இது ரியோகன் எழுதியதில்லை

கண்கள் மூடிப் படுத்திருக்கிறேன்

ஏதேதோ நினைவுகள்

அடுத்த நாள் பற்றிய எண்ணங்கள்

பகலில் நடந்தவை பற்றிய அசை போடல்கள்

விடியச் சில மணி நேரங்கள்

இத்தருணத்திற்கு மீண்டு இரவைப் பருகினேன்

மூடிய கண்களில் உறக்கம் படிந்தது

நீர் நகரும் சத்தம் கேட்டவாறிருந்தது

யாரோ எதுவோ கால் கழுவிக்கொண்டது

நீரளையும் ஓசை

கரை தட்டிய கால்கள்

தரையில் தள்ளிவிடும் நீர்

மனதில் வந்து தேங்குகிறது

மனம் சுத்தமாகட்டும்

புதுக்காலையில் புது மனம்

1.44 AM Fri 21 Jan

காலம் அவர்களை மாற்றிவிடுமுன் – கவாஃபி



பிரிந்தபோது இருவருக்கும் மிக வருத்தம்
இருவருமே அதை நாடவில்லை
நிலவிய சூழல்தான் காரணம்
பிழைத்தலுக்கான அவசியம் ஒருவரை
வெகுதூரம் துரத்தியிருந்தது
– அமெரிக்காவுக்கோ கனடாவுக்கோ
அவர்களின் காதல் முன்பு போலிருக்கவில்லை
ஈர்ப்பு மெதுவாக குறைந்து கொண்டு வந்தது
ஈர்ப்பு வெகுவாக குறைந்தும் விட்டது
எனினும், பிரிவிற்கு அது காரணமில்லை
சூழல்தான் காரணம்- ஒரு வேளை
அவர்களின் உணர்வு முழுக்க மறையுமுன்
காலம் அவர்களை முழுதாக மாற்றிவிடுமுன்

ஊழானது கலைஞனாகத் தோன்றி
இருவரையும் பிரித்திருக்கலாம்
ஒருவருக்கு மற்றவர் என்றுமே
இருபத்தி நான்கு வயது அழகான இளம் வாலிபராகவே நினைவில் நிற்கவேண்டுமென்பதற்காக

தாயமுருட்டலானார்

விதிகள் என்னென்று தெரியாத
விளையாட்டில்
அன்னை தாயமுருட்ட
தோல்வியுற்ற பரமன்
வெகுண்டெழுந்தார்

துணையற்று
பித்துற்று
தனிமையில்
தவித்திருந்தார்

இன்னும் தவிக்கட்டும்! –
புன்சிரிப்புடன்,
காத்திருக்காதவர் போன்று
அன்னை
நடித்திருந்தார்

தனிமைத்தீயின்
உக்கிரம் பொறுக்காது
தவத்திலாழ்ந்தார் சிவன்
நெடுநாள்
தவத்துள்ளிருந்தவருக்கு
ஒருநாள்
தானாக நகைப்பு

சற்று தூரத்தில்
இமவான் மகளாக
அன்னை
தம் தோழிகளுடன்
பூவனம் நோக்கி வந்து
கொண்டிருந்தார்

அன்னை இப்போது
மறந்து போயிருந்த
தாய விளையாட்டை
நினைவு கூர்ந்த பரமனின்
அகப்புன்முறுவல்
தொடர்ந்தது

“ஒவ்வொரு முறையும்
தாய விளையாட்டை மறந்துவிடுகிறாள் இவள்
எனினும்
ஒவ்வொரு முறையும்
இவளே வெல்கிறாள்”

அப்போது
அவர் மீது
எய்யப்பட
கரும்புவில்லொன்று
தயாராக இருந்தது

ஒரு முடிவிலாக் குறிப்பு

மே 14, 2018

எல்லாம் சுமுகமாகச் சென்று கொண்டிருந்தன.சென்ற வருடம் ஒரு நாள் தொடங்கியது. மார்ச் மாதம். தேதி நினைவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மோசமடையும் என்பார்களே அதை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டியது. மோசமடைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று எத்தனை யோசித்தும் தெளிவை எட்ட முடியவில்லை. வேலைகள் ஒழுங்காகவே போய்க் கொண்டிருந்தன. எனினும் என்னை மீறி ஏதோ நடக்கிறது. என்ன அது? சில மாதங்களுக்குள்ளேயே அனைத்தும் மாறி விட்டன. என் தோழர்கள் குறுகிய இடைவெளியில் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். நண்பர்கள் என்று அலுவலகத்தில் ஒருவரும் எஞ்சியிருக்கவில்லை. இருப்பவர்கள் யாரும் என் நண்பர்கள் இல்லை. அலுவலகத்தில் நண்பர்கள் தேவையில்லை எனும் பண்பாடு எப்போது நுழைந்தது என்ற பிரக்ஞையற்று இருந்திருக்கிறேன். விற்பனை சரிய தொடங்கியது. ஒரு விற்பனை மேலாளரின் உழைப்பை யாரும் பார்க்கப் போவதில்லை. உழைப்பு விற்பனை எண்ணாக மாறாத வரை வில்லாக வளைந்து எலும்புகளை முறித்துக் கொண்டாலும் யாரும் சட்டை செய்யப் போவதில்லை.

இது ஒரு தற்காலிக நிலை. விரைவில் அனைத்தும் சரியாகி விடும் என்று நம்பிக்கையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஏறிக்கொண்டு போகும் வயது, சராசரியை விட சற்று அதிகமாக ஈட்டும் ஊதியம் -இவற்றையெல்லாம் விட என்னைத் துன்பப்படுத்திய மிகப் பெருங்கவலை – சரிந்து கொண்டிருக்கும் என் தன்னம்பிக்கை. பயம் வந்தால் ஒருவனின் உழைப்பு பெருகும் என்று தான் நான் இதுநாள் வரை எண்ணிக் கொண்டிருந்தேன். இதற்கு முன்னர் எனக்கு வந்த நெருக்கடிகளின் போது பயம் பெருகும் போது உழைப்பையும் முயற்சியையும் பெருக்க வேண்டும் என்ற பாடத்தை நான் கற்று வைத்திருந்தேன். ஆனால் நம்பிக்கையின்மை இம்முறை என் உழைப்பை மந்தமாக்கியது.

ஒரு சனிக்கிழமை என் தொலைபேசி ஒலித்தது. விடுமுறை நாள். வீட்டில் தான் இருந்தேன். மனம் அமைதியாய் இல்லை. போன் செய்தவர் என் அதிகாரி. போனை எடுக்க நான் தயக்கம் காட்டினேன். இந்த தயக்கம் அசாதாரணமானது. அதிகாரி என்னை உரித்து சாப்பிட்டுவிடுவாரா? ஏன் பயப்படுகிறேன்? அவர் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு பதில் இல்லாமல் போகாது என்ற அடிப்படை நம்பிக்கையைக் கூட இழந்திருக்கிறேன் என்ற புரிதல் என்னை தூக்கிவாரிப் போட்டது. ஏதாவது முடிவெடுக்கும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தேன். உதவியை நாடுவது என்று உடன் முடிவெடுத்தேன்.

