திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் ஸஜ்தா

In 2014, in Iraq’s northern city of Mosul one of its most well-known shrines was destroyed by the ISIS – the Tomb of Jonah. The shrine was built on what is regarded as the burial site of the biblical prophet known in the Quran as Yunus.

நினிவே நகரம் நீண்ட காலமாக அல்லாஹ்வின் செய்தியை மறந்து சிலை வழிபாடும் பாவமும் நிறைந்த நகரமாக மாறியிருந்தது. நகரவாசிகளைத் தனது ஒளியின் பாதையில் வழிநடத்த நினிவே நகரவாசிகளுள் ஒருவராகப் பிறந்திருந்த யூனுஸ் நபியை ஒரு தூதராக அனுப்ப முடிவு செய்தான் அல்லாஹ்.

யூனுஸ் நபி உடனடியாக தனது இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கினார். தனது மக்களை அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் சிலை வழிபாட்டைத் தவிர்க்குமாறும் அழைப்பு விடுத்தார். அவருக்கு முன் பிறந்த தீர்க்கதரிசிகள் நிராகரிக்கப்பட்டதைப் போலவே ஆனால் நினிவே மக்களால் யூனுஸும் நிராகரிக்கப்பட்டார். அல்லாஹ்வின் பயங்கர கோபத்தை அவர்களுக்கு நினைவூட்டி அவர்களை அல்லாஹ்வின் பாதைக்கு வர அழைத்தார். அவர்களோ, “நாங்களும் எங்கள் முன்னோர்களும் பல ஆண்டுகளாக இந்த தெய்வங்களை வணங்குகிறோம், இதனால் எங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை” என்றனர்.

நபி யூனுஸ் அவர்களுக்கு உதவ விரும்பினார், அதனால் தன் விடாமுயற்சியைக் கைவிடவில்லை. அவர்களின் அறியாமையைப் பரிவுடன் அணுகினார். அவர்களின் கடுமையான வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அல்லாஹ்வின் தண்டனை குறித்து எச்சரித்தவண்ணமிருந்தார்.

மேலும் யூனுஸின் வார்த்தைகளை வெற்று அச்சுறுத்தல்களாக நினைத்து தாங்கள் சிறிதும் பயப்படவில்லை என்று தெரிவித்தனர். யூனுஸ் நபி மனம் உடைந்தார்; அவர் தனது மக்களை கைவிட்டார். தன்னை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தை ஏற்கும் ஒரு சமூகத்தை வெகு தொலைவில் கண்டடையலாம் என்ற நம்பிக்கையில், அல்லாஹ்வின் அனுமதியின்றி, நினிவே நகரத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

நினிவேயின் அமைதியான வானம், அல்லாஹ்வின் கோபத்தைத் துப்புவதற்குத் தயாராவதுபோல் சிவப்பாக மாறியது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மலை உச்சியில் தங்களுக்கு மேலேயிருந்த வானத்தை பயம் நிறைந்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அல்லாஹ்வின் தண்டனையைப் பற்றிய யூனுஸின் எச்சரிக்கையை அவர்கள் நினைவு கூர்ந்தனர், மேலும் அவர்கள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலையைக் கண்டு அஞ்சினர். புதிய நம்பிக்கையுடன், முழங்காலில் விழுந்தனர்; கைகளை நீட்டி அல்லாஹ்வின் மன்னிப்பையும் கருணையையும் வேண்ட ஆரம்பித்தார்கள். இந்த நேர்மையான மனந்திரும்புதலால் தூண்டப்பட்ட அல்லாஹ், தண்டனையை நீக்கி, குடிமக்களை மன்னித்து, அவர்கள் மீது தனது ஆசீர்வாதங்களைப் பொழிந்தான்.

வானம் தெளிந்தபோது மக்கள் தங்கள் அன்பிற்குரிய நபி யூனுஸ் அல்லாஹ்வின் பாதையில் அவர்களை வழிநடத்தும் பொருட்டு பாதுகாப்பாக நினிவேவுக்குத் திரும்பி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்,

நினிவேயை விட்டு வெளியேறிய யூனுஸ் நபி தனது மக்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு சிறிய பயணிகள் கப்பலில் ஏறினார். கப்பல் பகலில் அமைதியான நீரில் நகர்ந்தது; ஆனால் இரவு வந்தவுடன் சூறாவளி கப்பலைத் தொட்டது. கப்பலை அங்குமிங்குமாக உலுக்கியது. கடல் நீர் மெல்ல மெல்ல புகுந்து, கப்பலை மெதுவாக மூழ்க ஆரம்பித்தது. பணியாளர்களும் பயணிகளும் உயிருக்கு அஞ்சத் தொடங்கினர்.

