நாலடிப் பிரபஞ்சம்

ருபையாத் அல்லது ருபாயியாத் உமர் கய்யாம் எழுதினார். மஸ்னவி ரூமி எழுதினார். ருபாயியாத், மஸ்னவி – இரண்டும் நூலின் அல்லது தொகுப்பின் தலைப்பு என்றே பொதுவாகக் கொள்ளப்படுகிறது. ருபாயியாத் என்றாலே உமர் கய்யாம் எழுதியது என்று நானும் பல வருடங்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். ருபாயியாத் என்பது யாப்பு வடிவம் என்று எனக்குத் தெரிந்தது சில வருடங்களுக்கு முன்னரே. ரூமியும் ருபாயியாத் எழுதியிருக்கிறார் என்னும் தகவலும் பின்னர்தான் தெரியவந்தது. 


சீர்மை பதிப்பகம்
பக். 324
ரூ. 520

சீர்மை பதிப்பகம் “ரூமியின் ருபாயியாத்” தமிழாக்க நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஸூபித்துவம் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் தொடர்ந்து இயங்கிவரும் ரமீஸ் பிலாலி “ரூமியின் ருபாயியாத்”களை பார்சி மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துள்ளார்.  

நூலில் நானூறுக்கும் மேற்பட்ட கவிதைகள். தொடர்ச்சியற்ற கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வோர் அறை. ஒவ்வோர் அறையும் மிகப் பிரம்மாண்டமானது. அறையின் சிறு பகுதியின் தரிசனத்தை மட்டுமே பகிர்வதாகவே அதன் விவரிப்பு இருக்க முடியும். பிரபஞ்சத்தின் மொத்த அனுபவத்தை எப்படி நம்மால் வடித்திட முடியும்? நூலின் பின்னட்டையில் ரூமி  பிரபஞ்ச மகாகவி என்று வர்ணிக்கப்படுகிறார். ஒவ்வொரு துளியிலும் கடல் உள்ளது என்பார்கள். ஒவ்வொரு கவிதையிலும் பிரபஞ்சம்.

மஸ்னவித் தொகுப்புக்கும் ருபாயியாத் தொகுப்புக்கும் யாப்பு வடிவம் என்பதற்கு மேலாக ஏதேனும்  வித்தியாசங்கள் உள்ளதா என்பதை அறிய ஆர்வமாய் இருந்தது. ரூமியை ஆங்கில மொழிபெயர்ப்புகள் வாயிலாகவே அறிந்தவன் நான். ஒரு சாதாரண கவிதை வாசிப்பாளனின் அணுகுமுறையில் ரூமியை அணுகுபவனாகவே இருக்கிறேன். 

ரமீஸ் பிலாலியின் மொழியாக்கத்தில் ரூமியின் ருபாயியாத்-துக்கு அறிமுகப்படும் வாசகன், என்னைப் போலவே, The Essential Rumi – என்னும் ஆங்கில மொழியாக்கம் வாயிலாக ருமியின் உலகத்துக்கு அறிமுகமானவனாக இருப்பான் என்பது என் யூகம். கஜினி மாமூதால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்து இளைஞன், அல்லது யாரை மணப்பது என்ற சிக்கலுக்கு குழந்தைகளுடன் விளையாடும் ஷைக்’கிடம் ஆலோசனை கேட்கும் இளைஞன் போன்ற எண்ணற்ற கதைக்கருப்பொருட்களுக்கு கவிதை நிறம் பூசி உலகின் கூட்டு நினைவில் நிரந்தரமாக நிலைத்து நிற்பவர் ரூமி. 

மஸ்னவி – நிறைய கதைகளைப் பேசுகிறது. உலகக்கவிஞர் என்னும் அவருடைய புகழ் மஸ்னவியின் கதை கூறும் தன்மையிலிருந்தே எழுகிறது என்பது என் எண்ணம். கறுப்பு யானைகளின், கருங்கூந்தலின், கவிதைகளை நாம் வாசிக்கும் போது எழும் விறுவிறுப்பு, கதை வடிவத்தில் உள்நுழைந்து படிமங்களாக உலவி குறியீட்டுத் தன்மைக்கு இட்டுச் செல்லும் மாயம் ரூமியின் தனித்துவம். இதனைப் பிற கவிஞர்கள் செய்யவில்லை என்று கூற வரவில்லை. ஆனால் ரூமியின் வல்லமை தனித்துவமிக்கது. இன்று நவீன உலகத்தின் வாசகனின் மனதிலும் எதிரொலிக்கத் தக்கதாய் உள்ளது.

