வாய் பிளந்து நிற்கும் இவ்வுலகம்

எழுத்தாளர் விவேக் ஷான்பாக் அவர்களை ஓர் இணைய இதழுக்காக பேட்டி எடுத்த போது காஷ்மீர எழுத்தாளர் Zahid Rafiq பற்றிய அறிமுகத்தை தந்தார். அந்த எழுத்தாளர் தந்த ஒரு பேட்டி இணையத்தில் வாசிக்க கிடைத்தது. அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அவர் தந்த பதிலும் –

Q

You live in Srinagar, Kashmir. Where is the literary heart of Srinagar?

A

Lost, I guess, but around, diffused, trying to find itself amid the wreckage. A little in the cafés and tea shops, a little in friendships. Thankfully, it has no address.

உடனுக்குடன் அமேசானில் Zahid-இன் சிறுகதை தொகுப்பு The World with its mouth open நூலை ஆர்டர் செய்து விட்டேன்.

The Book Arrived on 27th Dec

இன்று வந்து சேர்ந்த Zahid Rafiq – இன் சிறுகதை தொகுப்பில் முதல் இரண்டு கதைகளை வாசித்தேன். முதல் கதை (The Bridge) யில் தன்னுடன் வந்தவர் அருகில் உள்ள பேக்கரியில் ரொட்டி வாங்கச் சென்று திரும்பி வராதபோது, ​​அந்தப் பெண் தன் கண்களை மூடிக்கொண்டு, பத்து எண்ணுவதற்குள் அவர் திரும்பி வந்துவிடுவார் என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள். இரண்டாம் கதையில் (Crows) ட்யூஷன் ஆசிரியரால் நையப்புடைக்கப்பட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருப்பவன் அடுத்த நாள் ட்யூஷனுக்கு வீட்டிலிருந்து பெற்றோர்களை ட்யூஷனுக்கு கூட்டிச் சென்று ஆசிரியரைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தை நினைத்துப் பார்ப்பதைத் தவிர்க்கு முகமாக ‘ “காக்கைகள்” ஏன் தினமும் கூட்டுக்குத் திரும்புகின்றன?’ எனும் கேள்வியை எழுப்புகிறான்.

இரண்டு கதைகளும் கஷ்மீரிகளின் சாதாரண வாழ்வைப் பேசுகின்றன. அந்தச் சாதாரணர்களின் resilience இயல்பானதா? இயல்பு வாழ்வில் அதிகம் ஒளித்து வைக்க முடியாமல் படிந்திருக்கும் வன்முறையின் நிழலின் மீது “அதீத நம்பிக்கை” (The Bridge) அல்லது “தவிர்ப்பு” (Crows) போன்றவற்றால் வரையப்படும் தோற்றந்தானா அது?

இரு கதைகளிலும் கதாபாத்திரங்கள் காட்டும் resilience, பரவலான வன்முறைக்கு மத்தியில், நிச்சயமற்ற தன்மை வழக்கமான அனைத்து சாதாரண செயல்களிலும் ஊடுருவி, உள்ளார்ந்த வலிமையாக இல்லாமல், மறுப்பு, கவனச்சிதறலின் பலவீனமான கட்டமைப்பாக உருப்பெறுகிறது.

அவர் பெயர் திரு ஹுசைன். அவர் இறந்து விட்டார் என்ற பொய்யான அறிவித்தல் ஒரு நாளிதழில் வருகிறது. யாரோ ஒருவர் – அவருடைய எதிரியாக இருக்கலாம் – செய்த விஷமமாக இருக்கலாம். செய்தித் தாளின் அலுவலகத்துக்கு வந்து சண்டை பிடிக்கிறார். அதே செய்தித்தாளுக்காக செய்தி சேகரிப்பவராக வேலை செய்பவருக்கு அழகான செய்திகளை அளிக்க விருப்பம். ஆனால் அத்தகைய செய்திகளை நிர்வாகம் வெட்டி விடுகிறது. ஹுசைனின் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் அழகான கலைப்பொருட்களை நோக்குவதும் நிருபருக்கு மிகப் பிரியம். முதலில் நண்பராக பழகும் ஹுசைனுக்கு பிறகு நிருபரின் மீது சந்தேகம் வந்து விடுகிறது. கொலை மிரட்டல் போன்று ஹுசைனுக்கு வரும் ஒரு பார்சலை நீதான் அனுப்பினாயா என்று நிருபரைக் கேட்கிறார். அது வரை மரியாதையுடன் இருந்த நிருபருக்கு கடுங்கோபம் வந்து விடுகிறது. அடுத்த சில நாட்களில் ஹுசைன் நிஜமாகவே இறந்து விடுகிறார். செய்தித் தாளில் இரண்டாம் முறையாக மரண அறிவித்தல் அச்சிடப்படுகிறது. The world with its mouth open – தொகுதியின் மூன்றாவது கதை இது. முதல் இரண்டு கதைகளின் haunting தன்மை இதிலும் தொடர்கிறது.

