Category: Buddhism

  • மனக்கற்பனையின் வலை

    அலுவல் ரீதியான குழப்பங்கள் தூங்க விடாமல் செய்தன. மூன்று மணிக்கே எழுந்து விட்டேன். குழப்பங்களுக்கு திடத் தன்மை இல்லை என்ற எண்ணத்தை விதைத்து சற்று அமைதியாய் அமர்ந்திருந்தேன். குழப்பம் எங்கிருந்து தொடங்குகிறது? என்ற கேள்வியை எழுப்பி முடிச்சை அவிழ்க்க முயன்றேன். நிறைய முடிச்சுகள். ஒரு வலைக்குள் அமர்ந்திருக்கிறோம்! இந்த வலையில் பல்லாயிரம் முடிச்சுகள். என்னுள் இருந்த மிலரேபா கண் விழித்தார்.

    —-

    லட்சியம் என்பது வெறுமை
    அது பல காரணகாரியங்களைச் சார்ந்த, அறிய முடியாத எதிர்காலத்தில் என்றோ நிகழத்தக்க ஒரு நிழல்.
    அதை அடைய வேண்டுமெனும் பேராசை, இப்போதே உன் சுமையை அதிகப்படுத்த வேண்டாம்.
    உன் நரம்புகளுக்குள் எதிர்பார்ப்பின் ரத்தத்தை பாய்ச்சிவிடாதே.
    நரம்புத் திசுக்களைச் சுற்றி ரத்தம் ஓடுவது இயற்கை;
    ஆனால் நரம்பிழைக்குள் ரத்தம் ஓடுவது இயற்கையல்ல.

    லட்சியம் என்பது கற்பனை
    கற்பனை நிகழ்ந்துவிடும் என்ற உறுதி
    அதன் ஈர்ப்பில் லயித்திருப்பது! –
    அடுத்த வார விருந்துக்கு
    இப்போது பட்டினி கிடப்பது

    போட்டி ஒரு கற்பனை
    யார் மீது,
    எதன் மீது,
    போட்டி?

    தான் நடக்கும் பாதையில்
    யாரோ வந்துவிடுவார்கள் எனும் அதீத பீதி,
    இன்னொரு பாதையில் நடப்பவரைத்
    தள்ளிவிடும் எண்ணம் —
    நம் கற்பனையில் மட்டுமே உள்ளது போட்டியுணர்வு!

    நம் இலக்கை நாம் அடைவதும்,
    அவன் இலக்கை அவன் அடைவதும்
    போட்டியுணர்வின் அடிப்படையில் தான் என எண்ணுதல் —
    மணற்பரப்பில் தெரியும் நீர்க்காட்சி மேலான தாகம்!

    எதிர்காலத்தின்
    ஏதோ ஒரு புள்ளியைப்
    பிடித்துத் தொங்கிக் கொண்டிருத்தல் —
    கனவு ஆப்பிளின்
    கற்பனைச் சுவைபார்த்தல்.

    போர்வைக்குள் தூக்கம்
    கனவு வலைக்குள் இயக்கம்
    கொத்த வரும் பாம்பிலிருந்து தப்புதல் சுலபம்
    போர்வையை விலக்கி கண்விழித்தல்
    பாம்பை இல்லாமல் ஆக்கி விடும்.

  • சத்தம் அநித்தியம்

    சத்தம் அழியக்கூடிய பொருள் எனும் விவாதம் நிறைய பவுத்த நூல்களில் இடம் பெறுகின்றன

    …. சத்தம் அநித்தம் என்றல்
    பக்கம், பண்ணப் படுத லாலெனல்
    பக்கத் தன்ம வசனமாகும்…

    (மணிமேகலை, 29 : 68-71)

    திக்நாகர் சொல்கிறார் : “அநித்ய: ஸப்தைதி பக்ஷ வசனம் க்ருதகத்வாத்இதி பக்ஷதர்ம வசனம்” (ப்ரமாண சமுச்சய)

    கிட்டத்தட்ட மொழியாக்கம் செய்தவை போல தோன்றுகிறதல்லவா?

    சத்தம் நிரந்தர பொருளல்ல ; அழியக்கூடியது, ஏனெனில் அது யாராலோ எதனாலோ எழுப்பப் படுபவை.

    இந்த வாதத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? வேத ஒலிகளுக்கு நித்தியத் தன்மை வழங்கிய இந்து தத்துவ பள்ளிகளுக்கு (மீமாம்சை, ந்யாய) நேரடி எதிர்வினை தரும் முகமாக பவுத்தம் எழுப்பிய வாதம் இது. குமாரில பட்டர் போன்ற மீமாம்சை தத்துவ வாதிகள் வேத மந்திரங்கள் நித்தியத்தன்மை கொண்டவை என்றனர். அச்சத்தங்கள் உருவாக்கப்படாதவை (அபௌருஷேய) என்றும் கூறினர். ஒலி நித்தியம் ஏனெனில் அது கண்ணுக்குப் புலனாகாதவை, ஆகாசம் போல.

    திக்நாகரும் அவரது சீடர் தர்மகீர்த்தியும் இதைக் கையிலெடுத்துக் கொண்டு முக்கூற்று வாத முறையில் சத்தம் அழியக்கூடியது என்று வாதாடினர்.

    பக்கம் (Skt.Pratijna) : “சத்தம் அநித்தியம்”

    ஏது (Skt.Hetu) : “ஏனெனில் அது எழுப்பப்படுவது”

    உதாரணம் : “பானையைப் போல்”

    பண்ணப்படுவது எதுவும் (“பேச்சு”, “ஆயுதம்”) அழியக்கூடியவை, எனவே அநித்தியமானவை.

    “ஒலியை” பௌத்தர்கள் குறி வைத்ததற்கான காரணங்கள் – (1) வேதங்களின் காலமின்மை என்ற மீமாம்சகர்களின் வாதத்தை முறிப்பது. (2) சார்பியல் தோற்றத்தை (ப்ரதித்ய சமுத்பாதம்) நிரூபிப்பது (3) மீமாம்சகத்தின் சடங்கு உலகம் வேத மந்திரங்களின் நித்தியத்தன்மை கொள்கையைச் சார்ந்திருந்தது

    பின்னர் வந்த வைதீக தத்துவவாதிகள் (நியாய – வைசேசிகர்கள்) தமது நிலைப்பாட்டை சற்று செம்மைப் படுத்திக் கொண்டு நித்ய சத்தம், அநித்திய சத்தம் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தினர். பௌத்தர்களோ அதற்கும் பதிலடி கொடுத்தனர் – “அனைத்து சத்தங்களும் அழியக்கூடியவை தாம்; வெளிப்படாத ஒலி என்பது கருத்தியல் புனைகதை” என்றனர்.

    இவ்விவாதம் வெறும் ஒலியியல் பற்றியது மட்டுமல்ல. “சுருதி” -“பௌத்த அனுமானகம்”, நித்தியவாதம் – அநித்தியவாதம் – ஆகியவற்றுக்கிடையிலான மோதல். “சத்தம் அநித்தியம்” எனும் Syllogism வைதீக பள்ளிகளின் மீப்பொருண்மையியல் கூற்றுகளைத் தகர்க்கும் கருவியாக பயன்பட்டது.

  • பகவத் கீதையும் பவுத்தமும்

    பகவத் துதியை ஒரு கருத்தியலாக முன் வைத்த நூல் பகவத் கீதை. இதனை பக்தி மார்க்கம் என்று வகைப்படுத்துகிறது பகவத் கீதை. இதே நூலில் வலியுறுத்தப்படும் ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் – இரண்டையும் சேர்த்து வீடு – பேறடைய மூன்று மார்க்கங்களைத் தொகுத்தது கீதை. பவுத்தத்தின் மும்மணிகள் – புத்தம், தம்மம், சங்கம் போலவே ஏற்கனவே இருந்த ஞானம், கர்மம் – ஆகிய இரண்டோடு “பக்தி” என்ற ஒன்றை இணைத்தது வைதீக மதம். “பகவத் கீதையின் கருத்துக்கள் களவாடப்பட்டவை” என்ற பொருளில் யாரோ ஒருவர் பேசிய குறுங்-காணொளியை ஓரிரு தினங்கள் முன் கேட்டபோது “களவாடல்” என்று எப்படிக் கூற முடியும் என்ற கேள்வி எழுந்தது. பவுத்தத்தின் எழுச்சிக்கு வைதீக மதத்தின் எதிர்வினை என்றுதான் இதைச் சொல்ல முடியும்.

    பவுத்தம் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் சமூகத்தின் உயரடுக்கு வர்க்கங்களையும் ராஜரீக விஷயங்களில் சம்பந்தப்பட்டிருந்த க்ஷத்திரியர்களையும் அது அதிகம் ஈர்த்தது. இவ்விரண்டு குழுக்களின் ஆதரவில் அது வரை தழைத்து வந்திருந்த வைதீக மற்றும் சாதாரணர்களின் ‘இந்து’ மதம் தம்முடைய ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கக் கூடும். இக்கால கட்டத்தில் பவுத்தத்தின் மீதான பல்வேறு “ஆத்திக எதிர்வினைகளை” – விலங்குப்பலியை தடை செய்தல், சாதிக்கட்டுப்பாடுகளை இறுக்குதல், ‘இந்து’ சமயத்தின் மிகசச்செயல் திறன் மிக்க ஆயுதமான “உட்கிரகித்தல்” போன்றவைகளை – ‘இந்து’ மதம் கைக்கொண்டது. புத்தரை விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக உள்ளிழுக்க முயன்றது. புத்தர் விஷ்ணுவின் அவதாரமானதற்கு சொல்லப்படும் காரணம் – “தவறான போதனையால் எதிரிகளை தவறாக வழிநடத்தி அவர்களை பாவக்குழியில் தள்ளவே ; இதற்காகவே வேத யாகங்களை ஒழிப்பை புத்தர் பேசினார்.” “ஒன்பதாவது அவதாரம்” எனும் அடிப்படையில் புத்தர் பற்றிய புராணக்கதைகளுக்கு சீரழிந்த பவுத்தம் எந்த ஆட்சேபனையும் அளிக்காத காலகட்டங்களில் தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் புத்தரின் வழிபாட்டை பவுத்த உபாசகர்கள் மேற்கொள்ள வைதீக மதம் அரை மனதுடன் சம்மதித்ததும் பின்னர் நடந்தது.

