Category: Short Stories

  • சேறும் கழிப்பிடமும்


    சேறு

    சேறில் விழுந்த அனுபவம் ஒன்று அண்மையில் ஏற்பட்டது. அலுவலகம் முடிந்து மெட்ரோ ரயில் நிலையம் வரை ஆட்டோ ரிக்‌ஷாவில் செல்வது வழக்கம். என்றுமில்லாத அதிசயமாக ஒரு மாலையில் கேட்-டுக்கருகில் என் அதிகாரி என்னை தன் காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். அவர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் விட்டு விடுவதாக திட்டம். வழக்கமாக அவருடைய காரில் பயணிக்கும் செகரட்டரி ஷிகா அன்று வேலைக்கு வராததால், இப்பாக்கியம் எனக்கு கிடைத்தது.

    செக்டர் 55-ஐ அடைய இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று NH-8 வழியாக மானேசர் டால், ஹீரோ ஹோண்டா சௌக், ஜர்சா ஜங்ஷன்…பிறகு சிக்னேச்சர் டவரிலிருந்து வலப்புறம் திரும்பி கால்ஃப் கோர்ஸ் ரோடு வழியாக செக்டர் 55-ஐ அடைவது. இன்னொன்று, மானேசர் டால் தாண்டியவுடன் ராங் சைட் எடுத்து வலப்புற சர்வீஸ் ரோடில் நுழைந்து நூறடி தாண்டிய பிறகு வலப்புறம் செல்லும் காட்டு வழியாக செல்வது.

    “காட்டு வழி” என்றால் நிஜமாகவே காடு அல்ல. காடு மிக சீக்கிரமாகவே நகரமாகிக் கொண்டிருந்தது. அங்கும் இங்குமாக ராட்சத கட்டிடங்கள் முளைத்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் பாதை மட்டும் மண் பாதைதான். இந்தியாவின் சில பிரபலமான கட்டிட நிறுவனங்களின் ஆடம்பர அபார்ட்மெண்டுகள் வானத்தை தொட்டன. பாதைகளோ, கடைகண்ணிகளோ இல்லாத இடத்தில் யார் வீடுகளை வாங்குவார்கள் என்று எனக்கு தோன்றிய கவலை கட்டிட நிறுவனங்களுக்கு இருந்ததாக தெரியவில்லை.

    மண் பாதைக்குள் நுழையும் வரை அலுவலகத்தின் என் சக ஊழியர்களை பற்றி ஏதேனும் வம்பை என் வாயிலிருந்து வரவழைக்கும் எண்ணத்தில் வேண்டுவிடை தரும் வினாக்களாக கேட்டுக் கொண்டு வந்தார் பாஸ். நான் மசியவில்லை. ஷார்ட்-பிட்ச் பந்துகளுக்கு தலையை குனியும் பேட்ஸ்மேன் போல எந்த விடைகளையும் தராமல் சமாளித்தேன்.

    நான் சேறு என்று சொன்னது பாஸின் காரில் சேர்ந்து பயணம் பண்ணுவதை குறிக்கும் உருவகமாக என்று நினைத்திட வேண்டாம். புதர்களாக மண்டிக்கிடந்த ஒரிடத்தில் மூன்று மண் பாதைகள் பிரிந்தன. நன்றாக இருட்டிவிட்டிருந்தது. பாஸ் அமைதியாக என்னைப் பார்த்தார். நான் ஒன்றும் சொல்லவில்லை. வலப்புறமாக பிரிந்த பாதையில் வண்டிகள் சென்ற தடங்கள் தெரிந்தன. டக்கென்று பாஸ் காரை அந்த பாதையில் திருப்பினார் (வீசினார் என்று தான் சொல்ல வேண்டும்!). பாதை இறங்கியது. இல்லை…பாதை இல்லை. கார் இறங்கியது. இருட்டு காரணமாக மண்ணில் படிந்திருந்த ஈரம் தெரியாமல் போனது. காரின் டயர் ஈர மண்ணில் புதைந்தது. கார் முன்னாலும் செல்லவில்லை. பின்னாலும் செல்லவில்லை. பாஸ் குற்றவுணர்வுடன் பார்த்தார்.

    நான் இறங்க எத்தனித்தேன். ஜவ்வு மாதிரி ஏதோவொன்றில் என் ஷூ ஒட்டியது. நான் ஒரு சகதியில் இறங்கியிருக்கிறேன். இரண்டு ஷூவும் ஆழ மண்ணில் பதிந்திருந்தன. நான் மிகுந்த விசையுடன் ஒரு காலை எடுக்க முயற்சித்த போது சாக்ஸ் அணிந்த பாதம் மட்டும் வெளி வந்தது. உடல் சமநிலை தவறி சாக்ஸ் அணிந்த ஒற்றைக் காலை சேற்றிலேயே வைக்க வேண்டியதாகிவிட்டது. கால் சேற்றில் மூழ்கா வண்ணம் காக்கிறவன் போல் என் கையை காலிடம் கொண்டு போவதற்காக குனிகையில் மீண்டும் ஒரு சறுக்கல். சேற்றிலேயே விழுந்து என் புட்டம் சேறில் உட்கார்ந்துவிட்டது. சுதாரித்து எழுந்து நின்றேன். கழண்டு போன ஷூவை கையில் எடுத்தேன். ஸ்லோ-மோஷனில் மெல்ல சேறை விட்டு வெளியே வந்தேன்.

    தர்ம சங்கடத்துடன் பாஸ்-சை நோக்கினேன். பாஸ் நான் சேறில் விழுந்ததை கண்டு கொள்ளவில்லை. அவர் டிரைவர் சீட்டில் இருந்து இறங்கி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார். அவர் இறங்கிய பக்கத்தில் சேறு இருக்கவில்லை. சேறுக்குள் வண்டியை ஒட்டிச் சென்றாலும் சேற்றில் காலை வைக்காமல் அவர் இறங்கிவிட்டார். அவர் வீட்டு வாட்ச்மேன் ஒரு ஜீப்பை அனுப்பினான். இரும்புச் சங்கிலியைக் கட்டி ஜீப்பால் கார் பின்னால் இழுக்கப் பட்டது. செக்டர் 55 வந்தடைந்ததும் நான் காரில் இருந்து இறங்கினேன். சேறு பூசிய கால் சட்டையுடன் மெட்ரோ ஸ்டேஷனுக்குள் நுழைய அவமானமாக இருந்தது. ரேடியோ கேப் ஒன்றை பிடித்து வீடு வந்தடைந்தேன் (டாக்ஸி ஃபேர் : 800 ரூபாய்). கேப் டிரைவர் இறங்கும் போது நான் உட்கார்ந்திருந்த சீட்டில் பூசியிருந்த மண்ணைப் பார்த்து முணுமுணுத்தான். வீட்டில் மனைவி ”என்ன அசிங்கம் பண்ணிட்டு வந்திருக்கீங்க?” என்று சத்தம் போட்டாள்.

    சுத்தமாக குளித்து விட்டு ஷுவில் ஒட்டியிருந்த சகதியை நீக்க ஆரம்பித்தேன். ஒருவாறு ஷூக்களை சுத்தம் செய்த பின்னர், ’நாளை ஷிகா ஆஃபீசுக்கு வந்தால் தேவலை’ என்ற எண்ணம் ஓடியது. ஷிகாவுடன் போகும்போதும் பாஸ் இன்று வந்த காட்டுப் பாதை வழியாகத்தான் போவாரா?


    கழிப்பிடம்

    குஜராத்தில் உள்ள ஒரு பெரிய கூட்டுறவு நிறுவனத்துக்கு நாங்கள் சப்ளை செய்திருந்த சாக்கலேட் சுவை தரும் வாசனைப் பொடியை தரப்பிரச்னை காரணமாக நிராகரித்து விட்டார்கள். ஃபோனில் நன்கு டோஸ் அளித்துவிட்டு நேரில் வாருங்கள் என்று வாடிக்கையாளர் ஆணையிட்டார். அடுத்த நாள் காலை குஜராத் கிளம்பிப் போனேன். நான் செய்த தவறு – குஜராத் செல்கிறேன் என்று முன்னரே இதைப் பற்றி பாஸுக்கு சொல்லாதது. இதனால் பாஸ் ரொம்ப கோபம் அடைந்து விட்டார். நான் வாடிக்கையாளரின் வசவுகளை நேரில் வாங்கிக் கொண்டிருக்கும் போதே ஃபோன் மூலமாக பாஸின் திட்டுகளையும் கேட்டுக் கொண்டிருந்தேன். மாதமொரு முறை லண்டன் தலைமை அலுவலகத்துடன் நிகழும் மாதாந்திர பிசினஸ் ரிவ்யூ டெலி-கான்ஃபரென்ஸ் நடக்கும் தினம் பார்த்து நான் குஜராத் போனது தவறு தான். கஸ்டமர் ஆணையிட்டாலும் அதிகாரின் ஆணை தானே முதன்மையானது. மீட்டிங் முடிந்தவுடன் உடன் அடுத்த விமானத்திலேயே தில்லி திரும்ப வருமாறு அறிவுறுத்தப்பட்டேன்.

    ஏற்கெனவே செய்திருந்த முன்பதிவை மாற்றினேன்; மதியம் இரண்டு மணி கிளம்பும் விமானத்தை பிடிப்பதற்காக காரோட்டியை அகமதாபாதை நோக்கி வேகமாக காரை செலுத்தச் சொன்னேன். ஒன்றரை மணி நேரத்தில் காந்தி நகரை எட்டினோம். “சார், நான் கார் ஓட்டும் பணிக்கு புதிதாக வந்தவன். எனக்கு வாந்தி வருகிற மாதிரி தோன்றுகிறது. சில நிமிஷங்களுக்கு காரை நிறுத்தட்டுமா?” என்று கேட்டான் டிரைவர்.

    ஒரு பழைய கட்டிடம் முன்னால் காரை நிறுத்தினான் டிரைவர். “சார் நிம்பு பானி (லெமன் ஜூஸ்”) குடித்து விட்டு வந்து விடுகிறேன்” என்றான். எனக்கும் அடிவயிறு முட்டிக் கொண்டு வந்தது. அவசரமாக போக வேண்டும். நானும் காரில் இருந்து இறங்கி,கழிப்பிடம் எங்காவது இருக்குமா என்று பார்த்தேன். வாயில் வெற்றிலையை குதப்பிய வண்ணம் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்த ஒருவரை கேட்டேன். “இக்கட்டிடத்தின் உள்ளே படிக்கட்டுகளுக்கு பக்கத்தில் இருக்கும்” என்றார்.

    நான் வேகமாக கழிப்பிடத்தை அணுகினேன். ஒரே இருட்டாக இருந்தது. லைட்டை போட மாட்டார்களோ? யூரினல்கள் கூட தெரியவில்லை. அவ்வளவு இருட்டு. வேறு கழிப்பிடத்தை தேடி போகலாமா என்று ஒரு நொடி யோசித்தேன். சிறுநீர் தானே கழிக்க வேண்டும்! இதற்கு லைட் எதற்கு? குத்து மதிப்பாக ஒர் இடத்தில் நின்று கொண்டு ஜிப்பை திறந்து சிறுநீர் கழிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் குப்பென்று அடித்தது துர்வாசனை. வயிற்றை குழப்பிக் கொண்டு வந்தது. ஒரே சிறுநீர் நாற்றம். கழித்துக் கொண்டிருக்கிற சிறுநீரை நிறுத்த முடியாதே! இரண்டு மணி நேரம் காரில் ஏ சி யில் பயணித்த காரணத்தினாலோ என்னவோ, சிறு நீர் வந்து கொண்டே இருந்தது. வாந்தி எடுக்கிற உணர்வு முட்டியது. நெடுநாளாக சுத்தம் செய்யப்படாத அக்கழிப்பிடத்தின் துர்வாசனையில் திக்குமுக்காடிப்போனேன். சிறு நீர் கழித்து முடித்தவுடன் அவசரமாக ஜிப்பை போட்டுக்கொண்டு வெளியேறும் தருணத்தில், திடீரென்று லைட் எறிய ஆரம்பித்தது. மின்சாரம் திரும்பியிருக்கக் கூடும். மிகச் சில வினாடிகளுக்கு ஓட்டையான யூரினல்களையும் வடியாமல் தேங்கிக் கிடந்த சிறுநீர் வெள்ளத்தையும் பார்த்தேன். முடியவில்லை. வாயை அடைத்துக் கொண்டே வெளியே ஓடி வந்தேன். கட்டிட வாசலில் கட்டுப் படுத்த முடியாமல் வாந்தியெடுக்கும் போது என் கைகள் என் வாந்தியால் ஈரமாகியிருந்தன. நான் வாந்தியெடுப்பதை பார்த்து நிம்பு பானி குடித்துக் கொண்டிருந்த டிரைவர் எனக்காக இன்னொரு பாட்டில் நிம்பு பானி வாங்கி வந்தான். அந்த பாட்டிலை நான் கடைசி வரை திறக்கவில்லை. பல மணி நேரங்களுக்கு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ முடியவில்லை.

    பின் குறிப்பு : நான் அனுப்பிய ஒரு சிறுகதை பிரசுரிக்கத் தக்கதல்ல என்று ஒர் இலக்கிய இதழ் திருப்பி அனுப்பி விட்டது. ”off-beat கதைகளை மட்டுமே நாங்கள் போடுகிறோம். எங்கள் இதழில் வெளி வரும் கதைகளை தொடர்ந்து படியுங்கள். எப்படியான கதைகளை எங்கள் எடிட்டோரியல் போர்டு தேர்வு செய்கிறது என்று உங்களுக்கு புரியும்” என்றார்கள். அவ்விதழின் கடந்த பத்து இதழ்களில் வெளியான சிறுகதைகளை ஒன்று விடாமல் வாசித்தேன். அக்கதைகளில் அதிகமாக வந்த தீம்-ஐ குறிச்சொல்லாக வைத்து கதை எழுதுவது என்று முடிவு செய்தேன். அப்படியான ஒரு முயற்சிதான் இந்த இடுகை. அப்பத்திரிக்கையின் இம்மாத இதழில் ஒரு சிறுகதையும் வெளியாகவில்லை. இப்பதிவை நான் முன்னரே எழுதி, அவர்களுக்கு அனுப்பியிருந்தால் ஒரு வேளை வந்திருக்கலாம்.

  • ஒற்றை ரோஜாச்செடி

    பெருநகரமொன்றின் முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த அழகான சிறு ஊர். ஒரு புகைவண்டி நிலையம். ஒரு பேருந்து நிலையம். இரண்டு சினிமா தியேட்டர்கள்!. அவற்றில் ஒன்று ஊருக்கு வெளியே தென்னந்தோப்புக்கு முகப்பில் இருந்த ஒரு டூரிங் டாக்கிஸ். பெரும்பாலும் கறுப்பு-வெள்ளை படங்களே திரையிடப்படும். தீபாவளி – பொங்கலுக்கு மட்டும் வண்ணத்திரைப்படங்கள். சரியாக பராமரிக்கப்படாத நகராட்சி பூங்கா. பூங்காவிற்கு நடுவில் ஒர் அறை. அதற்குள்ளிருக்கும் வானொலிப்பெட்டியில் வரும் ஆறு மணி தமிழ் செய்திகள் பூங்காவில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகள் மூலம் எல்லோரும் கேட்கும் படியாக ஒலி பரப்பப்படும். அவ்வறைக்கு வெளியே நாலா புறமும் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் முதியோர்கள் உட்கார்ந்து செய்திகளை கேட்பார்கள். பூங்காவிற்கு வெளியே ஒரு சாக்கடை தன் குறுகிய கரைகளை மீறி ஓடும். லாங்-ஜம்ப் செய்தபடிதான் பூங்காவிற்குள் நுழைய வேண்டும். ஒரு முனிசிபாலிடி உயர் நிலைப்பள்ளி.. ஒரு சிவன் கோயில். இரண்டு தெருக்களுக்கு ஒன்று என்ற கணக்கில் ஒரு பிள்ளையார் கோயில். மசூதி தெருவில் ஒரு பள்ளிவாசல். ஒரே ஒரு மெயின் ரோடு. இரு புறமெங்கும் மளிகை கடைகள், டெக்ஸ்டைல் கடைகள். எந்நேரமும் மயிர்கூச்செரியும் ஒசை எழுப்பும் மாவு மில். ஒரு ஸ்டேட் பாங்கு கிளை. ஒரு கூட்டுறவு நிலவள வங்கி.

    ரமணியின் வீடு நிலவள வங்கியின் பின் புறத்தில் உள்ளது. சந்து என்றில்லாமல், தெருவும் என்றில்லாமல், சில இடங்களில் குறுகியும் சில இடங்களில் அகன்றும் இருக்கும் சந்து-தெருவில் இருந்தது ரமணியின் வீடு.

    ரமணியின் தாத்தா அக்காலத்தில் வாங்கிய வீடு. வீட்டின் இரு பக்கங்களிலும் மூன்று மாடி கொண்ட வீடுகள் இருப்பதால் ரமணியின் ஹாலும் கிட்சனும் இருள் சூழ்ந்ததாக காணப்படும். வீட்டின் பின்புறம் முக்கால் கிரவுண்ட் அளவுள்ள கொல்லை புறம் இருந்தது. ரமணி இளைஞனாக இருந்த போது தன் நண்பர்களுடன் கொல்லைப்புறத்தில் வாலிபால் விளையாடிக்கொண்டிருப்பான். திருமணமாகிவிட்ட பிறகு வாலிபால் விளையாடுவது நின்றுவிட்டது. எல்லா நண்பர்களும் வேலைக்காக வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டார்கள். ரமணி வேறெங்கும் செல்லத்தேவையில்லாதபடி உள்ளுர் ரயில் நிலையத்தில் புக்கிங் கிளர்க் பணி கிடைத்துவிட்டது. ரமணியின் தாத்தா உள்ளூர் நீதி மன்றத்தில் எழுத்தராக இருந்தார் ; அப்பா தபாலாபீசில் வேலை பார்த்தார் ; இவன் ரயில் நிலையத்தில். தாத்தா, அப்பாவைப்போல ரமணியும் அலுவலகத்துக்கு நடந்தே செல்வான். அப்பாவைப்போல செய்தித்தாள் படிக்காதிருத்தல். இரட்டை சக்கர வாகனம் வாங்காதிருத்தல். ரியல் எஸ்டேட் எதிலும் முதலீடு செய்யாதிருத்தல். ஒரே ஒரு வங்கிக்கணக்கு. சேமிப்பு எல்லாம் சேவிங்ஸ் அக்கவுன்டிலேயே. அப்பாவின் உண்மையான மகனாக இருந்தான்.

    இவன் அப்பா செய்யாத ஒன்றை செய்தான் என்றால் அது ஒன்றுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டதுதான். ரமணிக்கு மூன்று பெண் குழந்தைகள். ஒரு வருட இடைவெளியில் மூன்று பெண்கள். ரமணியின் மனைவி பானு திருமணத்திற்கு முன் பக்கத்து பெரு நகரத்தில் வாழ்ந்தவள்.

    ரமணியின் தந்தையார் சில வருடங்களுக்கு முன்னர் காலமானதிலிருந்து ஒரு பழக்கம் அவனை தொற்றிக்கொண்டது. காலையில் ட்யூட்டிக்கு கிளம்புவதற்கு முன்னரும் ஐந்து ஐந்தரைக்கு வீடு திரும்பிய பிறகும் கொல்லைப்புறத்தில் குளியலறைக்கு பக்கத்தில் ஒரு ஈசிசேரில் உட்கார்ந்து கொல்லையை பார்த்துக்கொண்டிருப்பதை நித்ய கர்மானுஷ்டமாக வைத்துக்கொண்டிருந்தான். அவன் அப்பாவும் அதை செய்வது வழக்கம். குடும்ப பாரம்பரியத்தை தொடர்பவன் போல் அவனும் வேலை நேரம் தவிர மற்றெல்லா நேரத்தையும் கொல்லைப்புறத்தில் அமர்ந்து கடத்தி வந்தான்.

