Tag: எழுத்து

  • சர்ச்சைகளுக்கும் மேலான ஒரு சுமாரான சவாரி


    நாவல் மீதான சட்டத் தடையை நீதி மன்றம் விலக்கிய பிறகு, The Satanic Verses என்ற சல்மான் ருஷ்டியின் மிகப் பெரும் சர்ச்சைக்குரிய நாவலை வாசிக்க நான் முடிவு செய்தேன். வாசிப்பு என்பது இங்கு இலக்கியரசனைக்காக மட்டுமல்ல. மாறாக, எழுத்துரிமைக்காக தனது வாழ்க்கையை பணயம் வைத்த ஒரு பெரிய எழுத்தாளருக்கு செலுத்தும் மரியாதையாகவும் இந்த வாசிப்பைச் செய்ய விரும்பினேன்.

    ஆனால் வாசித்தபின் ஏற்பட்ட உணர்வு — மிகமிகச் சுமாரான ஒரு நாவல். பல இடங்களில், “இதை ஏன் எழுதிச் செல்கிறார்?” என்ற கேள்வி எழாமல் இல்லை. வழக்கம்போல், ருஷ்டியின் உரைநடை சில இடங்களில் பிரகாசிக்கிறது. ஆனால் அந்த ஆற்றல் நாவல் முழுமையும் நிலைத்திருக்கவில்லை. மையமற்ற கதை சொல்லல், குழப்பமூட்டும் பாத்திரங்கள், உணர்வளவாக மனதில் ஒட்டாத பாகங்கள் போன்றவை நல்ல வாசிப்பனுபவத்துக்குத் தடையாக இருந்தன.

    நாவலின் முக்கியமான பாத்திரமான ‘இமாம்’ ஒரு முன்னாள் இரானிய மத-அரசியல் தலைவரின் பிரதிபலிப்பாக படைக்கப்பட்டிருக்கலாம். தன்மீதான நேரடி பதிவாக உருவாக்கப்பட்டிருப்பதால் எழுந்திருக்கக் கூடிய சொந்தக் கோபந்தான் ஃபத்வாவுக்கான காரணமோ என்றெண்ணத் தோன்றுகிறது. உண்மையில் அந்தத் தலைவர் அறுநூறுக்கும் மேலான பக்கங்களைக் கொண்ட நாவலை வாசித்துவிட்டாரா என்பது கேள்விக்குறியே!

    நாவல் கடுமையான எதிர்ப்பைச் சந்திப்பதற்கு காரணமான பகுதிகளை மிக உன்னிப்பாக வாசித்தேன். இஸ்லாமின் வரலாறு, சமயவியல் பற்றித் தொடர்ந்து வாசித்தும் சிந்தித்தும் வருவதால் ஆசிரியரின் அணுகுமுறையை கூர்மையாக அவதானிக்க முடிந்தது. முதல் பாதியில் வரும் பகுதி அப்படி ஒன்றும் பிரச்னைக்குரிய பகுதியாக தோன்றவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பகுதி பிரச்னைக்குரியது. பாத்திரங்களுக்கு வைத்துள்ள உர்துப் பெயர்கள் முதல் Alternative History -உத்தியில் சில வரலாற்றுப் பாத்திரங்களை கற்பனையாக எழுதிச் சென்றிருக்கும் விதம் வரை – எக்காலத்திலும் சர்ச்சையை எளிதில் கவர்ந்திழுக்கக் கூடியவை. அவற்றை எழுதும் போதே சர்ச்சையைக் கிளப்பும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றால் அதனை naivety என்று அழைப்பதா? இல்லையேல் அதிக சர்ச்சை அதிக விற்பனை என்னும் மேற்கத்திய எழுத்துலகின் பாணியைக் கைக்கொண்டார் என்று சொல்வதா? மூன்றாவதாக, வரலாற்றையும் புனைவையும் பின்னுதலில் குறியீடுகள், மாய எதார்த்தம் ஆகிய இலக்கிய உத்திகளைப் பயன்படுத்தி பின்னர் வந்த நாவல்களில் வெளிப்பட்ட (Shalimar the Clown, The Enchantress of Florence) எழுத்துவன்மை இந்த நாவலில் கைகூடாததால் விளைந்த விபத்தா? இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் எழுத்தாளரின் இளமைக்கால அசட்டு தைரியம் என்றுதான் கூறத் தோன்றுகிறது. சர்ச்சைகள் மட்டுமே ஓர் இலக்கியத்தை உயர்த்த முடியாது. ஒரு வாசகராக எனக்கு இந்த நாவல் ஒரு இலக்கிய அனுபவத்தை நல்கவில்லை.