    “பகவத் கீதையின்” கருத்துக்கள் “பவுத்தத்திலிருந்து” பெறப்பட்டவையா என்ற கேள்விக்கு வருவோம். கீதையில் வரும் அர்ஜுனனின் தடுமாற்றத்தை (அதாவது, யுத்தம், அதனால் எழக்கூடிய விளைவுகளின் பாதிப்பு – கர்மா அல்லது செயலின்மை ஆகியவற்றின் வாயிலாக புனிதமான சாதிக் கடமையை மீறுதல்) பல க்ஷத்திரியர்கள் மற்றும் உயரடுக்கு வர்க்கங்கள் அக்கால கட்டத்தில் எதிர்கொண்டிருக்கக் கூடிய சூழலின் உருவகமாக பார்க்க முடியும். கர்ம மார்க்கம் (அதாவது வர்ணம் அல்லது சாதி சார்ந்த கர்மம்) மற்றும் வைதிக அமைப்பின் குறியீடாக கிருஷ்ணர் போதிக்கும் “செயலாற்று” என்னும் அறிவுரையைக் கருத முடியும். “செயலற்று” இருப்பது பவுத்தத்தின் லட்சியமான துறவறத்தைக் (Monastic Withdrawal) குறிப்பதாகக் கொள்ளலாம்.

    அர்ஜுனன் (பவுத்தப்பாதையில் சென்ற க்ஷத்திரியர்கள் மற்றும் பிற உயர் வர்க்கத்தினர்) செயலற்ற தன்மையைத் (பௌத்தம்) தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக செய்ய வேண்டிய வர்ணக் கடமைகளை அணுகுவதற்கான ஒரு புதிய வழியை கிருஷ்ணர் (பிரம்மம்) முன்வைக்கிறார். தனிப்பட்ட ஆசை அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்படும் செயல்கள் மட்டுமே கர்மாவைப் பாதிக்கும் என்றும் கிருஷ்ணர் கூறுகிறார். மற்ற எல்லா செயல்களும் (எ.கா. வர்ணக் கடமையின் காரணமாக மட்டுமே செய்யப்படும் கருமங்கள்) ஒருவருடைய கர்மாவை பாதிக்காது. அடிப்படையில் இது பிந்தைய வகை செயலின்மைக்கு (“Monastic Withdrawal”) ஒத்ததானதாக ஆக்குகிறது.

    குறைந்த தத்துவ நாட்டம் கொண்டவர்கள் பௌத்தத்தால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை என்பதைக் கண்டுகொண்ட வைதிகர்கள் மதத்துக்குள் உணர்ச்சிக் காரணியை நியாயப்படுத்தும் விதமாக பக்தி மார்க்கத்தின் கருத்தியலை, அதன் சிறப்பை கீதையில் விவரிக்கின்றனர்.

    சுருக்கமாக சொல்லப்போனால், பகவத் கீதையில் வரும் பக்தி-மார்க்கக் கொள்கையின் வளர்ச்சியை பௌத்தத்திற்கு வைதீகர்கள் தந்த எதிர்வினையாகப் பார்க்க முடியும். மேலும், பௌத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், பொதுவாக பண்டைய பிராமணியத்தினால் மிகவும் அதிருப்தி அடைந்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பண்டைய இந்தியாவின் சமூக உயரடுக்கிற்கு விரும்பத்தக்கதான ஒரு பிரபல மதமாக முறைப்படுத்தியதில் பகவத் கீதை பெரும்பங்காற்றியிருக்கிறது எனலாம். .

    பகவத் கீதைக்கும் பௌத்தத்துக்கும் என்ன தொடர்பு? வைதீக சமய நூலுக்கும் பௌத்தத்தின் அடிப்படைச் சிந்தனைக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும்? ஆத்மன்/பிரம்மம் கருப்பொருள் பகவத் கீதையின் அடிப்படை. இரண்டையும் மறுக்கும் அனாத்ம தத்துவம் பௌத்தம். ஆச்சாரிய நாகார்ஜுனர் இயற்றிய நூலான “சதுஸ்தவா”-வில் ஒரு செய்யுள் வரும்.

    “பகவானே, உம்மிடம் சிந்தனையில்லை, பாகுபாடில்லை, நோக்கங்களில்லை, எனினும் உயிரினங்களின் நன்மைக்காக ஒரு புத்தரின் பணியை இவ்வுலகில் பற்றின்றி செய்கிறீர்.” – சதுஸ்தவா (நாகார்ஜுனர்)

    கிட்டத்தட்ட இதே போன்ற கருத்து போல் ஒலிக்கும் பகவத் கீதையின் வசனம் ஒன்றுண்டு.

    “மூவுலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை ஏதுமில்லை. எனக்குத் தேவையோ, நான் அடைய வேண்டியதோ ஏதுமில்லை. இருந்தும் நான் விதிக்கப்பட்ட கடமைகளில் ஈடுபட்டுள்ளேன்” என்ற கீதையின் சுலோகம் (பகவத் கீதை – 3:22).

    ஒரே பொருள் கொண்ட வசனங்கள் இரண்டும். ஆனால் கோட்பாட்டுப் பின்னணியில் பொருத்தும் போது அர்த்தம் மாறுபடுகின்றது.

    நாகார்ஜுனரின் கருத்துப்படி – எதற்கும் சார்பற்ற சுயம் இல்லை. அனைத்தும் மற்றவற்றைச் சார்ந்தே உள்ளன. மாயை அல்லது பிரமையே உலகின் அனைத்து பொருட்களும். சாரமில்லை. நிரந்தர இருத்தல் எதற்கும் எவர்க்கும் இல்லை. எல்லாமே அநித்தியம். இவ்வுண்மையை உணர்ந்து நிர்வாண நிலையில் இருக்கும் புத்தருக்கு சிந்தனையோ, பாகுபாடோ, பற்றோ, கடமையோ, தேவைகளோ, நோக்கங்களோ எதுவும் இருக்காது. கடமையில் ஈடுபடுபவர் போல தோற்றமே நான் காண்பது. அனைத்தும் சூன்யம்.

    இப்போது மேல்சொன்ன சதுஸ்தவாவின் செய்யுளை படித்துப்பார்த்தால் நாகார்ஜுனர் என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்கும்.

    கீதையில் பேசுபவன் கடவுள், அவதாரம், பிரம்மமே அவன், அவன் நிலையானவன், அழிவற்றவன், மூலகாரணம் அவனே, அவனுக்கு காரணங்கள் எதுவும் இல்லை, மூவுலகையும் படைத்து, காத்து, அழித்து, மீண்டும் படைப்பவனுக்கு அடைய என்ன இருக்கிறது? ஆனாலும் அவன் கடமையில் ஈடுபடுகிறான். அர்ஜுனனுக்கு ரதமோட்டுகிறான். அவனே கடமை புரியும் போது க்ஷத்திரியனாக போர் புரியும் கடமை கொண்ட அர்ஜுனன் மனந்தளரலாமா? மயக்கமுறலாமா? உணர்ச்சியற்ற சாந்த நிலை அவனுக்கானதில்லை. அவனுக்கு விதிக்கப்பட்ட போரை அவன் புரிந்துதானாக வேண்டும்.

    சதுஸ்தவா-வின் இந்தச் செய்யுளைத் தழுவி பகவத் கீதையின் ஆசிரியர் எழுதினாரா அல்லது நாகார்ஜுனர் பகவத் கீதையை வாசித்துவிட்டு இந்தச் செய்யுளை இயற்றினாரா என்ற தகவல் தெரியாத வரை யாரைப் பார்த்து யார் எழுதினார்கள் என்பது பற்றி எப்படி தீர்ப்பு சொல்வது?

    இரண்டு தத்துவங்களும் பல நூற்றாண்டுகளாக வாதிட்டும் விவாதம் செய்தும் உரையாடியபடியே இருந்தன. தத்துவ நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாமல் வடிவங்கள், தொன்மங்கள், முறைகள் என அனைத்தையும் இரு மரபுகளும் கொடுத்தல் வாங்கல் செய்திருக்கின்றன. காப்பியங்களைக் கூட இரு சமய இலக்கியங்கள் பகிர்ந்துகொண்டுள்ளன. மணிமேகலை, புத்தசரிதா எனும் காப்பியங்களில் வரும் இராமாயண, மகாபாரத குறிப்புகளை உதாரணமாகக் கூறலாம்.

    பகவத் கீதையில் “நிர்வாணா” எனும் பௌத்த கலைச்சொல் இரண்டு இடங்களில் உபயோகிக்கப்படுகின்றன.

    “பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்திலேனும் இதில் நிலைகொள்வோன் பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.” (2-72, மொழிபெயர்ப்பு : மகாகவி பாரதி)

    தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

    *இருமைகளை (*நன்மை – தீமை; குளிர் – சூடு; இன்பம் – துன்பம் என எல்லாப் பொருள்களைப் பற்றி நிற்கும் இரட்டை நிலைகள்) வெட்டிவிட்டுத் தம்மைத்தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சியெய்தும் ரிஷிகள் பாவங்களொழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

    விருப்பமும், சினமும் தவிர்ந்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது. (5-24/25/26, மொழிபெயர்ப்பு : மகாகவி பாரதி)

    “நிர்வாணா” என்ற பவுத்த கலைச்சொல் இங்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. அக்கால பவுத்தர்களை குழப்பும் எண்ணத்துடன் இது செய்யப்பட்டிருக்கலாம். பவுத்தத்திற்கு முந்தைய வேதக் கருத்தியலான “பிரம்மம்” எனும் மீப்பொருண்மையியல் முழுமையுடன் பவுத்த நிர்வாண நிலை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு கலைச்சொற்களின் பொருளையும் தெரிந்தோர்இந்தச்சூழலமைவில் எப்படி பொருள் கொள்ளப்பட வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி கூறுகிறார் : “பவுத்தர்களின் நிர்வாணம் ஷுன்யதா ; கீதை சொல்லும் நிர்வாணம் சாந்தி ; பிரம்மத்துள் ஒன்றாதல் எனும் பொருளில் பிரம்ம-நிர்வாணம் என்று கீதை சொல்கிறது.”

    அதெப்படி பவுத்த கலைச்சொல்லை இந்து சமய நூலில் சேர்க்கலாம் என்போர்க்கு தெவிஜ்ஜ சுத்தத்தை உதாரணம் காட்டலாம்.

