இலைகள், மலர்கள், மரங்கள்

• •

செங்கோகு காலச் சதுரங்கம்

சமுராயும் கைதியும் (The Samurai and the Prisoner – by Honobu Yonezawa) என்னும் ஒரு ஜப்பானிய நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசித்து முடித்தேன். அடர்த்தி மிக்க கடைசி நூறு பக்கங்களை ஒரே நாளில் படிக்க முடிந்தது; விறுவிறுப்பு குறையவில்லை. ஜப்பானிய வரலாற்றின் புதிரான ஆளுமை அராகி முரஷிகே தான் கதையின் மையப்பாத்திரம். ஓடா நோபுநாகாவின் தளபதிகளில் ஒருவனாக இருந்து பின்னர் அவனுக்கெதிராகத் திரும்புகிறான் முரஷிகே. அவன் எடுத்த அந்த ஒரு தீர்மானம், ஜப்பானிய வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


முற்றுகையில் இருக்கும் கோட்டையிலிருந்து தப்பிச்செல்லும் முரஷிகேவின் நிலையை நாவல் மிகவும் நுட்பமாகப் படம்பிடிக்கிறது. அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த ஒருவன், ஒரே இரவில் துரோகியாக மாற்றப்பட்டு ஓடும் நிலை இதயத்தைப் பிழிகிறது. சமுராய்களின் உயிர் துறக்கும் பண்பாடு, தற்காப்பு மனப்பான்மை மற்றும் மானம் ஆகியவற்றின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை ஆசிரியர் கதையின் வழி கேள்விக்குள்ளாக்குகிறார். முரஷிகே ஏன் தற்கொலை செய்துகொள்ளாமல் தப்பித்து ஓடினான் என்ற புதிர், வாசிப்பின் சுவாரசியத்தை இறுதிவரை தக்கவைக்கிறது. ‘கைதி’யின் பரிமாணம் கதையின் மனோதத்துவ பக்கங்களை வெளிப்படுத்துகிறது. இருண்ட சிறையறைக்குள் நடக்கும் மனித உணர்வுகளின் மோதலும், மனப் போராட்டங்களும் வாசகனை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றன.


இறுதியை நோக்கிய பயணம் வெறும் சம்பவங்களின் கோர்வையாக இல்லாமல், தத்துவார்த்த ரீதியான முதிர்ச்சியை அடைகிறது. அராகி முரஷிகேவின் ஒவ்வொரு முடிவும், அவனது மனதின் ஆழமான கொந்தளிப்புகளை நமக்கு உணர்த்துகிறது. நோபுநாகாவின் அடக்குமுறைக்கு முன்னால் ஒரு தனிமனிதனின் வீழ்ச்சியும், அதே சமயம் அவனது சுயத்தைக் கண்டடையும் போராட்டமும்தான் ஒரு சிறந்த வரலாற்றுப் புனைவாக உயர்த்துகிறது. ஜப்பானியப் பிரபுத்துவ காலகட்டத்தின் வன்முறையும், அதே நேரத்தில் அங்கு மலர்ந்த தேயிலைச் சடங்கு போன்ற அமைதியான கலைகளும் ஒரே கதையில் இணையுமிடம் அற்புதமானது. வாசித்து முடித்த பிறகும் முரஷிகேவின் பிம்பமும், அவன் எதிர்கொண்ட அறச்சீற்றமும் மனதை விட்டு அகலாமல் நீண்ட நேரம் நிலைத்து நிற்கின்றன.


ஒரு மர்மக் கதையின் வடிவில் இது சொல்லப்படுகிறது. நிகழும் மர்மங்களின் முடிச்சை அவிழ்க்கும் கான்பே எனும் வரலாற்றுப் பாத்திரம் ஏன் முரஷிகேவுக்கு உதவுகிறான் என்ற புதிர் இறுதியில் துலங்குகிறது. அந்தத் துலக்கம் கான்பேயையும் முற்றுகையின் பின் நிகழ்ந்த கொடூரமான சம்பவங்களுக்கு மறைமுகமாகப் பொறுப்பாக்குகிறது.


ஒரு சரித்திரக் கதைக்கே உரிய சதி, போர், வீரம், துரோகம், மரணம் போன்ற நேரடிக் கருக்களைக் கொண்டிருக்கும் இந்நாவல், மதச் சூழலின் பின்னணியில் செங்கோகு கால ஜப்பானின் சித்திரத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறது. ஜென், ஜோடோ ஷின்ஷு மற்றும் கிறித்தவ மரபுகளுக்கிடையிலான ஊடாட்டமாகச் சம்பவங்களின் பின்னணியைப் புனைவதன் வாயிலாக, அரசியலும் ராணுவ அதிகாரமும் மதங்கள் குறித்த அவற்றின் அணுகுமுறையை எவ்வாறு சதுரங்கக் காய்களாகப் பயன்படுத்திக் கொண்டன என்பதை இந்நாவல் ஆழமாகப் பேசுகிறது. ஒருபுறம் அமைதியையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் ஜென் தத்துவம்; மறுபுறம் எளிய மக்களின் சரணாகதி நிலையைப் பேசும் ஜோடோ ஷின்ஷு மரபு. இவற்றோடு புதிதாக உள்ளே நுழைந்து படைத்தளபதிகளையும் சாதாரண மக்களையும் ஈர்க்கும் கிறித்தவக் கோட்பாடுகள் என மூன்று வேறுபட்ட சிந்தனை அலைகள் அக்காலகட்டத்து அரசியலை மூன்று திசைகளிலிருந்து இழுத்ததை நாவல் கூர்மையாகப் பதிவு செய்கிறது.


கான்பேயின் புதிரான செயல்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் இந்த மதச் சூழலும் அரசியல் கணக்குகளுமே கதையின் மையச்சரடாக அமைந்திருக்கின்றன. போரின் கொடூரங்களுக்கு மத்தியில், இரத்தக் களறிக்கு நடுவே நடைபெறும் தேயிலைச் சடங்குகளில் (Tea Ceremony) அமைதிக்கான தேடலை விட, அதிகாரத்தின் மறைமுக வியூகங்களே மேலோங்கி நிற்கின்றன. முரஷிகே தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் அடைக்கலம் புகும் கலை வடிவங்கள் கூட, அவன் செய்த துரோகத்திற்கும் அவனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கும், அவன் தப்பிச் சென்றமைக்குமான சாட்சியங்களாகவே எஞ்சுகின்றன.


செங்கோகு காலத்தின் வன்முறையான மாற்றங்கள் வெறும் வாள்களாலும் கோட்டைகளாலும் மட்டும் நிகழவில்லை; மனித மனங்களின் நம்பிக்கை, விசுவாசம், தர்மத்தைப் பற்றிய மாறுபட்ட புரிதல்களாலும் நிகழ்த்தப்பட்டன என்பதை இந்நாவல் வாசகருக்குத் தெளிவுபடுத்துகிறது. வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் புதைந்து கிடக்கும் மனித பலவீனங்களையும் அறப்போராட்டங்களையும் ஒரு மர்மக் கதையின் விறுவிறுப்போடு சொல்லிச் செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறது.


ஜப்பானிய வரலாற்றின் சிறு பரிச்சயம் நாவலை ஆர்வங்குறையாமல் வாசிப்பதற்கு உதவும். செங்கோகு காலம், ஜப்பானை ஒன்றிணைப்பதில் ஓடா நோபுநாகா ஆற்றிய பங்கு, ஜப்பானின் முக்கிய சமய மரபுகள், இக்கோ-இக்கி இயக்கம் போன்றவற்றைப் பற்றி இணையத்தில் வாசித்துத் தெரிந்துகொண்டு நாவலை வாசிப்பது சிறந்தது.