இரவு முழுவதும் சூறாவளி தொடர்ந்ததால் கப்பலின் சுமையைக் குறைப்பதற்காக சாமான்கள் மற்றும் மற்ற அனைத்து அதிகப்படியான சுமைகளையும் தூக்கி எறியுமாறு கப்பலின் மாலுமி உத்தரவிட்டார். அறிவுறுத்தப்பட்டபடி பணியாளர்கள் கப்பலின் அதிகப்படியான சுமையை வெளியேற்றினர்; ஆனால், கப்பல் இன்னமும் கனமாக இருந்ததால் தொடர்ந்து மூழ்கிக் கொண்டிருந்தது. கேப்டனுக்கு வேறு வழியில்லை – அவர் தனது பணியாளர்கள் மற்றும் பயணிகளின் உயிரைக் காப்பாற்ற யாரோ ஒருவரின் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் இருந்த பொதுவான நடைமுறையை செயல்படுத்தும் விதமாக பலி கொடுக்கப்படும் பயணியைத் தேர்வு செய்ய கேப்டன் சீட்டு குலுக்கிப் போட முடிவு செய்தார்.

சீட்டு போடப்பட்டு யூனுஸ் நபியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. யூனுஸ் ஓர் இளைஞர், நேர்மையானவர், ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை சகபயணிகள் அறிந்திருந்தனர், எனவே அவர்கள் அவரை வெளியேற்ற மறுத்து மீண்டும் சீட்டு குலுக்கிப்போடும்படி கேப்டனை வேண்டிக் கொண்டனர்.

மீண்டும் சீட்டு குலுக்கிப் போடப்பட்டது. யூனுஸின் பெயரே மீண்டும் வந்தது. யூனுஸை தூக்கி எறிய மறுத்து, “நாங்கள் யூனுஸை இழக்கப் போவதில்லை. அவர் படகில் இருப்பது எம்மீது ஆசீர்வாதம். படகில் இருக்கும் சிறந்த மனிதர் அவர்; நாங்கள் அவரை அகற்றப் போவதில்லை” என்றனர் பணியாளர்கள். எனவே அவர்கள் மூன்றாவது முறையாக சீட்டு எடுத்தார்கள், யூனுஸின் பெயரே மீண்டும்! பயணிகள் குழப்பமடைந்தனர். யூனுஸ் நபி இது அல்லாஹ்வின் தீர்ப்பு என்பதை அறிந்திருந்தார். தனது இறைவனின் அனுமதியின்றி தனது மக்களை விட்டுவிட்டு வந்ததுதான் இதற்குக் காரணம் என்பதாக உணர்ந்தார். யூனுஸ் கப்பலில் இருந்து இருண்ட கொடூரமான அலைகளுக்குள் குதித்தார்.

அல்லாஹ் கட்டளையிட்டபடி கடலில் உள்ள மிகப்பெரிய திமிங்கிலம் யூனுஸை விழுங்கியது. சுயநினைவின்றி இருந்த யூனுஸ் இருளால் சூழப்பட்டிருப்பதைக் கண்டு எழுந்தார்.

தனது கல்லறையில் தான் வந்தடைந்திருப்பதாக அவர் நம்பினார்; ஆனால் சற்று நேரத்தில் ஒன்று தெளிவானது. அவர் தனது கல்லறைக்குள் இல்லை. ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் இருப்பதை உணர்ந்தார்.