    குழந்தைகள் மூவரும் வயதுக்கு வந்துவிட்ட பிறகு மனைவி பானுவிடம் ஒரு நாள் பேச்சு கேட்டான். ”கையை சேருக்கு மேல போட்டு தினமும் சோம்பல் முறிக்கிறீங்களே? உங்க குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கொஞ்சமாவது கவலைப்படணும்னு தோணுதா? குழந்தைகளை படிக்க வைக்கணும். கல்யாணம் பண்ணி வைக்கணும்னு யோசனை இருந்தால் உருப்படியா நாலு பைசா பார்க்க ஏதாவது செய்வீங்க….ஹ்ம்ம் எல்லாம் என் தலைவிதி… என் தங்கை வூட்டுக்காரரை பாருங்க…மாஸ்கோல வேலை கிடைச்சு போன வாரம் கெளம்பிப்போனாரு. ரெண்டு மாசத்துல தங்கையும் அவள் குழந்தைகளும் கூட கெளம்பிப்போயிடுவாங்க….நீங்க என்னன்னா ரயிலடியும் இந்த கொல்லைப்புறமும் தான் நிரந்தரங்கிற மாதிரி ஒரே மாதிரியா கொஞ்சம் கூட மாத்தமில்லாம புள்ளையாராட்டமா உக்கார்ந்துகிட்டு இருக்குறீங்க…” தன் மனத்தாங்கலை வார்த்தைகளால் வடித்தெடுத்தாள்.

    மனைவியின் வார்த்தைகள் ரமணியை வெகுவாக பாதித்திருக்க வேண்டும். ட்யூட்டி முடிந்ததும் எப்போதும் போல வீடு திரும்பாமல், கால்நடையாக ஒர் இலக்கில்லாமல் எங்கோ நடந்தான். என்றும் இல்லாத மாதிரி சாலையோர டீக்கட்டையொன்றில் தேனீர் குடித்தான். கால் இலேசாக வலிக்க ஆரம்பித்த போது ஊரெல்லையில் இருந்த அய்யனார் கோவிலின் வாசலில் கட்டிட வேலைக்கென கொட்டப்பட்டிருந்த மணலில் அமர்ந்தான். மெயின் ரோட்டில் இல்லாத அமைதியை ரசித்தான். இருட்டிய பிறகு, தன் வீடு நோக்கி நடக்கலானான். பாதத்தில் அணிந்திருந்த ரப்பர் ஸ்லிப்பரையும் தாண்டி ஏதொவொன்று குத்தியது. தெரு விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தபோது, அது ரோஜாச்செடியின் முள்ளென்று தெரிந்தது. ஒற்றை முள்ளில்லை. வெட்டப்பட்ட ரோஜா செடியின் கிளை அது. ரோஜாத்தண்டை கவனமாக கையில் ஏந்திய படி வீடு திரும்பினான்.

    அடுத்த நாள் காலை வழக்கம் போல ஈசி சேரில் உட்காராமல், எதிர்வீட்டுக்காரரிடமிருந்து மண்வெட்டியை இரவல் வாங்கி கொல்லைப்புறத்தில் வளர்ந்திருந்த புற்களையும் களைகளையும் ஒரு ரோஜாத்தண்டை நடும் அளவிற்கு வெட்டியெறிந்தான். கொஞ்சம் நீர் தெளித்து கத்தியால் கொத்தினான். குழி பறித்து முந்தைய நாளிரவு காலில் குத்திய தண்டை நட்டான். மண்ணை மூடி, கொஞ்சம் நீரூற்றினான்.

    நட்ட செடி வேகமாக வளர்ந்தது. இரண்டு மாதங்களில் ஏழு மீட்டர் வளர்ச்சி. பானு “என்னங்க ! இவ்வளவு வேகமா வளருது?” என்றாள். ஆறு மாதங்களானது. ஒரு ரோஜா கூட பூக்கவில்லை. ஸ்டேஷன் மாஸ்டர் ரங்கநாதன் தன் வீட்டில் பெரிய பூந்தோட்டம் வைத்திருக்கிறார். அவரின் ஆலோசனை படி, ”ரோகார்” மருந்தடித்தான். ஒன்றும் பயனில்லை. சில மாதங்களுக்கு பிறகு, செடியின் இலைகளில் துளை விழ ஆரம்பித்தன. ”ஏதாவது நோயாய் இருக்கும்” என்றார் ரங்கநாதன். நோயுற்ற கிளைகளை வெட்டினான். செடியின் உயரம் குறைந்தது. மீண்டும் நெடிந்து வளர்ந்தது. மரமோ என்று வியக்குமளவிற்கு.

    பானுவிற்கு ரமணி எப்படி முன்னரெல்லாம் கொல்லைப்புறத்தில் வெட்டியாக உட்கார்ந்திருந்தது பிடிக்கவில்லையோ, இப்போது அந்த ரோஜாச்செடியிடம் காட்டும் கவனமும் பிடிக்கவில்லை. “என்னங்க ஏதாவது உருப்படியா செய்யலாமில்லையா…காலை மாலைன்னு அந்த மலட்டு ரோஜாச்செடிக்கு மேல இவ்வளவு கவனம் தேவையா?” என்றாள். அன்று மாலையும் அவன் ஊரெல்லை வரை வாக்கிங் போனான். அய்யனார் கோவில் கட்டிட வேலை முடிந்திருக்க வேண்டும். உட்கார மணல் கிடைக்கவில்லை. கொஞ்சம் தள்ளி இருந்த தென்னந்தோப்பு டூரிங் டாக்கீஸ் வரை நடந்தான். மாலை ஷோவுக்கு இன்னும் டிக்கட் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. மூடப்பட்டிருந்த டிக்கட் கௌண்டர் முன் நான்கைந்து பேர் காத்திருந்தனர். தியேட்டர் வாசல் கடையில் இரண்டு கை முறுக்குகளை வாங்கித்தின்றான்.

    இரவு இல்லம் திரும்பியதும் பானுவிடம் சொன்னான் : ”நான் என்ன பண்ணாலும் உனக்கு பிடிக்காமல் இருக்கலாம்….சொல்லு…கேட்டுக்கறேன்..ஆனால் நான் வளர்க்கிற ரோஜா செடியை மட்டும் மலடு என்று சொல்லாதே…அது சீக்கிரமே பூக்கும் பாரு” பானு எந்த ஆர்வத்தையும் காட்டாமல் “சரி சரி சாப்பிட வாங்க” என்றாள்.

    சில நாட்களில் ஒரே காம்பில் இரு மொட்டுகள் முளைத்தன. அதை பார்த்ததும் பானுவிடம் சொல்லிக்காட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. வேண்டாம், பூ வந்ததும் அவளே பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான்.

    ஒரிரு நாட்கள் கழித்து விடியற்காலை பொழுது இயற்கையின் அழைப்பை ஏற்று கொல்லைப்புறம் வந்தபோது ரமணி அந்த அதிசயத்தை கண்டான். இரு மொட்டுகளும் ஜோடி ரோஜாக்களாக பூத்திருந்தன. ஒன்று ரோஸ் நிற ரோஜா. இன்னொன்று கறுப்பு நிற ரோஜா. கறுப்பு ரோஜாவை முதலில் வாடி உதிருகையில் நிறமிழந்த ரோஜாவென்று நினைத்தான். அருகே சென்று லேசாக வருடிப்பார்க்கையில் அது புதிதாக மலர்ந்த இயற்கை ரோஜாவென்று புரிந்தது. ஒரே செடியில் எப்படி இரு நிறத்தில் ரோஜாக்கள் பூக்கும்? இரு வெவ்வேறு நிற ரோஜாச்செடியை ஒட்டுப்போடும் போது ஒரு புது நிறத்தில் ரோஜா பூக்கும். ஆனால் ஒரே செடியில் இரண்டு நிறத்தில் பூக்குமா? இது ஒரே செடியா அல்லது இரண்டு செடிகளா? உன்னிப்பாக அந்த செடியை உற்று நோக்கினான். இல்லை ஒரு செடிதான். அக்கம்பக்கத்தில் ஒரு செடியுமில்லை. ஒரே புற்களும் புதர்களும் மட்டுமே மண்டியிருந்தன.. செடியின் அடி தண்டுகளை நன்றாக பார்த்தான். ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை.

    அன்று மாலை வீடு வந்ததுமே, மூத்தமகள் “அப்பா, அந்த ரோஜா செடியை போய் பாருங்களேன்…ரொம்பவும் அதிசயமா இருக்கு” என்றாள். “ரெண்டு நிற ரோஜாவை சொல்கிறாயா? அதான் காலையிலேயெ பார்த்தமே!” என்றான் ரமணி. ”இல்லப்பா….இது வேற” என்றாள். கொல்லைப்புறம் போய் அவன் கண்ட காட்சி அவனை வியப்பின் உச்சிக்கு தூக்கிச்சென்றது. மலர்களை வண்ணத்துப்பூச்சி மொய்ப்பது புதிதில்லை. இரண்டு மலர் மட்டுமே பூத்திருக்கும் ஒற்றைச்செடியை எத்தனை வண்ணத்துப்பூச்சி மொய்க்கும்? இரண்டு? மூன்று? பத்து? இருபது? நூறு? ரமணி வளர்த்த இருநிற ரோஜாச்செடியை விதவிதமான நிறத்தில் எண்ணிலடங்கா வண்ணத்துப்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன. அவன் பார்வை உறைந்துபோனது. இப்படி ஒரு திருஷ்யத்தை அவன் திரைப்படங்களில் கூட கண்டதில்லை. பானுவும் கூட மௌனமாகிவிட்டாள். முழுக்குடும்பமே ரோஜாச்செடியையும் அதைச்சுற்றி மொய்த்த ஏராளமான வண்ணத்துப்பூச்சிகளை பார்த்துக்கொண்டிருந்தது.

    ரமணியின் பள்ளி தினங்களில் மூன்று பட்டையான நீளக்கண்ணாடிகள், வண்ண கண்ணாடி வளையல் துண்டுகள் மற்றும் அட்டைகள் கொண்டு கலைடாஸ்கோப் செய்வான். ஒற்றைக்கண் கொண்டு கலைடாஸ்கோப்புக்குள் பார்க்கும்போது வளையல் துண்டுகள் உருண்டும் கண்ணாடிப்பட்டைகளில் பிரதிபலித்தும் பல்வேறு நிற வடிவங்களைக்காட்டும். அதிசய ரோஜாச்செடியை மொய்க்கும் பல்லாயிரம் வண்ணத்துப்பூச்சிகளும் அத்தகையதொரு விளைவைத்தான் பார்ப்பவரின் கண்களுக்கு தந்துகொண்டிருந்தன.

    பூத்திருந்த ஒரு ஜோடி மலர் உதிர்ந்த பிறகே அடுத்த ஜோடி மலர் பூத்தது. ஒரே சமயத்தில் ஒரு ஜோடிக்கு மேல் பூப்பதில்லை. செடியில் மலர்கள் இல்லாத நாட்களில் வண்ணத்துப்பூச்சிகள் மொய்ப்பதில்லை. அத்தனை வண்ணத்துப்பூச்சிகளும் எங்கு போகின்றன, எப்படி ரோஜாக்கள் மலர்ந்தவுடன் தோன்றுகின்றன என்பது பெரும் புதிராக இருந்தது.

    ரங்கநாதனுக்கு தெரிந்தவர் ஒருவர் – இருதயராஜ் – பக்கத்து பெரு நகரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டவியல் துறை பேராசிரியராக இருந்தார். அவர் ஒரு நாள் மாலை சில ஆராய்ச்சியாளர்களுடன் ரமணியின் வீட்டுக்கு வந்தார். அவர் வந்தபொழுது, ஏற்கனவே பானுவின் நண்பிகளும் அவர்களின் குழந்தைகளும் அதிசய ரோஜாச்செடியை கண்டு ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

    பானு கொண்டுவந்த காபியை வாங்கிக்கொண்டே “என்ன ரமணி, டிக்கட் போட்டு எல்லோரையும் உள்ளே விடலாம் போலிருக்கிறதே” என்றார் ரங்கநாதன்.

    “தெரியவில்லை சார், பேராசிரியர் பார்த்தாரென்றால் அறிவியல் பூர்வமான காரணத்தை கண்டுபிடித்துக்கூறி விடுவார். அப்படிக்கூறிவிட்டாரென்றால் எல்லோருக்கும் ஆர்வம் குறைந்துவிடும்” என்றான் ரமணி.

    பேராசிரியர் இருதயராஜ் ரோஜாச்செடியை நீண்ட நேரம் பார்த்தவாறு நின்றார். இலைகள் சிலவற்றை பறித்தார். சிறிதாக தண்டு சாம்பிளை எடுத்துக்கொண்டார். பல்கலைகழகத்தில் உள்ள பாலி ஹௌஸில் வைத்து செடியை வளர்க்க முயலப்போவதாக சொன்னார்.

    “இயற்கையில் கறுப்பு ரோஜா இல்லையென்றே அறிவியலாளர்கள் கருதுகின்றனர். உங்கள் வீட்டில் பூத்திருக்கும் கறுப்பு ரோஜா அதிசயம் தான்” என்றார்.

    “ரோஜாப்பூவிற்கு நிறம் எதனால் கிடைக்கிறது?” – ரங்கநாதன்

    கனைத்துவிட்டு ஒரு அறிவியல் லெக்சர் கொடுத்தார் இருதயராஜ்

    “ரோஜாச்செடிகளில் இருக்கும் பிக்மென்ட் அல்லது நிறமிகளே அவற்றின் பூக்களுக்கு நிறத்தை தருகின்றன. ரொஜாச்செடிகள் மூன்று விதமான நிறமிகளை உற்பத்தி செய்கின்றன. இவற்றில் இரண்டு நிறமிகள் – ஊதா மற்றும் மஞ்சள் – எல்லா ரோஜாச்செடியிலும் இருப்பன. அவற்றின் அளவு வேறுபடுதலே அவைகள் தரும் பூக்களின் ஷேட்களை நிர்ணயிக்கின்றன. இரத்த சிவப்பு நிறமி அபூர்வமாக சில ரோஜா வகைகளில் இருக்கின்றன. நிறமிகளின் சேர்க்கையின் விகிதத்தை பொறுத்து பூக்களின் நிறச்செறிவு வேறுபடுகிறது”

    “அப்படியானால் கறுப்பு நிற பிக்மென்டும் இருக்கலாமல்லவா?” – பானு

    “கறுப்பு நிற ரோஜாக்கள் இயற்கையில் இதற்கு முன்னர் இருந்ததில்லை. ஏற்கெனவே சொல்லப்பட்ட மூன்று நிறமிகளால் கறுப்பு வண்ணத்தை உருவாகுதல் சாத்தியமில்லை. குறுக்கு இனப்பெருக்கம் வாயிலாக DNA மரபணுக்களை மாற்றுதல் மூலம் தாவரவியலாளர்கள் ஆய்வுக்கூடங்களில் மட்டும் இதுவரை கறுப்பு வண்ண ரோஜாக்களை உருவாக்கியிருக்கிறார்கள்”

    “ஒரே செடியில் இரு வண்ண ரோஜாக்கள் பூப்பது சாத்தியமா?” – ரங்கநாதன்.

    “வெவ்வேறு ஷேட்கள் கொண்ட ரோஜாக்கள் செடியின் வெவ்வேறு பகுதிகளில் பூப்பது சாத்தியம். ஆனால், ரோஸ் நிறம் மற்றும் கறுப்பு நிறம் கொண்ட ரோஜாக்கள் ஒரே காம்பில் பூப்பது சாத்தியமில்லை என்றே எண்ணுகிறேன்”

    “வண்ணத்துப்பூச்சிகள்?” – ரமணி

    “இந்த ஏரியாவில் நிறைய வண்ணத்துப்பூச்சிகள் இருக்கலாம்..இல்லையேல் இம்முறை ப்ரீடீங் சீசனில் வண்ணத்துப்பூச்சிகளின் தொகை பெருகியிருக்கலாம்.”

    ரங்கநாதனும் இருதயராஜும் கிளம்பிச்சென்ற பின்னர் கொல்லைப்புறம் சென்று ரோஜாச்செடிக்கு நீரூற்றினான். கொஞ்ச நேரம் அமைதியாக அங்கேயே நின்று கொண்டிருந்தான். இருட்டிவிட்டபடியால், வண்ணத்துப்பூச்சிகள் செடியை மொய்க்கவில்லை. அவைகள் எங்கே போயிருக்கக்கூடும்? மாயமாய் மறைந்துவிட்டனவோ? சமையலறையில் பானு பாத்திரங்களை உருட்டும் சத்தம் பலமாய்க்கேட்டது.

    ரமணியை டெபுடேஷனில் திண்டுக்கல் அனுப்பிவைத்தார்கள். பதினைந்து நாட்கள் திண்டுக்கல்லில் இருக்க வேண்டியதாயிற்று. மீண்டபொழுது, ரோஜாச்செடியை யாரோ ட்ரிம் செய்தது போலிருந்தது. பல்கலைக்கழகத்திலிருந்து ஆய்வு மாணவர்கள் வந்து பல சாம்பிள்கள் கேட்டதாயும், ஒரு சாம்பிள் ரூ 100 வீதம் தந்ததாகவும் பானு சொன்னாள். புத்திரிகள் புதிதாக அணிந்திருந்த ஆடைகள் எங்கிருந்து வந்தன என்று ரமணி கேட்கவில்லை. ரோஜாச்செடி குடும்பத்தலைவனாகி விட்டதோ? ரமணியும் ரோஜாச்செடி போலவோ?. ஒரே ஊர் ஒரே வீடு என்று இருப்பதில். ரோஜாச்செடியும் எங்கும் நகர்வதில்லை.

    இருதயராஜ் ஒரு நாள் போன் செய்து ரமணியை பல்கலைக்கழகம் வருமாறு அழைத்தார். அவர் எடுத்து சென்றிருந்த தண்டு பாலி-ஹௌஸில் நன்கு வளர்ந்து பூத்திருந்தது. ஒரே சமயத்தில் ஒரு பூ தான் மலர்கிறதாம். வெறும் ரோஸ் நிற ரோஜாதான் மலர்கிறதாம். எடுத்த சாம்பிளின் DNA-வும் பாலி-ஹௌஸில் வளர்ந்த செடியின் DNA-வில் ஒரு மாறுதலும் இல்லையாம். அவருடைய மாணவர்கள் பானுவிடமிருந்து விலைக்கு வாங்கிய தண்டுகள் எல்லாம் வேவ்வேறு இடங்களில் நடப்பட்டிருக்கிறதாம். ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியிருப்பதாக இருதயராஜ் கூறினார்.

    “ரமணி, ஒன்று கேட்கலாமா? நீங்கள் இருக்கும் இடம் உங்களுக்கு சொந்தமானதா? அல்லது வாடகைக்கு இருக்கிறீர்களா?” என்று கேட்டார் இருதயராஜ்.

    “எனக்கு சொந்தமானது தான்” என்று பதிலளித்தான் ரமணி.

    கொல்லைப்புறத்தில் இருந்த ஈசி-சேரை ரொம்ப நாளாக காணவில்லை. ஒரு நாள் மாலை பானு அதை கொல்லைப்புறத்தில் போட்டு உட்கார்ந்திருந்தாள். ரோஜாச்செடி அன்று பூத்திருக்காத காரணத்தால் வண்ணத்துப்பூச்சிகளின் பவனியில்லை. செடியை ஒட்டியிருந்த மண்ணை கொத்திவிட்டுக்கொண்டிருந்தான் ரமணி. மூத்த புதல்வி கொல்லைப்புறத்துக்கு வந்து “அம்மா இதை பாரும்மா..நம்ம ரோஜாச்செடியை பத்தி பத்திரிக்கையில் வந்திருக்கு” என்று பானுவிடம் காண்பித்தாள். இருதயராஜ் எழுதிய கட்டுரை அது. வீட்டுக்கு வந்தபோது எப்போது ரோஜாச்செடியை புகைப்படம் எடுத்தார்? ரமணிக்கு சரியாக ஞாபகம் இல்லை.