நான்காம் கதையிலும் (Bare Feet) திகைப்பு தொடர்கிறது. அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் பேராசிரியர்-கவிஞர். தந்தையை அமெரிக்கா அழைத்துச் செல்ல விரும்புகிறார். ஓர் அமானுஷ்யமான கோரிக்கை அவரிடம் வைக்கப்படுகிறது. ஆனால் அதனை பூர்த்தி செய்வது அத்தனை கடினமாக இருக்கவில்லை. அந்த வீட்டு வாசலில் படர்கொடியொன்று காணப்படும் என்ற தரப்பட்ட அடையாளத்துக்கும் அவசியமேற்படவில்லை. தன் வீட்டுக்குத் திரும்பும் வழியில் அவருக்கு நிகழும் அவமானத்தை விட அனைத்து வீடுகளிலும் படரும் அந்த அமானுஷ்யந்தான் கதை சொல்லும் தனித்துவமான செய்தி. கஷ்மீரத்துக்கு குடிபெயர்ந்துவிட்டாரா செகாவ்? Yet in Zahid Rafiq’s hands, Chekhovian restraint is infused with a political metaphysics.

“Beauty” – தொகுதியின் ஐந்தாம் கதை. நான்கைந்து காஷ்மீர சிறுவர்கள் இடையிலான உல்லாசப் போட்டியாகத் தொடங்குகிறது. ஆற்றொழுக்கான, சற்றும் தடைப்படாத நடையில் கதையை நகர்த்திச் செல்லும் ஜாஹித், எந்தப் புள்ளிக்கு நம்மை இட்டுச் செல்கிறார் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருக்க முடியுமானால், வாசகர்களான நாம் குற்றவுணர்வில் பங்கெடுக்காமல் தப்பியிருக்கலாம்.

இந்தச் சிறுவர்கள் செய்யும் செயல், அறியாமலேயே வாசகர்களையும் கூட்டுக் குற்றவாளிகளாக்கிவிடுகிறது. அந்தப் பெண்ணின் அழகின் மீது பித்தாய் அலைகிற சிறுவர்களின் சில்லறை ஆசைகளும் கற்பனைகளும், அவளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவளுடைய புகலிடத்தை கொடூரமாக ஊடுருவுகின்றன. அந்தக் கணத்தில், “நான் என்ன தவறு செய்தேன், இறைவா?” என்று அவள் உச்சரிக்கும் வார்த்தைகள், அவளுடைய பாதுகாப்பின்மையையும் தனிமையையும் மொழியாக்குகின்றன.

அவள் ஏன் அந்தப் புகலிடத்துக்கு வந்தாள்? அவளுக்கும் அவள் குடும்பத்துக்கும் என்ன நடந்தது? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்காமல், சாஹித் திட்டமிட்ட மௌனத்துடன் நகர்கிறார். அந்த மௌனம் தான் கதையின் கொடூரம். தெரியாமலே, அப்பையன்களின் voyeuristic pursuits-இல் வாசகர்களும் சிக்கிக்கொள்கிறார்கள். அங்கே கதை முடிவடைவதில்லை; வாசகரின் மனச்சாட்சியில் தொடர்கிறது.

Flowers from a Dog – தொகுப்பின் ஆறாம் கதை. புதைத்த இடத்தை தேடுகிறான். நகரமாக விரிந்து விட்ட இடுகாடு. 1996இல் மறைந்து போன ஒருவனின் கல்லறை கண்ணில் படுகிறது. 1996இல் அந்தக் கல்லறையில் புதைக்கப்பட்டவனின் வயது தன்னை விட ஆறு வயது குறைவு என்கிற பிரக்ஞை. அவன் தேடுவது தன்னை விட்டு விலகிச் சென்ற காதலி புதைக்கப்பட்ட இடம். இடுகாட்டை பராமரிப்பவர் அவனுக்கு உதவுகிறார். ஒரு வாரம் முன்னர் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறாள் அவள். சலவைக்கல் இன்னும் பதிக்கப்படவில்லை. நாய்கள் வந்து தோண்ட முயன்றிருப்பதன் அடையாளங்கள் தென்படுகின்றன. அவனும் தோண்டி புதைக்கப்பட்ட உடலை எடுத்து கட்டிக் கொண்டு அழ விரும்புகிறான். அவனால் வெறும் மலர்களை மட்டுமே அவ்விடத்தில் வைக்க முடிகிறது. கதைக்குள் சில அற்புதமான வாக்கியங்கள் கலந்திருக்கின்றன.