    பிராமண இளைஞனுக்கு தம்மத்தை போதிக்கும் ததாகதர் வேத பாரம்பரியத்தின் கலைச்சொல்லைப் பயன்ப்டுத்துவதைப் பாருங்கள் :-

    “நீ சொல்வதைப் போல பிக்கு கோபத்திலிருந்து விடுபட்டவர், தீமையிலிருந்து விடுபட்டவர், மனத்தில் தூய்மையானவர், தனக்குத் தானே எஜமானர்; பிரம்மாவும் கோபத்திலிருந்து விடுபட்டவர், தீமையிலிருந்து விடுபட்டவர், மனத்தில் தூய்மையானவர், அவருக்கு அவரே எஜமானர். அது போல, கோபம் இல்லாதவனாகவும், தீமை இல்லாதவனாகவும், மனத்தூய்மை உடையவனாகவும், தன்னைத் தானே எஜமானனாகவும் கொண்ட பிக்கு, மரணத்திற்குப் பிறகு, உடலைக் கரைத்து, அதே பிரம்மாவுடன் ஐக்கியமாக வேண்டும், அத்தகைய நிலை எல்லா வழிகளிலும் சாத்தியம்”

    பகவத் கீதை கருத்துகளைக் களவாடிற்று! திக்க நிகாயம் கருத்துகளைக் களவாடிற்று என்பதெல்லாம் மடத்தனம். ஒரே கலாசார நிலத்தில் விளைந்த வாதமுறைகளை, கூறுமுறைகளை இரு பெரும் மரபுகளும் எடுத்தாண்டன என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

  • Modern Votary of Lotus Sutra

    I had dabbled in lay buddhist practice for a couple of years when I was introduced to Soka Gakkai International, way back in 1997. Like my other pursuits in my life, this practice too fizzled out. Certain friends kept persuading me for a few months. They asked what my reservations were. The obviously honest reasons could have been – my, then, distractions and my consistent laziness. But I did not cite these, as I was an expert impostor – instead I attributed it to the personality cult that was prevalent among its members as the reason. Partially It was an honest answer too. In the SGI monthly meetings wherein the members are asked to share their experience of the practice – a demonstration of the success after chanting the venerable title of the Lotus Sutra – Namu Myoho Range Kyo – I had kept noticing the glorification of the personality of SGI’s Leader Daisaku Ikeda. If it’s a spiritual practice, why should the personality of the group’s leader be invoked? In its ritual prayer, there is a line whereby the members are invoked to pray for the leader. In one of the conversations during a monthly discussions in Mumbai, when I raised these questions, one of the seniors – I don’t remember his name now, he used to be executive director of India’s premier financial institution with high pedigree – took me aside to give a lecture on how negative karma forces one to raise such “pseudo-questions”. The conversation didn’t progress long.

    Subsequently, over the years, due to my keen interest on Japan’s Cultural History, I pursued my reading about various politico-buddhist sects which sprung up post the lull in Buddhist Culture in 13th century Japan. The zen practices which perpetuated the military culture (until Japan got defeated the world war) also maintained the class – caste differences to persist (until Japan embraced the modernity). The personality cult is not new in Japan’s history. The sects and cults continued to thrive in Japanese Culture. This understanding threw light on my experiences when I was practising under the umbrella of SGI. Looking back, I now realise that I was becoming part of a cult, which I came to detest subsequently. Being part of a cult, to me, is akin to imprisonment.

    Another aspect which I disliked about SGI – is its political ambitions. Although the organisation never publicly accepts this – in 1975, the President Ikeda founded the precursor to what later came to be known as Komeito Party – the political arm of SGI, in whose support the current coalition which is in Government survives. Does it remind us of a certain “cultural” organisation at home, which spawned a certain political party?

    As far as the theology that SGI espouses, it draws inspiration from the 13th Century teachings of Nichiren Daishonin, but in an evangelical way. Nichiren’s Buddhism taught its followers that the chanting of the Lotus Sutra helps overcome the Negative Karma. This ideal is re-cycled in a material way, suiting to the needs of modern Japanese and global lay believers – “the essence of Buddhism is the conviction that we have within us at each moment the ability to overcome any problem or difficulty that we may encounter I life”

    Ikeda was a prolific writer. The SGI Magazine used to contain his long essays and the serial of his long autobiography titled “Human Revolution”. Have enjoyed reading those essays.

    Daisaku Ikeda who led Japan’s largest religious organisation died today.

    https://www.japantimes.co.jp/news/2023/11/18/japan/society/daisaku-ikeda-soka-gakkai-founder-dies/

  • புத்தகாயத்தின் எழுச்சி

    Thich Nhat Hanh

    சில வருடங்களுக்கு முன்னர் பௌத்த இலக்கியத்தை மூல நூல்களிலிருந்து மட்டுந்தான் வாசிப்பது என்று ஆரம்பித்தேன். சக்கரவாளம் நூல் வடிவில் கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லாத நாட்கள் அவை. லங்காவதாரம், லோட்டஸ் சூத்திரம், பிரஜ்ன பாரமித சூத்திரம் என்று நேரடி மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்து அர்த்தம் புரிந்து கொள்ள யத்தனித்தேன். இதன் அடிப்படையில் என்னால் ஒரு கட்டுரையோ பத்தியோ எழுதிவிட முடியாது என்று எனக்குத் தெளிவாயிற்று. விரைவிலேயே அம்முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று. சத்சங்கம், கதாகாலட்சேபம் என ஆத்திகர்களின் பிரயத்தனத்தைப் புரிந்து கொண்ட தருணம் அது. விகாரங்களில், புத்த கோயில்களில் நடக்கும் தம்ம உரைகளைக் கேட்கத் தொடங்கினேன். முக்கால் வாசி நான் கேட்ட உரைகள் அனைத்துமே இணைய வழி. எந்தவொரு சமய நெறியானாலும் அதற்கு விளக்கம் மற்றும் மறு விளக்கம் தருவோர் அந்த சமய மரபை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தும் பணியை ஆற்றுகின்றனர்,

    அசுவகோஸரும், நாகார்ஜுனரும், பின்னால் வந்த ஆச்சாரியர்களும் பௌத்த நெறியை விளக்கியும், காலத்துக்கும் சமூக மாற்றத்துக்கும் ஏற்ற மாதிரி மறு விளக்கங்களைத் தந்தும் பௌத்த மரபை உயிர்ப்புடன் வைப்பதில் அரும் பணியாற்றினர். நம்முடைய காலத்தில் அத்தகைய ஆசாரியர்களாக நான் கருதுவது  இருவரை. ஒருவர் வணக்கத்துக்குரிய தலாய் லாமா. இன்னொருவர் ஜனவரி 22 அன்று நம்மிடமிருந்து விடை பெற்றுக் கொண்ட வியட்நாமிய ஜென் சாது தீக் நியட் ஹான்.  

    இருவரும் நெருங்கிய நண்பர்கள். திக் நியட் ஹான் இறந்த சில மணி நேரங்களில் தலாய் லாமா வெளியிட்ட இரங்கல் கடிதத்தில் “நான் என் நெருங்கிய நண்பனை இழந்துவிட்டேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இருவருமே நல்ல பேச்சாளர்கள். பௌத்த கோட்பாடுகளை சம காலத்திய மொழியில் அதிகம் மேற்கோள்கள் காட்டாமல் எளிய விதத்தில் விளக்க வல்லவர்கள். பௌத்தத்தின் முதன்மைக் கோட்பாடான பிரதீத்ய சமுத்பாதம் ( சார்பியல் கோட்பாடு) பற்றி ஒரு மேலை நாட்டினர் கேட்ட கேள்விக்கு தலாய் லாமா அவர்கள் ஒரு மேசையை உதாரணம் காட்டி விளக்கினார். அவரின் பதில் எனக்களித்த புரிதலை அதற்கு முன்னர் நான் எட்டியிருக்கவில்லை. ஒரு முறை பிரஜ்ன பாரமித சூத்திரம் பற்றி ஒரு முக நூல் லைவ்-வில் அவர் உரையாற்றும் போது “சூன்யதா” கோட்பாடு என்பது எப்படி பிரதீத்ய சமுத்பாதக் கோட்பாட்டில் மையங் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவுற விளக்கினார். தலாய் லாமாவின் இவ்விரு உரைகளைக் கேட்டு உள்வாங்கிக் கொண்டதனாலேயே தேரவாதம், மகாயானப் பிரிவை – வெறும் “அகடமிக்கான” “செயற்கையான” வகைப்படுத்தல் – என்று இலங்கைச் சாது வால்போலா எழுதியதை படித்தபோது அதனுடன் ஒத்துப் போக முடிந்தது. 

    ஒரு காணொளியில் ஓர் இளம்பெண் “மனதில் எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருக்கச் செய்வது எப்படி?” என தலாய் லாமாவைக் கேட்டாள். 

    “எதிர் மறை உணர்ச்சிகள் இரண்டோடு தொடர்புடைத்து. ஒன்று, சுயத்தை மையப்படுத்திக் கொள்ளும் மனப்பான்மை. (Self-centred Attitude). இரண்டு, நம் கண் முன் தெரிவனவற்றை அவை தோன்றுவது மாதிரியே நிஜம் எனக் கருதிவிடல். (Grasping)”

    அனாத்மன், சூன்யதா தத்துவங்களைச் சற்று லேசாக  விளக்கிவிட்டுத் தொடர்கிறார்.

    “பிரஜ்னாவை வளர்த்துக் கொள்வதும், உபாயா-வை அதாவது கருணையை நிலை நிறுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளுதலுமே எதிர்மறை உணர்ச்சிகளை முழுமையாக அகற்றும் வழி”

    திக் நியாட் ஹான் அவர்கள் Being Peace என்னும் தன்னுடைய நூலில் பிரஜ்னாவும் உபாயாவும் ஒன்றே என்கிறார். தெளிவாய் புரிந்து கொள்ளுதலும் பிற உயிர்களிடம் அன்பு செலுத்துவதும் ஒன்றே என்கிறார். ஒருவரைத் தெளிவாக புரிந்து கொண்டால் அவர் மேல் அன்பு செலுத்துதலின்றி வேறொன்றும் செய்யத் தோன்றாது. நல்ல புரிதலை வளர்த்தெடுக்க அனைத்து உயிர்களையும் கருணை விழிகளுடன் நோக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புரிதல் நிபந்தனையற்ற அன்புக்கு வித்திடும். அன்பு நிலையில் இயல்பாகவே மக்களின் துன்பத்தை தணிக்கும் காரியங்களில் நம் மனமும் உடலும் ஈடுபடும். விழித்திருத்தல், அறிதல், புரிதல், அன்புடைத்தல்- இந்நான்கையும் தன்னிடத்தே கொண்டிருப்போன் புத்தன். புத்தன் நம் அனைவரிலும் இருக்கிறான். 

    புத்தம் சரணம் கச்சாமி எனும் போது புத்தனும் என்னில் சரணடைகிறான் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் பாதியில்லாமல் முதல் பாதி பூர்த்தியாகாது அல்லவா? ஆனால், விழித்திருத்தல், புரிதல், அன்பு முதலானவற்றை கருத்தியல் ரீதியாக இல்லாமல் நம் பழக்கத்தில் உறையும் இயலபான குணங்களாக நாம் கொண்டிருக்க வேண்டும் என்று புத்தன் அவசியப்படுகிறான். நாம் அனைவருமே புத்தர்கள், ஏனெனில் நம் வாயிலாகவே புரிதலும் அன்பும்  உணரக் கூடியதாகவும் செயல்திறனுள்ளவையாகவும் மாறும். பௌத்தம் உண்மையாக இருக்க வேண்டுமானால் “புத்தகாயம்” இருத்தல் அவசியம் – விழிப்பு நிலையின் அடிப்படையில் எழும் செய்கையின்  உடலகம். புத்தகாயம் இல்லாவிடில் பௌத்தம் என்பது வெறும் சொல்லாக மட்டுமே இருக்கும்.

    நடைமுறை ரீதியில் புத்தகாயம் என்னும் பௌத்த மீப்பொருண்மையியலின் கருத்தை இதை விட எளிதாக எவராலும் புரிய வைக்க முடியாது. எனவேதான் மறைந்த ஜென்குருவின் நூல்கள் பௌத்த பாதையின் உண்மையான வழிகாட்டிகளாக உள்ளன.