    பத்திரிக்கையாளர்கள், ஃபோட்டோகிராபர்கள், அறிவியலாளர்கள், தோட்டவியல் நிபுணர்கள், ஊருக்கு புதிதாக வருபவர்கள் என்று தினமும் யாரேனும் வீட்டுக்கு வந்தபடி இருந்தனர். ரோஜாச்செடி பூத்தவண்ணம் இருந்தது. பார்ப்பவர்களின் நெஞ்சத்தை மகிழ்வித்தது. ரமணியின் குடும்பத்தினர் செடியின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தாலும், அன்னியர்கள் வீட்டுக்குள் நுழைந்தவண்ணம் இருப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

    ரமணி மீண்டும் டெபுடேஷனில் அனுப்பப்பட்டான். இம்முறை மதுரையில் ஒரு மாதம் தங்க வேண்டியிருந்தது. மதுரை கோட்ட உயர் அதிகாரி ரமணியை ஒருமுறை தன் வீட்டில் பார்டிக்கு அழைத்தார். ரமணி வசிக்கும் ஊரில் ஒரு வீட்டின் பின்புறத்தில் வளரும் அதிசய ரோஜாச்செடியை பற்றி பத்திரிக்கையில் படித்ததை சொன்னார். அந்த செடி ரமணி வீட்டு கொல்லைப்புறத்தில் தான் வளர்கிறது என்று கேள்விப்பட்டதும் ஆச்சர்யப்பட்டார். டெபுடேஷன் கடைசி நாள் உயர் அதிகாரி ரமணியை தன் அறைக்கழைத்து ஒரு சிறு நினைவுப்பரிசொன்றை தந்தார். மூன்று வருடங்கள் முன்னரே புரோமோஷனுக்கான நேர்முகத்தேர்வில் பங்கு பெற தகுதியிருந்தும் விண்ணப்பிக்காதது ஏனென்று வினவினார். ரங்கநாதனிடம் பேசட்டுமாவென்றும் கேட்டார்.

    இத்தனை வருடங்களாக புரோமொஷனே வேண்டாம் என்றிருந்த ரமணி சென்னை சென்று புரொமோஷனுக்கான நேர்முகத்தில் கலந்து கொள்ள தீர்மானித்தான். தீர்மானம் எதன் பொருட்டு என்பதில் ரமணிக்கு தெளிவு இல்லை. ஒரு வருடம் முன்னர் இத்தகையதொரு தீர்மானம் எடுக்கும் எண்ணம் ரமணிக்கு கனவிலும் உதித்திருக்காது. பானுவிடம் சொன்னால் அவள் மகிழ்ந்து போவாள் என்று நினைத்தான். அவளின் முகமோ சுண்டிப்போனது.

    “இத்தனை வருஷம் இங்கேயே இருந்துட்டீங்க…புரொமோஷன் கிடைச்சுட்டா வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுவாங்களே….நம்மளால புது ஊர்ல அட்ஜஸ்ட் பண்ணி வாழமுடியுமா? குழந்தைகளின் படிப்பு வேறு பாதிக்குமே?” என்று கவலையுடன் கேட்டாள்.

    ரமணி சென்னை சென்று நேர்காணலில் கலந்துகொண்டான். கேள்விகளுக்கு தன்னம்பிக்கையுடன் பதிலளித்தான். தேர்வு செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு ரமணிக்கு இருந்தது. முடிவு அறிவிக்கப்பட இரண்டு மாதம் ஆகும் என்று சொல்லப்பட்டது.

    ரோஜாச்செடியில் பூத்த மலர்களை ரமணியின் குடும்பத்தார் தாம் சூட்டிக்கொள்ள என்றுமே பறித்ததில்லை. ரோஜாக்கள் வாடி உதிரும் வரை செடியிலேயே இருக்கும். நான்கு பெண்கள் இருக்கும் வீட்டில் தோட்டத்து ரோஜாக்கள் பறிக்கப்படாமல் போனது நிஜமாகவே இன்னோர் அதிசயந்தான். சென்னையிலிருந்து ரமணி திரும்பிய அடுத்த நாள் இரண்டாம் மகள் “அம்மா, அம்மா கறுப்பு ரோஜாவை பறித்து தலையில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது” என்றாள். “அப்பாவிடம் கேட்டுக்கொள்..ரோஜாக்களை பறித்தால் அவருக்கு பிடிக்காது” என்றாள் பானு. உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ரமணி “அதற்கென்ன ஒரு ரோஜா என்ன இரண்டு ரோஜாக்களையும் பறித்து தருகிறேன். தலையில் வைத்துக்கொள்” என்றான். செடிக்கு கைதொடும் தூரத்தில் நின்று வண்ணத்துப்பூச்சிகள் விலகும் வரை காத்திருந்தான். வண்ணத்துப்பூச்சிகள் எல்லாம் வண்ணப்புகை மண்டலத்துக்குள் புகுந்து மறைந்தது போன்று ஒரிரு நிமிடங்களில் காணாமல் போயின. கத்திரிக்கோல் கொண்டு இரு ரோஜாக்களையும் பறித்து மகளிடம் தந்தான்.

    சாயந்திரம் சில புகைப்படங்கள் எடுக்கவென இருதயராஜ் வந்தார். செடியில் ரோஜாக்கள் பறிக்கப்பட்டுவிட்டதால் செடியை புகைப்படம் எடுக்காமலேயே கிளம்பினார். ரமணியின் புரோமோஷன் இன்டர்வியு பற்றி விசாரித்தார். வேறு ஊரில் போஸ்டிங் கிடைத்தால் ரமணியின் திட்டம் என்ன என்பதை அறிய ஆர்வம் காட்டினார்.

    கார் கிளம்புமுன் “ஒரு நிமிஷம்” என்று ரமணியை அருகே அழைத்து “பணி உயர்வு கிடைத்தால் வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். நல்ல விலை கிடைத்தால் இந்த வீட்டையும் தோட்டத்தையும் விற்க விரும்புவீர்களா?” என்று கேட்டார். ரமணி விடையேதும் அளிக்காமல் மௌனமாயிருந்தான். “இன்ஸ்டிட்யூட் ஒஃப் கார்டன் ரோஸஸ்’ ரிசர்ச்” என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் தன் இந்தியா கிளையை அதிசய ரோஜாச்செடி இருக்கும் இந்த இடத்திலேயே ஆரம்பிக்க ஆவன செய்யுங்கள் என்று அவர்களின் ஆலோசகனான என்னை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மார்க்கெட் விலையைவிட கணிசமாக அதிக விலையை உங்களுக்கு நான் வாங்கித்தருகிறேன். என்ன சொல்கிறீர்கள்? யோசித்து சொல்லுங்கள்” இருதயராஜின் கார் கரும்புகையை கக்கியவாறே நகர்ந்தது.

    நீண்ட யோசனையில் மூழ்கும் போதெல்லாம் ரமணிக்கு ஏற்படும் வாக்கிங் போகும் உந்துதல் அன்றும் அவனுள் எழுந்தது. இரண்டு தப்படி வைத்ததும் திடீரென மழை தூறத்துவங்கிற்று. வீட்டு வாசலுக்கு திரும்பினான். ஹாலை தாண்டி கொல்லைபுறம் வரை நீண்டு ரோஜாச்செடி மேல் அவன் பார்வை பட்டது. அன்று பூத்த ஜோடி ரோஜாக்கள் பறிக்கப்பட்டதாலும் வண்ணத்துப்பூச்சிகள் இல்லாமலும் வெறுமை படர்ந்து காட்சியளித்தது அவன் வளர்த்த அதிசய ரோஜாச்செடி.

    நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=20456)

  • ஒரு கிளைக்கதை

    வில் வித்தையில் தன் மானசீக குருவாக நினைத்திருந்த துரோணர் தன்னை சீடனாக ஏற்க மறுத்ததால் விரக்தியில் கொஞ்ச காலம் அலைந்து கொண்டிருந்த பிறகு, ஏகலைவனுக்கு ஒர் எண்ணம் பிறந்தது. துரோணர் என்ன துரோணர் ? அவர் மட்டும் தான் குருவா? கல்வித்துறையில் அரசு செய்த மாறுதல்களுக்கு பிறகு வீதிக்கு வீதி வில் வித்தை கற்றுத்தரும் தனியார் பள்ளிகள் முளைத்து விட்டனவே? அவற்றில் ஏதாவது ஒன்றில் போய் சேர்ந்து விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தான் ஏகலைவன். தனியார் பள்ளியில் சேர கொஞ்சம் நிதி பற்றாக்குறை. குபேரன் நடத்திய வங்கியில் தேவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்ட காரணத்தாலும், வேடுவர்களுக்கென வங்கியெதுவும் நிறுவப்படாததாலும் யாரிடம் கடன் வாங்குவதென்று தெரியவில்லை. ரிசர்வேஷன் காரணமாக துரோணரின் பள்ளியில் கற்க முடியவில்லை. அக்ரெடிட் பண்ணப்படாத தனியார் பள்ளிகளோ பகல் கொள்ளைக்காரர்களென லூட் செய்கிறார்களே! நிராசையுற்ற ஏகலைவன் ஜென்டில் மேன் அர்ஜுனிடமிருந்து தொழில் கற்றுக்கொண்டு, கொள்ளையடிக்க ஆரம்பித்தான்.

    இந்திரப்பிரஸ்தத்தை தலைநகராகக்கொண்டு பாண்டவர்கள் ஆண்டுகொண்டிருந்த பகுதிகளிலேயே தன் கைவேலையை காட்டி நிறைய செல்வம் சேர்த்தான். வில்லுக்கு விசயன் என்று போற்றப்பட்டு வந்த அர்ஜுனனின் இருபதாவது மனைவியின் தந்தையார் வீட்டில் ஏகலைவன் ஒருமுறை கன்னமிட்டு கொள்ளையடித்த போது வெஞ்சினம் கொண்டான் அர்ஜுனன். ஏகலைவனை கைது செய்ய ஒரு சிறப்புப்படை அமைக்கப்பெற்றது ; அர்ஜுனனே அதன் போறுப்பேற்றுக்கொண்டான்.

    ஏகலைவனின் பினாமியாக இருந்தவன் ஒரு பாஞ்சால நாட்டான். பத்து தனியார் பள்ளிகளை லம்ப்-பாக வாங்கினான். ஏகலைவன் தான் வாங்கிய பள்ளிகளில் இலவசக்கல்வி தரப்படவேண்டும் என்று சொல்லப்போக – "ஜென்டில்மேன் உதவி செய்தார் என்பதற்காக, அதே இயக்குனர் தந்த சிவாஜி பாதையில் போக வேண்டும் என்று அவசியமில்லை. நமக்கும் ரிடர்ன்ஸ் வேண்டாமா?" என்று சொல்லி கன்வின்ஸ் செய்தான்.

    கல்வித்துறையில் மோனோபொலி உருவாகிவருவதை கண்ணுற்ற துரோணர் (இப்போது, பாண்டவநாட்டு அரசு கல்வித்துறைக்கு சிறப்பு ஆலோசகராக பார்ட்-டைம் செய்து வந்தார்), தருமரிடம் அதைப்பற்றி ப்ரஸ்தாபித்து, "மோனோபோலிஸ்டிக் டென்டென்சி சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தீங்குகள்" என்ற தலைப்பில் பவர் பாயிண்ட் ப்ரசென்டேஷன் செய்தார். சில நாட்களில் ஒர் அவசரச்சட்டம் பிரகடனப்படுத்தி, தனியார் பள்ளிகள் எல்லாம் லைசென்ஸ் பெறுதல் அவசியம் என்றானது. பாஞ்சால நாட்டு பினாமி துவாரகையில் இருந்து ஒரு அரசியல் தரகனை தன் ஆலோசகனாய் நியமித்து உரிமம் பெற முயன்றான்.

    பாண்டவர்களின் புதுமையான சட்டத்தை கௌரவர்கள் காப்பியடித்து தங்கள் நாட்டினிலும் அமல் படுத்தினார்கள். ஏற்கெனவே அதிகம் பள்ளிகள் இல்லாமல் அறியாமையின் பீடியில் சிக்கியிருந்த கௌரவ நாட்டுக்கு இச்சட்டம் சரி வராது என்று விதுரர் சபையில் உரையாற்றினார். துரோணர் தான் மோனோபோலிஸ்டிக் கொள்கையை நிலைநிறுத்தி வருகிறார் என்றும் பாண்டவ நாட்டுக்கு அரசாங்க கஜானாவை நிரப்பித்தரும் சட்டங்களை இயற்றித்தந்து, கௌரவ நாட்டை மட்டும் இலட்சிய வாத சங்கிலிகளில் துரோணர் பூட்டுகிறார் என்றும் சகுனி குற்றம் சாட்டினார். துரோணர் தன் குடும்பத்துடன் மலைவாசஸ்தலமொன்று சென்றிருக்கிறார் என்றபடியால், எழுப்பப்பட்ட வாதங்களுக்கு பின்னர் பதிலளிப்பார் என கூறி விவாதத்தை முடிவு செய்தார் திரிதராஷ்டிரர்.

    துரியோதனனின் அதிகாரியொருவன் ஏகலைவனின் பினாமியை அஸ்தினாபுரம் அழைத்து விருந்தளித்தான். கௌரவ நாடு அன்னிய முதலீடுகளை வரவேற்பதாகவும், பள்ளிக்கூடங்கள் நிறுவ இலவசமாக இடம் ஒதுக்கி தரப்படும் என்று ஃப்ரி-பைஸ்களை அடுக்கிகொண்டு போக, 25 பள்ளிகளை ஸ்தாபிக்க எம் ஒ யூ கைசாத்திடப்பட்டது. துரியோதனனுக்கு கிக்-பேக்காக 5% வழங்கப்படுமென்றும் பாஞ்சால நாட்டான் ஒப்புக்கொண்டான்.

    அர்ஜுனனின் சிறப்புப்படையால் ஜென்டில்மேன் ஏகலைவனை பிடிக்கமுடியவில்லை. அவன் எங்கிருக்கிறான் என்றொ, எப்படி இருப்பான் என்றோ யாரும் அறிந்திருக்கவில்லை. “ஒட்டகத்தை கட்டிக்கோ” என்ற கீர்த்தனை பாடிக்கொண்டிருந்த பாகவதர் ஒருவர் மதுராவிலிருந்து கடத்தப்பட்டிருக்கிறார் என்ற புகாரின் பேரில் விசாரணைக்கு வர, அவரிருக்கும் போதே மதுராவிலுள்ள கோவிலில் இருந்து உண்டியலை காலி செய்தான் ஏகலைவன். அவனுக்கு துணையாக கவுடமணியென்பவன் வந்தான் என்றும் பின்னர் விசாரணை மூலம் தெரிய வந்தது. அர்ஜுனன் ஏகலைவனை பிடிக்கும் வரை முடிவளர்க்கப்போவதில்லை என சூளுரைத்து மொட்டையடித்துக்கொண்டான். அவன் வீடு திரும்பியதும் “பேன் இருப்பது தெரியாமல் ஒட்டடை மாதிரி வழிந்த முடியை எத்தனை முறை வெட்டும்படி நான் சொல்லும் போதும் மகாபாரத தோனி நான் என்று உளறிக்கொட்டி என் தலைக்கும் பேனை தானமாக தந்தீரே, நல்ல வேளை இப்போதாவது புத்தி வந்ததே!” என்று சந்தோஷம் கொண்டாள் சுபத்திரை. திரௌபதியோ “நல்ல வேளை இப்போது நகுலனின் டர்ன்…அர்ஜுனனின் சான்ஸ் வர இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன.” என்று ஆசுவாசம் கொண்டாள்.

    கௌரவ நாட்டுக்கு தனியார் பள்ளிகள் வந்து ஒரு அறிவுப்புரட்சியை ஏற்படுத்தின. பள்ளிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை ஆல்-டைம் ஹை ஆனது. புதுமையான மார்க்கெட்டிங் டெக்னிக்குகள், சுலப தவணை திட்டங்கள், காற்றோட்டமான அறைகள் – இவற்றின் காரணங்களால் ஏகலைவனின் பினாமியின் பள்ளிகள் கொழித்தன. இவ்வளவு ஏன், துரோணரின் பள்ளியில் படிக்கும் ராஜ குமாரர்கள் கூட இப்போது தனியார் பள்ளிகளை விரும்பினர். காட்டிலும், வெயிலிலும் ப்ராக்டிஸ் பண்ண வேண்டியதில்லை. அறைகளிலேயே, ஹெல்மெட், கவச ஆடைகள் அணிந்து பயிற்சி செய்யக்கூடியதாக இருந்தது. துரோணரின் பள்ளி மூட வேண்டிய நிலைமைக்கு வந்தது. அசுவத்தாமா துரோணரிடம் சென்று முறையிட்டான். துரோணர், சிறப்புப்படையில் பணியாற்றிய ஒற்றன் ஒருவனின் உதவியுடன் ஏகலைவனின் அப்பாயிண்ட்மென்ட் வாங்கி ராஜபாட்டையின் தாபாவொன்றில் சந்தித்தார்.

    இரகசிய சந்திப்பிற்கு பிறகு நடந்தவை :-

    (!) ஏகலைவன் தன் பள்ளியில் சேர முயன்ற போது ரிசர்வேஷன் மூலம் துரோணர் இடம் தர மறுத்ததாலேயே அவன் ஜென்டில்மேனாக மாறியதை அறிந்தவுடன் அசுவத்தமா வெகுண்டெழுந்து சொன்னான் “அவன் ஒரு சீட் கேட்டான் ; கொடுத்திருக்கலாம். நீங்கள் தரவில்லை. இன்னைக்கி பாண்டவ நாடு, கௌரவ நாடு – இரண்டு நாடுகளிலும் பள்ளிகளை நிறுவி, சாதாரணமா இருந்தவனை சூப்பர் ஸ்டாராக்கி விட்டுட்டீங்க. எதிரிங்க தானா உருவாறதில்லைங்க..நாமதான் உருவாக்கறோம்”

    (2) துரோணர் கை கட்டை விரலை இழந்திருந்தார். தாபா மீட்டிங்கில் வெண்ணெய் வெட்டும் கத்தி தொலைந்து போனது ; ஏகலைவன் வெண்ணெய் நான் வெட்டித்தருகிறேன் என்று உதவ வரும் வேளையில் திடீரென்று பவர்-ஆஃப் ஆக தவறுதலாக துரோணரின் கை விரல் வெட்டுபட்டது.

    (3) ஏகலைவனின் பினாமிக்கும் துரியோதனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கல்வி அமைச்சர் சகுனி பள்ளி லைசென்ஸ்களை கான்சல் செய்ய உத்தரவிட்டார். துரோணரின் பள்ளி வழக்கம் போல் மீண்டும் முண்ணனி பெற்றது. அசுவத்தாமாவிற்கும் சகுனிக்கும் இடையில் ஏதொ ஒர் அமைதியான புரிந்துணர்வு இருப்பதாக பேசிக்கொண்டனர்.

    (4) ஏகலைவனின் ராபின்ஹூட் தன கொள்ளைகள் முடிவுக்கு வந்தன. அவன் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பாண்டவர்கள் காட்டிற்கு செல்ல வேண்டி நேரிட்டதால், ஏகலைவனின் கேஸ் பிசுபிசுத்து போய்விட்டதாக மக்கள் பேசிக்கோண்டனர். ஏகலைவன் மீது ஆக்‌ஷன் எடுக்கப்படாததற்கு துரோணரின் திரைக்கு பின்னரான நடவடிக்கைகளே காரணம் என்றும் சில சாரார் சொன்னார்கள். எது உண்மை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    (5) ஏகலைவனின் சம்மர் ரிசார்ட் ஒன்றில் துரோணரின் கட்டை விரல் ஃபார்மால்டிஹைட் சொல்யுஷனில் ப்ரிசெர்வ் செய்யப்பட்டு வெகுகாலம் காட்சிப்பொருளாய் இருந்தது.

    (6) ஏகலைவன் பினாமி பாண்டவர்களின் ஃபைனான்சியர் ஆனான் என்றும் சொல்வார்கள்.

