Author: Ganesh Venkatraman

  • நெல் குத்தும் ஞானப்பதம்

    நண்பர் நிஷா மன்சூர் வாட்ஸப்பில் ஒரு மின்னூலைப் பகிர்ந்ந்திருந்தார். அவருடைய தந்தை வழி பூட்டனார் எழுதிய ஒரு கவிதை நூல். “நெல் குத்தும் ஞானப்பதம்” என்பது அதன் தலைப்பு. தமிழ் சிற்றிலக்கிய மரபு, தமிழர்களின் வாழ்வியல், இஸ்லாமிய மெய்ஞானம் – மூன்று அம்சங்களும் கலந்து எழுதப்பட்ட இந்தப் பாக்களை இசைக்கத்தக்க வகையில் இயற்றியுள்ளார் இதன் ஆசிரியர். கவிதைகளின் ஆரம்பத்தில் “இராகம் செஞ்சுருட்டி தாளம் ஆதி” என்று குறிப்பிடப்படுகிறது. யாரேனும் இதை சங்கீதமாகப் பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை என்கிறார் ஆசிரியரின் கொள்ளுப் பேரன் நிஷா மன்சூர்.

    நெல்லுக்குகுத்துகிற பதத்தே நான்
    சொல்லிவாரெனந்த விதத்தை யினி
    அல்லும்பகலும் துற்குணத்தே நீக்கி
    வெல்லு அஜாசீல்மும்மலத்தே வாசி
    ஹாஹா சரம் மாத்திக்குத்தடி ஹுஹு திக்கிர்
    முழக்கிக்குத்தடி ஹீஹீ

    அல்லாஹுவென்ற ஜோதி றப்பில்
    ஆலம்மீனாம் பிரக்யாதி கல்பு
    தில்லாலும் நாவால் ஓதி ஹக்கை
    தினந்துதிப்பதே நீதி வாசி
    ஹாஹா சரம் மாத்திக்குத்தடி ஹுஹு திக்கிர்
    முழக்கிக்குத்தடி ஹீஹீ

    நூலின் முகவுரையில் இக்கவிதைகள் எழுதப்பட்டதன் பின்னணி விளக்கப்ப்டுகிறது.

    “வேலைக்காரப் பெண்கள் உஸ் உஸ் என்ற பெருமூச்சுடன் உலக்கை மாரி மாரி நெல் குத்துவதைக் கண்ணுற்ற உ.அஸன் முகமது றாவுத்தர் இவ்வளவு மூச்சு வீணில் போகிறபடியால் என்ன விதமான வேலைகள் செய்யும் போது மூச்சிலும் ஆண்டவனை திக்கீர் செய்வதெப்படி என்று கேட்டதற்காக அந்த நிமிஷமே பாடலாகக் கோர்வை செய்ப்பட்டது.”

    நான் அடிக்கடி செல்லும் ஷிர்டியில் த்வாரகா மாய்-யில் காணப்படும் அரைகல்லை நினைவு கூர்ந்தேன். ஷிர்டி நாதரின் வாழ்வில் நிகழ்ந்த அந்த அரை கல் சம்பந்தப்பட்ட அற்புதங்களின் பின்னணியில் இருக்கும் மறைஞானமும் நெல் குத்தும் ஞானப்பதம் கூறும் ஞானமும் ஒரே அடிப்படையிலிருந்து எழுவது என்று யோசிக்கலானேன்!

    1930களில் ராமநாதபுரத்தில் பதிப்பிக்கப்பட்ட இச்சிறு நூல் ஏறத்தாழ நாற்பது அடிகளைக் கொண்டுள்ளது. இதுபோல பத்து மடங்கு படைப்புகளை நண்பரின் பூட்டனார் – ஹக்கீம் பீ அய்யூபு சாஹிப் அவர்கள் – எழுதியுள்ளாரெனத் தெரிகிறது. அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு முழு நூலாகக் கொண்டுவரும் திட்டம் உள்ளதாகச் சொல்லுகிறார் நிஷா. நூலாகக் கொண்டுவருமுன் கர்நாடக இசையில் ஒரு இசைத்தட்டு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுங்கள் என்று நான் சொன்னேன்.

  • வரலாற்று ஆய்வில் புராணங்களின் பயன்பாடு

    ராஜதரங்கிணி நூலில் வரும் கஷ்மீர மன்னர்களின் வரிசையை வாசித்த போது என்னுள் தோன்றிய அதே பெருவியப்பு விஷ்ணு புராணத்தில் வரும் அரசவம்சங்களின் பெயர்களை அவ்வம்சங்களின் அரசர்களின் பெயர்களை வாசிக்கும்போதும் தோன்றியது. ராஜதரங்கிணி போன்று வரலாற்றுப் பிரக்ஞையுடன் புராணங்கள் எழுதப்படவில்லை என்றாலும் புராணமும் வரலாறும் இணைவதைப் பல இடங்களில் அவதானிக்க முடிகிறது.