நான் உதவியை நாடி ஆறு மாதமிருக்கும். புகை மூட்டம் விலகத் தொடங்கியிருந்தது. சிந்தனைக்குள் அதீத உணர்ச்சி புகும் வேகத்தை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருந்தேன். நரம்புகளினூடே அதீதமாய் சுரக்கும் பய ரசாயனத்தை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் வேலை செய்யத் தொடங்கியிருந்தன. ஒரு நாள் என் மன நல மருத்துவரை கேட்டேன். “ஆறு மாதம் முன்னர் எனக்கு நடந்தது என்ன?” அதற்கு அவர் சொன்ன பதில் – “ஆறு மாதம் முன்னர் என்னை சந்திக்க வந்த போது நீங்கள் Acute Depression-இல் இருந்தீர்கள்’

புறக்காரணிகளில் ஒரு மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. அதே அலுவலகம். அதே சக ஊழியர்கள். அதே அதிகாரி. அதே சூழல். பயத்தின் தூண்டலில் பதற்றப்படுதலை நிறுத்தப் பழகியிருந்தேன். நகரும் தன்மை கொண்ட இலக்குகளின் இயல்பை என் அகவயமாக உற்று நோக்கத் தொடங்கியிருந்தேன். இது தான், இது மட்டும் தான் என் இலக்கு. இந்த இலக்கு மட்டும்தான் என்னை வரையறுக்கும் என்பதாக ஒற்றை இலக்கில் தொங்கிக் கொண்டிருப்பது வியர்த்தம். இலட்சியம் நல்ல விஷயம். ஆனால் அதன் மேல் முழு கனத்தையும் போட்டுப் பயனில்லை. வளைந்து செல்லும் ஒரு நதியைப் போன்று சூழலுக்கேற்றவாறு நம் ஆசைகள், லட்சியங்கள் எல்லாம் சற்று வளைந்து கொடுக்கட்டும். Physiologically, our body cannot be in perpetual state of anxiety. It has to return to its equilibrium. பிரக்ஞை பூர்வமாக சுய-அன்புடன் உணர்வு நிலைகளை manage செய்தால் கட்டுப்பாடின்றி பதற்றம், அச்சம் என்னும் உணர்ச்சிகள் பீறிடும் வாய்ப்பு குறையும். Let us Count our Blessings. முதலில் நம் மீது நாம் கருணை கொள்வோம். நம்மை பற்றிய அதிகமான எதிர்பார்ப்பின் காரணமாக நம்மை நாமே (மன ரீதியாக) வதைத்துக் கொள்வதை நிறுத்துவோம். ஆசைகள் நம்மை இயக்கத் தொடங்கிவிட்டால் நம் மீது நம் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். நான் ஆசைப்படலாம். ஆனால் ஆசைகள் நம்மைக் கட்டுப்படுத்தலாகாது. தடைகள் இறுதி வரை தோன்றிக் கொண்டிருக்கும். வாழ்வில் இதுவரை தாண்டி வந்த தடைகளை நினைவுபடுத்திக் கொள்வோம். இதுவரை பெற்ற வெற்றிகளை எண்ணி மீண்டும் மகிழ்ச்சி கொள்வோம். நம்பிக்கைச் சுடரை இறுதி வரை அணையாமல் காப்போம்.

சென்ற வருடம் முழுதும் தன் பதற்றத்தை பாதுகாப்பின்மையை தாள முடியாமல் என்னை பந்தாடிய அதிகாரி இந்த வருடம் அமைதியாகிவிட்டார். வேறு வேலை தேடிக் கொண்டிருப்பதாக அரசல் புரசலாக பேச்சு. விரைவில் அவர் வேலையை விட்டுச் சென்று விடலாம். சூழல் மாறலாம். புதுச் சூழல் வேறு வித மாற்றங்களுக்கு வித்திடலாம். மாற்றம் இப்படித்தானிருக்கும் எனற ஒற்றைப் பரிமாணத்தில் நான் நிச்சயம் யோசிக்கப் போவதில்லை. உறுதியளிக்கப்பட்ட elevation கிடைத்துவிடும் என்ற கண்மூடித்தனமான எதிர்பார்ப்பு சென்ற வருடம் சுக்குநூறாக உடைக்கப்பட்ட பின்னர் நடந்த அகநாடகம் எனக்கு ஆசானாக இருந்து வழி காட்டும். நம் அனுபவங்கள் நமக்கான தொடரும் case-study.

+++++

மடிக்கணினியின் முகப்புத் திரையினுள் குப்பையைப் போல் குவிந்து கிடந்த மின்கோப்புகளில் ஒன்றைத் திறந்தபோது மூன்றரை வருடங்கள் முன்பு நான் எனக்காக எழுதிக் கொண்ட குறிப்பு கண்ணில் பட்டது. வாசிக்கையில் ஒரு கதை போன்று சுவாரஸ்யமாய் இருந்தது. எனக்கு நானே சிரித்துக் கொண்டேன்.

மூன்றரை வருடம் முன்னர் குறிப்பை எழுதியதற்குப் பிறகு இது என்னுடைய வாசிப்புக்கு மட்டும் என வைத்துக் கொண்டேன். வழக்கமாக அனுப்பும் இணைய இதழ்களுக்கு அனுப்பி வைக்கவில்லை. எனது வலைப்பக்கத்திலும் இடவில்லை. எழுதியதையெல்லாம் பொதுத் தளத்தில் பகிரும் வியாதி உச்சத்திலிருந்த போதும் இதை மட்டும் ஏன் பகிராமல் வைத்துக் கொண்டேன் என்று எனக்கு இன்று விளங்கவில்லை.

என்னைப் பொறுத்த வரை முழுக்க முழுக்க நிஜம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த இந்தக் குறிப்பின் உள்ளடக்கம் ஒரு புனைவைப் போன்று ஒலித்தது என்பதுதான் இப்போதைய உண்மை. சுழலும் டைட்டில்கள் வந்த பின்னரும் ஒரு Bio-Pic திரைப்படத்தின் கதாநாயகப் பாத்திரம் இறக்காத வரை அப்பாத்திரத்தின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள் நிகழ்ந்தவாறிருக்கும் எனும் பிரக்ஞையை இடைநீக்கம் செய்யும் போதுதான் படத்தின் முடிவை ரசிக்க முடியும். முடிவில்லாமல் ஒரு புனைகதை நீண்டு கொண்டிருந்தால் – எத்தனை வலிமையான எழுத்தென்றாலும் – ஓரு கட்டத்தில் வாசிப்பு சலிப்பு தட்டிப் போகும்.

ஐநூறு சொற்களில் எனக்கு நானே எழுதிக்கொண்ட குறிப்பு ஒரு சிறுகதை வடிவத்தைப் பூண்டிருந்தது. எனினும், மனவியல் சிக்கலுக்கு தீர்வைத் தேடிக் கொண்டதான பாவனையில் உற்சாகத்துடன் நான் எழுதிய அந்தக் குறிப்பு தரமான சிறுகதையாக அமையுமா எனும் ஆய்வுக்குள் நுழைவதல்ல என் நோக்கம்.

வாசித்து முடித்ததும் என்ன தோன்றியது? பயணித்த பாதையின் விவரிப்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்தக் குறிப்பு எழுதி முடித்த பிறகு வந்த நாட்களில் தொழில் வாழ்க்கை நான் முற்றிலும் ஊகித்திருக்க முடியாத திசையில் பயணப்பட்டது.

குறிப்பினில் கூறப்பட்டபடி அக நாடகத்தின் படிப்பினை உதவியாக இருந்தது என்று சொல்ல முடியாதெனினும் சுயத்துடனான உரையாடலில் சில தெளிவான அணுகுமுறையை சட்டகத்தை (தற்காலிகமாகவேனும்) எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. குறிப்பில் பதிவு செய்த சம்பவங்கள் – குறிப்பாக எந்த சம்பவங்களைப் பற்றியும் விரிவாக எழுதவில்லை ; வெறும் கொடி காட்டலோடு சரி – நடந்த பின்னரான தொழில் வாழ்க்கை பற்றி விவரமாகச் சொல்லுமளவுக்கு அது ஒன்றும் அதிசுவாரஸ்யமானதொன்றுமில்லை. தனியார் வேலையிலிருக்கும் ஆயிரமாயிரம் மனிதர்களின் வாழ்வில் வழக்கமாக நடப்பதுதான். சாகசமோ விறுவிறுப்போ அதிகம் இல்லாது அதிகாரம் மட்டுமே ஜெயிக்கும் அக்கப்போர்தான்.