    (7) அர்ஜுனன் காட்டுக்கு கிளம்புகையில் ஸ்பெஷலாக மொட்டையடிக்க தேவைப்படவில்லை. ஏற்கெனவே ஏகலைவனை கைது செய்வதாய் சபதமிட்டு மொட்டையடித்திருந்தபடியால் கொஞ்சம் ட்ரிம் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது. மற்ற பாண்டவ சகோதரர்களுக்கு மட்டும் ஃபுல்-ஃப்லெட்ஜ் மொட்டையடித்துக்கொண்டார்கள்.

  • புலம்பெயர்வு

    வீட்டின் பின்புறம் இருந்த பூந்தொட்டிகளுக்கு நீருற்றிக்கொண்டிருந்தாள் ரிவோலி. சனிக்கிழமை மதியம். சாம்பல் நிறவானம். நவம்பர் மாதத்தில் மஞ்சள் நிறவானத்தை பார்ப்பது அபூர்வம். பொதுவாக சனிக்கிழமை ரிவோலியின் வீட்டில் அவளுடைய மாணவர்கள் வருவது வழக்கம். இன்று யாரும் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்தாள்.

    பக்கத்து பங்களாக்காரர்கள் உறங்கிக்கொண்டிருப்பார்கள். வெள்ளியிரவு லேட்நைட் பார்டிகளிலிருந்து அதிகாலை வந்து, அசதி நீங்காமல் தூக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். அங்கு இரு இளம் பெண்கள் தத்தம் காதலருடன் வசிக்கிறார்கள். அங்கு வசிக்கும் ஒரு ஆடவன், ரிவொலியின் மாணவன். வங்கதேசத்தில் உள்ள சிலேட் நகரிலிருந்து முனைவர் பட்டம் பெற டொரொண்டொ வந்தவன். ரிஸ்வான் என்று பெயர். அவனுடைய காதலி – ரிபெக்கா – சட்டம் பயில்கிறாள். கனடாவைச்சேர்ந்தவள். மற்ற ஜோடியைப்பற்றி ரிவோலிக்கு அதிகம் தெரியாது. ரிஸ்வான் ரிவோலியின் வீட்டிற்கு வழக்கமாக வந்து போகிறவன். ஒரிரு முறை அவனது காதலி ரிபெக்காவும் அவனோடு வந்திருக்கிறாள்.

    இந்த ரிஸ்வான் ரிபெக்காவுடன் கடைசி வரை இருப்பானா? பால் வடியும் முகம் கமிட்மெண்டுக்கு அடையாளமாகாது. அப்படியிருந்தால், தேவ்-வும் என்னுடன் இருந்திருப்பான். தனியாக இருக்கும் பொழுதுகளில் எல்லாம் தேவ் பற்றிய சிந்தனை திரும்ப திரும்ப வருகிறது.

    எங்கு போனார்கள் டேனியலும், சிவப்பெருமாளும்? சனிக்கிழமை மதியம் அவர்கள் செய்யும் ஆய்வு சம்பந்தமான உரையாடலுக்காக வருகிறேன் என்ற மாணவர்கள். டேனியலை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றாள். அவர்களிருவரும் பல்கலைக்கழகத்தில் இருந்தால். அங்கே வந்து கூட உரையாட தயார் என்று சொல்லலாம் என்று நினைத்தாள். டேனியல் போனை எடுக்கவில்லை.

    குளியலுக்கு பின்னர், புத்துணர்வு மீண்டது போலிருந்தது. பாஸ்டா செய்து சாப்பிட்டாள். உப்பு குறைவாக போய் விட்டது. பாதி சாப்பிட்டுவிட்டு, மீதியை ஃப்ரிட்ஜ்-ஜில் வைத்தாள். டேனியலிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. சிவ பெருமாள் தன் உறவினர்களின் இல்லத்திற்கு போய் விட்டபடியாலும், டேனியலின் காதலியின் பிறந்த நாள் விழா ஞாயிறன்று வருவதால் அதன் ஆயத்தப்பணிகளில் காதலிக்கு உதவி புரியவேண்டியிருப்பதாலும், சனிக்கிழமை மதியம் வர இயலாது என்று தெரிவித்திருந்தான். முன்னரே தெரிந்திருந்தால், ரிவோலி தன் தோழிகளிருவரை சந்திக்க சென்றிருப்பாள்.

    தில்லிக்கு போன் செய்து, தந்தையுடன் பேசினாள். “எப்படியிருக்கிறாய்?” என்ரு வாஞ்சையுடன் கேட்டார் ரிவோலியின் தந்தை – சுரேந்திர மெஹ்ரா. பிசினசிலிருந்து ஒய்வு பெற்று கோயில், ஆன்மீகம், நண்பர்கள் என்று காலத்தை கழித்து கொண்டிருக்கிறார். “நீ சம்பாதிக்க வேண்டுமென்று என்ன இருக்கிறது? அவ்வளவு தூரம் சென்று ஆசிரியையாக பணியாற்றும் உனக்கு நம் ஊரில் எளிதாக அதே வேலை கிடைத்து விடாதா? என் பக்கத்தில் இங்கே, தில்லியில் நீ இருக்கலாகாதா?” என்று பலமுறை மன்றாடிக்கேட்டிருக்கிறார். அப்பொதேல்லாம், ஒரு வறட்டு மௌனத்தை விட வேறு பதில் இருந்ததில்லை ரிவோலியிடம். அண்ணனிடம், அண்ணியிடம் மாதம் ஒருமுறை பேசுவதோடு சரி. அண்ணனின் குழந்தைகளிடம் சிற்ப்பான பரிவோ உறவுமுறையோ ரிவோலிக்கு இதுவரை இருந்ததில்லை. அப்படி வருவதற்கான சந்தர்ப்பமும் நிகழவில்லை, ஏனெனில், ரிவோலி தில்லி சென்று அவர்களையெல்லாம் சந்தித்து ஐந்தாறு ஆண்டுகளாகி விட்டன.

    அப்பாவிடம் சில நிமிடங்கள் பேசியபிறகு, சைக்கிளை ஒட்டிக்கொண்டு, பல்கலைகழக கிளப்புக்கு போனாள். கொஞ்ச நேரம் டென்னிஸ் விளையாடினாள். அவளுடன் விளையாட்டில் பங்கு பெற்ற தோழியுடன் உட்கார்ந்து அரட்டை கொஞ்ச நேரம். பின்னர் இருவரும் சேர்ந்து திரைப்படம் காண முடிவு செய்தார்கள். “கறுப்பு அன்னம்” என்ற ஆங்கிலப்படம். ரிவோலி இரண்டு மணி நேரங்களுக்கு திரைப்படத்தில் லயித்திருந்தாள். கூட வந்த தோழி, திரைப்படம் முடிந்தவுடனேயே விடைபெற்றாள். ரிவோலி இரவு உணவை ரெஸ்டாரண்டில் தனியாக உண்ண வேண்டியதாகி விட்டது.

    வீட்டுக்கு திரும்பிய அரை மணி நேரத்தில், தொலைக்காட்சி ஒடிக்கொண்டிருந்த சத்தத்தையும் மீறி ஹாலில் இருந்த சோபாவில் கண்ணயர்ந்தாள். ஒரு மணியிருக்கும். சடக்கென்று விழித்து, உதட்டில் வழிந்த எச்சிலை துடைத்துக்கொண்டாள். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, படுக்கையறையில் சென்று படுத்தாள். தூக்கம் விலகி விட்டது. நெடுநேரம், நிலையில்லாத சிந்தனைகள். புரண்டு, புரண்டு, மெத்தையே உஷ்ணமாகியது போல பட்டது. அறை ஹீட்டர் அனணக்க வேண்டுமோ? படுக்கையிலிருந்து எழுந்து, ஃப்ரிட்ஜிலிருந்து வைன் பாட்டிலை திறந்து இரண்டு மடக்கு விழுங்கினாள். பாதி படித்து, டேபிளில் மேல் மடித்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய எழுத்தாளர் ஒருவர் எழுதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நாவலை படிக்க ஆரம்பித்தாள்.

    ஞாயிறு காலையில், ரிவோலி விழித்தபோது ஒரே தலைவலி. பால் சேர்க்காமல் காபி குடித்தாள். தேவ் சரியான காபி குடியன். நாளைக்கு ஐந்தாறு முறை குடிப்பான். ரிவோலிக்கு தேவ்வுடன் வசிக்க ஆரம்பிக்கும் முன்னதாக காபி குடிக்கும் பழக்கம் இருந்ததில்லை. காபி குடிக்க ஆரம்பித்ததே, படுதலைவலியென்று, தலை துவட்டும் துண்டை தலையில் கட்டிக்கொண்டு ரிவோலி சயனித்திருந்த ஒரு ஞாயிறன்று தான். சுடச்சுட காபி போட்டு எடுத்து வந்தான். “இந்த அமிர்தத்தை பருகிப்பார்…உன் தலைவலி ஓடிப்போய்விடும்” என்றபடி அவள் அருகில் அமர்ந்து காபிக்கோப்பையை தந்தான். அவன் தோள்களில் சாய்ந்து கொண்டே அருந்தினாள். தலைவலி போனது காபியாலா? அல்லது தேவ்வின் அணைப்பினாலா?

    ரிவோலியுடன் வாழ்ந்த நாட்களில், அவனிடம் மது அருந்தும் பழக்கமிருந்ததில்லை. இப்போது குடிக்க ஆரம்பித்திருக்கலாம். தெரியாது. ரிவோலிக்கு மதுப்பழக்கம் தொற்றிவிட்டிருந்தது. தேவ் அவள் வாழ்க்கையை விட்டு நீங்கிய கொஞ்ச நாட்களில் குடிக்க ஆரம்பித்தாள். ஒரு வருடம் முன்பு, குடல் வியாதி வந்து, சிகிச்சை பெற்றபோது குடிக்கும் பழக்கத்தை மட்டுப்படுத்திக்கொண்டாள்.

    தன் கடந்த வாழ்க்கையின் அங்கம் தேவ். கடந்த காலத்தை முழுதும் மறத்தல் சாத்தியமானதா? தேவ்வின் மேல் நான் கொண்டிருந்த காதல் தர்ககபூர்வமானதல்ல! காதலில் விழுதல் என்ற சொற்றொடர் எத்துனை பொருத்தமானது? குழியை தேர்ந்தெடுத்தா விழுகிறோம்? விபத்தாக, எந்த திட்டமிடலும் இல்லாமல் தானே விழுகிறோம்.

    வெதுவெதுப்பான ஷவர்க்குளியல்! வழக்கத்தை விட அதிகமான நேரம் குளித்தாள். ஒற்றை துண்டை அணிந்தவண்ணம், கண்ணாடியை பார்த்தவாறு, கேசத்தை துடைத்தாள். காதுக்கு மேல், ஒரிரு வெள்ளை முடிகள் எட்டிப்பார்த்தன. கத்திரிக்கோலினால் வெட்டினாள். வெட்டப்பட்ட வெள்ளை முடிகளை, சன்னல் வெளிச்சத்தில் பார்த்தபடியே தடவிக்கொடுத்தாள். தேவ்-வையும் இது மாதிரி தன் வாழ்க்கையிலிருந்து வெகு முன்னரே எடுத்தெரிந்திருக்க வேண்டும். ஏன் முடியாமல் போயிற்று? வேண்டாமென்று வெட்டிய வெள்ளை முடியை தூக்கி எறிய மனமில்லாமல் தடவிக்கொடுப்பது மாதிரியான ஒரு தெரிவை நான் செய்தேன்.

    ரிவோலியும் தேவ்வும் அமெரிக்கா வந்து டெக்ஸாசில் உள்ள ஹண்ட்ஸ்வில் நகரில் உயர் படிப்பு படிக்க ஆரம்பித்த நாட்களில் நடந்த ஒர் உரையாடல் ரிவோலியின் நினைவுத்திரையில் ஒடிற்று.

    “நான் ஒரு ப்ரேக்மடிஸ்ட்…இத்தனை வருடம் காதலித்தது, அமெரிக்கா வரை ஒன்றாக படிக்க வந்து சேர்ந்தது வரை ஓகே. சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பது கூட சரிதான். ஆனால் ஒன்றை நீ கருத்தில் வைத்து முடிவெடு. என் வீட்டில் என் பெற்றோர் நம் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். ட்ரெடிஷனல் மார்வாரி பிசினஸ் குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் கம்யூனிடியை விட்டு வேறு யாரையும் திருமணம் செய்தல் முடியவே முடியாத ஒன்று.”

    தேவ் மேற்கண்டவற்றை ஒரு சலனமுமில்லாமல் சொன்னான். ரிவோலி ஒரு வெறுமையான முகபாவத்துடன் கேட்டுக்கொண்டாள். குழப்பமா? அல்லது கோபமா? கடுமையாக ஏமாற்றப்படும் உணர்வா? எதை அவள் முகம் பிரதிபலித்தது? இரண்டு தினங்கள் இருவருக்குமிடையில் ஒரு சம்பாஷணையும் நடக்கவில்லை. தேவ் ஹாலில் படுத்துக்கொண்டான். படுக்கையறை கதவை சார்த்திக்கொண்டு, வெகுநேரம் சிந்தித்தாள். மூன்றாவது நாளிரவு, படுக்கையறைக்குள் தேவ் அனுமதிக்கப்பட்டான்.

    “உன்னைக்கண்டு பித்தேறி, நீ படித்த கல்லூரியின் ஹாஸ்டல் சுவரை தாண்டிக்குதித்து, நள்ளிரவில் உன் அறை புகுந்து என் காதலை நானேதான் சொன்னேன். அமேரிக்காவில் படிக்கவேண்டும் என்ற உன்னுடைய இலட்சியத்துக்கு குறுக்கே நிற்காமல், அதே சமயம் உன்னை விட்டு பிரியக்கூடாது என்ற எண்ணத்தால், என் குடும்பத்தினரிடம் பிடிவாதம் பிடித்து, நீ சேர்ந்த அதே பல்கலைக்கழகத்தில் சேர்ந்து…..இதெல்லாம் எதற்காக? உன் மேல் கொண்ட கட்டுப்பாடில்லா நிபந்தனையற்ற காதலால்….இனிமேலும் நிபந்தனை விதிக்க மாட்டேன்…உன் படிப்பு முடியும் வரை சேர்ந்தே இருப்போம்…” – என்றாள் ரிவோலி. சொற்கள் தெளிவாக வெளிப்பட்டன.

    “படிப்பிற்கு பிறகு நான் உன்னை திருமணம் செய்யாமல் போனால்..?” – வினவினான் தேவ். புன்னகைத்த மாதிரி இருந்தது.

    “உன் மனம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் பெற்றோர்களிடம் நீ எனக்காக பேசுவாய்”

    “அப்படி பேசாமல் போய், வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணை நான் கல்யாணம் செய்து கொண்டால்…?” – புன்னகையுடன் கேட்டான் தேவ். அவன் கைகள் ரிவோலியின் இடைப்பகுதியை லேசாக துழாவிக்கொண்டிருந்தன.. அவள் பதில் கூறுமுன் அவள் இதழ்களை அழுத்தி முத்தமிட்டான்.

    வெள்ளை முடிகளை குப்பையில் எறிந்தாள்.

    அவள் பேராசிரியராக இருக்கும் பல்கலைக்கழகத்தில் கணக்கராக இருக்கும் ஆஃப்ரோ-கரிபியப்பெண் – க்ரிஸ்டினா என்பவள் ரிவோலியின் நண்பி. ட்ரினிடாடில் பிறந்து வளர்ந்தவள். புசுபுசுவென்று சுருண்ட முடியும், உச்ச சாரிரமும் கொண்டவள். ரிவோலி தங்கியிருக்கும் ஊரிலிருந்து பத்து மைல் தள்ளியிருந்த ஒரு கிராமத்தில், டையமண்ட்ஸ் இன் என்ற பெயர் கொண்ட ஒர் அழகான பப் (pub) இருந்தது. எல்லா ஞாயிறு மாலைகளும் ரிவோலியும் க்ரிஸ்டினாவும் அங்கு போவது வழக்கம். அன்று வழக்கத்திற்கு மாறாக ரிவோலி கோனியாக் அருந்தினாள். பபில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ரிஸ்வானும் ரிபெக்காவும் அன்று அந்த பபில் இருந்தார்கள். ரிஸ்வான் ரிவோலியைப்பார்த்து கையாட்டினான்.

    க்ரிஸ்டினாவின் நகைச்சுவையுடன் கூடிய பேச்சை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தாள். வார்த்தைக்கு வார்த்தை புணர்ச்சியின் ஆங்கிலச்சொல்லை சேர்த்து சேர்த்து க்ரிஸ்டினா பேசிக்கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது.

    ரிவோலியின் கைத்தொலைபேசி கூவியது. பபில் நிலவிய சத்ததில் கைத்தொலைபேசியின் அலறல் காதில் விழவில்லை. க்ரிஸ்டினா தான் சொன்னாள். கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு பபின் வாசலுக்கு வந்தாள். ரிவோலியின் அண்ணியுடைய அக்கா டொரொன்டொவில் வசிக்கிறாள். அவளுடைய அழைப்புதான் அது.

    “ஓ! பபில் இருக்கிறாயா?” – அண்ணியின் அக்காவின் குரலில் ஏளனம் தொனித்தது.

    “இல்லை…இன்று திருமணப்பெண்கள் கொண்டாடும் கர்வாசௌத்…நீ தனியே இருப்பாயே….இன்று இரவு எங்கள் வீட்டில் சாப்பிட அழைக்கலாமென்று பார்த்தேன்….என் கணவரும் காரில் உன்னை அழைத்து வருகிறேன் என்றார்…நீ பிஸி போலிருக்கிறது”

    கைத்தொலைபேசி வைக்கப்பட்டதும் ரிவோலி கசப்பாக உணர்ந்தாள். கண்மண் தெரியா கோபவுணர்வு நெஞ்சில் பெருக்கெடுத்தது. இரண்டு மூன்று பெக் மதுவை வேகமாக குடித்தாள்.

    “எனி திங் ராங்?” என்று க்ரிஸ்டினா கேட்டாள்.

    ஒன்றுமில்லை என்று பொருள் படும்படியாக புணர்ச்சியின் ஆங்கிலச்சொல்லை ரிவோலியும் பயன்படுத்தியதும் இருவரும் குபீரென சிரித்தனர்.

    திடீரென்று, க்றிஸ்டினாவிடம் சொல்லிக்கொண்டு ரிவோலி வீட்டுக்கு கிளம்பினாள். பபின் வாசலை அடைந்ததும் வாந்தியெடுத்தாள். அவள் வாந்தியெடுப்பதை பார்த்த ரிஸ்வானும் ரிபெக்காவும் அவளை காரில் உட்காரவைத்தனர். ரிஸ்வான் காரை செலுத்திச்சென்று, ரிவோலியை வீட்டில் விட்டான்.

    திங்கள் கிழமை ரிவோலி விழிக்கும் போது எட்டரை மணியாகிவிட்டது. அன்று அவளுடைய முதல் லெக்சர் ஒன்பது மணிக்கு இருந்தது. உடல் நிலை சரியில்லையென்று விடுப்பெடுத்துக்கொண்டாள். இது மாதிரி திட்டமிடப்படாத, கடைசி நேர விடுமுறை எடுப்பது அவ்வளவாக நிகழுந்ததில்லை.

    காபி போட்டுக்குடித்து தலைவலியை விரட்ட சோம்பலாக இருந்தது. சோஃபாவில் அமர்ந்து, கண்ணை மூடி உட்கார்ந்திருந்தாள். முந்தைய நாள் மாலை நடந்ததை எண்ணி, ரிவோலிக்கு தன் மீதே வெறுப்பு வந்தது. தன்னைப்பற்றி நெருங்கிய உறவினர்களே வம்பு பேசியும் அவளை கொஞ்சம் கூட பாதிக்காது இருந்திருக்கிறது. எவளோ ஒரு தூரத்து உறவுக்காரி நக்கல் பண்ணியதால் இத்தனை சலனம் ஏன் ஏற்பட்டது?

    தில்லியிலிருந்து அண்ணனின் போன் செய்தான். சேம விசாரிப்புக்கு பிறகு அவன் சொன்ன செய்தி ரிவோலியினுள்ளில் அதிசயமாக எந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கவில்லை.