திமிங்கிலத்தின் ஆழமான வயிற்றில் இருந்த யூனுஸ் நபி அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்து, “யா அல்லாஹ், இதுவரை யாரும் உனக்கு ஸஜ்தா செய்யாத இடத்தில், ஒரு மீனின் வயிற்றில் நான் உனக்கு ஸஜ்தா செய்கிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வை அழைத்தார், “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. நீ பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயம் செய்பவர்களில் ஒருவனாக இருந்தேன்.” (21:87) ஆழ்கடலின் உயிரினங்கள் யூனுஸின் மனமுருகும் பிரார்த்தனையைக் கேட்டு திமிங்கிலத்தைச் சுற்றி ஒன்று கூடி அல்லாஹ்வின் புகழைக் கொண்டாடின.

இரக்கமுள்ள அல்லாஹ் யூனுஸின் மனந்திரும்புதலால் பெரிதும் ஈர்க்கப்பட்டான். தனது தூதரை அருகிலுள்ள கரையில் துப்புமாறு திமிங்கிலத்திற்கு கட்டளையிட்டான். திமிங்கிலம் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அருகில் உள்ள கரைக்குச் சென்று யூனுஸை வெளியேற்றியது. திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த அமிலங்களின் விளைவாக யூனுஸின் உடல் வீக்கமடைந்தது. சுடும் சூரியன், பலமாக வீசும் காற்று – இவற்றினால் யூனுஸுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே யூனுஸுக்கு பக்கத்தில் மீது நிழல் தரும் மரம் வளருமாறு அல்லாஹ் செய்தான். உணவும் நிழலும் அவருக்குக் கொடுக்குமாறு மரத்தைப் பணித்தான். அவரை மன்னிக்கும்படி நேர்மையான அழைப்பை யூனுஸ் விடுத்திராவிட்டால் மறுமை நாள் வரை திமிங்கிலத்தின் வயிற்றிலேயே இருந்திருக்க நேரிட்டிருக்கும் என்ற தகவலை அவருக்குத் தெரிவித்தான் அல்லாஹ்.

யூனுஸ் முழுமையாக குணமடைந்ததும், தனது பணியை முடிக்க நினிவேக்கு திரும்பினார். தனது சொந்த ஊருக்கு யூனுஸ் திரும்பி வந்ததில் நினிவே நகர மக்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். நினிவேயின் அனைத்து மக்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். யூனுஸ் தனது மக்களுடன் சேர்ந்து தனது இறைவனுக்கு ஸஜ்தா செய்து அவருடைய அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ரம்ஜான்போஸ்ட் – 18-3-2024

பயம்-பற்று-ஆசை-வேட்கை

தோழியாய் இருந்தவள்

அமைதியானாள்

பின்னர் அன்னையானாள்

அவளுடனிருக்கப் பிரியந்தான்

அவளருகே நிற்க ஆனந்தந்தான்

அந்த ஆனந்தம் தனி ஆனந்தம்

அது பற்றின்மையால் வருவது

அவளருகே நிற்க பற்றின்மை

வெள்ளம் போல் பொங்குகிறது

பின்னர் தூரமாய்

என் குடும்பத்தின் நினைவு

என் குழந்தை கணவனின் நினைவு

ஓடிச் செல்கிறேன்

என் வீட்டை நோக்கி

இத்தனை பற்றின்மை

உடம்புக்காகாது

பின்னர் ஒரு நாள்

அன்னை எனும் தோழி

என் வீட்டுக்கு வந்தாள்

ஒன்றும் பேசவில்லை

அவள் சிரிப்பில் புரிந்தது

பற்றின்மையோ பயம் தருவது?

பற்றன்றோ பயம் தருவது

எண்ணத்தின் ஓட்டம்

எளிதில் உணர்ந்தவளாய்

“பயப்பட ஒன்றும் இல்லை”

என என் காதில் சொன்னாள்

பின்னர் யாரோ அன்னையிடம் கேட்டார்கள்

“இறைவனை அடைவது எப்படி”

“அளவற்ற பற்றினால்,

அடங்கா ஆசையால்”

“அமைதியை அடைவது எப்படி?”

“ ஓய்வற்று வேட்கை கொள்”

Sri Anandamayi Ma

சுவரில் ஒரு கடிதம்

பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.

מנא מנא תקל ופרסין
Mede Mede Tekel Upharsin

“Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”

அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் டரியஸ் கைப்பற்றுகிறார். டரியஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.

That very night Belshazzar the Chaldean (Babylonian) king was killed, and Darius the Mede received the kingdom.

— Daniel 5:30–31[1]