  1. உயரதிகாரி வேலையிலிருந்து நீங்குதல்

  2. தற்காலிக மகிழ்ச்சி

  3. மீண்டும் பணிவுயர்வு பற்றிய எதிர்பார்ப்பு

  4. ஆனால், அயல் நாட்டுத் தலைமையலுவலகத்திலிருந்து மாற்றலாகிவந்த ஒருவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்படல்

  5. புதிய அதிகாரி என்னிடமிருந்த கொஞ்சநஞ்ச அதிகாரங்களையும் பறித்துக் கொள்ளல்

  6. வேலை சார்ந்த சுதந்திரங்கள் மட்டுப்படுத்தப்படல்

  7. வியாபாரக் கொள்முதல் சார்ந்த லஞ்சம் பற்றி உயர் மட்டத்துக்கு துப்புத் தரப்போக அது குறித்த அதிகார விசாரணையை என் மீதே ஏவினார் அயல் நாட்டு அதிகாரி. (பழைய அதிகாரி போலவே இவரும் தொடர்ந்து எரிச்சல் படுத்திவந்தார் ; நான் என் வேலையை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்ற பழைய அதிகாரியின் அதே எண்ணந்தான் இவருக்கும் இருந்தது என்று இப்போது தோன்றுகிறது.)

  8. பெருந்தொற்று ஊரடங்கின் போது அதிகாரி சொந்த நாடு சென்றுவிட தொழிற்சாலை முடங்கியது. தாய் நிறுவனத்திலிருந்து சம்பளப் பட்டுவாடாவுக்கான நிதி ஆதரவு கிடைக்கப் போவதில்லை எனும் சமிக்ஞை தெரிந்தவுடன் கடுமையான உழைப்பின் உதவியால் குறைந்த காலத்துள் வியாபாரத்தை மீட்டெடுத்து ஊழியர் அனைவருக்கும் தொடர்ந்து நேரத்தில் சம்பளம் கிடைக்க வழிவகை செய்தல். (அடுத்தவர்கள் இதை ஒரு சாதனையாக ஒப்புக் கொள்வார்களோ மாட்டார்களோ – “அதற்குத் தகுந்த கூலி உனக்கு வழங்கப்பட்டுவிட்டது” – என்னைப் பொறுத்த வரை எனது நலிந்த தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இது இருக்கப் போகிறது என்ற எண்ணம் எனக்குண்டு.)

  9. பெருந்தொற்று காரணமாக விமானங்கள் பறக்காததால் நிறுவனத்தை நிர்வகிக்க அயல் நாட்டிலிருந்து யாரையும் அனுப்ப முடியவில்லை என்ற சாக்கில் அதல பாதாள விலையில் முகந்தெரியாத முதலீட்டாளருக்கு இந்திய நிறுவனம் விற்கப்படல்.

  10. நிறுவனம் விற்கப்பட்ட அடுத்த நாள் கம்பீரமாக நடை போட்டு மீண்டும் அலுவலகத்துக்குள் நுழைந்தார் முதலீட்டாளர் அதாவது (குறிப்பில் நான் சொல்லியிருந்த) பழைய அதிகாரி. அவர் தான் இப்போது முதலாளி.

அதற்குப் பிறகு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இறங்குமுகந்தான். மனஅழுத்தம், மனச்சோர்வு, மனக்கவலை – இவற்றை தாற்காலிகமாகத் துறந்தேன். பகுப்பாய்வு செய்யும் அவசியம் இருக்கவில்லை. அவமதிப்புகளை அமைதியாய் சகித்துக் கொள்ளவில்லை. சொற்களைச் சொற்களால் எதிர் கொண்டேன். கேவலப்படுத்துதல்கள் மின்னஞ்சல்களில் தொடர்ந்த போது வழக்கமாக மௌனம் காக்கும் என் இயல்பில் மாற்றம் வந்தது. சரி சமமாக முதலாளியான அதிகாரிக்கு பதிலளித்தேன். நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் காரணமாக குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்கு யாரையும் வேலையை விட்டுக் கழித்து விட முடியாது என்பதால் பிடிக்காதவர்கள் எல்லாம் அவர்களாகவே வேலையை விடும் சூழலை உருவாக்கினார் அதிகாரி.

பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் போது ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு சிறு அறையில் கிட்டத்தட்ட முப்பது பேரை உட்கார வைத்து வியாபார தந்திரோபாயம் குறித்த உரையாடல் நடத்தியதுதான் அவர் புரிந்த ஈனச் செயல்களுக்கெல்லாம் திலகம். அந்தச் சந்திப்பிற்குப் பின் நிறுவனத்தில் பெரும்பாலானோர்க்கு கொரொனா தொற்று. இரு ஊழியர்கள் உயிரிழந்தனர். எனக்கும் கோரொனா வந்து மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆனது. நல்ல வேளை எனக்கு ஒன்றும் ஆகவில்லை. இதில் “விசித்திரம்” என்னவெனில் முன்னாள் அதிகாரி / இந்நாள் முதலாளியை மட்டும் கொரோனா அண்டவேயில்லை. சக ஊழியர்களின் மரணச் செய்தியைக் கேட்ட பிறகு “இது தான் அந்தக் கணம்” என்று தோன்ற மின்னஞ்சலில் என் ராஜிநாமாவை அனுப்பி வைத்தேன்.

ஏறிக்கொண்டு போகும் வயது பற்றி குறிப்பில் கூறியிருப்பேன். வாஸ்தவத்தில் அது அத்தனை பெரிய தடையாக இருக்கவில்லை. நல்ல நிறுவனத்தில், நல்ல பதவி, நல்ல சம்பளத்தோடு வேறு வேலை உடனே கிடைத்தது. என் திறமையின் காரணமாக எனக்கு கிடைத்த வேலை என்பதான என் நம்பிக்கையை – “பெருந்தொற்றுக் காலத்தில் வேலை கிடைப்பதே கடினம் ; நீ அதிர்ஷ்டக் காரன்” என்று கூறி – லேசாகக் கீறினார்கள் சில நண்பர்கள். வாயு வெளியேறியது. பெருந்தொற்றுக் காலத்தில் நிறுவனங்களின் மோசமான நிதி நிலைமை காரணத்தால் வேலையை இழந்த சில நண்பர்கள் வாயிலிருந்தும் வேறு சில துவாரங்களிலிருந்தும் உஷ்ணப்புகை.

குறிப்பை ஓர் இடத்தில் முடித்ததை போல இங்கேயே என் தொழில் வாழ்க்கைக் கதையையும் முடிக்கலாமா? சுப முடிவு போல தோற்றமளிக்கும் இதை முடிவு என்று எண்ணினால் ஒரு feel good திரைப்படம் அளிக்கும் சுகத்தை உணரலாம். இது ஒரு வளைவுதான் சாலையின் முடிவல்ல என்று எண்ணிக் கொண்டு…ஓடும் பேருந்தில் ஏறி இருக்கையில் அமரும்வரை ஏற்படும் அதிர்வைப் போல் புது வேலையில் சில மாதங்களாய்த் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன்.

“உன் பதவி உன் வேலை பற்றிய விவரணத்தைத் தருகிறது என்று எண்ணிவிடாதே” என்று நிறுவனத் தலைவர் முதல் நாளில் சொன்னதிலிருந்தே பிடித்தது கிலி. “மேலே உயர உயர நிறுவனத்திற்கிருக்கும் உன் மீதான எதிர்பார்ப்பும் உன்னுடைய வேலை விவரணமும் வேறு வேறாகத் தான் இருக்கும்” என்று கூடுதல் வியாக்கியானம் வேறு. நேர் முகத்தின்போது என் கீழ் நான்கு பேர் வேலை செய்வார்கள் என்று கூறப்பட்டது. அந்த நால்வரை இங்கு வந்து சேர்ந்தது முதல் தேடிக் கொண்டிருக்கிறேன். அலுவலகத்தின் எந்த மூலையில் அவர்கள் ஒளிந்திருக்கிறார்களென்று தெரியவில்லை. ஒன்றுக்கு இரண்டு உயரதிகாரிகள் எனக்கு. இருவருக்கும் நான் பதில் சொல்ல வேண்டும். ஒருவர் வாயே திறக்கமாட்டார். எதுவும் கேட்க மாட்டார். வேலை பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிப்பது அவருடைய கடமையே இல்லை என்பது போல மௌனியாய் இருப்பதே அவர் வாடிக்கை. இன்னொரு அதிகாரியோ எப்போது பார்த்தாலும் “அது என்னாச்சு இது என்னாச்சு” ரகம். என்னைப் பேசவே விட மாட்டார். “உன் குதிரையைப் பிடித்து வைத்துக்கொள்” என்ற சொற்றொடரை அவரிடமிருந்து அடிக்கடி கேட்க வேண்டியிருக்கிறது. கடிவாளம் மாட்டிக்கொண்ட உணர்வுதான் எனக்கு.

