Tag: உரைநடை

  • அவசர உரைநடை

    ருஷ்டியின் கதைகளை வாசிக்கையில் வேக வேகமாக நகரும் காமெராவின் காட்சிகளைப் பின் தொடர்வது போல உணரலாம். அவசர அவசரமாக கதையைச் சொல்லிச் செல்வது போன்றதொரு தோற்றம். ஒரு வித பதற்றத்துடன் கதையை எழுதுகிறாரோ என்று தோன்றும். மெதுவாக சொற்களை வைத்து காட்சியை, நிகழ்வை செதுக்கியவாறு சொல்லிக் கொண்டு போகும் படைப்புகளை வாசித்துப் பழக்கப்பட்டவர்க்கு ருஷ்டியின் அவசரம் புதிதாகப் படும். அவரின் சில நாவல்களின் “வாசிக்கும் தன்மை குறைவு” என்று சொல்லும் சில வாசகர்களின் விமர்சனம் – அவர்களின் பழக்கப்பட்டுவிட்ட வேகமான வாசிப்புக்குத் தடையாக இருக்கிறது என்பதனால் தான். இந்த “அவசர”த் தோற்றம் அவரது நாவல்களில் ஏன் நிகழ்கிறது?

    (1) நிகழ்வுகளின் பன்முகத்தன்மை – யோசனை, நிகழ்வுகள், பாத்திரங்கள், துணைக்கதைகள் – ஆகியவற்றை ஒரு சூறாவளி போன்று தொகுத்து தனது நாவலில் இணைப்பதால், அடுக்கடுக்கான கதை சொல்லல் விரைவான முன்னேற்றமாக கதையை நகர்த்துகிறது. வாசகர்களுக்கு தொடர்ந்து ஏதாவது ஒரு புதுக்கூறை அளித்தவண்ணம் இருப்பதால், தொடர்ந்து புதுக்கூறுகளை அசை போடும் கட்டாயத்தில் வாசகர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர்.
    (2) வாய்வழி மரபின் தாக்கம் – “கதா” “கிஸ்ஸா” போன்ற இந்தியக் கதை சொல்லும் மரபுகளின் தாவிச் செல்லும் உட்கதைகளின் பாணியை ருஷ்டி அதிகம் பயன்படுத்துவார்.
    (3) ருஷ்டியின் ஃப்ளாஷ்பேக்குகள், திசைதிருப்பல்கள் மற்றும் கண்ணோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை பெரும்பாலும் காலவரிசைகளைச் சுருக்கி, வேகத்தின் மாயையை உருவாக்குகின்றன.
    (4) அவர் பயன்படுத்தும் மொழி ஆற்றல் மிக்க உயிர்ப்புடன் நாவலை ஓடுகின்ற பிராணி போல ஆக்கிவிடுகிறது.
    (5) ருஷ்டியின் படைப்புகள் பெரும்பாலும் அடர்த்தியான வரலாற்று, கலாச்சார மற்றும் அரசியல் கருப்பொருள்களைக் கொண்டவை. இந்த கூறுகளை இறுக்கமாகப் பின்னி, அவர் சித்தரிக்கும் குழப்பமான, துடிப்பான உலகங்கள் பிரதிபலிக்கும் வேகத்தை அவர் தன் கதையில் பராமரிக்கிறார்.
    (6) ருஷ்டி தன் கதைகளில் சித்திரிக்கும் larger than life முக்கியப் பாத்திரங்களும் கதைகளின் ஒட்டுமொத்த வேகத்திற்குப் பங்களிக்கின்றன.

    மிட்நைட்ஸ் சில்ட்ரன் நாவலின் மின்னல் வேக உரைநடை இந்தியாவின் குழப்பமான மற்றும் கொந்தளிப்பான வரலாற்றை பிரதிபலிக்கிறது. தி சாத்தானிக் வெர்ஸஸ் நாவலின் அவசர உரைநடை கதைக்களத்தின் சர்ரியல், கனவு போன்ற மாற்றங்களுடன் பொருந்துகிறது. இந்த “அவசரம்” ருஷ்டியின் படைப்புகளை வரையறுக்கும் ஆற்றலையும் உயிர்ப்பையும் ஒருங்கிணைந்ததாகும்.

