
இப்னு கல்துன் (1332–1406) – னுடைய magnum opus என்று கருதப்படும் “முகாதிமா” நூலில் நாகரிகங்களின் (அதாவது வம்சங்களின், அரசுகளின், ஆட்சி அமைப்புகளின்) எழுச்சி மற்றும் வீழ்ச்சியை விளக்கும் ஒரு சுழற்சி வரலாற்றுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். அவரது கருத்துக்கள் இஸ்லாமிய இறையியலில், குறிப்பாக தெய்வீக விருப்பம், நீதி (‘adl’) மற்றும் உலக அதிகாரத்தின் நிலையற்ற தன்மை (dunya) ஆகியவற்றின் அடிப்படையில் வேரூன்றியிருந்தன.
இப்னு கல்துனின் சுழற்சி வரலாற்றுக் கோட்பாடு
நாகரீகங்கள் அவற்றின் தவிர்க்க முடியாத வீழ்ச்சிக்கு முன் மூன்று முக்கிய நிலைகளைக் கடந்து செல்கின்றன என்று இப்னு கல்துன் முன்மொழிந்தார்:
1. எழுச்சி (நாடோடி வலிமை & Asabbiya ) – நாகரிகங்கள் வலுவான Asabbiya (சமூக ஒற்றுமை) கொண்ட ஒரு குழுவுடன் தொடங்குகின்றன. பாலைவன பழங்குடியினர் அல்லது போர்வீரர் குழுக்களிடையே பெரும்பாலும் காணப்படும் இந்த ஒற்றுமை, அவர்களை வெற்றி பெற்று ஆட்சியை நிறுவ துணை செய்கிறது. புதிய ஆளும் வர்க்கம் எளிமை, ஒழுக்கம், நீதி உணர்வு ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டு எழுச்சியடைகிறது.
2. சிகரம் (அதிகாரத்துவ ஸ்திரத்தன்மை / செழிப்பு) – ஆட்சிக்கு வந்ததும், ஆளும் உயரடுக்கு அதிகாரத்தை மையப்படுத்தி நிர்வாக நிறுவனங்களை உருவாக்குகிறது. பொருளாதாரம், கலைகள், கலாச்சாரம் செழித்து வளர்கிறது. இருப்பினும், ஆட்சியாளர்கள் ஆடம்பரத்திலும் வசதியிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக மாறும்போது Asabbiya பலவீனமடையத் தொடங்குகிறது.
3. சரிவு (ஊழல் மற்றும் ஒற்றுமை இழப்பு) : ஆட்சியாளர்கள் தங்கள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, பழங்குடி வீரர்களுக்குப் பதிலாக கூலிப்படையினரை நம்பியிருக்க்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகின்றனர். ஊழல், அநீதி, அதிக வரிவிதிப்பு ஆகியவை அரசை பலவீனப்படுத்துகின்றன. இறுதியில், வலுவான Asabbiya-வுடன் ஒரு புதிய குழு உருவாகிறது. பழைய வம்சத்தை தூக்கியெறிந்து, சுழற்சியை புதிதாகத் தொடங்குகிறது.
இஸ்லாமிய இறையியல் தொடர்புகள்
1. உலக அதிகாரத்தின் நிலையற்ற தன்மை – உலக அதிகாரம் தற்காலிகமானது என்ற குர்ஆனியக் கருத்தை இப்னு கல்தூனின் சுழற்சி பிரதிபலிக்கிறது:
“அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகிறாய்”
குர்ஆன் 3:26)
நாகரிகங்கள் உயர்ந்து வீழ்ச்சியடைவது போல, செல்வமும் அதிகாரமும் அல்லாஹ்வின் சோதனைகள் (ஃபித்னா, குர்ஆன் 8:28).
2. ஒழுக்கம், நெறிமுறை தலைமைத்துவம் – இஸ்லாமிய இறையியல் நீதி (‘adl’)யை வலியுறுத்துகிறது. ஆட்சியாளர்கள் நீதியைக் கைவிட்டு ஊழல் செய்யும்போது நாகரிகங்கள் வீழ்ச்சியடைகின்றன என்னும் இப்னு கல்தூன் கோட்பாடு குர்ஆனின் எச்சரிக்கையுடன் ஒத்துப்போகிறது:
“அல்லாஹ் நம்பிக்கைப் பத்திரங்களை அவை யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அவர்களிடம் ஒப்படைக்கும்படியும், மக்களிடையே நீங்கள் தீர்ப்பளிக்கும்போது நீதியுடன் தீர்ப்பளிக்கும்படியும் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்.” (குர்ஆன் 4:58)
3. தெய்வீக விருப்பத்தின் பங்கு (Qadar) – இப்னு கல்துனின் கோட்பாடு சமூக, பொருளாதார சக்திகளை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், வரலாறு தெய்வீக விருப்பத்தின்படி (Qadar) விரிவடைகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், ஊழ்வலி வாத விளக்கங்களைப் போலல்லாமல், மனித agency-யை வலியுறுத்தினார் – சமூகங்கள் அவற்றின் சொந்த தார்மீகச் சிதைவின் காரணமாக வீழ்ச்சியடைகின்றன, முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகளினால் அல்ல.
4. மனநிறைவுக்கு எதிரான எச்சரிக்கைகள் – வெற்றியில் விளையும் ஆணவம், மனநிறைவுக்கு எதிராக குர்ஆனும் ஹதீஸும் மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றன. ஆட்சியாளர்கள் மிகவும் வசதியடைந்து, நீதியுணர்வை இழந்துவிடும்போது நாகரிகங்கள் வீழ்ச்சியடைகின்றன என்று இப்னு கல்துன் குறிப்பிட்டார். – “எத்தனையோ ஊர்களை – அநியாயம் செய்த நிலையில் அவற்றை நாம் அழித்திருக்கிறோம்; அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் பாழ்பட்டுக் கிடக்கின்றன.” (குர்ஆன் 22:45)
#ரம்ஜான்போஸ்ட் : 8.3.2025
Leave a comment