    “கேள்விப்பட்டாயா? ஒரு துயரகரமான சம்பவம். உன் பழைய நண்பன் – தேவ் – தன் மனைவி, தன் மூன்று வயது மகன் – இவர்களை தன் கைத்துப்பாக்கியால் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டான்….கலிபோர்னியவில் உள்ள சான்ஹொசேயில் வசித்து வந்திருக்கிறான். ஒரு வருடம் முன்னர் பங்குசந்தையில் எல்லா முதலீடுகளையும் இழந்ததால், மனனிலை சரியில்லாமல் அலைந்திருக்கிறான்… சி என் என்னில் காட்டுகிறார்கள் பார்…”

    சி என் என்னில் தேவ்வின் பழைய புகைப்படமொன்றை ஸ்டில்லாக காட்டிக்கொண்டிருந்தார்கள். ரிவோலி எடுத்த புகைப்படம். எட்டு வருடங்களுக்கு முன்னர் நயாகராவில் எடுத்தது.

    பின் குறிப்பு : ரிவோலி கனடாவிலிருந்து தாயகம் திரும்பிவந்துவிட்டாள். சண்டிகர் நகரில் வாழ்கிறாள். வழக்கறிஞர் ஒருவரை மணந்து கொண்டாள். அவளுக்கு ஆறு மாதம் முன்பு ஒர் அழகான பெண் குழந்தை பிறந்தது.

    (நன்றி : திண்ணை) – http://puthu.thinnai.com/?p=8895

  • முன்னுரை

    மிகச்சிறு வயதில் 1982 -இல் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடெங்கும் பள்ளிகளில், கல்லூரிகளில், வானொலிகளில், பொதுவிடங்களில் விமரிசையாக கொண்டாடினார்கள். அந்த நாட்களில் தான் பாரதியின் கவிதைகள் எனக்கு அறிமுகமாயின. எனக்கும் கவிதை எழுதவேண்டுமென்ற ஆசை உருவானது. என் அப்பாவின், முழுதும் உபயோகிக்கப்படாத பழைய டைரிகளில் கிறுக்கத்தொடங்கினேன். கிறுக்கினவற்றை ஒளித்துத்தான் வைத்திருந்தேன். என் அம்மாவோ அல்லது என் சகோதரர்களோ, யாரோ கண்டுபிடித்து என் கிறுக்கல்களை படித்துவிட்டார்கள். பின்னர், சிலகாலம் என் குடும்பத்திற்குள் "கவிஞன்" என்ற பெயரோடு "புகழுடன்’ வலம் வந்தேன்.

    சில பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைக்கலாமென்ற எண்ணத்துடன், கிறுக்கல்களை டைப்-செய்ய என் அப்பாவிடம் கொடுத்தேன். அப்பா பல மாதங்களாகியும் அவற்றை டைப்-அடித்து எனக்கு கொண்டு தரவில்லை. எப்போது கேட்டாலும் அலுவலக டைபிஸ்ட்-இடம் கொடுத்திருப்பதாகசொல்வார். அலுவலகத்தில் ஆங்கிலத்திலேயே கடிதங்கள், ஆவணங்கள் எல்லாம் டைப்-அடிக்கப்பட்டதனாலோ என்னமோ, டைபிஸ்ட்-டுக்கு தமிழ் தட்டச்சு வராது போலும் என்று நான் விட்டுவிட்டேன். என் கவிதை கிறுக்கல்களை இப்படித்தான் நான் இழந்தேன்.

    பின்னர் நான் 10 -ஆம் வகுப்புக்கு சென்றேன். நிறைய மதிப்பெண் எடுக்கவேண்டுமென்று எல்லாரும் விரும்பினார்கள். எனவே கொஞ்சகாலம் என் "குடும்பப்புலவர்" பதவியை துறக்க தீர்மானித்தேன். 10 -ம் வகுப்பில் பொதுத்தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்தேன் என்று நினைவில்லை. நான் இதுவரை வேலை செய்த எட்டு நிறுவனங்களிலும் யாரும் ஒருநாள் கூட என் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப்பற்றி கேட்டதேயில்லை.

    பத்தாம் வகுப்பு விடுமுறையின் போது என் ஒரு புதிய திசையில் பயணிக்க முடிவு செய்தேன். கவிதைகளை விடுத்து சிறுகதைகள் புனையும் எண்ணம் உதயமானது. கவிஞனாக இருந்தது போதும், என் சிறுகதை திறமையை இவ்வுலகுக்கு காட்ட முடிவு செய்தேன். ஒரு பக்ககதைகளாக இருபது கதைகள் எழுதியிருப்பேன். அதற்குள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து, 11 -ம் வகுப்பு சேர வேண்டியதாகிவிட்டது. அதுவும் முதல்முறையாக ஆங்கில வழியில் படிக்கவேண்டிவந்தது. bowler எடுக்கிற ரன்கள் மாதிரி மார்க்குகள் ரொம்ப குறைச்ச்சலானது. ஆங்கில அறிவை ஏற்றுவது இன்றியமையாததானது. எனவே, கிரிக்கெட் கமெண்டரி கேட்டு எனது ஆங்கிலத்தை உயர்த்த அரும்பாடுபட்டேன். 12 -வது வரும்போது, எனது பள்ளியில் எனக்கு கருணைகாட்டி தமிழ்வழிக்கு மாறிக்கொள்ளும் சலுகை தந்தார்கள். Debit வரவு என்றானது. dividend பங்காதாயம் ஆனது. எந்த குழப்பமும் அடையாமல் 12 -ம் வகுப்பை முடித்தேன். (இல்லை, 12 ம் வகுப்பு மதிப்பெண்களும் ஞாபகத்தில் இல்லை.)

    கல்லூரி படிக்கும் காலங்களில், நான் எழுதிய சிறுகதைகளை படிக்கலாமென்று, வீடு முழுதும் சல்லடை போட்டு தேடியதில் நான் எழுதிய சிறுகதைகள் அடங்கிய நோட்புக் எங்கே போனதேன்றே தெரியவில்லை. அம்மாவைக்கேட்டேன். "தெரியலியேடா…செய்தித்தாள்களுடன் சேர்ந்து உன் நோட்புக்கும் எடைக்குப்போயிருக்குமோ?" என்ற சந்தேகத்தை எழுப்பினாள். அன்றுதான் ஒரு நல்ல எழுத்தாளனை தமிழிலக்கிய உலகம் இழந்தது.

    பிறகு வாழ்க்கை வெகு வேகமாக ஓட ஆரம்பித்தது. மூச்சுவிடுவதற்குள் எனக்கு 42 வயது ஆகிவிட்டது. எனக்கு திரும்பவும் இளைஞனாக மாற வேண்டுமென்ற எண்ணம் வந்தது. இளைஞனாவதற்கு முன்னர் நான் என்னசெய்துகொண்டிருந்தேன் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது நான் புலவனாகவும் எழுத்தாளனாகவும் திகழ்ந்த நாட்கள் நெஞ்சில் காட்சிகளாக ஓடின. அக்கணமே இந்த வலைதளத்தை துவங்கினேன். இப்போது மீண்டும் "கிறுக்க" தொடங்கியிருக்கிறேன். ஒரு வித்தியாசம், இப்போதெல்லாம் சிறுகதை மற்றும் கவிதை இரண்டையும் எழுதுகிறேன். இருபது வருடங்களுக்கு முன்னாலிருந்த முகமும் உடலும் எனக்கு வந்துவிடலாம். இன்னும் கொஞ்சநாட்களில் என் நண்பர்களுக்கு கூட நான் அடையாளம் தெரியாமல் போகக்கூடும்.

    இந்தமுறை எழுதுவதை நிறுத்தக்கூடாது. முன்னர் நான் எழுதியவற்றை எடைக்காரனுக்கு இழந்ததுபோல இம்முறை நடக்காது. ஏனென்றால், மடிக்கணினியை யாரும் எடைக்கு போடமாட்டார்கள்தானே !

  • வீடு திரும்புதல்

    தினமும் படுக்கையிலிருந்து எழும்ப தாமதமாகிறது. பல நாள், படுக்கையிலிருந்து நேராக குளியலரைக்குத்தாவி முகம் கழுவி, உடையணிந்து அலுவலகம் கிளம்பும் கட்டாயத்துக்குள்ளாக வேண்டியிருக்கிறது. இதில் மனைவி தரும் "பெட் காபி" கூட குடிக்க முடியாமல் போய்விடுகிறது.

    "குழந்தை அதிகாலை பள்ளிக்கு கிளம்பி செல்கிறது. அதற்கு என்றாவது "டாட்டா" சொல்லியிருக்கிறீர்களா? உங்களுக்கு உங்கள் ஆபிஸ் உங்கள் தூக்கம் – இவைதான் முக்கியம். குழந்தை பெற்றால் மட்டும் போதாது. அன்பு காட்டவும் தெரிந்திருக்க வேண்டும்." மனைவியிடமிருந்து பெறும் தினசரி அர்ச்சனை. அவள் "கிளம்பிசெல்கிறது" என்று அக்றினையில் சொன்னது என்னை இல்லை. என் மகள் நிவேதாவை. அன்பின் மிகுதியாக.

    நிவேதா ஆறு மணிக்கு விழித்து, தயாராகி, அவளுடைய அம்மாவுடன் தெரு இறுதிக்கு சென்று, பஸ்சுக்காக காத்திருந்து நல்ல பிள்ளையாக பள்ளிக்கு சென்றுவிடுவாள். நான் எட்டு மணிக்கு குறைவாக விழித்ததாக ஞாபகமே இல்லை. சீக்கிரம் எழுந்துவிடலாம் தான், ஆனால் அதற்கு சீக்கிரம் தூங்கிவிடுவது அவசியம்.மாலை எட்டு மணியாகிறது வீடு திரும்புவதற்கு.இரவு உணவு உட்கொண்டு, மனைவியுடன் சிறிது நேரம் பேசி, அவள் தூங்கும்போது மணி பத்தாகிவிடுகிறது. பிறகுதான், எனது படிக்கும் நேரம் தொடங்குகிறது.

    எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை, இரு பக்கம் படித்துவிட்டு, இரு மணிநேரம் யோசிப்பேன். சில வாக்கியங்கள் என்னுள் வெகு ஆழமாக ஊடுருவும். அதைப்பற்றியே நெடு நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருப்பேன். பிடித்த வரிகளைக்கோடிட்டு அதனை ஒரு வெற்றுக்காகிதத்தில் எழுதிப்பார்ப்பேன். அப்படி எழுதிப்பார்கையில் வேறு ஏதாவது அர்த்தம் பிடிபடுகிறதா என்று பார்ப்பேன்.
    தூங்குவதற்கு முன்னாள் ஒரு இலக்கியப்புத்தகத்தை படிப்பதில் உபயோகம் என்னவென்றால் படித்த வரிகளை மனதில் அமைதியுடன் அசை போடலாம்.

    பகல் நேரம் முழுக்க அலுவல்களில் கழிந்துவிடுவதால், மனம் ஏதாவது ஒன்றில் உழன்றவண்ணம் இருக்கிறது. இரவின் அமைதியில், நிசப்தத்தின் சுகத்தில் சுந்தர ராமசாமியுடனோ புதுமைப்பித்தனுடனோ எண்ணவுலகத்தில் சஞ்சரிப்பது மனதை குளுமைப்படுத்துவது போல் இருக்கிறது. (இந்த இரு புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பெயர்களை வெறுமனே இங்கு எழுதவில்லை. இவர்களில் ஒருவர் சற்று நேரத்தில் மேற்கோள் காட்டபடுவார்.) ஆனால் சிறு பிரச்னை. நான் படுக்கையறை விளக்கை உடனே அணைக்காமல், வெகுநேரம் விழித்திருப்பதால், ஒரு சுந்தரியுடனோ அல்லது புவனேஸ்வரியுடனோ குறுஞ்செய்தி பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக என் மனைவி எண்ணிவிடுகிறாள். அதிர்ஷ்டவசமாக, அவள் தூக்கத்தில் இருப்பதால், கோபம் கொள்வது பகல் வரும்வரை தள்ளிவைத்துவிடுகிறாள். இப்போதெல்லாம் கைத்தொலைபேசியை ஹாலிலேயே வைத்துவிட்டுத்தான் படுக்கையறைக்குப்போகிறேன். ஒரு சண்டைக்கான சந்தர்ப்பம் மிச்சம் பாருங்கள்.

    +++++

    ஒரு நாளிரவு சுந்தர.ராமசாமியின் "அகம்" என்ற சிறுகதை படித்தேன். ஜானு என்ற சிறுமியை பற்றியது.

    சிறுவயதில், எனக்கு "டீஸல்" நெடி அலர்ஜி. பேருந்தில் போகும்போதோ பெட்ரோல் விற்கும் இடங்களில் நிற்கும்போதோ ஒரு மாதிரியான அவஸ்தை உண்டாகும். பேருந்தில் என் பக்கத்தில் உட்கார்ந்தவர்கள் அசிரத்தையாய் இருந்தால் தொப்பலாக நனைந்துபோவார்கள்.

    “அகம்” சிறுகதையை படிக்கும்போது அதே போன்றதோர் அவஸ்தையால் வயிறு பிசைவது போன்ற சங்கடமேற்பட்டது.

    ஜானு பள்ளி போகும் சிறுமி. அம்மாவுடன் இருக்கிறாள். அப்பா வேலை சம்பந்தமாக வேறெங்கோ இருக்கிறார். ஜானுவுக்கு அப்பாமேல் அளவு கடந்த பாசம். ஆனால், அப்பா வருடத்திற்கு ஒரு முறைதான் வருவார். அவள் அம்மா மருத்துவர் ஒருவருடன் "நெருக்கமாக" இருக்கிறாள். முதலில் ஜானுவுக்கு அந்த மருத்துவர் "மாமா"வை பிடித்துதான் இருந்தது. நாள் போகப்போக ஒருவெறுப்பு. பிக்னிக் போனால், அம்மாவும் டாக்டரும் ஜானுவை கார்-இல் தனியே உட்காரவைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். மருத்துவர் முன்னால் அம்மா ஜானுவிடம் அகம்பாவமாக நடந்துகொள்ளுகிறாள். மருத்துவரை ஜானு புறக்கணித்தாலும் அம்மாவிற்கு பிடிப்பதில்லை. ஒரு முறை ஜானு-வுக்கு காய்ச்சல் வரும்போது மூர்க்கத்தனமாக டாக்டரிடம் நடந்து ஊசி போடவிடாமல் செய்கிறாள். அப்போதுதான், அம்மாவிற்கு கொஞ்சம் உரைக்கிறது. மருத்துவரை இனிமேல் வரவேண்டாம் என்று சொல்ல, மருத்துவர் கோபமாகி "நீ என்ன உத்தமியா?" என்று மிரட்டி, அம்மாவை அவளுடைய அறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்து செல்கிறார். இதைக்கண்ட ஜானு, உணர்ச்சிவேகத்தில், டாக்டரின் காருக்குள் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன்-ஐ திறந்து ஊற்றி காரை எரிக்கப்போக, தீ வீட்டுக்குள்ளும் பரவி. மூவரும் கரிந்து இறந்துபோகிறார்கள்.

    கதையை இப்படி முடித்து விட்டாரே என்று எழுத்தாளரின் மேல் வந்த கோபத்தை விட, பொருளீட்ட வெகுதூரம் போய், மனைவி மற்றும் மகளின் மனநிலையையே புரிந்துகொள்ளாத அந்த முகம் தெரியாத பாத்திரத்தின் மேல் அதிககோபம் வந்தது.

    +++++

    நிவேதா தானே தனக்குள் பேசிக்கொண்டு ஓரங்கநாடகம் போன்று எதையோ அவளுடைய படிக்கும் அறையில் அரங்கேற்றிகொண்டிருந்தாள். அதை கதவுமறைவில் ஒளிந்துகொண்டு இன்னும் கொஞ்ச நேரம் ரசித்திருக்க வேண்டும். என்னை பார்த்த மாத்திரத்தில் ஓரங்கநாடகம் நின்றுபோனது. அரைகுறையாக உடைந்த முன்பல்லைகாட்டி புன்னகை செய்தாள்.
    "என்னம்மா செல்லம்…பண்ணிட்டிருக்கே?"
    "சும்மா" – கன்னம் குழி விழுகிறதோ லேசாக? நான் ஏன் இதை முன்னரே கண்டிருக்கவில்லை?
    "இந்த தடவை செல்லத்துக்கு பொறந்த நாளுக்கு என்ன வேணும்? "
    இதற்குள் மனைவி எங்கள் உரையாடலில் புகுந்தாள். "அடேங்கப்பா…என்ன ஆச்சர்யம்…அப்பாவுக்கு நிவேதா செல்லத்தோட பர்த்டே ஞாபகம் இருக்கே? – என் கையில் கைதொலைபேசியோ அல்லது புத்தகமோ இல்லையே!

    அப்புறம் எங்கள் உரையாடல் வேறு திசையில் சென்று விட்டது. லௌகீகமாக. நிவேதாவின் கன்னக்குழியை பற்றி மனைவியிடம் பேச மறந்தேபோனேன்.

    நிவேதாவின் பிறந்த நாளன்று வைகறை துயிலெழுந்து வாழ்த்து சொல்லவேண்டுமென்ற என் திட்டம் தவிடுபொடியானது. எட்டு மணிக்கு தான் எழுந்தேன். கொத்தவரங்காயை கத்தியால் நறுக்கிகொண்டிருந்த மனைவி சுப்ரபாதம் பாடாரம்பித்தாள். வெங்கடேச பெருமாளுக்கு ஏற்கனவே பாடிவிட்டபடியால், இரண்டாவது தடவை எனக்கு, அதுவும் தமிழில்.

    "குழந்தையோட பிறந்தநாள்னு பேரு…உங்களுக்கே கார்த்தாலே எழுந்து விஷ் பண்ணனும்னு கூட தோணலை.. ஹும் என்ன சொல்றது"

    +++++

    அலுவலகம் செல்லாமல் நேராக ஒரு அன்பளிப்புகள் வாங்கும் கடைக்கு சென்றேன். பொம்மைகள், விளையாட்டு பொருள்கள், எழுது பொருட்கள், கார்ட்டூன் குறுந்தட்டுகள், என்று எல்லாவற்றையும் பார்த்தேன். எதை வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், கடைக்குள்ளின் ஓர் ஓரத்தில், ஒரு மேசை போட்டு அதற்கு பின்னால் நின்றிருந்த பெண்ணை பார்த்தேன். இல்லை அவள் புன்னகைக்கும்போது கன்னகுழி தோன்றவில்லை. சர்வேதேச கருணை இல்லங்களுக்கு நிதியளிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரிட்ட பலகை மேசையில் இருந்தது. அணுகி விவரங்களை விசாரித்ததில், விசித்திரமான ஒரு திட்டத்தை பற்றி சொன்னாள். ஏதாவது அன்பளிப்பு வாங்க வருபவர்கள், இந்த நிதி நிறுவனத்துக்கு நன்கொடையளித்தால் அவர்கள் வாங்கும் அன்பளிப்பில் 50 % கழிவு அளிக்கப்படும். அந்த கடைக்காரர்களுக்கு இது எந்த விதத்தில் லாபமென்று எனக்கு புரியவில்லை. நான் நன்கொடை எதுவும் அளிக்கவில்லை. நிவேதாவுக்கு ஒரு பார்பி பொம்மையை வாங்கினேன்.

    அலுவலகத்துக்கு அதை எடுத்துப்போனேன். சக ஊழியர்கள், "என்னப்பா யாருக்கு பரிசு வாங்கிகிட்டு போறீங்க? கேர்ள்பிரெண்ட்-க்கா?" என்று கேலி பண்ணினார்கள். வண்ணக்காகிதம் கொண்டு பாக் செய்யப்பட்ட அந்த பார்பி டாலை, பேருந்தில் கொண்டுபோனால் வசதியாக இருக்காது. சக ஊழியர்கள் வாயினால் சொன்னதை, சக பயணிகள் மனதிலேயே நினத்துக்கொள்ளக்கூடும். எனவே, ஆட்டோ-வில் வீட்டுக்கு போகலாமென்று முடிவெடுத்தேன்.

