இலைகள், மலர்கள், மரங்கள்

• •

ஒடிஸி திரைப்படம்: நோலன் – ஜாங் ஷு இடையிலான தத்துவ உரையாடல்

‘ஒடிஸி’ திரைப்படம் குறித்து உருப்படியான ஒரு நேர்காணலை வழங்குவதற்காக இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் சீனா செல்ல வேண்டியிருந்தது. முனைவர் பட்ட மாணவியும் ‘பாட்காஸ்டருமான’ (Podcaster) ஜாங் ஷு (Zhong Shu), நோலனுடன் நடத்திய இந்த உரையாடல், மேலை தத்துவத்தின் முதன்மைத் தூண்களான கிரேக்க இறையியல் விழுமியங்களை ஆழமாக ஆராய்வதாக அமைந்தது.

  1. மறைவுறும் நாகரிகத்தின் பாணரா நோலன்?

ஜாங் ஷு:
கிரேக்க நாகரிகம் எழுச்சி பெற்ற கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்த்த ஹோமர், அதற்கு முந்தைய கி.மு. 11-12-ஆம் நூற்றாண்டுகளில் நடந்த போரை மையமாகக் கொண்டு இரு காவியங்களைப் படைத்தார். ஆனால், இன்றைய உலகத் திரைப்படப் பார்வையாளர்களிடம் ஒலிக்கும் உங்கள் குரல், ஒரு கொண்டாட்டமாகத் தொனிக்கவில்லையே! நீங்கள் ஒரு மறைவுறும் நாகரிகத்தின் பாணரா?

நோலன்:
ஹோமர் தன் காவியங்கள் வழியே, இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளை, கதை நடந்த காலத்தை விடவும் மேம்பட்ட நவீன கிரேக்க மக்களுக்குக் கூறுகிறார். வெண்கல யுகத்தின் வீழ்ச்சிக்குப் பின், அவர்கள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கிய புள்ளியில் இருந்தனர். அந்த வகையில் ஹோமரையும் ஒரு மறைந்த நாகரிகத்தின் பாணராகவே பார்க்க முடியும்.

(சைக்ளோபியன் சுவரை விளக்கியபடி தொடர்கிறார்)

உலக முடிவைப் பேசிய என் முந்தைய திரைப்படமான ‘ஓபன்ஹைமர்’ (Oppenheimer) தந்த அதே உணர்ச்சிக் கருவைத்தான், நான் இந்தப் படத்திலும் ஏந்திச் சென்றிருப்பதாக நினைக்கிறேன்.

  1. கிரேக்க நெறியும் ‘பாவப்பரிகாரமும்’

ஜாங் ஷு:
வெண்கல யுக கிரேக்கத்திலோ அல்லது ஹோமரின் ஒடிசியிலோ ‘பாவப்பரிகாரம்’ (Atonement) என்ற கருத்தாக்கமே கிடையாது. அப்படியிருக்க, நீங்கள் கிரேக்க ஒழுக்க விதிகளைக் கிறித்துவமயமாக்கி விட்டீர்களா? அணுகிக்கொண்டிருக்கும் நாகரிகப் பேரழிவுக்குப் பாவப்பரிகாரம்தான் அவசியம் என்று கருதுகிறீர்களா?

(இக்கேள்வியால் சற்றே திகைப்படைந்த நோலன், சில நொடிகள் யோசித்த பின் “நல்ல கேள்வி!” எனப் பாராட்டுகிறார்.)

நோலன்:
இதை ஒரு தத்துவக் கோணத்தில் அணுகுவது குறித்து நான் அந்த அளவுக்கு விழிப்புடன் இருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் ‘ஸீனியா’ (Xenia) என்ற கருத்தாக்கத்தின் மீதே அதிகக் கவனம் செலுத்தினேன் (எளிமைக்காகப் படத்தில் இதை ‘ஜீஸின் சட்டம்’ என்கிறோம்). அடிப்படையில் இது பரஸ்பர மரியாதையைப் பற்றியது — அதாவது, நான் எப்படி நடத்தப்பட விரும்புகிறேனோ, அப்படியே பிறரையும் நடத்துவது. ஏனெனில், கிரேக்க நம்பிக்கையின்படி நம்மிடம் வருபவர் மாறுவேடத்தில் வந்த கடவுளாகக்கூட இருக்கலாம்.

வெண்கல யுகத்தின் இறுதியில் கிரேக்க நாகரிகத்தின் பொலிவிழந்த சூழலால், ஜீஸின் சட்டம் மீறப்பட்டதை (பெனிலோபியை மணக்க முயல்வோர் வாயிலாக) விவரிக்க முயன்றேன். இதில் ‘பாவப்பரிகாரம்’ என்பது நாம் கொண்டுவந்த நவீனப் பார்வைதான். உண்மையாகவே அது வெளிப்படுகிறதா எனத் தெரியவில்லை; ஆனால், இறுதிச் சந்திப்பில் நடப்பது மனச்சுமை நீங்கும் ஒரு செயல்முறையாகவே நான் கருதுகிறேன். இதை நமது நவீன மனப்பான்மையைக் கொண்டு அணுகுகிறோமே தவிர, திட்டமிட்டு கிறித்துவமயமாக்கும் நோக்கம் இதில் இல்லை.

