இந்தச் சிறு கட்டுரையை கடந்த சனிக்கிழமை எழுதத் தொடங்கிய போது இயக்குனர் ஷியாம் பெனகல் மறைந்திருக்கவில்லை. ஷியாம் பெனகல் இயக்கிய அதிகம் பேசப்படாத படம் ஒன்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் கடந்த சனிக்கிழமை ஏன் என்னுள் உதித்தது?
—-

“த்ரிகால்” படம் எழுத்தாளர் ரஸ்கின் பாண்டின் கதைகளை நினைவு படுத்தியது. “த்ரிகால்” திரைக்கதையில் ரஸ்கின் பாண்ட்-தனம் இருந்ததாக எனக்குப் பட்டது. ஆங்கிலோ-இந்தியக் குடும்பங்களின் வாழ்க்கையை அதிகம் பதிவு செய்யும் ரஸ்கின் பாண்ட்-டின் கதைகளில் நினைவேக்கம் முக்கியக் கூறாக உள்ளது.. மசூரியிலோ டேராடூனிலோ களம் கொண்டிருக்கும் அவரது கதைகள். “த்ரிகால்” திரைக்கதை அறுபதுகளின் கோவாவில் நிகழ்கிறது. போர்ச்சுகல்-லின் காலனியாக இருக்கும் கோவாவை இந்தியாவுடன் இணைக்கும் போராட்டம் உச்சத்தில் இருக்கிறது. எங்கே போர்த்துகீசியர்கள் கோவாவை இந்தியாவுக்கு கொடுத்து விடுவார்களோ என்று ஒரு குடும்பத்தின் முதியவர்கள் கவலையில் இருக்கிறார்கள். சில குடும்பங்கள் போர்ச்சுகலுக்கு குடி பெயர்ந்துவிட்டன. குடும்பத்தின் இளைஞர்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரிக்கிறார்கள். அவர்களின் உணவு மேசை வாக்குவாதங்கள் – ஆதரவும் எதிர்ப்புமாக – நடக்கும் காட்சி எனக்கு பாமுக்கின் “பனி” நாவலில் வரும் உணவு மேசை வாதங்களை – இஸ்லாமிஸ்டுகளுக்கும் ராணுவத்தினர்க்கும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் – நினைவு படுத்தின. ரூயிஸ் பாத்திரம் ஓர் இளம்பெண்ணை மயக்கி கர்ப்பமாக்கி விட தன் கர்ப்பத்தை மறைத்து அவசர அவசரமாக இளம்பெண் பாத்திரம் ஒரு முதியவரைத் திருமணம் செய்து கொண்டுவிடும். இருபது வருடங்களுக்குப் பின் – படத்தின் இறுதிக் காட்சியில் – கோவாவுக்கு வரும் ரூயிஸ் பாத்திரம் பாழடைந்த தாம் வசித்த பழைய மாளிகையை நோக்குகையில் அவனுடைய பின்-குரலில் ஒலிக்கும் வசனம் – “காலம் தவறுகளை மறக்கவைத்து ஓர் இன்பமான சிறு நினைவாய் மாற்றிவிடும்”
ஷியாம் பெனெகல் இயக்கத்தில் வெளிவந்த “த்ரிகால்” திரைப்படத்தில் வசனங்கள் இல்லாத நேரங்களில் ஒளி-நிழல் இயக்கங்கள், குறுகலான அறைகள், பாத்திரங்களின் உடைகள் திரைப்படத்தின் கதையைப் பேசின. சிறிது நேரம் ஒலியை அனைத்து விட்டு மௌனப் படத்தை நோக்கினாலும் படத்தின் சில அதிர்வுகள் குறைவுபடாது என்று கூறிவிட முடியும். அப்படிக்கூற ஒரு முகாந்திரம் இருக்கிறது. 1987இல் முதன்முறையாக தூர்தர்ஷனில் பார்த்தேன். அப்போது என்னால் இந்தியின் ஒரு சொல்லையும் புரிந்து கொள்ள முடியாது. ஒரு வரியும் புரியாமல் முழுப் படத்தையும் பார்த்தது நன்கு நினைவிருக்கிறது. படம் பார்த்து முடித்தபின் மனதில் காட்சிகளை அசை போடும்போது கதையின் முக்கியக் கருப்பொருட்களாகிய நினைவேக்கமும் இறந்த காலத்தில் சஞ்சரித்தலும் உணர்வின் ஆழத்தில் எதிரொலித்தன. இறுதிக் காட்சியில் நசீருத்தின் ஷா ஏற்று நடித்த ரூயிஸ் பாத்திரம் கோவாவுக்கு வந்து பார்க்கும் போது அந்த பழைய வீடு சோகத்துடன் பார்வையாளர்களை நோக்கிக் கொண்டிருப்பது போல் இருந்தது. இது எப்படி சாத்தியம்? இறந்த காலத்தை காட்டும் “பிளாஷ் பேக்குகள்” நிறைந்த படங்களில் நிகழ் காலத்துக் காட்சிகளுக்கும் இறந்த காலக் காட்சிகளுக்கும் இடையே ஒரு வித்தியாசமும் இல்லாமல் இருப்பதை பார்க்கிறோம். இறந்த காலம் கதையின் பாத்திரங்களுக்குள் ஏற்படுத்தும் ஏக்கம் பார்வையாளர்களின் மனதிலும் நுழைந்தது எப்படி?
