12th Fail படத்தின் ஆரம்ப பகுதிகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. Under Dog பற்றிய கதை என்று எண்ண வைக்கிறது. கதையின் முதன்மைப் பாத்திரம் மனோஜ் (விக்ராந்த் மாஸே) தில்லி நகருக்கு வந்த பின்புதான் “இங்கு ஏதோ நடக்கிறது” என்று திரையில் நிகழ்பனவற்றில் பார்வையை ஒட்ட வைக்கிறது.
ஏழை ஒருவன் கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவதைச் சொல்லும் கதைகள் இதற்குமுன் பல முறை சொல்லப்பட்டுவிட்டது. 12th Fail திரைப்படத்தில் என்ன வித்தியாசம்? மனதைக் கசிய வைக்கும் செண்டிமெண்டாலிடி இத்தகைய படங்களின் இன்றியமையா அம்சமாக இருக்கும். ஆனால் இப்படத்தில் செண்டிமெண்டாலிடி இல்லாமல் உனர்வைத் தொடும் மந்திரம் நிகழ்ந்திருக்கிறது.
கதையின் முதன்மைப் பாத்திரம் ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் மனந்தளராமல் தன் இலக்கை நோக்கிய குவியத்தை இழக்காமல் தொடர்வதுதான் கதையின் கரு. ஒரு Biopic என்பதால் கதையின் முடிவு என்பது நமக்கு முதலிலேயே தெரிந்து விடும் என்றாலும், பாத்திரப்படைப்புகளின் நிஜத்தன்மைதாம் கதையின் பலம்.
கடும் வறுமையிலிருந்து விடுபடவும் பிற ஏழைகளின் வாழ்வில் மாறுதலைக் கொண்டு வரவும் இந்திய போலீஸ் சேவையில் சேர பாடுபடும் மனோஜ் சமரசம் செய்து கொள்ளாமல் தன் இலக்கை அடைகிறான். கிராமத்தில் அவன் சந்திக்கும் ஒரு போலீஸ் அதிகாரி அவனுக்களிக்கும் உத்வேகம் ஒரே ஒரு வாக்கியம் – “சீட்டிங் கர்னா சோட்தே” (ஏமாற்றுவதை நிறுத்தி விடு). போலீஸ் ஆபீசர் சொன்னதைப் போல கதையெங்கும் முதுகு ஒடியாமல் நேர்மையைக் கடைப்பிடிக்கிறான் மனோஜ். நேர்முகத்தேர்வில் தான் பனிரெண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்ததை மறைக்காமல் சொல்லும் காட்சி மனதை மிகவும் வருடும் காட்சி. வெளியே காத்திருங்கள் என்று அவன் வெளியே அனுப்பப்படுகையில் அவன் மனதின் எண்ணவோட்டத்தை நம்மால் உணர முடிகிறது. பிறகு கடிதம் வாயிலாக திருமணத்தை அவனுடைய தோழி அவனிடம் ப்ரோபோஸ் பண்ணுவதை வாசித்தவுடன் மனோஜ் உணரும் லேசான தன்மையை நாமும் உணர்கிறோம்.
ஒரு மாவு மில்லில் வேலைபார்த்துக் கொண்டே பொதுத் தேர்வுக்கு கடுமையாக உழைக்கும் மகனைப் பார்த்து மனம் உடைந்து போகும் அவனுடைய தந்தை – “நம்மால் முடியாது. நம்மால் வெற்றி பெற முடியாவிட்டாலும் பரவாயில்லை” என்று சொல்லும் போது மனோஜ் சொல்கிறான் – “வெற்றி பெறாவிட்டால் ஒன்றுமில்லை, ஆனால் தோல்வியை எப்படி ஏற்பது?” இது போன்று பல தருணங்கள் நெகிழ்விக்கின்றன.
மனோஜின் வெற்றி ஏன் முக்கியம்? அவனை விட புத்திசாலிகள் இல்லை என்பதில்லை. மனோஜ் சொல்வது போல “ஐஐடி, ஐஐஎம் முதல் ரேங்க் ஹோல்டர்களை விட நான் புத்திசாலி என்று சொல்லவில்லை, ஆனால் அவர்களையெல்லாம் விட குடிமைப் பணியாளனாக இருக்க மிகவும் தகுதியானவன்”. ஏழைச் சமூகத்தில் ஓராள் அதிகாரத்தைப் பெறும் போது அவனைச் சுற்றியிருக்கும் அனைவரும் பலன் பெறுகின்றனர் எனும் கருத்து வலியுறுத்தப்படுகிறது.
உணர்வு பூர்வமாகக் கதை நம்மைத் தொட வேண்டும் என்பதற்காக வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பின்ணணி இசை இதில் அதிகம் பயன் படுத்தப்படவில்லை. நடிப்பு, காட்சியமைப்பு, வசனம் – இவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு நகர்கிறது இந்தத் திரைப்படம்.
மனோஜ் ஒரு தலித் பாத்திரமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தால் இன்னமும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் மனோஜ் ஷர்மா எனும் ஐபிஎஸ் அதிகாரியினுடைய வாழ்க்கையின் அடிப்படையிலான திரைக்கதை என்பதால் பெயரை, பாத்திரத்தின் சமூக அடையாளத்தை மாற்றாமல் விட்டிருக்கலாம்.

Leave a comment