    அசோகரின் பெயரை விஷ்ணு புராணத்தில் வாசித்தபோது அசோகரைத் தொன்ம பாத்திரமாக சித்திரிக்கும் பௌத்த இலக்கியங்கள் ஞாபகத்தில் வந்து சென்றன. புத்தர் வாழ்ந்த காலத்தை நிர்ணயிப்பதில் பௌத்த மூல நூல்களை விட விஷ்ணு புராணம் கூறும் காலவரிசை துல்லியமானது என்று வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

    “நந்தாவின் வம்சம் முடிவுக்கு வந்தவுடன் மௌரியர்கள் பூமியைக் கைப்பற்றுவார்கள், ஏனெனில் கௌடில்யர் சந்திரகுப்தனை அரியணையில் அமர்த்துவார்: அவனுடைய மகன் விந்துசாரர்; அவனுடைய மகன் அசோகவர்த்தனனாவான்…..”

    மௌரியர்கள் ஆட்சி முடிவடைந்து சுங்கர்கள் ஆட்சியேறியதைப் பதிவு செய்கிறது விஷ்ணு புராணம் :-

    “சுங்கர்களின் வம்சம் அடுத்து இறையாண்மையை உடையதாக மாறும்; கடைசி மௌரிய அரசரின் தளபதியான புஷ்பமித்ரர் தனது எஜமானரைக் கொன்றுவிட்டு அரியணை ஏறுவார்.”

    சாதவாகன மன்னர்களையும் வரிசைப்படுத்துகிறது விஷ்ணு புராணம் :-

    “சுசர்மன் கன்வாக்களின் (கடைசி மன்னன்) ஆந்திர பழங்குடியினத்தைச் சேர்ந்த சிப்ரகா என்ற சக்திவாய்ந்த வேலைக்காரனால் கொல்லப்படுவான், அவன் பிறகு மன்னனாவான்; அவனே ஆந்திராபிரித்ய வம்சத்தை நிறுவியவன்: அவனுக்குப் பிறகு அவரது சகோதரர் கிருஷ்ணர் ஆட்சிக்கு வருவார்; அவருடைய மகன் ஸ்ரீ ஶதகர்ணி; அவருடைய மகன் பூர்ணோட்சங்க; அவரது மகன் ஷாதகர்ணி (2வது); அவருடைய மகன் லம்போதரா; அவருடைய மகன் இவிலக; அவருடைய மகன் மேகஸ்வதி; அவருடைய மகன் படுமட்; அவருடைய மகன் அஷ்டகர்மன்; அவரது மகன் ஹளன்; அவரது மகன் தலகா; அவருடைய மகன் பிரவிலாசேனா; அவரது மகன் சுந்தரன், ஷாதகர்ணி; அவரது மகன் சகோர சாதகர்ணி; அவரது மகன் சிவஸ்வதி; அவருடைய மகன் கோமதிபுத்திரன்; அவரது மகன் புலிமாத்; அவருடைய மகன் சிவஸ்ரீ சாதகர்ணி; அவருடைய மகன் சிவஸ்கந்தா; அவருடைய மகன் யஜ்ஞஸ்ரீ; அவருடைய மகன் விஜயா; அவரது மகன் சந்திரஸ்ரீ; அவருடைய மகன் பூலோமர்சிஷ். இந்த முப்பது ஆந்திரபிரத்திய மன்னர்கள் நானூற்று ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள்.”

    சாதவாகனர் மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு பின்னர் ஆண்ட வம்சங்களைக் குறிப்பிடுகிறது – குப்தர்கள் வரை குறிப்பிடும். சிந்து நதிக்கரைக்கு அப்பால் “காட்டுமிராண்டிகள்” ஆள்வார்கள் என்ற வரிகள் எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் “அராபியர்கள்” சிந்துவை ஆண்ட தகவலை விஷ்ணு புராண ஆசிரியர்கள் அறிந்திருந்தனரோ என்று எண்ண வைக்கிறது.

    இந்தப் பெயர் வரிசைகள் மிகவும் நம்பகமான வரலாற்று ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படலாம், இருப்பினும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் கூடிய கவனம் மிக அவசியம்.

    மத்ஸ்ய புராணம், வாயு புராணம் – இவற்றிலும் மன்னர்களின் வரிசை வருகின்றன. குறிப்பிடப்படும் அரச வம்சங்களின் பெயர்களை வைத்து எந்த நூற்றாண்டில் இந்தப் புராணங்கள் எழுதப்பட்டன என்பதை ஊகித்துவிடலாம்.

