வெறுப்பின் வழி குறுக்கும் நெடுக்குமானது. அதாவது, வெறுப்பை வெளிப்படுத்திக் காண்பிப்பது முதலில் அரிது. அது மறைத்து வைக்கப்பட்டிருக்கும். யாரிடம் அந்த வெறுப்பைப் பற்றி அறியத் தரலாம் என்று காத்திருக்கும். பிறகு சுற்றி வளைத்து எங்கிருந்தோ தொடங்கும். இன்று மதியம் இதுதான் நடந்தது.
ஹரியானாவில் கர்னால் நகருக்குச் சென்றிருந்தேன். இரண்டு வருடங்களாக அந்த வாடிக்கையாளரை நான் அறிவேன். ஹரியானாவின் பணக்காரக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். தென்னிந்தியாவின் முன்னணி பொறியியல் கல்லூரியில் படித்தவர். டயர்கள் விநியோகிக்கும் வியாபாரம் நடத்தும் அவருடைய தந்தை தன் நண்பருடன் சேர்ந்து புதுத்தொழிலில் முதலீடு செய்து அதை நிர்வகிக்கும் பொறுப்பை மகனிடம் கொடுத்திருக்கிறார். ஐந்தாறு வருடங்களில் நிறுவனம் செழித்து வளர்ந்திருக்கிறது. அவரை மாதவ் என்று அழைப்போம். இது அவரின் உண்மைப் பெயர் இல்லை.
கொஞ்ச நேரம் வியாபாரம் பேசினோம். சீக்கிரமே முடிந்துவிட்டது. என்னுடன் வந்திருந்த சகஊழியர் வங்காளி. அவர் பெயர் அயான். அவரிடம் மேற்கு வங்க தேர்தல் குறித்து கேட்டார் வாடிக்கையாளர். சக ஊழியர் கடுமையான மோதி பக்தர். என் முன்னால் அதை அவர் ஒருபோதும் மறைத்ததில்லை. நான் கடுமையான பாஜக விமர்சகன் என்பதும் அவருக்குத் தெரியும். நான் அவருடைய அதிகாரி என்பதனால் என்னை திருப்திப்படுத்த வேண்டி என் கருத்துகளை அவர் நகலெடுத்ததில்லை. அந்த நேர்மை எனக்கு பிடிக்கும்.
“பாஜக தான் ஜெயிக்கும்” என்றார் அவர்.
“வழக்கம் போல அயான் நன்கு கனவு காண்கிறார்” என்றேன் நான். தீவிரமான அரசியல் விவாதத்துக்கு நான் என்றுமே தயாராக இருந்ததில்லை. உரையாடலில் லேஸாக பங்கு கொள்ளும் விதமாகத்தான் அப்படிச் சொன்னேன்.
“அயான் சொல்வது எளிதில் நடந்துவிடலாம். பாஜக-வுக்கு ஓராயிரம் வழிகள் உள்ளனவே…” என்று கண்சிமிட்டினார் மாதவ்.
அடுத்து ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி பற்றி பேச ஆரம்பித்தோம். இப்போது யோசித்தால் தெளிவாகிறது — அந்தத் திசையில் பேச்சைத் தள்ளியது அடியேன்தான். மாதவின் பூடகமான பாஜக-வின் மீதான விமர்சனம், அவர் பாஜக ஆதரவாளர் இல்லை என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கிவிட்டது. வேகமாக முடிவு எடுப்பது என் பழக்கமான பலவீனம்.
மாதவ் ஒரு சின்ன காகிதத்தில் வரையத் தொடங்கினார். இந்தியா வரைபடம் போல கிறுக்கினார்.
“பஞ்சாப், கஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம், நாகலாந்து… எல்லை மாநிலங்கள் அனைத்திலும் பாஜக ஆட்சி வந்தால் தான் நல்லது. அப்போதுதான் அண்டை நாட்டிலிருந்து ஊடுருவல் இருக்காது.”
யோசித்துப் பார்த்தால் முக்கால்வாசி மாநிலங்கள் எல்லை மாநிலங்களே தாம்! பரவாயில்லை… கொஞ்சம் கொஞ்சமாக தோலுரிகிறதே.
