Tag: அமைதி

  • ஆன்மாவைப் பற்றி

    இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்).

    மேலிருந்து இங்கு வந்து இறங்கியது,
    அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா

    இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில்
    தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது

    அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றன
    கூண்டோ வலிமையானது!

    அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை,
    உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்து
    அது முடக்கப்பட்டுள்ளது.

    அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம் இது,

    திரை விலக்கப்பட்டு, மகிழ்ச்சியுடன் முணுமுணுத்தவாறு
    விழித்திருக்கும் கண்களால் காண முடியாதவற்றை நோட்டம் விடுகிறது

    புகழ்க்கீதம் பாடி உயரங்களுக்குத் திரும்புகிறது
    உலகில் இருந்தவரை மறைக்கப்பட்டவைகளை உணர்ந்தவாறே திரும்பினாலும் அதன் உடையில் கறைகள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.

    இத்தனை உயரத்தில் இருந்து அது ஏன் அவ்வாறு வீசப்பட்டது
    இருண்ட, மந்தமான, ஆழ்ந்த அடித்தளப் பள்ளத்திற்கு?

    ரம்ஜான்போஸ்ட் : 3/3/2025

  • நானுந்தான்

    சமகால நிகழ்வுகளைப் பற்றி அதிகம் என் வலையில் எழுதியதில்லை. ஒரே ஒரு முறை எழுதியிருக்கிறேன். நெல்சன் மாண்டேலா காலமான போது எழுதிய பதிவு அது. அதற்கு பலவருடம் முன்னர் என் நெருங்கிய நண்பன் ஒருவன் அகாலமாக இறந்த போது எழுதியது. மாண்டேலா ஓர் ஆதர்சம். அவர் இறப்பை மானிடத்தின் இழப்பாக நோக்கினேன். நண்பனின் மரணம் ஏற்படுத்திய துயர் எழுத்து வடிகாலைத் தேடியது. மாண்டேலா, நண்பன் – இருவரின் மறைவு ஏற்படுத்திய பாதிப்பின் மனத்துயர் போலில்லாமல் இந்த சமகால நிகழ்வு பற்றிய பதிவு எழுதுவதன் நோக்கம் மானசீக குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி வைப்பதே.

    சமூக வலைதளங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த பிரச்சனையை மிக அருகில் இருந்து என் அலுவலக சூழலில் கவனித்திருக்கிறேன். அவற்றை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நொய்டாவில் சில வருடங்களுக்கு முன்னால் வேலை பார்த்த சமயத்தில் என் உயர் அதிகாரியினுடைய காரியதரிசியின் அனுபவங்கள், அதே நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருந்த ஒரு பெண் மேலாண்மை இயக்குனரின் கண்ணில் பட்டு அவரின் உதவியாளராக்கப்பட்டு அதிக சம்பளம் என்ற மகிழ்ச்சி ஒரு வாரம் மட்டுமே நிலைத்து நிற்க கிழிந்த உடைகளுடன் அவள் அழுது கொண்டே ஓடிப் போனதை அனைவரும் பார்த்த நிகழ்வு, மேலும் பல வருடம் முன்னர் புனாவில் வேலை பார்த்த ஒரு குட்டி நிறுவனத்தில் பத்தொன்பது வயது பெண் ஊழியரை தன் காதலி என்று வருவோர் போவோருக்கெல்லாம் சொல்லிக் கொண்டு அவளின் பெயருக்கு களங்கம் விளைவித்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர்….அகமதாபாதில் வேலை பார்த்த நாட்களில் நண்பன் ஒருவன் வேலை பார்த்த நிறுவனத்தில் ஓர் அழகான தமிழ்ப்பெண்ணை தன் சொந்த பண்டமாக உபயோகித்த அந்த நிறுவன முதலாளி…..இத்தகைய நிகழ்வுகள் என் நினைவில் திரும்ப வந்து என்னை இந்நாட்களில் குற்றவுணர்வில் மூழ்கடித்திருக்கின்றன. அமைதி. அதுதான் நான் செய்த குற்றம். தட்டிக் கேட்க முடியா கோழைத்தனம் நம்மை நாம் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை நம்மிடமிருந்து பறித்து விட்டிருக்கிறது. அந்த மீ டு செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் மகளிர் பட்ட வலியை ஆண் வர்க்கத்தின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் vicarious-ஆக உணர முயல்வார்களா? மேற்சொன்ன படியான நிகழ்வுகள் நடக்குமெனின் அதை கேள்வி கேட்கும் தைரியத்தை ஆண்கள் வளர்த்துக் கொள்வார்களா? வேலையிடத்தில் மகளிரை பாலியல் ரீதியாக நோக்குவதையோ பாலியல் இச்சைகளை பிரஸ்தாபிப்பதையோ அதற்கென அதிகாரத்தை அஸ்திரமாக பயன்படுத்துவதையோ எண்ணிக் கூடப் பார்க்காதவனாக இருப்பேன் என்ற பிரதிக்கினையை ஒவ்வோரு ஆண்மகனும் ஏற்றுக் கொள்வானா? வெறும் வாய்வார்த்தையில் மட்டுமில்லாமல் தன் நடத்தை வாயிலாகவும் பெண்களுக்கு எப்போதும் மரியாதை செலுத்துபவனாக ஆண்கள் இயல்பு மாற்றம் கொள்வார்களா?