  • காதலும் பிற பூதங்களும்

    Of Love and other demons –1510இல் ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட The Four Books of Amadius of Gaul எனும் புதினம் பற்றிய ஒரு குறிப்பு நாவலில் வருகிறது. பிஷப்பின் தேவாலயத்தில் பாதிரி-நூலகராக இருக்கும் டீலோரா அந்நாவலை பல ஆண்டுகளுக்கு முன் பாதி வாசித்திருக்கிறார். அந்த நாவலுக்கு கத்தோலிக்க சர்ச்சுக்கள் உலகெங்கும் தடை விதித்திருக்கின்றன. தமது சர்ச் நூலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நூல்களின் வரிசையிலிருந்து அந்நாவலின் பிரதி தொலைந்து போய் விடுவதால் நாவலின் முடிவு என்ன என்பதை அவர் அறியமுடியவில்லை. பின்னர் ஒருமுறை அந்நாவல் பிரதி அவர் கண்ணில் கிடைக்கிறது. அதனை கையில் ஏந்தி தடவிப்பார்க்கிறார். Chivalric Romance எனும் இலக்கிய வகைமைப் புதினப் பிரதியைப் பார்த்த பிறகு ஒரு ரீஜண்ட் போல சாகசவுணர்வுடன் அவர் எடுக்கும் முடிவுகள் துன்பியல் முடிவைத் தருகிறது. பாதி வாசித்த புதினத்தின் இளவரச-நாயகனாய்த் தன்னை டிலோரா கற்பனை செய்து கொண்டிருக்கக் கூடும்.

    அடிமை வியாபாரம் உச்சத்தில் இருக்கும் தென் அமெரிக்கத் துறைமுக நகரத்தில் செல்வந்த ஜோடியொன்றின் மகள் சீர்வா மரியா வீட்டில் இருக்கும் அடிமைகளால் வளர்க்கப்படுகிறாள். ஆப்பிரிக்க அடிமைகள் பேசும் யோருபா போன்ற மொழிகளைச் சரளமாகப் பேசும் மரியாவை வித்தியாசமாகப் பார்க்கிறது காலனீய சமூகம். அவளை ஒரு வெறிநாய் கடித்த பின்னர் கண்டிப்பாக அவளுக்கு Rabies பீடிக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அது பீடிக்காத போது மரியாவைப் பேய் பிடித்துக் கொண்டதாக கத்தோலிக்க சர்ச் பேயோட்டுவதற்காக இழுத்துச் சென்று விடுகிறது.

    1740களின் தென் அமெரிக்கத் துறைமுக நகரமொன்றில் கொடூரமான கத்தோலிக்க தேவாலயத்தால் ஓர் அப்பாவியான, ஆதரவற்ற 13 வயது சிறுமி மீது சமய நிறுவனம் இழைக்கும் வன்முறையின் உருவப்படம் இந்த நாவல். மதம் மற்றும் தார்மீகப் பிரச்னைகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான கதைக்கருவை – மத ஆதிக்கத்தின் மூலம் அடையப்பட்ட தென் அமெரிக்காவின் மீதான ஸ்பானிய காலனித்துவத்தின் சூழலில் – உருவாக்கியிருக்கிறார் மார்க்கேஸ்.

    நாவல் பேசும் அடிப்படை பிரச்னையை நாத்திகம் பேசும் மருத்துவர் அப்ரெனுன்ஸியோ ஓர் உரையாடலில் அழகுற சுருக்கிக் கூறிவிடுகிறார் – “மரணத்தின் மதம் உங்களிடம் உள்ளது, அதை எதிர்கொள்ளும் மகிழ்ச்சியையும் தைரியத்தையும் அது உங்களுள் நிரப்புகிறது. நான் அவ்வாறு இல்லை; உயிருடன் இருப்பது மட்டுமே அத்தியாவசியமான விஷயம் என்று நம்புபவன் நான்.”

    அவள் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் பல இரவுகள் மரியாவுடன் கழிக்கும் டிலோரா ஏதாவது ஓர் இரவில் ரகசியமாகத் தான் வரும் வழியாக அவளை அழைத்துச் சென்றிருக்கலாமே என்று யோசித்துக் கொண்டே வாசிக்கையில் அந்த வழியைப் பயன்படுத்தி வேறொருவர் தப்பித்துச் சென்றுவிட பாதிரியார் பயன்படுத்தும் சுரங்க வழி அடைபட்டுவிடுகிறது. நாவலின் முடிவில் பேயோட்ட வரும் பிஷப்பின் வயிற்றை மரியா எட்டி உதைக்கும் கட்டம் கண நேர மகிழ்வைத் தருகிறது. கலக உணர்வுகளை அடக்கும் அதிகாரத்தின் மூர்க்கத்தனத்தை நாவலில் பதிவு செய்கிறார் மார்க்கேஸ்.

