சீர்மை பதிப்பகம்
விலை : ரூ 100
இணைய வழி ஆர்டர் செய்ய – https://www.commonfolks.in/books/d/iraithottam

சீர்மை பதிப்பகம்
விலை : ரூ 100
இணைய வழி ஆர்டர் செய்ய – https://www.commonfolks.in/books/d/iraithottam

அல்லாமா இக்பால் போன்ற ஓர் ஆளுமை துணைக்கண்டம் அதற்கு முன்னர் கண்டதில்லை. கவி நயமும் தத்துவமும் அவருள்ளில் ஒருங்கே குடி கொண்டிருந்தன. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்ட அவர் தத்துவம் கற்பித்தார். சட்டம் பயிற்சி செய்தார். அரசியலில் ஈடுபட்டார். இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார். பாகிஸ்தானை உருவாக்கும் யோசனையை ஆதரித்ததால் அங்கு தேசியக் கவிஞராக போற்றப்பட்டபோதும், இந்தியாவின் மகத்துவத்தைக் கொண்டாடும் புகழ்பெற்ற தேசபக்தி பாடலை எழுதினார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் சர் பட்டம் வழங்கப்பட்டு ‘சர்’ முகமது இக்பால் என்று அழைக்கப்பட்டார். “The Spirit of philosophy is one of free enquiry. It suspects all authority” என்று முழங்கிய இக்பால் 1920களில் மதராஸ் முஸ்லீம் அசோசியேஷன் எனும் அமைப்பின் அழைப்பில் சென்னை, ஹைதராபாத், அலிகர் ஆகிய நகரங்களில் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து 1930இல் “இஸ்லாத்தில் மத சிந்தனையின் மறுசீரமைப்பு” எனும் நூலை வெளியிட்டார். இஸ்லாமிய தத்துவ மரபுகளையும் மனித அறிவுச் செயல்முறையின் பல களங்களிலும் ஏற்பட்டிருந்த சமீபத்திய முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு முஸ்லீம் மத தத்துவத்தை மறுகட்டமைக்கும் முயற்சியாக இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
மனிதனின் உள் மற்றும் புற வாழ்வின் மாற்றமும் வழிகாட்டுதலும் மதத்தின் இன்றியமையாத நோக்கமாக இருப்பதால், அறிவியலின் கோட்பாடுகளைக் காட்டிலும் மதத்திற்கு அதன் இறுதிக் கொள்கைகளுக்கான பகுத்தறிவு அடித்தளம் மிக அத்தியாவசியமாக உள்ளது. ஆனால் நம்பிக்கையை நியாயப்படுத்துவது என்பது மதத்தை விட தத்துவத்தின் மேன்மையை ஒப்புக்கொள்வது ஆகாது. மதம் என்பது துறை சார்ந்த விவகாரம் அல்ல. அது வெறும் சிந்தனையோ, உணர்வோ அல்லது நடவடிக்கையோ அல்ல; அது முழு மனிதனின் வெளிப்பாடு.
சிந்தனையும் உள்ளுணர்வும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை. அவை ஒரே வேரிலிருந்து தோன்றி ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. ஒன்று யதார்த்தத்தை துண்டு துண்டாகப் புரிந்துகொள்கிறது, மற்றொன்று அதை அதன் முழுமையுடன் புரிந்துகொள்கிறது.
சிந்தனை அடிப்படையில் வரையறைக்குட்பட்டது; இந்த காரணத்திற்காக அதனால் எல்லையின்மையை அடைய முடியாது என்ற கருத்து, அறிவில் சிந்தனையின் இயக்கம் பற்றிய தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கான்ட்,அல்-கஸாலி – இருவருமே சிந்தனையை, அறிவின் செயல்பாட்டில், அதன் சொந்த எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதைக் காணத் தவறிவிட்டனர். எண்ணத்தை முடிவுறாததாகக் கருதுவது தவறு; அதன் போக்கில், வரையறைக்குட்பட்ட எண்ணம் எல்லையின்மையுடன் கைகுலுக்கும் தன்மையுடையது.
கடந்த ஐநூறு ஆண்டுகளாக இஸ்லாத்தில் மதச் சிந்தனை நிலையானதாக எந்தவித அசைவுமின்றி இருந்து வருகிறது. நவீன வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆன்மீக ரீதியாக இஸ்லாமிய உலகத்தின் மேற்கு நோக்கிய வேகமான நகர்வு. இந்த இயக்கத்தில் எந்த தவறும் இல்லை, ஏனெனில் ஐரோப்பிய கலாச்சாரம், அதன் அறிவுசார் அணுகுமுறையில், இஸ்லாமிய கலாச்சாரத்தினுடைய முக்கியமான கட்டங்களின் மேலதிக வளர்ச்சி மட்டுமே. ஐரோப்பிய கலாச்சாரத்தின் திகைப்பூட்டும் வெளிப்புறமானது இஸ்லாமின் இயக்கத்தை தடுத்து நிறுத்தி, அந்தக் கலாச்சாரத்தின் உண்மையான உள்நிலையை உள்வாங்கிக் கொள்ளாமல் செய்துவிடுமோ என்பது மட்டுமே இஸ்லாமியர்களின் பயம். எனவே, இஸ்லாத்தின் மறுமலர்ச்சியுடன், ஐரோப்பாவின் சிந்தனைகள் மற்றும் அவை எட்டிய முடிவுகள், இஸ்லாத்தின் இறையியல் சிந்தனையின் மறுசீரமைப்பிலும், தேவைப்பட்டால். மறுகட்டமைப்பிலும், எவ்வளவு தூரம் உதவக்கூடும் என்பதை சுதந்திரமான உணர்வில் ஆராய்வது அவசியம்.