  • கதவுடன் ஒரு மனிதன் – சச்சிதானந்தன்

    சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

    1996 முதல் தில்லியில் வசிக்கிறாராம். தில்லியில் வசிப்பது பற்றி அவரிடம் கேட்ட போது “எனக்கும் தில்லிக்குமான உறவு அன்பு – வெறுப்பு இரண்டுங் கலந்தது” என்று பதிலளித்தார்.

    இச்சந்திப்புக்கு முன்னர் அவருடைய கவிதைகளைப் படித்ததில்லை. எம்டிஎம் சச்சிதானந்தனின் எழுத்தை சிலாகித்துப் பேசினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கவிதைகளை இணையத்தில் வாசித்தேன். அவருடைய கவிதை நூல்களை வாங்கி ஆழ்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியிருக்கிறது. அவருடைய மூன்று கவிதைத் தொகுதிகளின் தமிழாக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன என்று அவருடைய இணைய தளம் (http://www.satchidanandan.com/index.html) சொல்கிறது. வாங்க வேண்டும்.

    கவிஞர் சச்சிதானந்தனின் அனுமதியுடன் “A man with a door” என்ற அவருடைய கவிதையின் தமிழாக்கம் கீழே.

    கதவுடன் ஒரு மனிதன்
    ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
    நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
    அவன் அதனுடைய வீட்டை தேடுகிறான்.

    அவனின் மனைவியும்
    குழந்தைகளும் நண்பர்களும்
    அக்கதவின் வழி உள்ளே வருவதை
    அவன் கனவு கண்டிருக்கிறான்.
    இப்போதோ முழுவுலகமும்
    அவனால் கட்டப்படாத வீட்டின்
    கதவினூடே நுழைந்து செல்வதை
    அவன் பார்க்கிறான்.

    கதவின் கனவு
    உலகை விட்டு மேலெழுந்து
    சுவர்க்கத்தின் பொன் கதவாவது.
    மேகங்கள்;வானவிற்கள்
    பூதங்கள், தேவதைகள் மற்றும் முனிவர்கள்
    அதன் வழி நுழைவதை
    கற்பனை செய்கிறது,

    ஆனால் கதவுக்காக காத்திருப்பதோ
    நரகத்தின் உரிமையாளர்.
    இப்போது கதவு வேண்டுவது
    மரமாக மாறி
    இலைச்செறிவுடன்
    தென்றலில் அசைந்தவாறே
    தன்னைச் சுமந்திருக்கும்
    வீடற்றவனுக்கு
    சிறு நிழலைத் தருவதே.

    ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
    நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
    ஒரு நட்சத்திரம் அவனுடன் நடக்கிறது.

    MDM&KSatchidananthan

    (எம்டிஎம், நான், கவிஞர் சச்சிதானந்தன்)

  • ஓய்வு பெற்ற கதை எழுத்தாளரின் கவிதை முயற்சி

    இன்னும் இருக்கிறது
    வாசலில் சில செருப்புகள்
    மோகத்தைக் கொன்று விடு
    விலை போகாத எனது 3 கதைகளின்
    தலைப்புகளை
    மாற்றி எழுதிப் பார்த்தேன்
    சில செருப்புகள்
    இன்னும் வாசலில் இருக்கிறது
    கொன்றுவிடு மோகத்தை!
    வேறு மாதிரி மாற்றிப் பார்த்தேன்
    வாசலில் கொன்றுவிடு மோகத்தை
    இன்னும் சில செருப்புகள் இருக்கிறது
    வேற்றுமை உருபை மாற்றி
    இன்னொரு சொல்லையும் சேர்க்கலாமா?
    என்னுடைய கதையின் தலைப்புகள் தானே!
    யாரைக் கேட்க வேண்டும்?
    வாசலில் இன்னும் இருக்கும் சில செருப்புகளால் அடிப்பர்
    மோகத்தை கொன்று விடு
    “எழுத்து” என்ற சொல்
    தொக்கி நிற்பதாகக் கொள்ளுங்கள் என்ற
    அடிக்குறிப்பு போட்டு விடலாமா என்று யோசித்தேன்.

  • எழுத்துக்குத் தடை

    “Writer’s Block” என்று சொல்வார்கள். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒர் எழுத்தாளருக்கு எதுவுமே எழுதத் தோன்றாமல் இருக்கும் ஒரு phase-ஐ அப்படி சொல்வார்கள். கற்பனை சரிவர எழாது. “rhythm”ஐ இழந்து போயிருப்பார். சொந்த வாழ்க்கை ஏற்பட்ட சில துயர சம்பவங்களாலோ, துக்க நிகழ்வுகளாலோ எழுத்தாளருக்கு இப்படியொரு “block” ஏற்படக்கூடும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

    ஆகஸ்டு 16க்குப் பிறகு ஒன்றும் எழுதவில்லை. ஒரு வரி கூட. அலுவலகத்தின் வேலைப் பளுவோ, அலுவல்கள் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களோ, அலுவலகம் இடம் மாறிய பிறகு தினமும் இரண்டு மணி நேரம் காலை – மாலை பயணம் செய்ய வேண்டியிருப்பதால் ஏற்பட்ட உடற் களைப்போ…..எது காரணம் என்பது புரியவில்லை?

    எழுதத் தொடங்கு முன்னர் எனக்கு கணினி திரை அவசியம். எல்லாருக்கும் தான் இது அவசியம். இக்காலத்தில் யார் பேனாவை எடுத்து தாளில் எழுதுகிறார்கள்? எல்லோருமே நேராக கணினியில் தட்டச்சு தானே செய்கிறார்கள் என்று ஒருவர் கேட்கலாம். உண்மை தான். நான் அதை சொல்ல வரவில்லை. ஒரு கரு சிந்தனையில் தோன்றுகிறது. அதை மனதிலேயே வார்த்தைகளைப் போட்டு முழு வடிவம் தர முடிவதில்லை. ஒரு கணினி முன்னால் உட்கார்ந்து தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும் போது தான் சரியான வார்த்தைகள் வந்து விழ, சிந்தனையில் உருவான கருவும் வளர்ந்து கவிதையாகவோ கதையாகவோ அல்லது கட்டுரையாகவோ வடிவம் கொள்கிறது.

    கணினி இல்லையென்றால் என்னாகும்? காகிதத்தை வைத்துக் கொண்டு எழுத உட்கார “மூட்” வருவதில்லை. அலங்காரமில்லாமல் சொல்வதானால், சோம்பேறித் தனத்தை உதறி எழுத ஆரம்பிக்க முடிவதில்லை என்பதே உண்மை. அப்படியே எழுத ஆரம்பித்தாலும் கோழிக் கிறுக்கலாகப் போய் விட்ட என் கையெழுத்தைப் பார்க்கும் போது எனக்கே அவமானமாக இருக்கும். கையால் எழுதியவற்றை பின்னர் தட்டச்சு செய்யும் போது என்ன எழுதியிருக்கிறோம் என்று தடுமாறி விழிக்கும் பிரச்னை வேறு. “என்னப்பா…இவ்ளோ அசிங்கமா இருக்கு உன் கையெழுத்து” என்று என் மூத்த மகள் வேறு கேள்வி கேட்பாள். “இல்லேடா கண்ணு….அப்பா ஆஃபீஸில் பல வருஷங்களா கம்ப்யூட்டர்லயே வேலை பண்றதால கையில் எழுதி பழக்கமில்லாம போயிடுச்சு…சின்ன வயசுல என் கையெழுத்து மணி மணியா இருக்கும்” என்று மொட்டைக் காரணத்தோடு ஒரு பொய்யையும் சேர்த்து சொல்லி தப்பிக்கப் பார்ப்பேன்.

    இதில் இன்னொரு விஷயத்தையும் நான் கவனித்திருக்கிறேன். இரண்டு வரிகள் தமிழில் எழுதியவுடன் கை வலிக்க துவங்கிவிடும். என்னுடைய நண்பன் ஒருவன் ஒரு விசித்திரமான ஆலோசனை வழங்கினான். ஆங்கிலத்தில் எழுதினால் கை வலி குறைவாக இருக்கும் என்று. இது எத்தனை தூரம் உண்மை என்று எனக்கு தெரியாது.

    ரீடிங் ரூமில் இருக்கும் கணினி திரையில் ஏதோ கோளாறு. குழந்தைகள் இப்போதெல்லாம் ஐ-பேட்-ல் பிசியாக இருப்பதால் கணினி பக்கம் வருவதில்லை. எனவே அவர்களால் இந்தப் பழுது ஏற்பட்டிருக்க சாத்தியமில்லை. மூன்று வாரங்களாக கம்ப்யூட்டர் டெக்னீஷியனை கூப்பிட்டு சரி செய்ய வேண்டும் என்று பார்க்கிறேன். ஆனால் தள்ளிக் கொண்டே போகிறது.

    ஆகஸ்ட் 16க்கு பிறகு ஏற்பட்ட இந்த எழுத்து இடைவெளி “writer’s block” ஆக இருக்கலாமோ என்ற ஐயம் அவ்வப்போது தோன்றி என்னை மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டிருந்தது. எழுத்தாளர்களுக்கு தான் block வரும் எனில் நான் எழுத்தாளன் ஆகி விட்டேன் என்று தானே பொருள்.

    ஒரு நாள் மாலை வீடு திரும்பிய போது என் இளைய மகள் (ஏழு வயதாகிறது !) ஸ்டைலாக உட்கார்ந்து கணினியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். “அம்மா கம்ப்யூட்டர் காரனை கூப்பிட்டாளா” என்று கேட்டேன். “அதெல்லாம் எதுக்கு…ஸ்க்ரீன் chord லூஸா இருந்தது…அதை நானே சரியா மாட்டி விட்டுட்டேன்” என்று சாதாரணமாக சொன்ன படி கணினித் திரைக்குள் மின்னல் வேகமாக மதில் சுவரில் ஓடிக்கொண்டே இருந்தவனை ஒரு லாங்-ஜம்ப் செய்ய வைத்து குழியில் விழ வைத்து சாகடித்தாள் (கம்ப்யூட்டர் கேமில் அய்யா!). ஐ-பேட்-டின் சார்ஜர் தொலைந்த வேளையில் என் குழந்தைகளின் கவனம் கணினியில் பட அது உயிர் பெற்று விட்டது.

    இந்தப் பகிர்வு மொக்கையான (’தட்டையான’ – இலக்கியச் சிற்றிதழ் படிக்கும் பழக்கம் உள்ளவருக்கு) வாசிப்பனுபவத்தை தந்தால் மிகவும் மெதுவாக விலகிக் கொண்டிருக்கும் என்னுடைய writer’s block ஐத் தான் குற்றம் சொல்ல வேண்டும். இதை வாசித்து மிகவும் சலித்துப் போனவர்கள், இடுகைக்கு தரப்பட்டிருக்கும் தலைப்போடு “வேண்டும்” என்ற சொல்லையும் சேர்த்து மறு தலைப்பிட்டுக் கொள்ளலாம்.