சத்தம் அழியக்கூடிய பொருள் எனும் விவாதம் நிறைய பவுத்த நூல்களில் இடம் பெறுகின்றன
…. சத்தம் அநித்தம் என்றல்
பக்கம், பண்ணப் படுத லாலெனல்
பக்கத் தன்ம வசனமாகும்…
(மணிமேகலை, 29 : 68-71)
திக்நாகர் சொல்கிறார் : “அநித்ய: ஸப்தைதி பக்ஷ வசனம் க்ருதகத்வாத்இதி பக்ஷதர்ம வசனம்” (ப்ரமாண சமுச்சய)
கிட்டத்தட்ட மொழியாக்கம் செய்தவை போல தோன்றுகிறதல்லவா?
சத்தம் நிரந்தர பொருளல்ல ; அழியக்கூடியது, ஏனெனில் அது யாராலோ எதனாலோ எழுப்பப் படுபவை.
இந்த வாதத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? வேத ஒலிகளுக்கு நித்தியத் தன்மை வழங்கிய இந்து தத்துவ பள்ளிகளுக்கு (மீமாம்சை, ந்யாய) நேரடி எதிர்வினை தரும் முகமாக பவுத்தம் எழுப்பிய வாதம் இது. குமாரில பட்டர் போன்ற மீமாம்சை தத்துவ வாதிகள் வேத மந்திரங்கள் நித்தியத்தன்மை கொண்டவை என்றனர். அச்சத்தங்கள் உருவாக்கப்படாதவை (அபௌருஷேய) என்றும் கூறினர். ஒலி நித்தியம் ஏனெனில் அது கண்ணுக்குப் புலனாகாதவை, ஆகாசம் போல.
திக்நாகரும் அவரது சீடர் தர்மகீர்த்தியும் இதைக் கையிலெடுத்துக் கொண்டு முக்கூற்று வாத முறையில் சத்தம் அழியக்கூடியது என்று வாதாடினர்.
பக்கம் (Skt.Pratijna) : “சத்தம் அநித்தியம்”
ஏது (Skt.Hetu) : “ஏனெனில் அது எழுப்பப்படுவது”
உதாரணம் : “பானையைப் போல்”
பண்ணப்படுவது எதுவும் (“பேச்சு”, “ஆயுதம்”) அழியக்கூடியவை, எனவே அநித்தியமானவை.
“ஒலியை” பௌத்தர்கள் குறி வைத்ததற்கான காரணங்கள் – (1) வேதங்களின் காலமின்மை என்ற மீமாம்சகர்களின் வாதத்தை முறிப்பது. (2) சார்பியல் தோற்றத்தை (ப்ரதித்ய சமுத்பாதம்) நிரூபிப்பது (3) மீமாம்சகத்தின் சடங்கு உலகம் வேத மந்திரங்களின் நித்தியத்தன்மை கொள்கையைச் சார்ந்திருந்தது
பின்னர் வந்த வைதீக தத்துவவாதிகள் (நியாய – வைசேசிகர்கள்) தமது நிலைப்பாட்டை சற்று செம்மைப் படுத்திக் கொண்டு நித்ய சத்தம், அநித்திய சத்தம் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தினர். பௌத்தர்களோ அதற்கும் பதிலடி கொடுத்தனர் – “அனைத்து சத்தங்களும் அழியக்கூடியவை தாம்; வெளிப்படாத ஒலி என்பது கருத்தியல் புனைகதை” என்றனர்.
இவ்விவாதம் வெறும் ஒலியியல் பற்றியது மட்டுமல்ல. “சுருதி” -“பௌத்த அனுமானகம்”, நித்தியவாதம் – அநித்தியவாதம் – ஆகியவற்றுக்கிடையிலான மோதல். “சத்தம் அநித்தியம்” எனும் Syllogism வைதீக பள்ளிகளின் மீப்பொருண்மையியல் கூற்றுகளைத் தகர்க்கும் கருவியாக பயன்பட்டது.
Leave a comment