இந்த நூலில் மொத்தம் ஏழு கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரையைத் தான் இதுவரை வாசித்திருக்கிறேன். ”காஷ்மீரி பிராமணர்களின் வாரிசு ஆனால் ரூமி மற்றும் தப்ரிஸின் ஞானத்தை அறிந்தவன்” என்று தம் நண்பர்களிடையே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்ட அல்லாமா இக்பால் ஞானம் மற்றும் சமய அனுபவங்குறித்து விரித்துரைக்கும் முதல் கட்டுரை சுவையாக இருந்தது. மற்ற கட்டுரைகளை வாசிக்க காத்திருக்க முடியவில்லை. பெருநாளுக்குப் பிறகு இந்த நூலின் வாசிப்பைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.
மடாலயம் எனுந்தலைப்பில் இக்பால் எழுதிய சிறுகவிதை ஒன்று –
அடையாளங்கள் மற்றும் சின்னங்களில் பேசுவது இந்த காலத்துக்கானதில்லை,
கலைநயத்தோடு இளிப்பவர்களின் கலை எனக்கு தெரியாது;
‘எழுந்திரு, கடவுளின் பெயரால்!’ என்று சொன்னவர்கள் இப்போது இல்லை.
உயிருடன் இருப்பவர்கள் எல்லோரும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் கல்லறை தோண்டுபவர்கள்

புல்லே ஷாவைப் பற்றி அறியப்படும் தகவல்கள் தொன்மங்கள் போல தொனிக்கின்றன. அவர் பிறந்த துல்லியமான தேதி மற்றும் பிறந்த இடம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே உடன்பாடு இல்லை. அவரது வாழ்க்கை பற்றிய சில “தகவல்கள்” அவரின் எழுத்துக்களிலிருந்தும் பிற “தகவல்கள்” வாய்வழி மரபுகள் வாயிலாகவும் பெறப்பட்டவை.
ஷா ஹுசைன் (1538 – 1599), சுல்தான் பாஹு (1629 – 1691), மற்றும் ஷா ஷரஃப் (1640 – 1724) போன்ற கவிஞர்களின் வரிசையில் பஞ்சாபி கவிதையின் சூஃபி பாரம்பரியத்தை செழுமைப்படுத்தியவர் புல்லே ஷா.
பிரபல சிந்தி சூஃபி கவிஞரான ஷா அப்துல் லத்தீப் பட்டாய் (1689-1752) வாழ்ந்த காலத்திலேயே புல்லே ஷா வாழ்ந்தார். அவரது ஆயுட்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பிற கவிஞர்கள் – ஹீர் ரஞ்சா காவியப் புகழ், பஞ்சாபி கவிஞர் வாரிஸ் ஷா (1722 – 1798), சாச்சல் சர்மஸ்த் எனும் புனைபெயரோடு புகழ்பெற்ற சிந்தி சூஃபி கவிஞர் அப்துல் வஹாத் (1739 – 1829). உருது கவிஞர்களில், புல்லே ஷா வாழ்ந்த காலத்திலேயே ஆக்ராவில் மிர் தாகி மிர் (1723 – 1810) வாழ்ந்தார்.
புல்லே ஷாவின் காலத்தில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையேயான வகுப்புவாத மோதல்கள் வலுத்தன. அந்த நேரங்களில் பாபா புல்லே ஷா பஞ்சாப் குடிமக்களுக்கு நம்பிக்கை மற்றும் அமைதியின் கலங்கரை விளக்கமாக இருந்தார். புல்லே ஷா பாண்டோக்கில் இருந்தபோது, சீக்கியர்களால் சில முஸ்லிம்களைக் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, தங்கள் கிராமத்தின் வழியாகச் சென்ற சீக்கிய இளைஞனை முஸ்லிம்கள் கொன்றனர். பாபா புல்லே ஷா அந்த அப்பாவி சீக்கியரின் கொலையைக் கண்டித்தார். அதனால் பாண்டோக்கின் முல்லாக்கள் மற்றும் முஃப்திகளால் கண்டிக்கப்பட்டார். வன்முறைக்கு வன்முறை பதில் அல்ல என்று சொன்னதோடு ஔரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய குரு தேக் பகதூர் ஒரு காஜி (இஸ்லாமிய மதப் போர்வீரர் என்பதற்கான சொல்) என்றும் புல்லே ஷா வர்ணித்தார்.
