பெருந்தலைப்புகள் (Headlines) மறைந்தவுடன் தேசியப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிட்டன என்ற பொய்யான நிம்மதியை நாம் மிக எளிதாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்.
இந்திரா காந்தியின் படுகொலையோடும், அதைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையோடும் பஞ்சாப் பிரச்சினை ஓய்ந்துவிடவில்லை. அதற்குப் பின்னர்தான் ஆயிரக்கணக்கான ‘சிறு தலைப்புகள்’ எழுதப்படத் தொடங்கின. காணாமல் போனவர்கள், அவர்களைத் தேடி அலைந்த குடும்பங்கள், எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கிய அடக்குமுறையில் பலியானோர் என எண்ணிலடங்கா எளிய மனிதர்கள், இந்தத் தேசம் கொண்டாடும் ‘அமைதிக்கான’ விலையைத் தங்களின் உயிர்களாலும் வாழ்க்கையாலும் செலுத்தினர்.
நீதிமன்ற நடைமுறைகளுக்கு வெளியே, ஏறத்தாழ 25,000-க்கும் மேற்பட்டோர் இக்காலகட்டத்தில் கொல்லப்பட்டதாகக் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எந்த ஆதாரமும், விசாரணையும் இன்றி “தீவிரவாதிகள்” அல்லது “எதிர்ப்பாளர்கள்” என்ற முத்திரையின் கீழ் அவர்கள் இரகசியமாக எரிக்கப்பட்டனர். காலப்போக்கில் இது தனிமனித அத்துமீறலாக அன்றி, ஓர் அமைப்புரீதியான நடைமுறையாகவே மாறியது. பயமும் சந்தேகமும் மௌனமும் பஞ்சாபின் காற்றெங்கும் உறைந்த காலம் அது.
இந்த இருண்ட உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முயன்ற ஜஸ்வந்த் சிங் கல்ரா போன்ற மனித உரிமைப் போராளிகளும், அதே அதிகார அமைப்பால் பலியிடப்பட்டனர்.
பெருந்தலைப்புகள் கடந்துபோன பிறகும் இந்தச் சிறு கதைகள்—தொலைந்த உயிர்கள், உடைந்த குடும்பங்கள், புதைக்கப்பட்ட உண்மைகள்—இன்றும் வரலாற்றின் இடுக்குகளிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. “பிரச்சினை தீர்ந்துவிட்டது” என்று நாம் விளிக்கும் அமைதி, உண்மையில் பலரின் தீராத வலியை மூடிமறைக்கும் ஒரு போலி அமைதியே.
சட்லஜ் திரைப்படம் நமக்கு நினைவூட்டுவது இதையே: வரலாறு பெருந்தலைப்புகளால் மட்டும் எழுதப்படுவதில்லை; அது ஆயிரக்கணக்கான சிறு கதைகளின், குரலற்ற அழுகைகளின், பதிலளிக்கப்படாத கேள்விகளின் தொகுப்பு. இந்தக் காயங்கள் இன்னும் ஆறவில்லை. இவற்றை மறப்பது – ஒரு தேசமாக நாம் மீண்டும் அதே தவறுகளைச் செய்வதற்கான முதல் புள்ளி. உண்மையான அமைதி என்பது மௌனத்தின் மாற்றுப் பெயரல்ல; அது நீதியின் அடிப்படையில் மட்டுமே நிலைபெற முடியும். ஒவ்வொரு அரசியல் கதையின் பின்னாலும் மனித உயிர்கள் இருக்கின்றன, அவற்றை வெறும் புள்ளிவிவரங்களாக நாம் கடந்து சென்றுவிட முடியாது.
