இலைகள், மலர்கள், மரங்கள்

• •

டுன்ஹுவாங் நூலகக் குகை

மேற்கு சீனாவின் டுன்ஹுவாங் நகருக்கு அருகிலுள்ள மோகாவோ குகைகளின் பதினேழாம் எண் குகை, “நூலகக் குகை” (Library Cave) என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் இந்தக் குகை மூடப்பட்டு, சுமார் எட்டு நூற்றாண்டுகள் யாருடைய பார்வைக்கும் எட்டாமல் இருந்தது. 1900-ஆம் ஆண்டில் அது மீண்டும் திறக்கப்பட்டபோது, மனித வரலாற்றின் மிகப் பெரிய கையெழுத்துப் பிரதிக் களஞ்சியங்களில் ஒன்றாக அது வெளிப்பட்டது.

அந்தக் குகையில் ஆயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளும் அச்சு நூல்களும் பாதுகாக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் சமய நூல்கள் மட்டுமல்ல; நிர்வாகம், இலக்கியம், மொழியியல், வர்த்தகம், இசை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த செக்யூலர் ஆவணங்களும் அங்கே இருந்தன. பெரும்பாலானவை சீன மொழியில் இருந்தாலும், கொடானீஸ், டர்கிக், சமஸ்கிருதம், பிராகிருதம், திபெத்தியம், தொகாரியம், உய்குர் உள்ளிட்ட பல மொழிகளிலும், பல்வேறு எழுத்துமுறைகளிலும் எழுதப்பட்ட நூல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தப் பன்மொழித் தொகுப்பு, பட்டுப்பாதை (Silk Road) நாகரிகத்தின் கலாச்சாரச் சந்திப்பை வெளிப்படுத்தும் அரிய சான்றாகும்.

அந்தக் காலத்தில் குகையின் பொறுப்பில் இருந்த தாவோ சமயத் துறவி வாங் யுவான்லு (Wang Yuanlu), 1900-களின் தொடக்கத்தில் இந்தப் பிரதிகளை மேலைநாட்டு ஆய்வாளர்களுக்கு விற்கத் தொடங்கினார். 1907-இல் பிரிட்டிஷ்–ஹங்கேரிய இந்தியவியல் அறிஞர் மார்க் ஆரெல் ஸ்டீன் (M. Aurel Stein), வெறும் 190 பவுண்டுகள் கொடுத்து ஆயிரக்கணக்கான பிரதிகளைப் பெற்றுச் சென்றார். பின்னர் பிரெஞ்சு ஆய்வாளர் பால் பெல்லியோ (Paul Pelliot) உள்ளிட்ட பலரும் அங்கிருந்து அரிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

இதற்குப் பிறகே சீன அரசு தலையிட்டு எஞ்சியிருந்த நூல்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இன்று அந்தப் பிரதிகள் சீனாவின் தேசிய நூலகம், பிரிட்டிஷ் நூலகம், பிரான்ஸ் தேசிய நூலகம் உள்ளிட்ட உலகின் பல முக்கிய நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது International Dunhuang Project (IDP) எனப்படும் சர்வதேச முயற்சியின் மூலம் இந்தக் கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட்டு, உலகெங்கும் உள்ள ஆய்வாளர்களுக்குக் கிடைக்கச் செய்யப்படுகின்றன.

ஒரு சுவாரஸ்யமான தகவல்: நூலகக் குகையில் அதிக எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்ட நூல்களில் முதன்மையானவை லோட்டஸ் சூத்ரா (Lotus Sutra) மற்றும் டயமண்ட் சூத்ரா (Diamond Sutra) ஆகிய பெளத்த நூல்களின் பிரதிகளாகும். குறிப்பாக டயமண்ட் சூத்ராவின் 868 கி.பி. அச்சுப் பிரதியே, தேதி குறிப்பிடப்பட்ட உலகின் மிகப் பழமையான அச்சு நூலாகக் கருதப்படுகிறது.

நூலகக் குகையின் முகப்பில் மார்க் ஆரெல் ஸ்டீன் எடுத்த புகைப்படம்
குகையில் இருந்த கையெழுத்துப் பிரதிகளை ஆராயும் பிரெஞ்சு ஆய்வாளர் பால் பெல்லியோ