வெறும் நினைவேக்கம் மட்டுந்தானா “த்ரிகால்”?
ஒரு காதல் படமோ, வீரசாகச சோகப்படமோ இல்லை “த்ரிகால்”. ஹ்யூமனிச கதையைச் சொன்னாலும் சில அரசியல் கருத்துகளை கதை தன் அடித்தளத்தில் மறைத்து வைத்துக் கொண்டுள்ளது “த்ரிகால்”. இப்போதைய சில வெகுசன தமிழ்த்திரைப்படங்களில் வருவது மாதிரி பாத்திரங்களின் வாயில் வசனங்களாகத் திணிக்கப்பட்டு அரசியல் கருத்துகள் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.
மீஸோன் சீன் (mise en scene) எனும் பிரெஞ்சு சொற்றொடரின் நாடகவியல் சார்ந்த பயன்பாடு பின்னர் திரைப்படக் கலைக்குள்ளும் பிரவேசித்தது. ஒரு ப்ரேமில் தெரியும் அனைத்து காட்சிக்கூறுகளின் உள்ளடக்கத்தை மீஸோன் சீன் எனலாம். சொற்றொடரின் நேரடி அர்த்தம் – “மேடையில் வைத்தல்” அல்லது “காட்சியில் வைத்தல்”. எந்தெந்த காட்சிக்கூறுகளை காட்சியில் வைக்கலாம்?
காட்சியமைப்பு:
கதை நிகழும் இடத்தையும் காலத்தையும் வரையறுக்கும் சூழ்நிலையும் பொருட்களும், பாத்திரங்களின் உடை அணிகலன்களும்
ஒளி:
மனநிலைகளையும் சூழ்நிலைகளையும் வெளிப்படுத்த உதவும் ஒளி – நிழல் பயன்பாடு.
நடிப்பு:
நடிகர்களின் உடல் மொழி, முகபாவங்கள் மற்றும் குரல் வேறுபாடுகள்.
பெனகல் பயன்படுத்தியுள்ள “மீஸோன் சீன்” வெறும் பின்னணியாக மட்டுமல்லாமல், கதையை உயிர்ப்பும், சுவாசமும் உள்ள கதையாடலின் பகுதியாக செயல்படுவதாலேயே “த்ரிகாலை” ஓர் அசாதாரணத் திரைப்படமாகிறது. படத்தின் ஒவ்வொரு விவரமும், – காட்சியின் இட மேலாண்மையிலிருந்து பாத்திரங்களின் வடிவமைப்பு வரை – மரபு, அடையாளம், மாற்றம் குறித்த கதையினுடைய ஆய்வினை ஆழமாக்குகிறது.
1961இன் கோவாவில் போர்த்துகீசிய அரசு வீழ்ச்சியடைந்த நாட்களில், சொந்த வாழ்க்கை சார்ந்த, பொது அரசியல் சார்ந்த மாற்றங்களுக்கு நடுவே சிக்கியிருக்கும் ஒரு பணக்கார, கத்தோலிக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதைச்சூழலைக் கொண்டுள்ள படத்தில் காட்டப்படும் சிதைந்து கொண்டிருக்கும் மாளிகை காலனித்துவ உயரடுக்கின் உருவகம். பெனகலின் நுணுக்கமான செட் டிசைன் அக்காலத்தின் செல்வச்செழுமையையும் கொஞ்சங்கொஞ்சமாக மங்கிக் கொண்டிருக்கும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. வீட்டில் நிறைந்து கிடக்கும் பழங்கால மரச்சாமான்கள், மதச்சின்னங்கள், குல தெய்வங்களின் பிரதிமைகள் நழுவிக்கொண்டிருக்கும் மரபுகளை இறுகப் பற்றிக் கொள்ளும் முயற்சிகளின் படிமங்கள். இடிந்து விடும் என்பது போலிருக்கும் சுவர்களும் அவற்றின் மங்கலான நிறங்களும் உணர்ச்சி சார்ந்த, சமூகச் சிதைவைப் பிரதிபலிக்கின்றன.