ஜாங் ஷுவின் சுருக்கம்:
“கிறிஸ்தவ உலகின் பாவநிவாரணத்திற்கும், கிரேக்க உலகின் உள்நோக்கான ஸீனியாவிற்கும் இடையேயான பிணைப்புதான் போர்க்கதையின் வடிவம் என்பதாகக் கொள்கிறீர்கள்.”

நோலன்:
வரலாற்று ரீதியாகப் பல்வேறு தத்துவங்கள் வளரும்போது, கல்வியாளர்கள் அவற்றிற்கு இடையே தெளிவான கோடுகளை வரைவதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆனால், எனக்கு அவற்றிலுள்ள பொதுவான அம்சங்களிலேயே ஆர்வம் அதிகம். ‘ஸீனியா’வின் இறையியல் அடிப்படையை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அது நவீன காலத்தில் நாம் கூறும் ‘பொன் விதி’தான் (Golden Rule) — ‘நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறோமோ, அப்படியே பிறரையும் நடத்த வேண்டும்’. இந்தக் கருத்து காலம் கடந்தது. இந்த பண்டைய கவிதை நவீன உலகத்துடனும் நேரடியாகப் பேசுகிறது.

  1. அதீத ஆணவமும் (Hubris) மனிதப் பெருமிதமும்

ஜாங் ஷு:
‘ஹூபிரிஸ்’ (Hubris – அதீத ஆணவம்) என்ற கிரேக்க இறையியல் கோட்பாட்டை நோக்கினால், ஒடிசி என்பது அதன் நாயகன் ஒடிசியஸின் மனிதப் பெருமிதத்தைப் பேசுவதாகும். அவன் தனது நாயகத்துவத்திற்கே உரிய மனிதப் பெருமிதத்தைக் கைவிட்டு மனந்திருந்த வேண்டுமா?

நோலன் (புன்னகையுடன்):
இதற்குப் பொருத்தமான இன்னொரு கேள்வியும் உண்டு — அவன் மனந்திருந்தியிருந்தாலும் என்ன பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடப் போகிறது? அவனது மனமாற்றம் அகரீதியானது; அது அவனது சொந்த ஆன்மிகத்திற்கு மட்டுமே உரியது. ‘ஹூபிரிஸ்’ ஆபத்தானது, ஏனெனில் அதற்கு மீட்பு கிடையாது. இங்குதான் கிறித்துவ இறையியல் வேறுபடுகிறது.

  1. மகத்தான தன்மையை’ (Greatness) அணுகும் முறை

ஜாங் ஷு (பதிலை முழுமையாக ஏற்காதவாறு):
நாம் மகத்துவத்திடம் மன்னிப்பைக் கோருவது போல் தெரிகிறது. ஆனால், ஹோமரோ அதை நேரடியாகக் கொண்டாடுகிறார். நாமோ அதைச் சுற்றி வளைக்கிறோம் அல்லது சலுகைகளாக மாற்றுகிறோம். நமது காலத்தின் சிறந்த கதைசொல்லியான நீங்கள், இந்த ‘மகத்தான தன்மையை’ எவ்வாறு அணுகுகிறீர்கள்?

நோலன்:
திரைப்படங்களில் பாத்திரப்படைப்பு என்பது — படைப்பாளி மற்றும் பார்வையாளர்களின் உணர்வாற்றல் சந்திக்கும் புள்ளியில் உருவாவது. அமெச்சூர் திரைப்பட விமர்சனங்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை. “கதைமாந்தர் புரிந்துணர்வுள்ளவராக இருக்க வேண்டும்” அல்லது “பாத்திரத்தின் இயல்பு அடிக்கடி மாற்றப்படுகிறது” என்பன போன்ற விமர்சனங்கள் கதையின் இயங்குதளத்தைச் சார்ந்தவை. ஒரு செயல்பாட்டு முறையை அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது என்பதால் மட்டுமே, அது செல்லாததாகிவிடாது. இன்றைய விமர்சனங்களின் முக்கியக் குறைபாடே இதுதான். ஒரு நாயகப் பாத்திரத்தைப் படைக்கும்போது, அந்தப் படைப்பிற்காகப் பார்வையாளர்கள் கொண்டுவரும் ஆற்றலையும் (energy), நமது நோக்கத்திற்கும் அவர்களின் ஏற்பிற்கும் இடையிலான தொடர்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(முழுமையான ஆழத்தைப் பெற காணொளியைக் காணவும்.)