“ஏதோ ஒரு கொடூரக் கை என் வாழ்வின் ஆண்டுகளை எனக்குப் பின்னாலிருந்து பிடுங்கி, மீண்டும் ஒரு குழந்தையாக என்னை விட்டுச் சென்றுவிட்டது,”

“இந்த உடல் வெறும் புழுக்களுக்கான விருந்துதான்”

இழப்பின் எல்லையற்ற வேதனையையும் துக்கத்தை எதிர்கொள்ளும் செயல்முறையையும் பிரதிபலிக்கும் அற்புதச் சிறுகதை. வலியின் உணர்ச்சிப்பூர்வமான சித்தரிப்பும், சிதைவின் உள்ளுணர்வைத் தூண்டும் படிமங்களும் வாசகரை மரணத்தின் யதார்த்தத்திலும், அதன் விளைவாக, வாழ்வின் யதார்த்தத்திலும் நிலைநிறுத்துகின்றன. தொகுதியின் கஷ்மீர் தீமிலிருந்து சற்று விலகின கதை. மரணத்தின் மீதான meditation.

“The House” தொகுதியின் ஏழாம் கதை, வீடு கட்டும் எளிய தருணத்திலிருந்து துவங்கி, காலம் புதைத்து வைத்திருக்கும் உண்மைகளின் பயங்கரத்தை மெதுவாக வெளிப்படுத்துகிறது. அஸ்திவாரத்துக்காக பள்ளங்கள் தோண்டப்படும் போது, எஜமானர்களுக்குப் பிடிக்காத ஒரு வேலையாள் தோண்டிய மண்ணில் துண்டிக்கப்பட்ட கையின் எலும்பு ஒன்று சிக்குகிறது. அந்தக் கண்டுபிடிப்பு, வேலை இடத்தில் உடனடியாக ஒரு அசௌகரிய அமைதியை உருவாக்குகிறது. மேஸ்திரிக்கு தொழுகைக்குச் செல்ல வேண்டிய அவசரம், கணவனுக்கு திடீரென வேறு வேலைகள் நினைவுக்கு வருதல், ஏதோ ஒரு சாக்கு சொல்லி அன்றைய பணியை மனைவி நிறுத்திவிடுதல்—இந்த அனைத்தும் உண்மையை நேரடியாக எதிர்கொள்ள மறுக்கும் மனநிலையின் வெளிப்பாடுகளாக மாறுகின்றன.

அஸ்திவாரத்தின் ஆழம் குறித்த கணவன்–மனைவியின் வாக்குவாதம், எத்தனை தூரம் கடந்தகால உண்மைகளை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்ற கேள்வியாக விரிகிறது. “மேலும் தோண்டலாம்” என்று வேலையாள் காட்டும் முனைப்பு, புதைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர முயலும் அறத்தின் குரலாகக் கேட்கிறது. அதற்கு எதிராக, உண்மையை மறைக்கவும் தள்ளிப்போடவும் செய்யும் முயற்சிகளே கதையின் மைய இயக்கமாக அமைந்துள்ளன.

வன்முறை நிறைந்த ஒரு சூழலில் எதிர்காலத்தை கட்ட முயலும்போது, கடந்தகால எச்சங்களை அனுகூலமாக தவிர்க்கும் மனித இயல்பை சாஹித் ரஃபிக் மிக நுட்பமாகப் படம் பிடிக்கிறார். காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின், “எல்லாம் சாதாரணம்” என்ற தோற்றத்தை உருவாக்கும் பரவலான தவறான தகவல்களுடன் இந்தக் கதை அர்த்தமுள்ள ஒப்புமையை ஏற்படுத்துகிறது. அந்த வெளிவேஷம், கடந்தகால உண்மைகளிலிருந்து கற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலையின் பிரதிபலிப்பு. உண்மைகளை எதிர்கொள்ளாமல், அவற்றைத் தொடர்ந்து புதைத்துக்கொண்டே இருப்பதே இக்கதையின் ஆழ்ந்த, கலங்கடிக்கும் செய்தி.