பாத்திரங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் பழைய உலகின் அழகை வளர்ந்து வரும் நவீன யுகத்தோடு வேறுபடுத்திக் காட்டுகின்றன. குடும்பத்தின் பழைய தலைமுறையினர் போர்த்துகீசிய செல்வாக்கை பிரதிபலிக்கும் பழமைவாத, பாரம்பரிய உடைகளை அணிகின்றனர். இளைய கதாபாத்திரங்கள் காலனித்துவ விழுமியங்களிலிருந்து முறித்துக் கொண்டு ஒரு புதிய அடையாளத்தை நோக்கி நகர்வதைக் குறிக்கும் சமகால உடைகளை அணிகின்றனர். இந்தக் காட்சி இயக்கவியல் கதையின் அடிநாதமான தலைமுறை பதட்டங்களுக்கு இணையாகச் செல்கிறது.
நினைவேக்கவுணர்வைத் தூண்டும் வண்ணம் மென்மையான இயற்கை ஒளியை பெனகல் பயன்படுத்துகிறார். இரகசியங்களின், சொல்லப்படாத பதட்டங்களின் சுமையை வலியுறுத்த இருண்ட, நிழல் படிந்த உட்புறங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார். கதையின் முக்கியக் கருப்பொருளாகிய – தோற்ற, யதார்த்த இரட்டைத் தன்மையை – பிரதிபலிக்க ஒளியின் நிழலின் இடையீட்டை உபயோகிக்கிறார்.
குடும்பச் சந்திப்பு காட்சிகளில் பாத்திரங்களின் ஒழுங்கமைவு அவற்றுக்கிடையேயான உறவுகளையும் உணர்ச்சி தூரங்களையும் அடிக்கோடிடுகிறது. எடுத்துக்காட்டாக, அதிகார உருவங்கள் பெரும்பாலும் முன்புறத்தில் நிற்கின்றன. மாறுபட்ட குரல்களும், தனிமைப்படுத்தப்பட்ட பாத்திரங்களும் பின்னணியில் நிற்கின்றன. மாளிகையின் குறுகிய இடங்களில் கதாபாத்திரங்கள் நகரும் விதம், உடல் மற்றும் உணர்ச்சித் தளங்களில் அவற்றின் சிறைபட்ட நிலையை அதிகரித்துக் காட்டுகிறது.
காட்சிகளில் அடிக்கடி வரும் மதப் பொருட்களின் பயன்பாடு குண நலன்கள் சிதைந்து கொண்டிருக்கும் குடும்பத்தின் ஆழமான கத்தோலிக்க நம்பிக்கையை முன்னிலைப்படுத்துகிறது. இந்திய பாதிப்புகளுடன் சேர்ந்து ஒலிக்கும் பாரம்பரிய போர்த்துகீசிய பாடோ பாணி இசை கோவாவின் கலாசார சந்திப்புகளைக் கோடிடுகிறது.
கோவாவின் பாரம்பரியத்தை, அதன் காலனித்துவ கடந்தகாலத்தை நுணுக்கமாகவும் வெளிப்படையாகவும் சுட்டிக்காட்டி, பார்வையாளரை அதன் உலகில் ஆழமாக மூழ்கச் செய்கிறது “த்ரிகால்”. ஓர் இலக்கியப்படைப்பையொத்த தனித்துவமான பிரதிபலிப்பை பார்வையாளர்க்கு வழங்குவதாலேயே மறைந்த இயக்குனர் ஷியாம் பெனகல் இயக்கிய முக்கியமான படங்களுள் ஒன்றாகிறது “த்ரிகால்”. அவரின் வழக்கமான கூட்டாளிகளாகிய ஸ்மிதா பாடில், ஓம் புரி, ஷபானா ஆஸ்மி போன்றோர் இப்படத்தில் நடிக்கவில்லையென்பது கூடுதல் தகவல். நசீருத்தின் ஷா மட்டும் ஒரே ஒரு காட்சியில் தோன்றுகிறார்.
