இப்னு அரபியின் கண்ணாடித் தத்துவம்

இப்னு அரபியின் (Ibn ʿArabi) தத்துவ தரிசனத்தில் ‘கண்ணாடி’ (The Mirror) என்பது வெறும் உவமை மட்டுமல்ல; அது பிரபஞ்சத்தின் இருப்பையும், படைப்புக்கும் இறைவனுக்கும் இடையிலான நுட்பமான உறவையும் விளக்கும் ஒரு முழுமையான தரிசனம். அவரது புகழ்பெற்ற ‘ஃபுஸுஸுல் ஹிகம்’ (Fusus al-Hikam) நூலில், ‘ஆதமின் ஞானம்’ (The Wisdom of Adam) என்ற முதல் அத்தியாயத்திலேயே இக்கருத்து மிக ஆழமாக முன்வைக்கப்படுகிறது.

1. மெருகூட்டப்படாத கண்ணாடியும் ‘தஸ்வியா’வும்

தொடக்கத்தில் பிரபஞ்சம் என்பது மெருகூட்டப்படாத, மங்கலான ஒரு கண்ணாடியாக இருந்தது. இறைவன் மனிதனை ‘தஸ்வியா’ (திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். 95:4) மூலம் படைத்து, பிரபஞ்சக் கண்ணாடியை மெருகூட்டினான்—ஆதமே அதன் முதல் பிரதிபலிப்பு. இறைவன் தனது அழகையும், திருநாமங்களையும் (Asma wa Sifat) தானே கண்டு ரசிக்க விரும்பினான். அந்தத் தெய்வீக ஒளியைப் பிரதிபலிக்கும் மெருகாக (Polish) மனிதன் படைக்கப்பட்டான். மனிதன் இல்லையென்றால் பிரபஞ்சம் எனும் கண்ணாடி எதையும் காட்டாது; மனிதன் எனும் ‘ரூஹ்’ (Spirit) நுழையும் போதுதான், இறைவன் தன்னையே இப்பிரபஞ்சக் கண்ணாடியில் காண்கிறான்.

2. ‘அவனே’ – ‘அவன் அல்ல’ (He and Not-He) 

ஒரு கண்ணாடியின் முன்னால் நிற்கும் பிம்பம், பார்ப்பவரைச் சார்ந்தது. அந்தப் பிம்பம் பார்ப்பவர்தான் (ஏனெனில் அது அவரது உருவம்), ஆனால் அது அவர் அல்ல (ஏனெனில் அதற்குச் சொந்தமாக உயிர் இல்லை). இப்னு அரபி இதனை ‘தஜல்லி’ (Tajalli – இறை வெளிப்பாடு) என்கிறார். உலகம் என்பது இறைவனின் நிழல் போன்றது. பிம்பம் உண்மையானது போலத் தோன்றினாலும், அதன் அசல் (Essence) இறைவனிடமே உள்ளது. இப்பிரபஞ்சம் இறைவனின் வெளிப்பாடாக இருப்பதால் அது ‘அவனே’ (He); ஆனால் அது இறைவனின் சாராம்சம் (Dhat) அல்ல என்பதால் அது ‘அவன் அல்ல’ (Not-He).

3. ‘வஹ்தத்’ – ‘கஸ்ரத்’ (Unity and Multiplicity)

இறைவன் ஒருவனே, ஆனால் கண்ணாடிகள் பல. ஒரே சூரியன் ஆயிரம் நீர்நிலைகளில் பிரதிபலிக்கும்போது ஆயிரம் சூரியன்கள் தெரிவதைப் போல, இறைவன் ஒருவனாக இருந்தாலும் ஒவ்வொரு ஆன்மாவும் (கண்ணாடியும்) தத்தமது தகுதிக்கும், தூய்மைக்கும் ஏற்ப அவனை வெவ்வேறு விதமாகப் பிரதிபலிக்கின்றன. இதனை ‘வஹ்ததுல் வுஜூத்’ (Wahdat al-Wujud – இருப்பின் ஏகத்துவம்), ‘கஸ்ரத்’ (Multiplicity – பன்மைத்துவம்) இடையிலான உறவு எனலாம். கண்ணாடி ஒன்றே, ஆனால் அதில் தெரியும் உருவங்கள் பல.

4. அல்-இன்சான் அல்-காமில் (The Universal Man)

மனிதன் தான் இந்தக் கண்ணாடியின் மையப்புள்ளி. இப்னு அரபி மனிதனை ‘அல்-இன்சான் அல்-காமில்’ (The Universal Man) என்று அழைக்கிறார். மனிதன் பிரபஞ்சக் கண்ணாடியின் ‘கண்மணி’ (Fass) போன்றவன். இறைவன் ஒரு பொக்கிஷம் என்றால், மனிதன் அந்தப் பொக்கிஷத்தைத் திறந்து காட்டும் திறவுகோல். மனிதன் எனும் கண்ணாடியின் மூலமாகத்தான் இறைவன் தன்னைத் தெரிந்து கொள்கிறான்; அதே சமயம் மனிதன் இறைவனைத் தன்னுள் தரிசிக்கிறான்.

5. ஹைரா (Hayrah – பேரதிசயம்)

இறுதியில், ‘பார்ப்பவன் யார்? பார்க்கப்படுவது எது?’ என்ற கேள்வி எழும்போது அறிவு திகைத்து நிற்கிறது. கண்ணாடியைப் பார்க்கும்போது பிம்பத்தைப் பார்க்கிறோமா அல்லது கண்ணாடியின் மேற்பரப்பைப் பார்க்கிறோமா? இரண்டையும் ஒரே நேரத்தில் முழுமையாகப் பார்க்க முடியாது. இந்தப் பேரதிசயமான திகைப்புதான் ‘ஹைரா'(Bewilderment) எனப்படுகிறது. இப்னு அரபியின் கூற்றுப்படி, இந்தத் திகைப்புதான் ஆன்மீகத்தின் மிக உயர்ந்த நிலை. பார்ப்பவனும், பார்க்கப்படுவதும், பார்வையும் ஒன்றாக இணையும் அந்த ரகசியமே சூபித்துவத்தின் உச்சம்.

Comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.