    நூறுக்கும் மேலான பௌத்த நூல்களை ஆங்கிலத்தில் மேலை வாசகர்களுக்காக எழுதியவர் திக் நியாட் ஹான். அவர் எழுதிய “தி ஆர்ட் ஆப் மைண்ட்புல்னஸ்” ஒரு கிளாசிக். அதை படித்தது பல வருடங்களுக்கு முன்னால். பௌத்தத்தின் அடிப்படைப் புரிதல் இல்லாமலே கூட எளிதில் அணுகத் தக்க நூலாக அது இருந்தது. பின்னர் பௌத்த கோட்பாட்டுப் பரிச்சயம் வந்த பிறகு அந்நூலை மறு வாசிப்பு செய்த போது திக் நியாட் ஹான் பௌத்தத்துக்கு செய்யும் அரும்பணியின் ஆழமும் அகலமும் நன்கு புரிந்தது. 

    புராதன பௌத்த கோட்பாடுகளைச் சம காலத்தில் மேற்கு நாட்டார் அணுகும் வண்ணம் எளிமையான அறிமுகம் செய்து வைக்கின்றன அவருடைய நூல்கள். அதே சமயம், சுய உதவி நூல்களைப் போல் ஒலிக்கும் நூல்களல்ல அவை. ஜென் பௌத்த மரபை, அவர் பிறந்து வளர்ந்த வியட்நாமில் புழங்கும் மகாயான பௌத்த மரபை நீர்க்கச் செய்யாமல் நூல்களை எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் எழுதிய கடைசி நூல் மிகச் சமீபத்தில் அக்டோபர் 2021இல் வெளியாகியிருக்கிறது.

    2014இல் மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு முடங்கிய அவர் எத்தகைய முன்னேற்றமும் இல்லாமல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பிரான்ஸில் ஒரு மருத்துவமனையில் இருந்தார். ஒரு நாள் தம்மை தென் பிரான்ஸில் இருக்கும் அவருடைய ப்ளம் கிராம மடாலயத்துக்கே எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். பிரான்ஸ் மடாலயத்துக்குத் திரும்பிய சில வாரங்களில் அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. “தோட்டத்தில் உலாவவும், மரத்தடியில் அமரவும், பறவைகள் ஒலியைக் கேட்கவும்” தம்மால் முடிவதாக ஒரு பத்தியில் குறிப்பிட்டிருந்தார். ரத்தக்கசிவின் காரணமாக பேசும் சக்தியை இழந்திருந்த அவர் கடைசி வரை பேச முடியாமலேயே இருந்தார்.

    2016இல் தாயகம் வியட்நாமுக்கு அருகில் இருக்கும் தாய்லாந்தில் உள்ள அவருடைய மடாலயத்தில் தங்க விருப்பப்பட்டார். 2016இல் அவர் தாய்லாந்துக்கு வந்தார். தாய்நாட்டில் அவர் துறவறம் பெற்ற ட்யூ (tueh) புத்த கோயிலில் வந்து தங்க வியட்நாம் அரசாங்கத்திடம் பல முறை  அனுமதி வேண்டினார். இறுதியில் 2018இல் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர் தன் பயணத்தை எங்கு 1951இல் துவக்கினாரோ அந்தப் புத்த கோயிலிலேயே  இறக்கும் வரை தங்கியிருந்தார்.

    1966இல் அமெரிக்க பயணத்தில் இருந்த போது தாய் நாட்டுக்கு திரும்பும் அனுமதி மறுக்கப்பட்டது. போருக்கெதிராகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தவர் – தென் வியட்நாமும் சரி வட வியட்நாமின் கம்யூனிஸ்ட் போராளிகளும் சரி – இரு சாராருக்கும் வேண்டாதவர் ஆனார். 1966 இல் அமெரிக்காவில் அவர் விட்ட ஓர் அறிக்கை வியட்நாமில் மட்டுமில்லை, வல்லரசான அமெரிக்க அரசிடமிருந்தும் அவரை தூரப்படுத்தியது. அந்த அறிக்கையில் அவர் சொன்னது : “நான் எவர் பக்கத்திலும் இல்லை. அமைதியின் பக்கம் இருக்கிறேன். போர் நிறுத்தமே நான் வேண்டுவது. எந்த அரசியல் நிலைப்பாட்டையும் நான் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை.” 1966 இலிருந்து 39 வருடங்கள் அவர் அகதியாக இருந்தார். பிரான்ஸ் அவருக்கு அடைக்கலம் தந்தது. 

    கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் அவர்களுடனான திக் நியாட் ஹானின் நட்பு அமெரிக்க மக்களிடையே வியட்நாம் ஆக்கிரமிப்புக்கெதிரான கருத்து வலுப்பெற காரணமாக அமைந்தது. துறவி கேட்டுக் கொண்டதற்கிணங்கி மார்டின் லூதர் கிங் தன் உரைகளில் வியட்நாம் போர் எதிர்ப்பையும் ஒர் அஜெண்டாவாக சேர்த்துக் கொண்டார். திக் நியாட் ஹானின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தார். எப்போதும் நடப்பது போல் போரில் ஈடுபட்ட இரு பக்கத்தைச் சார்ந்தவருக்கே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மார்டின் லூதர் கிங் தன் பரிந்துரையைப் பற்றி இரகசியமாக வைத்துக் கொள்ளாமல் ஒரு பேட்டியில் பகீரங்கமாகச் சொல்லிவிட்டார் என்பதால் நோபல் பரிசு இறுதிப்பட்டியலில் துறவியின் பெயர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று நோபல் கமிட்டி விளக்கம் அறிவித்தது. “மென்மையான உள்ளங்கொண்ட இந்த வியட்நாமியத் துறவியை விட (பரிசுக்கு) தகுதியானவர் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. அமைதிக்கான அவரது யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டால் உலக சகோரத்துவத்துக்கும் மனித குலத்திற்கும் ஒரு அழியா நினைவுச்சின்னத்தை உருவாக்கும்” – இது மார்டின் லூதரின் சொற்கள்.

    அறுபதுகளில் போர் உச்சத்தில் இருந்தபோது திக் நியட் ஹான் மற்றும் அவருடைய சங்கத்துறவிகள் ஒரு தீர்மானம் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருந்தன. குண்டுகளால் மக்கள் காயப்பட்டுக் கொண்டிருக்கையில் துறவிகள் தம் போக்கில் தியானத்தில் மூழ்கியிருக்க வேண்டுமா? அல்லது மடாலயத்தை விட்டு வெளியே வந்து தெருக்களில் குண்டடி பட்டு வீழ்ந்துகிடக்கும் மக்களுக்கு உதவிகள் செய்து அவர்கள் உயிர் காக்க வேண்டுமா? அவர்கள் இரண்டையும் செய்ய முடிவெடுத்தனர். மக்களின் உயிரைக் காத்தல் மற்றும் அதை மனக்கவனப்பயிற்சிக்குள் (mindfulness practice) மக்கள் பணியை உள்ளடக்கியவாறு செய்தல் – இப்படிப் பிறந்தது தான் திக் நியட் ஹான் உருவாக்கிய பௌத்த சமயக் கொள்கை – Socially Engaged Buddhism. 

    “சமூக ஈடுபாடு கொண்ட பௌத்தம் என்பது அனைத்து உயிர்களின் முழுமையான, சிக்கலான, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மையைப் புரிந்துகொள்வதில் இருந்து எழும் ஒரு தர்ம நடைமுறையாகும். எல்லா உயிர்களையும் காப்போம் என்பது போதிசத்துவர் சபதம். நமது விடுதலையும் பிறர் விடுதலையும் பிரிக்க முடியாதவை என்பதை அறிவதும்,  தர்மத்தின் கண்ணால் உலகைப் பார்ப்பதும், கருணையுடன் உறுதியோடு தக்க செயல் புரிதலும் இதன் அம்சங்களாகும்.”  (Donald Rothberg and Hozan Alan Senauke, from the essay – Turning Wheel).

    சமூக ஈடுபாடுள்ள பௌத்தம் குறித்த கோட்பாட்டு அடிப்படைகளை 1951இல் எழுதிய ஒரு கட்டுரை நூலில் விரிவாக எழுதியிருந்தார் திக் நியட் ஹான். வியட்நாம் போரின் போது கொள்கைக்கு செயல் வடிவம் கொடுக்க வாய்ப்பு அமைந்தது. ஆசியாவிலும் மேற்கிலும் இருந்த பௌத்த அமைப்புகளுக்கிடையிலான தொடர்புகளை நிறுவி பௌத்த அறநெறிகளின் அடிப்படையிலான சமூக-அரசியல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வியட்நாம் போர் நல்ல கேஸ்-ஸ்டடியாக அமைந்தது. போருக்குப் பின்னர், அடிப்படைகளைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தியும் கிடைத்த அனுபவங்களின் பாடங்களை மேற்படி சேர்த்து செம்மைப் படுத்தியும் சமூக பௌத்தத்தை தான் இறக்கும் வரை முன்னெடுத்தவாறிருந்தார்.

    மகாயான நூல்களில் போதிசத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி போலவே சமூக ஈடுபாட்டு பௌத்தத்திற்கென்று திக் நியட் ஹான் 1993இல் உருவாக்கிய பதினான்கு உறுதி மொழிகளில்  நான்காவது உறுதிமொழி இது – “ துன்பத்தை தவிர்க்கவோ, துன்பத்தைக் காண்கையில் கண்களை மூடிக் கொள்ளவோ வேண்டாம். உலக வாழ்க்கையில் துன்பத்தின் இருத்தலைப் பற்றிய விழிப்புணர்வை இழக்க வேண்டாம். சந்தித்தல்கள், உரையாடல்கள், இயங்குதல்கள் வாயிலாக துன்பப்படுபவர்களுடன் தொடர்பில் இருக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டாம். இத்தகைய வழிமுறைகளைக் கைக்கொள்ளுதல் மூலமாக உலகின் துன்ப வாழ்க்கைப் பற்றிய பிரக்ஞையை உம்மிலும் மற்றவர்களிலும் எழுப்புங்கள்”

    தாய் நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் நெடுங்காலம் வசிக்கும் கட்டாயம். கடந்த நான்காண்டுகளாக அவர் ட்யூ கோயிலில் தங்கியிருந்து தன் இறுதி நாட்களை கழித்த சமயங்களிலும் உளவாளிகளைப் பக்தர் வேடத்தில் வேவு பார்க்க அரசு அனுப்பியதாகச் சொல்கிறார்கள். தலாய் லாமாவுக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரியான சிக்கல்கள். தாய்நாட்டிலிருந்து வேறு நாட்டில் தஞ்சம் கோர வேண்டிய சூழ்நிலை. சொந்த தேசத்துக்கு, அவர் வசித்த பொடாலா மாளிகைக்கு அவர் திரும்பிச் செல்வது நடக்காத காரியம் என்னும் கசப்பான உண்மையின் போதம். எனினும், இவ்விரு குருமார்களையும் காணும்போதும் அவர்களின் உரைகளைக் கேட்கும் போதும் பார்வையாளர்களின் மனதில் வந்தமரும் அமைதி அவ்விருவரின் “புத்தகாயங்களின்” நீட்சி என்பதாக எண்ண முடியும். தம் விடுதலை மற்றவர்களின் விடுதலையைச் சார்ந்திருக்கிறது என்பதை உள்வாங்கியவர்களாய், ஒவ்வோர் அடியையும் உள்வாங்கிய உண்மையின் வழி நடத்தலில் எடுத்துவைப்பதாகக் கொள்ளமுடியும். 

