இலைகள், மலர்கள், மரங்கள்

• •

தீர்வற்ற கேள்விகள்: செகாவ்வின் ‘வார்ட் எண் 6’

வார்ட் எண் 6 செகாவ்வின் மிகப் பிரசித்தமான குறுநாவல். இரண்டு அமர்வுகளில் வாசித்து முடித்தேன்; அடர்த்தியான உள்ளடக்கம் கொண்டது. இவானும் மருத்துவர் ஆண்ட்ரேவும் சந்திக்கும் கட்டம் வரை சிதறலாக நகர்ந்து கொண்டிருக்கும் கதை, அந்தச் சந்திப்பில் மையம் கொள்கிறது. மனநல வார்டு எண் 6-இல் இருக்கும் ஐவரில் இவான் ஒருவன். ஆண்ட்ரே அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர். நோயாளிகளைச் சந்திப்பதைக் குறைத்துக் கொண்ட ஆண்ட்ரே, நூல் வாசிப்பதிலும் பீர் அருந்துவதிலும் நேரத்தைக் கழிப்பவர்; தத்துவ நோக்கத்துடன் வாழ்வை உன்னிப்பாகக் கவனிப்பவர். தன்னைச் சுற்றி மருத்துவமனையில் நிகழும் முறைகேடுகளைக் கவனிப்பதில் அவருக்கு ஈடுபாடு இல்லை. மருத்துவத் துறையில் நிகழ்ந்து வரும் முன்னேற்றங்கள், முக்கிய நகரங்களிலிருந்து மிகத் தொலைவில் உள்ள தமது மாநில நகரத்துக்கு எப்போது வந்தடையும் என்ற யோசனையிலேயே ஆழ்ந்திருப்பார்.

இவானுடனான முதல் உரையாடலில் பின்வரும் வரிகளை இவான் சொல்வதாக வரும் –

“தாஸ்தோயெவ்ஸ்கியோ வோல்டேரோ – யாரோ ஒருவர் – தமது படைப்புகளில், கடவுள் என்று ஒருவர் இல்லையென்றால், மனிதர்களே அவரை உருவாக்கியிருப்பார்கள் என்று கூறியுள்ளனர்.”

‘வார்ட் எண் 6’ குறுநாவலைச் செகாவ் எழுதுவதற்கு ஏறக்குறையப் பத்தாண்டுகள் முன்பு மறைந்துவிட்டிருந்த தாஸ்தோயெவ்ஸ்கியை இவ்வரிகளின் வழியே விமர்சிக்கிறாரோ என்று முதலில் நினைத்தேன். ஆனால் அது நேரடியான விமர்சனம் அல்ல; நுட்பமான ஒன்று என்று கதையைப் படித்த பின் விளங்கியது. இவானுக்கும் ஆண்ட்ரேவுக்கும் இடையிலான தத்துவ உரையாடல்தான் கதையின் ஆற்றல் மிக்க பகுதி. இவான் திமித்ரிச் குணத்தால் தாஸ்தோயெவ்ஸ்கியப் பாத்திரம். காய்ச்சல் பிடித்தவன் போலக் கொதிப்பவன்; சமூகத்தின் அநீதியையும் பைத்தியக்காரத்தனத்தையும் பற்றி நீண்ட தனிப்பேச்சுகளில் முழங்குபவன். இந்தக் குறுநாவல் குறித்த சில ஆய்வுக்கட்டுரைகள், இவானை “நிலவறை மனிதனின்” தூரத்து உறவினன் என்று கூட வகைப்படுத்தலாம் என்கின்றன. தாஸ்தோயெவ்ஸ்கியின் Notes from Underground நாவலில் வரும் பாத்திரந்தான் இந்த நிலவறை மனிதன்.