ஔரங்கசீப் இசை மற்றும் நடனத்தை தடைசெய்து இவை இஸ்லாத்தில் ஹராம் என்று அறிவித்தார். தடையை மதிக்காது பஞ்சாபில் கிராமம் கிராமமாகச் சென்று தனது காஃபிகள்ளைப் பாடி நடனமாடினார் புல்லே ஷா.
சீக்கியர்களின் கடைசி குருவாகிய குரு கோவிந்த் சிங்கின் புரட்சிகர உணர்வைப் பாராட்டினார், அவரை மத சுதந்திரத்தின் ‘பாதுகாவலர்’ என்று அழைத்தார். அதை ஒரு நுட்பமான நையாண்டியில் கூறினார்:
நஹ் கரூன் அப் கீ,
நஹ் கரூன் பாத் தாப் கீ.
கர் நா ஹோத்தே குரு கோவிந்த் சிங்,
சுன்னத் ஹோதி சப் கீ.
நான் நேற்று அல்லது நாளை பற்றி பேசவில்லை;
இன்று பற்றி பேசுகிறேன்.
கோவிந்த் சிங் மட்டும் இல்லாதிருந்தால்,
அவர்கள் அனைவரும் இஸ்லாமியராகியிருப்பர்
கடைசி வரியின் நகைச்சுவை தமிழ் பொழிபெயர்ப்பில் சரியாக வாராது. “இஸ்லாமைத் தழுவ கட்டாயப்படுத்தப்பட்டிருப்பர்” என்ற அர்த்தத்தைத் தரும் வகையில் சுன்னத் என்ற விருத்த சேதனத்துக்கான சொல்லைப் பயன்படுத்தினார்.
பண்டா சிங் பைராகி (கடைசி சீக்கிய குருவுக்குப் பின் வந்த சீக்கியப் படைகளின் தளபதி) புல்லே ஷாவின் சமகாலத்தவர். குரு கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்கள் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, சாதாரண முஸ்லிம்களைக் கொன்று பழிவாங்கினார். அவர் தனது பழிவாங்கும் பிரச்சாரத்தை கைவிட பண்டா சிங் பைராகியை சமாதானப்படுத்த முயன்றார் பாபா புல்லே ஷா. குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் மீதும், அப்பாவி சீக்கியர்கள் மீது விழுந்த அதே வாள் அப்பாவி முஸ்லிம்கள் மீதும் விழுந்ததாக புல்லே ஷா அவரிடம் கூறினார். எனவே அப்பாவி முஸ்லீம்களைக் கொல்வது அவுரங்கசீப்பின் அடக்குமுறைக்கு தீர்வாகாது என அறிவுறுத்தினார்.
புல்லே ஷாவின் எழுத்துக்கள் அவரை ஒரு மனிதநேயவாதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன – அவரைச் சுற்றியுள்ள உலகின் சமூகவியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குபவராக, தாய்நாடான பஞ்சாப் கடந்து சென்று கொண்டிருக்கும் கொந்தளிப்பை விவரிப்பவராக, அதே நேரத்தில் கடவுளைத் தேடுபவராக. ஷரியாத் (பாதை), தரீகத் (கவனித்தல்), ஹகீகத் (உண்மை) மற்றும் மர்ஃபத் (ஒன்றுபடல்) ஆகிய நான்கு நிலைகளில் மூலம் அவரது சூஃபித்துவ ஆன்மீகப் பயணத்தை அவரது கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கை மற்றும் மனிதநேயம் குறித்த சிக்கலான அடிப்படைப் பிரச்சினைகளை தன் எழுத்தில் எளிமையுடன் அவர் கையாண்ட விதம் அவர் மேல் பஞ்சாபிகளுக்கு இருந்த ஈர்ப்பின் பெருங்காரணம். எனவேதான், அவரது காஃபிகளை (அவர் எழுதிய பஞ்சாபி கவிதையின் ஈரடி வடிவம்) பலர் இசைப்படுத்தயுள்ளனர் – சாதாரண தெருப் பாடகர்கள் முதல் புகழ்பெற்ற சூஃபி பாடகர்களான வடாலி சகோதரர்கள், அபிதா பர்வீன் மற்றும் பத்தனே கான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிய கலைஞர்களின் ஒருங்கிணைந்த டெக்னோ கவாலி ரீமிக்ஸ்கள் முதல் ராக் இசைக்குழு ஜூனூன் வரை.
புல்லே ஷாவின் பிராபல்யம் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என சமச்சீராக அனைத்து வகுப்பினரிடையேயும் பரவியிருக்கிறது. இந்த சூஃபியைப்பற்றி நமக்கு கிடைக்கும் பெரும்பாலான எழுத்துகள் இந்து, சீக்கிய எழுத்தாளர்கள் அவரைப்பற்றி எழுதியவை.
ராபி ஷெர்கில் கிடாரை வைத்துக்கொண்டு பாடும் இசைவீடியோவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் – புல்லா கீ ஜானா மேய்ன் கோன்! புல்லே ஷாவின் மிகப்பிரசித்தமான கவிதையின் இசைவடிவம் அது. மிகப்பிரபலமான பாடல். லின்க் கமென்டில்.

Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.