    பிரஜ்னபாரமித சூத்திர விளக்கக் கட்டுரையொன்றில் இலை பற்றிய குட்டிக் கதையொன்றைக் கூறுவார் திக் நியாட் ஹான். – “இலையுதிர் காலத்தில் ஒரு நாள் ஒர் இலையுடம் பேசிக் கொண்டிருந்தேன். ‘இலையுதிர் காலம் என்பதாலும் மற்ற இலைகள் உதிர்ந்துவிட்டதாலும் பயமா என்று அந்த இலையிடம் கேட்டேன்.  இலை என்னிடம், ‘இல்லை. வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் நான் உயிருடன் இருந்தேன். நான் கடினமாக உழைத்து மரத்தை வளர்க்க உதவினேன், என்னில் பெரும்பகுதி இம்மரத்தில் உள்ளது. தயவு செய்து நான் இந்த வடிவம் மட்டுமே என்று சொல்லாதீர்கள், ஏனென்றால் இந்த இலை வடிவம் என்னில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. நான் முழு மரம். நான் ஏற்கனவே மரத்தின் உள்ளே இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும், நான் மீண்டும் மண்ணுக்குச் செல்லும்போது ​​மரத்தை தொடர்ந்து வளர்ப்பேன். அதனால்தான் நான் கவலைப்படவில்லை. நான் இந்த கிளையை விட்டு தரையில் கிடக்கும்போது ​​நான் மரத்தை கை அசைத்து அவளிடம், ‘நான் உங்களை விரைவில் சந்திப்பேன்’ என்று கூறுவேன்.”

    புத்தகாயத்தை தட்டி எழுப்புதலைத் தன் வாழ்நாள் பணியாகச் செய்து கொண்டிருப்போர் மரணிப்பதில்லை. பிற உயிர்களின் விடுதலையைத் தன் விடுதலையாக எண்ணி வாழ்ந்தோர் இறந்தும் மற்றவர்களுடனேயே  உதிரத் தயாராக இருக்கும் இலை போல காற்றாக வெளியாக வானாக மேகமாக தங்கிவிடுகிறார்கள்.

    இலை குட்டிக் கதை இடம் பெற்ற அதே கட்டுரையின் இறுதியில் இவ்வாறு குறிப்பிடுகிறார் –

    “நாளை, நான் தொடர்ந்து இருப்பேன். ஆனால் நீங்கள் என்னை மிகவும் கவனமாக தேடிப் பார்க்க வேண்டும். நான் பூவாகவோ, இலையாகவோ இருப்பேன். உங்களுக்கு வணக்கம் சொல்வேன். நீங்கள் போதுமான கவனத்துடன் இருந்தால் என்னை அடையாளம் கண்டுகொள்வீர்கள். வணக்கம் சொல்வீர்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்.”

    நன்றி : காலச்சுவடு

  • சப்பே சதா பவந்து சுகிததா

    அனைவருக்கும் புத்த பூர்ணிமா வாழ்த்துகள்.

    ஒரு தமிழ் தொலைக்காட்சி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி லாக் டௌனின் போது புத்த பூர்ணிமா தினத்தன்று ஒலிபரப்புவதற்கென ஒரு தம்ம உரையை மொபைலில் பதிவு செய்தேன். சில தொழில்நுட்ப காரணங்களால் அந்த உரையை ஒலிபரப்ப இயலாது என தொலைக்காட்சி சொல்லிவிட்டது. அந்த உரையை யூட்யூபில் ஏற்றினேன். சுட்டியை கீழே காணலாம்.

  • சக்கரவாளம் – துளிகள்

    இந்த வலைப்பக்கத்தில் பதிவான பௌத்தக் கட்டுரைகள் – சக்கரவாளம் – எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவரவிருக்கிறது. காலச்சுவடு நிறுவனம் பதிப்பிக்கிறது.


    பௌத்த நெறிமுறை மூல நூல்களில் – பாலி ஆகமங்களாக இருந்தாலும் சரி சம்ஸ்கிருத சூத்திர வகைமை நூல்களாக இருந்தாலும் சரி – அவற்றுக்கு நடுவே ததாகதரின் அகக்குரலின் மொழி அவ்வப்போது வரும். அந்த அகக்குரலின் மொழியை வாசிக்கும் போதெல்லாம் அவருடைய சிந்தனைக்குள் நுழைந்துவிட்டது போன்ற பிரமை வருவது எனக்கு மட்டுமா எனத் தெரியவில்லை.

    மாகண்டிகர் சொல்வதைக் கேட்ட பகவான் சற்று யோசிக்கிறார். “ம்..இந்தப் பெண் அனுபமாவைப் பற்றி அன்பான வார்த்தைகளால் நான் பேசினால் காமத்தில் வியர்த்து விறுவிறுத்து இவள் இறந்துவிடக் கூடும். இவளைப் பற்றி கடுமையான வார்த்தைகளில் பேசிவிடுகிறேன்” பிறகு மாகண்டிகரை நோக்கி ததாகதர் பேசத் தொடங்கினார்.
    “பிராமணரே, மாரனின் புதல்விகளை சந்திக்கும் போதே நான் வேட்கை கொள்ளவில்லை. காமுறவில்லை. புலனின்பங்களில் சற்றும் விருப்பமில்லாதவன் நான். எனவே இந்தப் பெண்ணை கையால் தொடுவதை விடுங்கள், சிறுநீரும் மலமும் நிரம்பிய இவளின் உடலை என் பாதத்தால் கூடத் தொட முடியாது”
    (எனது சக்கரவாளம் நூலிலிருந்து – “நம் மகளை காதலிக்கப்போகும் கணவன் இவரல்ல”)

