு வித்திட்டுவிடுகிறது. ஆண் ஆக்டோபஸ் புணர்ச்சிக்குப் பிறகு சுய-அழிவை நோக்கிப் பயணப்படுகிறது. உணவு உட்கொள்ளாமல், செல்கள் வளர்ச்சியுறாமல், அதன் இயக்கங்களை ஒருங்கிணைக்காமல் மிக எளிதில் வேட்டையாடப்படும் விதத்தில் வளைய வருகிறது. பெண் ஆக்டோபஸ் முட்டைகளை அடைகாக்கும் வரை உயிர் தறிக்கிறது. பிறகு அதுவும் மரணத்தை தழுவி விடுகிறது. இந்த senescence என்னும் உயிரியல் செயல்முறை வேறு சில கடல்வாழ் உயிரினங்களிலும் உள்ளதாம்! ஆவணப்படத்தில் நாயகி ஆக்டோபஸ்ஸை வேட்டையாட முயன்று தோற்றுப்போன சுறாமீன் இறுதியில் அதன் இறந்த உடலைப் புசிப்பது நல்ல சோகநாடகம்!
பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.
מנא מנא תקל ופרסין
Mede Mede Tekel Upharsin
“Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”
அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் சைரஸ் கைப்பற்றுகிறார். சைரஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.
வெளிப்படுத்தும் சுவர் – எமிலி கேதலிக் சமய நம்பிக்கை கொண்டிருந்தவர். இங்கு அவர் சுவர் எனக் குறிப்பிடுவது ஜெருசலேமின் அழிந்து போன சாலமன் கட்டிய யூதர்களின் தலைமைக் கோயிலின் சுவர் (Wailing Wall) சிதிலத்தை. யூதர்கள் சுவர் முன்னால் நின்று அழும் சடங்கில் அவர்கள் அழும் காரணத்தை இறைவன் பெல்ஷஸாருக்கு அளித்த தகவலோடு ஒப்பு நோக்குகிறார் எமிலி.
துணுக்கு (trivia) எனக்கு மிகவும் பிடித்த வாசிப்பு வகைமை. வெவ்வேறு வடிவங்களில் அதனை எழுதிப் பார்த்தல் – கட்டுரைகளில் அவற்றை அடுக்குதல், உரையாடல்களுக்கு நடுவே அவற்றை புகுத்துதல், நாவலின் நெடும்பத்திகளில் அவற்றை பதிவுசெய்தல், கவிதைகளில் குறிப்பாக்குதல் என – பல விதங்களில் விரியும். இந்தியாவில் எல்லைகளில் இருக்கும் மூன்று நாடுகளில் உள்ள மூன்று நகரங்களைப் பற்றிய துணுக்கு தோரணத்தை என்றோ எழுதினேன்.
மீர்ப்பூர்
அறுபதுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் மீர்ப்பூரில் ஜீலம் ஆற்றுக்கு மேல் மிகப் பெரிய அணை கட்டப்பட்டது. உலகின் ஏழாவது பெரிய அணையான மங்ளா டேம் கட்டப்பட்ட போது 1,10,000 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வேறு இடங்களுக்கு நகர வேண்டியிருந்தது. அவர்கள் வசித்துவந்த கிராமங்கள் நீருக்கடியில் மூழ்கின. பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக பாகிஸ்தானிய அரசு பிரிட்டிஷ் வேலை அனுமதியை (work permit) வழங்கியது. இன்று பிரிட்டனில் வசிக்கும் பாகிஸ்தானியர்களில் “மிர்ப்பூரிகள்” எழுபது விழுக்காடு. வடக்கு இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷைரில் உள்ள ப்ராட்ஃபர்ட் நகரில் வசிக்கும் கிட்டத்தட்ட அனைத்து பாகிஸ்தானியரும் மிர்ப்பூரிகள். Smart Mirpuris. They knew how to negotiate.
சில்ஹேட்
மிர்ப்பூரிகள் போன்று பங்க்ளாதேஷின் சில்ஹேட் (Sylhet) நகர் பூர்வீக மக்களும் அதிகம் இங்கிலாந்தில் குடியேறியவர்கள். பங்க்ளாதேஷின் மூன்றாவது பெரிய நகரம் சில்ஹேட். ஈஸ்ட் இந்தியா கம்பெனி காலத்திலருந்தே கப்பல்களில் சிற்றேவலர்களாக ( lascars) பணியாற்ற சில்ஹேட்டியர்கள் மிகவும் விருப்பங்காட்டினார்கள். முதன் முதலாக லண்டனில் இந்திய உணவகத்தை 1810 இல் தொடங்கியவர் சில்ஹேட்டியிலிருந்து வந்த வங்க முஸ்லீம் ஷேக் தீன்மொஹமட். இன்றும் லண்டனின் புகழ் பெற்ற இந்திய உணவகங்களை சில்ஹேட்காரர்களே நடத்துகிறார்கள். இதற்காகவே உள்ளூர் சில்ஹேட்காரர்கள் வெளிநாட்டுக்கு குடியேறியவர்களை ‘லண்டனி’ என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் சில்ஹேட்டிலுருந்து பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் குடியேற்றம் தொடர்ந்தது. வங்க சுதந்திரப் போரின் போதும் அதற்கு முன்னரான 1970இன் பல உயிர்களை பலி வாங்கிய போலா சூறாவளியின் போதும் குடியேற்றம் உச்சத்தை தொட்டது.