  • கொட்டும் பனிப்பொழிவில் – பெருந்தேவியின் கவிதை குறித்து


    கொட்டும் பனிப்பொழிவில்

    புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்
    அவனாகத்தான் இருக்க வேண்டும்
    அவன் எப்படி இங்கே?
    அவன் மாதிரிதான் தெரிகிறது
    அங்கே இரவு
    அவன் கனவில் பனி பொழிகிறது
    புள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்தி
    அவள் எப்படி அங்கே?
    அவள் மாதிரிதான் தெரிகிறது
    விதிர்த்து எழுந்திருக்கிறான்
    ஆடைவிலகிய தொடையிலிருந்து
    தனது காலை மெல்ல எடுக்கிறான்
    சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்
    அவனுடைய கனவு முடிந்துவிட்டது
    அவளது பகல் முடிய
    பல மணி நேரம் இருக்கிறது

    அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்
    அவன் மாதிரி இருந்த அவன்
    அவனாக இருந்திருந்தால்
    தாண்டிச் சென்றிருக்கமாட்டான்
    அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்
    கண்களுக்குள் பொழிகிறது பனி
    எதுவும் நடக்காததைப் போல

    அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்
    அவள் மாதிரி இருந்த அவள்
    அவளாக மட்டும் இருந்திருந்தால்
    ஆடை விலகிய தொடைக்கு மேல்
    மீண்டும் தன் காலைப் போடுகிறான்
    எதுவும் நடக்காததைப் போல

    பெருந்தேவி

    கவிதை என்பது கருத்தையோ உணர்வையோ பகிரும் விஷயம் என்ற பொதுவான வரையறை கவிதையை கவிதையாகக் காட்டுவது எது என்ற கேள்வியை எழுப்புகிறது. நேரடியாக ஓர் உரைநடையாகவே அதனைச் சொல்லிவிடலாமில்லையா? பின் கவிதை எதற்கு வேண்டும்?

    கவிதை புரிவதில்லை என்று பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு வாசிக்கப் பழகவில்லை என்று எளிதில் எதிர்வினை தந்துவிட முடியும் என்றாலும், அந்தக் குற்றச்சாட்டு ஏன் வைக்கப்படுகிறது என்று சிந்திக்கும்போது எனக்குத் தோன்றுவது – கவிதை ஒரு வடிவம். அதன் வடிவத்தை உணரப் பழகினாலொழிய கவிதையை ரசிக்க முடியாது!

    வடிவம் எதைச் சார்ந்தது? மொழியையா, சொல்லையா, வரிகளின் அடுக்கையா,…….மொழி சார்ந்த சொல் சார்ந்த உத்திகள் கவிதைகளின் இன்றியமையா அங்கமாக இருந்த காலங்கள் உண்டு. இவ்வுத்திகளை உதறிக் கிளர்ந்தெழுந்த நவீனக்கவிதைகள் தகவலை, படிமத்தை, உணர்வைப் பகிரும் விதத்தில் காட்டும் புதுமைப்படுத்தல்களை வடிவம் என்பதாகக் கொள்ளலாம். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு முகவாகில் இருப்பது போல எழுதப்படும் ஒவ்வொரு நவீனக் கவிதையும் ஒவ்வொரு வடிவத்தை பூணுகிறது. அகவற்பா, வெண்பா முதலான இலக்கணம் சார்ந்த வடிவங்கள் காலாவதியான பிறகும் ‘சொன்னதைத் திரும்பச் சொல்லல்” கவிதையின் அம்சமாக இல்லாமல் போகவில்லை. ஆனால் “சொல்லும் விதத்தை மாற்றாமல் சொல்லுதல்” நிச்சயம் தேய்வழக்காகிவிட்டது.

    எழுதப்படும் வடிவங்கள் உணரப்படாமல், ஈர்க்காமல் போகும்போது வாசகர்கள் அதனை “புரியவில்லை” என்கின்றனர். மொழிரீதியான புரிதலை நாம் இங்கு பேசவில்லை. கவிதையை உள்வாங்கி ரசிக்க அதன் வடிவ அமைப்பை உணர்தலின் அவசியத்தைப் பேசுகிறோம்.

    இந்த நீண்ட பீடிகையை என்னால் சில மணி நேரங்கள் முன்னர் எழுதியிருக்க முடியாது. ஏனெனில், அப்போது பெருந்தேவி எழுதி ஃபேஸ்புக்கில் இட்டிருந்த “கொட்டும் பனிப்பொழிவில்” கவிதையை படித்திருக்க மாட்டேன். 

