இன்று பெங்களூரின் ஒரு வணிக வளாகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்தபோது அந்த இளம் தம்பதியைக் கண்டேன். துறுதுறுவென இரண்டு ஆண் குழந்தைகள். அவர்கள் பேசிக்கொண்டிருந்த அரபி மொழி, அவர்கள் மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து மருத்துவச் சுற்றுலாவிற்காக வந்திருப்பார்கள் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியது.
என் ஆர்வம் தாளாமல், “நீங்கள் கெய்ரோவில் இருந்து வருகிறீர்களா?” என்று மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.
அவர் ஆச்சரியத்துடன், “உங்களுக்கு அரபி புரியுமா?” என்றார்.
“புரியாது. ஆனால் அந்த மொழியின் ஒலியைக் கேட்டு லெபனான், துபாய் அல்லது சவூதி என நாடுகளை ஊகிக்க முயல்வேன்” என்றேன்.
“கிட்டத்தட்ட சரியாகச் சொல்லவிட்டீர்கள்” என்று அவர் புன்னகைத்தார். நான் என் முயற்சியை விடாமல், “ஷர்ம் அல் ஷெய்க்?” என்று வினவினேன்.
அவர் மெல்லிய புன்னகையுடன் தந்த சரியான விடை, லேசான ஒரு கனத்தை நெஞ்சுள் இறக்கியது: “காஸா”
அவர்கள் இருவரும் இந்தியாவுக்குப் படிக்க வந்தவர்கள். இருவரும் முனைவர் பட்டம் (PhD) முடித்திருக்கிறார்கள். அவர்கள் சந்தித்தது, காதலில் விழுந்தது எல்லாம் நம் மைசூரில் தான். 2021-ல் திருமணம்.
பேச்சு அவர்கள் நிலத்தைப் பற்றித் திரும்பியது. காஸாவில் இருக்கும் உறவினர்கள் ஒரு நாள் உணவை மூன்று நாட்கள் வரை பகிர்ந்து உண்ணும் அவலம்; எகிப்துக்குத் தப்பிச் செல்ல லட்சக்கணக்கில் செலவாகும் நெருக்கடி… முகமதுவின் மனைவி அனாரின் குடும்பம் எப்படியோ கெய்ரோவிற்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள். ஆனால், அவர்களின் அசையா சொத்துகள் அனைத்தும் அழிந்துவிட்டனவாம்.
முகமதுவுக்கு இப்போது இந்தியாவிலேயே தங்கிவிட வேண்டும் என்று ஆசை. “மைசூர் இப்போது என் சொந்த ஊர் போல ஆகிவிட்டது” என்கிறார் அவர். ஆனால் அனாரோ, இன்னும் சிறந்ததொரு எதிர்காலத்தைத் தேடி ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் சென்றுவிடலாம் என்ற கனவில் இருக்கிறார்.
எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, மைசூரின் தெருக்களில் ஒன்று சேர்ந்து, இன்று காஸாவின் துயரங்களைச் சுமந்தபடி என் முன்னே அந்தத் தம்பதியர். அவர்களின் கண்கள் ஏதோ ஒரு திசையில் வாழ்வின் மீதான நம்பிக்கையைத் தேடிக்கொண்டிருக்கின்றன.