இலைகள், மலர்கள், மரங்கள்

• •

175-வது பக்கம்

அறிவியல் என்றாலே தூர ஓடி விடுகிற ஆள் நான். மண்டையை உடைக்கும் சூத்திரங்களுக்கும் மனப்பாடக் கல்விக்கும் அப்பால் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்றே நினைத்திருந்தேன்.

தத்துவ நாவலான Sophie’s World-ஐ வாசிக்கும்போது, 175-வது பக்கத்தில் வந்த ஒரு வரி என் பார்வையைத் தலைகீழாக்கிவிட்டது:
“Once upon a time when the solar system began, the moon was hurled outward—outward from the earth, that is—with tremendous force. This force will remain in effect forever because it moves in a vacuum without resistance.”

உராய்வற்ற வெற்றிடத்தில் ஒருமுறை கொடுக்கப்படும் இயக்கம், அதைத் தடுக்க எதுவுமில்லையெனில், முடிவற்ற காலம் வரை தொடர்ந்துகொண்டே இருக்கும் என்ற அந்த ஒற்றை வரி என்னைச் சட்டென நிறுத்தியது.

அசைவற்ற கூரை என்று கவித்துவமாக நினைத்துக்கொண்டிருந்த வானில், கோள்களும் நிலவுகளும் நட்சத்திரங்களும் ஒரு கணமும் நின்றுவிடாமல் தங்கள் பாதைகளில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. அவை சுழல்வதற்கு யாரும் தினமும் தள்ளிவிடவில்லை. ஒருமுறை கிடைத்த இயக்கமும், ஈர்ப்புவிசையும் சேர்ந்து அந்தப் பேரண்ட நடனத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு கோளின் ஈர்ப்பிலிருந்தும் விடுபடத் தேவையான விடுபடு வேகத்தை (Escape Velocity) கணக்கிட்டு, அதற்கேற்ப ராக்கெட்டுகளை ஏவி, பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டி, சூரியனைச் சுற்றும் புதிய பாதையில் விண்கலங்களை அனுப்பி, பல மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் இருக்கும் இடத்தையே துல்லியமாகச் சந்திக்க வைப்பது—இது வெறும் தொழில்நுட்பம் அல்ல; மனித அறிவின் கவிதை.

இன்னும் என்னை அதிகம் வியக்க வைத்தது ஐன்ஸ்டீனின் பார்வை. நியூட்டன், “சூரியன் பூமியை ஈர்க்கிறது” என்றார். அதை நம் மனம் எளிதாக ஏற்றுக்கொள்கிறது. ஆனால் ஐன்ஸ்டீன் இன்னொரு கதவைத் திறந்தார். “ஒருவேளை ஈர்ப்புவிசை என்ற தனி விசையே இல்லையென்றால்? சூரியன் வெளியிடும் இழுப்பல்ல; அதன் இருப்பால் வெளி மற்றும் காலமே வளைந்துவிட்டால்? அந்த வளைந்த வெளியில் பூமி தனது இயல்பான பாதையிலேயே பயணிக்கிறதென்றால்?” என்று கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வி, பதிலை விட பெரிய வியப்பை எனக்குள் ஏற்படுத்தியது.

சுமையாக மட்டுமே பார்த்த அறிவியல், இன்று தத்துவத்தின் வழியே பிரபஞ்சத்தின் எல்லையற்ற தூரத்திற்கு வழிகாட்டும் ஒரு பேரழகான வரைபடமாகத் திறந்திருக்கிறது.