நீர்க்கொழும்பு
கதுநாயக விமான நிலையத்தில் இறங்கி E3 வழியில் கொழும்பு செல்கையில் வலப்புறத்தில் மிக அழகான Lagoon தென்படும். Negombo Lagoon என்பது அதன் பெயர். கடலோர விடுதிகள், அழகான பல சர்ச்சுகள் என்று பயணிகளுக்கான பல கவர்ச்சிகளை கொண்டுள்ள Negombo-வை தமிழில் நீர்க்கொழும்பு என்று அழைக்கிறார்கள். இருபத்தியைந்துக்கும் மேலான சர்ச்சுகள் இருப்பதால் நீர்க்கொழும்பை குட்டி ரோம் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஊரின் பெயர்க்காரணமாக இரண்டு தொன்மங்கள் வழங்குகின்றன. சிங்களர்கள் நிகம்போ என்ற பெயர் மீகமூவ எனும் பழைய பெயரிலிருந்து மருவியது என்கிறார்கள். தமிழர்கள் நிகும்பள என்னும் பெயரிலிருந்து மருவியது என்கிறார்கள். நிகும்பளன் என்பவன் இராமாயணத்தில் வரும் ஒரு பாத்திரம். இவன் இராவணனின் மைத்துனன்.
இந்த தோரணம் இன்னும் முழுமையடையவில்லை. மீர்ப்பூருக்கும் சில்ஹேட்டுக்கும் இடையே மேலை நாட்டுக்குக் குடிபெயர்தல் எனும் பொதுப்புள்ளி இருக்கிறது. நீர்க்கொழும்பிற்கு? இத்தாலியில் டைரேனியன் கடலின் கரையில் அமைந்துள்ள Negombo எனும் ஊருடன் ஏதேனும் தொடர்பு இருக்குமா?
தொடர்பு படுத்தல் கற்பனையின், எழுத்தின் இன்றியமையா அங்கம். தொடர்புபடுத்தலின் நீட்சி புனைவின் ஆரம்பம் என்ற சொந்த தியரி ஒன்று என்னிடத்தில் உண்டு.
– நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம் – சிறு குறை கொண்ட என் மகன் – தொடர் வெற்றி காணும் என் மகள் – பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு – தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி – சாலையோர வாக்குவாதம் – ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை – முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம் – சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி – மேடு பள்ளங்களாலான அழகிய மலைப்பாதை – பெரும்பாறைகளைத் தாவி நகரும் காட்டாறு – நெடிதுயர்ந்த கோபுரத்தின் துளைகளில் ஒதுங்கி நிற்கும் பறவைக் கூட்டம் – பிரகாரச் சுவர்களில் வீசும் புராதன வாசனை – நகர நதிக்கரையில் தேங்கும் மாசு நுரை – ரூஃப் டாப்பிலிருந்து தெரியும் குடிசைக் கடல் – பணி நிலையங்களின் கீபோர்ட் கீச்சு – ராம் – ரஹீமீன் ஊடல்களும் கூடல்களும் நிறைந்த முடிவற்ற நாடகம் – குல்லாக்களின் டர்பன்களின் நிறம் படிந்த நெற்றிகளின் டிசைன் கலவை – வித்தியாசங்களுக்கு பெயரளித்து கூறு செய்யப்பட்டு நடக்கும் அணிவகுப்பு. – இன்னும் நிறைய….. மிக முக்கியமாக என் சுவாசம்
ஒரு நாள் என் கனவுக்குள் சிங்கமொன்று நுழைந்துவிட்டது. சுதந்திரமாக உலவிவந்த வனாந்தரப் பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டு பின்னர் விலங்குகள் சரணாலயத்துக்குள்ளோ அல்லது சர்க்கஸில் கேளிக்கை ஜந்துவாகவோ அடைக்கப்பட்டுவிட்ட கோபம் அதனுள் பல நாட்களாகக் கனன்று எப்படியோ என் கனவுக்குள் நுழைந்து தப்பிக்க முயன்றது. சிங்கத்தின் கோபம் பற்றி நீ எப்படி அறிவாய் என்று வாசகர்கள் யாரேனும் கேள்வி கேட்கலாம். நம்பிக்கையின்மையை துறந்து என் கனவுக்குள் சிங்கம் நுழைந்ததை முழுதாக நம்பும் அவர்கள் தர்க்கரீதியாக “சிங்கத்தின் சீற்றம் இயற்கையானது” என்ற காரணத்தைத் தவிர சிங்கம் கோபமாயிருப்பதற்கான வேறெந்த காரணத்தையும் நம்ப மாட்டார்கள்.
உண்மையை முதலிலேயே சொல்லி விடுகிறேன்! கனவில் நிஜமாகவே சிங்கம் வந்ததா என்பதை நான் பார்க்கவில்லை. இல்லை ஆரம்பத்தில் இருந்து சொன்னால் சரியாக புரியும்! ஒரு நாள் என் கனவில் முக பரிச்சயம் இல்லாத பெயர் அறியாத சிலருடன் ஒரு மேடான பகுதியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.நின்றிருந்தது யாருடன் என்று விழிப்பு நிலையில் யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் என் நண்பர்களா? அல்லது வெறும் பரிச்சயங்களா? அவர்களின் முகங்கள் ஞாபகமில்லை. கனவுகளில் வரும் முகங்கள் பொதுவாக அதிகமும் ஞாபகத்தில் இருப்பதில்லை. சிங்கம் நுழைந்த கனவில் நான் யாருடன் நிற்கிறேன் என்பது தெரியாவிட்டாலும் அவர்களுடன் மகிழ்வாக பேசிக் கொண்டிருக்கிறேன். கனவில் உரையாடும் காட்சி மௌனப்படம் போலவே நகர்கிறது. இது திரைப்படம் எனில் இயக்குனர் அங்கு பேசி நின்றிருந்த காட்சியை நல்ல இசையால் நிரப்பியிருப்பார்.