  • ஷிண்டோ

    சோகம் நம்மை
    ஆட்கொள்ளுகையில்
    நினைவுகளின், கவனத்தின்
    சின்ன சாகசங்களால்
    நாம் சில கணங்கட்கு
    காக்கப்படுகிறோம்:
    கனியின் சுவை, நீரின் சுவை
    கனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,
    நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,
    திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,
    தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,
    லத்தின மொழிப் பாவகையின் சீர்,
    வீட்டைத் திறக்கும் சிறு சாவி,
    சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,
    ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,
    வரைபடத்தின் நிறங்கள்,
    சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,
    மெருகேற்றிய நகம்,
    நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,
    பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,
    நாம் எதிர்பார்க்காத உடல்வலி.
    எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்
    நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றன
    பணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றன
    தொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.

    - போர்ஹேஸ்

    (Translated from the English translation by Paul Weinfield)

  • அஷெம் வஹு – ஜோராஸ்ட்ரியர்களின் முதன்மை மந்திரம்

    ஜோராஸ்ட்ரிய சமயத்தின் வேதம் ஜென்ட் அவெஸ்தா. அது ஐந்து தொகுதிகளைக் கொண்டது. காதா, யஸ்னா, வெந்திதாத், விஸ்ப்-ராத், யஷ்ட். குர்தா அவெஸ்தா அடுத்த படியில் உள்ள புனித நூல் தொகுப்பு. குர்தா அவெஸ்தாவின் பாராயணத்தின் முடிவில் ஜொராஸ்ட்ரியர்கள் சொல்லும் மந்திரம் அஷெம் வஹு. இது தியான வழிபாடு. மிகப் பழமையான இந்த வழிபாட்டிற்கு பலவித மறுவிளக்கங்கள்.

    அவெஸ்தன் மொழியின் சிக்கலான தன்மை மற்றும் கூறப்படும் கருத்துகள் காரணமாக குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடும் பல மொழியாக்கங்கள் உள்ளன. ஆனால் மந்திரத்தை உச்சரிக்கையில் நம் சிந்தனையில் அதன் அர்த்தம் தன்னிச்சையாக வந்து மனதில் படியும் என்பது ஜொராஸ்ட்ரியர்களின் ஐதீகம்.

    aṣ̌əm vohū vahištəm astī
    uštā astī uštā ahmāi
    hyat̰ aṣ̌āi vahištāi aṣ̌əm

    அஷெம் வஹு வஹிஸ்தேம் அஸ்தி
    உஷ்டா அஸ்தி உஷ்டா அம்மாய்
    யத் அஷாய் வஹிஸ்தாய் அஷெம்

    ஆஷா எனப்படுவதன் முக்கியத்துவத்தை அதன் ஆற்றலைப் பேசுகிறது இந்த மந்திரம். ஆஷா எனும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.

    ஆஷா என்பது ஒரு சிக்கலான மற்றும் அதிக நுணுக்கமான பொருளைக் கொண்ட ஒரு ஜோராஸ்ட்ரியன் கருத்து. இது பொதுவாக ‘சத்தியம்’ மற்றும் ‘நன்னடத்தை’ ‘சரித்தன்மை’ அல்லது ‘நீதி’, ஒழுங்கு’ மற்றும் ‘சரியாகச் செயல்படுதல்’ எனப் பலப்பல அர்ததங்களைக் கொண்டது. குர்தா அவெஸ்தாவுக்கும் பழமையான ஜென்ட் அவெஸ்தாவில் ‘ர்த’ என்ற சொல் ‘ஆஷா’வின் இணைச்சொல். சூழல் சார்ந்த தாக்கங்களுக்கு இணங்க ஆஷாவின் அர்த்தம் வகுத்துக் கொள்ளப்படுகிறது. உலகம் ஆஷா என்ற சொல்லிலிருந்து துவங்கிற்று என்பது சமய நம்பிக்கை. “அழகு”, ”தூய்மை” – இன்னும் எத்தனையோ அர்த்தங்கள் அதற்கு!

    இந்த மந்திரத்தின் பொதுவான கருத்து என்ன?

    “ஆஷாவில் சிறந்த நன்மை இருக்கிறது
    அதுவே மகிழ்ச்சி; எவன் ஆஷாவைக் கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு மகிழ்ச்சி”

    (நவ்ரோஸ் தின சிறப்புப் பதிவு)