    கவிதையை முதல் முறை படித்த போது எது என்னை ஈர்த்தது?

    கொட்டும் பனியில் ஒரு புள்ளியாகத் துவங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் அவன்! – நீண்ட காலர்களுடன் நீளமான குளிர் கால அங்கியணிந்து, கௌபாய் தொப்பியைத் தறித்துச் சாலையில் நம்மை (வாசகனை நோக்கி!) வந்து கொண்டிருக்கும் ஆணுருவம் ஒரு noir படத்தின் ஆரம்பக்காட்சி போல நம் மனக்கண்ணில் ஓடத் துவங்குகிறது. – என்னை முதலில் ஈர்த்தது இந்த மனச்சித்திரந்தான்.

    அடுத்தடுத்த வரிகளை முதல் முறை வாசித்தபோது – கனவின் காட்சிகள் யதார்த்தத்தில் இணைவது ஆற்றல் மிகு உத்தியாக என் ஆர்வத்தை நீட்டித்தது.

    “ஆடை விலகிய தொடை” – புலன்சார் சித்திரத்தை என்னுள் வரைவதோடு நிற்காமல், ஒரு புதிராகவும் வளர்கிறது. கவிதையின் இறுதியில் திரும்பவரும் “ஆடை விலகிய தொடை” “யாருடைய தொடை?” எனும் வினாவை எழுப்பி அதன் விடை என்னவாக இருக்கும் என்ற ஊகத்தின் இன்பத்தில் கவிதையனுபவம் அரும்பத் தொடங்கியது. புதிருக்கான விடை கிடைத்துவிட்டால் கவித்துவ உணர்வு விடைபெற்றுக் கொள்ளும் அபாயம் உண்டு எனும் பிரக்ஞையை அடைவது தான் கவிதை வாசித்தலின் படி நிலைகளில் உயர்வதற்கான அறிகுறி.

    மேற்சொன்ன மூன்று அம்சங்கள் “கொட்டும் பனிப்பொழிவில்” கவிதைக்கான உடனடி ஈர்ப்பை என்னுள் ஏற்படுத்தியவுடன், கவிதையினுள் ஆழச்செல்லும் ஆர்வம் இன்னமும் பெருகிற்று.

    அவளின் கனவில் அவன் வருவதும், அவன் கனவில் அவள் வருவதும் என இரு கனவுகள் பின்னிப்பிணைவது போல முதலில் தோன்றிற்று. Inception திரைப்படம் தோற்றுவித்த அதே உற்சாகத்தை என்னுள் கிளர்த்தியது. முதலில் அவள் கனவு காண்கிறாளா? பின்னர் அவன் கனவு காண்கிறானா? அவளின் கனவு அவனின் கனவுக்குள் நுழைந்து விடுகிறதா? என்றவாறு கனவுப்பாதையில்  திளைத்தது வடிவப்புதுமை சிந்தனையுள் நிகழ்த்திய வேதியியல் மாற்றம் – கவிதையின்பம் என்பது இத்தகைய திளைத்தல் தானோ! கவிதை ரசிக மனம் இந்தத் திளைத்தலுடன் திருப்தியுற்றுவிடவில்லை. காதலியின் உருவ அழகை ரசித்துவிட்டு அதோடு நிற்காமல் அவளின் வடிவ அழகை ரசிக்க யத்தனிப்பது போன்று – கவிதை வாயிலாக கவிஞர் சொல்ல வருவது என்ன? – தகவலா, உணர்வா, அல்லது வெறும் படிமம் மட்டுமா? முழுப்புதிரையும் அவிழ்க்க கவிதையின் வடிவத்தைக் கலைத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றிற்று 

    சில குறிப்புகளைக் கவிதையை தன்னுள் அடக்கிவைத்துக் கொண்டிருக்கிறது. “அங்கே இரவு” என்பது முதல் குறி . “அவளது பகல் முடிய பல மணி நேரம் இருக்கிறது” என்பது இரண்டாம் குறி. 

