குர்ஆன் தன்னை தொடர்ச்சியான ஓர் ஒற்றை தெய்வீக சொற்பொழிவாக முன்வைக்கிறது; இருப்பினும் அதன் மேற்பரப்பில் பல பேசும் நிலைகள் தோன்றுகின்றன. இறைவன் பேசுகிறார், அவரைப் பற்றி பேசப்படுகிறது, அவரிடம் நேரடியாக உரையாடப்படுகிறது; தீர்க்கதரிசிகள், தேவதூதர்கள், ஜின்கள், விசுவாசிகள், நிராகரிப்பவர்கள் ஆகியோர் மேற்கோள் காட்டப்பட்ட குரல்களாக அதற்குள் ஒலிக்கின்றனர். இந்த பன்முகத்தன்மை பேச்சாளரைப் பிளவுபடுத்துவதில்லை; மாறாக, ஒரே தெய்வீக வார்த்தையின் மாறும் உறவுநிலைகளை வெளிப்படுத்துகிறது.
வெளிப்பாட்டின் மூலத்தை குர்ஆன் தெளிவாக நிறுவுகிறது:
“அது அவருக்கு அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை” (53:4).
“நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே” (112:1).
இங்கு மனித குரல் பாராயணத்தின் வாகனமாக இருக்கிறது; அது சுயாதீன ஆதாரமாக மாறுவதில்லை.
இறைவன் நபியை இரண்டாம் நபராக நேரடியாக உரையாற்றும் இடங்களில், வரலாற்று மனித அனுபவம் வெளிப்பாட்டிற்குள் இணைக்கப்படுகிறது: “ஓ நபியே…” (33:1) “நபியே, இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம்” (15:97). ஆனால் இந்த உரையாடல் நபியை தனி பேசும் அதிகாரமாக நிலைநிறுத்துவதில்லை; அவர் வெளிப்பாட்டின் ஊடகம்.
அதேபோல், பிற குரல்கள் அனைத்தும் தெய்வீக சொற்பொழிவிற்குள் மேற்கோள்களாக ஒலிக்கின்றன. ஜின்களின் அனுபவச் சாட்சி: “அற்புதமான குர்ஆனை நாங்கள் கேட்டோம்” (72:1).
நபி இப்ராஹீம் தன் இறைவனுடன் கொண்டுள்ள உறவைத் தன்னுடைய குரலில் வெளிப்படுத்துகிறார்: “என்னைப் படைத்தவனே எனக்கு வழிகாட்டுகிறான்; அவனே எனக்கு உணவளிக்கிறான், குடிக்கத் தருகிறான்; நான் நோயுற்றால் அவனே குணமாக்குகிறான்; அவனே என்னை மரணமடையச் செய்து மீண்டும் உயிர்ப்பிக்கிறான்; நியாயத் தீர்ப்பு நாளில் என் தவறுகளை மன்னிப்பான் என்று நான் நம்புகிறவன் அவனே” (26:78–82).
மனிதனின் உள் மனச்சாட்சியும் கூட ஒரு குரலாக மேற்கோள் காட்டப்படுகிறது:
“தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆத்துமாவின் மேலும் சத்தியமாக” (75:2). இவ்வாறு மனிதன், அண்டம், வரலாறு — அனைத்தும் தெய்வீக வார்த்தைக்குள் உள்மயமாக்கப்படுகின்றன.
இந்த ஒருமைக்குள் நிகழும் பன்முக இயக்கத்தைத் தக்கவைக்கும் முக்கியமான சொல்லாட்சி நடை இல்திஃபாத். நபர், எண், உரையாற்றுபவர் ஆகிய இலக்கண நிலைகளில் நிகழும் மாற்றம், உரையை தகவலிலிருந்து அனுபவமாக மாற்றுகிறது.
அல்-ஃபாத்திஹாவில் இது தெளிவாகக் காணப்படுகிறது: “அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே ஆகும். அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.” (1:2–4)
என்ற இறையியல் அறிவிலிருந்து,
“உம்மையே நாங்கள் வணங்குகிறோம்; உம்மிடமே நாங்கள் உதவி நாடுகிறோம்” (1:5)
என்ற வழிபாட்டு முகாமைக்குத் திடீரென நகர்கிறது. இவ்வாறு, இறைவனைப் பற்றிய அறிவு, அவர்முன் நிகழும் சந்திப்பாக மாறுகிறது.
இதே இயக்கம் ஸூரத்து யாசீனில் நம்பிக்கை கொண்ட மனிதனின் பேச்சிலும் நிகழ்கிறது: “என்னைப் படைத்தவரை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?)” (36:22) — தனிப்பட்ட நம்பிக்கை, “அவனிடமே நீங்கள் மீளச் செலுத்தப்படுவீர்கள்” (36:22) — பொதுச் சாட்சியாக விரிகிறது.
தெய்வீக சுய வெளிப்பாடும் பிரதிபெயர் மாற்றங்களின் வழியாக நிலைபெறுகிறது.
மூன்றாம் நபர் வடிவில் தெய்வீக மகத்துவம் அறிவிக்கப்படுகிறது: “அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன்…” (59:22–24).
பன்மை முதல் நபரில் படைப்புச் செயலின் இறையாண்மை வெளிப்படுகிறது: “இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்” (15:22).
மிக நெருக்கமான ஒருமை முதல் நபரில் தெய்வீக உரை நேரடியாக நிகழ்கிறது: “நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக” (20:14).
இதனால், உரையின் இலக்கண இயக்கம் ஒரு மொழிநடைச் சிறப்பாக மட்டுமல்ல; அறிவு, சந்திப்பு, வெளிப்பாடு, சமூகச் செயல் ஆகியவற்றை இணைக்கும் ஒன்டாலஜிக்கல் மற்றும் லிட்டர்ஜிக்கல் இயக்கமுமாகும்.
அவர் — தூரத்தில் அறியப்படும் இறை உண்மை
நீங்கள் — உறவின் எதிர்கொள்ளல்
நான் — தெய்வீக சுய வெளிப்பாடு
நாம் — உலகில் நிகழும் செயற்பாடு
ஆக, பலகுரல் போலத் தோன்றும் அமைப்பு, சுயாதீன குரல்களின் தொகுப்பு அல்ல; இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான நெருக்கம் படிப்படியாக கட்டமைக்கப்படும் ஒரே தெய்வீக சொற்பொழிவின் உறவியல் இயக்கம்.
எழுத உதவிய நூலும் கட்டுரையும் –
Discovering the Quran – Neal Robinson – Georgetown University Press 2004
Grammatical Shift for Rhetorical Purposes: Iltifāt and Related Features in the Qur’ān – MAS Abdel Haleem.
தன்னிலை விளக்கம் –
இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட கருத்துகள் தொடர்புடைய ஆய்வுகளின் குறிப்பிட்ட பகுதிகளை அடிப்படையாகக் கொண்டவை. இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள நூல்களை முழுமையாக வாசித்ததாகக் கருத வேண்டாம்
Leave a comment