
மூன்று நாட்கள் முன் ‘ராமாயணா: பாகம் 1’ படத்தைத் திரையரங்கில் பார்த்தேன். சம காலத்தில் ராமர் கதையைத் திரையில் பார்ப்பது சற்று ஆபத்தானதுதான்; அரசியல் சாய்வுகளும் மதவாதமும் கலந்துவிடும் சாத்தியங்கள் நிரம்பிய காலகட்டம் இது. ஏ.ஆர். ரஹ்மான் – ஹான்ஸ் சிம்மர் கூட்டணி இணைந்து இசையமைத்திருக்கிறது என்பதுதான் எனக்குள் படத்திற்கான முதன்மைக் ஈர்ப்பாக இருந்தது. எதிர்பார்ப்பை மிகவும் குறைவாக வைத்துக்கொண்டுதான் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.
படத்தின் முடிவில் பிரம்மாண்டமான அனுமன் திரையில் ஓடுகிறார்; கேமரா அவர் முதுகை நோக்கிக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பமும் திரைக்கலையும் பக்தியுணர்வும் கைகோர்த்து ராமாயணத்துக்கு அளிக்கும் வாழ்த்துக் கூறலாக அந்தக் காட்சிப் பகுதி அமைந்திருந்தது. சுழலும் டைட்டில்கள் தோன்றுவதற்கு முன்பு, ஆஜானுபாகுவான அனுமான் ஓடத் தொடங்கியவுடன் தில்ஜித் தோசஞ்சின் குரலில் மெதுவாகத் தொடங்குகிறது ஹனுமான் சாலிஸாவின் வரிகள். காப்புச்செய்யுள் முடிந்தவுடன் ரஹ்மான் உள்நுழைகிறார்; அவருடைய இசைக்கரங்கள் பாடலை நேரடியாக நம் உணர்வுக்குள் செலுத்திவிடுகின்றன. பல நூறு பேரின் குரலில், பலவித டியூன்களில் நாம் ஏற்கனவே பல முறை கேட்டதுதான் என்றாலும், துளசிதாசரின் வரிகளின் மாயத்தோடு தில்ஜித், சுக்விந்தர் சிங், கைலாஷ் கேர், சங்கர் மகாதேவன், மோஹித் சௌகான் ஆகியோரின் கூட்டுக்குரல்களும் சேர்ந்துகொண்டு அந்தத் தருணத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன.
திரையரங்கை விட்டு வெளியேறிய பின்னரும், அந்த இசையும் அனுமனின் அந்தப் பிரம்மாண்ட பிம்பமும் நெஞ்சை விட்டு அகலாமல் கூடவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
சமூக தளங்களும் சமூக ஊடகங்களும் வாட்சப் குழுக்களும் ஓயாமல் ராமாயணம் திரைப்படம் குறித்த விவாதங்களில் ஈடுபட்டவண்ணம் இருக்கின்றன. யு ட்யூப் எபேர்ட்-களும், பீட்டர் ப்ராட்ஷா-க்களும் ராமாயணம் திரைப்படத்தை பிய்த்தெரிந்த வண்ணமிருக்கின்றனர். ராமர் கறுப்பாயில்லை, சாய் பல்லவி சீதையா?, இது ராவணாயனா, என்றெல்லாம் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. என்னுடைய facebook-இல் அழையாமல் வந்த ஒருவர் – “என்ன கொடுமை சார் இது! சீதை வாள் சண்டை புரிவதா? இது வால்மீகிக்கு அநியாயம்” என்று கமெண்ட் இட்டார். வால்மீகியை மூல நூலின் வழி வாசிப்பவர் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் அவருக்கு “அத்யாத்ம ராமாயணத்துக்கும்” “அத்புத ராமாயணத்துக்கும்” இடையிலான வித்யாசம் தெரியவில்லை. கதாகாலட்சேபம் புகழ் துஷ்யந்த் எபேர்ட்டுக்கு “சீதா கல்யாணம் வைபோகமே” பாடல் சேர்க்கப்படவில்லையே என்ற ஆதங்கம்.
எனக்கு படம் பிடித்திருந்தது.
- இந்த ஸ்கேலில் உலகத்தரத்துடன் இதுவரை நாம் ராமாயணத்தைப் பார்த்ததில்லை.
- அதிக வசனங்கள் இல்லை. வளவளவென நீதி சொல்லும் வசனங்கள் குறைவு.
- இசை அபாரம். சிம்மரின் மேலை சத்தமும் ரஹ்மானின் ஆசிய ஒலியும் ஜுகல்பந்தி நடத்துகின்றன. இசை நன்றாகவேயில்லை என்று கழுவி ஊற்றுபவர்கள் பிற இசையமைப்பாளர்களின் ரசிக மன்ற ஆயுள் உறுப்பினர்கள். தனிப்பட்ட உணர்வுகளால் பாதிக்கப்படாமல் மதிப்பிடும் பண்பை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
- ரன்பீர் கபூர் ராமராக பொருந்தவில்லை என்பது ஒரு விமர்சனமாகாது. அதே போல, வடக்கு விமர்சகர்கள் சாய் பல்லவி் சீதையாகப் பொருந்தவில்லை என்பதும் இதே ரகம்.
- ராவண தாண்டவம் காட்சி ஓர் அதிசயம். யஷ் அபாரம். சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை இசைப்படுத்திய விதம் ரஹ்மானின் தனிச்சிறப்பு.
- பத்து உணர்வுகளால் மனக்குகை காட்சியில் அளைவுறும் ராவணனின் காட்சியின் இறுதியில் பத்து தலைகளாக ஒன்று சேர்ந்து நிற்கும் காட்சி நாடகீய அழகியலின் உச்சம்.
- எப்போதும் தனக்கு விதிக்கப்பட்டதென்ன என்று யோசித்தவாறே நடப்பதை ஏற்று, சொல்லப்பட்டவற்றைச் செய்தவாறு இருக்கும் ராமன் – மனைவியை இழந்த துக்கத்தில் – இனிமேல் நானே முடிவு செய்வேன் என்று சங்கல்பமெடுத்து மனைவி எங்கிருந்தாலும் அவளை மீட்பேன் என்று உறுதி கொள்ளும் காட்சி மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது. An epic coming of age scene!
- ராவண தவம், சூர்ப்பனகை கணவன் மரணம் – போன்ற பொதுவாக பலருக்குத் தெரியாத கதைகளும் இதில் அடக்கம்.
- கர-தூஷணனுடனான போரில் சீதையும் பங்கு கொள்ளுதல்
- A grand spectacle – with high quality graphics.