குருதி – Naomi Shihab Nye

Naomi Shihab Nye – எனக்கு மிகப்பிடித்தமான கவிஞராகி வருகிறார். அவர் எழுதிய Blood கவிதையை மொழிபெயர்க்க விரும்பினேன். பாலஸ்தீனிய வம்சாவளியில் வந்த அமெரிக்கர் அவர். அமெரிக்கரா அரபியா என்ற அடையாளக் குழப்பம் அவருடைய கவிதைகளில் அடிக்கடி நிகழும் கருப்பொருள். Blood கவிதையிலும் இதே குழப்பம் தொடர்ந்தாலும், என்ன அடையாளம் கொண்டிருந்தாலும் “உண்மையான அரபி இதற்கு என்ன செய்வான்” என்ற கடைசி வரியில் அடையாளத்தை தாண்டிய மனிதத்தை நோக்கி கவிதை பயணிக்கிறது.

குருதி

“ஓர் அசல் அரபிக்கு கைகளினால் ஈயைப் பிடிக்கத் தெரியும்”
என் தந்தை சொல்வார். நிரூபிக்கவும் செய்வார்,
ஈக்கொல்லியை ஏவ நிற்கும் விருந்தோம்பியின் கை சுழலும் முன்பே
இரைச்சலிடும் பூச்சியை நொடியில் கையில் இறுக்கிக் கொள்வார்

பாம்புகள் போன்று வசந்தங்களில் உள்ளங்கைகள் தோலுரிக்கும்
தர்பூசணி ஐம்பது நோய்களுக்கு தீர்வு என்று உண்மையான அராபியர் நம்புவர்
சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு இவற்றை மாற்றிக்கொண்டேன்.

ஒரு பெண் கதவைத் தட்டி
அந்த அரபியைச் சந்திக்க விரும்பினாள்
இங்கு யாருமில்லை என்று சொன்னேன்
அதற்குப்பின், என் தந்தை தாம் யாரென எனக்குச் சொன்னார்
“ஷிஹாப்”-”சுடும் நட்சத்திரம்”
நல்ல பெயர், வானத்திலிருந்து பெற்றது
ஒரு முறை சொன்னேன் – “நாமிறக்கும் போது, அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறோமா?
ஓர் அசல் அரபி அதைத்தான் சொல்வான் என்றார்.

இன்று தலைப்புச் செய்திகள் என் குருதியை உறைய வைக்கின்றன
ஒரு சின்ன பாலஸ்தீனியன் முகப்புப் பக்கத்தில் சரக்கு வண்டியைத் தொங்கவிடுகிறான்
அடிவேரிலா அத்தி மரம், மோசமான வேரின் பேரழிவு எங்களுக்கு மிகப்பெரிது.
எந்தக் கொடியை நாம் அசைப்பது?
நீலத்தில் பின்னிய மேசைத்துணியிலான
கல்லையும் விதையையும் சித்திரிக்கும் கொடியை அசைக்கிறோம்

என் தந்தையை அழைக்கிறேன்,
செய்திகளைச் சுற்றிச்சுற்றியே எம் பேச்சு,
அவருக்கு அது மிக அதிகம்
அவரின் இரு மொழிகளாலும் அதை அடைய முடியவில்லை
ஆடு, மாடுகளைத் தேடி நான் வயற்புறங்களுக்குச் செல்கிறேன், காற்றோடு புலம்ப:
யார் யாரை நாகரீகமானவர் என்றழைப்பது?
அழும் இதயம் எங்கு சென்று மேயும்?
உண்மையான அரபி இதற்கு என்ன செய்வான்?

Comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.