ஏரி – கவிஞர் சல்மா

ஸல்மா

ஏரி
ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு
ஏரி சலனமற்றிருக்கிறது
சில நாட்களுக்கு முன்
தயக்கமின்றி உன்னிடமிருந்து
காலியான மதுக்கோப்பைகளை
விட்டெறிந்திருந்தாய் அதில்
மறுக்காமல் பெற்றுக்கொண்டது
ஏரி
பிறகொரு நாள்
நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்
கழுவிச் சாம்பலையும் கரைத்தாய்
நேற்றுகூடக்
கசந்துபோன நம் உறவினை
இகழ்ந்து எச்சில் துப்பினாய்
தண்ணீரில்
எந்தக் காலமொன்றில்லாமல்
எல்லாக் காலங்களிலும்
உன் கழிவுகளைக் கொட்டி
உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய்
இன்று இதில் எதையும்
நினைவுறுத்தாது
உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய்
உன் அசுத்தங்களை
அடித்துக் கொண்டுபோக
இது நதியில்லை
ஏரி
சலனமற்றுத் தேங்கிய நீர்
பத்திரமாய்ப் பாதுகாக்கும்
ஏதொன்றும் தொலைந்துபோகாமல்
எனது வண்ணத்துப் பூச்சிகள்
அறைச் சுவரில்
நான் விட்டுச் சென்ற
எனது வண்ணத்துப் பூச்சிகள்
தமது பசை உதிர்ந்து
பறந்து சென்றிருக்கலாம்
நான் திரும்புவதற்குள்
 

பாதைகள்

 அலமாரியில்
அறைச் சுவரில்
சுழலும் மின்விசிறியில்
மோதித் தெறிக்கும் வெளவால்
பல்லாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து
கடலின் நீலத்தையும்
மலைகளின் கூட்டங்களையும்
கடந்து வரும் பறவைகள்
இதுவரை
தொலைத்ததில்லை
தம் வழியை
 
பிறழ்வு
நான் பார்த்தறியாத
உலகைக்
குற்றவுணர்வுகளின் சங்கடங்களின்றி
எனக்குத் திறந்துவிடும்
உன் ஆர்வத்தில் தொடங்கிற்று
நமது உறவின் முதலாவது பிசகு
வெகுவான பிரயாசைகளுக்கும்
மூச்சு முட்டல்களுக்கும் பிறகே
உருவாக்குவேன்
துளியளவு ஆட்சேபணையை
வாழ்வின் எழுதப்படாத ஒழுங்குகளைக்
காதோரத்தில் கிசுகிசுத்துக்கொண்டேயிருக்கும்
அசரீரிகள்
இன்றைய உணவை
இக்காலத்தின் எனது உடைகளை
அவற்றின் வேலைப்பாடுகளை
இன்னும் என் உடலில் மறைக்கப்பட
வேண்டிய அவயவங்களை
காலில் சுற்றி வீழ்த்தும்
கண்ணுக்குப் புலப்படாத வேலிகள்
அச்சுறுத்தித் திருப்பும் என் சுவடுகளை
தன் வழக்கமான சுற்றுப் பாதைக்கு
இந்த இருப்பின் தடங்களை
நாளையும் சரிபார்க்கவென மட்டுமே
அஸ்தமிக்கும் இந்தப் பொழுது
யாரோ எப்போதோ சமைத்த சாரமற்ற
நேற்றைய உணவின்
விதியிலிருந்து விலகி
கூடு தேடிச் செல்லும் பறவைகளுக்கு
இந்த வெற்றுப் படுக்கைகளை
தந்துவிட்டு
வெட்டவெளியொன்றில்
தூங்க ஓரிடம் தேடினால் என்ன?
இன்று
ஒரு நாளைக்கேனும்
இந்த சங்கடங்கள் தன்னால்தானென
நம்மில் ஒருவர்
பொறுப்பேற்றால் என்ன
அல்லது
நம்மில் ஒருவர் இங்கிருந்து தப்பிச் செல்ல
இன்னொருவர் உதவினால் என்ன
இதில் ஏதும் இல்லையெனில்
ஏதேனும் வழியொன்றைத்
தேட முயல்வோம்
இந்த இரவை விடியாமல் செய்ய
காலப் பதிவு

விபத்திலிருந்து மீண்ட நாளின் உடை

நாம் சந்தித்துக் கனிந்திருந்த
வேளையில் பகிர்ந்திருந்த உணவு
நெருங்கியவரின் மரணச் செய்தி
வந்து சேர்க்கையில்
என் கண்களைக் கடந்த
சிவப்பு வண்ணக் கார்
நகர்வதில்லை காலம்
படிந்து உறைகிறது
ஒவ்வொன்றின் மீதும்
 (இக்கவிதைகளை வலையேற்ற அனுமதித்த கவிஞர் சல்மாவுக்கு எனது நன்றிகள்)

Comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.