இதற்கெல்லாம் தர்க்கம் ஒன்று இருக்கும் என்ற நம்பிக்கையில், வழக்கம் போல நேர்கோட்டில் சிந்தித்து, “புல்வாமா, பதான்கோட் சம்பவங்கள் ஏன் நடந்தன?” என்று கேட்டேன்.
“உள்ளூர் ஆதரவு இருப்பதால்தான் இவை நடக்கின்றன” என்றார் அவர் சுலபமாக.
“மேற்கு வங்கத்தில் பாஜக ஒருமுறை ஜெயிக்கட்டும். வங்கதேசத்திலிருந்து ஊடுருவல் பூச்சியமாகிவிடும்.” என்று மாதவ் சொன்னதும் அயானுக்கு மகிழ்ச்சி.
அவர் மீண்டும் உரையாடலில் குதித்தார். “மத்திய அரசு வேலி போட முயற்சிக்கிறது. மாநில அரசு நிலம் தர மறுக்கிறது… எல்லை மாவட்டங்களில் மக்கள் வங்கதேசத்திலிருந்து வருபவர்களுக்கு வீடுகளில் தங்க இடம் கொடுக்கிறார்கள்… நான் வங்காளி. அந்த மண்ணோடு ஒன்றிப்போனவன். அங்கு என்ன நடக்கிறது எனக்கு தெரியும்.”
அயான் போன்றவர்களுக்கு அந்த மண் என்பது ஒரு நிலப்பரப்பு அல்ல; அது அவர்கள் தங்களுக்குள் சமைத்துக்கொண்ட ஒரு படிமம். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஒரு வாரம் கல்கத்தா செல்லும் தில்லி வாழ் வங்காளி — மண்ணோடு ஒன்றிப்போனவனா? உண்மை என்னவென்றால், மண்ணை விட்டு விலகிச் செல்லச் செல்லத்தான் அதன் மீதான பற்றும், அதைக் காக்க வேண்டும் என்கிற ஆவேசமும் ஒருவிதமான கற்பனை கலந்த தீவிரத்தோடு உருவெடுக்கிறது. அந்தத் தொலைவுதான் அவரை இன்னும் தீவிரமானவராக மாற்றியிருக்கிறது. நேரடியாக அந்த மண்ணில் வாழ்பவர்களுக்கு இல்லாத ‘அந்நியர் பயம்’ தில்லியில் அமர்ந்திருக்கும் அயானுக்கு இருக்கிறது.
அயான் சொன்னதை ஆமோதிக்கும் விதமாகப் பேசினார் மாதவ். தோல் உரிந்துகொண்டே வந்தது.
“அயான் சொல்வது சரிதான். முர்ஷிதாபாத்தில்ல கோயிலில் இருந்து பக்திப் பாடல்களை ஒளிபரப்ப மாட்டார்களாம்!”
இந்த உரையாடல் எங்கு சென்று கொண்டிருக்கிறது?
“பத்தாண்டுகளில் என் பெயர் மாதவ்-ஆக இருக்காது. உங்கள் பெயர் கணேஷாக இருக்காது. உங்கள் பெயர் ஷாருக் ஆகிவிடும்.”
என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இத்தகைய உரையாடல்களுக்கு நான் தயாராக இருப்பதில்லை என்பது மிகவும் தெளிவானது.
“என் பெயர் காலிப் ஆகிவிடும்,” என்றார் மாதவ்.
“இல்லை, நானே காலிப் ஆகிக்கொள்கிறேன். எனக்கு பிடித்த கவிஞர்,” என்று சொல்லி செயற்கையாகச் சிரித்தேன்.
“ஜப்பான் மாதிரி நாடுகளில் யாருக்கு விசா தர மாட்டாங்க தெரியுமா?” — என்று மாதவ் வேறொரு பாதையில் தொடர்ந்தார்.
அவர் கேட்டதன் காரணம் நிச்சயம் தகவல் பகிர்வு கிடையாது.
அங்கேயே எனக்கு தெளிவானது — இது அரசியல் உரையாடல் இல்லை.
“அப்படியா?” என்று மட்டும் கேட்டேன்.

அதற்கு மேல் எதுவும் சொல்ல தோன்றவில்லை. அந்தக் கணத்தில் தர்க்கம் பொருத்தமற்றதாகத் தோன்றியது. அவர் சொல்வது கருத்து அல்ல; அவருடைய உள் உலகின் வரைபடம்.