  • My Octopus Teacher

    முக்குளிப்பவர் ஒருவருடன் நட்புகொள்ளும் ஓர் ஆக்டோபஸ் பற்றிய ஆவணப்படம் My Octopus Teacher. இரைகளை வேட்டையாடும் முறை, வேட்டையாட வரும் உயிரினங்களிடமிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் என தன் வாழும் முறையை படம் பிடிக்க மனித நண்பனை அனுமதித்தது போல் ஒத்துழைத்திருக்கிறது அந்த ஆக்டோபஸ். மை வீசி இரைக்காகத் துரத்தும் உயிரினங்களின் பார்வையிலிருந்து மறைந்து போதல், தோலின் நிறம், அமைப்பு, உடலின் வடிவம் அனைத்தையும் கண நேரத்தில் மாற்றிக்கொண்டு வேட்டையாட வரும் மிருகங்களின் கண்ணில் படாதிருத்தல், சுறா போன்ற மூர்க்கமான மிருகங்களிடமிருந்து புத்தி சாதுர்யத்தால் தப்பித்தல் – மனித இனம் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்ட ஆக்டோபஸ் அதன் ஒவ்வொரு இயக்கத்திலும் நம்மை பெருவியப்புக் கொள்ளச் செய்கிறது. அது தன் இரையை வேட்டையாடும் விதமோ நம் வியப்பை பல மடங்கு உயர்த்திவிடுகிறது. அதன் எண்கைகளின் அதிவேகம் ஆக்டோபஸ்ஸின் இரை தேடுதலின் முக்கிய அம்சம். இரையினத்துக்கேற்ற மாதிரி வேட்டைத் திட்டத்தை மாற்றிக்கொள்ளுதல் இன்னொரு சிறப்பம்சம். நண்டை வேட்டையாடுகையில் கைக்கொள்ளும் உத்தியை அது சிப்பி மீனை வேட்டையாடும் போது கைக்கொள்வதில்லை. வேட்டையின்போது அதன் கைகள் துண்டித்துவிடுகையில் காயங்களுக்குத் தானே சுயசிகிச்சை செய்து கைகளை மீள்-வளர்ச்சி செய்துகொள்ளும் விதம் – வியப்பின் சிகரம்! இனப்பெருக்கம் இந்த உயிரினத்தின் மரணத்துக்கு வித்திட்டுவிடுகிறது. ஆண் ஆக்டோபஸ் புணர்ச்சிக்குப் பிறகு சுய-அழிவை நோக்கிப் பயணப்படுகிறது. உணவு உட்கொள்ளாமல், செல்கள் வளர்ச்சியுறாமல், அதன் இயக்கங்களை ஒருங்கிணைக்காமல் மிக எளிதில் வேட்டையாடப்படும் விதத்தில் வளைய வருகிறது. பெண் ஆக்டோபஸ் முட்டைகளை அடைகாக்கும் வரை உயிர் தறிக்கிறது. பிறகு அதுவும் மரணத்தை தழுவி விடுகிறது. இந்த senescence என்னும் உயிரியல் செயல்முறை வேறு சில கடல்வாழ் உயிரினங்களிலும் உள்ளதாம்! ஆவணப்படத்தில் நாயகி ஆக்டோபஸ்ஸை வேட்டையாட முயன்று தோற்றுப்போன சுறாமீன் இறுதியில் அதன் இறந்த உடலைப் புசிப்பது நல்ல சோகநாடகம்!

  • திரும்பாதிருத்தல் மற்றும் பிற கவிதைகள் – எமிலி டிக்கின்ஸன்

    A Book

    “He ate and drank the precious words,

    His spirit grew robust;

    He knew no more that he was poor,

    Nor that his frame was dust.

    He danced along the dingy days,

    And this bequest of wings

    Was but a book. What liberty

    A loosened spirit brings!”

    (XXI)

    புத்தகம்

    மதிப்புமிக்கச் சொற்களை தின்று குடித்துவிட்டான்

    அவனின் ஆன்மவுணர்வு பெருக்கெடுத்து வளர்ந்தது

    அதற்குப்பின், தான் ஏழை என்பதை மறந்துவிட்டான்

    அவனின் தேகம் உடைந்துவிழுவது என்பதையும்

    மங்கலான நாட்களை ஆடிக்கழிக்க முடிந்தது

    பெற்ற இறக்கைகள் புத்தகமன்றி வேறில்லை

    இறுக்கம் களைந்த ஆன்மா கொணரும்

    சுதந்திரமே சுதந்திரம்!

    “I had no time to hate, because

    The grave would hinder me,

    And life was not so ample I

    Could finish enmity.

    Nor had I time to love; but since

    Some industry must be,

    The little toil of love, I thought,

    Was large enough for me.”

    வெறுக்க நேரமில்லை என்னிடம், ஏனெனில்

    கல்லறை என்னைத் தடுக்கும்

    மற்றும், வாழ்க்கை மிதமிஞ்சியதாக இல்லை

    என் பகையை தீர்த்துக்கொள்ளுமளவிற்கு.

    நேசிக்கவோ நேரமே போதவில்லை, ஆனால்

    கொஞ்சம் மெனக்கெடல் அவசியமென்பதால்

    அன்பிற்கான சிறு உழைப்பு மட்டும்

    எனக்கு போதுமானதாய் இருந்தது என்றெண்ணினேன்

    (XXII)

    Unreturning.

    ‘T was such a little, little boat

    That toddled down the bay!

    ‘T was such a gallant, gallant sea

    That beckoned it away!

    ‘T was such a greedy, greedy wave

    That licked it from the coast;

    Nor ever guessed the stately sails

    My little craft was lost!”