The World With Its Mouth Open தொகுப்பில் இடம்பெறும் எட்டாம் கதை “Dogs”. சுற்றுச்சூழலின் ஒரு பகுதியாகவே மாறிவிட்ட அச்சத்தை உவமைக் கதையாக (allegory) வெளிப்படுத்துகிறது. இக்கதையில் வரும் நாய்கள் – சிப்பாய்கள், பயங்கரவாதிகள், தகவல் கொடுப்பவர்கள் போன்ற ஒரே குறியீட்டிற்குள் சுருக்கப்படுவதில்லை; மாறாக, யாருக்குமே சொந்தமில்லாத, முகமற்ற அச்சநிலையாகவே அவை செயல்படுகின்றன—மக்களின் நகர்வையும், சிந்தனையையும், அன்றாட நடத்தையையும் கட்டுப்படுத்தும் ஒரு சூழ்நிலையாக.

காரணங்களையும் விளக்கங்களையும், ஒழுக்கப் பூர்த்தியையும் மறுக்கும் இந்தக் கதை, வன்முறை இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பொறுப்புணர்வு கரைந்து போகும் வாழ்வை பிரதிபலிக்கிறது. இவ்வுவமை போதனையின் மூலம் அல்ல; மாறாக, சூழல், மீள்மீள் நிகழ்தல், அச்சத்தின் சாதாரணமயமாக்கல் ஆகியவற்றின் வழியே செயல்படுகிறது. அதனால், “Dogs” கதையில் அச்சம் நிலப்பரப்பைப் போலவே தவிர்க்க முடியாததும் இயல்பானதுமான ஒன்றாக உணரப்படுகிறது. இவ்விதத்தில், அரசியல் யதார்த்தம் ஓர் இருப்பியல் நிலையாய் (existential condition) மாறும் சாஹித் ரஃபீக்கின் மொத்த கலைநோக்கை இக்கதை தெளிவாக பிரதிபலிக்கிறது; வாசகனை கலங்கடிப்பவை இங்கே நிகழ்வுகள் அல்ல, எவ்வளவு எளிதாக அன்றாட வாழ்க்கையில் அவை உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன என்பதுதான்.

“The Man with the Suitcase” தொகுப்பின் ஒன்பதாம் கதை. வேலையின்மைக்கும் தொடர்ச்சியான இழப்புகளுக்கும் மத்தியில், உணவுக்காகப் பேய்களைத் துரத்தும் காஷ்மீரின் வேலையற்ற இளைஞர்களின் அபத்த நிலையை சலீமின் ஈர்ப்பு சித்திரிக்கிறது. உயிர்வாழ்வு இயந்திரத்தனமான, விடா முயற்சியை கோருகிறது. தன் சகோதரனின் மரணத்திற்குப் பிறகு, சலீம் தயக்கத்துடன் குடும்பப் பொறுப்பை ஏற்று வேலை தேடி ஸ்ரீநகரின் வீதிகளில் அலைகிறான். ஆனால், ஒரு புதிரான அந்நியனின் சூட்கேஸ் அவனது வேலைத் தேடலைத் தடம்மாற்றி விடுகிறது.

ஸ்ரீநகரின் நெரிசலான சந்தைகளிலும் குறுகிய சந்துகளிலும் அந்த அந்நியனைத் துரத்தும் சலீம், தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய வேலை நேர்காணல்களைக் கூடப் புறக்கணிக்கிறான். மெதுவாக, அந்த அந்நியன் காணாமற்போன அவன் சகோதரனின் பேய்ப்பிரதியாக (Ghostly double) மாறுகிறான்; அந்தச் சூட்கேஸ், அவனால் ஈடுசெய்ய முடியாத குடும்ப இழப்புகளின் கனத்த குறியீடாக உருவெடுக்கிறது.

இறுதியில், ஒரு கானல் நீரைப் போன்ற அந்தத் துரத்தல் சலீமை எங்கும் கொண்டு சேர்க்கவில்லை. துக்கம் எவ்வாறு ஒரு மனிதனின் நடைமுறைச் சிந்தனைகளைச் சிதைத்து, அவனை ஒரு தர்க்கமற்ற வெற்று ஏமாற்றத்திற்குள் தள்ளுகிறது என்பதை இக்கதை மிகவும் கூர்மையாகவும் வலிமையாகவும் பதிவு செய்கிறது.

