சித்தர்கள் யார்? வேத காலத்து ரிஷிகள் இல்லை அவர்கள் ; பௌத்த சங்கத்தின் பிக்குகளும் இல்லை. மடங்களில் வசித்தவர்களில்லை. ஊக சிந்தனைகளிலோ வாக்குவாதங்களிலோ ஈடுபடாதவர்கள். அவர்களின் தேடல்கள் அமைப்புகள் சாராதவையாக இருந்தன. அவர்கள் உதாரணர்களாக இருந்தனர். மக்களுக்கு நடுவில் மக்களாக இருந்தனர். மரபு ஒழுங்கிற்கு மாறான சடங்குகளை கடைப்பிடிப்பவர்களாக இருந்தனர். கோரக்கர், போக நாதர் போன்ற சித்தர்களை இந்து மரபில் நாமறிவோம். இவர்கள் வரலாற்றில் இருந்த ஆளுமைகளா என்று அறுதியிட்டு சொல்லுதல் மிகக் கடினம். ஆனால் இவர்கள் பற்றிய எண்ணற்ற கதைகள் செவி வழியாக பல நூற்றாண்டுகளாக உலவி வருகின்றன. திருத்தொண்டர் வாழ்க்கை வரலாற்றியல் (Hagiography) சார்ந்த வரலாறுகளாக முழுக்க நம்பகத்தன்மை இல்லாதவையாக இருந்தாலும் மத்திய கால சமூகத்தின் வாழ்க்கை பற்றியும் நிலவி வந்த தத்துவங்கள் பற்றியும் வளமான செய்திகளை அவைகள் கொண்டிருக்கின்றன.
சைவ இந்து மரபைப் போல பௌத்தர்களும் 84 மகா சித்தர் மரபை போற்றுகின்றனர் ; இரு மரபிலும் வழங்கப்படும் 84 மகா சித்தர்களின் பெயர்களில் நிறைய பொதுத் தன்மைகள் உள்ளன. கி பி ஐந்தாம் நூற்றண்டுக்கும் கி பி 11ம் நூற்றாண்டுக்கும் இடையிலான காலத்தின் சமூக, வரலாற்று யதார்த்த நிலைகளில் சமுகத்தை வழி நடத்தும் உதாரணர்களாக மகா சித்தர்கள் செயல் பட்டிருக்கிறார்கள்.
சித்திகளை உள்ளடக்கியவர்களாகவும் பண்படுத்தியவர்களாகவும் திகழ்ந்தவர்கள் சித்தர்கள். யோகிகளாகவும் யோகினிகளாகவும் இன்றும் வஜ்ராயன பௌத்த மரபில் பெரிதும் போற்றப்படுகிறார்கள்.
சித்தர்கள் மரபு உருவானதற்கு வரலாற்று அறிஞர்கள் பல்வேறு கருத்தாக்கங்களை சொல்கின்றனர் ; அவற்றுள் மிகவும் அதிகமாக வலியுறுத்தப்படுவது குப்தப் பேரரசுக்குப் பிறகு வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் நிலவிய அமைதியின்மை ; 7ம் நூற்றாண்டுக்குப் பிறகு வட இந்தியாவில் பேரரசுகள் எதுவும் உருவாகாத நிலை, சிற்றரசர்களுக்கிடையான போர்களினாலும் பூசல்களினாலும் சாதாரணர்களுக்கேற்பட்ட பாதிப்பு, அதன் காரணமாக மக்களிடையே காணப்பட்ட மன்னர்களின் மீதான வெறுப்பு மற்றும் பாதுகாப்பின்மை முதலானவை. ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பு மக்களை நம்பிக்கை, சரணாகதி போன்ற பண்புகளை நாடச் செய்தன. Grassroot level-இல் இயங்கிய சித்தர்கள் தமது சித்திகளின் துணையுடன் நம்பிக்கையுணர்வை பாதுகாப்புணர்வை மக்கள் உள்ளீர்த்துக் கொள்ளும்படி வழிநடத்தினார்கள்.