நாங்கள் நின்றிருந்த சில தப்படிகள் பின்னால் குறுக்கலாக ஒரு சரிவு. ஒரு வட்டமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்த எங்களுக்குப் பின்னால் சரிவில் சிங்கமொன்று ஓடிப் போனதாக வட்டத்தில் நின்றிருந்த ஒருவர் சொல்லவும் வட்டம் ஒரு கணத்தில் கலைந்து போனது. அவர் சொன்னபடி பார்த்தால் சிங்கம் ஓடிப்போன சமயத்தில் அது என் முதுகுக்கு சில தப்படிகள் பின்னால் குறுக்காக ஓடியிருக்க வேண்டும். அதன் கோபத்தை ஆற்றிக் கொள்ள ஏதுவாக நின்று கொண்டிருந்த எங்களை அது ஏன் பார்க்கவில்லை என்ற கேள்விக்கு ஒரு விளக்கமும் இல்லை. சொல்லப்போனால் அதற்குப் பிறகு நாங்கள் அப்போது செய்த காரியத்தை நாங்கள் தர்க்க ரீதியாக விளக்கவே முடியாது. சிங்கம் ஓடின திசையிலேயே நாங்கள் தப்புவதற்காக ஓடினோம். சரிவுப்பாதையிலிருந்து பாதை வலப்புறமாகச் சென்றது. பாதையில் சிங்கம் என் பார்வையில் சிங்கம் படவில்லை. பாதையின் போக்கில் சிங்கம் வளைந்து சென்றிருக்கலாம். சிங்கம் சென்றிருக்கக் கூடிய பாதைக்கு எதிர்ப்பாதையில் அல்லவா நான் ஓடியிருக்க வேண்டும்? என்னுடன் இருந்தவர்களும் எனக்கு பின்னாலேயே ஓடி வந்தார்கள். தர்க்க ஒழுங்கு பற்றி கவலைப்பட அது சமயமில்லை. ஓடி ஒளிந்துகொள்வது தான் எங்கள் உடனடித் தேவையாய் இருந்தது.
கனவில் வரும் சொல்லாடலை யார் நிகழ்த்துகிறார்கள்? கனவைக் காண்பவரே கனவின் சம்பவங்களை பாத்திரங்களை கட்டுப்படுத்தும் கனவுகளை Lucid Dream என்று மனோதத்துவாசிரியர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட புத்தம்புது பிரிண்ட் திரைப்படத்தை காண்பது போன்று தெளிவாக விரிந்த இந்தக் கனவுக் காட்சியை Lucid Dream என்று சொல்லலாமோ?
ஐம்பது அடி ஓடியிருப்போம். சரிவு முடிந்து பாதை தட்டையானபோது வலப்பக்கம் ஒரு கதவு தென்பட்டது. கதவை லேசாக தொட்டதும் திறந்து கொண்டது. அதற்குள் முதலில் நான் நுழைந்தேன். என் பின்னால் ஓடி வந்தவர்களும் அந்த அறைக்குள் ஒருவர்பின் ஒருவராக நுழைந்து கொண்டார்கள். உள்ளே நான்கைந்து க்யூபிக்கில்-களில் கம்பியூட்டர் திரைகளைப் பார்த்துக் கொண்டு சில பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிங்கம் ஓடிய விஷயத்தையோ அதற்குப் பயந்து அது ஓடிய பாதையிலேயே ஓடிய எங்களின் முட்டாள்தனத்தையோ அறியாதவர்களாக அமைதியுடன் பதற்றமின்றி இருந்தார்கள். அறைக்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருந்த இயல்பான வெளிச்ச-இருள் மாற்றங்களின் பாதிப்பின்றி ஒளி விளக்குகளின் ஒரே சீரான செயற்கை வெளிச்சத்தில் எந்நேரமும் மூழ்கியிருக்கும் அறை போலும் அது. உள்ளே நுழைந்த எங்களின் பதற்றம் அந்த அறையில் ஏற்கனவே இருந்தவர்களின் முகபாவங்களில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களைப் பார்த்து அளவெடுத்தது போன்று புன்னகைத்தார்கள். எங்களின் அதிரடி உள் நுழைவு அவர்களை தொந்தரவுபடுத்தியதாக அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை. நாங்கள் ஏன் உள்ளே நுழைந்தோம்? வெளியே என்ன நடக்கிறது? என்ற விவரங்களை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வங்காட்டவில்லை.
நான் எங்கிருக்கிறேன்? இந்த அலுவலகம் இங்கு ஏன் இருக்கிறது? இந்த அலுவலகத்திலிருந்தா சிங்கம் தப்பித்து ஓடியது? இல்லை…இருக்காது…அலுவலகத்துக்கு பின்புறம்..அல்லது முன்புறம் ஜூ உள்ளதோ…அங்கிருந்துதான் சிங்கம் தப்பியிருக்குமா? இல்லையேல் இந்த அறைக்கு முன்புறத்தில் சர்க்கஸ் கம்பெனி ஏதாவது கூடாரமிட்டிருக்குமா? ஜூவிலிருந்தோ சர்க்கஸ் கூடாரத்திலிருந்தோ சிங்கம் வெளியே வந்திருக்கலாம். ஜூவும் அலுவலகமும் அல்லது சர்க்கஸும் அலுவலகமும் ஒரே வளாகத்தில் உள்ளதோ….