The Mannequin – தொகுதியின் பத்தாம் கதை. ஒரு சாதாரண கடைப் பொம்மையை, கூட்டுத் துயரமும் மறைந்த வலியும் உறைந்திருக்கும் ஒரு சக்திவாய்ந்த சின்னமாக மாற்றும் கதை. முதலில் ‘அழகிய பெண்’ பொம்மையாகத் தோன்றும் அது மெல்ல மெல்ல துக்கமும் வேதனையும் நிரம்பிய முகத்தை ஏற்று, கடைக்காரர் மன்சூரையே கலங்க வைக்கும் ‘அழுகின்ற பொம்மையாக’ உருமாறுகிறது. அந்த உடையக்கூடிய கலைப்படைப்பை அதன் படைப்பாளரிடம் திருப்பிக் கொடுக்க மன்சூர் செல்லும் வழியில், அக்கம்பக்கத்துச் சிறுவர்கள் அதை கொடூரமான கேளிக்கையாக மாற்றுகின்றனர்; ‘மூன்று குழந்தைகளை விட்டுச் சென்ற இறந்த பெண்’ எனக் கற்பித்து, சடலம் போல் ஊர்வலமாக எடுத்துச் சென்று, இறுதியில் அதை இரண்டாக உடைத்துவிடுகின்றனர்.

ஆனால் இந்தக் கதை தனது தார்மீக வலிமையை அந்த நாசவேலையிலிருந்து அல்ல, மன்சூரின் மனநிலையிலிருந்து பெறுகிறது. ஒரு சிறுவனைத் தாக்கிய பின்னர் அவன் அடையும் மனஅமைதி இழப்பு, குற்றவுணர்ச்சி, மன்னிப்பை நாடும் அவனது உந்துதல்—இவை அனைத்தும் அவமானம், கொடுமை, இழப்புகள் நிறைந்த சூழலிலும் உறைந்து விட மறுக்கும் மென்மையான மனிதநேயத்தை இந்தக் கதை உறுதியாக முன்வைக்கிறது.

Frog in the Mouth – (பதினோராம் கதை; தொகுப்பின் இறுதிக்கதை)

புரிவதில் எனக்கு ஏற்படும் சிரமமே அந்தக் கதை கூறும் உண்மையின் பிரதிபலிப்பாகிறது. ரஃபீக்கின் உலகில் முடிவுகள் என்பவை நிலையற்றவை; அவை ஆழ்ந்த அகநிலை சார்ந்தவை. முற்றுகைக்குள்ளான வாழ்க்கையின் பலவீனத்தையும், நேர்த்தியான தீர்வுகள் சாத்தியமற்றவை என்பதையும் இந்த நெகிழ்வுத்தன்மை வெளிப்படுத்துகிறது. தவளையின் அந்த விசித்திரமான, தீர்க்கப்படாத இருப்பு, உடலைச் சாட்சியமளிக்கும் கருவியிலிருந்து பேச்சிற்குத் தடையாக மாற்றுகிறது; வாசிக்க முடியாத தன்மையை விமர்சனத் தோல்வியாக அல்ல, ஒரு நிலைப்பாடாக முன்வைக்கிறது. தெளிவுபடுத்தவோ, தீர்க்கவோ அல்லது உருவகப்படுத்தவோ ரஃபீக் மறுப்பது, சில அனுபவங்கள்—குறிப்பாக நீண்டகால முற்றுகையும் அவநம்பிக்கையும்—சிதைவின்றிப் புரிந்துகொள்ளக்கூடிய வடிவம் பெற முடியாதவை என்பதை வலியுறுத்துகிறது. அதிர்ச்சியை நேரில் கண்டதன் தனிமையை அடிக்கோடிட்டுக் காட்டும் மற்றவர்களின் அவநம்பிக்கை— ‘The World with its mouth open’ புத்தகம் முழுவதும் இழையோடியுள்ள கருப்பொருளாகும்.

பதினொரு கதைகளையும் பற்றி தனித்தனியாக குறிப்புகள் எழுதிய பிறகு, அவற்றின் ஒருங்கிணைந்த கருப்பொருளைச் சுட்டிக்காட்டும் ஒரு அடிக்குறிப்பை எழுதலாம் என்றிருந்தேன். அந்த அவசியத்தையே ரஃபீக் இல்லாமல் செய்துவிடுகிறார். பதினோராம் கதைக்கான குறிப்பே, முழுத் தொகுதிக்குமான குறிப்பாக மாறிவிடுகிறது; தனிப்பட்ட முடிவாகத் தோன்றும் இந்தக் கதை, தொகுப்பின் முழு அர்த்தச் சுமையையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறது.

Title : the world with its mouth open

Author : Zahid Rafiq

Publisher : Penguin Random House India

Pages : 177

Price : Rs 499

Comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.