ஆனால் ஆண்ட்ரேவைப் போலத் துன்பத்தைத் தத்துவமாக்கி அதிலிருந்து தப்பிக்கிறவன் அல்ல இவான். ஆண்ட்ரேதான் வலியை நம் மனப்பார்வையின் விளைவு என்று வர்ணிப்பார்; ஞானி ஆய்வறையிலும் பித்தர் விடுதியிலும் ஒரே நிலையில் இருப்பான் என்ற ஸ்டாயிக் இலட்சியத்தைப் (Stoic Ideal) போதிப்பார். இவானின் பதில்தான் கதையின் இதயம். வலிக்குக் கண்ணீராலும் அழுகையாலும், இழிவுக்குக் கோபத்தாலும் எதிர்வினை செய்வதே வாழ்க்கை என்கிறான் இவான். அவனுடைய வாதம் கோட்பாட்டிலிருந்து பிறக்கவில்லை; உடலிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் பிறக்கிறது. துன்பத்தினால் மீட்சி கிடைக்கும் என்ற தத்துவத்தை அவன் நம்பவில்லை. ஆகவே இவான் தாஸ்தோயெவ்ஸ்கியப் பேரார்வத்தைப் பேசினாலும், தாஸ்தோயெவ்ஸ்கியத்தனமான ஒரு போக்கை எதிர்த்தே வாதாடுகிறான். இன்னும் நுட்பமாக வாசிக்கையில், கதையின் முதன்மை இலக்கு தாஸ்தோயெவ்ஸ்கியை விட, அக்காலத்தில் செகாவ் மல்லுக்கட்டிய ஸ்டாயிக் மௌனவாதமும் தால்ஸ்தாயின் எதிர்ப்பின்மைக் கொள்கையுந்தான் என்று தோன்றுகிறது.

செகாவ் இவானையும் வெல்ல விடுவதில்லை; அவன் வார்டுக்குள்ளேயே நொறுங்கிப் போகிறான். ஆண்ட்ரேவும் அதே வார்டில் அடைக்கப்பட்டு அடி வாங்கி இறக்கிறார். தத்துவவாதியின் விலகலும் துன்பப்படுபவனின் கோபமும் – இரண்டில் எதுவும் யாரையும் காப்பற்றுவதில்லை.

‘வார்ட் எண் 6’-ஐத் தாஸ்தோயெவ்ஸ்கிக்கு எதிரான ஒரு படைப்பாக மட்டும் வாசிப்பது அதன் ஆழத்தைக் குறைக்கும். செகாவ் தாஸ்தோயெவ்ஸ்கியை நிராகரிப்பதில்லை; அவர் எழுப்பிய கேள்வியை எடுத்துக் கொள்கிறார்:

துன்பத்தின் முன்னால் மனிதன் எப்படி வாழ வேண்டும்?

தாஸ்தோயெவ்ஸ்கி அந்தக் கேள்வியை ஆன்மீகத்திற்கும் மீட்சிக்கும் அழைத்துச் செல்கிறார். ஆண்ட்ரே அதிலிருந்து தத்துவ விலகலைப் பரிந்துரைக்கிறார். இவான் அதற்கு எதிர்ப்பின் வழியாகப் பதிலளிக்கிறான். செகாவோ எந்தப் பதிலும் போதுமானதல்ல என்று காட்டுகிறார். இதுதான் செகாவ்வின் தனித்தன்மை. மனிதத் துன்பத்திற்கு அவர் ஒரு பெரிய தத்துவப் பொருளை வழங்குவதில்லை; அதே நேரத்தில் அதை வெறும் தனிப்பட்ட உணர்ச்சியாகவும் குறைத்துவிடுவதில்லை. மனிதனுக்கு வலிக்கிறது; மனிதன் கோபப்படுகிறான்; மனிதன் தத்துவம் பேசுகிறான். ஆனால் இறுதியில் அவன் அந்த உலகத்தின் அதிகாரங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் கட்டுப்பட வேண்டியிருக்கிறது. ‘வார்ட் எண் 6’ என்பது தாஸ்தோயெவ்ஸ்கி எழுப்பிய கேள்விக்குச் செகாவ் அளிக்கும் தீர்வற்ற பதில் என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