அதுவரை அந்தக் கனவு ஒரு மௌனக்கனவாக இருந்தது. “சிங்கம் வெளியே துரத்துது..சத்தம் கேட்கலியா?” என்று என்னுடன் ஓடி வந்தவர்களில் ஒருவன் அலுவலகத்திலிருப்பவர்களிடம் கேட்கிறான். அந்தப் புள்ளியில் அந்தக் கனவு “”டாக்கி”யானது. பதில் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.
வெளியிலிருந்து வரும் சத்தங்களில் என் செவிகள் பதிந்திருந்தன. ஆட்கள் பரபரப்பாக ஓடும் சத்தம் கேட்கிறது. அலுவலக அறையின் பின் புறத்திலிருந்து சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்கிறது. நாங்கள் நுழைந்த மெயின் கதவுக்கு நேரெதிராக இன்னொரு கதவு தெரிந்தது. அது அலுவலகத்தின் இன்னொரு வெளிப்புறத்தில் திறக்கும் போல இருந்தது. நாங்கள் முதலில் நுழைந்த கதவு போல் இல்லாமல் இந்த கதவு குறுகலாக திறந்தது. நான் லேசாக அந்தக் கதவைத் திறந்து வெளியே பார்க்க எத்தனித்தேன். சின்னதாக திறந்து வெளியே நோக்கினேன். ஒரு சின்ன பையன் தலைப்பாகையுடன் கதவருகே நின்றிருந்தான். அவன் செக்யூரிட்டியாக இருப்பான் என்று நினைத்தேன். சீருடை அணிந்திருக்கவில்லை. செக்யூரிட்டியாக இருக்க முடியாது. அவன் இடது கையில் வலையைப் பிடித்திருந்தான். இன்னொரு கையில் ஒரு மூங்கிற்கழி இருந்தது. அந்தக் கழியினால் தரையை தட்டியபடி நின்றிருந்தான். அறைக்குள்ளிருந்து வெளியே ஜாக்கிரதையாக தலையை வெளியே நீட்டிய எனக்கு அவனைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. “உள்ளே போங்க…பயப்படாதீங்க…சிங்கத்தைப் புடிச்சிடுவோம்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னான். எங்களை ஆசுவாசப்படுத்த விரும்பினான் போல. கழியை இன்னுமொருமுறை தரையில் தட்டினான். நான் சின்னக் கதவை அடைத்துவிட்டு அலுவலகவாசிகள் வேலை செய்து கொண்டிருந்த முக்கிய அறைக்கு திரும்பினேன். என்னுடன் கூட ஓடி வந்தவர்கள் ஓய்வின்றி உலாத்திக் கொண்டிருந்தார்கள். அலுவலக அறையில் ஏற்கனவே இருந்தவர்களோ இமை கொட்டாமல் கணிணித் திரையைப் பார்த்தபடி அசைவின்றி உட்கார்ந்திருந்தார்கள்.
வெளியே சத்தம் குறைந்திருந்தது போன்று தோன்றியது. ஒருவர் பின் ஒருவராக வெளியே செல்லலாம் என்று முடிவானது. எந்த கதவின் வழியாக நுழைந்தோமோ அந்த கதவை திறப்பதாக திட்டம். திறப்பதற்கு முன் மீண்டுமொரு முறை கதவின் மேல் காதை வைத்து கேட்டேன். ஒரு சத்தமும் இல்லை. ஓரிரு நிமிடங்கள் என் காது கதவில் பதிந்தே இருந்தது. சிங்கத்தின் கர்ஜனை, அது ஓடும் சத்தம், கழி தரையில் தட்டப்படும் ஓசை எதுவும் கேட்கவில்லை. ஹ்ம்ம்…எதுவும் ஆகாது…சிங்கத்தைப் பிடித்திருப்பார்கள்…கூண்டில் அடைத்திருப்பார்கள்…கதவைத் திறந்து முதலடியைக் கவனமாக அறைக்கு வெளியே வைத்தேன்.
+++++
என் கைத்தொலைபேசி பாடியது…நான்கு மணிக்கு அலார்ம் வைத்திருந்தேன். இல்லை…அலார்ம் இல்லை…இந்நேரத்தில் யார் அழைக்கிறார்கள்? போர்வையை விலக்கிவிட்டு எழுந்து மேசையில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்தேன். யாரோ புரியாத மொழியில் ஏதோ கேட்டார்கள். இரண்டு முறை “யார் நீங்கள்” என்று கேட்டேன். அழைத்தவருக்கு என் இந்தி புரியவில்லை. அவர் என்ன மொழி பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை. அழைப்பை துண்டித்துவிட்டு நேரம் பார்த்தேன். மூன்றரை ஆகியிருந்தது. படுக்கைக்குத் திரும்பினேன்
+++++
//மன நல சிகிச்சையில் கனவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தலை உத்தியாக முதன்முதலில் பயன்படுத்தியவர் சிக்மண்ட் ப்ராய்ட். அவருடைய சீடர் கார்ல் யங்-கும் கனவுகளின் பகுப்பாய்வை மன நல மருத்துவ உத்தியாக பயன்படுத்தினார். கனவுகளை இருவரும் வெவ்வேறு விதத்தில் அணுகினர். ப்ராய்டு கனவுகளை ஆழ்மனத்தில் அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளின் இயக்கிகளாக அணுகினார். யங் அதற்கு எதிரான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். தீர்வை நோக்கிய படைப்பாற்றலின் வெளிப்பாடாக கனவுகளை அணுகினார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போகாதவற்றைக் கூட ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் ஆசைகளின் இயக்கிகள் என ப்ராய்டு பகுப்பதை யங் விமர்சித்தார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போனாலொழிய கனவுப் பகுப்பாய்வு எந்த வித பயனையும் தராது என்றார் யங்.//
டாக்டர் முகர்ஜியின் சேம்பருக்கு முன்னர் காத்துக்கிடந்த போது மைய மேசையில் வைக்கப்பட்டிருந்த இன்றைய மனோதத்துவம் இதழில் ஒரு கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரையை முடிப்பதற்குள் டாக்டர் முகர்ஜி அறையை விட்டு வெளியே வந்து உள்ளே வருமாறு என்னைப் பணித்தார்.