    அம்பத்தனுடன் வந்திருந்த மாணவர் குழு அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனது ; ஆரவாரத்துடன் சத்தமெழுப்பியது. ஒரு மாணவன் எழுந்திருந்து ஆத்திரத்துடன் அம்பத்தனிடம் பேசினான். “இந்த அம்பத்தன் இழிகுலத்தில் பிறந்தவன் ; நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனல்லன். சாக்கியர்களின் அடிமைப் பெண்ணின் வழி கிளம்பிய குடும்பக் கோட்டின் வழி உதித்தவன் ; சாக்கியர்கள் அம்பத்தனின் எஜமானர்கள். இவனை நம்பி நாம் குரு கோதமரை அவமதித்தோம்”
    புத்தர் அமைதியாக இருந்தார் ; அவர் மனதில் “இந்த இளைஞர்கள் அம்பத்தனைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார்கள் ; அம்பத்தனை இதிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டும்” என்று நினைத்தார்.
    (எனது சக்கரவாளம் நூலிலிருந்து – “அகந்தை அழிதல் 2”)
    ++++
    ஜாதகக் கதைகள் வியப்பூட்டும் இலக்கியம். சக்கரவாளம் நூலில் நான்கு ஜாதகக் கதைகள் வருகின்றன. எந்தெந்த கதைகளை நூலில் இணைப்பதற்கு எடுத்துக் கொள்வது என்ற குழப்பம் எனக்கு ஏற்படவில்லை. விலங்குகள் அல்லது மீன்கள் அல்லது பறவைகள் – இவை முக்கியப்பாத்திரமாக உள்ள கதைகளையே சக்கரவாளம் நூலில் சேர்ப்பது என்பதில் தெளிவாக இருந்தேன். மச்ச ஜாதகம், மகாசுக ஜாதகம், மகாகபி ஜாதகம் மற்றும் ஜவசகுன ஜாதகம் – இந்த நான்கு கதைகள் சக்கரவாளத்தில் வருகின்றன. ஜாதகக் கதைகளில் உள்ள சில மிருகங்கள் தோன்றும் கதைகளை ஈசாப்புக் கதைகளில் இணைத்திருக்கிறார்கள் என்ற சேதி ஜவசகுன ஜாதகம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டபோதுதான் எனக்கு தெரிய வந்தது.
    +++++
    ஜாதகக்கதைகள் மற்றும் அவதான வகைமை கதைகள் – பௌத்தத்தின் மூல நூல்களின் வரிசையில் உள்ள இரண்டு வகை கதை நூல்களுக்கும் இடையில் இருக்கும் நுட்பமான வேறுபாடு – தேரவாத மற்றும் மகாயான அணுகுமுறைகளின் மாறுபாட்டை நிகழ்த்திக் காட்டுகிறது.
    ++++
    பத்தொன்பதாம் நூற்றாண்டின் பௌத்த அறிஞர் J S Speyer இந்த வித்தியாசத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார். புத்தர் எனும் சிறப்பான ஒரு நாயகரின் முற்பிறவிகளில் போதிசத்துவராக அவர் செய்த தியாகங்களின் கதைகளை ஜாதகக் கதைகள் பதிவு செய்கின்றன. பசித்த புலிக்கு தன்னுடலை உணவாக கொடுக்கிறார்; பிச்சையெடுக்கும் பிராமணருக்கு தன் மனைவியையும் குழந்தைகளையும் கொடுத்து விடுகிறார்; தன் இனக்குரங்குகளை காக்க தன் உயிரை விடும் குரங்காகிறார். இது போல எத்தனையோ தியாகங்கள். இதை வாசித்த சாதாரண மக்களிடம் இத்தகைய தியாகச் செயல்கள் புத்தர் போன்ற ஆளுமைகளால் மட்டுமே சாத்தியம் என்பதான புரிதல் நிலவியிருக்கலாம். புத்தர் செய்த தியாகங்கள் சாதாரண மக்களாலும் செய்யப்படக்கூடும் என்பதான தெளிவை ஏற்படுத்தும் இலக்குடன் திவ்யாவதான இலக்கியம் படைக்கப்பட்டிருக்கலாம். அவதான இலக்கியத்தில் ஒரு போதிசத்துவர் தான் கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த புனிதரும் அவதானக் கதையின் நாயகராயிருக்கலாம்.”
    (எனது சக்கரவாளம் நூலிலிருந்து – “நம் மகளை காதலிக்கப்போகும் கணவன் இவரல்ல”)
    ++++
    மிலரேபாவின் கவிதைகள் திபெத்திய பண்பாட்டின் சொத்து. யோகி – கவிஞரான மிலரேபாவின் வாழ்க்கைக் கதை ஒரு மந்திர யதார்த்தக் கதை போல. மிலரேபாவின் வாழ்க்கைக் குறிப்போடு சேர்த்து இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்து சக்கரவாளத்தில் சேர்த்திருக்கிறேன். அவரின் நூற்றுக்கணக்கான பாடல் – கவிதைகளில் இரண்டை மட்டும் எப்படி தேர்ந்தெடுப்பது என ஒரே குழப்பம். கடைசியில் random – ஆக இரண்டு கவிதைகளை எடுத்துக் கொண்டேன். ஒரு விமானப் பயணத்தில் விமானம் வேறொரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டபோது அந்த இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்தேன் என்பது இன்னொரு சுவாரஸ்யம்!
    ++++
    வயதான ஆண்களுக்கு தர்மம் தேவை
    அதுவன்றி அவர்கள் பட்டுப்போகும் மரங்கள்
    வளரும் இளைஞர்க்கு தர்மம் தேவை
    அதுவன்றி அவர்கள் நுகத்தடி பூட்டிய காளைகள்
    இளம் கன்னியர்க்கு தர்மம் தேவை
    அதுவன்றி அவர்கள்அலங்கரிக்கப்பட்ட பசுக்கள்
    எல்லா இளைஞர்க்கும் தர்மம் தேவை
    அதுவன்றி அவர்கள் மூடிய அரும்புகள்
    அனைத்து குழந்தைகட்கும் தர்மம் தேவை
    அதுவன்றி அவர்கள் பேய் பிடித்த கொள்ளைக்காரர்கள்
    தர்மமின்றி செய்யபடுபவை அனைத்தும்
    அர்த்தமும் குறிக்கோளுமற்றவை
    அர்த்தத்துடன் வாழ நினைப்போர்
    புத்த தர்மத்தை பின்பற்ற வேண்டும்
    (எனது சக்கரவாளம் நூலிலிருந்து – ‘மிலரேபா’)
    ++++
    பயணக்கட்டுரை ஒன்றை சேர்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஏனோ, கை கூடவில்லை! கட்டுரைகளுக்கு நடுவே பயணங்கள் பற்றிய சிறு குறிப்பு ஆங்காங்கே வரும், ஆனால் அவற்றை விரித்து எழுதவில்லை. சக்கரவாளத்தில் வரும் பௌத்த சிறப்பிடங்கள் – லடாக், சாரநாத், அயுத்தயா (தாய்லாந்து), போரோபுதூர் (இந்தோனேசியா),
    ++++
    கட்டுரைநூலை vet-செய்த நண்பர் கல்யாணராமன் பல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார். அவர் சொன்ன பெரும்பான்மையான ஆலோசனைகளை ஏற்று உரிய திருத்தங்களைச் செய்த பிறகு இன்னும் முழுமையாக இந்த நூல் வாசகரைச் சென்றடையும் என்ற உணர்வு ஏற்பட்டது.
    “நூலில் மகாயானம் உயர்ந்து ஒலிக்கிறதே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் கல்யாணராமன். “அப்படியில்லை ; தத்துவப் பிரிவுகளைத் தாண்டிய பௌத்தத்தின் ஒருமைப்பார்வையை விரித்துரைப்பது தான் நூலின் நோக்கம்” என்று அடித்துச் சொன்னேன்.
    ++++
    பிக்குகள் பணத்தைக் கையாளலாமா? என்பது பௌத்த சமூகங்களில் காலந்தோறும் இருந்து வரும் கேள்வி. இதற்கு மகாயான பௌத்தம் பின்பற்றப்படும் வடக்கு பௌத்த நாடுகளில் அளிக்கப்படும் வழக்கமான பதில் – தேரவாதம் எனப்படும் தெற்கு பௌத்தத்தில் தான் பிக்குகள் பணத்தைத் தொடக்கூடாது ; மகாயானத்தில் அப்படியில்லை; பிரயாணத்துக்குத் தேவையான பணத்தை மகாயான பிக்குகள் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் – என்பது. பெய்ஜிங் நகரில் கட்டிட நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் சாம் லீ என்பவர் நடிகை செய்தது தவறு என்கிறார். அவரின் கருத்துப்படி தெற்கு பௌத்தத்தின் நியமங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் வடக்கு பௌத்தத்தில் திணிக்கப்படக்கூடாது.
    முன்னாள் நடிகை தான் செய்தது சரியென்பதில் மிக உறுதியாய் இருக்கிறார்.
    “முக்தி நிலையை அடைய, பௌத்த சாதகர்கள் ஞானம், கருணை– இவ்விரண்டையும் கொண்டிருத்தலோடு பிரிவினை இதயம் இல்லாதவராய் இருத்தலும் அவசியம். உட்பிரிவுகள் இல்லாத மூல பௌத்தத்தை மீட்டெடுத்தலே எனது லட்சியம்” என்று முழங்குகிறார்.
    (சக்கரவாளம் நூலிலிருந்து….”செய்திகளில் பௌத்தம்)

  • துக்கம் என்பது என்ன?

    பௌத்த சிந்தனையின் படி ‘துக்க’ என்னும் பாலி சொல் எதைக் குறிக்கிறது? பொதுவாக பௌத்த இலக்கியங்களில் அதிகம் கோடிட்டுக் காட்டப்படும் பிறப்பு, நோய், மூப்பு, சாவு முதலான நான்கு அடிப்படை துக்கங்களை மட்டும் அந்தச் சொல் குறிப்பதில்லை. பொதுவான அன்றாட வாழ்க்கையில் நம் சுயத்துடன் நம்மை நாம் பிணைத்துக் கொள்ளும் போது தோன்றும் அதிருப்தி நிலையையும் ‘துக்க’ எனும் சொல் குறிக்கிறது. ‘துக்க’ எனும் பாலி மற்றும் சமஸ்கிருதச் சொல்லை ஆங்கில மொழிபெயர்ப்புகளில் “suffering’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டமை ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் “துக்கத்தை” பொருள் கொள்ள வைக்கிறது. இதுவே பௌத்தம் ஓரு “pessimistic” சிந்தனை என்பதான கண்ணோட்டத்தை பரவலாக்கியது. What the Buddha Taught எனும் அதி முக்கியமான நூலில் ராஹுல வால்போல குறிப்பிடுவதாவது :

    It is true that the Pali word Dukkha (or Sanskrit Duhkha) in ordinary usage means ‘suffering’, ‘pain’, ‘sorrow’, or ‘misery’, as opposed to the word Sukha meaning ‘happiness’, ‘comfort’ or ‘ease’. But the term Dukkha as the first noble truth, which represents Buddha’s view of life and the world, has a deeper philosophical meaning and cannotes enormously wider senses. It is admitted that the term dukkha in the First Noble Truth contains, quite obviously, the ordinary meaning of ‘suffering’, but in addition it also includes deeper ideas such as ‘imperfection’, ‘impermanence’,’emptiness’, ‘insubstantiality’. It is difficult therefore to find one word to embrace the whole conception of the term dukkha as the First Noble Truth, and so it is better to leave it untranslated, than to give an inadequate and wrong idea of it by conveniently translating it as ‘suffering’ or ‘pain’.

    1970-களுக்குப் பிறகு மேற்கத்திய மொழிபெயர்ப்பாளர்கள் ‘துக்க’-வை மொழிபெயர்ப்புச் செய்யாமல் அப்படியே ஒரு கலைச்சொல்லாக பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள்.

    ‘துக்க’த்தின் வகைமைகளை பல பௌத்த சான்றோர்கள் தம் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘துக்க’த்தை மூன்று விதங்களில் பிரிக்கிறார்கள்.

    (1) துக்க-துக்க – வாழ்க்கையின் அடிப்படை துக்கங்களான – பிறப்பு, நோய், மூப்பு மற்றும் சாவு – நான்கும் அனைத்து உயிர்களையும் பீடிப்பவை. இதிலிருந்து மீள்வது எவரும் இல்லை.

    (2) விபரிணாம துக்க – வாழ்க்கையின் மாற்றங்களைப் பிடித்துக் கொண்டு அவற்றைத் தாள முடியாமல் நம் மனம் கொள்ளும் பதற்றம், உளைச்சல் போன்றவை துக்கத்தின் இரண்டாம் வகை.

    (3) சம்கார துக்க – வாழ்க்கையின் மாறும் தன்மையை ஏற்காத காரணத்தால் அனைத்து உயிர் வகைகளிலும் உணரப்படும் பொதுவான அதிருப்தி நிலையை இந்த மூன்றாவது வகை குறிக்கிறது. எதுவும் நம் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருப்பதில்லை அல்லது காணும் பொருட்கள் அனைத்தும் நம் மதிப்பீட்டின்படி இருப்பதில்லை என்னும் ஒர் உணர்வு நிலை இறக்கும் வரை நம்முள் படிந்துகிடப்பதை இது குறிக்கிறது.

    ‘துக்க’த்தின் மூன்று பகுப்புகளை பற்றிப் பல பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் குறிப்பாக இரண்டு நூல்கள் பௌத்த இலக்கியத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. புத்தகோஸர் பாலியில் எழுதிய விசுத்திமக்கா எனும் வினய நூல் (ஐந்தாம் நூற்றாண்டு) மற்றும் அதற்கு முந்தைய காலத்தில் அதாவது இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த ஆசாரியர் அஸாங்கர் சமஸ்கிருதத்தில் இயற்றிய அபிமானசமுச்சய எனும் சர்வாஸ்திவாத பௌத்த நூல். இந்த நூல்கள் மட்டுமல்லாது பல்வேறு பௌத்த நூல்களும் துக்கம் பற்றிய நுணுக்கமான புரிதலை நமக்கு வழங்கியிருக்கின்றன.

    புத்தகோஸரும் அஸாங்கரும் பிற்காலத்தில் வந்தவர்கள். துக்கத்தின் நுணுக்கங்களை நிகாயங்கள் எனப்படும் பௌத்த இலக்கியங்கள் பேசியிருக்கின்றனவா? பேசியிருக்கின்றன. அதற்கு பல உதாரணங்களைத் தரலாம். மிகப்பிரபலமான சுத்தங்களில் ஒன்றான அனுராதா சுத்தத்தில் துக்கம் பற்றிய ஒரு நுட்பமான பார்வையை நமக்கு வெளிப்படுத்திவிடுகிறார் சாக்கியமுனி.

    அனுராத சுத்தத்தில் ததாகதர் துறவி அனுராதாவுக்கு சொல்கிறார் :-

    Both formerly & now, it is only stress that I describe, and the cessation of stress.

    மேலே சொன்ன பிரகடனம் சுத்தத்தின் கடைசி வரிகள். அதற்கு முன்னதான ஒரு நீளமான உரையாடலில் ஒரு கேள்வி பதில் பரிமாறல் ஒன்றில் இவ்வாறு வருகிறது :-

    “What do you think, Anuradha: Is form constant or inconstant?”

    “Inconstant, lord.”

    “And is that which is inconstant easeful or stressful?”