84 மகாசித்தர்களும் தாந்த்ரீகமும் என்னும் கட்டுரையில் Keith Dowman இவ்வாறு கூறுகிறார் : “தாந்த்ரீக மதம் இந்தியர்களின் ஆன்மீக வாழ்க்கையின் முக்கிய சக்தியாக பரிணாம வளர்ச்சி பெற்ற காலத்தில் இந்தியாவின் வடமேற்கே கொடூரமான, பேரழிவை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் பெருக ஆரம்பித்திருந்தன. அராபியர்கள் மொராக்கோவிலிருந்து சிந்து வரை பரவியிருந்த நிலப்பரப்பை தம் குடைக்கீழ் கொண்டு வந்திருந்தார்கள். துணைக்கண்டத்தில் குப்தப் பேரரசின் மகத்துவத்தை வாரிசுரிமையாய் பெற்ற வெவ்வேறு வம்சங்களின் அரசர்களும் உட்பூசலிலும் கோரமான யுத்தங்களிலும் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார்கள். பழைய வகுப்பீடுகள் சிதைந்திருந்தன ; சமூகம் இறுகிய சாதீய விதிமுறைகளில் வழிமுறைகளில் சரணடைந்திருந்தது ; சடங்குகள் மேலோங்கிய சமயங்கள் புழக்கத்தில் இருந்தன. வலுவற்று ஒருங்கிணையாமல் கிடந்த சமூகம் புது எதிரிகளான மதவெறி மிக்க இஸ்லாமிய படைகளை எதிர்க்க முடியாமல் பலவீனப் பட்டுப் போயிருந்தது. பௌத்த மத்திய ஆசியாவின் அழிவு பற்றிய கதைகளோடு பௌத்த அகதிகள் துணைக்கண்டத்துள் நுழைந்த போது தாந்த்ரீகத்தின் செல்வாக்கு அதிகரித்திருந்தது, குறிப்பாக, முண்ணனிக் களமான ஒட்டியாணாவில் (இன்றைய பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு). புது பௌத்த சாம்ராஜ்யமாக எழுச்சி கொண்ட பால் வம்சம் ஆண்டு கொண்டிருந்த கிழக்குப் பிராந்தியங்களிலும் (ஒரிஸா மற்றும் வங்காளம்). சமரசம் செய்து கொள்ளாத அத்வைத மெய்யியல், தன்னிச்சையான விடுதலையில் மாறா நம்பிக்கை, மாமிசம் தின்னும், குருதி குடிக்கும் தெய்வங்கள் – இவைகளைக் கூறுகளாக கொண்டிருந்த தாந்த்ரீக மதத்தில் தொடங்கப்போகும் ஊழுக்கு முன்னதாக இந்தியா சரணடைந்தது தற்செயலா? தாந்திரீகத்தை மறுத்து வந்த மேற்கில் இன்று தாந்த்ரீகத்துக்கு அதிகரிக்கும் வரவேற்பும் மனிதகுலம் அழிந்து போகலாம் என்னும் கருத்து நம்பகத்தன்மையை பெறுதலும் தற்செயலா?”