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மன நல ஆலோசனைக்காக டாக்டர் முகர்ஜியை ஆறு மாதங்களாக சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
“உலகின் மிகவும் பழமையான காப்பியம் – கில்கமேஷ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு நான் பதில் தருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை போலும். இடைவெளிவிடாமல் கில்கமேஷ் காவியத்தைப் பற்றி அவரே சிறுகுறிப்பு வரைந்தார். “இறவா வரத்தை நாடிச் செல்லும் அரச குமாரன் கில் கமேஷ். அதற்கான அவனது முயற்சிகளை புராணக்கதை வடிவில் விவரிக்கும் காப்பியம் அது. கில் கமேஷுக்கு காவியம் நெடுக பல கனவுகள் வருகின்றன. காப்பியத்தின் போக்கில் கனவுகள் முன் உணர்வுக் கருவிகளாக அவனுக்கு உதவுகின்றன. பாபிலோனியர்களுக்கும் சரி எகிப்தியர்களுக்கும் சரி கனவுகள் என்பன மனிதர்களை தெய்வங்கள் தொடர்பு கொள்ளும் வழி என்று கருதினர்.”
பொதுவாக எப்போதும் என்னை அதிகமாக பேசச் சொல்லும் முகர்ஜி இன்று பேசும் மூடில் இருக்கிறார். அவர் பேச்சில் கவனம் செலுத்தாமல் என் எண்ணம் அலை பாய்ந்தது. மன அழுத்தம் காரணமான பதற்றம் மற்றும் அதீத கவலை என அலை பாயும் மனதுடன் ஆறு மாதம் முன்னர் டாக்டர் முகர்ஜியின் உதவியை நாடினேன். ஆரம்பத்தில் மாத்திரைகள் சாப்பிடச் சொன்னார். மாத்திரைகள் நரம்புகளில் செரடோனின் ரசாயனத்தை சரியாக சுரக்கச் செய்யும் அல்லது அதீதமாக சுரக்கும் செரடோனினை கட்டுப்படுத்தும். மாத்திரைகளுடன் கூடவே உளவியல் ஆலோசனையும் இணையாகச் செல்ல வேண்டும். மன அழுத்தத்திற்கான புறக்காரணிகளைப் பற்றி விரிவாகப் பேசுதல், பிரக்ஞை வெளிச்சம் படாத அடக்கி வைக்கப்பட்ட உணர்வு நிலைகளின் மேல் கருணையுடன் கூடிய கவனத்தைப் பாய்ச்சுதல், சுய கருணையுடன் அதீத எதிர்பார்ப்புகளின் எடையைக் குறைத்தல், ஒப்பீடு, கழிவிரக்கம் என எண்ணத்தில் படிந்த ஓட்டடைகளை விலக்குதல் – பல இலக்குகளை மாதம் இரு முறை நடக்கும் சந்திப்புகளில் முகர்ஜியின் உதவியால் அடைய முயன்றிருக்கிறேன். ஆனால் சில வாரங்களாக லேசான குற்றவுணர்ச்சி. எத்தனை முன்னேற்றம் கண்டிருக்கிறேன் என்பதை புறவயமாக அளவிடமுடியாத் தன்மை என்னை சற்று தொந்தரவு செய்கிறது. பதற்றம் குறைந்திருக்கிறது ; அலுவலகத்தில் அதிகாரியின் படுத்தல்களை என் முதுகுக்குப் பின் அவர் செய்யும் சதிகளை அதிக உணர்ச்சிக் கலப்பு இல்லாமல் எதிர்கொள்ளும் வித்தையில் ஓரளவு தேர்ச்சி பெற்று வருகிறேன். “இதெல்லாம் ஏன் நடக்கிறது?” என்ற கேள்வி சிந்தனையில் எழுந்து என்னை அவ்வப்போது நிலைகொள்ளாமல் வைக்கிறது. இதை மட்டும் சற்று சரி செய்து விட்டால் அமைதி திரும்பிவிடும். தொடர்ந்து இன்னும் எத்தனை மாதங்கள் இப்படி உளவியல் மருத்துவரை சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் சங்கடப் படுத்திக் கொண்டிருந்தது. முகர்ஜியின் திறமை மீதான சந்தேகத்தின்பாற்பட்டதில்லை இது. மன நல மருத்துவரை அணுகியது நான்தான். அவரிடம் செல்வதை எப்போது நிறுத்த வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில் முகர்ஜியின் அயராத முயற்சிகள் உரிய, பொருத்தமான முடிவை எய்தும் வரை பொறுமையாக அவருடன் ஒத்துழைத்தலும் மிக அவசியம் என்றும் நான் நினைக்கிறேன். சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததா என்பதை என் உள் அறிதல் வாயிலாக மட்டுமே உணர்தல் சாத்தியம் என்று முகர்ஜி ஆரம்ப சந்திப்புகளில் சொல்லியிருக்கிறார்.
ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகு முகர்ஜி புது வித நுட்பத்தை உபயோகிக்க விரும்பினார். சமீபத்தில் நான் கண்ட கனவைப் பற்றி ஒரு குறிப்பு எழுதிக் கொண்டு வருமாறு சென்ற சந்திப்பில் டாக்டர் முகர்ஜி சொல்லியிருந்தார்.
சிங்கக் கனவைப் பற்றி எத்தனை தகவல்கள் ஞாபகத்தில் இருந்தனவோ அத்தனை தகவல்களையும் என் குறிப்பில் சேர்த்திருந்தேன்.
கனவுப் பகுப்பாய்வு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மனோ தத்துவ மருத்துவர்களால் பரவலாக பயன் படுத்தப்பட்டது. இப்போதெல்லாம் மனோ தத்துவ சிகிச்சைக் கருவியாக கனவுப்பகுப்பாய்வு அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக இந்தியாவில். ஆனால், அயல் நாடுகளில் ‘psycho-analysis’ மற்றும் ‘gestalt psychology’ என்னும் மனோதத்துவப் பிரிவுகளில் கனவுகளின் பகுப்பாய்வு பரவலாக உபயோகத்தில் உள்ளது.
“சிங்கக் கனவு சுவாரஸ்யமாயிருக்கிறது. நீங்கள் பகுதி நேர எழுத்தாளர் என்பதால் சுவையாக அதை பதிவு செய்திருக்கிறீர்கள். இந்தக் கனவில் உம்முடைய இப்போதைய மன நிலைக்கான விடை இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?”
எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. சில நொடிகள் தயங்கினேன்.
“இணைய தளங்களில் கனவுகளுக்கான பொருள் கொள்ளலைப் பற்றி அறிய முயன்றேன். ஆனால் பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படுவதைப் போல எளிதான விஷயமாக இருக்கவில்லை. கனவுகளுக்கு ஒரு பொதுவான கருப்பொருள் இருப்பதில்லை. சிங்கம் பற்றிய கனவுக்கான பொருள்விளக்கம் பொதுவான ராசி பலன் வாசிப்பது போன்று ஒத்திசைவற்ற உணர்வைத் தந்தது.”
கையோடு கொண்டுவந்திருந்த நோட்புக்கில் குறித்து வைத்திருந்தனவற்றை வாசித்துக் காண்பித்தேன்.
“வலிமை, தைரியம், கம்பீரம் மற்றும் பெருமிதச் சிந்தனை – இவற்றின் குறியீடு சிங்கம். சிறுமைகளிலிருந்து விடுபட்டவர்க்கே சிங்கக்கனவு தோன்றும்.”
“சிங்கத்தை கனவில் காணுதல், மேலே சொன்ன குணங்களை விட, போராட்டத்தையே அதிகமாகக் குறிக்கிறது. போராட்டத்தில் வெற்றி பெற்று பல்வேறு பிரயாசங்களிலும் தலைவனாக மிளிர்வதையும் சிங்கத்தை கனவில் காணுதல் குறிக்கிறது.”
“திருமணமாகாத பெண்ணின் கனவில் சிங்கம் வந்தால் அவளுக்கு திருமணமாகும்.”
“ஓர் இளம் வாலிபனின் கனவில் சிங்கம் வந்தால் யதார்த்த வாழ்க்கையில் எதிரி ஒருவனால் எளிதில் அவனது இடம் எடுத்துக் கொள்ளப்படும்.”
“ஒரு சர்க்கஸில் சிங்கம் நடிப்பது போல கனவு வந்தால், உன் வாழ்க்கையில் எளிதாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படக் கூடிய கஷ்டங்கள் உருவாகும் என்று பொருள் கொள்ளலாம்.”
“உன் கண்களின் முன்னால் சிங்கம் எதையாவது தின்னுவது போன்ற கனவு வந்தால், உன் யதார்த்த வாழ்வின் பிரச்னைகள் வித்தியாசமான வழிகளில் தீரும்.”
“ஓர் இளஞ்சிங்கத்தை நீ உன் கனவில் பார்த்தால் யதார்த்தத்தில் உன் வியாபாரக் கூட்டாளிகளினால் தொல்லைகள் ஏற்படும்.”
“கர்வமாக நடைபோடும் சிங்கத்தை கனவில் பார்த்தால், குடும்பப் பிரசினைகளின் சாத்தியம் உண்டு என்று பொருள் ; ஆனால் உன் வாழ்க்கைக் கூட்டாளியின் துணை கொண்டு அப்பிரச்னைகளை தீர்த்துவிடக் கூடும்.”
நான் படித்துக் காட்டியதும் முகர்ஜி சிரித்தார்.
“சிங்கம் கனவில் வருவதை எப்படி பொருள் கொள்ளலாம் என்பதை தேடினால் இளஞ்சிங்கம், பெண் சிங்கம், ஆண் சிங்கம், சிங்கத்துடன் விளையாடுதல், சிங்கம் கனவு காண்பவனை துரத்துதல் என்று விதவிதமாக விளக்கங்கள் போட்டிருக்கிறார்கள். சிங்கம் வருகிறது என்று கேள்விப்பட்டவுடனேயே அறைக்குள் சென்று தாழ் போட்டுக்கொண்டு ஒளிந்து கொண்ட கனவில் சிங்கத்தை பார்க்கவேயில்லை. ஆனால் சிங்கம் பற்றிய பயம் இருந்தது. கனவில் இல்லாமல் இருந்த சிங்கத்தை எப்படி பொருள் கொள்வது?”
இன்னும் பலமாக சிரித்தார் முகர்ஜி. இதற்கு முன்னர் நடந்த அமர்வுகள் இத்தனை லேசாக சென்றிருக்கவில்லை.
