1988. முதன்முறையாக விமானத்தில் பயணம்.
செக்-இன், செக்யூரிட்டி சோதனை எல்லாம் முடிந்து போர்டிங்கிற்காகக் காத்திருந்தோம். அப்போதெல்லாம் விமான நிலையங்களுக்குள்ளேயே புகை பிடிக்க அனுமதி இருந்தது.
சற்றுத் தள்ளி ஒரு பெண் தனியாக அமர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தாள். அப்போது எனக்கு பத்தொன்பது வயது. அவள் என்னைவிட சில ஆண்டுகள் மூத்தவளாக இருக்கலாம். Beige நிறச் சிஃபான் புடவை. அதில் சிறிய சிவப்பு மலர்கள். முகத்தில் ஒரு பளபளப்பு. புகையை வெளியே விடும் போது, உதட்டை லேசாகக் கீழ்நோக்கி மடித்துக் கொள்வாள். அந்தச் சிறிய அசைவும் எனக்குப் பெரும் ஸ்டைலாகத் தோன்றியது.
நான் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் கவனித்துவிடுவாளோ என்ற பயத்தில் அவ்வப்போது பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். மீண்டும் சில நொடிகளில் அவளிடமே வந்து நின்றுவிடும் என் கண்கள்.
சிகரெட் முடிந்ததும், ஒரு சினிமா இதழைப் புரட்டத் தொடங்கினாள். ஸ்டார்டஸ்ட், மூவி, ஸ்டார் அண்ட் ஸ்டைல் போன்ற இதழ்கள் பரவலாகப் படிக்கப்பட்ட காலம் அது. அது அவற்றில் ஏதோ ஒன்றாக இருக்கலாம்.
அப்போது வழுக்கைத்தலை கொண்ட ஒரு நடுத்தர வயது மனிதர் அவளை அணுகினார். கையில் இருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒன்றை நீட்டி, “Cigarette?” என்று கேட்டார்.
அவள் புன்னகையுடன் “Thank you” என்று வாங்கிக் கொண்டாள்.
அவர் லைட்டரை எடுத்து அவள் வாயில் இருந்த சிகரெட்டைப் பற்ற வைத்தார். இருவரும் புகைத்துக் கொண்டே சில நிமிடங்கள் பேசினார்கள். அவர்கள் முன்பே அறிமுகமானவர்களாகத் தெரியவில்லை. சிகரெட் முடிந்ததும் அவர் தன் வழியில் சென்றுவிட்டார்.
அந்தக் காட்சியில் ஏதோ ஒரு கிறுகிறுப்பு இருந்தது.
சிறிய ஊரில் வளர்ந்த பத்தொன்பது வயதுப் பையனுக்கு பெண் புகைப்பதே ஒரு புதுமை. அது மர்மமாகவும், அந்நியமாகவும், மிகுந்த கவர்ச்சியுடனும் தோன்றியது. அந்த மனிதரைப் பார்த்து ஒரு கணம் பொறாமை.. அவரைப் போல நானும் புகை பிடிப்பவனாக இருந்திருக்கக் கூடாதா என்ற கற்பனை மனதில் தோன்றியது.
கல்லூரிக்குத் திரும்பியதும் என் நெருங்கிய நண்பனிடம் இந்தச் சம்பவத்தைச் சொன்னேன்.
ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த அவன், “டேய், நீ போய் அவள்ட்ட பேசிருக்கலாம்ல!” என்று சொல்லி அந்தக் கிளுகிளுப்பை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கினான்.
அந்த விமான நிலையமும், அந்தப் பெண்ணும், அந்தச் சிகரெட்டும், அந்த வழுக்கைத்தலை மனிதரும் காலத்தின் தூசியில் மறைந்துபோனார்கள்.
முப்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து.
விமான நிலையம் மாறிவிட்டது. புகைப்பவர்களுக்குத் தனி அறைகள். நானும் மாறிவிட்டேன்.
என் அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்திருந்த அதிதி, “Sir, if you don’t mind…” என்று சொல்லியபடி ஒரு சிறிய சிகரெட் டப்பாவை கையில் எடுத்தாள்.
“I mind,” என்றேன். பிறகு சிரித்தபடி, “நான் உள்ளே போய் செக்-இன் செய்கிறேன். நீ உன் கடமையை முடித்து விட்டு வா,” என்று சொல்லிவிட்டு டெர்மினலுக்குள் நடந்து சென்றேன்.
பத்தொன்பது வயதில் நான் அந்த வழுக்கைத்தலை மனிதராக இருக்க வேண்டும் என்று ஒரு கணம் நினைத்திருக்கிறேன். ஐம்பத்தேழு வயதில், நான் அந்த வாய்ப்பைத் தவறவிட்டதாகத் தோன்றவில்லை.
இன்னொன்று, அந்த வழுக்கைத்தலை மனிதரைப் போல என் தலை இன்னும் ஆகிவிடவில்லை. உப்பும் மிளகும் தூவியது போன்ற முடியுடன் இன்னமும் விமான நிலையங்களைக் கடந்த வண்ணம் இருக்கிறேன்.