இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்).
—
மேலிருந்து இங்கு வந்து இறங்கியது,
அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா
இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில்
தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது
அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றன
கூண்டோ வலிமையானது!
அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை,
உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்து
அது முடக்கப்பட்டுள்ளது.
–
அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம் இது,
திரை விலக்கப்பட்டு, மகிழ்ச்சியுடன் முணுமுணுத்தவாறு
விழித்திருக்கும் கண்களால் காண முடியாதவற்றை நோட்டம் விடுகிறது
புகழ்க்கீதம் பாடி உயரங்களுக்குத் திரும்புகிறது
உலகில் இருந்தவரை மறைக்கப்பட்டவைகளை உணர்ந்தவாறே திரும்பினாலும் அதன் உடையில் கறைகள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.
இத்தனை உயரத்தில் இருந்து அது ஏன் அவ்வாறு வீசப்பட்டது
இருண்ட, மந்தமான, ஆழ்ந்த அடித்தளப் பள்ளத்திற்கு?