“நம் அனுபவங்கள் நமக்கான தொடரும் case-study” என்ற குறிப்பின் கடைசி வரியை மூன்றரை வருடங்களுக்குப் பிறகு இப்போது படித்துப் பார்க்கிறபோது பாசாங்கு எழுத்து என்று தான் என்னை விமர்சித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அதை உண்மையாக உள் வாங்கிக் கொண்டவனாக இருந்தால் நான் ஏன் சென்ற வாரம் (புது வேலை காரணமாக எழும்) பதற்ற உணர்வுகளைத் தணிக்க உதவியை நாட வேண்டும்?. அரை மணி நேரம் நான் சொன்னதைக் கேட்ட ஆலோசகர் – “இப்போதைய அதிகாரிகளோ முந்தைய அதிகாரியோ – உங்களுள்ளிருக்கும் சின்னப்பையன் அவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறான் என்ற கேள்விக்கு பதில் காணாத வரை……” என்று சொல்லி நிறுத்தினார். அவர் என்ன சொல்லிவிடப்போகிறாரோ எனும் சிறு பதற்றத்தில் நான் அவரை நோக்கிக் கொண்டிருந்தேன். “வரப்போகும் சில வார அமர்வுகளில் இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்” என்று சொல்லி சிறு காகிதத்தில் ஆலோசனைக் கட்டணத்தை எழுதி என் கையில் திணித்தார்.

குறிப்பை அடக்கி வைத்திருந்த மின் கோப்பினை மின் மறுசுழற்சித் தொட்டிக்குள் தள்ளினேன். இந்தக் குறிப்பு இனிமேல் தேவைப்படாது. புதிதாக இன்னொரு குறிப்பெழுதும் வேளை வந்துவிட்டது.

நன்றி : சொல்வனம்

ஒரு தத்துவக் குறிப்பு – நட்பாஸ்

சிறப்புப் பதிவு : நட்பாஸ் 

திரு கணேஷ் வெங்கட்ராமன் அவர்களுக்கு,

சொல்வனம் இணைய இதழில் வந்த உங்கள் ‘ஒரு முடிவிலாக்  குறிப்பு’ (https://solvanam.com/2021/11/28/ஒரு-முடிவிலாக்-குறிப்பு/) படித்தேன். புனைவா வாழ்க்கைக் குறிப்பா தெரியவில்லை, ஆனால் அதன் வலிமை என்னையும் கொஞ்சம் வாழ்க்கையை பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இதோ அளிக்கிறேன், ஒரு தத்துவக் குறிப்பு.

நட்பாஸ் 

நம் சிக்கல்களுக்கு நம்மைத் தவிர வேறு யாரும் தீர்வு காண முடியாது. நம் பிரச்சினைகள்தான் நாம், இவற்றால்தான் நாம் நாமாய் இருக்கிறோம். எந்த ஒரு விஷயத்திலும் தனி நபராய் என் பிரச்சினை வேறு யாருக்கும் அதே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. சிலந்தி, வலை பின்னுவது போல் உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் செயல்களாலும் நம்மைச் சுற்றி நாமே கண்ணுக்குத் தெரியாத இழைகளால் ஒரு வலை பின்னிக் கொள்கிறோம். துரதிருஷ்டவசமாக, நாமே அதில் சிக்கிக் கொள்ளவும் செய்கிறோம். (நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் சிலந்தி வலை அதன் மனதின் பருண்ம வடிவம் என்று சொல்லும் இந்தக் கட்டுரையை பாருங்கள் – The Thoughts of a Spiderweb, Quanta Magazine https://www.quantamagazine.org/the-thoughts-of-a-spiderweb-20170523/)

நாம் பின்னிய வலைகளில் சிடுக்கு ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் நாம்தான், அது நம்மில் ஒரு அங்கமும்கூட. வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு அதன் வேர்கள் நம் இதயத்தோடு பிணைந்து நம்மில் ஒன்றியிருப்பது தெரிய வாய்ப்பில்லை. அவர் எவ்வளவு நியாயமாக பேசினாலும், அவரது தர்க்கம் எத்தனை வலுவானதாக இருந்தாலும், நம்மை அது காப்பாற்றக் கூடியதல்ல. நம் மனதுக்கு நியாயம் என்று தோன்றுவது, நம்மைச் சரியான திசையில் கொண்டு செல்லும் என்பது உறுதியல்ல. அறிவுரைகள் சரியாகவே இருந்தாலும் அது தீர்வு காண உதவாது. வேறொருவர் அப்படிச் செய்ய முடியும், ஆனால் என்னைப் போன்ற ஒருவனுக்கு இதில் என்ன தவறு, நம்மால் முடிகிற வேலைதானே என்று இருக்கும், இருந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது. காரணம், அவர் வேறு மாதிரி, நான் வேறு மாதிரி.

எனவே யாராக இருந்தாலும் இந்த புரிதலுடனும் தன்னடக்கத்துடனும்தான் நாம் தீர்வு சொல்ல வேண்டும்.

உலகில் வெற்றி பெற்றவர்களைப் பார்க்கிறோம் – விஞ்ஞானிகள், பெரும்பணக்காரர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல்வாதிகள். உலகில் தலை சிறந்த அறிவு, மிக அதிக பணம், ஆகச் சிறந்த புகழ், அதிகாரம், எதுவும் போதுமானதாக இல்லை. இவர்கள் வாழ்க்கையைப் பார்த்தால் மிக மோசமான மன வேதனை, காயங்கள், செயல்கள் இருக்கும். குடும்பத்தை கவனித்துக் கொள்ள மாட்டார்கள், மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள், மணமுறிவு, போதைப் பழக்கம், தற்கொலை. வெற்றியோ, அதன் பயன்களோ, உபகரணங்களோ மனதுக்கு மகிழ்ச்சியோ ஆறுதலோ தருவதற்கு தம்மளவில் போதுமானதாக இருப்பதில்லை.

அதே சமயம் தெருவில் நடைபாதை பிச்சைக்காரன் பின்னால் கூட ஒரு நாய் போகிறது, அவனும் அதற்கு ஏதோ ஒன்றை சாப்பிடப் போடுகிறான். மனதுக்கு நல்லது எது என்று பார்த்தால், தன்னலமின்மை என்றுதான் தோன்றுகிறது. நான் எனது என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதற்கு மாறாக, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்வை ஏதோ ஒரு வகையில் இன்னும் நன்றாக வாழத்தக்க ஒன்றாய் மாற்ற முயற்சி செய்பவர்கள். அவர்களுக்கும் மன அழுத்தம் வரலாம், அச்சம், அவநம்பிக்கை ஏற்படலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தை தவிக்க விடுவதில்லை, போதைக்கு அடிமையாவது இல்லை, தற்கொலை செய்து கொள்வதில்லை.

அகத்தின் மீது ஒரு போர்வை போல் இருப்பது சுயம். ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு வகையில் இறுக்கமாய் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலரே அதை மூச்சு முட்டும் அளவு இழுத்துப் போர்த்துக் கொள்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் அதை விட அபூர்வமானது நிர்வாணம். இந்த அபூர்வ மனிதர்கள் எல்லாம் பிறருக்கு என்று இருக்கிறார்கள், ஒருவன் பிறருக்கு தருவதை எல்லாம் தனக்கே தந்து கொள்கிறான் என்று புதிர் போடுகிறார்கள்.