    (XXIII)

    திரும்பாதிருத்தல்

    குடாக்கரையில் தள்ளாடும்

    இது மிக மிகச் சின்ன படகு

    தள்ளிப்போகச் சைகை காட்டும்

    அது மகத்தான பெருங்கடல்

    கரையிலிருந்து தீண்டியது

    பொறாமை மிகுந்த ஓர் அலை

    கம்பீரமிக்க கப்பல்களாலும் கண்டுபிடிக்கவியலாமல்

    தொலைந்துபோனது என் மரக்கலம்

    (XXIII)

    “Whether my bark went down at sea,

    Whether she met with gales,

    Whether to isles enchanted

    She bent her docile sails;

    By what mystic mooring

    She is held to-day, —

    This is the errand of the eye

    Out upon the bay.”

    (XXIV)

    என் சிறு நாவாய் கடலில் இறங்கிச் சென்றது

    அது புயலைச் சந்தித்ததா

    அல்லது தனது பணிவான பாய்மரத்தை கீழிறக்கி

    மயங்கவைக்கும் தீவுகளை அடைந்ததா

    எத்தகைய புதிர் நங்கூரப் பிணைப்பில்

    அது இன்று பூட்டப்பட்டிருக்கிறது,-

    கண்கள் விடுக்கும் செய்தி இது

    கடற்கரைக்கு அருகிருந்து

    (XXIV)

    “Belshazzar had a letter, —

    He never had but one;

    Belshazzar’s correspondent

    Concluded and begun

    In that immortal copy

    The conscience of us all

    Can read without its glasses

    On revelation’s wall.”

    (XXV)

    பெல்ஷஸாரிடம் ஒரு கடிதம்

    ஒரே ஒரு கடிதம்

    பெல்ஷஸாரின் செய்தியாளர்

    அந்த அழியாப் பிரதியில்

    தொடங்கி முடித்த

    அனைவரின் மனசாட்சியை

    நம்மால் வாசிக்க முடியும்

    அதன் கோப்பைகளில்லா

    வெளிப்படுத்தும் சுவரில்

    பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.

    מנא מנא תקל ופרסין

    Mede Mede Tekel Upharsin

    “Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”

    அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் சைரஸ் கைப்பற்றுகிறார். சைரஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.

    வெளிப்படுத்தும் சுவர் – எமிலி கேதலிக் சமய நம்பிக்கை கொண்டிருந்தவர். இங்கு அவர் சுவர் எனக் குறிப்பிடுவது ஜெருசலேமின் அழிந்து போன சாலமன் கட்டிய யூதர்களின் தலைமைக் கோயிலின் சுவர் (Wailing Wall) சிதிலத்தை. யூதர்கள் சுவர் முன்னால் நின்று அழும் சடங்கில் அவர்கள் அழும் காரணத்தை இறைவன் பெல்ஷஸாருக்கு அளித்த தகவலோடு ஒப்பு நோக்குகிறார் எமிலி.

  • தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் – ஈரானிய நாவல் குறித்து

    தெஹ்ரானில் ஒரு உயரமான கட்டிடம். மிகவும் வேறுபட்ட சமூக நிலைமைகள், மத அல்லது மத சார்பற்ற நோக்குநிலைகள், தார்மீக அல்லது ஒழுக்கக்கேடான நடத்தைகளை பிரதிபலிக்கும் அண்டை வீட்டார். பழமைவாத குடும்பங்கள், மூர்க்கத்தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட இளைஞர்கள் (மது, போதைப்பொருள், தேவையற்ற டீனேஜ் கர்ப்பம்), தொழில்முறை குற்றவாளிகள், ஏன் ஒரு செக்ஸ் வொர்க்கர் கூட – எல்லாம் கலப்பு, எல்லாம் முரண், எல்லாம் புதிர்.

    ரேடியோவில் மதச் சொற்பொழிவு ஒலிபரப்பை கேட்டுக்கொண்டே கொடூரமான கொலையைச் செய்கிறார்கள் குற்றவாளிகள். அந்தச் சொற்பொழிவில் வரும் மேற்கோள் – “தொழுநோயாளியின் கையில் பன்றி எலும்பு” – மனித இருப்பின் பரிதாபகரமான தன்மையின் வரையறை – ஷியா இஸ்லாமின் புனித இமாம்களில் ஒருவர் தந்தது. செக்ஸ் வொர்க்கர் நம்பிக்கையின்றி காதலிக்கிறாள். படித்த தாய் மூடநம்பிக்கை மற்றும் அதிசய சிகிச்சையின் மூலம் நோய்வாய்ப்பட்ட குழந்தை நலம்பெற ஆசைப்படுகிறாள். மிதமிஞ்சிய பணம் புரளும் குற்றவுலகம், அதில் ஊழலும் கலந்துள்ளது. பின்னணியில், சத்தமில்லாத, மிகவும் மாசுபட்ட பெருநகரத்தின் இடைவிடாத ஓசை. ஈரான் அதன் அனைத்து முரண்பாடுகளிலும் சிக்கலான தன்மையிலும், அங்கு வாழ்ந்த அனைவருக்கும் சாட்சியமளிக்கிறது. எனினும், இறுதி முடிவு விரக்தி தருவதல்ல. ஆனால் மனித பலவீனங்களை இரக்கத்துடன் நோக்குவது.