    “Stressful, lord.”

    அனுராதா சுத்தத்தின் இந்த மொழிபெயர்ப்பில் தனிஸ்ஸாரோ பிக்கு ‘துக்க’த்தை Stress என்றே ஆங்கிலப்படுத்தியிருக்கிறார். Stress என்ற சொல்லை மாற்றி ‘pain’ என்று எழுதினால் அந்த வாக்கியம் அரைகுறையான அர்த்தத்தை தருமல்லவா?

    இவ்வளவு ஏன்? முதன்முதலாக சாரநாத்தில் ஐந்து துறவிகளுக்குப் போதித்த தம்மத்திலேயே புத்தர் ‘துக்க’த்தை வெறும் நான்கு அடிப்படை துன்பங்களாக மட்டும் பார்க்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறார். சாக்கிய முனியின் முதல் பிரவசனமான தம்மசக்கப்பவத்தன சுத்தத்திலேயே துக்கத்தின் வகைகளை அறுதியிட்டுக் கூறி விடுகிறார்.

    “Now this, monks, is the noble truth of stress: Birth is stressful, aging is stressful, death is stressful; sorrow, lamentation, pain, distress, & despair are stressful; association with the unbeloved is stressful, separation from the loved is stressful, not getting what is wanted is stressful. In short, the five clinging-aggregates are stressful.

  • ஆகஸ்டு பத்து

    தனிமனித வழிபாட்டை எதிர்க்கும் நவீனவாதி நான். ஆனாலும் இன்று ஒரு விஷயம் நடந்தது. சிரி போர்ட் ஆடிட்டோரியத்தில் ஒருவர் உரையாற்றப்போகிறார் என்ற அந்த விளம்பரத்தை ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளில் பார்த்தோம். மனைவியும் இளையமகளும் செல்வதாக உடன் முடிவெடுத்தனர். எனக்கு இரண்டு மனமாக இருந்தது. இன்று விடுமுறை நாள் இல்லை. கடமையா ஆர்வமா எது முக்கியம் என்ற ஊசலாடலில் என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. நேற்றிரவு ஒரு யோசனை தோன்றிற்று. வீட்டில் இருந்து வேலை செய்யும் அனுமதி பெற்றேன். காலை எட்டு மணிக்கே ஆட்டோவில் கிளம்பினோம். ஆடிட்டோரிய வாசலில் பெரும் வரிசை. அதிக கூட்டம் இராது என்று நினைத்துக்கொண்டு வந்த எனக்கு உரையாற்றப்போகிறவரின் பிரபலத்தன்மையை கண்ணால் காணும் சந்தர்ப்பம் இன்று கிட்டியது. அரசியல் பிரமுகர் இல்லை ; கலைத்துறையில் பணியாற்றுபவர் இல்லை ; எனினும் கூட்டம் குவிந்திருந்தது. பாதுகாப்பு பரிசோதனை சாவடிக்குள் நாங்கள் நுழைந்தவுடன் வாயிலை அடைத்துவிட்டார்கள். எங்களுக்குப் பின்னால் காத்திருந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பியிருப்பர். திரைப்படக் காட்சி துவங்கிய பிறகு அரங்கிற்குள் நுழைவது போல் ஆடிட்டோரியத்துக்குள் போனோம். உட்கார ஓர் இருக்கையும் காலி இல்லை. மூன்று மட்ட பால்கனிகளும் நிரம்பி வழிந்தன. இருக்கைகளின் வரிசைகளுக்கு நடுவே தரையில் உட்கார்ந்து கொண்டோம். அவர் மேடைக்குள் மெல்ல நடந்து வந்தார். மேடையில் வேண்டியவர் வேண்டாதவர் என்று நிறைய குமிந்திருந்தனர். மேடைக்கு வந்தவரின் காலைத் தொடுவதே அவர்கள் குறிக்கோள் போல விழா அமைப்பாளர்கள் எல்லோரும் மேடையை விட்டு கீழிறங்கவில்லை. அரங்கே அவரை பரவசத்துடன் பார்த்தது. சிரித்தார். கை கூப்பினார். மகிழ்ச்சியாய் இருப்பது பற்றி பேசினார். அவர் பேசியவை எதுவும் என் மனதில் பதியவில்லை. ஆடிட்டோரியத்தில் இருந்த எல்லோரை போன்றும் அவர் முகத்தை பார்த்து பரவசத்தில் ஆழ்ந்தேன். பேச்சு முடிந்து கேள்வி பதில்கள் பகுதி வந்தது ; நன்றியுரைக்கு முன்னம் “இங்கே வந்திருப்பவர்களில் எத்தனை பேர் திபெத் அகதிகள்?” என்று கேட்டார். பாதிக்கு மேற்பட்டோர் கை தூக்கினார்கள். அவர்களுக்காக சற்று நேரம் திபெத்திய மொழியில் பேசினார். திபெத்திய சகோதரர்கள் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் கை கூப்பிக்கொண்டு அவர் பேசியதைக் கேட்டார்கள். எனக்கு முன்னால் அமர்ந்திருந்த திபெத்திய சகோதரியின் கண்ணில் நீர் வழிந்தது. மேடையிலிருந்து கிளம்பும் முன் பல முறை நன்றி சொன்னார். புன்னகைத்தார். சுவர்க்கம் வேறெங்கும் இல்லை. கருணை ஒளியை தூவியவாறு புன்னகைக்கும் அவரின் பிரசன்னத்தில் தான் இருக்கிறது சுவர்க்கம். ஆகஸ்டு பத்து. இன்றுதான் நான் முதல் முறையாக டென்ஸின் க்யாட்ஸோவை ரத்தமும் சதையுமாக தரிசித்த நாள். அவலோகிதேஸ்வரரின் அவதாரம் என நம்பப்படுபவரே, நீர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் படி, இவ்வுலகின் ஏழு பில்லியன் மனித உயிர்களும் புத்த நிலையில் உய்யும் வரை உயிர் தரித்திருப்பீராக! பொய்யான தலாய் லாமாவை உற்பத்தி செய்யும் வல்லரசு சீனாவின் திட்டத்தில் மண்ணைப் போடுவீராக!

  • மகாசித்தர்கள்

    சித்தர்கள் யார்? வேத காலத்து ரிஷிகள் இல்லை அவர்கள் ; பௌத்த சங்கத்தின் பிக்குகளும் இல்லை. மடங்களில் வசித்தவர்களில்லை. ஊக சிந்தனைகளிலோ வாக்குவாதங்களிலோ ஈடுபடாதவர்கள். அவர்களின் தேடல்கள் அமைப்புகள்  சாராதவையாக இருந்தன. அவர்கள் உதாரணர்களாக இருந்தனர். மக்களுக்கு நடுவில் மக்களாக இருந்தனர். மரபு ஒழுங்கிற்கு மாறான சடங்குகளை கடைப்பிடிப்பவர்களாக இருந்தனர். கோரக்கர், போக நாதர் போன்ற சித்தர்களை இந்து மரபில் நாமறிவோம். இவர்கள் வரலாற்றில் இருந்த ஆளுமைகளா என்று அறுதியிட்டு சொல்லுதல் மிகக் கடினம். ஆனால் இவர்கள் பற்றிய எண்ணற்ற கதைகள் செவி வழியாக பல நூற்றாண்டுகளாக உலவி வருகின்றன. திருத்தொண்டர் வாழ்க்கை வரலாற்றியல் (Hagiography) சார்ந்த வரலாறுகளாக முழுக்க நம்பகத்தன்மை இல்லாதவையாக இருந்தாலும் மத்திய கால சமூகத்தின் வாழ்க்கை பற்றியும் நிலவி வந்த தத்துவங்கள் பற்றியும் வளமான செய்திகளை அவைகள் கொண்டிருக்கின்றன.

    சைவ இந்து மரபைப்  போல பௌத்தர்களும் 84 மகா  சித்தர் மரபை போற்றுகின்றனர்  ; இரு மரபிலும் வழங்கப்படும் 84 மகா சித்தர்களின் பெயர்களில் நிறைய பொதுத் தன்மைகள்  உள்ளன. கி பி ஐந்தாம் நூற்றண்டுக்கும்  கி பி 11ம் நூற்றாண்டுக்கும்  இடையிலான காலத்தின் சமூக, வரலாற்று யதார்த்த நிலைகளில்  சமுகத்தை வழி நடத்தும் உதாரணர்களாக மகா சித்தர்கள் செயல் பட்டிருக்கிறார்கள்.

    சித்திகளை உள்ளடக்கியவர்களாகவும் பண்படுத்தியவர்களாகவும் திகழ்ந்தவர்கள் சித்தர்கள். யோகிகளாகவும் யோகினிகளாகவும் இன்றும் வஜ்ராயன பௌத்த மரபில் பெரிதும் போற்றப்படுகிறார்கள்.

    சித்தர்கள் மரபு உருவானதற்கு வரலாற்று அறிஞர்கள் பல்வேறு கருத்தாக்கங்களை சொல்கின்றனர் ; அவற்றுள் மிகவும் அதிகமாக வலியுறுத்தப்படுவது குப்தப் பேரரசுக்குப் பிறகு வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் நிலவிய அமைதியின்மை ; 7ம் நூற்றாண்டுக்குப் பிறகு வட இந்தியாவில் பேரரசுகள் எதுவும் உருவாகாத நிலை, சிற்றரசர்களுக்கிடையான போர்களினாலும்  பூசல்களினாலும்  சாதாரணர்களுக்கேற்பட்ட   பாதிப்பு, அதன் காரணமாக மக்களிடையே காணப்பட்ட மன்னர்களின் மீதான வெறுப்பு மற்றும்  பாதுகாப்பின்மை முதலானவை. ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பு மக்களை நம்பிக்கை, சரணாகதி போன்ற பண்புகளை நாடச் செய்தன. Grassroot level-இல் இயங்கிய சித்தர்கள் தமது சித்திகளின் துணையுடன் நம்பிக்கையுணர்வை பாதுகாப்புணர்வை மக்கள் உள்ளீர்த்துக் கொள்ளும்படி வழிநடத்தினார்கள்.