    பாலியல் துன்புறுத்தலில் நான் பங்கேற்றிருக்கிறேனா? இந்த கேள்விக்கு பதில் இல்லையென்பதாக இருக்கலாம். ஆனால் அமைதி காத்திருக்கிறேன். இல்லையென்று சொல்ல முடியாது. அன்று காத்த அமைதி என்னையும் அந்த துன்புறுத்தல்களில் பகுதி-பங்கேற்பாளன் ஆக்கியிருக்கிறது. ஆம். குற்றவாளிதான். நானுந்தான்.

  • தைரியம், அமைதி, நம்பிக்கை

    How to Have Courage Calmness And Confidence - Paramahansa Yogananda

    வெற்றி, ஆரோக்கியம் மற்றும் விவேகம் – இவைகள் ஆன்மாவின் இயற்கைக் குணங்கள். பலவீனமான சிந்தனைகளுடனும் பழக்கவழக்கங்களுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் மனதை ஒரு நிலைப்படுத்துதல், விடாமுயற்சி மற்றும் தைரியம் – இவற்றின் பற்றாக்குறைகளுமே வறுமை, நோய், மற்றும் இன்ன பிறவற்றால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணங்களாகும்.

    உன் வெற்றிக்கான மனத்திறனை அச்ச எண்ணங்கள் கொண்டு நீயே முடக்கி விடுகிறாய். வெற்றியும், உடல்-மன பூரணத்துவமும் மனிதனின் உள்ளார்ந்த பண்புகளாகும் ஏனெனில் அவன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான். தன் பிறப்புரிமைக்கு பாத்தியதை ஆவதற்கு, முதலில் அவன் தன்னுடைய வரம்பெல்லைகள் என்று கருதிக்கொள்ளும் கற்பனையை விலக்கிக் கொள்ள வேண்டும்……

    உண்மையான போர்வீரன்
    நன்மை பயக்கும் மாறுதல்களை தைரியமாக தழுவிக்கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களுக்கான நம்பிக்கைகள் தோல்விப்பயத்தால் எதிர்க்கப்படும் வரை, மனம் ஒரு போதும் அமைதியில் அமையாது. எனவே, மாறுதல்களை ஏற்பது மட்டுமே வாழ்வின் ஒரே மாறிலி. நமது வாழ்க்கை வெற்றி- தோல்விகளின், நம்பிக்கை-ஏமாற்றங்களின் முடிவிலா ஊர்வலம். ஒரு கணம், சோதனகள் எனும் புயற்காற்றால் நாம் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறோம் ; சில கணங்களுக்குப் பிறகு, சாம்பல் நிற மேகங்களை வெள்ளிக் கோடுகள் வெளிச்சப்படுத்துகின்றன ; திடீரென்று வானம் மீண்டும் நீல நிறம் கொள்ளுகிறது.

    அறிவார்ந்த கோட்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டே வாழ் நாட்களை வீணடித்து சாய்வு-நாற்காலியில் அமர்ந்து “தேடுபவனுடன்’ ஒப்பு நோக்கப்படும்போது, உண்மையாக தேடுபவன் தன் முன்னால் இருக்கும் கடின உழைப்பில் மனம் தேற்றிக் கொள்கிறான். உண்மையான போர்வீரன், அச்சமாக இருந்தாலும், தன் கை தேவைப்படும்போது தைரியமாக போர்க்களத்தில் குதிக்கிறான். ஆல்ப்ஸ் மலையின் உயரங்கள் நெஞ்சில் கலக்கமேற்படுத்தினாலும், மலையேறுபவன் உறுதியுடன் உயரங்களை அடையும் முயற்சியில் ஈடுபடுகிறான். உண்மை-தேடுபவன் தனக்கு சொல்லிக்கொள்கிறான் : “பூரணத்துவம் அடையும் பணி எவ்வளவு கடினமானது என்பதை நான் அறிவேன். ஆனால். அதற்காக என் எல்லாவற்றையும் நான் அளிப்பேன். கடவுளின் உதவியால், இக்காரியத்தில் நான் வெற்றி அடைவேன்” ஆழ்ந்த தினசரி தியான முயற்சிகளால் சதை-நணவுணர்ச்சியை கையகப்படுத்தி, மறந்திருந்த உள்ளுறை தெய்வீக ஆனந்தமெனும் விழிப்புணர்வை மீட்டெடுக்கிறான்.