ஒரு கதைப் பின்ணனி. அது சமய மரபிலிருந்து பெற்ற தொன்மக் கதையாக இருக்கலாம், அல்லது ஏதேனும் வரலாற்று நிகழ்வாக இருக்கலாம். அதை அப்படியே எடுத்துக் கையாளாமல் அதனை மறு ஆக்கம் செய்து மறு கூரலாகக் கவிதையைத் துவக்குவார். அதன் சூழலை செயல்திறனோடு பயன்படுத்திக் கொண்டு கவிதையைச் செறிவாக்குவார். இறுக்கமில்லாமல் அனைத்து திசையிலும் சிதறும் கவித்துவத்தை அழகியலை கருப்பொருளோடு நேர்த்தியாகச் சேர்க்கும் தருணம் அவருடைய மஸ்னவி கவிதைகளின் உச்சம். 

மஸ்னவி தரும் அனுபவத்தை ருபாயியாத் தரும் அனுபவத்தோடு ஒப்பிட முயல்கிறேன். உதாரணத்துக்கு ரூமியின் ஒரு ருபாயீ-யை (ருபாயியாத் பன்மை, ருபாயீ ஒருமை) ஆராய்வோம். 

ஈரானிய அமெரிக்க எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர் ஸரா ஹோஷ்மண்டு பார்சியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ருபாயீ ஒன்று கீழ் வருவது –

I asked you for one kiss, you gave me six.

What teacher taught you, that you’re such an expert?

You’re so deep a source of goodness, so kind

That you’ve set the world free a thousand times.    (Zara Hoshmand, #1993)

மஸ்னவியின் அடிப்படைத் தன்மையான கதைப் பின்னணி இருக்கிறதா? இருக்கிறது. கதை சொல்லி ஓர் அனுபவத்தைப் பெறுகிறார். அதற்குப் பின்னர், பெற்ற அனுபவம் குறித்து அனுபவத்தை ஏற்படுத்தித் தந்தவரிடம் அல்லது அனுபவத்தில் பங்கு பெற்றவரிடம் தன் மகிழ்ச்சியை வார்த்தையால் பகிர விழைகிறார். அதன் மறுவிளக்கத்தை வாசகர்களிடமே விட்டுவிடலாம்!

மேற்சொன்ன கவிதையை ரமீஸ் பிலாலி பின் வருமாறு தமிழாக்கம் செய்கிறார் –

ஒன்றுதான் கேட்டேன்

ஆறு முத்தங்கள் தந்தாய்

இத்துணைத் திறமை காட்ட

யாரின் மாணவன் நீ?

எத்துணைக் கச்சிதமாய் அமைந்துள்ளது

நன்மையும் கருணையும் உன்னில்!

உலகம் உன்னால்

ஆயிரம் விடுதலைகள்

அடைந்துவிட்டது

(பக்கம் 266, 410.(#1993))

முன்றாம், நான்காம் அடிகளை “காதலரின் விளையாட்டுத்தனம்” தொனிக்க தமிழ்ப்படுத்தியிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. ஆனால், ரமீஸ் பார்சி மொழி தெரிந்தவர்.  சரிபார்க்கும் நோக்கத்துக்காக ஒரு துணையாக மட்டுமே ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை பயன்படுத்திக் கொண்டதாகச் சொல்கிறார். முன்னுரையில் அவர் கூறுவது – “பார்சி மூலத்துடன் ஒப்பு நோக்கும் போது ஏ.ஜெ.ஆர்பெர்ரி, ஸரா ஹோஷ்மண்டு ஆகியோரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு பல இடங்களில் சரியாக இல்லை என்பதை உணர்ந்தேன். அத்தகு இடங்களில் எல்லாம் மூலத்தின் சொற்கள் தரும் வெளிச்சத்திலேயே என் தமிழாக்கம் அமையுமாறு பார்த்துக் கொண்டேன்.” (பக்கம் 11).

இன்னுமொரு ருபாயீயை ஆராய்வோம்!

உன்னை நினைவுகூர்ந்தால்

அந்த நினைவின் நடுவில் 

நீயே இருக்கிறாய்

பேச வாய் திறந்தால்

அந்தத் திறப்பினில்

நீயே இருக்கிறாய்

களிப்படைகிறேன் எனில்

என் களிப்பின் ரகசியமாய் 

நீயே இருக்கிறாய்

சாக்குப்போக்கு 

தேடுகிறேன்

அதைக் கற்பிக்கும்

ஆசானாய்

நீயே இருக்கிறாய்  

(பக்கம் 265, 409.(#1992))

இதுவும் முன்பு மேற்கோள் காட்டிய கவிதை போலவே ஒலிக்கிறது. சிலேடைக் கவி போல ஒலிக்கும் இக்கவிதையின் உள்ளுறை பொருள் – சூபிஸத்தின் இறைவனை நினைவுகூர்தல் (Dhikr) – என்னும் தியானச்சடங்கை விவரிக்கிறது. கடவுளை நினை, அவன் நாமத்தை உச்சரி, கடவுளின் உள்ளார்ந்த ஞானத்தில் லயித்திரு, சாக்குபோக்கு சொல்லாதே

கதைப் பின்னணி இதில் காணப்படுகிறதா? சற்று யோசித்தால் இதன் கதைப் பின்னணி நமக்குப் புரிந்து விடுகிறது. நேரடியான பொருள் தமிழ்ச்சங்க இலக்கிய வகைமையாகிய “அகம்” எனும் வகைமையில் வரும் என்பதால் கதைப் பின்னணியைக் குறிப்பால் பின்னிவிட முடிகிறது!