பிறருக்காக வாழ்பவர்கள் வாழ்வில் எத்தனை நெருக்கடி இருந்தாலும், எத்தனை அவலம் இருந்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டு அதை அளவிட முடியாது. எவ்வளவு கொடுக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் வாழ்வின் அர்த்தம். ஒரு பணக்காரனைப் பற்றி, “He is worth Billions,” என்கிறோம். ஆனால் ஒரு அம்மா அல்லது அப்பாவைப் பற்றி, அவர்தான் குடும்பத்துக்கு எல்லாம் என்கிறோம். யார் மதிக்கிறார்களோ இல்லையோ, இவர்கள் வண்டி இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் என்ன செய்தோம் என்பது அல்ல, நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் இறுதி அளவை. செய்து முடிந்தவுடன் ஒன்றுமில்லை என்று கையைத் தட்டி விட்டுக் கொண்டே போக வேண்டியதுதான்.

செய்ததை வைத்துக் கொண்டிருப்பது, செய்ய வேண்டியதைப் பற்றிய கவலைகளை வளர்த்துக் கொண்டிருப்பது, வாழ்க்கையைச் சிக்கலாக்குகிறது. நம்மையே சிக்கலான ஆட்கள் ஆக்குகிறது. இதற்கு மாறாக, இப்போது என்ன இருக்கிறதோ, அதிலிருந்து பிறருக்கு கொடுப்பது, நம்மை விடுவிக்கிறது. என்ன செய்வது பிடித்திருக்கிறதோ, எது சுலபமாக இருக்கிறதோ, அதை நன்றாகச் செய்வது என்று இருக்கும்போது எல்லாம் சரியாய்த் தொடர்கின்றன. எனக்கு கணிதம் பிடித்திருக்கிறது, கவிதை பிடிக்கிறது என்றால் நான் கணித மேதையாகவோ நோபல் கவிஞனாகவோ ஆகாதபோதும், அதனால் ஒரு பைசா பிரயோசனப்படாதபோதும், என் ரசனை, என் நேசம், நான் கற்றுக் கொண்டது என் வாழ்வை ஏதோ ஒரு வகையில் வளமைப்படுத்துகிறது.

இதை எல்லாம் இன்னொருத்தார் எனக்கு வேறு சொற்களில் சொல்லலாம், ஆனால் உண்மையை நான் என் கண்களால் காண வேண்டும், என் இதயம் கொண்டு நான் உணர வேண்டும். அதுதான் உள்ளே இறங்கும், எனக்கு உதவும். பிறர் சொல்வதல்ல, நானே கற்றுக் கொள்வது.

நாமே இவ்வுலகம். நமதே இவ்வுலகம். நாம் இவ்வுலகின் நாயகர்கள். நம்மைப் பற்றி மட்டுமே நினைத்து இதை நாசமாக்கிக் கொள்ளலாம், நம்மைக் குறைத்துக் கொண்டு பிறருக்கு இடம் கொடுத்து, இதை நல்லதாக்கிக் கொள்ளலாம். பெரிய பெரிய விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதில்லை. குறுகிய மானப்பான்மையிலும் உணர்வின்மையிலும் நம்மையொத்த இந்த தன்னலம் கொண்டு உழலும் அவல மனிதர்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய நன்மையும் மாற்றம் அளிக்கும்.

இந்த அர்த்தத்தில்தான் பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொண்டதாகிறது. நம் வாழ்வு இவ்வாறுதான் செழுமையடைகிறது. பணத்தால் அல்ல, புகழால் அல்ல, அறிவால் அல்ல, சக மனித உறவுகளில்தான் வாழ்வின் மதிப்பு கூடுகிறது. இதயத்தில் என்ன இருக்கிறது, அதிலிருந்து என்ன வருகிறது என்பதுதான் கேள்வி. ஏனெனில், இதயம்தான் காயப்படுகிறது, தனிமையை உணர்கிறது, வலியால் துடிக்கிறது. பிறரை இணைத்துக் கொள்வதில், இன்னும் விரிவதில், ஆழப்படுவதில் அது குணமடைகிறது. 

முழுவதும் நீலம்

முன்னர் அனிமேக்கள் என்றாலே ஓர் ஒவ்வாமை எனக்கிருந்தது. என் புதல்விகள் இருவரும் இருபத்தி நான்கு மணி நேரமும் ரத்தமாய்ச் சொட்டும் அனிமேக்களை அலுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை கொடூரமான அனிமேக்களைப் பார்ப்பதனால்தான் ஜப்பானில் அதிகம் பேர் தற்கோலை செய்து கொள்கிறார்கள் என்ற என் உலர் நகைச்சுவை அனுமானத்தை அவர்கள் முன் வைத்த போது சின்னவள் சொன்னாள் – அருமையான ஐடியா அப்பா! கிப்லி ஸ்டூடியோக்காரர்கள் இதே கருப்பொருளில் கூட ஓர் அனிமே தயாரித்துவிடுவார்கள்-என்றாள். இதெல்லாம்  நான் “பர்ஃபெக்ட் ப்ளூ” அனிமே திரைப்படத்தைப் பார்க்கும் வரைதான். 

புதல்விகளுடன் அதிக நேரம் செலவழிப்பதில்லை என்று என்னிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் மனைவி. அவரின் வாதங்களுக்கு எதிர் வாதங்களை அடுக்க முடியாமல் நான் திணறிக் கொண்டிருந்த போது உதவிக்கு வந்தாள் மூத்தவள். தன் மடிக்கணினியைத் தொலைக்காட்சியோடு இணைத்து ஒன்றன்பின் ஒன்றாக டிஜிடல் விளம்பர பேனர்கள்  குதித்துக் கொண்டிருக்கும் ஓர் இணைய தளத்திற்கு ஏகி “பர்ஃபெக்ட் ப்ளூ” படத்தை ஓட்டினாள். நான் மட்டுமல்ல மனைவியும் சண்டையிடும் ஆர்வத்தை இழந்து அமைதியானார். சின்னவளும் எங்களுடன் சேர்ந்து கொண்டாள். இப்படத்தை அவள் பல முறை பாரத்திருக்கிறாள். ஆனாலும் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு குறிப்பும் தராமல் முதல் தடவையாக படத்தைப் பார்க்கும் அதே ஆர்வத்துடன் பார்த்தாள். 

கற்பனாவாதம் – யதார்த்தம் இரண்டையும் சேர்த்துக் கட்டிய திரைக்கதையமைப்பு. இரண்டும் சரிவிகிதத்தில் கலந்து எது கற்பனாவாதம் எது யதார்த்தம் என்ற குழப்பத்தை எழுப்பியவாறே காட்சிகள் பயணப்படும். அனிமேக்களின் பலம் அவற்றில் பயன்படுத்தப்படும் நிறங்கள். அமெரிக்க சூப்பர் ஹீரோ கார்ட்டூன்களிடமிருந்து மிகவும் மாறுபட்ட அனுபவத்தை அனிமேக்கள் நமக்குத் தருவதில் வெற்றி பெறுவதன் காரணம் இருண்மைக் கருக்கள் மட்டுமல்ல ; அனிமேக்களின் வியக்கத்தக்க நிறக்கூட்டும் தான்.  பெரும்பாலான அனிமேக்களில் செயற்திறனுடன் பயன்படுத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட உயிரூட்டல் (limited animation) எனும் உத்தி அனிமேவை கார்ட்டூன்களிலிருந்து வித்தியாசப்படுத்தும் இன்னோர் அம்சம். இயக்கமும் நகர்வும் கார்ட்டூனுக்கு இன்றியமையாதவை. மட்டுப்படுத்தப்பட்ட உயிரூட்டல் உத்தி வாயிலாக கலைத் தரத்தை நிலை நிறுத்துபவை அனிமே. 