மகாசித்தர்களில் முக்கால் வாசி சித்தர்கள் கிழக்கிந்தியாவை பிறப்பிடமாகவோ இருப்பிடமாகவோ கொண்டவர்கள். பால் வம்சம் ஆண்ட காலத்தில் சித்தர் மரபுக்கு நல்ல ஆதரவு இருந்தது. விக்ரமஷீலா மற்றும் சோமபுரி பௌத்த பல்கலை கழகங்கள் துவக்கப்பட்டன. இப்பல்கலைக்கழகங்களில் தாந்த்ரீக பௌத்த சாதனைகள் கற்பிக்கப்பட்டன ; நாளந்தாவும் விரிவுபடுத்தப்பட்டு தாந்த்ரீக பௌத்தத்தின் மையமானது. தாந்த்ரீகத்தின் மனப்பான்மைகளும் தத்துவங்களும் சித்தர்களின் காலத்துக்குப் பிறகே சமுதாய ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆரம்ப கால சித்தர்கள் போலித்தனம், வெற்றுச் சடங்குகள், கற்பனைத் தத்துவங்கள், பண்டித மேதாவித்தனம், சாதி வித்தியாசங்கள், பாசாங்குத்தனம் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தார்கள். மந்திரம் – இணைவு சடங்குகள் – மண்டலங்கள் – இவற்றை வலியுறுத்தும் வழிமுறைகளை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் வெறும் செயல் முறைகளாக இல்லாமல் மறைபொருள் ஞானத்துடன் இணைந்து சடங்குகளைக் கடந்த மனநிலையை அடையும் இலக்கிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
குளிக்காத சுத்தமில்லா தோற்றம், முரட்டுத்தனமான பேச்சு, சில சமயம் பித்து நிலை மிகுத்து ஏறுமாறான நடத்தைகள் என்று சித்தர்கள் வலம் வந்தனர். தர்க்க ஒழுங்கு மாறாத அணுகுமுறையுடன் வளர்த்தெடுக்கப்பட்ட பௌத்தத்தில் சித்தர்கள இயக்கம் ஒரு முரண் போலத் தோன்றலாம். ஆனால் சமூக பரிவர்த்தனைகளின் விளைவாக இயல்பாக எழுந்ததே சித்தர் இயக்கம் என்று வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர். பல பௌத்த சித்தர்களும் துவக்கத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த மடாலய பௌத்தர்களாகவே இருந்தனர். வெறும் சூத்திரங்களின் அடிப்படையில் இருந்த சாதனைகள் அவர்களுக்கு அனுபவரீதியாக முன்னேற்றத்தை எதிர்பார்த்த வேகத்தில் தராததால் அந்தப் பாதையிலிருந்து விலகி, சிறு வனங்களிலோ அல்லது ஆற்றங்கரைப் பகுதிகளிலோ தங்கிக்கொண்டு மது, உடலுறவு, மாமிசம் என்னும் மூன்று அம்சங்களை உட்படுத்திய தாந்த்ரீக சாதனைகளில் ஈடுபட்டனர்.
ஆன்மீக அராஜகம் அவர்களின் லட்சியமாயிருந்தது. சமய வடிவங்களில் அதிகம் மனம் லயிக்காத குணமும் அவர்களிடம் காணப்பட்டது. தீட்சை பெற்றவர்களுக்கு மட்டுமே சித்தர்-குருவின் சாதனையை பயிற்சி செய்யும் உரிமை வழங்கப்பட்டது. எந்த வித நிறுவனத்துவமும் சித்தர்களினுடைய இருத்தலியல் சுதந்திரவுணர்வை மட்டுப்படுத்தவில்லை.