    +++++

    பரிசுப்பொருள் வீட்டை அடையும் முன்னரே தொலைந்துபோனது. எவ்வளவு யோசித்தும், பார்பி பொம்மையை எப்படி இழந்தோமென்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. காலையில் வாங்கினேன் அதை அலுவலகம் எடுத்துவந்தேன். நண்பர்கள் அதைப்பற்றி சிலாகித்தபோது கூட, என் மேசையின் பக்கவாட்டிலேயே கிடந்தது. சாப்பாட்டு இடைவேளை முடிந்து திரும்பியபோதும் பொம்மை பத்திரமாகவே இருந்தது. ஆட்டோவில் ஏறும்போது…..? அதை எடுத்துக்கொண்டோமா?…ஆட்டோ பழுதுபட்டு பாதியிலேயே நின்றதே…அப்போது அந்த பொம்மை கையில் இருந்ததா? மழை தூற்ற ஆரம்பித்தபோது, அதில் நனைந்து கொண்டிருந்தபோது….ஹும் இல்லை…அப்போது பொம்மை என் கையில் இல்லை…வந்த பேருந்தில் முட்டியடித்து ஏறியபோது…இல்லை…எனவே, ஆட்டோ-வில் இருந்திருக்கவேண்டும்…அல்லது…நாளை அலுவலகம் போய் தான் பார்க்கவேண்டும்… பஸ் ஸ்டாப்-இலிருந்து ஆமை நடை போட்டு வீடு வந்தேன்.

    "என்னங்க இவ்வளவு லேட்டு…இத்தனை நேரம் நிவேதா உங்களுக்காகத்தான் முழிச்சிண்டிருந்தாள்..அப்பா வாங்கி குடுத்த கிப்டு அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது…அதுவும் சர்ப்ரைஸ்-ஆ உங்க ஆபிஸ்பையன் மூலமா சாயந்திரம் வீட்டுக்கு அனுப்பிவச்சது . அது எனக்கு ரொம்ப பிடிசிருந்தது"

    +++++

    படுக்கைக்கு வந்தேன்…இன்று புத்தகம் படிக்கலாமா நேற்று படித்துக்கொண்டிருந்த சிறுகதை தொகுதியில் இன்னும் ஒரு கதை மிச்சமிருந்தது.

    தலையணைக்கு கீழே ஒரு உறை இருந்தது…அதை எடுத்தேன்…

    "நிவேதா இன்னிக்கி ஸ்கூலுக்கு தன்னோட பிரெண்ட்ஸ்-க்கு குடுக்க டாபி எடுத்துக்கிட்டுப்போனா..அப்போ அவ கிளாஸ் டீச்சர் நிவேதா கிட்ட இந்த டாபி பாக்கெட்டை ஒரு கருணையில்லத்துக்கு கொடுத்தா…உனக்கு பரிசு கூப்பன் கிடைக்கும். அத வச்சி உனக்கு புடிச்சது ஏதாவது வாங்கிக்கலாம்னு சொல்லியிருக்காங்க …இவ உடனே டாபிஸ் எல்லாத்தையும் டொனேட் பண்ணிட்டா…அப்பாக்கு இத சர்ப்பரைஸ்-ஆ குடுக்கணும்னு கிப்ட் கூப்பன்-அ உங்க தலகாணிக்கு கீழே வச்சிட்டு தூங்கிட்டா" – பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கிய குரலில் மனைவி பேசினாள்…

    அன்று இரவு படுக்கையறையின் லைட் சீக்கிரமே அணைந்துவிட்டது.

  • பேரம்

    ஆங்கிலத்தில் லவ்-ஹேட் உறவு என்று சொல்வார்கள். அதாவது, ஒருவருடன் தினமும் நெருங்கிய தொடர்புடன் இயங்க
    வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, அந்த நபருடன் முழுக்க ஒத்துப்போகாமல் அதே சமயம் அவரை முழுக்க தள்ளமுடியாமல் இருக்கும் ஒரு நிலை. உதாரணமாக, எனது பாஸ்-ஐ எடுத்துக்கொள்ளலாம். அவரை எனக்கு பிடிப்பதில்லை. ஆனால், அதை செயலிலோ சொல்லிலோ காட்டமுடியாது. பாடி-லேங்வெஜ் என்று சொல்லப்படும், உடல் மொழி-யை வைத்து பிரியமின்மையை தெரியப்படுத்தினாலோ அவருக்கு உடன் பிடிபட்டுவிடுகிறது. முன்னை விட மூர்க்கமாக தன் முட்டாள்தனமான உரையாடல்களை தொடர்வார். பலமுறை, அவர் பேச்சை கேட்டபடியே, கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தியொன்றை உடன் வேலை செய்யும் உத்தியோகஸ்தருக்கு அனுப்பி, இன்டர்-காம் மூலமாக பேசச்சொல்லவேண்டியிருக்கிறது. "சார், ___ (என் பெயர்) உங்களுடன் இருக்கிறாரா?…போலந்திலிருந்து வாடிக்கையாளரின் அழைப்பு வந்தது…ஏதோ அவசரமாக பேசவேண்டுமாம்.."..உடனே "போலந்து வாடிக்கையாளருக்கு" போன் செய்ய அனுப்பப்பட்டு விடுவேன்.

    +++++

    என்னுடைய பாஸ்-சுடைய பாஸ் ஒருவர் இருக்கிறார். அவரை எக்ஸ் என்று அழைப்போம். எக்ஸ் என்னுடைய பாஸ்-சிடம் "என்ன புதிதாக வியாபாரம் கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்டால், "___ (என் பெயர்) னைத்தான் கேட்கவேண்டும்?" என்று பதில் வரும்.
    "S நிறுவனத்திடமிருந்து ஒரு பேமென்ட் வராமல் இருந்ததே?"
    "__ (என் பெயர்) பாலோ பண்ணிட்டிருந்தான்"
    "அடுத்த மூணு மாச விற்பனை பட்ஜெட்படி போகுமா?"
    "போகும்-னு __ (என் பெயர்) சொன்னான்"

    மேற்கண்ட உரையாடலை படித்தால், எக்ஸ் நேராக என்னிடம் பேசினால் துல்லியமான தகவல் கிட்டுவதுடன், நேரமும் மிச்சமாகுமே என்று தோன்றுகிறதா? எனக்கும் பலமுறை தோன்றியது.

    ஒருமுறை நான், பாஸ் மற்றும் எக்ஸ் தில்லியிலிருந்து வந்த ஒரு வாடிக்கையாளருக்கு விருந்தளித்தோம். அந்த விருந்திற்கு வாடிக்கையாளர் தன்னுடைய ஒன்று விட்ட பெரியப்பாவின் மாப்பிள்ளையும் அழைத்து வந்திருந்தார். விருந்திற்கு வந்த மாப்பிள்ளை சார் தான் புதிதாக துவக்க இருக்கும் நேந்திரங்காய் வறுவல் வியாபாரத்தைப்பற்றி பிரஸ்தாபித்து அதற்க்கான சில ஆலோசனைகளை பெறும் நோக்கில் எக்சிடம் சில கேள்விகளை எழுப்பினான்.
    "இதற்க்கு நான் பதிலளிப்பதைவிட ___ (பாஸ்-சின் பெயர்) பதிலளித்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும். சந்தையியல் துறையில் வல்லுனராக எங்கள் தொழிலில் மதிக்கப்படுபவர் அவர்" என்றவாறே ஐஸ்-ஐ எடுத்து தன்னுடைய கோப்பைக்குள் போட்டார். அந்த ஐஸ் தவறி பாஸ்-சின் தட்டில் விழுந்தது.
    பாஸ்-சின் பெருமிதத்துடன் புன்னகைத்தார் – அது அவர் தட்டில் விழுந்த ஐஸ்-சுக்கா அல்லது எக்ஸ் தந்த உயர்வு நவிற்சி அறிமுகத்துக்கா என்பது தெரியவில்லை.
    மாப்பிள்ளை சார்-இடம் பேச ஆரம்பித்தார் பாஸ். "ஒன்று செய்யுங்கள்…நாளை என்னை என் அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள். நேந்திரங்காய் வறுவல் மார்கெட்டை பற்றியும் சமீபத்திய போக்குகள் பற்றியும் சில தெளிவுகளை எங்களுக்கு அளிக்கிறேன். அதை வைத்து உங்களுடைய திட்டத்தை நீங்கள் மேலும் துல்லியமாக செதுக்கிக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த திசு காகிதங்களை எடுத்து வாயை முடிக்கொண்டு தன் உதட்டை சுத்தப்படுத்திக்கொண்டார்.

    அடுத்த நாள், மாப்பிள்ளை சார் என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டார். "பாஸ்-சை சந்தித்தீர்களா?" என்று கேட்டேன்.
    "ஆம், சந்தித்தேன். அவர் உங்களைப்பற்றி உயர்வாகச்சொன்னார். உங்களுக்கு சிற்றுண்டிஉணவுபொருட்களை விற்பதில் நல்ல அனுபவம் உண்டாமே?"
    அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வெறுமனே விழித்தேன். கிட்டத்தட்ட அரை மணிநேர உரையாடலுக்கு பிறகு மாப்பிள்ளை சார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. "நான் கிளம்புகிறேன்" என்றார். எங்கள் நிறுவனத்தின் வியாபாரக்குறி பொறித்த தொப்பியை மாப்பிள்ளை சாருக்கு அன்பளிப்பாக கொடுத்தேன். "வெளியே வெயில் அதிகமாக இருக்கிறது. இதனை இங்கேயே அணிந்துகொண்டு வெளியே செல்கிறேன்" என்று சொல்லி தொப்பியை போட்டுக்கொண்டார்.

    பாஸ் புதுமை மிகு வழிகளில் அதிர்ச்சி கொடுக்கப்போகிறார் என்பதே தெரியாவண்ணம் பல உத்திகளை கையாள்வதில் விற்பன்னர். முக்கியமாக, நகைச்சுவையை கூட கோபஉருவில் அளிப்பார். அவருக்கு கோபம் வரும்போது நகைச்சுவை பண்ணுகிறாரோ என்று தோன்றும்.

    வியாபார விஷயங்களில் முடிவேடுக்காமை என்ற குணத்தை கோபம், வாதம் போன்றவற்றால் அபாரமாக மறைத்து விடுவார். அவருடைய சினம் கலந்த, இயலாமை தோய்ந்த திறனாய்வுகளை கேட்கும்போது பொறுமை இழக்காமல் இருப்பது கடினம். "நாமே ஏதாவது பார்த்துக்கொள்ளலாம்" என்று பலமுறை அவரை முடிவேடுக்கவைக்கும் இக்கட்டிலிருந்து நானே காப்பாற்றிவிடுவேன், எங்கெல்லாம் அவரே முடிவெடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது, நிறைய பேச்சுகேட்கும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டே அணுக வேண்டியிருக்கும்.

    +++++
    நகமும் சதையுமாய் கூடிக்குலாவிக்கொண்டிருந்த பாஸ்-சுக்கும் எக்ஸ்-க்கும் நடுவே சில இடைவெளிகள் விழுந்தன. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் எக்ஸ்-சின் அறையே கதியாகக்கிடந்த பாஸ், இப்போதெல்லாம் தனது அறையிலேயே கழிக்கவேண்டியதாயிற்று.

    இன்டெர்-காமில் அன்புடன் விளித்து என்னை கூப்பிட்டார். தேனும் பாலுமாய் வார்த்தைகள் வெளிவந்தன.

    "உனக்கு ஞாபகம் இருக்கும்…உன்னை நானே நேர்முகம் செய்து வேலைக்கு நியமனம் செய்தேன். நான் வேறுவேலைக்கு போய்விட்டால், அங்கேயும் நான் உன்னை அழைத்துக்கொண்டு போகமுடியும்"

    "சார் என்ன ஆயிற்று? வேலையை விட்டு நீங்குவதைப்பற்றி இப்போது ஏன் பேசுகிறீர்கள்?"

    "இல்லை…இவ்விடம் நமக்கு ஏற்றதில்லை.." – விரக்தி பொங்கியது அவர் பேச்சில். கடைசி வரை ஏனிந்த விரக்தி என்பது எனக்கு பிடிபடவில்லை. கொஞ்சம்கூட அர்த்தமேற்படுத்தாத வார்த்தைகளை மணிக்கணக்காக பேசுவதில்தான் அவர் வித்தகர் ஆயிற்றே?

    +++++

    ஒரு வாரத்துக்கு பிறகு பாஸ் – எக்ஸ் உறவு சுமுகமாகிவிட்டது. முன்னர்போல், 3 மணி சீரியலை எக்ஸ்’ன் அறையின் சுவரில் பொருத்தப்பட்ட டி வி-யிலேயே மீண்டும் இருவரும் பார்க்கத்தொடங்கினார்கள்.

    +++++

    ஊதியஉயர்வுக்காலம் வந்தது. ஊழியர்களின் நெஞ்சில் எதிர்பார்ப்புகள். எனக்கும்தான். கழிந்த வருடத்தில் என்னுடைய செயல்திறனாலும் உழைப்பாலும் நல்ல விற்பனை நிகழ்ந்திருந்தது என்று நான் நம்பினேன். ஒருநாள் பாஸ் எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பிஇருந்தார். அந்த "நல்ல"செய்தியை எல்லா ஊழியரிடமும் தனிப்பட்டமுறையில் பேசி தகுந்த விளக்கத்துடன் அளித்திருக்கவேண்டுமென்று பாஸ்-சோ எக்ஸ்-சோ நினைக்கவில்லை. செய்தி இதுதான் : "போதுமான லாபமின்மையாலும், அண்மையான எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள தொழில் விரிவாக்கங்களுக்கு தேவையான ரொக்கநிலமையை பராமரிக்கும் பொருட்டும் பணியாளர்களின் ஊதியத்திருத்தங்கள் ஆறு மாதங்களுக்கு தள்ளிவைக்கப்படுகின்றன."

    +++++

    பாஸ் மீண்டும் வேலை மாறுவது பற்றி பேசவில்லை. நிறுவனம் பாஸ்-க்கு புதிய சொகுசு கார் வழங்கியிருந்தது. பாஸ்-சும் எக்ஸ்-சும் தினமும் சேர்ந்தே அலுவலகம் வந்தார்கள். பாஸ் தன்னுடைய புது கார்-இல் எக்ஸ்-சை தினமும் கூட்டிவந்தார். நிறுவனம் பங்குதாரர்களுக்கு 25 % பங்காதாயம் அறிவித்தது. ஊழியர்கள் ஆறு மாதமுடிவுக்காக காத்திருந்தார்கள்.

    +++++

    நான் 6 மாதம் காத்திருக்கவில்லை. வேறு ஒரு நிறுவனம் என்னை வேலையில் சேரும்படி அழைத்தனர். ஆனால் நான் கேட்ட சம்பளத்தை தர ஏனோ தயங்கினர். புது நிறுவனம் யோசித்துக்கொண்டிருந்த வேளையிலேயே நான் கையிலிருந்த வேலையை ராஜினாமா செய்தேன். பாஸ் என்னை தடுத்து நிறுத்த சாம, தான, பேத தண்டம் எல்லாவற்றையும் பயன்படுத்தினார். கடைசியாக, எனக்கு மட்டும் சிறப்பு ஊதியஉயர்வு கடிதத்தை கொடுத்து, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். நான் நாளை சொல்லுகிறேன் என்று அக்கடிதத்தின் நகலை மட்டும் எடுத்துக்கொண்டேன். நான் கேட்ட சம்பளத்தை தர புது நிறுவனம் ஒத்துக்கொண்டது.

    +++++

    அடுத்த வருட ஊதியஉயர்வு காலம் வரை கூட பாஸ் வேலையில் பிழைக்கவில்லை என்ற செய்தி நண்பர்கள் மூலம் என்னை எட்டியது. பாவம், எக்ஸ்! அவரே கார்-ஐ ஒட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு வரவேண்டும்.

  • பரிமாணம்

    இந்த ஞாயிறும் ரவியின் ஏமாற்றம் தொடர்ந்தவண்ணம் இருந்தது. சில பேருக்கு மட்டும் எண்ணியபடி எல்லாம் எப்படி நிறைவேறுகிறது? அவனை பல நாட்களாக பாதித்து வரும் கேள்வி இதுதான். புதிதாக வெளியாகி இருந்த ஒரு திரைப்படத்தைப்பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அனேகமாக, அவனது வகுப்பில் எல்லா மாணவர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டார்கள். படத்தில் வரும் கதாநாயகனின் நடிப்பைபற்றியும், அப்படத்தில் அறிமுகமான அழகான முகம் கொண்ட அந்த நடிகையை பற்றியும் சக மாணவர்கள் பேச்சை கேட்டு அலுத்துப்போய்விட்டது. நாலு வாரங்களாக எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை முதல் நண்பகல் வரை அப்பாவிடம் அனுமதி கேட்டு இவன் சலித்து விட்டான். ஆனால், அந்த சினிமா-வுக்குபபோக ரவியை அனுமதிக்கக்கூடாது என்ற நிலை அவனது அப்பாவுக்கு கொஞ்சமும் திகட்டவில்லை. பக்கத்து வீட்டு சந்துரு அதே திரைப்படத்தை இரண்டாவது முறையாக கூட பார்த்துவிட்டான். ஊரிலிருந்து வந்திருந்த தன்னுடைய மாமாவுடன் சென்று வந்திருக்கிறான்.

    அப்பாவின் தாராளவாதமின்மை எங்கிருந்து ஜனித்தது? ஏன் இந்த குருரமான பிடிவாதம்? 2 ரூபாய் கூட மகனின் சந்தோஷத்துக்காக செலவழிக்க முடியாதா? அம்மா-விடம் புலம்பி ஒரு பயனும் இல்லை. "நான் என்னடா செய்வது? அப்பா கொடுக்கமாட்டேன் என்கிறார். நான் என்ன சம்பாதிக்கிறேனா? திருடியா தரமுடியும்" என்பது மாதிரியான கழிவிரக்கம் நிரம்பிய வசனங்களையே கேட்கவேண்டிவரும்.

    +++++

    25 வருடங்களுக்குப்பிறகே அவன் அந்த படத்தை காண முடிந்தது. ஒரு புதன் கிழமை மதியம் அந்தப்படம் தொலைக்காட்சியில் வந்தது. காய்ச்சல் என்று அலுவலகத்திற்கு போகாமல் இருந்ததால், அந்தப்படத்தை காணும் சந்தர்ப்பம் கிட்டியது. அந்த படத்தை காணும்பொழுதுதான் மேற்கண்ட பிளாஷ்பாக் அவன் நெஞ்சில் ஓடியது,

    அந்தப்படத்தில் அறிமுகமான நடிகையில் சமீப புகைப்படத்தை ஒரு பத்திரிக்கையில் போட்டிருந்தார்கள். இளமையழகு உருமாறி வசீகரமான பாட்டி உரு வந்திருந்தது. வயதான காலத்தில் வசீகரமான உருவம் என்பது சிலருக்கே வாய்க்கிறது. ரவியின் அம்மா, அப்பா இருவருமே மிக வயதானவர்களாக ஆகிவிட்டார்கள். சகோதரனுடன் மும்பையில் வசிக்கிறார்கள்.

    இளவயதின் அழகு இயல்பாக அமைகிறது. பருவத்தில் ஆணாகட்டும், பெண்ணாகட்டும் எழிலுடன் தெரிகிறார்கள். வருடங்கள் நகரத்துவங்க, கவர்ச்சி விலக ஆரம்பிக்கிறது. ஆனால் வயதான பிறகு, வணங்கத்தக்க ஒரு வசீகரத்தை சில பேரால் அடையமுடிகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கடைசிகால புகைப்படங்களில் எப்படி இருந்தார்! அவ்வசீகரம் எங்கிருந்து வருகிறது என்பதற்கு ரவியிடம் ஒரு தியரி இருந்தது. உள்ளிருக்கும் அமைதியும் திருப்தியுமே வசீகரத்தை வயதான காலங்களில் தருகிறது என்று அவன் எண்ணினான். இந்த எண்ணம், அறிவியல்பூர்வமானதா என்பது பற்றி அவன் அதிகம் யோசித்ததில்லை. எல்லா எண்ணங்களும், அபிப்ராயங்களும் அறிவியல்விதிகளுக்குள் அடங்கவேண்டுமென்ற பிடிவாதமும் அவனிடத்தில் இல்லை.