அனிமேக்களையும் கார்ட்டூனையும் ஒப்பிடுவதே பிழையானது என்றாள் பெரியவள். “கார்ட்டூன்கள் பொதுவாக ஓவியங்களின் முன்மாதிரிகளாகவோ ஆய்வுகளுக்கெனவோ பயன்படுத்தப்பட்டன. இப்போதெல்லாம் நகைச்சுவை மற்றும் நையாண்டிக்கான கேலிச்சித்திரங்களாகவே கார்ட்டூன்கள் வரையப்படுகின்றன. அனிமேக்கள் பெரும்பாலும் வாழ்க்கைச் சிக்கல்கள் அல்லது மனித உணர்வுகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள விஷயங்களில் கவனம் செலுத்துக்கின்றன. வன்முறை சார்ந்த பாலியல் சார்ந்த கருப்பொருள்களை அனிமேக்கள் தைரியமாகச் சித்திரிக்கின்றன. கார்ட்டூன்களின் முக்கியக் குறிக்கோள் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதே” – பரவாயில்லையே, நிறைய யோசித்து வைத்திருக்கிறார்களே புதல்விகள் என்று அப்புறம் பெருமிதப்பட்டுக் கொள்ளலாமென்று படத்தில் கவனம் செலுத்தலானேன்.

பாப் பாடகியாய் பிரபலமடைந்த மீமா நடிகையாக முடிவு செய்கிறாள். நடிப்பு அவ்வளவு எளிதாக இல்லை. திரும்பத் திரும்ப டேக் வாங்கும் போது அவள் சலிப்படைகிறாள். பாப் பாடகியாக இருந்த நாட்களை அசை போடுவது நிற்கவேயில்லை. முன்னாள் பாடகி தன் முடிவில் அவ்வப்போது சந்தேகம் கொண்டாலும் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை. நடிக்கும் டீ வி தொடரில் குழு வன்புணர்வுக் காட்சியில் நடிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறாள்.  வனபுணர்வுக் காட்சியில் நடிப்பது அவளின் இமேஜுக்கு குழி பறிக்கும் என்ற அவளுடைய மேனேஜர் ரூமியின் அறிவுறுத்தலை உதாசீனப்படுத்திவிட்டு துணிச்சலாக நடிக்கத் தயாராகிறாள். யதார்த்தத்தில் மீமா எடுக்கும் முடிவுகள் அவளின் அகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தன்னுடைய பாப் பாடகி பிம்பம் அவளைத் தொடர்ந்து அலைக்கழிப்பதாக உணர்கிறாள். அவளுடைய வெறி பிடித்த ரசிகன் ஒருவன் பின் தொடர்ந்தவாறிருக்கிறான். மொட்டைக் கடிதம், மிரட்டல்கள், தபால் வெடிகுண்டு என்று அவனின் stalking மிகத் தீவிரமடைகின்றது. மேனேஜர் ரூமிக்கு மீமாவின் முடிவுகள் ஏமாற்றத்தை அளிக்கின்றன. உடையில்லாமல் கவர்ச்சி போட்டோக்கள் எடுத்துக் கொள்கிறாள் மீமா. முக்கியப் பத்திரிக்கைகளின் நடுப்பக்கங்களில் மீமாவின் புகைப்படங்கள் வெளியாகி மிக்க வரவேற்பு பெறுகின்றன. வெறிபிடித்த ரசிகனுக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. ரூமி வேலையை விட்டு நின்று கொள்கிறாள். கற்பனை – யதார்த்தம் இரண்டுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது மீமாவுக்கு. அவளுடைய ஏஜன்ட், கவர்ச்சிப் படங்கள் எடுத்த போட்டோகிராஃபர் என ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள்.  தூங்கி விழித்தவுடன் என்ன கனவு கண்டோம் என்ற தெளிவிலாமல் யதார்த்தத்தினுள் விழித்திருக்கிறோமா அல்லது கனவிலேயே விழித்திருக்கிறோமா எனும் மயக்கத்தில் புழங்குகிறாள் மீமா.  முகம் பார்க்கும் கண்ணாடி வழியே, அறையில் விளக்கொளிரும் இரவு நேரத்தில் ஜன்னல் கண்ணாடியினூடே அவளின் பாப் பாடகி ஆளுமை சதா பரிகசித்தவாறு இருக்கிறது. அவள் நடிக்கும் தொலைக்காட்சித் தொடரின் சம்பவங்களும் யதார்த்தத்தின் சம்பவங்களோடு இணைந்து கொள்கின்றன.

கிரகித்துக் கொள்ளவும் உற்றுக் கவனிக்கவும் இப்படத்தில் நிறைய உள்ளன. பித்துப் பிடிக்க வைக்கும் எடிட்டிங் மற்றும் சற்றும் எதிர்பாராத திருப்பங்கள் வாயிலாக மிக அனுபவம் வாய்ந்த திரில்லர் பட பார்வையாளர்களையும் பர்ஃபெக்ட் ப்ளூ திக்குமுக்காட வைக்கும். 

அன்றைய நாளில் நடந்த வருத்தமான நிகழ்வுகளை மனக்கவலையுடன் எண்ணியவாறே கதையின் மூலப்பாத்திரம் படுக்கையில் குப்புறப்படுத்திருக்கிறது. அங்குமிங்குமாக பொருட்கள் (அழகாக) சீர் குலைந்து கிடக்கின்றன. அறையின் ஓரத்தில் உள்ள மீன் தொட்டிக்குள் நீந்தும் மீன்களும் நகராமல் அடிவாரத்தில் இருந்த படி கண்ணாடியூடாக மூல பாத்திரத்தை நோக்கிக் கொண்டிருக்கின்றன. அறையின் கூரையின் வழியாக காமிரா படுக்கையை நோக்கினால் எப்படித் தெரியுமோ அதே போல ஒரு பறவைப் பார்வையாக அறை முழுதும் நமக்குக் காட்சிப்படுத்தப் படுகிறது. தன்னை யாரோ stalk செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கவலையில் இருக்கும் மூல பாத்திரத்தை கிராபிக் சித்திரிப்பு வாயிலாக பார்வையாளர்களையே stalk செய்ய வைக்கிறது திரைப்படம். இந்த ஓவியத்தை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது – இது தான் என் வாட்ஸப் டிபி – என்றாள் சின்னவள்.

படத்தின் நடுவே சின்னவள் சொன்ன ஒரு குறிப்பு என்னைத் தொந்தரவு செய்தது. சற்று ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. கடந்த பத்தாண்டுகளில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமொன்று இந்த பர்பெக்ட் ப்ளூவின் தழுவல் என்றாள். அவள் குறிப்பிட்டது டேரன் அரனோஃப்ஸ்கியின் பிளாக் ஸ்வான் படத்தை. பிளாக் ஸ்வான் பற்றி அந்தக் காலத்தில் கட்டுரை கூட எழுதியுள்ளேன். (ப்ளாக் ஸ்வான்))

ஒரு பெண் கலைஞர் அவரின் தொழில் வாழ்க்கையின் அதிகரிக்கும் அழுத்தங்களின் விளைவால் யதார்த்தத்தின் பிடியை இழந்து பித்து நிலைக்குள் வீழ்கிறாள். இது 2010இல் வெளியான பிளாக் ஸ்வானின் கதைச் சுருக்கம் மட்டுமில்லை. பிளாக் ஸ்வான் வெளியாவதற்கு பதிமூன்று வருடங்கள் முன்னதாக ஜப்பானில் வெளிவந்த பர்ஃபெக்ட் ப்ளுவின் கதைச் சுருக்கமும் இதுவே தான். 

அனிமே படங்களின் விசிறியாக இல்லாதவர்கள் பர்ஃபெக்ட் ப்ளூ படம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பது கூட அரிது. ஆனால் சடோஷி கோன் எனும் இயக்குனரின் மாஸ்டர் பீஸ் இது என்று புகழப்படுகிறது, சைகலாஜிகல் த்ரில்லர் வகைமைப் படங்களின் ரசிகர்களுக்கு பர்ஃபெக்ட் ப்ளூ முக்கியமான படமாகக் கொண்டாடப்படுகிறது. ப்ளாக் ஸ்வானும் ஒரு மைல்கல் படமாகக் கருதப்படுகிறது. நடிகை நடலி போர்ட்மேனுக்கு அகாடமி விருதைப் பெற்றுத் தந்ததோடு விமர்சகர்களின் பாராட்டு, வணிக ரீதியான வெற்றி – இரண்டையும் ஒருங்கே பெற்ற படம்.