    மையத்தன்மையற்ற கதை சொல்லல். ஒரு திரைப்படத்தின் ஸ்க்ரிப்ட் போல எழுதப்பட்டுள்ள நாவல். ஒரு காட்சிப் பொருளாய் ஒரு புறநகர்ச் சமூகத்தின் சித்திரிப்பு. நூறு பக்கம் மட்டுமே. இரண்டாயிரங்களின் முக்கிய ஈரானிய எழுத்தாளராக மொஸ்தஃபா மஸ்தூரை நிலை நிறுத்திய படைப்பு.

    நிச்சயமாக ஈரான் எனும் தேசம் சாடர்கள் (Chador) /அயத்துல்லாக்கள் நிரம்பிய தேசம் மட்டுமல்ல, அதே நேரம் இளம் ட்வீட்டர்கள் மற்றும் மேற்கத்திய சார்பு மதச்சார்பின்மைவாதிகள் மட்டுமே நிரம்பிய தேசமுமல்ல.

    அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் அல்லது பத்திரிகையாளர்களை விட அதிகம் உண்மையைச் சொல்ல முனைபவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள். அவர்களைக் கேட்போம். மொஸ்தஃபா மஸ்தூர் ஈரானைப் பற்றிச் சொல்வதைக் கேட்போம்.

    தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் – மொஸ்தஃபா மஸ்தூர்
    தமிழில் – பீ எம் எம் இர்ஃபான்
    சீர்மை பதிப்பக வெளியீடு

  • கோன்யா

    நீல நிற மினார்கள்

    என்னை அழைக்கும்

    அந்த கட்டிடத்தின் கைகள்

    காபிக்கடைகள்

    தொங்கும் கபாப்கள்

    ஜலசந்தியின் விஸ்தாரம்

    நகரும் மனபிம்பங்கள்

    இனிப்பு வகைகளுடன் போட்டியிடும்

    நெடும் வரலாற்றின் வாசனை

    மயக்கமுற்றோர் போல

    நேர்த்தியாய்ச் சுழலும் டெர்வீஷ்கள்

    தூரத்தில் தெரியும்

    அந்தக் கல்லறை

    பல ஆண்டுகளாய்

    அழைக்கும் மௌனத்தின் சத்தம்

    என் காதில் இரைகிறது

  • ஊர்பேர்

    சராசரிக்கதிகமான நினைவாற்றல் எனக்குண்டு என்ற மிதப்பில் இத்தனை வருடங்களாக இருந்தவனுக்கு ஊர்களின் பெயர்களை மறந்து போகிறேன் என்பதை ஏற்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு வாரம் முன் சென்ற ஊரை நினைவில் கொண்டு வர முயல்கிறேன். மனதின் காட்சியில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய நேரம் ஞாபகமிருக்கிறது. தெருமுக்கில் இருந்த பிக் பஸார் கடையை கடந்து சென்றது, ஹூடா ஐங்ஷன் வந்தபோது நஜஃப்கர் வழியாகச் செல்லலாம் என்று ஓட்டுனர் சொல்கையில் லேசாக தலையாட்டியது – எல்லாம் மனக்காட்சியில் தெளிவாக வந்து விழுந்தன. நஜஃப்கர் தாண்டியதும் குறுகலான சந்தில் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கினோம். சற்று தூரத்தில் காரில் சிஎன்ஜி குறைவு என்பதால் அதை நிரப்புவதற்காக நின்ற போது யாரோ எனக்கு போன் செய்தார்கள். யார் போன் செய்தது? மனைவியோ குழந்தைகளோ நிச்சயமாக இல்லை. அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்று எண்ணுகிறேன். ஞாயிற்றுக்கிழமை அல்லவா பயணமானோம்? அலுவலகத்திலிருந்தோ வாடிக்கையாளர்களிடமிருந்தோ அழைப்பு வந்திருக்க முடியாது. சிஎன்ஜி நிரப்பிய பின்தான் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கிக் கொண்டோமோ? ஊர் பேரை நினைவுபடுத்திக் கொள்ளச் சென்ற மனப்பயணம் வேறு சிலவற்றையும் நான் மறந்து போகிறேன் என்பதை புலப்படுத்தியது.

    எந்த ஊரை நோக்கிப் பயணம் என்பது மூலவினா. அதற்கு விடையளிக்கும் வழியில் நிறைய துணைவினாக்கள். யார் போன் செய்தார்கள்? எனக்கு ஓட்டுனர் பெயரும் ஞாபகமில்லை. காய்கறிச் சந்தை நெரிசல் முதலில் வந்ததா? சிஎன்ஜிக்காக நின்றது முதலில் வந்ததா? தெளிவு என்பது கூரான ஞாபக சக்திதான். இல்லை..அப்படியும் சொல்லிவிட முடியாது. தெளிவு என்பது தெளிவான மன நிலை. நினைவுத் துல்லியம் தெளிவின் முக்கிய அங்கம் என்று சொல்லிக் கொள்ளலாம். 