    +++++

    ஐந்தாறு வருடங்களாக திரும்ப திரும்ப அழைத்தும் தில்லியின் கடும்குளிரையும் சுடும்வெயிலையும் காரணம்காட்டி வராமல் இருந்த, அம்மாவும் அப்பாவும் ஒருநாள் திடீரென்று ரவியின் வீட்டிற்கு விஜயம் செய்தனர். குளிர்காலம் ஆரம்பிக்க இன்னும் இருமாதங்களே இருந்தன. குளிர்காலம் தொடங்கிய பின்னும், ரவியின் வீட்டிலேயே தொடர்ந்து தங்கினர். ரவியின் மனைவி – மாலாவுக்கு இது கொஞ்சம் புதிதுதான். ரவி-க்கு திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப்பின்னர், தொடர்ச்சியாக இரு மாதங்கள் தங்குவது இதுதான் முதல் முறை.

    +++++

    கல்யாணமான புதிதில், மாலாவிற்கு மஞ்சள் காய்ச்சல் வந்தது. அப்போதெல்லாம், ரவியின் பெற்றோர்கள் தனியே வசித்து வந்தார்கள். ரவியின் சகோதரன் வெளிநாட்டில் வசித்து வந்தநேரமது. ரவி தன் அம்மாவிற்கு போன் செய்து "மாலாவுக்கு மஞ்சள் காய்ச்சல். அவளை கவனித்துக்கொள்ள ஓரிரு வாரங்கள் வந்து என்னோடு தங்கியிருப்பாயா? எனக்கு கல்யாணமான பின்னர் குடித்தனம் வைக்கக்கூட நீயும் அப்பாவும் வரவில்லை" என்று கேட்டான். அதற்கு அம்மா அளித்த பதிலைக்கேட்ட பிறகு அதிக நேரம் அந்த போன்-உரையாடல் நீடிக்கவில்லை. "நீ கணவன் ஆகிவிட்டாய். உன் பெண்டாட்டியை பார்த்துக்கொள்ள தெரிந்துகொள்ள வேண்டும். இனிமேயும் என்மேல் சார்ந்திருக்கக்கூடாது" ரவியும் சீக்கிரமே பெற்றோரின்மேல் உணர்வுபூர்வமாக சாராமல் இருப்பது எப்படி என்று கற்றுக்கொண்டான். ஆனாலும், சமூகப்பார்வையில் கடமையாக கருதப்படும் பெற்றோர்களுக்கு செய்யப்படும் எல்லா செயல்களையும் மறக்காமல் புரிந்தான். ஒரு நல்ல மகனில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதில் அவன் உறுதியாய் இருந்தான்.

    ரவியின் சகோதரன் – சுரேஷ் – வேலையிழந்து இந்தியா திரும்பினான். மும்பை-யில் ஒரு அதி சொகுசான அபார்ட்மென்ட் வாங்கினான். தன்னோடு வந்து இருங்கள் என்று ரவி பலமுறை அழைத்தும் தில்லி வராத பெற்றோர்கள், சுரேஷ் அழைத்ததும் பூர்விக கிராம வீட்டைவிற்று, சுரேஷ்-இன் குடும்பத்துடன் இருக்க மும்பை வந்தார்கள்.

    கிரகப்ரவேசத்திற்குப்போனபோது, சுரேஷ்-இன் புது அபார்ட்மெண்டை பார்த்து வியந்துபோன மாலா "நமது ஒரு படுக்கையறை, ஹால் கிட்சன் வீடு உங்கள் பெற்றோர்களுக்கு வசதி குறைவானதாகத்தான் படும்" என்று ரவியின் காதுக்குள் முணுமுணுத்தாள்.

    +++++

    அம்மாவும் அப்பாவும் ரவியின் வீட்டிற்கு வந்து முன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மும்பை-இலிருந்து சகோதரனிடம் அம்மா தன் கைத்தொலைபேசியில் பேசுவது வெகுவாகக்குறைந்திருந்தது. அப்படி போன் வந்தாலும், அம்மா கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு, அடுத்த அறைக்கு போய் யாருமே கேட்காத படி பேசலானாள். சத்தம் போட்டே தொலைபேசியில் பேசும் பழக்கம் கொண்ட ரவியின் குடும்பத்திற்கு இது புதுசு. போன்-இல் மேள்ளபெசுவது நாகரீகம்தான். ஆனால், அந்த நாகரீகம் நான் பேசிக்கொள்வதை இவன் கேட்கக்கூடாது என்ற எண்ணத்தில் மட்டும் பேணப்பட்டால்? ரவிக்கு அம்மாவின் "நாகரீகம்" ரசிக்கவில்லை.

    +++++

    ரவியும் சுரேஷும் அதிகம் போன்-இல் பேசிக்கொள்வதில்லை. பொங்கலுக்கும், தீபாவளிக்கும் என்றுதான் பேசிக்கொள்வார்கள். "எப்படி இருக்கே" என்ற கேள்விக்கு பதில் சொன்ன பின் அப்புறம் என்ன பேசுவது என்ற குழப்பத்தில், போன்-இல் மௌனம் நிலவும். அந்த மௌனம் ரவிக்கு துக்கத்தை ஏற்படுத்தும்.

    சுரேஷ் ஒருநாள் போன் பண்ணினான்.
    "நீ அடுத்து மும்பை எப்போ வரப்போறே…ஆபீஸ் விஷயமா அப்பப்போ வருவியே!"
    "இப்போதைக்கு எதுவும் சந்தர்ப்பம் இல்ல…ஏன் கேட்கறே?"
    "இல்ல…அப்படி வந்தேன்னா அப்பாவோட சில டாகுமென்ட்ஸ் இங்கே இருக்கு…அத நீ எடுத்துகிட்டு போகலாம்"

    ரவிக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. "இப்போ என்ன அவசரம்…அப்பா ஒண்ணும் எங்கிட்ட சொல்லலியே" என்றான். "அப்பகிட்ட பேசிக்கோ" என்று சுரேஷ் சொன்னான்.

    அப்பா "என்ன டாகுமென்ட்…அம்மா எதாவது சொன்னாளா?" என்று மழுப்பினார். ரவி-க்கு எதுவும் நன்றாகப்படவில்லை.

    +++++

    மாலா மும்பை-இலிருந்து அப்பா பெயருக்கு ஒரு கூரியர் வந்ததாகவும், அதிலிருந்து வந்த ஒரு டாகுமென்ட்-இல் அப்பா கையெழுத்திட்டதாகவும் சொன்னாள். எல்லாம் ஒரே ஊகம்தான். இரண்டாவது மகனிடமே எதுவும் சொல்லவேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை. மருமகளிடமா சொல்வார்கள்?

    +++++

    டாகுமென்ட்ஸ் பற்றிய மர்ம சீக்கிரமே துலங்கியது. ஒரு சனிக்கிழமை மாலை, ரவியின் அம்மாவும் அப்பாவும்
    வீட்டருகே இருந்த குருவாயுரப்பன் கோவிலுக்கு சென்றிருந்தனர். அந்நேரம் அப்பாவின் பெயருக்கு வந்திருந்த கூரியரை ரவி பெற்றுக்கொண்டான். வந்த உறையின் வாய் திறந்திருந்தது. கூரியர் கம்பெனி அந்த தபாலை சரியாகக் கையாளவில்லை போலும்!

    எல் ஐ சி பாலிசி-க்கு எதிராக அப்பா ஒரு கடன் வாங்கியிருக்கிறார். எண்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

    +++++
    "இ…இது எப்போ வந்தது?" – அப்பாவின் குரலில் தடுமாற்றம்.
    "இது என்னதுப்பா…இந்த வயசுல லோன்…உனக்கென்ன தேவை…அப்படி இருந்தா நான் வாங்கிக்கொடுக்க மாட்டேனா?" – கோபம், ஏமாற்றம், அக்கறை – மூன்றும் சரிசம விகிதத்தில் கலந்து பணிவுடன் கேட்டான் ரவி.
    "இ..இல்லப்பா…எனக்கு எதுவும் வேண்டாம்" – அப்பாவின் விழி நேருக்கு நேர் பார்க்காதது போல் ரவிக்கு தோன்றியது.
    "அப்போ இந்த லோன்?" – ரவி விசாரணையை தொடர்ந்தான்.
    அப்பா அம்மாவை நோக்கினார். அம்மாவும் மெளனமாக "நீங்களே சொல்லுங்க" என்று சொன்னார் போலிருந்தது. அப்பா புரிந்து கொண்டு, கன்னத்தை சொரிந்து கொண்டு "உனக்கு இது தெரிஞ்சிருக்காதுன்னு தான் நினைக்கிறேன்…ஏன்னா இத்தனை வருடங்களா இதைப்பத்தி உன்னையும் சேர்த்து யாரு கிட்டயும் இதை சொல்லலே…நீ வேறு மாதிரி நினைக்கக்கூடாது… உன் அண்ணன் இந்தியா திரும்பி வந்ததிலிருந்தே வேலை கிடையாது….சிங்கப்பூரில் வாங்கிய சம்பளமே இங்கும் கிடைக்கவேண்டும் என்ற எதிர் பார்ப்பிலோ, ஆரம்பத்தில் வந்த வேலைகளை உன் அண்ணன் நிராகரிச்சான்…பின்னர் கெடைச்ச ஒரு வேலையில தன்னை சரியாய் ட்ரிட் பண்ணவில்லைஎன்று விட்டுட்டு வந்தான். அதுக்கப்புறம் பல மாதங்களாகவே ஒரு வேலைக்கும் அப்ளை பண்ணாமலேயே இருந்தான்…நானும் அம்மாவும் அவனை போர்ஸ் செஞ்சு பல வேலைகளுக்கு அப்ளை பண்ண வச்சோம்..என்னமோ தெரியலே ஒரு வேலையிலும் அவன் செலக்ட் ஆகலை…இவன் தப்பா..இல்லாட்டி ரொம்ப நாள் கேப் விழுந்துட்ட காரணத்தால் நிறுவனங்கள் இவனை ரிஜெக்ட் செய்யுதான்னு தெரியலை…"

    அப்பாவின் கண் கலங்கியது மாதிரி இருந்தது. அம்மாவோ அழுகையை கட்டுபடுத்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இரு வயதான மனிதர்களின் துக்கம், மாலாவின் மனதையும் உருக்கியிருக்கவேண்டும். பரிவுடன் அம்மாவின் தோள்களை தொட்டாள்.

    "வயதான காலத்தில் குழந்தைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் சுரேஷுக்கும் உனக்கும் கல்யாணமான பிறகும் கிராமத்திலேயே இருந்தோம். எனது நிதிகளையும் நானோ அம்மாவோ மகன்களின் மேல் சார்ந்திருக்காமல் இருக்கும்படியே திட்டமிட்டேன்…ஆனால் இரு மகன்களில் ஒரு மகன் என்னை நம்பியே இருப்பான் என்று எனக்கு தெரியாமல் போய் விட்டது. சுரேஷ் தன் எல்லா சேமிப்பையும் கரைத்து வீடு வாங்கியதோடு சரி. அவன் குடும்பம் என்னுடைய பென்ஷன் மற்றும் நிரந்தர வைப்பு நிதி வட்டியிலேயே நடக்கிறது. இப்போது நானும் அம்மாவும் உன்னுடன் இருப்பதால், எங்களுக்காக அவன் செலவு எதுவும் செய்யவேண்டியதில்லை."

    "இந்த லோன் கூட சுரேஷின் மூத்த பையனின் கல்லூரி சேர்க்கைகாகத்தான்..இன்னும் மெச்சூர் ஆகாமல் இருக்கிற என்னோட ஒரே பாலிசிய வச்சு வாங்கினேன்"

    அம்மா கொஞ்சம் அமைதியான மாதிரி தெரிந்தது. மாலா அம்மாவுக்கு நீர் பருகத்தந்தாள். கழுத்தின் உருண்டை உருள "கடகட"வென்று அம்மா தண்ணீர் குடித்தாள்.

    "நீ சுரேஷ் மாதிரி இல்லை. எதையும் சமயோசிதமா யோசிச்சு நடுநிலையான நோக்கில் முடிவெடுப்பாய். எந்த நிலைமையிலும் உன் கால்கள் தரையில் ஊன்றியிருக்கும். வானத்துக்கு ஆசை பட்டு நிற்கும் நிலத்தை எப்போதும் இழக்கமாட்டாய்…உண்மையாசொல்றேன், உங்க அண்ணன்கிட்ட இல்லாத உன்னோட ரெசிலீயன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்…"

    தான் அப்பாவை பற்றி அறிந்திருப்பதை விட அப்பா தன்னை பற்றி நன்றாக அறிந்திருக்கிறார் என்பதை ரவி உணர்ந்தான்.

    +++++

    அம்மா தொலைகாட்சி பார்க்க ஆரம்பித்திருந்தாள். எம் எஸ் பற்றிய ஒரு டாகுமெண்டரி ஓடிக்கொண்டிருந்தது. "பாவயாமி ரகுராமம்" பாடிக்கொண்டிருந்தார் எம் எஸ். அடுத்த அறையில் அப்பா ரவியின் பையனுக்கு கணக்கு பாடம் சொல்லிகொடுக்க ஆரம்பித்தார். ரவிக்கு அப்பாவும் அம்மாவும் அன்று மாலைதான் மும்பையிலிருந்து வந்திறங்கியது போல் பட்டது.

  • தெரிவு

    எனது நண்பன் – கார்த்திக்குக்கு, எங்களது HR அணியிடமிருந்து வந்த ஈமெயில் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. “அனுபவமிக்க, ஏற்றுமதி வியாபாரத்தை பெருக்க வல்ல மூத்த நிர்வாகியை தேடுகிறோம். உங்களின் தற்குறிப்பை ஒரு வேலைவாய்ப்பு இணைய தளத்தில் கண்டோம். எனவே உங்களை தொடர்புகொள்கிறோம்”

    கார்த்திக் கரிசனத்துடன் “என்னடா உங்க ஆளுங்க இன்னொரு மேலாளரை தேடுறாங்களா? ஏதேனும் பிரச்சனையா?” என்று கேட்டான். “அதெல்லாம் ஒன்னுமில்லடா…நிறுவன விரிவாக்கத்துக்காக இன்னொரு ஆளை நியமனம் பண்ணுவாங்களா இருக்கும்?” என்று தைரியத்தை செயற்கையாக எனது குரலில் வரவழைத்து பதில் சொன்னேன்.

    எங்களது சிறு நிறுவனத்தில் எத்தனை விற்பனை மேலாளர்கள் வேண்டும்? ஒருவனான நானே, பல சமயங்களில் வேலை-இல்லாமல் இருக்கிறேன். குறிப்பிட்ட பருவத்தில் விளையும் மூலிகைகளை பதப்படுத்தும் வியாபாரத்தில் இருக்கும் நிறுவனத்தில், விற்பனை மேலாளரின் வேலை சில மாதங்களுக்கே. மற்ற நேரங்களில் எல்லாம், விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் அனுப்புகை ஒருங்கிணைப்பே மிஞ்சும். பல சமயம், குறைந்த வேலையின் அளவு என்னை-யே ரொம்ப கவலைபடுத்தும்.

    ஆனால் இது நான் கொஞ்சம்கூட எதிர்பாராதது. இந்த சின்ன நிறுவனத்தின் ஏற்றுமதியை நோக்குவதற்கு நான் மட்டும் போதாதா?. சமீபத்தில் வாங்கிய வீட்டுக்கடனை நினைத்துப்பார்த்தேன். பயம் நிறைந்த ஒரு சஞ்சலமான உடல் உணர்வை எனது வயிற்றுப்பகுதியில் உணர்ந்தேன். இப்போது வரும் சம்பளத்தில் தவணையை கட்டுவதே கடினமாகத்தான் இருக்கிறது. வேலை வேறு போய்விட்டால்?

    பாஸ்-சின் அறைக்கு போனேன். ஒரு வணிக நாளேட்டில் தன முகத்தை பதித்து எதையோ வாசித்துக் கொண்டிருந்தார். படபடப்புடன் என் நண்பனுக்கு வந்த ஈமெயில்-ஐ பற்றி சொன்னேன். அந்த ஈமெயில்-ஐ காட்டவும் செய்தேன். அமைதியாக அதைப்படித்த முதன்மை நிர்வாக அதிகாரி, “எனக்கு தெரியவில்லை…டைரக்டர்-இடம் பேசுகிறேன் இதைப்பற்றி…நீ எதுவும் கவலைப்பட வேண்டியதில்லை”

    முகவாட்டத்துடன் அவருடைய அறை-இலிருந்து வெளியே வந்தேன். பத்து வருடங்களாக இதே நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். புது வேலை தேடுவது எப்படி என்பதே மறந்துவிட்டிருந்தேன். அப்படி வேறு வேலை கிடைத்தாலும், புது சூழ்நிலையில் தாக்குப்பிடிக்கும் திறன் என்னிடம் இருக்கிறதா? என் மீதே எனக்கு சந்தேகம்.

    +++++

    அடுத்த இரண்டு நாட்களுக்கு எனது பாஸ் அலுவலகத்துக்கு வரவில்லை. வைரல் காய்ச்சல் என்று கேள்விப்பட்டேன்.

    எனது அமைதியின்மை தொடர்ந்தது. நேராக HR மேனேஜர்-ஐ சென்று கேட்டு விடலாமா? “என்னை தூக்கி எரிய திட்டமிடுகிறீர்களா?” என்று ! எப்படி போய்க்கேட்பது? அவர் இத்தகைய செய்திகளை ரகசியமாகத்தானே வைத்திருப்பார்?

    இதைப்பற்றி நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக இருக்கும் எனது பாஸ்-சும் தெரியாது என்று சொல்கிறாரே? கபட நாடகம் ஆடுகிறாரோ? தொழிற்சாலை நிர்வாகம், நிதி, கொள்முதல் மற்றும் விற்பனை என்று எல்லாவற்றிற்கும் பொறுப்பை ஏற்று, இயக்குனர் வாரியத்திற்கு நேரடியாக பதில்சொல்லும் அளவிற்கு உயர்ந்த பொறுப்பை வகிப்பவருக்கு ஒரு விற்பனை மேலாளரை தேடுவது பற்றி எப்படி தெரியாமலிருக்கும்?

    +++++

    கார்த்திக் திரும்பவும் போன் செய்தான். “நீ தப்பா நினைக்கலேன்னா நான் இந்த வேலைக்கு அப்ளை பண்ணட்டுமா?” – ஒரு மாதிரியான தயக்கம் தொனிக்கும் குரலில் எழுந்தது இந்த வேண்டுகோள். என்ன பதில் சொல்வது?

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் ஒரு குளிர்பான நிறுவனத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்தது என்று, தன் குடும்பத்துடன் அங்கு குடி பெயர்ந்தான் கார்த்திக். வசதியான வாழ்க்கை. நல்ல சம்பளம் என்று நன்றாகத்தான் இருந்தான். திடீரென்று ஒரு நாள் தன் வேலையை இழந்தான். அவன் சொன்னவரையில், அவனுடைய உயர் அதிகாரிக்கு இந்தியனான இவனை பிடிக்கவில்லை என்பதே காரணம். வேலை இழந்தபின்னும், வேறு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆஸ்திரேலியாவிலேயே இன்னொரு ஒரு வருடம் ஓட்டினான். சேமிப்பு கரைந்தபோது, இந்திய திரும்பி வந்தான். நல்ல வேலையாக, இந்தியா திரும்பி வந்தவுடன் அவன் மனைவிக்கு ஒரு வேலை கிடைத்தது.

    இவனையோ துரதிர்ஷ்டம் இந்தியாவிலும் விடவில்லை. நல்ல படிப்பு, நல்ல முன்னனுபவம் இருந்தும்,அவன் எதிர்பார்த்த வேலை எதுவும் அவனுக்கு அமையவில்லை. ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த காரணத்தால், அவனுடைய குடும்பத்தினருக்கு வாழ்க்கைத்தரத்தை இந்தியா வந்தும் சுருக்கிக்கொள்ள முடியாமல் போனது. மனைவியின் சம்பளம் மட்டும் அவர்களின் வாழ்க்கைத்தரத்துக்கு போதுமானதாக இருக்கவில்லை. சில பொதுவான நண்பர்கள் மூலம் கார்த்திக்கின் உயரும் கடன்சுமை பற்றி நான் கேள்விப்பட்டிருந்தேன்.