உன் வேதனையின் 

எரிச்சலிடமிருந்து

ஒரு தகனம் தேடுகிறேன்

உன் வாசலின் 

புழுதியிலிருந்து

ஒரு கம்பளம் தேடுகிறேன்

துயரங்கள் அடைந்துவிட்டேன்

போதும்போதும் என்ற அளவு

உன் சகவாசத்தில் இப்போது

மகிழ்ச்சியைத் தேடுகிறேன்.

(பக்கம் 182, 245 (#1133))

“அனைத்து கட்டுப்பாட்டையும் தாண்டிய ஆற்றலான காதல் ஒரு தீ, காலிபே!

அதனை இஷ்டப்படி அணைக்கவோ மூட்டவோ முடியாது” – என்கிறார் மிர்ஸா காலிப்

வேதனையின் எரிச்சலிலிருந்து விடுபெற தகனம் ஏன் வேண்டுகிறான் கவிதை சொல்லி? காதலின் ஏழு நிலைகளில் கடைசி நிலையான “மௌத்” (அழிவு – சுயத்தின் குறியீட்டு அழிவு) அடைவதற்கு முன்னம் – போற்றுதல், வழிபாடு, பித்து – இவற்றை அனுபவிக்க வேண்டாமா? புழுதியிலிருந்து அவன் ஏன் கம்பளம் வேண்டுகிறான்? வழிபாட்டின் குறியீடா கம்பளம்? சகவாசம் (companionship) -தான் கவிதை சொல்லியின் இறுதி இலக்கா? அவன் கம்பளத்தினூடே வேண்டுவது சகவாசம் – இறைவனுடனான சகவாசம். ரூமியின் ருபாயியாத்தும் மஸ்னவி போல கதையனுபவத்தினூடே எழும் கவித்துவத்தை வாசகனுக்கு நல்குகிறது.

ருபாயியாத் எனும்போது உமர் கய்யாமோடு ஒப்பிடும் ஆர்வமும் மேலெழுகிறது. பொதுவாக நோக்குகையில் போகத்தைக் கருப்பொருளாக அதிகம் கையாளும் உமர் கய்யாம் தனது கவிதைகளில் அதிகம் சிந்தித்தது – அழிவு, இறப்பு, அர்த்தமிகு வாழ்க்கை வாழும் வழிமுறைகள், நிலையாத்தன்மை, தற்காலிகத்தன்மை.

இதற்கு மாறாக, ரூமியின் கவிதைகள் தெய்வீக, மறைஞானக் கருப்பொருட்களைக் கையாள்கின்றன. காதலரை வர்ணிக்கின்றன. கவிஞரே ஒரு காதலராக இக்கவிதைகளில் பேசுகிறார். காதல் வயப்பட்ட காதலர் தான் காதலிப்பவரை வர்ணிப்பது போல ரூமியின் ருபாயியாத்துகள் ஒலிக்கின்றன. ரூமியின் கவிதைகளில் காதலிக்கப்படுபவர் இறையாகவே அர்த்தங்கொள்ளப்படுகிறார்.

சீர்மை வெளியிட்டுள்ள ரூமியின் ருபாயியாத் நேரடியாக பார்சி மூலத்திலிருந்து தமிழ்ப்படுத்தப்பட்டுள்ள அரியத்தொகுப்பு. அடிக்குறிப்புகள் அளிக்கும் விளக்கம் கவிதையைப் பொருள் கோடலில் மிகவும் உதவுகிறது. பார்சி மூலத்தின் தமிழ் transliteration-ஐயும் நூலில் இணைத்துள்ளது தமிழ் வாசிப்புப் பரப்புக்கு மொழிபெயர்ப்பாளரின் முக்கியப்பங்களிப்பு. “என் ஒவ்வொரு அங்கத்திலும் காதலியின் அடையாளம் உள்ளது” (பக்கம் 101) என்று ரூமியார் சொல்லுவது போல மொழிபெயர்ப்பாளரின் ஒவ்வொரு வரியிலும் (முன்னுரை முதற்கொண்டு) பிரபஞ்சக்கவி மீதான வியப்பை மேலதிகம் உயர்த்தும் மெனக்கெடல் நமக்கு உணரக் கிடைக்கின்றது.  

நன்றி : காலச்சுவடு

Comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.