மனம் ஓர் ஆலை
எண்ணங்களைப் பிசைந்து
சாறெடுக்கும் பணி விடாது நடக்கும்
கால்களும் கண்களும் ஓய்வெடுக்கையில்
மனம் தனிமையாகித் தவிக்கும்
காட்சிகளும் ஒலிகளும் இன்றிப் பரிதவிக்கும்
கச்சாப் பொருட்களின்றி
மங்கிய காட்சிகளாய்
ஊமைப் படங்களாய்
எண்ணத்தை வடிவமைத்து
தூக்கத்தில் இடையீடு செய்து
புறவுலகைத் திறக்க எத்தனிக்கும்
சிறு விழிப்பில்
எண்ணங்களைப் பட்டறையில் கிடத்த முயல்கையில்
தூக்கவாயு திரும்ப வீசும்—
எண்ணங்கள் எல்லாம் கரைந்துபோம்
மீண்டும் உறக்கத்தின் கட்டாயம்
தூக்கவாயு வீசாவிடில்
எண்ணம் முழு வீச்சில் எரியும்
எண்ணங்களுடன் தூங்குவோரின்
கனவுச் சுகிப்பு—
மனத்துக்கு பின்னடைவு
கனவு கலைந்ததும்
எண்ணச்சக்கையின் வெறுமை வெளுத்து
மனத் தொழிற்சாலை முடங்கும்
நிரந்தரத் தூக்கம் எனும் ஒன்றுண்டு
அந்த எண்ணத்தை ஓட விடுவோம்
உடல் பயங்கொள்ளுமா?
தற்காலிகத் தூக்கத்தை அது இழக்குமா?
உடலில்லா இருப்பெனும்
ஆபத்தான கருப்பொருளின்
சாறு வழியத் தொடங்கும்
அத்தகைய இருப்பில்
இல்லாமல் போவது உடல் மட்டுமா—
தாமும் தானே இருப்பிழப்போம்
துணையற்ற நிலையில் மனம்
அப்போது
கண்ணீர் விட
உடல் தேவைப்படுமே