
பனி நூறு
பனி ஆறு
அவள் கூற்று
நள்ளிரவில் முதுபனியில்
உடல்தளர்ந்த பழுப்புக் கரடி
கொல்லைக் கதவைத் தட்டுகிறது
மின் திரையில் தெரிகிறது
உனக்காக இல்லை, கரடியே
கூடத்தில் பரிமாறியிருக்கும்
ஸ்ட்ராபெர்ரி பழக்கொத்து
காக்க வைத்தவன் இன்னும் வரவில்லை
சிசிடிவி காமிரா
வருங்காலத்தைக் காட்டுவதில்லை
எப்போதுமே
திறக்கச் சந்தர்ப்பம் தராத
இந்த வாசற்கதவு எதற்காக?
(பாடியவர்: ஸ்ரீவள்ளி)
பனி நூறு
பனி ஏழு
தோழி கூற்று
முந்தைய நாள் பெய்த பனிப் பொழிவில்
குழந்தைகள் ஆடினர்
பொம்மை செய்தனர்
கை கால் உடலோடு
யாரும் பார்க்காதபோது
அது உயிர்த்திருக்க வேண்டும்
இன்று இளம் வெயில்
பாதிக் கை காணோம்
பாதிக் கால் சரிந்துவிட்டது
ஒரு பக்கம் காது இல்லை
அதன் முன் மண்டியிட்டு
அவள் இறைஞ்சுகிறாள்
நினைவூட்டக் கேட்கிறாள்
அவன் தந்த வாக்குறுதியை
மூளிச் சிலை என்றாலும்
அது பனியின் தெய்வம்
பிற நிலங்களின் தெய்வங்களைப் போல
அதுவும் பேசுவதில்லை
(பாடியவர்: ஸ்ரீவள்ளி)
—————————————————————
Journey to the west என்ற சீன மொழியின் நாவல் ஒன்றை எழுதியவரின் பெயர் உண்டு. யார் அவர், அவர் அடையாளம் போன்ற எந்த தகவலும் இன்றில்லை. அலியும் நிமோவும் நாவலை எழுதியவரின் பெயர் குர்பான் சையத். விசித்திரமான பெயர் கொண்ட இந்த ஆசிரியர் யார் என்று நாவல் வெளிவந்து நூறாண்டுகளாகியும் கண்டுபிடிக்கப்படவில்லை. யார் ஆசிரியர் என அறியப்பட முடியவில்லை என்பது முக்கியமில்லை. இரண்டு நாவல்களும் இன்றளவும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் முக்கியம். முகமிலாத ஒருவர் இலக்கியப் படைப்புகள் எழுதுவதில் உள்ள சௌகர்யம் அவரின் அடையாளம் சார்ந்த தகவல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லாததால் வாசகரை உறுத்தாது. ஶ்ரீவள்ளி-யைப் பொறுத்த மட்டில் கவிதைகள் மட்டுமே அவரின் அடையாளம். அடையாளம் சார்ந்த குறுகிய எல்லைக்குள் உலவும் கட்டாயமேதுமில்லை ஶ்ரீவள்ளிக்கு. விரிந்து கொண்டே போகும் வானம் ஶ்ரீவள்ளி. “பல நிறங்கள் உண்டு பனி ரோஜாவுக்கு” என்று கவியெழுதும் ஶ்ரீவள்ளி உருவமற்று இருப்பது புதிரன்று. இந்தப் பாணியில், பெயரற்று ஆனால் இந்த வகைமையில் பிறழாது பின்னர் ஸ்ரீவள்ளியின் பெயரில் எதிர்காலத்தில் கவிதைகள் எழுதப்படலாம் – உமர் கயாம் பெயரில் நமக்கு கிடைத்திருக்கும் பல ருபாயியாத்கள் பிற்காலத்தில் முகமறியா அடையாளமில்லா பிறர் எழுதியவை என்று நமக்குத் தெரிய வந்தது போல்.
Leave a comment