Tag: அடிப்படை

  • ஈஸ்வரப்பிரம்மம்

    கீதையின் பனிரெண்டாம் அத்தியாயத்தின் முதலாம் சுலோகம் அர்ஜுனனின் கேள்வியிலிருந்து தொடங்குகிறது. எல்லோருக்கும் இருக்கும் சந்தேகந்தான் அர்ஜுனன் வழியாக வெளிப்படுகிறது. இருவகையான வழிபாடுகள் உள்ளன. முதல் வழி – உருவத்துடன் விளங்கும் ஈஸ்வரனின் வழிபாடு. அடுத்த வழி – சுத்தப்பிரம்மத்தின் வழிபாடு. எதை வணங்குவது சிறந்தது? விஷ்ணு என்ற பெயருடன் பாற்கடலில் துயின்று கையில் சங்கு, சக்கரம் ஏந்தியவரும் நீலமேனி உடைத்தவருமானவரைக் கும்பிடுவது சிறந்ததா? அழிக்க முடியாததும் கண்ணில் தென்படாததுமாய் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை வழிபடுவதா? எது சரியான வழி?

    அர்ஜுனன் கேட்ட வினாவிற்கு கிருஷ்ணர் விடையளிக்கிறார். அவருடைய பதில் தெளிவாக எந்த விதக் குழப்பமில்லாமல் இருக்கிறது. சுற்றிவளைத்தும் உருவகங்களில் ஒளித்துவைக்காமலும் இருக்கிறது.

    “என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய், உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவரோ, அவர்களே யோகத்தில் சிறந்தாரென நான் கருதுகிறேன். “

    உருவத்துடன் விளங்கும் ஈஸ்வரனை வணங்குதல் சிறந்த வழிபாடு என்று குறிப்பிடுகிறார் கிருஷ்ணர். உருவமற்ற பரம்பொருளை வணங்குவது தவறாகுமா? இல்லை. அடுத்து வரும் இரண்டு சுலோகங்களில் அதையும் கூறிவிடுகிறார்.

    “அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), எங்கும் நிறைந்ததும், கருதொணாததும், நிலையற்றதும், அசைவற்றதும், உறுதி கொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ, இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தியுடையோராய், எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்.”

    அப்படியென்றால் முதல் வழி ஏன் சிறந்தது? இரண்டு வழிகளுமே ஒரே இலக்கை அடைகின்றன எனில் ஒரு வழியை சிறப்பானது என்று பகவான் ஏன் குறிப்பிடுகிறார்? “’அவ்யக்த’த்தில் மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம்”. என்கிறார். ஈச்வர வழிபாடு போன்று சுத்தப் பிரம்மத்தை தியானிப்பது அவ்வளவு எளிதாக கைவரக்கூடியதன்று. “எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு, பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவரோ, என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரண சம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்.” என்று கூறி ஈஸ்வர வழிப்பாட்டை பகவான் முதன்மையானதாக்குகிறார்.

    பகவத் துதியை பக்தி யோகத்தை முதன்மைக்கு கொண்டு வந்த சமய நூல்களில் ஆதி நூல் பகவத் கீதை. இன்று ஒவ்வோர் இந்துவும் தமது இல்லங்களில் கோயில்களில் பின்பற்றும் கடவுள் வணக்க முறைக்கு இறையியல் அடிப்படையை அளிக்கும் சுலோகங்கள் மேல் சொன்னவை.

    சுத்தப் பிரம்மத்தை தியானிப்பதில் என்ன சிரமம்? உருவமற்ற பிரம்மத்தை தியானிப்பவர்களும் உயர்ந்த வீடுபேறை அடைவார்கள் எனினும் அதை அடையும் வழிகளில் அவர்கள் சிரமங்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள் முயற்சி போட வேண்டிய முயற்சி இரட்டிப்பாக்கிறது. அழியாத பிரம்மத்தின் மீது அல்லது ஆத்மன் மீது அர்ப்பணிப்புடன் தியானத்தில் ஈடுபடுபவர்கள் ஈஸ்வரனுக்குச் சொந்தமான, எங்கும் நிறைந்திருத்தல், பாவங்களற்ற தன்மை முதலான இறைகுணங்களை தமது சுயத்தின் / ஆத்மாவின் மீது சுமத்தி, பின்னர் அந்த ஆத்மாவை தியானிக்க வேண்டியுள்ளது. உருவமற்ற பிரம்மத்தை தியானிக்கும் வழிபாட்டுடன் ஒப்பிடுகையில் எட்டு இறைகுணங்களை ஈஸ்வரன் மீது உருவகப்படுத்தும் ஈச்வர வழிபாடு செயல் திறன் வாய்ந்தது.