மாதவ் காகிதத்தில் வரைந்த இந்தியா மெதுவாக அவருடைய மனவரைபடமாக மாறிக் கொண்டிருந்தது. எல்லைகள் நாட்டின் எல்லைகள் இல்லை — மனிதர்களுக்குள் இழுக்கப்பட்ட கோடுகள்.
அயான் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். “நாம் கவனமாக இல்லையென்றால்…” என்று தொடங்கி “அவர்களால்…” என்று முடியும் வாக்கியங்கள். ‘நாம்’ மற்றும் ‘அவர்கள்’ — இரண்டு சொற்கள் மட்டுமே சுற்றி வந்தன.
அப்போது எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. வெறுப்பு நேராக வராது. அது சுற்றி வரும். பாதுகாப்பு, கலாசாரம், மதம், தேசபக்தி — இந்த வார்த்தைகளின் உடை அணிந்து வரும். முதலில் கேள்வி கேட்கும். பிறகு சந்தேகம் விதைக்கும். இறுதியில் உறுதியாக அறிவிக்கும்.
நான் அமைதியாக இருந்ததை மாதவ் கவனித்தார்.
“நீங்கள் எதுவும் சொல்லவில்லை.” என்றார்.
சில விநாடிகள் எடுத்துக்கொண்டேன்.
“நீங்கள் சொல்வதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றேன்.
அது அவருக்கு போதுமான பதிலாக இல்லை. ஒரு தர்க்கப் போருக்கு அவர் தயாராக இருந்தார். நான் அந்த அரங்கில் இறங்கவில்லை.
பேச்சு மெதுவாக சோர்ந்தது. மீண்டும் வியாபார விஷயங்கள் — விலை, விநியோகம் போன்றவற்றைப் பேசிவிட்டு அடுத்து எப்போது சந்திக்கலாம் என்பது போன்ற சிலவற்றைப் பகிர்ந்துவிட்டு கிளம்பினோம்.
திரும்பும் வழியில் காரில் நான் அயானிடம் பேசவில்லை. ஓட்டுநர் ஒலிக்க விட்டிருந்த பாடல் சத்தத்தைத் தவிர காரில் வேறொரு மௌனம் கனத்துக்கொண்டிருந்தது. மாதவ் காகிதத்தில் கிழித்த அதே கோடு இப்போது காருக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்து இருக்கையில்தான் அமர்ந்திருந்தார், ஆனால் அவர் இப்போது வேறொரு தேசத்தைச் சேர்ந்தவர் போலவும், நான் வேறொரு கிரகத்தைச் சேர்ந்தவன் போலவும் ஒரு பிளவு.
தேநீர் குடிக்க நின்றபோது அயான் சொன்னார்: “தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் ஒன்று சொல்லட்டுமா? நீங்கள் மாதவ்வை அதிகம் பேச விடவில்லை. அவர் நம் வாடிக்கையாளர்…”
அவருக்கு மாதவ் ஒரு லாபம் தரும் ‘வாடிக்கையாளர்’. எனக்கு மாதவ், ஒரு மனிதருக்குள் ஒளிந்திருக்கும் இருட்டின் எச்சரிக்கை மணி. நான் பதில் சொல்லவில்லை. ஜன்னல் வழியாக ஜி.டி. சாலையில் கடக்கும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நாங்கள் ஒருவரையொருவர் கடக்க முடியாமல், மாதவ் வரைந்த கோடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்தோம்.
வெறுப்பு ஒரே நேரத்தில் குறுக்கும், நெடுக்குமானது என்று அப்போதுதான் புரிந்தது. ஒரு வரைபடத்தின் எல்லைக்கோட்டைப் போல “மற்றவரை” பிரிப்பதோடு நிற்காது; அந்த மௌனத்தைப் போல, அந்தப் பிரிவினைக்கோட்டைத் தாங்கிக்கொண்டு இருப்பவரையும் அது முழுமையாக மாற்றிவிடும். இன்று மதியம் நடந்தது வெறும் அரசியல் விவாதம் அல்ல. மாதவ் காகிதத்தில் வரைந்த இந்தியாவும், அவர் மனதில் வரைந்த இந்தியாவும் ஒன்றல்ல என்பதற்கான ஒரு கசப்பான நிரூபணம்.

Leave a comment