    84 மகாசித்தர்களும் தாந்த்ரீகமும் என்னும் கட்டுரையில் Keith Dowman இவ்வாறு கூறுகிறார் : “தாந்த்ரீக மதம்  இந்தியர்களின் ஆன்மீக வாழ்க்கையின் முக்கிய சக்தியாக பரிணாம வளர்ச்சி பெற்ற காலத்தில் இந்தியாவின் வடமேற்கே கொடூரமான, பேரழிவை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் பெருக ஆரம்பித்திருந்தன. அராபியர்கள் மொராக்கோவிலிருந்து சிந்து வரை பரவியிருந்த நிலப்பரப்பை தம் குடைக்கீழ் கொண்டு வந்திருந்தார்கள். துணைக்கண்டத்தில் குப்தப் பேரரசின் மகத்துவத்தை வாரிசுரிமையாய் பெற்ற வெவ்வேறு வம்சங்களின்  அரசர்களும் உட்பூசலிலும் கோரமான யுத்தங்களிலும் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார்கள். பழைய வகுப்பீடுகள் சிதைந்திருந்தன ; சமூகம் இறுகிய சாதீய விதிமுறைகளில் வழிமுறைகளில் சரணடைந்திருந்தது ; சடங்குகள் மேலோங்கிய சமயங்கள் புழக்கத்தில் இருந்தன. வலுவற்று ஒருங்கிணையாமல்  கிடந்த சமூகம் புது எதிரிகளான மதவெறி மிக்க இஸ்லாமிய படைகளை எதிர்க்க முடியாமல்  பலவீனப் பட்டுப் போயிருந்தது. பௌத்த மத்திய ஆசியாவின் அழிவு பற்றிய கதைகளோடு பௌத்த அகதிகள் துணைக்கண்டத்துள் நுழைந்த போது தாந்த்ரீகத்தின் செல்வாக்கு அதிகரித்திருந்தது, குறிப்பாக, முண்ணனிக் களமான ஒட்டியாணாவில் (இன்றைய பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு). புது பௌத்த சாம்ராஜ்யமாக எழுச்சி கொண்ட பால் வம்சம் ஆண்டு கொண்டிருந்த கிழக்குப் பிராந்தியங்களிலும் (ஒரிஸா மற்றும் வங்காளம்). சமரசம் செய்து கொள்ளாத அத்வைத மெய்யியல், தன்னிச்சையான விடுதலையில் மாறா நம்பிக்கை, மாமிசம் தின்னும், குருதி குடிக்கும் தெய்வங்கள்இவைகளைக் கூறுகளாக கொண்டிருந்த தாந்த்ரீக மதத்தில் தொடங்கப்போகும் ஊழுக்கு முன்னதாக இந்தியா சரணடைந்தது தற்செயலா? தாந்திரீகத்தை மறுத்து வந்த மேற்கில் இன்று தாந்த்ரீகத்துக்கு அதிகரிக்கும் வரவேற்பும் மனிதகுலம் அழிந்து போகலாம் என்னும் கருத்து நம்பகத்தன்மையை பெறுதலும் தற்செயலா?”                                  

    மகாசித்தர்களில் முக்கால் வாசி சித்தர்கள் கிழக்கிந்தியாவை பிறப்பிடமாகவோ இருப்பிடமாகவோ கொண்டவர்கள். பால் வம்சம் ஆண்ட காலத்தில் சித்தர் மரபுக்கு நல்ல ஆதரவு இருந்தது. விக்ரமஷீலா மற்றும் சோமபுரி பௌத்த பல்கலை கழகங்கள் துவக்கப்பட்டன. இப்பல்கலைக்கழகங்களில் தாந்த்ரீக பௌத்த சாதனைகள் கற்பிக்கப்பட்டன ; நாளந்தாவும் விரிவுபடுத்தப்பட்டு தாந்த்ரீக பௌத்தத்தின் மையமானது. தாந்த்ரீகத்தின் மனப்பான்மைகளும் தத்துவங்களும் சித்தர்களின் காலத்துக்குப் பிறகே சமுதாய ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆரம்ப கால சித்தர்கள் போலித்தனம், வெற்றுச் சடங்குகள், கற்பனைத் தத்துவங்கள், பண்டித மேதாவித்தனம், சாதி வித்தியாசங்கள், பாசாங்குத்தனம் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தார்கள். மந்திரம்இணைவு சடங்குகள்மண்டலங்கள் இவற்றை வலியுறுத்தும் வழிமுறைகளை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் வெறும் செயல் முறைகளாக இல்லாமல் மறைபொருள் ஞானத்துடன் இணைந்து சடங்குகளைக் கடந்த மனநிலையை அடையும் இலக்கிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

    குளிக்காத சுத்தமில்லா  தோற்றம், முரட்டுத்தனமான பேச்சு, சில சமயம் பித்து நிலை மிகுத்து ஏறுமாறான நடத்தைகள் என்று சித்தர்கள் வலம் வந்தனர். தர்க்க ஒழுங்கு மாறாத அணுகுமுறையுடன் வளர்த்தெடுக்கப்பட்ட பௌத்தத்தில் சித்தர்கள இயக்கம் ஒரு முரண் போலத் தோன்றலாம். ஆனால் சமூக பரிவர்த்தனைகளின் விளைவாக இயல்பாக எழுந்ததே சித்தர் இயக்கம் என்று வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர். பல பௌத்த சித்தர்களும் துவக்கத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த மடாலய பௌத்தர்களாகவே இருந்தனர். வெறும் சூத்திரங்களின் அடிப்படையில் இருந்த சாதனைகள் அவர்களுக்கு அனுபவரீதியாக முன்னேற்றத்தை எதிர்பார்த்த வேகத்தில் தராததால் அந்தப் பாதையிலிருந்து விலகி, சிறு வனங்களிலோ அல்லது ஆற்றங்கரைப் பகுதிகளிலோ தங்கிக்கொண்டு   மது, உடலுறவு, மாமிசம் என்னும் மூன்று அம்சங்களை உட்படுத்திய தாந்த்ரீக சாதனைகளில் ஈடுபட்டனர்.

    ஆன்மீக அராஜகம் அவர்களின் லட்சியமாயிருந்தது. சமய வடிவங்களில் அதிகம் மனம் லயிக்காத குணமும் அவர்களிடம் காணப்பட்டது. தீட்சை பெற்றவர்களுக்கு மட்டுமே சித்தர்-குருவின் சாதனையை  பயிற்சி செய்யும் உரிமை வழங்கப்பட்டது. எந்த வித நிறுவனத்துவமும் சித்தர்களினுடைய இருத்தலியல் சுதந்திரவுணர்வை மட்டுப்படுத்தவில்லை.

    சித்தன் தாந்த்ரீக சாதகன் ; தியானத்தின் இலக்கை வெற்றிகரமாக அடைந்தவன். அவனுடைய சாதனை சித்தி. சித்தி இரு வகைப்படும் ; ஒன்று சாதாரண மந்திர சக்தி (Mundane) ; இன்னொன்று புத்தரின் நிர்வாண நிலை (Ultimate). எனவே சித்தன் என்பவன் ஞானி, மந்திரவாதி அல்லது அருட்தொண்டன். ஆனால் இச்சொற்கள் சித்தனின் தாந்த்ரீக வாழ்க்கை முறையை நம் மனதுக்குள் கொண்டுவருவதில் தோல்வியுறுகின்றன. பொதுவாக சித்தன்  என்றால் மந்திர சக்தி கொண்டவன் ; ஒரு யோகி சுவர்களை ஊடுருவி செல்கிறான் என்றாலோ அல்லது விண்ணில் பறந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டவர்களை சுகப்படுத்தினாலோ அல்லது நீரை மதுவாக்கினாலோ அல்லது காற்றில் மிதந்தாலோ  அவனுக்கு சித்தன் என்ற பெயர் பொருந்தும். அதே யோகியின் கண்களில் பைத்தியக்காரத்தனம் பளபளத்தாலோ, உடம்பெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டாலோ, தனக்கும் அடுத்தவர்க்கு கண்ணீர் வரும்படி பாடினாலோ, குரைக்கும் தெருநாய்களை தன்னுடைய பிரசன்னத்தினால் அமைதிப்படுத்தினாலோ, வலுக்கட்டாயமாக ஒரு குடும்பப்பெண்ணை தன்னோடு கவர்ந்திழுத்து வந்தாலோ, ஓரடி நீளமான சடா முடியில் வஜ்ரத்தை (உபாயம் அல்லது அசையாத்தன்மையின் குறியீடு) குத்தியிருந்தாலோ, பறவைகளுடன் பேசினாலோ, தொழுநோயாளிகளுடன் தூங்கினாலோ, தார்மீக விரக்தியுடன் வாயவீச்சாளர்களை ஏசினாலோ, உறுதியான எண்ணத்தோடு மரபுக்கு மாறான ஒரு காரியத்தை செய்யும் அதே வேளை தன்னுடைய “உயரிய யதார்த்த நிலையை” நிரூபித்த வண்ணம் இருப்பவன் நிச்சயம் சித்தனே. தோற்றத்தினால் ஈர்க்கப்படும் சாதாரண மக்கள் சித்தனின் அசாதாரண நோக்கத்தை – மஹாமுத்ரா (வஜ்ராயன பௌத்தக் கலைச்சொல்) –  அறியாமல் இருப்பார்கள். மேலும், சித்தன் என்பவன் அடையாளமற்ற விவசாயியாக இருக்கலாம் ; அலுவலகத்தில் பணி புரிபவராக இருக்கலாம் ; அரசனாக இருக்கலாம் ; பிக்குவாக இருக்கலாம் ; வேலைக்காரனாக இருக்கலாம் ; நாடோடியாக இருக்கலாம் என்பதையெல்லாமும்  அவர்களால் அறிய முடியாது.

    சாதாரண மந்திர சக்திகளை அஷ்டமா சித்திகள் என்கிறார்கள் ; ஆனால் வஜ்ராயனத்தின் இலக்கு மஹாமுத்ரசித்தி. மஹாமுத்ரசித்தி பெற்றவர்களுக்கு மந்திர சித்தியும் தன்னிச்சையின்றி கிட்டும் ; ஆனால் மந்திர சித்தி கிட்டியவர்களுக்கெல்லாம் மஹாமுத்ர சித்தி கிடைக்கும் என்று நிச்சயம் கிடையாது.

    நிர்வாணத்தின் போது புத்தர் அடைந்த நிலை. பூரண ஒருமை ; சுயத்தின் அழிப்பு ; ஞான விழிப்புணர்வு ; இறுதி யதார்த்தத்தை இருமைகளற்று நோக்குதல். சம்ஸ்கிருதத்தில் இது  பௌத்த கலைச்சொல் தததா (thatata) என்று குறிக்கப்படுகிறது.  ஆங்கிலத்தில் that-ness அல்லது such-ness என்று பொருள். இதுவே பௌத்தர்களின் இலக்கு.

    ஸ்ராவகர்கள் (புத்தரின் குரல் வழி தம்மத்தை கேட்டவர்கள்) அருகராகி இறந்த காலக் கருமங்களை தொலைத்துவிட்டாலும் புதிதாக கருமங்கள் ஏதும் சேராமல் வாழ்ந்து பின்னர் நிர்வாணத்தை அடைதல் ஆதி பௌத்தத்தின் வழிமுறை ; பல ஜென்மங்களாக போதிசத்துவ வாழ்க்கை வாழ்ந்து புத்த நிலையை அடைதல் மகாயானத்தின் வழிமுறை ; தன்  வாழ்நாளிலேயே வஜ்ரத்தினால் குறுக்காக வெட்டுவது போன்று  கர்மயதார்த்தங்களை அரிந்து கருத்தியல்களை துறந்து மஹாமுத்ரசித்தியை அடைதல் வஜ்ராயனத்தின் வழிமுறை.

    Maha Siddhas