சித்தன் தாந்த்ரீக சாதகன் ; தியானத்தின் இலக்கை வெற்றிகரமாக அடைந்தவன். அவனுடைய சாதனை சித்தி. சித்தி இரு வகைப்படும் ; ஒன்று சாதாரண மந்திர சக்தி (Mundane) ; இன்னொன்று புத்தரின் நிர்வாண நிலை (Ultimate). எனவே சித்தன் என்பவன் ஞானி, மந்திரவாதி அல்லது அருட்தொண்டன். ஆனால் இச்சொற்கள் சித்தனின் தாந்த்ரீக வாழ்க்கை முறையை நம் மனதுக்குள் கொண்டுவருவதில் தோல்வியுறுகின்றன. பொதுவாக சித்தன் என்றால் மந்திர சக்தி கொண்டவன் ; ஒரு யோகி சுவர்களை ஊடுருவி செல்கிறான் என்றாலோ அல்லது விண்ணில் பறந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டவர்களை சுகப்படுத்தினாலோ அல்லது நீரை மதுவாக்கினாலோ அல்லது காற்றில் மிதந்தாலோ அவனுக்கு சித்தன் என்ற பெயர் பொருந்தும். அதே யோகியின் கண்களில் பைத்தியக்காரத்தனம் பளபளத்தாலோ, உடம்பெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டாலோ, தனக்கும் அடுத்தவர்க்கு கண்ணீர் வரும்படி பாடினாலோ, குரைக்கும் தெருநாய்களை தன்னுடைய பிரசன்னத்தினால் அமைதிப்படுத்தினாலோ, வலுக்கட்டாயமாக ஒரு குடும்பப்பெண்ணை தன்னோடு கவர்ந்திழுத்து வந்தாலோ, ஓரடி நீளமான சடா முடியில் வஜ்ரத்தை (உபாயம் அல்லது அசையாத்தன்மையின் குறியீடு) குத்தியிருந்தாலோ, பறவைகளுடன் பேசினாலோ, தொழுநோயாளிகளுடன் தூங்கினாலோ, தார்மீக விரக்தியுடன் வாயவீச்சாளர்களை ஏசினாலோ, உறுதியான எண்ணத்தோடு மரபுக்கு மாறான ஒரு காரியத்தை செய்யும் அதே வேளை தன்னுடைய “உயரிய யதார்த்த நிலையை” நிரூபித்த வண்ணம் இருப்பவன் நிச்சயம் சித்தனே. தோற்றத்தினால் ஈர்க்கப்படும் சாதாரண மக்கள் சித்தனின் அசாதாரண நோக்கத்தை – மஹாமுத்ரா (வஜ்ராயன பௌத்தக் கலைச்சொல்) – அறியாமல் இருப்பார்கள். மேலும், சித்தன் என்பவன் அடையாளமற்ற விவசாயியாக இருக்கலாம் ; அலுவலகத்தில் பணி புரிபவராக இருக்கலாம் ; அரசனாக இருக்கலாம் ; பிக்குவாக இருக்கலாம் ; வேலைக்காரனாக இருக்கலாம் ; நாடோடியாக இருக்கலாம் என்பதையெல்லாமும் அவர்களால் அறிய முடியாது.
சாதாரண மந்திர சக்திகளை அஷ்டமா சித்திகள் என்கிறார்கள் ; ஆனால் வஜ்ராயனத்தின் இலக்கு மஹாமுத்ரசித்தி. மஹாமுத்ரசித்தி பெற்றவர்களுக்கு மந்திர சித்தியும் தன்னிச்சையின்றி கிட்டும் ; ஆனால் மந்திர சித்தி கிட்டியவர்களுக்கெல்லாம் மஹாமுத்ர சித்தி கிடைக்கும் என்று நிச்சயம் கிடையாது.
நிர்வாணத்தின் போது புத்தர் அடைந்த நிலை. பூரண ஒருமை ; சுயத்தின் அழிப்பு ; ஞான விழிப்புணர்வு ; இறுதி யதார்த்தத்தை இருமைகளற்று நோக்குதல். சம்ஸ்கிருதத்தில் இது பௌத்த கலைச்சொல் தததா (thatata) என்று குறிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் that-ness அல்லது such-ness என்று பொருள். இதுவே பௌத்தர்களின் இலக்கு.
ஸ்ராவகர்கள் (புத்தரின் குரல் வழி தம்மத்தை கேட்டவர்கள்) அருகராகி இறந்த காலக் கருமங்களை தொலைத்துவிட்டாலும் புதிதாக கருமங்கள் ஏதும் சேராமல் வாழ்ந்து பின்னர் நிர்வாணத்தை அடைதல் ஆதி பௌத்தத்தின் வழிமுறை ; பல ஜென்மங்களாக போதிசத்துவ வாழ்க்கை வாழ்ந்து புத்த நிலையை அடைதல் மகாயானத்தின் வழிமுறை ; தன் வாழ்நாளிலேயே வஜ்ரத்தினால் குறுக்காக வெட்டுவது போன்று கர்மயதார்த்தங்களை அரிந்து கருத்தியல்களை துறந்து மஹாமுத்ரசித்தியை அடைதல் வஜ்ராயனத்தின் வழிமுறை.

Leave a comment