    பக்தனே, மனம் தேற்றிக்கொள். அதீதப்புலனின்பம், தோல்வி, ஏமாற்றங்களினால் உண்டான வறட்சிக் காலத்தில் எத்துணை பிளவுகளையும் வறட்சியையும் உன் இதயத்தின் மண் கொண்டிருந்தாலும், உள்ளார்ந்த நற்கருணையின் அமைதி பெருக்கினால் நீர் பட்டு மென்மையாகும். வதங்கிப் போன உன் ஆன்ம உற்சாகம் புதுப்பிக்கப்படும். ஒரு முறையாவது கடவுள் நற்கருணையின் திராட்சை ரசம் அருந்து. ஆர்வமிகுந்து ஆன்மீக தளத்தில் நீ தினமும் புதுப்பிக்கப்பட்ட ஆன்ம உணர்வெனும் மண்ணில் உழைத்து, ஆன்ம வெற்றி எனும் விதைகளை விதைத்து, அவை தெய்வீக ஆனந்தமெனும் பயிராய் நெடுக வளரக் காண்பாய். தொந்தரவு என்று நீ கருதும் எதையாவது எதிர்கொள்ளுகையில் ஊக்கமிழந்து, தோற்கடிக்கப்படுவதற்குப் பதிலாக நீ கற்றுக்கொள்ள வேண்டியதை என்னவென்று காணவும், சவாலை சந்திக்க தேவையான பலத்தையும் விவேகத்தையும் அதிகப்படுத்தவும் ஒரு சந்தர்ப்பத்தைத் தந்த பரம பிதாவிற்கு நன்றி செலுத்து.

    வாழ்வின் சோதனைகளை மகிழ்ச்சியுடனும் தைரியத்துடன் சந்திக்கும் போது தான் கருமச்சுமைகள் குறைகின்றன. எதற்காவது உன் பயம் இன்னும் தொடருமானால், நீ கருமவினைகளிலிருந்து விடுபடவில்லையென்றே அர்த்தம். கருமத்தை சிதறடிக்க, நீ சந்திக்க வேண்டிய சோதனைகளை தவிர்க்க முயலாதே. கடவுளின் ஆனந்தம் நிறை அகத்தினுள் வசிப்பதன் வாயிலாக சோதனைகளிலிருந்து தைரியமாக மேலேழு.

    தைரியம் பெற சில உறுதிமொழி
    கஷ்டங்கள் போல் தோன்றுகிறவற்றை சமாளிக்க தேவையான தைரியமும், பலமும் அறிவுத்திறனும் எல்லா கணங்களிலும் உன்னிடம் இருக்கிறது. மனதளவில், உடலளவில் அசைவற்று இரு ; சமநிலை நிலவும் உன் உள்ளுறை மையத்தில் ஓய்வெடு ; அங்கு உன் பரம பிதவுடன் தொடர்புறவில் இரு. அவர் உனக்கு வழி காட்டுவார்.

    கடவுள்-அமைதியெனும் மாறாத உள் நினைவில், நான் முதலில், கடைசியில், எல்லா நேரங்களிலும் பாதுகாப்பை தேடுவேன்.

    நல் மனசாட்சியெனும் கொத்தளத்தில் நான் பாதுகாக்கப்படுகிறேன். என் பழைய இருட்டை நான் எரித்து விட்டேன். என் கவனமெல்லாம் என் இன்றைய ஒரு நாளில் மட்டும் தான்.

    எல்லாப் பிர்சினைகளுக்கும் ஒரு சரியான தீர்வு உண்டு. இத்தீர்வினைக் காணும் விவேகமும் அறிவுத்திறனும், அதை முன்னெடுத்துச் செல்லும் பலமும் தைரியமும் என்னுள் உண்டு.

    கடவுள் என்னுள்ளிலும் என்னைச் சுற்றியும் இருக்கிறார் ; என்னைக் காக்கிறார். எனவே, அவருடைய வழிகாட்டும் ஒளியை அடைத்து என்னை தவறெனும் குழியில் விழ வைக்கிற பயமெனும் பேரிருட்டை வெளியேற்றுவேன்.

    இரகசிய பயம் பதற்றத்தையும் கவலையையும் உருவாக்குகிறது ; இறுதியான வீழ்ச்சியையும் தருகிறது. நம்முடைய திறமையில் நமக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும் ; சரியான காரணத்தின் வெற்றியிலும் நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த குணங்களைப் பெற்றிருக்காவிடில், எண்ணக்குவிப்பின் மூலமாக நம் மனதில் அவற்றை நாமே உருவாக்க வேண்டும், உறுதியான, நீண்ட, தொடர்ந்த பயிற்சியினால் இதை சாதிக்க முடியும்.

    முதற்கண், நம்முடைய குறைகளை நாம் கண்டறிய வேண்டும். உதாரணத்திற்கு, நமக்குள் மனத்திண்மைக் குறைபாடு இருக்குமானால், அக்குணத்தின் மேல நம் எண்ணத்தைக்குவிப்போம் ; பிரக்ஞை மிகுந்த முயற்சிகளினால், நம்முள் மனத்திண்மையை நம்மால் பெருக்க முடியும்.

    பயத்திலிருந்து நம்மை நாம் விடுவிக்க விரும்பினால், தைரியம் என்ற குணத்தின் மேல் நாம் தியானம் செய்ய வேண்டும் ; குறுகிய காலத்தில், பயமெனும் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுதலை பெற்று விடுவோம். எண்ணக்குவிப்பு மற்றும் தியானம் மூலம், நம்மை நாம் ஆற்றல் மிக்கவராகவும், கவனத்தை குவிக்க இயல்பவராகவும் நம்மை ஆக்கிக் கொள்ள முடியும். தொடர்ந்த பயிற்சி ஒரு முயற்சியும் இன்றி ஒற்றைப் பிரசினையின் மேல் நம் எல்லா ஆற்றலையும் குவித்தலை சாத்தியமாக்கும். இது நம்முடைய இரண்டாவது இயல்பாகவும் மாறி விடும். இப்புது குணத்தை பெற்றிருப்பதன் வாயிலாக, பொருள் மற்றும் ஆன்மீக இலக்குகளை நம்மால் எளிதில் அடைய முடியும்.

    துக்கம் புறநிலை இருப்பு இல்லாதது. வாய்மொழி வழி தொடர்ந்து பிரஸ்தாபிப்பதன் மூலம், அது இருக்கிறது. உன் மனதில் அதை மறுதளித்தால், அது இல்லாமல் போகிறது. இதை நான் ’ஹீரோயிஸம்’ என்பேன் ; அவனுடைய தெய்வீக அல்லது மூல இயற்கை என்பேன். துக்கத்திலிருந்து விடுதலை பெறுதற்கு, மனிதன் தன்னுடைய ”ஹீரோயிஸம்” மிகுந்த சுயத்தை வெளிப்படுத்துதல் அவசியம்.

    ஒரு சாதாரண மனிதனுள்ளில் “ஹீரோயிஸம்” மற்றும் தைரியத்தின் பற்றாக்குறையே துக்கத்தின் ஆணிவேர். ”ஹீரோயிஸத்தின்” கூறு ஒருவனின் மனத்தில் குறையும் போது, கடந்து செல்லும் துக்கங்களுக்கு அவன் மனம் எளிதில் இணக்கமானதாக ஆகிறது. மனதின் வெற்றி வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை தருகிறது ; மனதின் தோல்வி துக்கத்தை தருகிறது. ஒவ்வொரு மனிதனுள்ளும் வெற்றிவீரன் விழித்திருக்கும் வரை, ஒரு துக்கமும் அவனுடைய இதயத்தை தொட இயலாது.

    தொடர்ச்சியான பிரசினைகளை தோற்கடிப்பதைத் தவிர இவ்வாழ்க்கை ஒன்றுமில்லாதது. உன் கையில் தீர்வுக்குக் காத்திருக்கும் ஒவ்வொரு பிரசினையும் வாழ்க்கை உனக்கு விதித்திருக்கும் கட்டாயக் கடமையாகும். ஒரு தனி மனிதன் சூழ்நிலையின் மட்டத்துக்கு கீழ் மூழ்கும் போது, கெட்ட நேரத்தின் பாதிப்புக்கு சரணடைகிறான். அவனுள் பொதிந்திருக்கும் வீர தைரியத்தின் உதவியால், சூழ்நிலையைத் தாண்டி அவன் எழும்பொழுது, வாழ்வின் அனைத்து நிலைகளும், அவை எத்தனை அச்சுறுத்தும் படியாக இருந்தாலும் பனிப்போர்வை விலகி வானிலிருந்து எட்டிப்பார்க்கும் இதமான சூரிய ஒளி போன்றதாக இருக்கும். சாதாரண மனிதனின் துக்கங்கள் வாழ்வு நிலைகளின் உள்ளார்ந்தவை அல்ல. அவைகள் மனித மனத்தின் பலவீனங்களிலிருந்து பிறப்பவை.உன்னுள்ளிருக்கும் வெற்றிவீரனை விழித்தெழ வை; உன்னுள் உறங்கும் வீரனை தட்டி எழுப்பு;ஒரு துக்கமும் உன் சாளரத்தை இருட்டாக்காது.

    [Translation of Excerpts from the Book “How to have Courage, Calmness and Confidence” By Paramahansa Yogananda, Publisher : Ananda Sangha Publications]