கரு, முக்கியப் பாத்திரப் படைப்பு மற்றும் விஷுவல்கள் – இவ்விஷயங்களில் இரண்டு கதைகளுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை. பிளாக் ஸ்வான் இயக்குனர் டேரன் இரு படங்களுக்கிடையிலான ஒற்றுமைகளை ஏற்கிறார். ஆனால் பர்பெக்ட் ப்ளூவின் தாக்கம் பிளாக் ஸ்வான் என்பதை மறுக்கிறார்.

பிளாக் ஸ்வான் நினா என்னும் பால்லரீனாவின் கதையைச் சொல்கிறது. ஸ்வான் லேக் என்னும் நாட்டிய நாடகத்தின் மூல பாத்திரத்தைப் பெறும் போட்டியில் பங்கேற்கும்போது தன் இயல்பு நிலையைத் தக்க வைக்கப் போராடுகிறாள் நினா. பர்பெக்ட் ப்ளூவின் மீமா பாப் பிரபலம் என்னும் தன் நிலையைத் துறந்து தீவிர நடிகையாகும் முயற்சியில் யதார்த்தத்தின் பிடியை இழக்கிறாள். மேலோட்டமாக இரு வெவ்வேறு பாத்திரங்களின் வேறுபட்ட கதையைச் சொன்னாலும் இரண்டு படங்களின் கருவும் சொல்ல வரும் கருத்தும் மிகவும் ஒத்திருக்கின்றன.

இரண்டு கதைகளும் ஒரே மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளன.  இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் அழுத்தமான சூழல்களைச் சந்திக்கின்றன. இது அவர்களின் அடையாளம் குறித்த கேள்விகளை அவர்களுள் எழுப்புவதோடு இறுதியில் அவர்களின் ஆன்மாவை குழப்பும் ஓர் doppelganger-ஐ உருவாக்குகிறது. நினா ஒரு நடன கலைஞராக இருப்பதன் அழுத்தத்தால் பாதிக்கப்படுவது போல, மீமாவும் ஜப்பானிய பிரபலம் எனும் தகுதியின் கடுமையான எதிர்பார்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இரு பாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்னைகள் தொழில் வாழ்க்கையிலும் கசிவது இரண்டு படங்களில் காணப்படும் இன்னொரு ஒற்றுமை. நினாவைப் பொறுத்தவரை இது அவளின் தாயின் ரூபத்தில் வருகிறது. மீமாவின் சூழ்நிலையில் ஒரு ஸ்டாக்கர் ரசிகர் வாயிலாக வருகிறது. தமக்கு நெருக்கமானவர்களால் கட்டமைக்கப்பட்ட innocent என்னும் பிம்பத்தை உடைத்தெறிந்து இரு பாத்திரங்களுமே படங்களின் குறிப்பிட்ட கட்டத்தில் பாலியல் விழிப்புணர்வை எய்துகின்றன. இரண்டு நாயகிகளும் தமக்குத் தாமே ஓர் உளவியல் போரில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக கற்பனைக்கும் யதார்த்தத்துக்குமிடையிலான கோடுகளை மங்கவைக்கும் மாயத்தோற்றம் ஏற்படுகிறது.

படத்தைப் பார்த்து முடித்தவுடன் சற்று நேரத்துக்கு அலசல் தொடர்ந்தது. பெரியவள் முன் வைத்த முன்னோக்கு படத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. – “நான் இதை coming of age வகைமை படமாகப் பார்க்கிறேன். இளம் பாப் பாடகியின் தொழில் வாழ்க்கை எத்தனை நாள் நீடிக்கும்? நடிப்புத் தொழில் மீமாவின் நடைமுறைத் தேர்வு. மேலதிக புகழும் அங்கிகாரமும் பெறுவதற்கான வழி. ஆனால் இந்த மாற்றம் எளிதானதல்ல. பழைய அனுபவங்களின் சாதனையுணர்வை புதுத் தொழில் உடனடியாக கொடுத்துவிடாது. பழைய தொழில் வாழ்க்கை பற்றிய இழப்புணர்வில் ஆழ்ந்திருப்பது புது யதார்த்தத்தை ஏற்பதாகாது. அந்த இழப்புணர்விலிருந்து மீளாமல் புதுத் தொழிலின் சாத்தியங்களை அறுவடை செய்ய இயலாது. பிளாக் ஸ்வானிலிருந்து இவ்விதத்தில் இப்படம் மாறுபடுகிறது என்பது என் எண்ணம்.”

பத்தாண்டுகளுக்கு மேலாக பணி புரிந்த நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் உயர் பதவியேற்றுள்ள நான் இந்த மாற்றத்தை எப்படி எதிர்கொள்கிறேன்? பரிச்சயமான சூழலில் நன்கு பழக்கமான சக-அலுவலர்களுடன் வேலை செய்வது ஏறத்தாழ இரண்டாம் இயல்பாக மாறி விடுகிறது. செய்து முடித்த வெற்றிகரமான பணிகள், அடைந்த இலக்குகள், கிடைத்த அங்கிகாரம் – இவையெல்லாம் நினைவில் அடிக்கடி வருகின்றன. பழகிய நண்பர்கள் தொடர்பு கொள்ளும் போது நினைவேக்கத்துடன் பழைய அனுபவங்களைப் பேசுதல் ஒரு விதத்தில் அபத்தமாகவும் உள்ளது. நானே விரும்பி எடுத்துக்கொண்ட வாய்ப்புதானே இது? புதிது புதிதாகத் தானே தெரியும்? ஆனாலும் புது அலுவலகத்தின் எந்த விஷயத்தையும் பழைய அனுபவங்களோடு ஒப்பிடுதல் சதா மனதில் நிகழ்ந்தவாறுள்ளது. புது சகாக்களை பழைய சகாக்களுடன் புது வேலையமைப்புகளை பழையவற்றுடன்….ஒப்பீடுகள் ஓய்வதில்லை. நாம் புது நிறுவனத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவோமா…நம் வேலைக்கு அங்கிகாரம் கிட்டுமா…நம் அதிகாரிகள் நம்மை அமைதியாய் வேலை செய்ய விடுவார்களா….புதிய அதிகாரி புது சகாக்களும் நம்மைப் பற்றி மட்டமாக எடை போடுகிறார்களோ….நான் எப்போது தப்பு செய்வேன் என்று ஆர்வமாய் காத்திருக்கிறார்களோ…தோல்விப்பயம் நம்மை பிடித்தாட்டுகிறதே….பாதுகாப்பின்மை நம் குரல் வளையைக் கவ்வுகிறதே…கோபமும் உதவியற்ற உணர்வும் ஒருசேர கோர தாண்டவம் ஆடுகின்றனவே….முகத்தில் கடிதத்தை வீசியெறிந்துவிட்டு நகர்ந்துவிடலாமா….தோன்றும் எல்லா எண்ணங்களையும் செயற்படுத்தாமல் இருப்பது எத்தனை பெரிய வரப்பிரசாதம்! நினா யதார்த்தத்திலிருந்து தூர தூர விலகி்…தமக்குள்ளேயே போரில் ஈடுபட்டு…பிடியிழந்து…திரும்பவியலா பாதையில் செல்வது போல நாம் எண்ணுகின்றவற்றுக்கும் நமக்கமையும் யதார்த்தத்துக்கும் இடையிலான வெளி அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுவது மாற்றத்தை நாம் ஏற்றுக் கொள்வதற்கான முதல் புள்ளி. வேலை மாற்றம் மட்டுமில்லை…வாழ்வின் எந்த மாற்றமும் எளிதானதல்ல…மீமாவைத் தள்ளாடச் செய்த புது மாற்றம், புதுத் தெரிவு – நடிப்புத் தொழில் என்றில்லை, எந்த வித மாற்றமாயிருந்தாலும் – நம்மையும் தள்ளாட வைக்கும்….