லெனின் இந்தக் குறுநாவலை வாசித்து மிகவும் அதிர்ந்து போனதாக, சோவியத் குறிப்பொன்றில் லெனினின் சகோதரி அன்னா உல்யானோவா கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கதையைப் படித்து முடித்த அன்று இரவு, ‘என்னால் அறைக்குள் தனியாக இருக்க முடியவில்லை; எழுந்து வெளியே சென்றேன். நானே வார்ட் எண் 6-க்குள் அடைக்கப்பட்டிருப்பதைப் போல உணர்ந்தேன்’ என்று லெனின் கூறியதாக அவர் நினைவுகூர்கிறார். லெனின் ‘வார்ட் எண் 6’-ஐ 1892–93 குளிர்காலத்தில் சாமாராவில் இருந்தபோது படித்ததாக அவருடைய வாழ்க்கை வரலாறு குறிப்பிடுகிறது.

‘வார்ட் எண் 6’-ஐத் த்சார் அரசின் குறியீடாகக் கருதி இதனை ஒரு political allegory-ஆக வாசிப்பது இன்னொரு வகையான வாசிப்பு. இது ஒரு நேரடியான அரசியல் உருவகக் கதையல்ல; ஒவ்வொரு பாத்திரமும் ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்பையோ அதிகாரியையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. ஆனால் கதையின் மருத்துவமனையை ஓர் அதிகாரபூர்வமான, அலட்சியமான சமூக அமைப்பின் சிறிய வகைமாதிரியாக வாசிக்க முடியும்.

மருத்துவமனை மோசமாக நிர்வகிக்கப்படுகிறது. நோயாளிகளின் துன்பம் யாருக்கும் உண்மையான அக்கறையை ஏற்படுத்துவதில்லை. சீர்திருத்த வேண்டியவர்கள் சீர்திருத்துவதில்லை; பொறுப்பேற்க வேண்டியவர்கள் பொறுப்பேற்பதில்லை. ஆண்ட்ரே இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தபடியே, அதன் அவலத்தைப் பற்றித் தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறார்; அதை மாற்றுவதற்கு எதுவும் செய்வதில்லை.

ஒரு கட்டத்தில் அதே அமைப்பு ஆண்ட்ரேவையே தனக்கு வேண்டாதவராகக் காணத் தொடங்குகிறது. அங்குதான் கதை ஓர் அரசியல் அர்த்தத்தைப் பெறுகிறது. ஆண்ட்ரே முதலில் அந்த அமைப்பின் மருத்துவர்; பின்னர் அதே அமைப்பின் நோயாளி. இந்த மாற்றம் மிக எளிதாக நிகழ்ந்தேறிவிடுகிறது. அவர் பைத்தியம் என்பதற்கான நிரூபணத்துக்கு அவசியமே இல்லாமல் போய்விடுகிறது. அவருடைய விசித்திரமான நடத்தை, அடிக்கடி வார்டு எண் 6-இல் இவானைச் சந்தித்துப் பேசுதல் ஆகிய சில நடவடிக்கைகளே அவருக்குப் பைத்தியப்பட்டம் கட்டப் போதுமானதாக இருந்தது. ஒருமுறை அந்தப் பட்டம் அவர் மீது ஒட்டப்பட்டுவிட்டால், அவர் சொல்வதற்கு ஒரு மதிப்பும் இருக்காது.

இவான் திமித்ரிச்சின் நிலையும் இது போலத்தான். அவன் வெறும் கோபக்காரப் பைத்தியக்காரன் அல்ல. நிறுவன அதிகாரத்தின் வன்முறையை, அது எவ்வளவு குழப்பமான முறையில் வெளிப்பட்டாலும் அவன் உணர்கிறான்; தன் மீது நிகழும் அநீதியைப் பற்றித் தொடர்ந்து குரல் கொடுக்கிறான்.

ஆனால் அவனுடைய குரலும் அவனை விடுவிக்கவில்லை. இதுவே ‘வார்ட் எண் 6’-ஐ அரசியல் ரீதியாக அச்சமூட்டும் கதையாக்குகிறது.

Bed and chair inside a geometric glass-walled room