    அவளுக்கு பகல் அவனுக்கு இரவு – அவனும் அவளும் உலகத்தின் வெவ்வேறு நேர மண்டலங்களில் வசிக்கிறார்கள். Distance Love எனும் கருப்பொருளைக் கவிதை பேசுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

    கவிதை ஒற்றைக் கருப்பொருளை மட்டும் கொண்டிருக்கவில்லை. காதல் முக்கோணம் எனும் கருப்பொருளும் கவிதையில் காணக்கிடைக்கிறது. “ஆடை விலகிய தொடை” – யாருடைய தொடை எனும் கேள்விக்கான விடையை கவிதாசிரியர் தராமல் போனது வடிவமைப்பின் சிகரம் என்று நினைக்கிறேன். பல ஊகங்களை நம் மனதுள் கிளப்பிவிடுகிறது. அவன் யாருடன் படுத்திருக்கிறான்? அவன் மனைவியுடனா? காதலியுடனா? அருகில் இல்லாமல் வெகுதொலைவில் வசிப்பதால் காதலியுடனான நெருக்கத்தை அனுபவிக்க முடியாமல் இருப்பதன் காரணமாக ஏதொவொரு விலைமாதுடன் படுத்திருக்கிறானா? வாசகன் மனதில் எழும் இத்தகைய கேள்விகள் வாசிக்கும் கவிதை மீதான ஈடுபாட்டை உயர்த்துகிறது. 

    அவனுக்கு வேறு துணை இருக்கிறதெனில் வேறொரு நேர மண்டலத்தில் வசிக்கும் அவளுக்கு இதைப் பற்றி தெரியுமா என்னும் கரிசனம் வாசகனான என்னில் எழுந்தது. அவளுக்குத் தெரிந்தால் அவளது சோகம் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகும்! பனிபொழியும் தெருவில் நடப்பவன் அவனைப் போல் இருக்கிறான் என்று அவனை சற்று நேரம் நோக்கும் அவள் “இது அவனில்லை” என்று உணர்ந்த பிறகு அவள் தன் கண்களை மூடிக் கொள்கிறாள். இது அவனில்லை, அவனைத் தவிர வேறு எவனையும் இந்தக் கண்கள் காணக்கூடாது என்று தன் கண்களை மூடிக் கொள்கிறாளோ? “கண்களுக்குள் பொழிகிறது பனி” என்ற வரியில் கவிச்சுவை பொங்குவதை உணர வேண்டுமானால் அவள் மீதான கரிசனவுணர்வு வாசகனுள் பொங்குதல் அவசியமாகும். “கண்ணீர் விட்டு உறைந்து போய்விட்டன அவள் கண்கள்” என்பதைத்தான் “கண்களுக்குள் பொழிகிறது பனி” என்ற வரி சொல்கிறது என்பதாகப் புரிந்து கொண்டேன். பனி என்பது உறைந்த நீர்!   

    கவிதையில் காணப்படும் இன்னொரு குறிச்சொல் – “எதுவும் நடக்காததைப் போல”. அவன் எங்கோ, அவள் எங்கோ “எதுவும் நடக்காததைப் போல” தத்தம் இயல்பான வாழ்க்கையைத் தொடர்கின்றனர். இருவருக்குமிடையிலான நேசத்தை இருவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அவள் கண்ணீர் விடுகிறாள். அவனுடைய கனவில் “அவள் போல தோன்றுபவள் அவளில்லை” என்று உணர்ந்தவுடனேயே அவன் விழித்துக் கொண்டுவிடுகிறான். உடனடியாக அவனுடைய படுக்கைத்துணையின் மீது போட்டிருந்த காலை விலக்கித் திரும்பப்படுத்துக் கொள்கிறான். 

    “கனவின் காட்சிகள் யதார்த்தத்தில் இணைவது” என்ற அம்சம் முதல் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று ஏற்கனவே சொன்னேனில்லையா? அது தோற்ற மயக்கம் என்பது கவிதையின் மூன்றாம் மட்ட அர்த்தப்படுத்தலில் (அதாவது முழுக்கக் கலைத்துப் போடுதலில்) விளங்கிவிடுகிறது. இந்தத் தோற்ற மயக்கம் சில வரிகளை ஒழுங்கு மாற்றிப் படித்துப் பார்க்கும் போது விலகி விடுகிறது.

    கவிதையை பத்தி பிரித்து வாசித்துப் பார்ப்போமா?  (கவிஞர் என்னை மன்னிப்பாராக!)

    புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்

    அவனாகத்தான் இருக்க வேண்டும்

    அவன் எப்படி இங்கே? 