“அப்பா…அப்பா….” – சத்தம் போட்டு அழைத்து மனைவி கொடுத்தனுப்பிய தேநீரை என் கையில் கொடுத்தாள் சின்னவள்.

“டேரன் அரனோஃப்ஸ்கி சுட்டதுக்கே இப்படி அதிர்ச்சி ஆனா எப்படி? நோலனும் சடோஷி கோன் கிட்டர்ந்து சுட்டுருக்கார்…உனக்கு புடிச்ச இன்செப்ஷன் படத்துக்கு ‘இன்ஸ்பிரேஷன்’ எதுன்னு நெனைக்கிற? சடோஷி கோன் இயக்கிய அனிமே படம் Paprika தான்….அடுத்த அதிர்ச்சிக்கு தயாரா?” – என்று கேட்டாள்.

நன்றி : கனலி

மெக்கானிக்

உணர்வுக்கு ஓர் அங்கம்
சிந்தனைக்கு இன்னொன்று
என இருப்பது
வடிவக் கோளாறு
ஒருவருக்கொருவர்
பேசிக்கொள்ளாத
சக ஊழியர் போல்
இதயமும்
மூளையும்
ஆளுக்கொரு திசையில்
இயங்குவது ஒரு

தொழில் நுட்பக் குறைபாடு

இதயம் ஒரு லேசான பொருள்
அதிக மகிழ்ச்சியில்
அதனால் இருக்க முடியாது
அதிக துக்கமும்
அதனால் தாள முடியாது
இவ்விரண்டுமற்று
இருந்துவிட்டுப் போகலாம்
என்றால்
மகிழ்ச்சி-துக்கம்
எனப் பெயரிட்டு
அனுபவங்களின் மேல்
அவற்றை ஏற்றி
யாரோ
விளையாடிக் கொண்டேயிருக்கிறார்கள்

ஶ்ரீ ஆனந்தமயி மா-வின் குட்டிக்கதைகள்

நெடுங்காலமாக சாதனாவில் ஈடுபட்ட சாதகனின் மேல் கருணை கூர்ந்து கடவுள் அவன் முன் பிரசன்னமாகிறார். “உனக்கு வேண்டும் வரத்தை கேள்” என்கிறார். சாதகன் அதற்கு பதிலளிக்கிறான் : “எப்போதெல்லாம் நான் உம்மை காண விரும்புகிறேனோ அப்போதெல்லாம் நீங்கள் எனக்கு தரிசனம் தர வேண்டும்” “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடவுள் அவன் பார்வையிலிருந்து மறைகிறார். பக்தன் மிக்க ஆனந்தத்தில் லயிக்கிறான். எப்போதெல்லாம் அவன் விரும்புகிறானோ கடவுள் தோன்றிய வண்ணம் இருக்கிறார். ஒரு நாள் சாதகன் சொல்கிறான் : “என்னை விட்டு விலகாமல் என்னுடனேயே நீங்கள் இருக்க வேண்டும்” இந்த வரமும் அவனுக்கு வழங்கப்படுகிறது. கடவுள் அவனுடனேயே இரவும் பகலும் இருக்கிறார். சாதகன் அளவிலா ஆனந்தத்தில் மூழ்கிக் கிடக்கிறான். இதன் விளைவு? ஒரு நாள் அவனுள் ஒரு புது எண்ணம் பிறக்கிறது. “கடவுள் என் முன்னம் தோன்றுவதற்கு முன்னர் அவரைக் காணும் ஆழமான ஆவல் அதிகமாய் இருந்தது. இப்போது அப்படி இல்லை. அந்த தீவிரமான விழைவுணர்வை நான் இழந்திருக்கிறேன்” மீண்டும் கடவுளிடம் பிரார்த்திக்கிறான். “உன்னைப் பிரிந்த போது நானுற்ற ஆழ்ந்த ஏக்கத்தை மீண்டும் எனக்குக் கொடு” அவன் கேட்டது அருளப்படுகிறது.


+++++


ஆசிரம வாசலை  இரு மருங்கிலும் மரத்தில் செதுக்கப்பட்ட இரு புலிகள் காவல் காத்துக் கொண்டிருந்தன. இரையின் மீது பாயத் தயாராக இருப்பது போல் அவை தத்ரூபமாக வண்ணமிடப்பட்டிருந்தன. ஒரு முறை ஆசிரமத்துக்கு வெளியே ஒரு நாய் பசியாறுவதற்காக வந்தது. ஆனந்தமயி மா மரப்புலிகளுக்கருகே நாய்க்காக உணவு வைத்தார். நாய் குழம்பியது போல் காணப்பட்டது. உணவை சாப்பிட அதற்கு ஆவல்தான்.ஆனால் புலிகளின் மீதான பயம் அந்த உணவை சாப்பிடவிடாமல் தடுத்தது. நாயின் நிலைமை முக்கால்வாசி மனிதர்களின் நிலை போலவே கற்பனை பயங்களினால் கட்டுண்டிருப்பதாக ஆனந்தமயி மா நகைச்சுவையாகச் சொன்னார்.


+++++


வணிகன் ஒருவன் வியாபார காரணங்களுக்காக பயணமானான். அவனுடன் வியாபாரி என்ற போர்வையில் திருடன் ஒருவன் வணிகனிடமிருந்து வழிப்பறி செய்யும் எண்ணத்துடன் கூடவே சென்றான். ஒவ்வொரு காலையும் முந்தைய நாளிரவு அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து அன்றைய அலுவல்களுக்காக கிளம்பும் போது வணிகன் தன்னிடமிருக்கும் பணத்தை பகீரங்கமாக எண்ணி தன் சட்டைப்பைக்குள் போட்டுக் கொள்வது வழக்கம். சந்தேகப்படாதவன் போல் இரவில் வணிகன் தூங்கச் செல்வான். அவன் தூங்கிய பிறகு திருடன் வணிகனின் பயணச்சுமைகளை சோதனை போடுவான். பைகளை நோண்டுவான். ஆனால் அவனால் வணிகனின் பணத்தை கண்டுபிடிக்கவே முடியாது. பல இரவுகள் அவன் முயற்சி செய்தும் நோக்கம் நிறைவேறாதது திருடனுக்கு எரிச்சலேற்படுத்தியது. இறுதியில் முயற்சியைக் கைவிட்டு தன்னுடைய நோக்கத்தை ஒப்புக்கொண்டு இத்தனை வெற்றிகரமாக பணத்தை எங்கு ஒளித்து வைத்திருந்தான் என்பதை வணிகனிடம் கேட்டான். வணிகன் சொன்னான் : “துவக்கத்தில் இருந்தே உன் நோக்கத்தை நான் அறிவேன். ஆகவே, தினமும் என் பணத்தை உன் தலையணைக்கடியில் வைத்து விடுவேன். அந்த ஒரு இடத்தில் மட்டும் நீ என் பணத்தை தேடவே மாட்டாய் என்பதால் என்னால் நிம்மதியாய் தூங்க முடிந்து”




ஞானியும் குடிகாரனும் – ரூமி

ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்
மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மா
ஒரு பிச்சைக்காரனைப்போல்
நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்
அநாதியாய்
சுதந்திரமாய்

ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்
சதுரங்கப்பலகையில்
எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டு
வட்டமிடுகின்றன அவை

காதல் உனது மையமெனில்
உன் விரல்களில் மோதிரமிடப்படும்

அந்திப் பூச்சியினுள்
ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது

ஞானியொருவன்
தூய இன்மையின்
அழிக்கும் முனையைத் தொடுகிறான்

குடிகாரனொருவன்
சிறுநீர் கழிப்பதை
பாவமன்னிப்பாகக் கருதுகிறான்
பிரபுவே, என்னிடமிருந்து
அசுத்தங்களை எடுத்துவிடுங்கள்

பிரபு பதிலளித்தார்
முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்
புரிந்துகொள்
உனது சாவி வளைந்திருந்தால்
பூட்டு திறக்காது

நான் அமைதியானேன்
அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்
எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான்