ஜெர்மன் எழுத்தாளர் தாமஸ் மான் ஒருமுறை தன் நெருங்கிய நண்பரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு காஃப்காவின் ‘தி கேஸில்’ (The Castle) புத்தகத்தைக் கடனாகக் கொடுத்தார். சில நாட்களிலேயே அதை முழுமையாகப் படிக்காமல் திருப்பித் தந்த ஐன்ஸ்டீன், அது தன் ரசனைக்கு மிகவும் ‘விகாரமாக’ (perverse) இருப்பதாகக் கூறினார். காலத்தையும் வெளியையும் நாம் புரிந்து கொண்ட விதத்தையே மாற்றியமைத்த மனிதருக்குக் கூட நவீனத்துவ இலக்கியத்தைப் படிக்கப் பொறுமையில்லை என்பது தான் உண்மை!
ஆனால், ஐன்ஸ்டீனையாவது மன்னித்துவிடலாம். சமீபத்தில் என் கார்ப்பரேட் சக ஊழியருடன் நடந்த சம்பவத்தோடு ஒப்பிடும்போது, ஐன்ஸ்டீனின் இலக்கிய ரசனை எவ்வளவோ பரவாயில்லை.
அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்த தோழி ஒருவர் என் பொழுதுபோக்குகள் பற்றிக் கேட்டபோது, நான் சுருக்கமாக “புத்தகங்கள்” என்றேன். அடுத்த வாரமே என் பிறந்தநாள் வந்தபோது, அவர் ஆச்சரியமாக ஒரு பரிசை நீட்டினார். பிரித்துப் பார்த்தால் ‘The Myths and Mantras: The Ultimate Investment Guide’. பிறந்தநாளுக்கு ‘அஸெட் அலொகேஷன்’ வழிகாட்டியை விடச் சிறந்த பரிசு வேறு என்ன இருக்க முடியும்?. பரிசைக் கொடுத்துவிட்டு, “பொதுவாக நீங்கள் என்ன மாதிரி புத்தகங்கள் படிப்பீர்கள்?” என்று கேட்டார். “நான் அமிதாவ் கோஷ் புத்தகங்கள் நிறையப் படிப்பேன்,” என்றேன். அவர் ஒரு கணம் யோசித்து, மிகுந்த தொழில்முறை மரியாதையுடன் தலையசைத்தபடி, “ஆஹா சூப்பர்! அவர் ஸ்மால்-கேப் (small-caps) முதலீடுகளில் வல்லவரா அல்லது பிரைவேட் ஈக்விட்டியா?” என்றார்.
அன்று இரவு, ‘The Myths and Mantras’ புத்தகத்தின் பக்கங்களை புரட்டிப் பார்த்த போது தான் எனக்கே உறைத்தது — நிதி மேலாண்மை, பங்குச் சந்தை சூட்சுமங்கள் என எதுவுமே புரியாமல் விழி பிதுங்கினேன். காஃப்காவின் நூலைப் பார்த்து ‘விகாரமானது’ என்று ஐன்ஸ்டீன் பயந்து ஓடியதில் எந்தத் தப்பும் இல்லை!