    எப்போது அவனிடம் பேசினாலும், வேலையின்மை அல்லது துரதிர்ஷ்டம் – இவற்றைபற்றியே பேசிக்கொண்டிருப்பான். அவனுடைய நல்ல உள்ளத்திற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் துணை நிற்கக்கூடாதா என்று எண்ணிக்கொள்வேன்.

    எந்தத்திருப்புமுனையும் இல்லாமல் சோர்வுற்ற நேரத்திலும், ஒரு நல்ல நண்பனாக தனக்கு வந்த நேர்முக அழைப்பை பற்றி எனக்கு சொல்லி என்னை எச்சரிக்கைப்படுத்திய அவன் உள்ளம் என்னை உருகவைத்தது. என்னுடைய பாதுகாப்பின்மை என்னிடமிருந்து விலகியது.

    “நீ அப்ளை பண்ணுடா…உன்னுடைய முன்னனுபவத்துக்கு ஏற்ற வேலைடா…உன்னுடைய திறமைக்கு, இந்த வேளையில் நன்றாகவே ஜொலிக்க முடியும்…என்ன இன்பர்மேஷன் வேணும்னாலும் கேளு…நான் சொல்றேன்…”

    “ரொம்ப தேங்க்ஸ் டா”

    +++++

    விடுமுறையிலிருந்து திரும்பிய பிறகும் பாஸ்-சின் மௌனம் தொடர்ந்தது. நான் அவரிடம் பேசிய விஷயத்தை பற்றியோ என்ன நிகழ்கிறது என்றோ அவர் ஒரு விளக்கமும் வழங்கவில்லை. கார்த்திக்கை வேலைக்கு விண்ணப்பிக்க சொன்ன பிறகு, இதைப்பற்றி எந்த விளக்கமும் தேவை இல்லை என்ற மனநிலையிலேயே நானும் இருந்தேன்.

    +++++

    ஒரு வேலைவாய்ப்பு ஆலோசகரிடம் சில ஆலோசனைகளை எடுத்துக்கொண்டேன். புது பயோ-டாடாவை தயார் செய்தேன். இரண்டு-முன்று நிறுவனங்களின் நேர்முகங்களுக்கும் சென்று வந்தேன். பல வருடங்களாக வேலை செய்தும் மிக அதிகமான சம்பளம் வாங்காமல் ஏன் இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல திணறினேன். உண்மையாகக்கூறினால், நான் ஏன் இந்த நிறுவனத்தில் இத்தனை வருடங்களாக வேலை பார்த்துவருகிறேன் என்று எனக்கே தெரியவில்லை?

    +++++

    கார்த்திக் என்னை அப்புறம் தொடர்புகொள்ளவில்லை. அவனுடைய நேர்முகம் நடந்ததா என்றோ எப்படி நடந்தது என்றோ நான் அறிய முயலவில்லை.

    +++++

    தோல் பதனிடும் நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. பெரிய நிறுவனம். பெரிய நிறுவனங்களில் நான் எப்போதும் வேலை செய்தது இல்லை. ஏற்கெனவே நடந்த நேர்முகங்களில் நான் சரியாக பதிலளிக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தது. கார்த்திக்கிடமிருந்து ஆலோசனை பெற்றாலென்ன? அவனுக்குதான் பல பெரிய நிறுவனங்களில் பல காலம் வேலை செய்த அனுபவம் இருக்கிறதே!

    கார்த்திக் போன்-ஐ எடுத்தவுடன் “நூறு வயசுடா” என்றான்.
    “என்ன அப்படி சொல்றே?”
    “உங்க நிறுவனத்திலிருந்து எனக்கு ஜாப் ஆப்பர் இன்னிக்கு தான் வந்தது”
    ஒரு புறம் மகிழ்ச்சி.மறுபுறம் சோகம்.
    “கங்கிராஜுலேஷன்” என்றேன்.
    “நீ எனக்கு கீழ வேலை பண்ணுவியாடா?”
    “….”
    “உங்க பாஸ்-அ கழட்டிவிடப்போறாங்க அடுத்த வாரம்…தன்னோட காரியதரிசிய மொலேஸ்ட் பண்ண முயற்சித்ததா வந்த கம்ப்ளைன்ட்-இல் தன்னுடைய தப்பை உங்க பாஸ் ஒத்துக்கிட்டார்…வேறு வேலை தேடிக்கொள்ள அவர் கேட்ட ரெண்டு மாசம் டைம் அடுத்த வாரம் முடிவடையுது…இன்னும் பத்து நாளைக்குள்ள என்னை ஜாயின் பண்ண சொல்றாங்க…நீ என்னடா சொல்றே?…நான் பாஸ்-ஆ இல்லாம ஒரு குழு அங்கத்தினன் மாதிரி உன்கூட வேலை செய்வேன்…நீ கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம்”

    கார்த்திக்-கின் வேலையின்மை பிரச்னை முடிவுக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியே. ஒரு நண்பனே பாஸ்-ஆக வருவதிலும் பிரச்னைகள் இருக்கக்கூடும். ஆனால் அதைப்பற்றி அப்போது யோசிக்கவேண்டுமென்று நான் கருதவில்லை.

    பாஸ்-இன் அறையிலிருந்து நூறடி தூரத்திலேயே என் அறை இருக்கிறது. பாஸ்-இன் மன்மத லீலைகள் இவ்வளவு நடந்திருக்கிறது…நான் அறிந்திருக்கவே இல்லை. ஆனால் நண்பனுக்கு வந்த நேர்முக அழைப்பு பற்றிய செய்தி மட்டும் என்னை எட்டி…பாதுகாப்பின்மை, அமைதியின்மை, உள்ளநெகிழ்ச்சி, விட்டுகொடுக்குமுணர்வு என்று பல்வேறான உணர்ச்சிப்ரவாகங்களை என்னுள் எழுப்பியிருக்கிறது. எந்த செய்தி நம்மை அடையும் என்பதும அவை எத்தகைய உணர்வுகளை நம்முள் எழுப்பும் என்பதும் எதை பொறுத்து அமைகிறது? இதற்கு விடை தெரியாது. ஆனால், எப்போது ஒரு குறிப்பிட்ட கணத்தில் பாதுகாப்பின்மையை இழந்து விட்டுக்கொடுப்போம் என்ற உணர்வு தோன்றியதோ.அப்போது என்னுள் ஏதோ ஒன்றுதான் அந்த உணர்வு மாற்றத்தை தெரிவு செய்திருக்கக்கூடும் என்ற திடீர் உட்பார்வை எனக்கு ஆழமான ஆனந்தத்தை அளித்தது. இப்போது என்னுள் தெளிவு நிறைந்திருந்தது. சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு வேலை தேட ஆரம்பித்த நான், இக்கணம்முதல் தன்னினைவுடன் தெரிவு செய்து வேலையை தேடவேண்டும்.

    “உனக்கு கீழ வேலை பன்னரதுலே ஒரு பிரச்னையும் இல்ல..சந்தோஷம்தான்…உனக்கு நான் எதுக்கு போன் பண்ணேன்னா, ஒரு நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்திருக்கு…அதுக்கான தயாரிப்பில் நீ எனக்கு கொஞ்சம் உதவி செய்வாயா?”

  • நிலம்

    நிலம் என்ற ஒன்று படைக்கப்பட்டிராவிடில், சிருஷ்டி செய்யப்பட்ட உயிரினங்கள் எங்கு வாழ்ந்திருக்கக்கூடும்? எல்லாமே நீர் வாழ் உயிரினமாகவே இருந்திருக்குமா?. நிலமும் நீரும் உயிரினங்கள் வருவதற்கு முன்னரேயே உருவாகிவிட்டனவே!

    நிலத்துக்கேன்றும், நீருக்கேன்றும் தனித்தனி உயிரினங்கள் தோன்றின. பரந்து, விரிந்திருக்கும் நிலத்தின் ஒவ்வொரு பரப்பிலும், அப்பரப்பின் இயற்கையின் தனித்தனி உருவைப்போல விதம் விதமான உயிரினங்கள் ஜீவித்து வருகின்றன. புரியாத ஏதோ ஒரு கடமையை இவ்வுயிரினங்களுக்கு இயற்கை அளித்திருக்கிறது.

    ஒவ்வொரு புவியியல் பகுதிகளிலும், நிலத்தின் உரு மாறுகிறது. பள்ளத்தாக்கு, மலை நிலம், வயற்காடு, வெப்பமண்டல காடு, எவ்வளவோ உரு? அங்கங்கு வாழும் உயிரினங்களும், அந்தந்த நிலத்துக்கேற்றவாறு உள்ளன. சில மிருகங்கங்கள், சில பிரதேசங்களில் மட்டுமே வாழ்கின்றன. ஒட்டகத்தைக்காண பாலைவனமும், கரடிகளைக்காண குளிர் பிரதேசமும் போகவேண்டியிருக்கிறது.

    +++++

    உலகத்திலே நுகர்ந்து அனுபவிக்க பல பொருள்களும், விஷயங்களும் இருக்கின்றன. வெறும் பொருட்கள் மட்டும் இருந்திருந்தால், அனுபவம் முழுமை பெற்றிருக்காது. பொருட்களின் அழகையும் நுண்மையையும் ரசிக்க, உணர்ச்சி என்ற ஒன்றும் தேவையாயிருக்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருளோடு, உணர்ச்சி என்ற கண்ணுக்கு தெரியாத கருவியும் இணைந்து அப்பொருளுக்கும் அப்பொருளை நுகர்பவருக்கும் ஓர் அர்த்தத்தை அளிக்கின்றன.

    உணர்சசிக்கருவிகள் பல்வேறு வகைப்பட்டன – பயபக்தி, உறுதி, தன்னம்பிக்கை, திறன், நிச்சயம், சந்தோஷம், சுகம், தயை, தைரியம், தீர்மானம், உற்சாகம், ஆவல், ஆற்றல், கிளர்ச்சி, எதிர்பார்ப்பு, எழுச்சி, சிறப்புத்தன்மை, ஆச்சர்யம், உவகை, நன்றி, போற்றும்தன்மை, கவர்ச்சி, வசீகரம், நம்பிக்கை, நகைச்சுவை, ஊக்கம், அக்கறை, சுறுசுறுப்பு, அன்பு, விளையாட்டுத்தன்மை, அமைதி, இன்பம், பலம், பெருமை, நேர்மறை, ஸ்திரம், கம்பீரம், மேன்மை, சிலிர்ப்பு – வரிசை அனகோண்டா பாம்பு மாதிரி மிக நீளமானது.

    பயம் மற்றும் வன்முறை சார்ந்த உணர்ச்சிகள், நேர்மறைக்கு மாறான உணர்ச்சிகள். எதிர்மறை உணர்ச்சிகள். தன்னைக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற தற்காப்பு உணர்வின் மறுவடிவமாக அவைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

    எல்லா உணர்ச்சிகளும் எல்லாருக்கும் ஒரே அளவினதாய் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சாதாரண ஒரு செல் உயிரினத்திலிருந்து, சிக்கலான படைப்புகள் வரை பல படைக்கப்பட்டிருக்கின்றன. சிக்கலான உயிரினங்களுக்கு சிக்கலான, மேலே குறிப்பிட்ட குறிப்பிடப்படாத பல உணர்ச்சிக்கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. எந்த உணர்ச்சி எப்போது உபயோகிக்கப்படும் என்று சொல்வது மிகக்கடினம். அந்த உயிரினத்தின் ஆளுமையையும், சமூக பழக்கங்களையும், அப்போதைய மனநிலையையும் பொறுத்தது. இதற்கும் மேலாக அந்த உயிரினத்தின் தன்னினைவுடன் இயங்கும் அறிவை பொறுத்தது.

    +++++

    பொருள் ஒன்று. ஆனால் அதைக்காணும்போது ஏற்படும் உணர்ச்சிகள் வெவ்வேறு. கருநிறமான, நீளமான பாம்பு. பயவுணர்ச்சியை ஏற்படுத்தலாம். அல்லது அறியும் ஆவலை ஏற்படுத்தலாம். கொன்றுபோடும் வன்முறையை எண்ணத்தை உண்டாக்கலாம். அதே இன பெண் பாம்புக்கு காதல் உணர்ச்சியை தரலாம்.

    +++++

    கரும்பாம்பு கரும்பு விளை வயலின்னடுவே நகர்ந்து கொண்டிருந்தது. விவசாயி புற்களை வெட்டிக்கொண்டிருந்தான். புதர்போன்று பருமனான வளர்ந்திருந்த புற்களுக்கு நடுவே சுருண்டுபடுத்தது. அதே இடத்தில் சருகு, வாடிய தழைகள் என்று குப்பைகூடமாக இருந்ததால், ஒரு பாதுகாப்பான உணர்வுடன் பாம்பு இளைப்பாரிக்கொண்டிருந்தது. விவசாயியின் மண்வெட்டி புதரை நெருங்கியதும், தனது வேகத்தைக்கூட்ட, பாவம் ஒரு நொடியில், பாம்பு இரு துண்டுகளாக ஆனது. தலைப்பாகம் கொஞ்சம் அசைவதைப் பார்த்த விவசாயி, அதனை இன்னொரு வெட்டு வெட்டினான்.

    என்னென்ன உணர்ச்சிகள் இந்த காட்சியில் பயன்படுத்தப்பட்டன? –
    பாம்பு : களைப்பு, பாதுகாப்பு, சுகம், கவனமின்மை.
    விவசாயி : சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, கவனமின்மை, வன்முறை

    கவனமின்மை இரு வரிசைகளிலும் வருகிறது. கவனமாய் இருப்பது யாருடைய பொறுப்பு? பெரும்சிக்கல் இல்லாத “தொடர்ந்து வாழ்தல்” என்ற எளிய இலக்கை மட்டுமே கொண்ட ஓர் உயிரினத்தினுடையதா? அல்லது தானே சிந்திக்கும் திறம் கொண்ட, சுற்றுபுறத்தை திட்டமிட்ட நடவடிக்கை மூலம் ஓரளவு கட்டியாள தெரிந்த உயிரினத்தினுடையதா?

    நிலத்தை சரி செய்து கொண்டிருந்த விவசாயி, "பாம்பு இருக்கலாம், எனவே கவனத்துடன் பாம்பைக்கொல்லாமல், தன் வேலையை செய்ய வேண்டும்" என்ற எண்ணம் கொண்டவனாக இருப்பது அவசியமா? அல்லது "தெரியாத்தனமாக படுத்திருக்கும் பாம்பை மிதித்து விடுவேன் எனவே கவனத்துடன் வேலை செய்து, பாம்பைக்கண்டால், அதை வெட்டி எரிந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்"? என்று இருப்பது அவசியமா?

    +++++

    அதே விவசாயி அதே நிலத்தில் சிலகாலம் கழித்து உழுதுகொண்டிருந்தான். அவன் மனைவியும், இரு வயதே ஆன மகனும் கூட வயலுக்கு வந்திருந்தார்கள். மதியவுணவு உண்டபிறகு, விவசாயி உழுவதை தொடர்ந்தான். நிலத்துக்கு நடுவில் இருந்த மரத்தின் நிழலில், அவன் மனைவி மரத்தில் சாய்ந்து
    உட்கார்ந்தபடியே உறங்கலானாள். பக்கத்திலேயே, விரிக்கப்பட்ட துண்டில் மகன் உறங்கிக்கொண்டிருந்தான். ஒரு பாம்பொன்று, குழந்தையின் காலுக்கு மிக அருகே ஊர்ந்துகொண்டிருந்தது. சடக்கென்று கண் விழித்த தாய் பாம்பை நோக்க, கையில் வைத்த தடியை வைத்து அடிக்க முயற்சிக்க, அது சரியாக பாம்பின் மேல் படவில்லை. பாம்பு அவ்விடத்திலிருந்து அகலுவதற்கு முன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் காலை கொத்திவிட்டுபோனது.

    இந்த நிகழ்வை நோக்குமிடத்து, தாயின் தாய்ப்பாசம் மேலிட, பிழையான குறியுடன் குச்சி எரிந்து, பாம்பின் தற்காப்பு உணர்வை எழுப்பி, குழந்தையை கொத்தவைத்தது என்று கருத இடமுள்ளதல்லவா?.

    +++++

    சரியான வைத்தியம் சமயத்தில் கிட்டாததால், விவசாயியின் மகன் இறந்து போனான். மகன் இறந்த துயரத்தில், விவசாயி, விவசாயத்திலிருந்து கொஞ்ச காலம் விலகியிருந்தான். கிட்டத்தட்ட ஒரு வருடம், நிலத்தில் எதுவும் பயிரிடவில்லை. நிலம் கவனிப்பாரற்று, புற்களும் புதர்களும் பெருகின. பக்கத்து நிலத்தின் உரிமையாளன், விவசாயியை அணுகி "நீயோ பயிர் எதுவும் பண்ணவில்லை…உன் நிலத்தை எனக்கு விற்றுவிடேன்" என்று சொல்லவும், உறக்கத்திலிருந்து விழிப்பவன் போல "இல்லை…இல்லை…அது என் நிலம்…இந்த முறை பயிரிடலாமேன்றிருக்கிறேன்" என்று சொன்னான். விரைவிலேயே, சில குடியானவர்களை கூட்டிக்கொண்டு, தானும் நிலத்தில் மண்டிக்கிடந்த புதர்களை விலக்கி சீர் செய்ய வந்தான். நிலத்தை உழுவதர்க்கேற்றவாறு, தயார் செய்து முடித்தபோது, ஏறத்தாழ ஐம்பது பாம்புகள் இறந்திருந்தன.

    உணர்ச்சி என்பது ஒற்றை உயிரினம் என்ற அலகில் நோக்கும்போது அளக்கத்தக்கதாய், அறவரைமுறைக்கு உட்பட்டதாய் இருக்கவேண்டும் என்ற கட்டாயப்போக்கு பொதுவாக நிலவிவருகிறது. அதுவே ஓர் உயிரினத்தொகுதி என்ற அலகில் நோக்கும்போது, இன்னொரு வலிய உயிரினத்தின் முன்னேற்றம் என்ற அளவுகோலில் அடங்கிப்போகிறது.

    +++++

    மூன்று வருடங்களுக்கு பிறகு விவசாயி அந்த நிலத்தை அடுத்த நில உரிமையாளனுக்கு விற்றான். நகரத்தில் இருக்கும் தன் அண்ணன் தொடங்கிய பட்டறையில் போய் வேலை செய்யப்போவதாகவும், மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க நகரவாசம் உதவும் என்றும், மகனின் நினைவுகளை மறக்க கிராமத்தை விட்டு விலகியிருப்பது உதவும் என்றும் தன நண்பர்களிடம் சொல்லிக்கொண்டான்.

    விவசாயியிடம் நிலத்தை வாங்கியவரிடம் சிலர் வம்பு பேசினார்கள் – "மூன்று வருஷமாகவே, அவன் நிலத்தில் மகசூல் ரொம்ப கம்மி. எலித்தொல்லை மற்றும் பிற கொறிக்கும் பிராணிகளின் தொல்லை அதிகமாகவே ஆயிட்டுது. கெமிகல்ஸ் அது இதுன்னு யூஸ் பண்ணிப்பார்த்தான்யா..ஒண்ணும் முடியலே…"

    "அதுக்கென்ன, நம்ம கிட்ட கோயம்புத்தூர் அக்ரிகல்ச்சர் யுனிவர்சிட்டி-ல படிச்ச மேனேஜர் இருக்காரே…கவலை எதுக்கு"

    +++++

    விவசாயியின் குடும்பம் ஊரை அடுத்த கோயிலுக்கு வெளியே இருந்த பாம்புபுற்றுக்கு பால் வைத்து படையல் செய்துவிட்டே கிளம்பிப்போனது.

    +++++