மன நல சிகிச்சையின் போது கனவை பொருள் விளக்கம் கொள்ளுதலில் பல வித வழிமுறைகள் உள்ளதாகக் கூறி அதில் ஒரு சிலவற்றை விளக்கினார். “நீ சொன்ன ராசி பலன் மாதிரியான பொருள் கொள்ளல் நமது கலாசாரத்திலிருந்து பெறப்படுவது. கனவுகளை பொருள் கொள்ளலில் கலாசார விழுமியங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. எனினும் மன நல சிகிச்சையில் கனவில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் நிஜ வாழ்க்கையில் யாரை எதை குறிக்கிறது என்பதை கனவு காண்பவர் அடையாளங்காணுதலிலிருந்து கனவுப் பகுப்பாய்வு தொடங்குகிறது”
முகர்ஜி அன்றைய அமர்வை விரைவில் முடித்துக் கொண்டார். அடுத்த சந்திப்புக்கு வரும்போது நான் எழுதித் தந்த கனவு பற்றி நன்கு யோசித்துக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.
“உன் கனவுக் குறிப்பை வாசித்தபோது ஹெமிங்வேயின் ஓல்ட்மேன் அண்ட் தி ஸீ நாவல் என் ஞாபகத்துக்கு வந்தது. அதில் கிழவன் சாண்டியாகோ அடிக்கடி சிங்கங்களை கனவில் காண்பான். அதுவும் குழுக்களாக சிங்கங்கள் உலா வருவதாகக் கனவு காண்பான். நீ பார்த்த இணைய தளத்தில் சாண்டியாகோவின் கனவுக்கு என்ன பொருள்விளக்கம் தந்திருப்பார்கள்?”
+++++
வீடு திரும்பியதும் பக்கம் பக்கமாக குறிப்புகள் எழுதினேன்.
என் கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என்னுள் பயத்தை ஏற்படுத்தியது. என் மீது மட்டுமல்ல. என்னுடன் பேசிக் கொண்டிருந்த மேலும் சிலருக்கும் தான். கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என் அதிகாரியைக் குறிக்கிறதா? இல்லை. என் பயங்கள், பாதுகாப்பின்மை – இவைகளைத்தான் கூண்டில் இருந்து தப்பித்திருக்கக்கூடிய சிங்கம் குறிக்கிறதா? பயங்களும் பாதுகாப்பின்மையும் கண்ணுக்குப் புலப்படா மனக்குணங்கள். அவற்றுக்குப் பயந்து நான் ஒதுங்கிய அறை ஏன் என் அலுவலகத்தையொத்து இருக்கிறது. அங்கிருந்தோர் யாரும் பயந்தது மாதிரி தெரியவில்லை. அறைக்குள் வந்து ஒதுங்கிய நானும் என்னுடன் வந்தவர்களுந்தான் பயத்துடன் பதற்றத்துடன் இருந்தோம். ஆனால் சிங்கத்தை பிடிப்பதற்கான ஆயத்தங்கள் அறையின் மூடிய இரு கதவுகளுக்குப் பின்னால் நடந்து கோண்டிருந்ததற்கான அத்தனை சங்கேதங்களும் எனக்கு தெரிந்தன. சத்தங்கள் கேட்டன. தலைப்பாகையிட்ட இளைஞன் ஒருவன் எனக்கு உறுதி தந்தானே சிங்கம் பிடிபட்டுவிடும் என! என் பதற்றங்கள் எல்லாம் கற்பிதங்கள் என்று இந்த கனவு சொல்கிறதோ?
வேறு மாதிரி யோசித்தேன்.
சிங்கம் அந்த அதிகாரியைக் குறிக்கிறது. அவர் தன் நடத்தையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிராமல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலரின் மனதில் மட்டும் பாதுகாப்பின்மையை அச்சத்தை உருவாக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து தப்பிக்க முடியாமல் ஓடி அலுவலகம் போன்று தெரிந்த அறையில் தஞ்சம் புகுகிறேன். ஆனால் அந்த அறையில் இருந்த மற்றவர்கள் போல என்னால் சஞ்சலமுறாமல் இருக்க முடிவதில்லை. எப்படியாவது அதிகாரியிடமிருந்து தப்புதலே என் விழைவாக இருக்கிறது!
இன்னும் வேறு மாதிரி யோசித்தேன்.
கதவைத் திறந்து வெளியே வந்த எனக்கு அங்கே என்ன காத்திருந்தது? மூன்று சாத்தியப்பாடுகள்! (1) வெளியே யாரும் இல்லை. சிங்கம் கண்ணில் தென்படவில்லை. ஆபத்து விலகிவிடுகிறது. (2) எனக்காக சிங்கம் அமைதியாக கதவுக்கு வெளியே காத்திருக்கிறது. அதனுடன் சண்டை போடுகிறேன். அதை வென்றேடுக்கிறேன். (3) அறைக்கு வெளியே காத்திருந்த சிங்கம் என்னைத் தாக்கி என்னைக் கொன்று போட்டுவிடுகிறது.
டாக்டர் படித்து விட்டு என்னிடம் திருப்பியளித்த கனவுக் குறிப்பை மீண்டும் வாசித்தேன்.
மீண்டும் இன்னொரு குறிப்பு எழுதினேன்.
சிங்கத்துக்கு ஏன் கோபம்? காட்டிலிருந்து கடத்தி வரப்பட்டு கூண்டில் பொழுதுபோக்கிற்காக அடைக்கப்பட்ட சிங்கத்தின் உணர்வுகள் பற்றி நமக்கு என்ன தெரியும்? அதிகாரியின் சொந்த பிரச்னைகள், அபிலாஷைகள், பொறுப்புகள், பாதுகாப்பின்மை – இவற்றைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? ஒரு சக மனிதனாக அவனும் நம்மைப் போல பலங்களுடனும் பலவீனங்களுடனும் இருப்பவன் தானே…….
எழுதுவதை நிறுத்தினேன். என் மேசையின் மேல் இருந்த மினியேச்சர் சாரநாத் தேசியச் சின்னத்தின் திசைக்கொன்றாக நான்கு புறங்களைப் பார்க்கும் சிங்க ரூபங்களை நோக்கினேன். சிங்கக் கனவு எனக்களிக்கும் தகவல் என்ன?
சூழமைவு இல்லாமல் எந்த நிகழ்வுக்கும் அர்த்தம் கற்பித்தல் இயலாத காரியம். சூழமைவைப் பொறுத்து ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிக்கலாம். நம்மை நடுநாயகமாய் வைத்தே நமக்கான அர்த்தங்களை நாம் பெறுகிறோம். The Phenomena of Shared Dreams சாத்தியம் என்று வைத்துக் கொண்டால், இதே கனவுக்கான பொருள்விளக்கத்தை சிங்கத்திடம் கேட்டால் அது என்ன பதிலளிக்கும்? அந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களில் ஒருவரின் (அவர் நிஜ மனிதராக இருக்கும் பட்சத்தில்) கண்ணோட்டத்தில் இந்த கனவு என்ன அர்த்தத்தை கொடுக்கும்?
கனவு கண்ட அந்த இரவில் கைத்தொலைபேசி ரிங் ஆனதும் கண்விழித்து எழுந்தது போன்று சடக்கென ஒரு தெளிவு. சடோரி!
நாம் கண்ட கனவை நம் கண்ணோட்டத்தில் பொருள்விளக்கம் கொள்கிறோம். ஒரு திரைப்பட இயக்குனரின் கட் போல நம் கனவின் பொருள்விளக்கம் நம்முடைய கட். வாழ்க்கை யாருடைய கட்? வாழ்க்கை எல்லா உயிர்களின் கூட்டுக் கனவு என்பதாக யோசித்தால் ஒருவரின் கண்ணோட்டத்தில் மட்டும் வாழ்வின் நிகழ்வுகளை எப்படி பொருள் கொள்ள முடியும்? “இதெல்லாம் எனக்கு ஏன் நடக்கிறது?” என்ற வினா அடிப்படையில் மிகவும் அபத்தமானது ; நம் சுய கண்ணோட்டத்திலிருந்து எழுவது.
நான் நான். அதிகாரி அதிகாரி. நான் என் எல்லைக்குள் என் பலங்களுடன் பலவீனங்களுடன் இருக்கிறேன். என் அதிகாரி அவருக்குரிய எல்லையில் இருக்கிறார். அவருடைய பலங்களை பலவீனங்களை நடத்தையை மிகையாகப் பொருட்படுத்தி என்னுடைய சுய முக்கியத்துவத்தை அதிகமாக கற்பனை செய்து கொள்ளும் பழக்கந்தானே அடிப்படையில் என்னுள் பதற்றத்தை உண்டு பண்ணுகிறது. பாதிப்புக்குள்ளாகும் தன்மை – நானோ என் அதிகாரியோ – அனைவருக்கும் பொதுவன்றோ?
+++++
அன்றிரவு நிம்மதியாக உறங்கினேன். முகர்ஜி குறிப்பிட்ட சுமேரியக் காப்பிய நாயகன் கில்கமெஷ் காணும் கனவொன்றில் வானிலிருந்து விழும் கோடரியை அவன் அணைத்துக் கொள்வதைப் போல என் மேசையில் இருக்கும் சாரநாத்தின் சாக்கிய சிம்மங்களை கைகளில் இடுக்கியவாறே தூக்கம். கடலில் சுறாக்களுடன் கடுமையாகப் போராடி தலை சேதமுறாமல், பிற பாகங்களை சுறாக்கள் பிய்த்தெடுத்துவிட எலும்புகளின் அமைப்பு மட்டும் எஞ்சியிருந்த மிகப்பெரிய மர்லின் மீனுடன் அதிகாலை கரை திரும்பிய பிறகு சாண்டியாகோ அடித்துப்போட்டாற்போல என்னை மாதிரிதான் தூங்கியிருப்பான்.
மலைகளின் உச்சிகளிலிருந்து காடுகளினூடே கிராமங்களினூடே வளைந்து செல்லும் பாதையில் தான் வந்தவழியை பின்திரும்பி நோக்குகிறாள் தன் முன்னம் பரந்து விரியும் கடலை நோக்குகிறாள் இதற்குள் நுழைவது என்பது நிரந்தரமாக மறைந்துபோவதைத் தவிர வேறேதுமில்லை ஆனால் வேறு வழியில்லை!
நதி பின்திரும்பிச் செல்ல முடியாது யாரும் பின்திரும்பிச் செல்ல முடியாது இந்த இருப்பில் பின்திரும்பிச் செல்லுதல் சாத்தியமில்லை கடலுள் நுழையும் இடர்பாட்டை அது சந்தித்துத்தானாக வேண்டும்! ஏனெனில் அப்போதுதான் அதன் பயம் விலகும் ஏனெனில் அங்குதான் நதி ஒன்றைப் புரிந்து கொள்ளும் – இது கடலுக்குள் மறைந்து போவதைப் பற்றியதன்று, கடலாக மாறுவதைப் பற்றியது