    அவன் மாதிரிதான் தெரிகிறது     (1)

    — 

    அங்கே இரவு

    அவன் கனவில் பனி பொழிகிறது

    புள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்தி

    அவள் எப்படி அங்கே?

    அவள் மாதிரிதான் தெரிகிறது

    விதிர்த்து எழுந்திருக்கிறான்

    ஆடைவிலகிய தொடையிலிருந்து

    தனது காலை மெல்ல எடுக்கிறான்

    சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்

    அவனுடைய கனவு முடிந்துவிட்டது  (2)

    அவளது பகல் முடிய

    பல மணி நேரம் இருக்கிறது         (3)

    அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்

    அவன் மாதிரி இருந்த அவன்

    அவனாக இருந்திருந்தால்

    தாண்டிச் சென்றிருக்கமாட்டான்

    அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்

    கண்களுக்குள் பொழிகிறது பனி

    எதுவும் நடக்காததைப் போல         (4)

    அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்

    அவள் மாதிரி இருந்த அவள்

    அவளாக மட்டும் இருந்திருந்தால்

    ஆடை விலகிய தொடைக்கு மேல்

    மீண்டும் தன் காலைப் போடுகிறான்

    எதுவும் நடக்காததைப் போல          (5)

    பத்தி எண்கள் 1 மற்றும் 4 – அவளின் கண்ணோட்டம்

    பத்தி எண்கள் 2 மற்றும் 5 – அவனின் கண்ணோட்டம்

    பத்தி எண் 3 – கவிதை சொல்லியின் குரல் – தொலைதூரத்தை, நேர மண்டலத்தை பூடகமாக சுட்டுகிறது

    பத்தி எண் 3 நீங்கலாக, கவிதை இரண்டு கண்ணோட்டத்தில் செல்கிறது. இரண்டு கண்ணோட்டங்களும் வரிகளை அடுக்கும் விதத்தில் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன. அவன் கனவு காண்பது கவிதையில் வருகிறது. கவிதை முழுக்கவும் அவன் கனவு காணவில்லை. ஒரு கட்டத்தில் அவன் விழித்துக் கொள்கிறான். அவள் கனவு காணவில்லை. யதார்த்தத்துக்குள் தான் இருக்கிறாள். வரிகளை பிசைந்து எழுதப்பட்டுள்ள விதத்தில் கனவு, கனவுக்குள் கனவு, யதார்த்தத்திலிருந்து கனவு, கனவிலிருந்து யதார்த்தம் என்பன போன்றவை மயக்கத்தைத் தோற்றுவித்து கவிதையைச் சுவையுள்ளதாக்குகின்றன. இந்த மயக்க விளைவு இல்லாமல் போயிருந்தாலும் இந்தக் கவிதை தன்னளவில் முழுமையான கவிதையாகவே திகழ்ந்திருக்கும், எனினும் குழந்தைக்கு என்ன உடை அணிவிப்பது என்ற முடிவை எடுக்கும் தாயைப் போல கவிஞரே தீர்மானிக்கிறார் கவிதை பூணும் வடிவத்தை!

    சொல்ல வரும் எளிதான கருத்து, இரண்டு படிமங்கள், வடிவப்புதுமை – மூன்றையும் சரியான விகிதத்தில் கலந்து ஓர் அரிய கவிதையனுபவத்தைத் தருகிறார்  பெருந்தேவி. 

    ஒரு கவிதை நம்மை ஈர்ப்பதில் ரசனை பெரும்பங்கு வகிக்கிறது. உணவு, உடை, நிறம் போல கவிதையின் பொருள் கொள்ளும் முறை அவரவர் பார்வை. எனவே, இந்தக் குறிப்பு தரும் பொருள் மட்டுமே இக்கவிதைக்கான ஒரே பொருள் என்று கொள்ள முடியாது. இக்கவிதையை வாசிக்கும் இன்னொருவர் வேறுவிதமாகப் பொருள் கொள்ளக்கூடும். கவிதை எழுதி முடிக்கப்பட்ட பிறகு அது கவிஞனைச் சாராத தனித்த இருப்பைக் கொள்கிறது என்று சொல்வது இதனால்தான். இதன் காரணமாகவே ஒவ்வொரு வெற்றிகரமான கவிதையையும் அதன் வாசகர்களே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.