சுட்டுணர்வு

சில வாரங்களுக்கு முன்னர் நான் வலைப்பதிவிட்ட “தர்மகீர்த்தியின் பரிசோதனை”  கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது ; அதில் வரும் pure sensation எனும் கலைச்சொல்லை தூய உணர்ச்சி என்ற உரிச்சொல்லாக மொழி பெயர்த்திருந்தேன். தூய உணர்ச்சி என்னும் சொல் முழுமையான திருப்தியை ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு கட்டுரையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி சிந்திக்க சரியான நேரம் அமையவில்லை.

நேற்று ஒரு முகநூல் உரையாடலின் போது மணிமேகலையின் 29-ம் அத்தியாயத்தில் ஒன்றைத் தேட வேண்டியிருந்தது. எதையோ தேடும் போது முன்னர் தேடிக் கிடைக்காது போன பொருள் கண்ணுக்குத் தட்டுப்படுமே அது மாதிரி கீழ்க்கண்ட வரிகள் என் பார்வையில் பட்டன.

ஆதி சினேந்திர னளவை யிரண்டே

ஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச்

சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி

விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்

மற்றவை யனுமா னத்துமடை யும்மென    (29 : 47-51)

“ஒரு பொருளின் பொருண்மை மட்டும் கண்டுணரும் உணர்வை காட்சியளவை என்று மேற்கொண்டு பிறராற் கொள்ளப்படும் பெயர், சாதி, குணம், தொழில் என்பவை கருத்தளவையிலும் அடங்கும் என அவற்றை இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர்”

– ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை

Pure sensation என்ற சொற்றொடரை சுட்டுணர்வு என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும் ; மணிமேகலை ஆசிரியர் வேறோர் இடத்திலும் சுட்டுணர்வை வரையறுத்திருக்கிறார்.

“சுட்டுணர் வெனப்படுவது ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல்” (26 : 61-62)

சுட்டுணர்வு நிர்விகற்ப காட்சி ; நாம சாதிக் குணக்கிரியையின் வைத்து உணரும் உணர்வு சவிகற்பக் காட்சி. இவற்றை முறையே இந்திரிய ஞானம் என்றும் விசிட்ட ஞானமென்றும் கூறுவர். திக்நாகர் நாம சாதி முதலியவற்றை “பஞ்சவித கற்பனை” என்று குறிப்பிடுகிறார். சுட்டுணர்வென்பது சவிகற்ப காட்டிக்கு அடிப்படை ; சுட்டுணர்வு சவிகற்ப காட்சிக்கு வித்திடாவிடின் அது குறையுடையதாகும். இக்குறையை தருக்கவியல் நூலார் “பிரமாணாபாசங்கள்” எட்டனுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.

Comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.