    சிஎன்ஜி ஸ்டேஷனுக்கப்பால் என் மனப்பயணம் நின்றுபோனது. எதையாவது பற்றி நிற்காவிடில் கீழே விழுந்துவிடுவோமில்லையா?  பிடி தளர்ந்து தடுமாறுகையில் ஏதாவது ஒரு நினைவைப் பிடித்துக் கொண்டால் நம் இருப்பு உறுதியாகும்.

    குர்கான் வரைபடத்தை விரித்தேன். பக்கத்தில் என்னென்ன ஊர்கள் இருக்கின்றன?  நஜஃப்கரை நோக்கி விரலை நகர்த்தினேன். அதைச் சுற்றி பல ஊர்கள், கிராமங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ரோகிணி, பகதூர்கர், பவானா……வெறும் பெயர்கள்…..எல்லாம் பெயர்கள்…தலையை அசைத்தேன். பெயர்கள் வைக்காவிடில் ஊர்களுக்கென தனித்த அடையாளம் ஏதேனும் இருக்குமா? வீடுகளும், வயல்களும், குளங்களும், மேடுகளும் பள்ளங்களும் – அவற்றின் எண்ணிக்கைகளும், வடிவங்களும், அமைப்புகளும் மாறுந்தன்மையை வைத்து…குழப்பமாய் இருக்கிறது…என் உடல் எங்கே? நான் இருக்கிறேனா…எனக்கு நினைவிருக்கிறது..எனவே நான் இருக்கிறேன்…எதையோ உதறுவது போல் சைகை செய்தேன்…

    “உடம்பை அசைக்காதீங்க” – எனக்கு யாரோ ஊசி போட்டுக் கொண்டிருந்தார்கள். முக கவசம் அணிந்திருந்தனர். 

    சற்றுத் தள்ளி ஒரு பெண் சதுர கண்ணாடி பதித்த கதவினுடே நோக்குகிறாள். ஒரு வித பயத்துடன் நின்றிருந்தாள். கண்ணில் நீர் படிந்திருந்தது. மனக்காட்சி மாறிவிட்டதா? ஊர் பெயர் மறந்ததை நான் இன்னும் மறக்கவில்லை. புதுக்காட்சியிலும் பழைய காட்சியைத் தொடர விழைந்தேன். 

    என் தலையை யாரோ நேராகப் பிடித்துக் கொண்டனர். கதவு பக்கம் என் முகத்தை திருப்ப முடியவில்லை. வெண்ணிற திரையை….சுவரை வெறித்து மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போதும் “என்ன பெயர் என்ன பெயர்” என்று மனதில் அசை போட்டபடியிருந்தேன். என் கால்களை யாரோ தூக்கினார்கள். எதையோ யாரோ தூக்குவது மாதிரி எடையற்று உணர்ந்தேன். 

    “நான் எந்த ஊருக்குப் போனேன். ” – என்று உரக்கக் கேட்டேன். உதடு மட்டும் அசைந்ததா எனத் தெரியவில்லை. நான் சொன்னது யார்க்கும் கேட்கவில்லை. யாரும் கேட்க பிரயாசப்பட்டதாகவும் தெரியவில்லை. என்னைச் சுற்றிலும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கதவினூடே நின்றிருப்பவள் இன்னும் அழுது கொண்டிருப்பாளா? அவள் அழுகை நின்றதாவெனத் தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் சிந்தினேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. நான் அழுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது தான் பிரக்ஞையின் அடையாளமா? வேறொரு காட்சிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள்….காட்சிகள் ஏதுமில்லை. இருட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன். எங்கிருக்கிறேன். இது வேறோரு காட்சியா? அல்லது வேறொரு எண்ணமா? வடிவங்களும் சிந்தனைகளும் பிணைந்து என்னை நெருக்குவது போல் இருந்தது. காட்சிகள் இல்லாத புதுக்காட்சியா? இல்லை…நானே என்னை இந்த இருட்டுக்குள் என்னைத் தள்ளிக்கொண்டேனோ?

    பித்ரு கடன் செய்யும் போது ஓதும் மந்திரங்கள் எங்கிருந்தோ ஒலித்தன. என் பெயர், என் தந்தையார் பெயர், தந்தையாரின் தந்தையார் பெயர் – இவற்றைச் சொல்லி வசு, ருத்ர, ஆதித்யர்களாக உருவகிக்கும் மந்திரங்களின் உச்சரிப்பு…பெயர்கள்…பெயர்கள்…பெயர்கள்.

    நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/amp/)