நாவல் மீதான சட்டத் தடையை நீதி மன்றம் விலக்கிய பிறகு, The Satanic Verses என்ற சல்மான் ருஷ்டியின் மிகப் பெரும் சர்ச்சைக்குரிய நாவலை வாசிக்க நான் முடிவு செய்தேன். வாசிப்பு என்பது இங்கு இலக்கியரசனைக்காக மட்டுமல்ல. மாறாக, எழுத்துரிமைக்காக தனது வாழ்க்கையை பணயம் வைத்த ஒரு பெரிய எழுத்தாளருக்கு செலுத்தும் மரியாதையாகவும் இந்த வாசிப்பைச் செய்ய விரும்பினேன்.
ஆனால் வாசித்தபின் ஏற்பட்ட உணர்வு — மிகமிகச் சுமாரான ஒரு நாவல். பல இடங்களில், “இதை ஏன் எழுதிச் செல்கிறார்?” என்ற கேள்வி எழாமல் இல்லை. வழக்கம்போல், ருஷ்டியின் உரைநடை சில இடங்களில் பிரகாசிக்கிறது. ஆனால் அந்த ஆற்றல் நாவல் முழுமையும் நிலைத்திருக்கவில்லை. மையமற்ற கதை சொல்லல், குழப்பமூட்டும் பாத்திரங்கள், உணர்வளவாக மனதில் ஒட்டாத பாகங்கள் போன்றவை நல்ல வாசிப்பனுபவத்துக்குத் தடையாக இருந்தன.
நாவலின் முக்கியமான பாத்திரமான ‘இமாம்’ ஒரு முன்னாள் இரானிய மத-அரசியல் தலைவரின் பிரதிபலிப்பாக படைக்கப்பட்டிருக்கலாம். தன்மீதான நேரடி பதிவாக உருவாக்கப்பட்டிருப்பதால் எழுந்திருக்கக் கூடிய சொந்தக் கோபந்தான் ஃபத்வாவுக்கான காரணமோ என்றெண்ணத் தோன்றுகிறது. உண்மையில் அந்தத் தலைவர் அறுநூறுக்கும் மேலான பக்கங்களைக் கொண்ட நாவலை வாசித்துவிட்டாரா என்பது கேள்விக்குறியே!
நாவல் கடுமையான எதிர்ப்பைச் சந்திப்பதற்கு காரணமான பகுதிகளை மிக உன்னிப்பாக வாசித்தேன். இஸ்லாமின் வரலாறு, சமயவியல் பற்றித் தொடர்ந்து வாசித்தும் சிந்தித்தும் வருவதால் ஆசிரியரின் அணுகுமுறையை கூர்மையாக அவதானிக்க முடிந்தது. முதல் பாதியில் வரும் பகுதி அப்படி ஒன்றும் பிரச்னைக்குரிய பகுதியாக தோன்றவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பகுதி பிரச்னைக்குரியது. பாத்திரங்களுக்கு வைத்துள்ள உர்துப் பெயர்கள் முதல் Alternative History -உத்தியில் சில வரலாற்றுப் பாத்திரங்களை கற்பனையாக எழுதிச் சென்றிருக்கும் விதம் வரை – எக்காலத்திலும் சர்ச்சையை எளிதில் கவர்ந்திழுக்கக் கூடியவை. அவற்றை எழுதும் போதே சர்ச்சையைக் கிளப்பும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றால் அதனை naivety என்று அழைப்பதா? இல்லையேல் அதிக சர்ச்சை அதிக விற்பனை என்னும் மேற்கத்திய எழுத்துலகின் பாணியைக் கைக்கொண்டார் என்று சொல்வதா? மூன்றாவதாக, வரலாற்றையும் புனைவையும் பின்னுதலில் குறியீடுகள், மாய எதார்த்தம் ஆகிய இலக்கிய உத்திகளைப் பயன்படுத்தி பின்னர் வந்த நாவல்களில் வெளிப்பட்ட (Shalimar the Clown, The Enchantress of Florence) எழுத்துவன்மை இந்த நாவலில் கைகூடாததால் விளைந்த விபத்தா? இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் எழுத்தாளரின் இளமைக்கால அசட்டு தைரியம் என்றுதான் கூறத் தோன்றுகிறது. சர்ச்சைகள் மட்டுமே ஓர் இலக்கியத்தை உயர்த்த முடியாது. ஒரு வாசகராக எனக்கு இந்த நாவல் ஒரு இலக்கிய அனுபவத்தை நல்கவில்லை.

Leave a comment